Wednesday 18 June 2014

Story 15: மாற்றம்

மாற்றம்

அம்மாவோடு வெளியூர்ப் பயணம் என்றாலே ஒருவித பயம் தான் கந்தனுக்கு . அம்மா, பேருந்தில் பயணிக்கும்போது வாந்தியெடுப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தாள் . அவள்தான் என்ன செய்வாள் பாவம் . அவளுக்கு அப்படித்தான் ஆகிவிடுகிறது . உறையூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவுதான் மலைக்கோட்டை , அதற்குள் இரண்டு முறை வாந்தியெடுத்துவிடுவாள். அவளுடன் செல்பவர்கள் பாடு திண்டாட்டம்தான். இதற்க்குப் பயந்தே அம்மா பெரும்பாலும் வெளியே செல்வதில்லை. திருமணம் முடிந்து திருச்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை ஆறு முறை மட்டுமே மலைக்கோட்டைக்கு துணி எடுக்கவும் , இரண்டு முறை பெரிய ஆஸ்பத்திரிக்கும் , ஒரே ஒரு முறை ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் மட்டுமே போயிருப்பதாக அவள் துல்லியமாக கணக்கு சொல்லும்போது ரொம்ப பரிதாபமாகிவிடும் .

எப்போது பேருந்தில் போய்விட்டு வந்தாலும் அம்மாவின் முகம் பார்க்கச் சகிக்காது . அஷ்டகோணலாகி இருக்கும் . சமயத்தில் காய்ச்சல் கூட வந்துவிடும்

ஏம்மா உனக்கு இப்படி ?" என்று கந்தன் கூட கேட்டான் .

"என்ன கருமமோ ...." என்று இரண்டே இரண்டு வார்த்தைகளோடு நிறுத்திக்கொண்டாள் . வைத்தியமும் பயனளிக்கவில்லை அவளுக்கு .

அடுத்தவாரம் அம்மாவின் பெரியண்ணன் மகளுக்கு பழனியில் கல்யாணம் . கல்யாண பேச்சைவிட அம்மாவை எப்படி பழனிக்கு அழைத்துப் போய்வருவது என்பதுதான் பெரிய பேச்சாக இருந்தது எல்லாருக்கும் .

ஏன்ண , பழனி முருகன் தான் நம்ம வயலூர்லயும் இருக்காம்ல ...
பின்ன இங்கயே கல்யாணத்தை வச்சிருக்கலாம்ல..."என்று அம்மா அவள் அண்ணனிடம் கேட்டுவிட்டாள் .

அவர் சிரித்துக்கொண்டே , " மாப்பிள்ளை வீட்டில் ஏதோ வேண்டுதலாம் . நாமதான் தனியா பஸ் வைக்கிறோமே ...நீ பின்சீட்டிலே தனியா உட்கார்ந்துக்க , வாந்தி வந்தா ...ஓரமா எடுத்துக்க ...நீயும் எப்ப தான் பழனியப் பார்க்கிறது ?" என்று சொல்லிவிட்டு போய்விட்டார் .

அம்மாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை . ராத்திரியெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை . கந்தனிடம் ரெண்டு நாளைக்கு முன்னமே சொல்லி வாந்தி மாத்திரை வாங்கித் தயாராய் வைத்திருந்தாள் .

முந்தின நாள் சாயந்திரம் சொந்தபந்தம் எல்லாம் ஒவ்வொருத்தராக வந்து சேர்ந்தார்கள் . பொண்ணு மாப்பிள்ளையைப் பற்றி யாரும் சட்டை செய்யவில்லை . அம்மாவை எப்படி அழைத்துப் போய் வருவது என்பது தான் அவர்களின் பேச்சாக இருந்தது .

நாராயணன் சித்தப்பா ஒருபடி மேலே போய் கந்தனிடம் , " ஏன்டா , நாமெல்லாம் நிம்மதியா கல்யாணத்துக்குப் போகணுமா  ..வேண்டாமா ? ...உங்கம்மா வந்தா அவள ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகத்தான் நேரம் சரியாயிருக்கும் ...அப்புறம் எங்க கல்யாணத்தைப் பார்க்கிறது ?" என்று அலுத்துக்கொண்டார்

அம்மா பக்கத்தில் யார் உட்காரப் போகிறார்கள் என்று பிரஸ்தாபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் . கடைசியில் கடைசி சீட்டில் அம்மா மட்டும் தனியாக உட்காருவதென்று முடிவாகியது.

தன்னைத் தீண்டத்தகாதவள் போல் நடத்துவது அவளுக்குப் பிடிக்கவில்லை. " உங்களுக்கெல்லாம் கிண்டலாப் போச்சா ? இருங்க , உங்க மூஞ்சியிலேயே எடுக்கிறேன் " என்றாள் கோபமாக .

