அங்கேயும்
அதே மழை…!
07.23 PM
மச்சி,
பிரபு வந்துட்டான், நாங்க சைதாப்பேட்டை பாலத்துக்கிட்ட
வந்துகிட்டு இருக்கோம்! இன்னும் அஞ்சே நிமிஷத்துல
அங்க இருப்போம்!
சொல்லிவிட்டு,
மொபைலை பாக்கெட்டில் வைத்துக்கொண்டே, பைக் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்
விஷ்வா. பின்னால் உட்காந்திருந்த பிரபு விஷ்வாவை கெட்டியாகப்பிடித்துக்கொண்டான்.
சில்லிடும் மழைத்தூறலில் நனைந்து கொண்டே, பைக்
ட்ராஃபிக்’கில் வளைந்து, நெளிந்து,
லாவகமாக நுழைந்து, கத்திப்பாரா பாலத்தை நோக்கி விரைந்தது.
பிரபு,
விஷ்வா…
இருவரும்
சென்னையின் பிரபல பொறியியல் கல்லூரியின்
இரண்டாமாண்டு மாணவர்கள். மத்திய அரசு அதிகாரியின்
மகனான விஷ்வா, ஏதோ பாடலை
முணுமுணுத்துக்கொண்டே, வண்டியை விரட்டிக்கொண்டிருந்த அதே நேரத்தில்,
பிரபு, கையிலிருந்த மொபைலில் எதையோ தேடிக்கொண்டிருந்தான்.
சொன்னபடி
ஐந்தே நிமிடத்தில் கிண்டி, லீ மெரிடியனில்
பைக் நுழைந்த போது, அவர்களை
எதிர்நோக்கி ஏற்கனவே ஒரு நண்பர்கள்
குழு அங்கே போர்ட்டிகோவில் காத்துக்கொண்டிருந்தது.
அவர்கள் இருவரையும் கண்டதும் கூட்டத்தில் உற்சாக விசில் பறக்க,
அவசரமாக பைக்கை பார்க் செய்த
பிரபுவும், விஷ்வாவும் சில நிமிடங்களில் நண்பர்கள்
குழாமில் ஐக்கியமானார்கள்.
அதே நாள்
07.23 PM
சேலம் பேருந்து நிலையத்திலிருந்து, மழை பெய்யும் அந்த
இரவில் இருளில் நீந்தியபடி அந்த
ஆட்டோ சென்றுகொண்டிருந்தது.
ஆட்டோவினுள்
இருந்த அமுதா, முப்பது வயதை
நெருங்கும், இன்னும் திருமணமாகாத கன்னி,
குளிர்காற்று முகத்தில் மோத, சேலைத்தலைப்பால் உடலை
சுற்றிக்கொண்டாள்.
அமுதாவின்
மூளைக்குள் காலையில் ஆஃபீஸில் எம்.டி. சொன்ன
வார்த்தைகளே திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது.
ஜி.ஆர்.கே. குழுமத்தின்
எம்.டி. வாசுதேவன். அமுதாவின்
முதலாளி.
ம்… இங்க பாரு அமுதா
உனக்கு இப்போ அவசரமா பணம்
தேவைப்படுதுன்னு சொல்ற, ஐ அன்டர்ஸ்டேண்ட்,
பட், ஏற்கனவே உன் கணக்குல
முப்பதாயிரம் ரூபா அட்வான்ஸ் வாங்கியிருக்க,
இப்போ இருபதாயிரம் கேக்கற…! கண்ணாடியைக்கழட்டி, டை’யில் துடைத்துக்கொண்டே
தொடர்ந்தார்.
டோட்டலி
ஃபிஃப்டி தௌசன்ட்…! நான் தரமாட்டேன்’னு
சொல்லல, ஆனா, எனக்காகவும் நீ
சிலத விட்டுக்கொடுக்கணும். நான் என்ன சொல்ல
வர்றேன்னு உனக்குப்புரியும்னு நெனைக்கிறேன்…! என்று நிறுத்தியவர்.
