Tuesday 24 June 2014

Story 25: நீர்ப்பித்தன்


நீர்ப்பித்தன்
பத்தொன்பதாவது வயதில் அண்ணனுடைய நண்பன் வீட்டுக் கல்யாணத்தில் தான் இனி டீடோட்டலராகவே இருப்பேன் என்று சொன்னது ஏதேனும் ஒரு காலத்தில் முறியடிக்கப்படும் என்பது அவன் கனவிலும் நினைக்காத ஒன்று. அவனையறியாமலேயே அவன் சொன்ன வார்த்தைகள் அவனை விட்டு பிரிந்து கொண்டிருந்தன.
சரத் வேளாணில் மூன்றாம் ஆண்டு படிப்பவன். அப்பாவின் ஆசைக்கிணங்க வேளாணை தன் பாடமாக எடுத்துக் கொண்டான். அவனுடைய அப்பா வேலுச்சாமியால் வேளாண்மைக்கு செல்லமுடியவில்லை. குடும்பத்தில் நிலவிய கடுமையான சூழல் அவரை டிரைவர் ஆக்கியது. அன்னலக்ஷ்மி டிராவல்ஸில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். ஐம்பத்தி முன்றாவது வயதிலும் அவர் எல்லா இடங்களுக்கும் செல்ல தன்னை தயார் நிலையிலேயே வைத்துக் கொண்டிருந்தார்.
சரத் படிப்பில் சுட்டி இல்லை. அவனுக்கு வேளாணில் நாட்டமே இல்லை. ஞாயிற்றுக்கிழமை ஆனால் தந்தையுடன் பயணங்களுக்கு கிளம்பிவிடுவான். தினம் செய்தித் தாள்களை வாசிப்பதால் அப்பா வேலை செய்யும் இடத்தின் முதலாளியுடன் நிறைய வாதாடுவான். அவருக்கும் அவனை பிடித்துப் போக ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பாவுடன் சேர்ந்து கொள்வதை ஒரு போதும் தடுத்ததில்லை.
தான் ஒரு வேலைக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்னும் எண்ணம் மட்டுமே சரத்தின் மனதில் வேரூன்றி இருந்தது. அப்பாவின் மனதில் பால்ய காலத்தில் இழந்த நிலத்தின் தாக்கம் ஒவ்வொரு முறை வண்டி ஓட்டும் போதும் எழுந்து கொண்டே இருந்தது.
முதலாளியே அப்பாவை அழைத்து அந்த ஞாயிற்றுக் கிழமை செல்லும் இடத்திற்கு மகனையும் அழைத்து செல்ல சொன்னார். அது செங்கல்பட்டின் அருகில் இருக்கும் தண்டரை என்னும் இடம். சரத் அறிந்திராத இடம். கோவையிலிருந்து காரினை எடுத்துக் கொண்டு நடேசன் பாண்டியன் ஆகியோரை ஏற்றிக் கொண்டு அங்கே செல்ல வேண்டும். வேலுவின் மகன் வருவதை அவர்களிடம் சொல்லிவிட்டதாக கூறி முன்பணத்தை கொடுத்துவிட்டார்.
சரத் அறிந்திராத இடங்களுக்கு செல்வதில் எப்போதும் ஆர்வம் காட்டுபவன். ஆதலால் சீக்கிரமே தனக்குரிய எல்லா துணிகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவான். அன்றும் அப்படியே கிளம்பினான்.
நடேசன் மற்றும் பாண்டியன் ஆகியோர் ஊடக துறையில் பணியாற்றுபவர்கள். அவர்கள் தண்டரை கிராமத்திற்கு செல்வது அங்கு தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஒருவர் நிகழ்த்தும் முகாமொன்றை காண்பதற்காகவே. முடிந்தால் அவர்கள் நடத்தி வரும் சிறுபத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி ஒன்றும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஆசை வைத்திருந்தனர். இந்த விஷயத்தை வேலுவும் சரத்திடம் சொல்லியிருந்தார். அது அவனுக்கு பொருட்டாகவே படவில்லை.
பயணத்தின் போது உறங்கும் பழக்கம் சரத்திற்கு கிடையாது. வேலு கூட ஓட்டும் போது களைப்பில் கண் அசந்து அதை கட்டுப்படுத்தி ஓட்டும் பழக்கம் உண்டு. சரத்தோ துளியும் கண் அயர மாட்டான். வழியெங்கும் காடாக இருப்பினும் அவனுக்கு அதை வேடிக்கை பார்ப்பதில் கிடைக்கும் சுகம் சொல்ல முடியாத ஒன்று. இம்முறையோ வேலுவிற்கு உறக்கமே வரவில்லை.
