மறு வாழ்வு:
நீங்கள் தற்கொலை செய்து கொள்ள
வேண்டுமா? என்னிடம் வாருங்கள். தற்கொலை உணர்வில்(அல்லது)
முயற்சியில் இருந்து விடுபட வேண்டுமா?
என்னிடம் வாருங்கள்.ஏன் இந்த முரண்?
என கேட்பீர்கள் தானே?பொறுங்கள் சொல்கிறேன்.
ஒளிரும் சூரியன் போல
பிரகாசித்த என் வாழ்வில் திடீரென
ஒரு நாள் காரிருள் சூழ்ந்தது
அல்லது நான் அவ்வாறு எண்ணி
கொண்டேன் படிப்படியான மாற்றங்களை கவனிக்காமல்.
நாளது வரையில் நான்
ஒரு சிறந்த கணிப்பொறி வித்தகன்(தற்பெருமை அல்ல என் அலுவலகத்தில்
சொல்லும் வார்த்தை அது).கொஞ்சம் வேலை,
நிறைய பணம்,நிறைய மது,சில சமயங்களில் எண்ணற்ற
பெண்கள்,பீரின் நுரை போல
எப்போதும் பொங்கும் மகிழ்ச்சி.
ஒரு நாள் சாதாரண
ஒரு நாள் ஆனால் அன்று
மனதில் அற்புத
கணம் ஒன்று நிகழ்ந்து கொண்டு
இருந்தது குறிப்பாக அது என் தற்கொலையை
பற்றி.
காரணம் வெறுமையாகவும் இருக்கலாம்
அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்
நான் அதை பற்றி யோசிக்கவே
இல்லை.எனக்கு என்ன தோன்றுகிறதோ
அதை அந்த நிமிடத்திலே செய்து
முடித்து விட துடிப்பவன் நான்.
தற்கொலை செய்து கொள்ள
என் மனம் உந்தி கொண்டே
இருந்தது...ஒரு நிமிடம் அற்புதமாகவும்
மறு நிமிடம் அபத்தமாகவும் தோன்றிய
வண்ணம் என் மனம் எங்கோ
ஒரு புள்ளியை நோக்கி விரைந்து கொண்டு
இருந்தது...மனம் என்னும் நதியை
அதன் போக்கில் ஓட விட்டு மெல்ல
ரசித்து கொண்டு இருந்தேன்.
என் வாழ்வின் முக்கிய
நாள் என காலண்டரில் குறித்து
கொண்ட ஒரு காலை வேளையில்
நான் தற்கொலை செய்து கொள்ள
மெல்ல தயாரானேன்.என் கழுத்துக்கும் நான்
கட்டிய கயிறுக்கும் என் சாவுக்கும் சில
அடிகள் தொலைவே மீதம் இருக்க
காரணம் இல்லாமல் காரணம் என்ன என
நான் குழம்ப துவங்கினேன்.
மனது மெல்ல என்னை
சமாதானப்படுத்த முயன்று கொண்டு இருந்தது
வெவ்வேறு விதங்களில்.
'ஒரு நியாயமான காரணமாவது
சொல்' என கேட்டேன்.
'நீ வாழ கூடாது என்
எளிமையான பதில் இதுவே '
என சொல்லி கொஞ்சம் பயத்தை
காட்டியது அது வரை நான்
அறியாத ஒன்றை ...இருந்தும் தைரியமுடன் 'நான் கேட்ட கேள்விக்கு
நீ இன்னும் பதில் சொல்லவில்லை.
காரணம் என்ன?'
'உங்களை
போன்ற முட்டாள்கள் வேறு யாரும் இல்லை
உங்களுக்கு வாழ்வதற்கும் காரணம் தேவைப்படுகிறது சாவதற்கும்'
'சரி இது நாள் வரை
நீ சொன்னதை தானே செய்து
உள்ளேன்.இன்று மட்டும் கொஞ்சம்
யோசிக்கிறேன் காரணம் புரியவில்லை'
'மறுபடியும்
காரணம்? உங்களை போன்று வார்த்தைகளை
வலுவிழக்க செய்ய யாராலும் முடியாது.நான் இது நாள்
வரை சொன்னவை உன் சுக
சம்பந்தப்பட்டவை. இன்று சொல்வது சுக
இழப்பு சம்பந்தப்பட்டது அதனால் தான் உனக்கு
தயக்கம்'
'ஏன் நான் சாக வேண்டும்
நேரடியாக பதில் சொல்?' என
சற்று வெறுப்புடன் கேட்டேன்.
