Saturday, 19 July 2014

Story 76: அரளிப்பூ..

அரளிப்பூ..

வசந்திக்கு பிடித்த பூ அரளிப்பூ தான். மஞ்சள், சிகப்பு, ஊதா என்று பலப்பல வண்ணங்களில் இருக்கும் பூக்கள் மீது அலாதி பிரியம். யார் சொல்லியும் கேட்க மாட்டாள். காலையில் புதுக்குளத்திற்கு போய் குளித்து விட்டு வரும் தலையில் அரளிப்பூவை சூடிக்கொண்டு தான் வருவாள்.                                    

 மந்தாரம்பூதூர் இது தான் வசந்தியோட ஊர் இது கன்னியாகுமரி அருகில் இருக்கும் அழகான கிராமம்.  வசந்தி குடும்பம் வாழ்ந்து கெட்ட குடும்பம். வசந்தியோட கூட பிறந்தவங்க அண்ணன், அக்கா, ரெண்டு தங்கை, அண்ணன் கோவையில் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறான். அக்கா சென்னையில் வேலை பார்க்கிறாள்.

வசந்தி அப்பா பெரும் ஷோக்காளி. இருந்த சொத்து பத்து எல்லாத்தையும் குடித்தும் ஊதாரியாக செலவு செய்தும் அழித்து விட்டார். மீதி இருப்பது அந்த சுத்துகட்டு வீடு மட்டும் தான். அது கூட எந்த புயல் மழைக்கு இடிந்து விழுமோ என்கிற மாதிரி தான் இருக்கிறது.

வசந்தி அம்மா ஒரு வாயில்லாப்பூச்சி. அந்த மனுஷன் ஆடும் ஆட்டத்திற்கு இன்னொரு பெண்ணாக இருந்தால் எப்போதோ விலகி போய் இருப்பாள். இல்லை தற்கொலை செய்து இறந்து போய் இருப்பாள்.

வசந்திக்கு படிக்க ஆசை தான். தங்கச்சிங்க ரெண்டு பேரும் படிக்கும் போது இவளும் படிக்க போய்ட்டா சாப்பாட்டிற்கு என்ன செய்வது? எட்டாவதோடு படிப்பை நிறுத்தி விட்டாள். பனை ஓலையில் தொப்பி வித விதமாக அவளுக்கு செய்ய தெரியும்.

இங்கிருந்து இவள் செய்யும் தொப்பிகள் இத்தாலி வரை செல்வதுண்டு. வீட்டு கஷ்டத்தை யாரிடமும் சொல்ல மாட்டாள். எப்போதும் சிரித்த முகமாக தான் வலம் வருவாள். பரிதாபம் என்பது அவளுக்கு பிடிக்காது. யாராவது எப்படி வாழ்ந்த குடும்பம் என்று உச்சு கொட்டினால் போதும் போறியா உன் வேலைய பார்த்துக்கிட்டு என்பாள்.

தைரியம்ன்னா அப்படி ஒரு தைரியம். பாம்புனா படையே நடுங்கும் சொல்வாங்க. அந்த பாம்பையே லாவகமாக கையில் பிடித்து ஒரு சூழற்று சூழற்றி விசிறி அடிப்பாள். ஊர்ல ஒரு பய அவகிட்ட வம்பு வச்சிக்க மாட்டானுங்க நெருப்பு மாதிரி அவ பார்க்கிற ஒரு பார்வைக்கு நாலு மைல் தொலைவுக்கு ஒருத்தன் இருக்க மாட்டான்.

ஆனா மாமா பையன் தங்கராச பார்த்த மட்டும் அவளுக்கு ஆகாயத்தில் பறப்பது போல் இருக்கும். வீட்ல சின்ன வயசுல இருந்தே அவன் தான் உன் புருஷன்னு சொல்லி சொல்லி அதுவே அவ மனசுல பதிஞ்சி போச்சு.