உன்னை நான் கம்ப்பல் பண்ணல,
ஆனா உனக்கு சம்மதம்னா, யு
கேன் கம்…!
பேசிக்கொண்டே,
விசிட்டிங் கார்டை டேபிளின் அவள்
பக்கத்திற்கு தள்ளினார்.
எம்.டி. பேசப்பேச, அதற்கு
மேல் அங்கிருக்கப்பிடிக்காமல், கண்ணீர் கொப்பளிக்க, எரிச்சலில்
எம்.டியின் கேபின் கதவைக்கோபமாகத்தள்ளிவிட்டு
வெளியே வந்தாள் அமுதா.
வெளியே
வந்ததும், டைப் ரைட்டர், பிரிண்டர்
சத்தம் என ஆஃபீஸ் சூழல்
உறைக்க, அவசரமாகக்கண்ணைத்துடைத்துக்கொண்டு,
வேகமாக வந்தவள், ஓரிரு நொடி யோசனைக்குப்பிறகு,
தயக்கமாகத்தனது சீட்டில் போய் அமர்ந்தாள். ஆபீஸில்
யாரும் அவளைக்கண்டுகொண்டதாகத்தெரியவில்லை.
ஜி.ஆர்.கே. கம்பெனி
எம்.டி. வாசுதேவன்,
ஐம்பது
வயதைக்கடந்த, பணத்துக்கு பஞ்சமில்லாத மனிதர். ஆனால் சமீபத்தில்தான்
ஹார்ட் அட்டாக்’கிற்கு மனைவியைப்பறிகொடுத்திருந்தார்.
அவரது ஒரே மகனும் ஏதோ
வெளிநாட்டில் படிப்பதால், தற்போது தனியாக வசிக்கும்
ஒரு பணக்கார அனாதை.
போனமுறை
பணம் கேட்டபோதே, எம்.டி.யின்
கழுகுப்பார்வை உடலைத்துளைத்தெடுப்பது தெரிந்தும், வேறுவழியில்லாமல் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இப்போது பணத்தேவையை
அறிந்து, வெளிப்படையாகவே கேட்கிறார்.
கண்ணாடி
கேபினில் இருந்து எம்.டி.
வெறிப்பது தெரிந்து உடல் ஒரு முறை
கூசியது. குறுகிப்போய் உட்கார்ந்திருந்தவளின் மொபைல் அதிர்ந்தது.
Prabhu Calling…
தயக்கத்துடன்
மொபைலை ஆன் செய்த உடனே.
அக்கா,
பணம் ரெடி பண்ணிட்டியா…?! நாளைக்குத்தான்
கடைசி, பணம் கட்டலைன்னா, அப்புறம்
காலேஜுக்குப்போக முடியாது.
கொஞ்சம்
பொறுத்துக்கடா, கேட்டுருக்கேன், இன்னைக்கு கிடைச்சிடும்.
ம்ம்… ஓக்கே, ஆனா மறுபடி
சொல்றேன் நாளைக்குத்தான் கடைசி நாள்…! சரி
அப்புறம் கூப்பிடுறேன்.
தொடர்பு
துண்டிக்கப்பட்டது.
நடுத்தரக்குடும்பத்தில்
பிறந்தாலும் வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, அமுதாவின் அப்பா குடிக்கு அடிமையாகும்வரை…
நன்றாக இருந்தவர்தான், எப்படியோ குடித்துப்பழகி, டாஸ்மாக்’கிற்கு கொத்தடிமையாகவே மாறிவிட்டிருந்தார்.
அப்பாவைத்திருத்த வழி தெரியாத அம்மாவும்,
அமுதாவிற்கு 18 வயதான போது, ஒருநல்ல
மழைநாளில் தற்கொலை செய்துகொண்டாள். தினமும்
போராட்டமான வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றுச்சென்றுவிட்டாள். அன்றும் எங்கோ
குடித்துவிட்டு விழுந்துகிடந்த அப்பாவைத்தூக்கி வந்து வலுக்கட்டாயமாக அம்மாவின்
இறுதிச்சடங்கை செய்ய வைத்துவிட்டு, உறவுகள்
கலைந்த போது, அமுதாவும், பிரபுவும்
அனாதையாக நின்றிருந்தனர்.