வந்திருந்த இரண்டு பேரும் சர்க்கரை நோய்க்காரர்கள். அடிக்கடி சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்த வேண்டியதாய் இருந்தது. மேலும் அவர்கள் இருவருக்கும் பருக ஏதேனும் விஷயம் தேவைபட்டுக் கொண்டே இருந்தது. ஒருசமயம் குளிர்பானங்கள். ஒருசமயம் காபி டீ போன்று. அதுவும் புறவழிச்சாலைகளின் இடையே நவநாகரீக காபி கடைகளிலேயே அவர்கள் வண்டியை நிறுத்த சொன்னார்கள்.
வேலுவிற்கும் சரத்திற்கும் அங்கெல்லாம் குடித்து பழக்கமில்லை. சரத்திற்கு இது போன்ற சோபாக்கள் போடப்பட்டிருக்கும் காபி கடைகளில் ஒருமுறையேனும் காபி சாப்பிட வேண்டும் என்னும் ஆசை. அப்பாவின் நிலை அறிந்திருந்தமையால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே இருந்தான். கண்கள் அந்த கடையையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.
பாண்டியன் தன் அலைபேசியை வண்டியிலேயே விட்டு சென்றிருந்தார். அது ஒலிக்கவே முக்கியமான அழைப்பாக இருக்கும் என்று எடுத்துக் கொண்டு கடையினுள் நுழைந்தான். பிரம்மாண்ட அமைப்பாக தன் உருவத்தை அவனுக்கு அக்கடை காட்டிக் கொண்டிருந்தது. இதற்குகந்த நண்பர்களும் தனக்கில்லையே என்று அப்போதே விசனப்பட்டான். அலைபேசியை நீட்டும் போது கீழே மெனுகார்ட்டை கண்டான். அதனருகில் ஒரு கப்.
அதனுள்ளிருந்து காபியின் வாசனை அவனின் நாசித் துவாரத்தை தீண்டி சென்றது. அவர்கள் எதுவும் சொல்லவில்லை. இருந்தும் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அருகிலிருக்கும் மெனு கார்டின் மேல் பார்வை சென்ற போது காபியின் வாசனை வருகிறது ஆனால் காபி என்னும் பெயரே இங்கு இல்லையே என்று யோசித்தான். காபச்சீன்னோ என்னும் பெயர் அவன் கண்களுக்கு தட்டுப்பட்டது. ஆனால் அதனருகில் லாட்டி, எஸ்ப்ரெஸ்ஸோ என்னும் பெயர்களும் இருந்தன.
கல்லூரியில் பேசிக் கேட்டு காபச்சீனோ எனில் காபி என்று அறிந்திருந்தான். அருகில் இருந்த இரண்டு பெயர்களும் அவனுக்கு சந்தேக கிளர்ச்சியை உண்டு பண்ணிய வண்ணமே இருந்தன. அவனின் இருத்தலை அறிந்தவுடன் காபி வேண்டுமா என்று கேட்டனர். வேண்டாம் என்று வெளியே வந்தான்.
வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் தம் அடிப்பதற்காக கடைக்கு வெளியே சுவரோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். புறவழிச் சாலையில் இருக்கும் கடைகளில் வேலை செய்கிறார்களே இவர்களின் வீடுகள் எங்கிருக்கும் என்று யோசித்தாலும் மனம் முழுமையாக அதில் ஈடுபடவில்லை. அவரை அழைத்துண்ணா காபிக்கு இன்னோரு பேர் தான் காபச்சீனோ வா ?” எனக் கேட்டான். தெரிந்தும் ஆரம்பமாக இருக்கட்டுமே என்றே இந்த கேள்வி அவனின் நினைவிற்கு வந்தது. “ஆமாம்பாஎன்று அவர் தன் வழியை நோக்கி சென்று கொண்டே இருந்தார். இவர் நிற்கமாட்டார் என்பதை அப்பதிலிலேயே அறிந்தவுடன் நேரடியாக தன் கேள்விக்கு வந்தான்லாட்டி எஸ்ப்ரெஸ்ஸோ னா என்ன ணா ?”. “அது பெருசா எதுவும் இல்லப்பா. டிகாஷன் கம்மியா இருந்தா லாட்டி, அதிகமா இருந்தா எஸ்ப்ரெஸ்ஸோ. பாலோட, பால் சேக்காம ரெண்டுத்துக்கும் வரும்”. பதிலினூடே மறைந்தும் போனார். சரத்தின் பயணமும் தொடர்ந்தது.
