Sunday, 15 June 2014

Story 3: வணக்கத்திற்குரிய

வணக்கத்திற்குரிய திரு .ராஜமாணிக்கம் அவர்களுக்கு... 
என்னை உங்களுக்கு நிச்சயமாய் தெரிந்திருக்கும்... என் ஜாதகமே உங்கள் கையில் இருக்கிறது.
நிஜம்தான் ... 

டெமூர் லாஜஸ்டிக்ஸ் நிறுவனத்தில் சீனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்யூட்டிவாக கடந்த நான்காண்டுகளாக பணியாற்றிவரும் எனக்கு...
என் பெயரைச் சொல்லவில்லை அல்லவா! என் பெயர் செல்வராஜ்.

நண்பர்களுக்கு செல்வா! வீட்டில் மகேஷ். செல்வராஜ் தாத்தாவின் பெயரென்பதால்.. மரியாதை நிமித்தமாக...மகேஷ்.
தாத்தாவை திட்டக்கூடாது என்பதற்காகவும் கூட இருக்கலாம்... 

கடந்த ஜூலை பதினேழு அன்றுதான் இருபத்தி ஏழாவது பிறந்தநாளை கிண்டியில் உள்ள ஆர்பனேஜ் ஒன்றில் கொண்டாடினோம் நண்பர் சகிதம். 

தரமணியில் எம்.டெக். முடித்திருக்கிறேன். அப்பா அம்மா பூர்வீகம் விருதுநகர். சென்னைதான் இரண்டாம் தாய். 

கொஞ்சம் பின் தங்கிய குடும்பம் தான் என்பதால் குடும்பச் சூழ்நிலை நன்றாக அறிந்தவன். இப்போது தம்பி க்ரூப் I -க்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான்.

எனக்குத் திருமணம் செய்து வைத்துவிடலாம் என வீட்டில் முடிவெடுக்கும் அளவுக்கு பொருளாதாரநிலையில் உயர்ந்துவிட்டோம்.

வீட்டில் அப்பா பெரியாரிஸ்ட். அம்மா தீவிர சாய் பக்தை.. நான் அப்பாவின் பாதியும் அம்மாவின் மீதியும் ஆனதால் சாதி வரம்புகளுக்குள் திருமணம் வரன் தேட அனுமதிக்கவில்லை..

எனக்கு நண்பர்கள் நிறைய உண்டு.. அவர்களிடம் ஒருபோதும் சாதிமதம் பார்ப்பதென்பதே இல்லாததின் பொருட்டு என் துணைவியையும் சக மனுஷியாக என்னையும் என் குடும்பத்தையும் தன்னுடையதென்று எண்ணுபவராக வேண்டுமென்னும் எண்ணத்திலும் தான் அப்படி ஒரு விளம்பரம் கொடுத்தேன். 

பேப்பரில் விளம்பரம் பார்த்து மின்னஞ்சலில் தொடர்பு கொண்ட உங்களுக்கு என் மருத்துவச் சான்றிதழும் ஜாதகத்தையும் அனுப்பி வைத்தேன். பார்த்திருப்பீர்கள். ஜாதகம் அனுப்பியது அம்மாவின் மிச்சங்கள் என்று சொல்லியிருந்தேனல்லவா.. அதனாலே(!) 

உங்கள் மகள். சுவாதி அவர்களின் புகைப்படமும், அவர்பற்றிய விபரங்களும் அனுப்பியிருந்தீர்கள். நன்றி! 
எனக்கு அவரைப் பிடித்திருக்கிறது. அம்மாவுக்கும் ,அப்பாவுக்கும் கூட... 

அதன்பின் உங்களிடம் தொலைப்பேசியில் பேசினபோது உங்களையும் கூட பிடித்துப் போனது. 
நீங்கள் உடற்கல்வி ஆசிரியர் என்ற தகவல் தான் அதற்கு காரணம். 