அமுதாவின்
அம்மாவோடு அவளது படிப்பையும் எரித்துவிட்டு
வந்த அவளது அப்பா, இப்போது
குடிப்பதற்கான புதிய காரணத்தோடு குடியைத்தொடர,
குடும்பப்பொறுப்புகள் அமுதாவின் முதுகில் ஏறியது. அப்பாவோடு, குடியையும்
முழுவதுமாக வெறுத்த அமுதா எப்பாடுபட்டேனும்
தம்பியை ஒரு நல்ல நிலைக்குக்கொண்டுவர,
உழைக்க ஆரம்பித்தாள்.
ஜி.ஆர்.கே. கம்பெனியில்
டைப்பிஸ்டாக வேலைக்குச்சேர்ந்ததால், பணம் இல்லையெனினும் வாழ்க்கை
ஓரளவு பரவாயில்லாமல்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், போன வருடம்
பிரபு எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் பணம்
இல்லாதது பெரும்பாடாக இருந்தது.
பிரபுவின்
படிப்பிற்கு ஒவ்வொரு முறையும் கல்லூரிக்கு
கட்ட வேண்டிய பணத்தைக்கட்டுவதற்குள் பெரும்பாடாகிவிடும். அதுவும்,
இரண்டாமாண்டு, செமஸ்டர் ஃபீஸ், மெஸ், ஹாஸ்டல்,
தேர்வுக்கட்டணம் என ஏறக்குறைய ஒரு
லட்சரூபாய். கழுத்திலிருந்த நகை, கையிலிருந்த பணம்,
சேமிப்பு, கடன், ஆஃபீஸில் அட்வான்ஸ்
என எப்படியோ சரிக்கட்டி அனுப்பி முழுதாக மூன்று
மாதம்கூட ஆகவில்லை. மறுபடி இருபதாயிரம் வேண்டுமாம்.
இப்போதைய நிலைக்கு இது கொஞ்சம் பெரிய
தொகை தான். போனமுறை பணத்தை
சேர்த்த கணக்கே இன்னும் சரிவர
முடியாத நிலையில், எதை விற்பது, யாரிடம்
கேட்பது என ஒருவாரமாக யோசித்தும்,
இப்போதுவரை பதில் தெரியவில்லை. வேறுவழியில்லாமல்
எம்.டி.யிடம் கேட்டதற்கு,
அவருடைய விசிட்டிங் கார்ட் தான் அவருடைய
பதில்.
இருபதாயிரம்
ரூபாய்…!
தம்பியின்
படிப்பு…!
காலையில்
கோபமாக இருந்த மனது, மதியம்
ஆக, ஆக குழம்ப ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் நான் ஏன் போகணும்
? என்று குழம்பிய மனது, ஏன் நான்
போகக்கூடாது ! என குழம்பியது.
கடந்த ஒருவாரமாகவே இருபதாயிரம் ரூபாய்க்காக யார்யாரிடமோ கையேந்தி கிடைக்காமல், ஒருபடி மேலே போய்,
ஆஃபீஸில் இவளைக்கண்டாலே சிலபேர் ஓடி ஒளிய
ஆரம்பித்தனர். வழக்கமாக ஆஃபீஸில் மதியம் ஒன்றாக அமர்ந்து
சாப்பிடுவதில் கூட இவளைத்தவிர்க்க ஆரம்பித்தனர்.
பணத்தின்
வலிமையை முழுமையாக அறிந்து கொண்டபோது அந்த
விசிட்டிங் கார்ட் பதில் யோசிக்க
வைத்தது.
