இடைவெளிகள்
“நல்லாயிருக்கியா சபரீ?“
பதிவேட்டில் மும்முரமாய் எழுதிக்கொண்டிருந்த நான் அனிச்சையாய் நிமிர்ந்தேன். ரஞ்சனியே தான்.
“அ.. அட ர.. ரஞ்சனி.. எப்படியிருக்க..?“
ஆச்சர்யமா தயக்கமா என்றறியாத உணர்வது. நம்பமுடியாமல் வார்த்தைகள் தடுமாற, சுதாரித்தவளாய் புன்னகையுடன் உரிமையாய் எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
இத்தனை வருடத்திற்குப்பின்னும் அதே துறுதுறுப்பு.. துளியளவும் தயக்கமோ கோபமோ கண்டுபிடிக்க முடியாத சிரிப்பு.
“வாட் எ ப்ளசண்ட் சர்ப்ரைஸ். உன்னை இங்க பாப்பேன்னு நெனைக்கவேயில்ல. நீ திருச்சில இருக்கன்ல நெனச்சேன்” என்றாள் முகம் முழுக்க ஆச்சர்யமாய்.
“ட்ரான்ஸ்பர். ஆறு மாசமாச்சு இங்க வந்து“ சொல்லிக் கொண்டிருக்கும்போதே ப்யூன் வந்து பதிவேட்டை எடுத்துச்சென்றான். ரஞ்சனிக்கும் சேர்த்து டீ வாங்கிவரச் சொல்லும் யோசனையை கைவிட்டவனாய், “சரி கேண்டீன் போகலாமா? நடந்துகிட்டே பேசுவோம்“ என்றேன்.
“ஓ ஷ்யூர். ஆனா வழக்கம்போல என் பங்கை நான்தான் கொடுப்பேன். சரினா கிளம்பு“ என்று சிரித்தபடியே எழுந்தாள்.
“வழக்கம்போல..“ மட்டும் அழுத்தமாய் கேட்டது. ஒருவேளை எனக்கு அப்படித் தோன்றியதோ என்னவோ.. என்னால் சிரிக்க முடியாமல், வெளித்தெரியாத பெருமூச்சொன்றை உதிர்த்தபடி கேண்டீன் இருக்கும்திசை நோக்கி நடந்தேன். சற்று இடைவெளி விட்டு ரஞ்சனி.
“கைகோர்த்துக் கதைபேசிய காலங்கள்“ என்று எங்கேயோ படித்த கவிதை ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. உதறிவிட்டு அவள் பக்கம் பேசுவதற்காகத் திரும்பினேன்.
திருவிழாவை வேடிக்கை பார்க்கும் குழந்தையாய் சுற்றும் முற்றும் நிறைந்துகிடந்த மரங்களை ஸ்வாரஸ்யமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தாள்.
சின்னச் சின்ன விஷயங்களைக் கூட அழகாய் ரசிக்கும் ரஞ்சனி. குறிப்பாய் தோட்டக்கலையென்றால் நேரம்போவதே தெரியாது. அந்த நான்கு வருடங்களும், பரிசுப்பொருட்களாக செடிகளையும் மரக்கன்றுகளையும் தவிர வேறேதும் கேட்டதில்லை அவள். அதன் பழக்கமாகவோ என்னவோ, இப்போதும் என் வீட்டைச் சுற்றி ஏராளமான செடிகளுக்கு இடமளித்திருக்கிறேன். தினமும் நீரூற்றிப் பராமரித்து, அரைமணி நேரமாவது செலவிடாமல் அலுவலகம் கிளம்பியதேயில்லை நான். “பேசாம அதுகளையே உங்களுக்கு கட்டிவச்சிருக்கலாம்“ என்று அடிக்கடி என் மனைவி கிண்டல் செய்வதுண்டு.
”இது என்ன செடி வகை?”
சத்தம்கேட்டு நினைவுகளை வலுக்கட்டாயமாய் தள்ளிவைத்துவிட்டு திரும்பிப் பார்த்தேன். ஏதோவொரு செடியை சுட்டிக்காட்டி அதன் பெயர் என்னவென காவலாளியிடம் விசாரித்துக்கொண்டிருந்தாள்.
“இன்னும் செடிகொடிப் பைத்தியம் விடலயா ரஞ்சனி?“ என்றேன் கிண்டலாய். உதடு சுளித்தவளை கவனியாததுபோல, இருவருக்கும் டீ சொல்லிவிட்டு கேண்டீன் நாற்காலியில் அமர்ந்தேன்.
காவலாளியிடம் விடைபெற்றுவிட்டு எதிர் நாற்காலிக்குத் திரும்பியவள் அதே புன்னகையுடன் “போன வருஷம் தான் ஃப்ளாட்டுக்கு குடியேறினோம் சபரீ. வெறும் தொட்டிச்செடி தான். இந்த மாதிரி எங்கயாவது வெளில வரும்போதுதான் செடிகளையும் மரங்களையும் கண்ல பாத்து சந்தோசப்பட்டுக்க முடியுது“ என்றாள்.