தண்டரைக்கு சென்றவுடன் வந்திருந்தவர்கள் தத்தமது வேலைகளுக்கு சென்றனர். அப்பா களைப்பில் காரிலேயே உறங்க ஆரம்பித்தார். தான் எங்கும் தொலைந்து விட மாட்டோம் என்னும் நம்பிக்கையே அப்பாவை தூங்க வைக்கிறது என்பதை சரத் அறிந்திருந்தான். சரத்தும் பின் சீட்டில் படுத்து உறங்க ஆரம்பித்தான். ஒருமணி நேரம் மட்டுமே உறக்கம் அவனுடன் இருந்தது.
மைக்கில் யாரோ பேசிக் கொண்டிருக்கும் சப்தம் அவனின் காதுகளுக்கு கேட்டுக் கொண்டே இருந்தது. தூக்கம் அவனை விட்டு முழுவதும் நீங்காமல் தன் சாயலை சிறிது விட்டு சென்றிருந்தமையால் பேச்சை கவனியாமல் சிறு காட்டினுள் நுழைய ஆரம்பித்தான். மரங்கள் சிறிதாக தடிமனாக கொடிகளாக செடிகளாக அவனின் தூக்கத்தை அவனை விட்டு நீங்க வைத்துக் கொண்டிருந்தன.
கூடாரம் போல ஒன்றை இட்டு அதனடியில் மூலிகை செடிகளை பராமரித்து வந்திருந்தனர். அங்கே வேலை செய்து கொண்டிருந்த பெண்மணியைக் கண்டான். தன் அம்மாவின் வயதிருக்கும் என்று பார்வையிலேயே கணக்கிட்டுக் கொண்டான். அவர்களிடம் கேட்டே அவர்கள் பழங்குடியின மக்கள் மற்றும் அரிய வகை மூலிகைகளையும் பாம்புகளையும் பாதுகாக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டான்.
எதையும் தீண்டாமல் மூலிகைகளை சுற்றி வலம் வந்த அவனுக்கு அரவம் ஊருவது போல சப்தங்கள் கேட்க ஆரம்பித்தவுடன் பயத்தில் வெளியே வந்தான். பானை ஒன்றினுள் துளசியை நீரில் போட்டு வைத்திருந்தனர். ஆங்காங்கே நிறைய பானைகளும் அதன் மேல் தம்ளர்களும் இருந்தன. பயம் சிறிது சிறிதாகவே அவனை விட்டு நீங்கத் துவங்கியிருந்தது.
தரையிலிருந்து மேலெழும்பி தரை பாவுவது போல வளைந்திருந்த மரத்தின் கனத்த உருவத்தைக் கண்டு வியந்தான். அதன் மேல் சாய்ந்து நின்று பார்த்தான். மேலே வானம் இலைகளினூடே அவனுக்கு காட்சியளித்துக் கொண்டிருந்தது. மக்களின் கால் பாதங்கள் சருகுகளின் மேல் பட்டு நடப்பதை அவனின் செவிகள் உணர்ந்தவுடன் கனவுலகில் இருந்து வெளியே வந்தான். ஆரம்பித்த இடத்திற்கே நடக்கத் துவங்கினான்.
எல்லோரும் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு மட்டும் ஏதோ தம்ளரில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. தனக்கும் கிடைக்குமா என்று வரிசையின் கடைசியில் சென்று நின்று கொண்டான். அவன் மேலே முழுக்கை சட்டையை மடித்துவிட்டுக் கொண்டு கீழே ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தான். அங்கு பலர் அந்த தோற்றத்திலேயே இருந்தமையால் அவன் மேல் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
கறுப்பு நிறத்தில் சூடான திரவத்தை தம்ளரில் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவனுக்கும் தரப்பட்டது. ஒரே ஒரு சொட்டை மட்டும் முதலில் உறிஞ்சினான். சுவை அவனின் நுனி நாக்கில் பட்டு கண்களை விரியச் செய்தன. இனிப்பா காரமா அறுசுவைகளில் எந்த சுவையது என்று அவனால் பிரித்தறிய முடியவில்லை. நாக்கிற்கோ இன்னமும் தேவையாக இருந்தது. ஒவ்வொரு சொட்டாக முழுவதையும் குடித்து முடித்திருந்தான். குடிக்கும்வரை சுற்றியிருந்த யாரையும் அவன் பார்க்கவில்லை. எல்லோரும் மற்றொருவருடன் எதையோ ஆழமாக பேசிய வண்ணமே இருந்தனர். இவன் மட்டுமே தனியாக குடித்துக் கொண்டிருந்தான்.