நாளைக்குள்
இருபதாயிரம் ரூபாயை புரட்ட வேறுவழி
இருப்பதாகத்தோன்றவில்லை. பணம் கொஞ்ச கொஞ்சமாக
தன்மானத்தை அடித்து வீழ்த்த ஆரம்பிக்க,
அன்று மாலையே ஒரு முடிவுக்கு
வந்தாள் அமுதா. நேராக எம்.டி.யின் கேபினுக்குப்போய்,
எதுவும் பேசாமல், அவர் பார்க்கவே, விட்டுவந்த
அந்த விசிட்டிங் கார்டை எடுத்துக்கொண்டாள்.
ஆட்டோ ஏதோ குழியில் இறங்கி
குலுங்க, நிகழ்காலத்திற்கு வந்தாள்.
மழை இன்னும் தூறலைத்தூவிக்கொண்டிருக்க, சாலை நெரிசலைத்தவிர்த்து, புறநகர்
சாலையில் திரும்பி, இரண்டு திருப்பங்களைக்கடந்த ஆட்டோ
ஒரு பிரும்மாண்டமான கேட்டின் முன் நின்றது.
ஏம்மா,
இதான் நீ கேட்ட அட்ரஸ்…!
ஆட்டோ டிரைவர் நினைவூட்ட, மடியிலிருந்த
ஹேன்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு, மௌனமாக
ஆட்டோவிலிருந்து இறங்கினாள் அமுதா. புடவைத்தலைப்பைக்கையில் பிடித்துக்கொண்டே, ஏற்கனவே
கையில் சுருட்டி தயாராக வைத்திருந்த பணத்தை
ஆட்டோ டிரைவரிடம் கொடுத்துவிட்டு, கேட்டை நோக்கி நடந்தாள்.
அமுதாவை ஏளனம் கலந்த புன்னகையுடன்
பார்த்துக்கொண்டே, ஆட்டோவைக்கிளப்பினான் அவன்.
தயக்கத்துடன்
கேட்டைத்தள்ள, பிரும்மாண்டமான மிருகத்தைப்போல் அது மெதுவாகப்பின்வாங்கியது. கேட்டின் உள்ளே
தயக்கத்துடன் நுழைந்தவளை வரவேற்றது மங்கலான விளக்குகளின் வெளிச்சத்திலிருந்த
அந்த நிசப்தமான பங்களா.
யூ கேன் கம், மை
டோர்ஸ் ஓப்பன்ட் ஃபார் யூ டுநைட்…!
என ஏற்கனவே எம்.டி.
சொல்லியதை நினைவுபடுத்திக்கொண்டே, ஒருவித
பயம் மனதைக்கவ்வ, சமாளித்துக்கொண்டே நடந்து வீட்டினுள் நுழைந்தாள்.
அந்த பங்களாவின் கதவும் அவளுக்காகவே திறந்திருந்தது
போல இருந்தது. இதயத்துடிப்பு எகிற, எப்படி நமக்கு
இவ்வளவு தைரியம் வந்ததென்று யோசித்துக்கொண்டே,
குளிரையும் மீறி வியர்த்த முகத்தை
சேலைத்தலைப்பில் துடைத்துக்கொண்டு, மெதுவாக உள்ளே சென்றாள்.
அரையிருட்டு
வெளிச்சத்தில், விசாலமான ஹாலின் ஒரு ஓரத்தில்
பெரிய படிகள் மேலே வழிகாட்டியது.
திரும்பிப்போய் விடலாமா என மனம்
தடுமாறிய அந்த ஒரு நொடியில்,
ம்ம்… படியில ஏறி மேல
வா…!
மேலிருந்து
அதிகார தோரணையுடன் ஒரு குரல் அவளை
அழைத்தது.
அமைதியான
பங்களாவில் திடீரென வந்த அந்தக்குரல்
ஒரு நொடி தூக்கிவாரிப்போட, மிரளும்
விழிகளுடன், குரல் எம்.டி.க்கு சொந்தமானது என்பதை
உணர்ந்து கொண்டு, மேலே பார்த்துக்கொண்டே
படிகளில் ஏறினாள் அமுதா. படிகளின்
முடிவில் பாதி திறந்திருந்த அந்த
அறையிலிருந்து ஒரு மெல்லிய வெளிச்சத்துடன்,
பெயர் தெரியாத ஏதோ ஒரு
வெளிநாட்டு இசையும் வெளியே பரவிக்கொண்டிருந்தது.