விருதுநகரில் மாவட்ட அளவில் சிலம்பம் போட்டியில் முதல்பரிசு வென்றிருக்கிறேன் என உங்களிடம் அப்போதே சொல்லவேண்டும் போல் இருந்தது. 
தற்பெருமை அடிப்பது போல் ஆகிவிடும் என்று அடக்கிக்கொண்டேன். 
உங்கள் வீட்டில் பேசி கலந்து ஆலோசித்து முடிவு சொல்வதாகவும் சொன்னீர்கள். 

அதன்படியே கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜாதகம் பொருந்தி இருப்பதாகவும், உங்கள் வீட்டில் எல்லோருக்கும் இந்த வரன் பிடித்திருப்பதாகவும் சொன்னீர்கள்... அதில் உங்கள் மகளும் அடக்கமாய் இருப்பார் என புரிந்துகொண்டேன். 

எனக்கு சின்ன வயதிலே விளையாட்டு ஆர்வம் உண்டு.. பள்ளி நாட்களில் பெரும்பாலான நேரங்களில் காமராஜர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 
விளையாட்டுத்திடலிலே கழிப்பேன். 
அதனாலே பள்ளிப்பாடங்களைத் தவிர வேறெதும் படிக்கவோ ,எழுதவோ கவனம் செலுத்தாமலே கடந்துவிட்டேன்.

ஆனால் எனக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுண்டு. கவிதைகள் பொருளுணர்ந்து வாசிப்பேன். அறிவுமதியின் நட்புகாலம் என் பெண் நண்பிகளுக்கு நான் வழங்கும் பரிசாக இருக்கும். 

சென்னை கொடுத்த இன்னொரு வரம் என் தோழிகள். அவர்களைப் பற்றியும் நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். 
வேணு, பாலபாரதி, சைதன்யா , பென்ஸி, நூர் என கல்லூரி நட்புத் தோழிகள் .

என் அம்மா தன் வயிற்றில் இவர்களைச் சுமக்காத ஒரே காரணத்தாலும்... என் சக வயதுடையவர்கள் என்ற காரணத்தாலும் தங்கைகளாகி இருக்கவேண்டியவர்கள் தோழிகளாக உடனிருக்கிறார்கள். 
இவர்கள் வீடுகளின் நான் மூத்த பிள்ளையாக இருந்திருக்கிறேன்.
பென்ஸியின் அப்பாவின் மரணம்தான் எங்களுக்கான முதல் துக்கம் மிகுந்த நாட்கள்.எப்போது வேண்டுமானாலும் செல்வாவிடம் கேட்டால் சொல்வான் என உரிமையாய் பழகுபவர்கள். 
என் தம்பி பிரித்விக்கு ஐந்து அக்காள்கள் இவர்கள் எல்லோரும்..

இவர்களைப் பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
அதற்குமுன் , என் உயிர் நண்பன் ராமு என்கிற ராமச்சந்திரனை அறிமுகப் படுத்திவிடுகிறேன்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகால நட்பு எங்களுடையது... இரண்டாம் வகுப்பில் மூக்கு ஒழுகும் வயதில் ஒன்றாக பள்ளிக்கூடம் பயின்றவர்கள். இன்றைக்கு வரைக்கும் இந்த சிநேகம் நட்பாட்டம் ஆடுகிறது. 

ராமுதான் சொல்லப்போனால் அம்மாவுக்குச் செல்லப்பிள்ளை நான் சென்னை கல்லூரியில் படிக்கும் காலங்களிலும் சரி,வேலைதேடி அலைந்த காலங்களிலும் சரி . நான் இல்லாத குறையை அம்மாவின் பக்கத்தில் இருந்து தீர்த்தவன் அவன் தான். 