சிறிய தம்ளர் ஆதலின் விரைவிலேயே தீர்ந்துபோனது. சுவையினின்று மீண்டெழுந்து நிலைமையை பார்க்கும் போது எல்லோரும் தத்தமது நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். யாருக்கும் சந்தேகம் வரா வண்ணம் மீண்டும் வளைந்த மரத்திற்கே சரத் சென்றான்.
வானத்தை பார்த்துக் கொண்டே மேல் வாயையும் நுனி நாக்கையும் சேர்த்து அதன் சுவையை மீண்டெழச் செய்ய யத்தனித்துக் கொண்டிருந்தான். அவனால் முடியவில்லை. அறிந்திராத சுவையாதலின் நினைவகராதியில் அது பதியப்படவில்லை. அவ்வழியே சென்ற ஒரு பெண்ணிடம் கேட்ட போது தான் துளசி தேநீர் என்று அறிந்து கொண்டான். அதிலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் போட்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டான்.
மரத்தின் வேர்களுக்கருகில் முளைத்திருந்த துளசி செடிகளைக் கண்டான். எப்படி இவை தேநீராகின என்னும் சூட்சுமத்தை அவனால் அறிந்து கொள்ள மட்டும் முடியவில்லை. அவன் அறிந்திராத அந்த சுவை அவ்வனத்தையும் பொழுது போக தகுந்த இடமில்லாததாக மாற்றியிருந்தது. காரின் பின் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டான்.
கண்களுக்குள்ளே கறுப்பு நிற திரவம் மட்டுமே வந்து வந்து சென்றது. அப்பாவை எழுப்பி தனக்கு அந்த தேநீர் வேண்டும் என்று கேட்கத் தூண்டியது. அவன் அறிந்த தேநீர் எல்லாம் அப்பாவின் அலுவலகத்திற்கு செல்லும் போது கிடைக்கும் அரை க்ளாஸ் தேநீர். அது எப்படி தேநீராகும் என்னும் கேள்வியுடன் தூங்கிப் போனான். இரண்டு மூன்று முறை மட்டுமே குடித்திருக்கிறான். சுவை தரும் கொடுமையை அனுபவிக்க சகிக்காமல் விட்டுவிட்டான்.
நேரம் சென்றதே தெரியாமல் இருந்த போது அப்பா அவன் முதுகை தட்டிகிளம்பற டைம் ஆச்சு போல இருக்கு தம்பி.” என்று எழுப்பிடீ தர்றாங்கலாம் குடிக்கிறியா ?” என்றார். எல்லா வார்த்தைகளும் மறந்து கறுப்பு நிறம் மட்டுமே அவனின் நினைவிற்குள் வந்து சென்றது. மீண்டும் வரிசையின் கடைசியில் நின்றான். அதே கறுப்பு நிறம். ஆனால் சுவை வேறு. அதனுடன் போட்டியிடும் சுவை. அவனின் தூக்கத்தை எங்கோ கொண்டு சென்று விட்டெறிந்து எல்லோரையும் மறந்து அந்த இடத்திலேயே அவனை உணர வைத்த திரவம் கொண்ட சுவை.
பேச்சினூடே அங்கு இருந்த எல்லோரும் எழுத்தாளர்கள் என்பதை யூகித்திருந்தான். எல்லோரின் கண்களும் அவனை ஒருதரமேனும் நிச்சயம் கண்டிருக்கும். இந்த நிலையில் மீண்டும் சென்று தேநீர் வாங்கினால் தன்னை அசிங்கமாக நினைப்பார்களோ என்று அச்சம் கொண்டான். அருகில் நின்று கொண்டிருந்த காலையில் பார்த்த அதே பெண்மணியிடம்இது ஏன்கா வேற மாதிரி இருக்கு ?” எனக் கேட்டான். அவரோ ஒற்றை செம்பருத்தி தேநீர் என்று பதில் சொல்லி முடித்தார். அது எப்படி இருக்கும் என்று கூட அவன் அறிந்திராமல் சுவையை மட்டும் எடுத்து தன் பயணத்தை தொடர்ந்திருந்தான்.