ஒரு கையில் படியின் கைப்பிடியைப்பிடித்துக்கொண்டு,
இன்னொரு கையில் தோளில் மாட்டியிருந்த
ஹேண்ட்பேக்’கை கெட்டியாகப்பிடித்துக்கொண்டே, தயக்கமும், குழப்பமும் அலைக்கழிக்க, அந்த அறையை மிரட்சியுடன்
பார்த்தாள்.
உள்ள வா…!
அதே குரல்.
ஏதோ ஒரு தைரியம் உந்தித்தள்ள
முன்னேறினாள் அமுதா.
கதவைத்தள்ளிக்கொண்டு
உள்ளே நுழைந்ததும், எம்.டி. பாதி
இருட்டில் கையில் கண்ணாடி டம்ளருடன்,
இரவு உடை சகிதமாக, அறையின்
மையத்திலிருந்த அந்தக்கட்டிலில் அமர்ந்திருப்பது தெரிய, மெதுவாக உள்ளே
வந்தாள். பெயர் தெரியாத அந்த
இசை மெலிதாக ஆனால் தெளிவாகக்கேட்டது.
சார்…!
குரல் நடுங்கியது.
ம்ம்… பேக்’க அங்க
வை!
எம்.டி. கைகாட்டிய சோபாவில்
தயக்கத்துடன் பேக்’கை வைத்தவள்.
ஒரு கையை இதயத்தை கெட்டியாகப்பிடித்துக்கொண்டு,
மிரட்சியுடன் சுற்றிப்பார்த்தாள். சுவர்களில் ஏதேதோ ஓவியங்கள், விளக்குகளுடன்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இருட்டில் எதுவுமே தெளிவாகத்தெரியவில்லை.
கையிலிருந்த
கண்ணாடி டம்ளரில் இருந்த ஏதோ ஒரு
திரவத்தை, சாய்த்து ஒரே மூச்சில் பருகியவர்,
எழுந்து அமுதாவின் அருகில் வந்தார். அந்த
இருட்டிலும் எம்.டி.யின்
வழுக்கைத்தலை மின்னியது.
ம்ம்…!
எம்.டி.யின் சைகையின்
அர்த்தத்தைப்புரிந்து கொண்ட அமுதா, தயக்கத்துடன்
சேலையை நழுவவிட்டாள்.
பிரபு பாட்டிலின் மூடியைத்திறந்தான்.
வழக்கமான
மூன்றாந்தர பார் போன்று கூச்சல்,
குழப்பம் இல்லாமல், வெகு அமைதியாக இருந்தது.
ஆனால் பெயர் தெரியாத இசை
ஏதோ ஒரு இடத்திலிருந்து வழிந்து
அறையை மென்மையாக நிரப்பிக்கொண்டிருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த எல்.சி.டி.யிலிருந்து
அந்த கிரிக்கெட் மேட்ச் சத்தமில்லாமல் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்ததை
எத்தனைபேர் கவனிப்பார்கள் எனத்தெரியவில்லை.
ச்சியர்ஸ்…!
அந்த ஏழு பேர் கும்பலில்
அவசரமாக, பாட்டிலை முதலாகத்திறந்த சந்தோஷத்தில் கத்தினான் ராகுல்.
ஹேப்பி
பர்த் டே’டா மச்சான்…!
ஹேப்பி
பர்த் டே, ஹேப்பி பர்த்
டே..! ஆளாளுக்கு ஹேப்பி பர்த் டே
சொல்லிக்கொண்டே செல்ல, விஷ்வா வாயில்
விரலை வைத்து,
உஷ்ஷ்ஷ்…!