என்ன சொல்ல வந்தேனென என்னாலேயே யூகிக்க முடியா இடைவேளையில் அவளே பேச்சைத் தொடர்ந்தாள்.
“அது சரி.. வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா சபரீ? உனக்கு எத்தன குழந்தைகள்?“
தொய்ந்துபோகும் இடங்களிலெல்லாம் அழகாய் பேச்சை மாற்றுதல் ரஞ்சனிக்கேயுரிய தனித்திறமைதான்.
“நல்லாயிருக்காங்க. ஒரு பையன்“ என்றேன் ரத்தினச்சுருக்கமாய்.
“ஓ.. வெரிகுட். பையன் பேரென்ன?“
யதார்த்தமா? தெரிந்துகொள்ளும் ஆர்வமா? உள்நோக்கமா? அக்கேள்விக்கான காரணத்தை என்னால் யூகிக்க முடியவில்லை.
“வினோத்“ என்றபடியே தேநீர்க் கோப்பையை கையிலெடுத்தபடி அவளைப் பார்த்தேன்.
“ம்ம் நல்ல பேர்“ சலனமின்றி புன்னகைத்தாள். ஏமாற்றமானாலும் சந்தோசமானாலும் வெளிக்காட்டிக்கொள்ளா சிரிப்பு அது.
கல்லூரி நாட்களில் கற்பனையில் பிறந்த குழந்தைகளுக்கு ‘சன்ஜய்’ என்றும், ‘சன்ஜனா’ என்றும் பெயர்சூட்டி அழகுபார்த்தது நினைவுக்கு வந்தது. சபரீஸ் மற்றும் ரஞ்சனியின் பெயர்கள் ஏதோ ஒருவகையில் இணைந்ததாய், இருவரும் சந்தோசமாய் உச்சரித்துப்பார்த்த பெயர்கள் அவை.
ஒருவேளை அதைத் தெரிந்துகொள்வதற்காகக்கூட ரஞ்சனி கேட்டிருக்கலாம். ‘வினோத்’ என்றதும் ஏமாற்றமடைந்திருப்பாள். அவளைத் திருப்திப்படுத்தவாவது பொய் சொல்லியிருக்கலாம்..
“உனக்கு எத்தன குழந்தைகள் ரஞ்சனி?” என்றேன் அவளுக்குரிய அதே ஆவலில்.
கோப்பையை உறிஞ்சியபடியே அதே சிரிப்புடன் “ஒரு பொண்ணு. பேர் ப்ரியங்கா“ என்றாள்.
“நல்லாயிருக்கு“ என்றேன். பெருங்குற்ற உணர்ச்சியிலிருந்து மீண்டதாய்த் தோன்றியது எனக்கு.
காலிக்கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, கைப்பையைத் திறந்து சில்லறையை எடுத்தாள்.
“ரஞ்சனி ப்ளீஸ்.. இந்த ஒருதடவையாவது உனக்கும் சேர்த்து நான் பணம் தர்றேனே..“ என்றேன்.
வழக்கம்போல “இருக்கட்டும் பரவாயில்ல“ என்றபடி தட்டில் வைத்துவிட்டு கிளம்பலாமா என்பதுபோல் தலையாட்டினாள். என் பங்கையும் செலுத்திவிட்டு எழுந்தோம்.
அவள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், பேருந்து நிறுத்தம் வரை அவளுடன் நடந்தேன். சம்பிரதாயப் பேச்சுக்கள் விரும்பாததால் அதிகமாய் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
வெகுநேரம் உறுத்தலாய் உணரவே அவள் பக்கம் திரும்பி, “ஜாதகத்துல ‘வ’ வரிசைல ஆரம்பிக்கிற பேர் வைக்கணும்னு சொல்லிட்டாங்க. அதுனால தான் வினோத்னு..“ என்றேன் தயக்கமாய்.
புருவம் சுருக்கியவள், பின் புரிந்துகொண்டவளாய் “வினோத்தும் நல்ல பேர் தானே.. அழகாயிருக்கு” என்றாள் சிரித்தபடி.
என்னவோ கேட்கவேண்டுமெனத் தோன்றினாலும் அடக்கிக்கொண்டேன். அப்போதைய மனநிலையில் எடுக்கும் முடிவுகள்.. காலப்போக்கில் இதெல்லாம் சகஜம் தான். மேற்கொண்டு என்ன பேசுவதெனத் தெரியாமல் பேருந்துவரும் திசைநோக்கி பார்த்துக்கொண்டிருந்தேன்.
“ப்ரியங்கா, அவர் காலேஜ் படிக்கும்போது செலக்ட் பண்ணிவச்ச பேராம்“ என்றாள் அமைதியாக.
குரல் வந்த திசை நோக்கித் திரும்பினேன். தூரத்தில் ரஞ்சனிக்கான பேருந்து வந்துகொண்டிருந்தது.
No comments:
Post a Comment