காரில் பயணம் செய்யும் போதே அப்பாவின் அலுவலகத்தில் குடித்தது தேநீர் அல்ல காபி என்று நினைவு கூர்ந்தான். நிறம் ஒன்றானால் சுவை ஒன்றாகுமா என்னும் தர்க்கம் அவனுள் எழுந்தது. அதுநாள் வரை சுவைத்திருந்த எல்லா நீரின் சுவையும் மறந்து இரண்டு தம்ளர் கறுந்திரவத்தின் சுவை மட்டுமே நிலை கொண்டிருந்தது. காலையில் ஆசை கொண்ட கேபச்சீனோவின் பெயரும் நுகர்ந்த மணமும் காபியின் ஆசையையும் அவனுள் கூடி விட்டிருந்தது.
தண்டரையில் வேலை முடிய நடேசனும் பாண்டியனும் குரோம்பேட்டையில் ஒரு லாட்ஜ் எடுத்து தங்கினர். அடுத்தநாள் காலை தான் வேலை என்று வேலுவையும் கழற்றி விட்டனர். சிட்லபாக்கத்தில் தன் சொந்தக்காரர் இருக்கிறார்கள் பார்த்து வருகிறேன் என்று வேலு அவர்களிடம் சொல்லி சரத்தையும் அழைத்து சென்றார்.
அவள் பெயர் சாந்தாமணி. பிராமணப் பெண். அவரின் பால்ய கால காதலி. சரத்திடம் குடும்ப சிநேகிதர் என்று சொல்லி அழைத்து சென்றார். இருவரின் முகத்திலும் சிரிப்புகள் தவழ்ந்தன. சரத்தின் மனமோ கறுப்பிலேயே இருந்தது. மாலை நேரமாதலின் வீட்டில் சாந்தாமணியின் கணவரும் இருந்தார்.
மனம் விருப்பமில்லாமல் அவள் கணவருடன் வேலு பேசிக் கொண்டிருந்தார். சரத்தை சமையலறையில் அழைத்து அவனைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் மூவருக்கும் காபி போட்டுக் கொண்டிருந்தாள். பிராமணர்கள் என்று அப்பா முன்னமே சொல்லியிருந்தார். அவர்கள் வீட்டினுள் விடுவதே ஆச்சர்யம் என்றும் சொல்லியிருந்தார். இந்நிலையில் சமையலறைக்குள் அழைத்தது சர்த்திற்கு பிரமிப்பாய் இருந்தது. இப்பிரமிப்புடன் அவள் போடும் காபியின் விதம் அவனுக்கு புதுமையாக இருந்தது. அப்படி காபி போடுவதை அவன் பார்த்ததில்லையாதலின் சற்றும் யோசிக்காமல் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுவிட்டான். அது ஃபில்டர் காபி.
காபி கொட்டையின் பொடியும் சிக்கரியும் கலந்து ஃபில்டரினுள் கொதிக்கும் நீரில் அமிழ்ந்து கொண்டிருந்ததை சாந்தாமணியின் வார்த்தையில் ஊடுருவி கற்பனை செய்து கண்டு கொண்டிருந்தான். நீர் வடிந்ததும் டிகாஷனை பாலில் ஊற்றி கொடுத்தாள். எல்லா திரவத்தையும் மறக்க அடித்திருந்தது சாந்தாமணியின் காபி. பெரிய தம்ளர் நிறைந்து வழியும் அளவிற்கு ஊற்றி முழுவதையும் குடித்து முடித்து இன்னமும் கிடைக்காதா என்று ஏங்கினான். கேட்பதற்கு கூச்சம் அவனைப் பற்றியே இருந்தது.
அடுத்தநாள் மாலையே அவர்கள் சென்னையை விட்டு கிளம்பினர். அதுவரை அவன் காபி தேநீர் எதையும் குடிக்கவில்லை. நீர்ப்பதத்தில் குடித்தது தண்ணீர் மட்டும் தான். சாப்பாடும் முழுமையாக இறங்கவில்லை. திரவங்களுக்கு காதலனாகிக் கொண்டிருந்தான். அப்போதும் கூட சாந்தாமணி யார் என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.
அப்பாவிற்கு அருகில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே செல்லும் போது வரும் பிறந்தாளிற்கு காபி ஃபில்டரை பரிசாக கேட்கலாமா என்று எண்ணினான். சாந்தாமணியின் வீட்டில் கொதித்த நீரின் குமிழிகள் போல எண்ணங்கள் அமிழ்ந்து அவனுள்ளேயே மறைந்தன. மீண்டும் அதே நவகால காபி கடையைக் கடந்து கார் சென்றது. அங்கு நுகர்ந்த காபியின் மணம் அவன் வசம் இல்லாமல் போனதால் அவனின் பார்வை அக்கடையை உதாசீனமே செய்தது.
 

No comments:

Post a Comment