நம்ம செட்’ல ஹேப்பி
பர்த் டே கொண்டாடுற நம்ம
நண்பன் சந்தோஷுக்கு ஹேப்பி பர்த் டே
சொன்னா மட்டும் போதாது…! நம்ம
குல வழக்கப்படி, இந்த காஸ்ட்லியான பார்’ல நமக்கெல்லாம் சரக்கு
தானம் பண்ணுன நம்ம நண்பணுக்கு
ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லியே
ஆகணும்…!
ஹே… தேங்க்ஸ்…! எல்லோரும் கத்த, மறுபடி விஷ்வா,
உஷ்ஷ்…!
தேங்க்ஸ்
சொல்ற அதே வேளைல, வர்ற
சாட்டர் டே பிறந்த நாளக்கொண்டாடப்போற
நம்ம பிரபுவுக்கு அட்வான்ஸ் விஷஸ் சொல்லிக்கறதோட, இதுவரைக்கும்
எதுக்குமே பார்ட்டி வைக்காத அன்னார் நமக்கெல்லாம்
இதே பார்ல, இத விட
நல்லா, பெரிய பார்ட்டி வைக்கறதா,
போன வாரமே சொல்லியிருக்கறத, இன்னொரு
முறை நினைவுபடுத்திக்கிறேன்.
ஹே…! என எல்லோரும் பிரபுவைப்பார்த்துக்கத்த,
பிரபு புன்னகைத்துக்கொண்டே, கண்டிப்பாடா மச்சான்…! என்று சொல்லிவிட்டு, மிச்சமிருந்த
சரக்கையும் கவிழ்த்தான்.
பிரபுவைத்தொடர்ந்து
பாட்டில் திரவத்தை காலி செய்ய ஆரம்பித்தது
அந்தக்கும்பல்.
10.20
மழைத்தூறல்
இன்னும் விடாமல் பெய்து கொண்டிருந்தது.
நனைந்துகொண்டே,
பார்ட்டி முடிந்து எல்லோரும் வெளியே கலைந்து சென்று
கொண்டிருக்க, கண்ணாடிக்கதவைத்தள்ளிக்கொண்டு, போதையில் தள்ளாடியபடி வெளியே வந்தான் பிரபு.
விஷ்வா
பைக்’கை எடுக்க பார்க்கிங்
நோக்கி செல்ல,
இன்னும்
ரெண்டு நாள்’ல பார்ட்டி
வைக்கலன்னா பசங்க அவ்வளவுதான், காண்டாயிடுவானுக…!
பணம் ரெடி ஆயிடிச்சான்னு தெரியலயே…?!
என்று யோசித்தபடி, மொபைலை வெளியே எடுத்து,
அமுதாவின் பெயரைத்தேடிய அதே நேரத்தில்,
அந்த பெரிய கேட் திறந்து
கொள்ள, உள்ளிருந்து தள்ளாடியபடி வெளியே வந்தாள் அமுதா.
பணத்தால் வேட்டையாடப்பட்டு, உடல் முழுதும் ரணமாக
வலித்தது. ஆனால் இப்போது மனதில்
எந்தக்குழப்பமும் இல்லை. மழை பெய்து
கொண்டிருந்த நிசப்தமான அந்த தெருவில் இறங்கி
நடக்க ஆரம்பித்தாள் அமுதா. கையிலிருந்த பேக்’கில் எடை கூடியிருந்தது,
மனதிலும்…
உடலை நனைத்து, வழிந்த மழை நீரில்,
உடல் வலியும், களங்கமும் கரைந்தோடுவதாகத்தோன்ற, நனைந்து கொண்டே, மெதுவாக
நடந்தாள்.
பேக்கிலிருந்த
மொபைல் அதிர்வதை உணர்ந்து, பேக்கினுள் கைவிட்டு மொபைலைத்தேடியெடுத்துப்பார்த்தாள்.
Prabhu Calling…
தம்பி,
பணம் வாங்கீட்டேன், நாளைக்கு அனுப்பிடறேன்…!
கண்களில்
வழிந்த கண்ணீர், மழை நீரில் கரைந்தோடியது.
அங்கேயும்
அதே மழை பெய்து கொண்டிருந்தது.
* * *
* *
No comments:
Post a Comment