எல்லோரும் பேருந்து நிற்கும் இடம் நோக்கி சென்றபோது , அம்மா யுத்தத்திற்குப் போவதைப் போன்ற பரபரப்பில் இரண்டு பாலித்தீன் பைகளையும் , சில எலுமிச்சம்பழங்களையும் எடுத்து வைத்துக்கொண்டாள் . ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மாத்திரைகளையும் மறக்காமல் எடுத்துக்கொண்டாள் . கந்தனிடம் சொல்லி புளிப்பு மிட்டாய் வேறு வாங்கி வைத்துக்கொண்டாள் . போகிற வழியில் முச்சந்தி மாரியம்மனிடம் , " ஆத்தா ...வாந்தி வராம இருந்தா ,
உன் திருநாளுக்கு காவடி எடுக்கிறேன் என்றும் வேண்டிக்கொண்டாள் .

ஒரு வழியாக அம்மாவின் சாபத்தைச் சுமந்துக்கொண்டு பஸ் கிளம்பியது . அம்மா , கடைசி சீட்டில் சன்னலோரமாக பரிதாப முகத்துடன் அமர்ந்திருந்தாள் . உதடுகள் எதையோ முணுமுணுத்தன .
வேண்டிக்கொண்டிருக்கிறாள்போலும் .

எல்லோரின் ஏகோபித்த விமர்சனங்களால் கந்தனுக்கும் சற்று எரிச்சலாகத்தான் இருந்தது . "ச்சே ! அம்மா மட்டும் ஏன் இப்படி ?...மத்தவங்க எல்லாம் எப்படி இருக்காங்க " என்று சலித்துக்கொண்டான் .

கூட்டத்திலிருந்தவர்கள் கந்தனிடம் " டேய் ...உங்கம்மா பக்கத்துல போய் உட்கார் ...என்ன , !...தூங்கிடாத ...அப்புறம் மூஞ்சியில அபிஷேகம் நடந்திடும் ..."என்று வெறுப்பேற்றினார்கள் .

அம்மாவோ , " தம்பி வாப்பா ....அம்மா பக்கத்துல நீயாவது உட்கார் ...நான் வாந்தி எடுக்கமாட்டேன் ....மாத்திரை போட்டுட்டேன் ..."என்று பரிதாபமாக கெஞ்சினாள் . ஏனோ கந்தன் மறுத்துவிட்டான் . அம்மா முகம் வாடி போய்விட்டது .

மாத்திரை மற்றும் இத்யாதிகளின் உதவியால் இதுநேரம் வரை சமாளித்துவிட்டாள் . பஸ் மணப்பாறையைத் தாண்டி வெகுநேரம் ஆகிருந்தது .

திடீரென்று குறுக்கிட்ட பள்ளத்தின் பொருட்டு ஓட்டுனர் பிரேக் அடிக்க ...வண்டி ஒருமுறை குலுங்கியது . இதுவரை தலையைச் சாய்த்திருந்த அம்மா திடுக்கிட்டு விழித்தாள் . அவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது . கண்கள் நிலைக்கொள்ளாமல் சுழன்றன . உமிழ்நீர் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் போய் வந்து கொண்டிருந்தது . கை கால்கள் ஜில்லிடத் தொடங்கின . பிரசவ வேதனையைவிட கொடுமையாக உணர்ந்தாள் .....தவித்தாள் ....நாக்கு குழறியது . உணர்வுகள் செயலிழக்கத் தொடங்கின . மாத்திரை முதல் மாரியம்மன் வரை எல்லோரும் கைவிட்டதாகத் தோன்றியது . பதற்றத்தில் பிளாஸ்டிக் கவர் வைத்திருந்த பையைத் தேடமுடியவில்லை . பஸ் ஓட்டத்தில் அது எங்கு போனதோ !...கந்தனை அழைக்க எவ்ளவோ பிரயாசைப்பட்டபோதிலும் உணர்வு நிலை மந்தமானதால் , அது முடியாமற் போனது . கந்தனும் இரண்டு சீட் தள்ளித் தூங்கிக்கொண்டிருந்தான் .

பதினைந்து நிமிட நரக வேதனைக்குப் பிறகு ....அவளால் கட்டுப்படுத்த முடியாமற்போனது . அனிச்சை செயலாகக் குமட்டிக்கொண்டு வந்தது .

விடியத் தொடங்கியது . பஸ் வேடசந்தூர் பிரிவில் திரும்பியபோது ரயில்வே கேட் குறுக்கிட்டது . கேட் மூடப்பட்டதால் சில வாகனங்கள் காத்துக்கொண்டிருந்தன .


