எண்ணங்களை எழுதுகிறேன் -1
“ஏன் தீபாவளிக்கு
ஊருக்குப்போகவில்லை” என்ற கேள்வி சென்னை கோவை மதுரை எல்லா திசையிலும் ஒலிக்கின்றது.. தியாகராய நகர், புரசை வாக்கம்... காந்திபுரம் ஒப்பணகார வீதி.. வடக்கு
வாசல்.. கிழக்கு வாசல். மேல
மாட வீதி ரதவீதி என.... ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு
ஊர்களிள் வெவ்வேறு சந்தடிகளில்... கூட்டங்களில். நெருக்கியடிக்கப்படும் ஜவுளிக்கடை மூங்கில் பைகளுக்கு மத்தியில் எத்தனையோ வருடங்களாய் என் பால்ய தீபாவளியை தொலைத்துப் போயிருக்கிறேன்....
சின்ன வயதிலெல்லாம் இன்னும்
தீபாவளிக்கு நான்கு நாள் தான் இருக்கு.. மூன்று நாள் தான் இருக்கு என ஆர்ப்பரிக்கும் மனசு... இப்பல்லாம் செலவுகளை நினைச்சாலே நெஞ்செல்லாம் பதறுதுன்னு
சொல்லும் அக்கா... பாவம் அவளை குடும்ப ஸ்திரியாக்கி மகிழ்ச்சிக்கான வேர்களை முடிச்சுபோட்டுவைத்திருக்கிறது காலம்...
ராம்நகர் போயிருந்தேன் மொபைல் கடை சண்முகத்தைப் பார்த்ததுமே அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்டா மாப்ளேன்னேன்... எல்லாரும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துச் சொல்கிறார்கள். சம்பளம் அட்வான்ஸ் கேட்டால் முதலாளி முறைக்கிறார். பின்ன என்ன முந்திரிக்கொட்டைக்கு வாழ்த்துக்களை மட்டும் முன்கூட்டியே சொல்லித்தொலைக்கனும்ன்னு வேதனையை
துப்புவான் கலகலசிரிப்பினூடே...!
அஞ்சுவருசம் முன்னாடி உஸ்மான் ரோட்டில் நடந்து
போகும் போது அரக்குப் பட்டுச்சேலை கட்டியிருந்த ஒரு அக்கா அவங்க வீட்டுக்காரர்கிட்ட ”வந்தது வந்துடடோம் அப்படி அந்த மைக்ரோவேவ் ஓவன் விலையாவது கேட்டுப்போவோமே?-ன்னு கேட்டு வைக்க.. அவங்க வீட்டுக்காரர் அசராம ”வீட்டுக்கு போகும் போது நடந்து போகனும்ன்னு ஆசை இருந்தா சொல்லு விலை கேட்க வர்ரேன்னு கடுப்படித்தார். வேடிக்கைக்காக புன்னகைத்துவிட்டேன்,
அதே கடை வாசலில் இன்றைக்கு என் மனைவி எல்.சீ.டி விலை கேட்கப்போவோமாங்கன்னு கேட்கிறா... சிரிக்கவா அழவான்னே தெரியவில்லை. எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியமாட்டேங்குது, அதென்ன தீபாவளி வருடக்கடைசி,பொங்கல் பண்டிகை அப்போ மட்டும் ப்ரிட்ஜ்,ஏசி,வாசிங் மிஷின்னு நம்மோட ஆடம்பரமெல்லம் அத்யாவசியப் பட்டியலுக்குள் வந்துவிடுது.
பலமுறை மண்டையைக் குடையும் கேள்விதான்., ”இப்போ ஆஃபரில் வாங்கித்தரீங்களா... இல்ல மாசாமாசம் ஈ.எம்.ஐ கட்டிடுறேன்னு சொல்லுங்க! நான் இன்ஸால்ட்மண்ட்லயேகூட வாங்கிடுறேன்றா”.. மனைவிகளோட இந்த தடாலடி தாக்குதல் தான் அதிபயங்கரம். ஐய்யா ஃபேன் ஹவுஸ் காரவுகளே நீவீர் வாழ்க.. நின் கொற்றம் வளர்க...