இப்படித்தான் ஒரு நாள் அவ தங்கச்சி ஸ்கூல் போய்ட்டு வரும் போது ரெண்டு பசங்க கிண்டலும் கேலியும் பண்ணியிருக்காங்க. வசந்திக்கிட்ட தங்கச்சி அழுதுக்கிட்டே சொன்னதும் தான் போதும் தங்கச்சி கைய பிடிச்சிக்கிட்டு போய் யார் அவனுங்க என்று அடையாளம் காட்ட சொன்னா. தங்கச்சி கை காட்டியதும் தான் தாமதம். ஓடிப்போய் அவங்க செவிளில் ரெண்டு போட்டு கீழே தள்ளி ஏறி மிதிச்சி அவங்கள ஓடஓட விரட்டி போய் அடிச்சா.

அந்த பயலுவ அப்பனும் ஆத்தாவும் வந்து அவளை திட்டின திட்டு இருக்கே என்ன பொம்பளை பிள்ளையா நீ? பொண்ணுன்னு போனா நாலு பயலுவ கிண்டல் கேலி பண்ண தான் செய்வாங்க அதுக்கு நீ அவங்கள இப்படி அடிப்பியா?

அவனுக அக்கா தங்கச்சியும் பொண்ணு தானே அவுங்ககிட்ட போய் கிண்டல் கேலி பண்ண சொல்லு உன் பிள்ளைகள. இதுக்கு மேலையும் எந்த நாதாரி பயலாவது என் தங்கச்சிகளை கிண்டல் கேலி பண்ணினா அரிவாளால ஒரே வெட்டு தான் என்றாள் வசந்தி.

வெட்டுவடி வெட்டுவ என் பிள்ளைகள அடிச்ச உன் கையும் காலும் நாசமா போக என்று மண்ணை வாரி அவ மேல வீசிக்கிட்டு போனாங்க.

இது நடந்து ரெண்டு மூணு மாதம் இருக்கும். அன்னைக்கு வசந்தி புதுக்குளத்தில் குளித்து விட்டு வழக்கம் போல் அரளிப்பூ பூவை பறிக்க போன இடத்தில் கால் தடுமாறி கீழே விழுந்தாள். வலது காலின் பெருவிரலில் கல்பட்டு வலி தலை வரை வின்ணென்று ஏறியது. சமாளித்து கொண்டு எப்படியோ வீடு வந்து சேர்ந்தாள்.

நேரம் செல்ல செல்ல வலி உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருந்தது. வலது காலின் பாதம் நீர் வைத்து வீங்கி போய் இருந்தது. அருகில் இருந்த சின்ன கிளினிக் ஒன்றில் ஊசி ஒன்று போட்டுக்கொண்டு கொஞ்சம் மாத்திரையும் வாங்கி வந்தாள்.

கால் வீக்கம் சரியான பாடில்லை. முட்டிவரை வீங்கி போய் விட்டது. காலை எடுத்து தரையில் வைக்க முடியவில்லை. நாட்டுவைத்தியர் ஒருவரை வசந்தி அப்பா கூட்டிக்கொண்டு வந்தார். அவர் வந்து பார்த்து விட்டு சில மூலிகை மருந்துகளை அவள் பாதத்தில் தடவி அவள் வலது காலில் ஏறி ஒரு மிதியொன்று மிதித்து விட்டு எல்லாம் சரியா போகும் என்றார்.

எங்கே சரியா போனது? வலி மேலும் மேலும் கூடிக்கொண்டு போனது. பார்க்காத வைத்தியம் இல்லை. வலியும் வீக்கமும் நிரந்திரமாகி போனது. எங்கும் வெளியில் போக முடியாது வீட்டிலே முடமாகி போனாள் வசந்தி.