'நீ யாருக்காவது சிறு உதவியாச்சும் பண்ணி
இருக்கியா? உங்க அம்மா அப்பா
எங்க? நீ யாருக்காவது நேர்மையா
இருந்து இருக்கியா? காசு சம்பாதிச்சு பொண்ணுங்க
கூட ஜாலியா இருந்துட்டா வாழ்க்கை
முடிஞ்சுட்டா?நீ சின்ன வயசுல
நிறைய ஓவியம் வரைவ உனக்கு
இப்போ ஓவியம்னா என்னனு தெரியுமா?இது
போல சொல்லிட்டே போகலாம்'
'இதெல்லாம்
காரணமா எனக்கு தெரியல...சரி
நீயும் ஒரு வகைல என்
தவறுக்கு பொறுப்பு ஏற்கனும்ல?'
'சரி உடன்படுகிறேன்...இன்று ஒரு நாள்
உனக்கு அவகாசம் தருகிறேன் நீ
வாழ்வதற்கு ஒரே ஒரு நேர்மையான
காரணம் சொல் பார்க்கலாம்'
ஓடினேன்
பைத்தியம் போல, எனக்கான வாய்ப்பை
நோக்கி....
நான் அன்று முழுதும் அலைந்தேன்
அலைந்ததை தவிர வேறு எதுவும்
நிகழவில்லை. ஒரு பேருந்தில் ஏறி
கடைசி பயணம் என எனக்குள்ளே
சொல்லி கொண்டேன்...ஒரே கூட்டம்... என்
பிணத்தை பார்க்க இத்தனை பேர்
வருவார்களா?
ஒரு வயதானவன் பார்க்கவே அருவருப்பாக இருந்தான். அங்கும் இங்கும் அசைந்து
கொண்டே இருந்தான் குறிப்பாக பெண்களின் பின் புறம்.
சில பேர் முறைத்தார்கள் ஆனால்
அவன் யாருக்கும் எதுக்கும் கவலைப்படாமல் ஒரு பெண்ணின் மீது
சாய்ந்து தனது வேலையை மெல்ல
துவக்கினான்.
நானும்
ஏதோ ஒரு
பெண்ணிடம் இப்படி பேருந்தில் நடந்து இருக்கிறேன் நினைக்கவே
அருவருப்பாக இருந்தது.என் மீதே எரிச்சல்
வந்தது.
அந்த வயதானவன் ஒரு நிறுத்தத்தில் இறங்கி
நடந்தான் நானும் அவனை தொடர்ந்து
சென்றேன் ஏன் என தெரியாமல்.
நிறைய தூரம் நடந்த கால்கள்
போல அலுக்காமல் நடந்து
கொண்டே இருந்தான் என்னால் முடியவில்லை இருந்தும்
எப்படியோ தொடர்ந்தேன்.
சற்று தொலைவில் ஒரு பெண்ணின் அலறல்
இவனை போல அங்கு ஒரு
காம கொடூரன் இருக்கிறான் போல
என ஓடினேன் எனக்கு முன்னால்
அந்த வயதானவன் ஓடி கொண்டு இருந்தான்...
வயதானவன்
திடீரென ஒரு கல்லின் மீது
ஏறி நின்று உள்ளே குதித்தான்
அருகில் சென்று பார்த்த பின்பு
தான் தெரிந்தது அது கிணறு என்று...
ஆழமான கிணறு...எங்கோ வெகு
தொலைவில் தண்ணீர் இருந்தது...மூச்சு
விட முடியாமல் திணறி கொண்டு
இருந்த சிறுவனை முதுகில் சுமந்து
கொண்டு ஏறுவதற்காக கிணற்றில் போட்டு இருந்த சிறு
துளைகளை பயன்படுத்தி மிகுந்த கவனத்துடன் ஏறி
கொண்டு இருந்தான் வயதானவன்.
மேலே வந்தவுடன் சிறு வணக்கத்தையும் சிறு
நன்றியையும் அவனுக்கு தெரிவித்தேன்.
மயக்கம்
போட்டு கிடந்த தாயை சிறுவன்
எழுப்பி 'ஈன்ற பொழுதினும்' மகிழ்ச்சியை
தந்து கொண்டு இருந்தான்...
ஏதோ ஒரு சொல்ல முடியாத
அமைதியுடனும் நிறைவுடனும் நான் வீட்டுக்கு திரும்பி
கொண்டு இருந்தேன்
என்னிடம்
மனதுடன் பேச
நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் என் மனது
தான் என்னிடம் அதன் பிறகு பேசவேயில்லை.
எந்த ஒரு மோசமானவனுக்கும் ஒரு
நல்ல பக்கம் இருக்கும் அதை
அடையாளப்படுத்துவது தான் என் வேலை.
என் மனம் எனக்கு தந்த
அர்த்தமுள்ள வாழ்வு இது.
நீங்கள் தற்கொலை செய்து கொள்ள
வேண்டுமா? என்னிடம் வாருங்கள். தற்கொலை உணர்வில்(அல்லது)
முயற்சியில் இருந்து விடுபட வேண்டுமா
என்னிடம் வாருங்கள்.
No comments:
Post a Comment