எலெக்ட்ரானிக் சாதனம் வாங்கி, ஆயிரக்கணக்கில் ஆடைக்குச் செலவளித்து, மெகாஹிட் திரைப்படம் பார்த்து, இரவுக்கு பீட்சா ஆர்டர் செய்வதல்ல.. அன்றைக்கு காலகட்டத்தில் எங்கள் தீபாவளின்றதே வேறே! பூர்வீகம்
நமக்குத் தென்மாவட்டம். பட்சணங்கள் செய்வதில் நம்மூர் மக்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. காரசாரமாகன்னாலும் சரி, தேன்பதத்தில் ஜாங்கிரியை
இலகவிடுவதிலும் சரி. தென்மாவட்டத்திற்கு நிகர் தென்மாவட்டங்களே...
நகரவாழ்க்கையில் இங்கெல்லாருக்கும் அடையார் ஆனந்த பவனும், கிருஷ்ணா ஸ்வீட்டும் தான் விதி என்றாகிவிட்டது. நகரவாழ்க்கைன்னு நான் சொல்றது பொதுவான நகரங்களைத்தான்... ஊரென்றெல்லாம் நான் அடையாளப்படுத்த விரும்பவில்லை. எல்லா ஊரின் காற்றையும் தண்ணீரையும் குடித்திருக்கிறேன். அந்த விசுவாசம்ன்னு வைச்சிக்கிடுங்களேன்,
தீபாவளி
பட்சணங்கள்ன்னாலே நாவின்
இரு ஓரமும் ஒரு ஈரம் சுரக்கிறதை தடுக்கமுடியலைதானே!.. பிறப்பில் எனக்கு திவாகரன் என்று பெயர். ஆனால் தீனித்தின்னி
திவாகரன் ன்னே பட்டப்பெயர் வைத்திருந்தார்கள். என்னோட ஃபேவரிட் எப்போதும் அம்மா சுட்ட தீபாவளி முறுக்குதான், முறுக்கு பட்சணங்களிலேயே ஒரு தனி ஏகாதிபத்தியம் வாய்ந்தது.. எல்லா பட்சணமும் தீர்ந்து போனாலும் இத்துணூண்டு முறுக்கு வீட்டில் எந்த தூக்கிலாவது தங்கியிருக்கும் .காபி ருசிக்கி... எள்
முனை எட்டிப்பார்க்க முள்முறுக்கு சுட்டா போறுமே! ஆசை யாரைவிட்டது.
அதிரசம் ஆஹா! அதை மறந்து
போனா பூர்வஜென்ம பாவமெல்லாம் சேர்ந்துவந்து என்னை எண்ணெய் கொப்பரைக்குள்ளே அமுக்கிடுமே.. பனைவெல்லப் பாகில் உருகும் மாவை உள்ளங்கையில் தட்டி கொதிக்கும் எண்ணெய்க்குள் நீச்சலடிக்க விட்டு பக்குவமான நிறத்தில் சுவையாக பொறித்தெடுப்பதில் அயிலா சித்தி கைகாரி...
யார்யாருக்கு என்ன பட்சணம் வேணும்ன்னு முன்னாடியே அம்மா கேட்ருவா! அக்கா முந்திரிகொத்து நெய்விலங்கா பைத்தியம். சடகோபன் கேரட் அல்வாம்பான். நான் மட்டும் வித்யாசமாய் ஓமப்பொடி கேட்பேன்,. மற்றபடி வடை செனத்திகள் வழக்கப்பட்டியல்.