அவளுக்கு அவள் மேலேயே கழிவிறக்கம் வந்தது. எப்படி ஆடிப்பாடி திரிந்தேன். இப்ப ஒரு மூலையில் முடங்கி போய் விட்டேனே அந்த பயலுவ அப்பன் ஆத்தா விட்ட சாபம் வேறு நினைவில் வந்து போனது. அவங்க பண்ணின தப்புக்கு தானே அடிச்சேன் இதுக்கு போய் தண்டனையா என்று மனம் ஏதோதோ நினைத்து மறுகியது.

வருடங்கள் சில உருண்டோடியது. வசந்தியின் அக்கா யாரையோ காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்டாள் சென்னையில். தங்கராசு வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டான். வசந்தி வீட்டிற்கு அழைப்பு கூட இல்லை.

 ஒரு நொண்டிய கட்டிக்கிட்டு காலம் முழுக்க என் பையன் கஷ்டபடனுமா என்ன? தங்கராசு அம்மா இப்படி சொன்னதாக உறவு ஒண்ணு வசந்தி வீட்டில் சொல்லி விட்டு போனது. வசந்திக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது. எனக்கும் ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டி வைங்க என்று கத்து கத்தென்று கத்தினாள். கேட்க தான் யாரும் இல்லை.

இடையில் ஒருவர் சொன்னார் என்று கோட்டாறு அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் அவள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். இருந்த வீடும் அடமானத்திற்கு போனது. பத்து மாத சிகிச்சையின் முடிவில் நிரந்தரமாக வலது கால் முட்டிக்கு கீழே எடுக்கப்பட்டது.

அவளை பொறுத்தவரை வாழ்க்கை முடிந்து போனதாகவே ஆயிற்று. அண்ணன் கல்யாணம் பண்ணிக்கொண்டான். தங்கைகள் ரெண்டு பேரும் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டு இருந்தனர். அப்பா வழக்கம் போல் குடித்து கொண்டு சுற்றி கொண்டிருந்தார்,

ஒருநாள் அவள் அண்ணன் மனைவிக்கும் அவளுக்கும் தகராறு ஆகி விட்டது. முடிவில் அண்ணன் அவளை அடித்து விட்டான். நீயெல்லாம் இன்னும் ஏன் உசிரோடு இருந்து எங்க உயிரை வாங்குற செத்து தொலையேன் என்றான்.

நான் சாவுறேன்டா. ஆனா யாரும் நிம்மதியா இருக்க மாட்டீங்க உங்க எல்லார் தாலியையும் அறுக்காம விட மாட்டேன்டா கடைசியா வசந்தி பேசிய வார்த்தை இது தான்.

 அன்றைய இரவு இறுக்கமாகவே கழிந்தது. நீண்ட நேரம் ஆகியும் அவள் அறையில் எந்த சலனமும் இல்லை. அவள் தங்கை அவள் அறையை எட்டி பார்த்து விட்டு அலறினாள் அக்காவை பாரும்மா அம்மா அக்காவை பாரும்மா என்று.

அவள் கழுத்து அரளிப்பூவால் கட்டிய மாலையால் நிரம்பி போய் இருந்தது. கண்கள் விட்டத்தை பார்த்தவாறு திறந்த நிலையில் எதையோ வெறித்து கொண்டிருந்தது. அந்த அரளிப்பூ மாலை அங்கே எப்படி வந்தது? சத்தமே இல்லாமல், துளிக்கூட மரணபயத்தை யோசிக்காமல், மரித்தது எப்படி? வசந்திக்கு மட்டுமே அது தெரியும்.

வசந்தி இறந்து பல ஆண்டுகள் ஓடிப்போய் விட்டது. ஆனாலும் இன்றும் அவள் குடும்பத்தை சார்ந்த எல்லோருக்கும் பயம் அவள் நம்மை பழி வாங்கி விடுவாளோ என்று.

பதில் சொல்லத்தான் வசந்தி உயிரோடு இல்லை!!!!!

No comments:

Post a Comment