நிறுத்தப்பட்ட பேருந்தின் பின்சீட்டில் அவள் தவித்துக்கொண்டிருந்தாள் .
மரணவேதனை ....விழுங்கவும் முடியாமல் , எடுக்கவும் முடியாமல் ....கடைசியில் தறிக்கெட்டு ஓடும் மதம் பிடித்த யானையைப்போல் அவளின் உத்தரவை மீறி வெளியேறத் தொடங்கியது வாந்தி . என்ன செய்வதென்று தெரியாமல் சன்னலோரமாக தலையை சாய்க்கவும் , இரண்டு சக்கர வாகனம் ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வரவும் சரியாகயிருந்தது . அவ்வளவுதான் .....அவர் தலை , சட்டை முழுவதும் ஒரே வாந்தி அபிஷேகம் . அடுத்த வினாடி அம்மாவுக்கு கைகால்கள் உதறத் தொடங்கியது . ' உவ்வே ...' சப்தத்தால் எல்லோரும் ஏற்கனவே விழித்துக் கொண்டிருந்தார்கள் .

அம்மா கண்களில் கண்ணீர் கொட்டியது . செயலற்று போய்விட்டாள் பாவம் . யாரிடமும் அதிர்ந்துகூட பேசமாட்டாள் . ஆனால் , இன்று கொலைகுற்றம் செய்தவள் போல குற்றஉணர்ச்சி மேலிட தவித்துப்போனாள் .

வாந்தியபிஷேகம் செய்யப்பட்டவர் மங்களகரமாயிருந்தார். பட்டு வேட்டி , பட்டு சட்டை அணிந்திருந்தார் . காலை முகூர்த்தத்திற்கு போய்க்கொண்டிருப்பார்போலும் . எல்லாருக்கும் பயம் மேலிட அவரைப் பார்த்தனர் . மாறாக , அவர் கோபப்படவில்லை . நிமிர்ந்து அம்மாவை ஒருதரம் பார்த்தார் . அம்மா நடுங்கிக்கொண்டிருப்பதை அவர் கவனித்தார்

கந்தன் சன்னலோரம் குனிந்து , கொஞ்சம் பயத்துடன் , " அய்யா , மன்னிச்சிடுங்க ....தெரியாம ...பாவம் ...அவங்களுக்கு ...." அதற்கு மேல் வார்த்தை வரவில்லை . நாக்கு ஒட்டிக்கொண்டது . அவர் சாந்தமாக , " பரவாயில்லை தம்பி , அவங்க என்ன வேணுமின்னா செஞ்சாங்க ....அவங்களுக்கு சேரல பாவம் ...." என்று சொல்லிக்கொண்டே , வண்டியிலிருந்து  துணி எடுத்து வாந்தியைத் துடைக்கலானார் . பின் , தண்ணீயிருந்தா கொஞ்சம் குடிக்க அவங்களுக்கு குடுங்க . தலையைப் பிடிச்சுக்குங்க தம்பி ....தலையை கீழ சாச்சி முழுசா எடுங்கம்மா ...." என்று சொல்லிக்கொண்டிருந்தார் .

அம்மா கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது . நன்றிப் பெருக்குடன் கையெடுத்துக் கும்பிட்டாள் .

 ரயில் போனது .....கேட் திறந்தது  .......அவரும் போய்விட்டார் .

பின்னொரு சமயம் , கந்தனுக்கு வேலை கிடைத்து சென்னையில் வசித்து வந்தான் . ஒரு நாள் காலையில் அலுவலகம் சென்று கொண்டிருந்தான் .....

அசோக் நகர் சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து ஒன்று அருகில் வந்து நின்ற அடுத்த விநாடி ....கந்தன் உடல் முழுதும் ஒரே வாந்திமயம் . நிமிர்ந்து பார்த்தான் . பேருந்துஓர சீட்டிலிருந்து ஒரு பெண் இன்னும் வாந்தி எடுத்தபடியே இருந்தாள் .பேருந்துக்குள் இருந்தவர்கள் எல்லாம் அந்தப் பெண்ணைத் திட்ட ஆரம்பித்தார்கள் . அவள் உடலெல்லாம் வேர்த்து , நாக்கு வறண்டு , கண்கள் மயங்க நடுக்கத்துடன் அந்தப் பெண் பயந்துகொண்டிருந்தாள் .
கந்தன் நிமிர்ந்து அந்தப் பெண்ணைப் பார்த்தான் . அவள் கண்களில் கெஞ்சல் தெரிந்தது . பயத்துடன் , என்ன மாதிரி அர்ச்சனை கிடைக்குமோ என்று விக்கித்துக்கொண்டிருந்தாள் .

கந்தன் , " பரவாயில்லை , நீங்க  என்ன வேணுமின்னா செஞ்சீங்க ..."

....என்று சொல்லிக்கொண்டே , வண்டியிலிருந்து துணி எடுத்து வாந்தியைத் துடைத்தான் . பின் , "தண்ணீயிருந்தா கொஞ்சம் குடிங்க ....தலையை கீழ சாச்சி முழுசா எடுங்க ...." என்று சொல்லிக்கொண்டிருந்தான் .அந்தப் பெண் இமைகொட்டாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் .

No comments:

Post a Comment