அடுப்படியில் ஓமப்பபொடி செய்யும் போது கிட்டவே நின்று நாவில் கண்ணீர் வடிப்பேன். மொத்தமும் எனக்குத்தான் என்பதை முன்னூறாவது வாட்டியா சொல்லும்போது கரண்டி வந்துவிழும். எட்டேபோய் நில்லு கிட்டே வந்தே சூடு வைப்பேன்னு அம்மா பொறுமையை சோதிக்கும் வரைக்கும் அகலமாட்டேனே!.
விகடன் தீபாவளி மலரை தீபாவளி அன்றே படிச்சு முடித்துடவேணும், தலைதீபாவளிக்கு வந்த ஜோடிமாதிரி விகடனும் கையுமா திரியும் ரமாவை சடகோபன் சீண்டிவிட்டு புக்கை பிடுங்குவான். நமக்கு ஓமப்பொடிதான் முக்கியம்.
கிணத்தடியில் சின்ன அத்தை தெய்வானை கூவத்தொடங்கிவிட்டால் அம்பேல்தான். உச்சந்தலையில் வெந்தயம், சின்னவெங்காயம், ஓமம், சீரகம் கருவேப்பிலை எல்லாத்தையும் போட்டு பொறித்த தீபாவளி எண்ணெய் வழியவழியத் தேய்த்துவிட்டால்தான் அவள் குரலடங்கும். தேமேன்னு போய் குளிக்கனும்பேன் குட்டுவிழும். எண்ணெய் செத்த ஊரட்டும்...
ஸ்நானம் முடிச்சு தும்பைப்பூ நிற வேட்டி யில் கால்ல ஒரு பாகம் டவலைக் கட்டிக்கிட்டு அடுப்பாங்கரைக்கு குறுக்கும் நெடுக்கும் அலைவேன். தட்டில் ஓமப்பொடி போட்டு மறைச்சு வைச்சு தின்னத்தருவாள் ராஜாங்கம் அப்பாவோட பெரிய தங்கை அத்தை.
தீனித்தின்ன்றது
சரியாத்தான் இருக்கு... சாமிகும்பிடாம வாய் நிறைய மொக்குறதப்பாரு கழிசடை. கண்ட வசவுகள் விழும். அதிலெல்லாம்
பெரிய நம்பிக்கை இல்லாததால் லட்சியம் செய்வதில்லை..
வயிற்றை ரொப்பியதும் ஆட்டம்தான். பங்களா அய்யர் வீட்டுத்தோட்டம் பின்னே வெடி வெடிப்பதில் ஆரம்பிக்கும் குதூகலம். இராஜாங்கத்திடம் போய் சடகோபன் வெடிய புடிங்கிட்டான்னு கம்ப்ளைய்ண்ட் கொடுத்து
பஞ்சாயத்து ஓங்கும் வரைக்கும்
போய்த்தான் சேட்டை அடங்கும்.
பிஜிலிவெடி,ஓலைவெடி, யானைவெடியெல்லாம் கூட பயப்படாமல் வெடிப்பேன். இந்த கம்பிமத்தாப்புத்தான் சுறுசுறுன்னு கையில் பட்டு எரியும், காலிச்சிரட்டைக்குள்ளே வெடியை வைத்து பற்றவைப்பதில் அத்தனை குஷி!.
வருடங்கள்
கடந்து கொஞ்சம் மீசை அரும்பும் வயதில் புத்தாடை எடுத்துக்கொடுப்பதெல்லாம் அண்ணாதான்! பெரியமனிதன் தோரணையில் அண்ணன் எப்டிடா இருக்கு என்பான்...
என்னடா கலர் இது கன்றாவி போ,.. எங்கடா எடுத்த
எனக் கடுப்படிக்கும் முகம் சுருங்கி தலையிலடித்துக் கொள்வான் உனக்குன்னு வாங்கிக் கொடுத்தேன்பார் என்னைச் சொல்லனும்ன்னு அடிக்க
வருவான்..
உங்களுக்கெல்லாம் தெரியாது சட்டை பாக்கெட்டுக்குள் படத்துக்குப் போக முன்னூறு ரூபாயைச் சொறுகி வைத்து இருப்பான்.
சினிமாத்தனமாக நிறைய ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு
விளக்காய் ஏற்றி வைத்தவீடு ஒரே ஒரு சூறைக்காற்றில் அத்தனை ஒளியையும் இருட்டாக்கிப் போய்விட்டது. சின்ன அத்தை தெய்வானை தன் சிநேகிதனை மணம்சார விரும்பி உடன் போய்ட்டா!
இரண்டு
பெரிய உயிர்களை காவு எடுத்துகிச்சு கவுரவமும் அவமானமும். இளசுகளாய் நின்ன எங்க வாழ்க்கை துடுப்பில்லாத படகா கழிமுகத்தில் சிக்கிப்போச்சு.
மாமாவோட அனுக்ரகம்! ஊர்மாறி உடமை இழந்து தேசாந்திரியாய்த் திரிந்து, வாழ்க்கையைப் பந்தாடி, பலநேரம் அதனோடு ஓடி, இதோ இன்றைக்கு
உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் ஒரு அழகான தீபாவளிநாள் தான். கிச்சனுக்குள்ளே மனைவி ஓமப்பொடி செய்துகொண்டிருக்கிறாள்.
ப்ளாட்டில் வெடிவெடிக்க ஸேஃப்டி ஸ்பாட் ஒதுக்கியிருக்கிறார்கள். சின்னவனும் பெரியவனும் வெடிபோடப் போய் இருக்கிறார்கள்.
Facebook-ல் இரண்டு ஸ்டேட்டஸ்களை தட்டிவிட்டு,முப்பது நாப்பது வாழ்த்துச்செய்திகளுக்கு பதிலனுப்பிவிட்டுக் கொண்டிருக்கிறேன். பரிச்சயமில்லாத நிறைய முகங்களையும் நிறைய வாழ்த்துக்களையும், நிறைய குரல்களையும் கூட்டுசேர்த்து வைத்திருக்கிறது இந்த பிக்சல் நட்பு...
Facebook-ல் இரண்டு ஸ்டேட்டஸ்களை தட்டிவிட்டு,முப்பது நாப்பது வாழ்த்துச்செய்திகளுக்கு பதிலனுப்பிவிட்டுக் கொண்டிருக்கிறேன். பரிச்சயமில்லாத நிறைய முகங்களையும் நிறைய வாழ்த்துக்களையும், நிறைய குரல்களையும் கூட்டுசேர்த்து வைத்திருக்கிறது இந்த பிக்சல் நட்பு...
ஊருக்குப்போகவில்லையா என்னும் கேள்விகளை கடல்கடந்து வசிக்கும் பேரிடம் தொலைத்துப் புதைக்கிறேன். அவர்களைப் பொறுத்தவரைக்கும் நான் என் தேசத்தில் ,என் ஊரில் இருக்கிறேன், சிசோ
என்றொரு ஈழத்துச் சகோதரி அழைக்கிறாள். சாம்சங் ஸ்மார்ட் போனில்
அயல்
நாட்டு எண் .
“அண்ணா எப்படி இருக்கீகள்! அண்ணி,குட்டியள் சுகமா
இருக்காவளா! பண்டிகைக்கார மக்களுக்கு வாழ்த்துச் சொல்லிடுங்கோ! , அங்க
நாட்டில் தீபாவளி எப்படி! இங்கே அதெல்லாம் கொண்டாடமாட்டோம் அண்ணா! ”
வார்த்தைகளை அழகழகாய் அடுக்கிக் கொண்டே போகிறாள்!
கேள்விகளுக்கெல்லாம் “ஓம் அண்ணா” என்கிறாள்.
பாவம்
அவள் பேசி முடிக்கும் வரை யாரும் சப்தமான வெடிகள் போட்டுவிடக்கூடாதே பதறுது மனசு. யுத்தச் சத்தமென பழைய நினைப்பில் அவள் பயந்து போவாளோ!
arumai...
ReplyDelete