இப்போது சென்னை வளசரவாக்கத்தில் கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனம் ஒன்று வெற்றிகரமாக நடத்தி வருகிறான். என்னைப் போலவே தான் அவனும். வேறே பெரிய விளக்கம் அவனுக்குத் தேவையிருக்காது. சென்னையில் ப்ளாட் ஒன்று வாடகைக்கு எடுத்து அம்மா அப்பாவை அழைத்து கூடவே வைத்துக் கொள்வதுதான் என் விருப்பமும்...

அப்பாவின் நட்புவட்டமும் சரி! ஊர் பரிச்சயமும் சரி!... அவரை அவ்வளவு சீக்கிரம் விருதுநகரில் இருந்து நகர்த்திவிட முடியாது. 

நீங்கள் இருபது வருடம் முன்பே சென்னையில் செட்டில் ஆகிவிட்டதாகச் சொல்லி இருந்தீர்கள். நகர வாழ்க்கை பற்றிய உங்கள் தெரிதல் என்னைத் தாண்டியும் அதிகம் என்பதை அறிவேன். 

எனக்கென்று சில கொள்கைகள் இருக்கிறது. இருவீட்டார் பேசி முடித்து மனம் ஒன்றி இந்த திருமணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டால்... (நிச்சயிக்கப்படவேண்டும் என்பதே என் விருப்பமும் ) வரதட்சணை பெறுவது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. 

அப்பா வாங்கிக் கொடுத்த வாட்ச் இன்னும் பிசகில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

என்னிடம் ஹோண்டா யுனிகார்ன் பைக் இருக்கிறது, தங்கத்தின் மீதான ஈர்ப்பு எப்போதுமே இல்லை... 

சீரடி போய் வரும்போது அம்மா அணிவித்த செம்புக் காப்புதான் என் பொக்கிஷம். ஆகவே... மறைமுக வரதட்சணை பொருட்கள் எதுவும் நீங்கள் கொடுக்கவும் வேண்டாம். 

சுவாதியிடம் நீங்கள் கொடுத்தனுப்ப வேண்டியதெல்லாம்.. அன்பையும் இந்த தலைமுறைகள் இழந்துவிட்ட பாசத்தையும் தான். அதுவே என் எதிர்பார்ப்பும் கூட... 

முன்னமே சொன்னது போல... என் தோழிகள் குடும்பத்தில் ஒரு மகனாக இருப்பது போல உங்களுக்கும் ஒரு மகனாக இருப்பேன்... அதனால்தான் மாமா...என்றழைத்து இந்த கடிதத்தைத் தொடங்கவில்லை... 
ப்ரித்வியும் என்னைப் போல பொறுப்புள்ள பிள்ளையாக அப்பா வளர்த்திருக்கிறார்.

அம்மாவின் மகிழ்ச்சியினைக் கருதி விரைவிலேயே என் திருமணம் நடந்தேற வேண்டும் என்பது.. வீட்டில் எல்லோரது எண்ணமும்.. 

எனக்கு உங்களிடம் பேசத் தோன்றியதும் என் பற்றிய இத்தனை விளக்கங்களுக்கும் அடிப்படைக் காரணம். என் வயதைக் கடந்து வந்தவர் நீங்கள். உங்கள் மகளை பொறுப்புள்ள ஒருவருக்குக் கொடுக்கவேண்டும் என்பது உங்கள் முதல் கடமையாக இருக்கலாம். ஆகையால் உங்களிடம் இவற்றை பேசுவது தாம் முறையாகப் பட்டது... 

சுவாதியிடம் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம் முதலில் .......என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை...
வாழ்ந்து காட்டுதலில் தானே நல்ல புரிதலும் ,அன்பும் ,காதலும் இருக்க முடியும் .

நான் என் அப்பா அம்மாவைப் பார்த்து வளர்ந்தவன். அப்பா எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர். அவரைப் போலவே எங்களையும் வளர்த்திருக்கிறார். 

அப்பாவைப் பொறுத்தவரை திரைப்படங்கள் கூட சீர்கேடுதான். அவர் தன் வாழ்நாளில் பார்த்த இரண்டே படங்கள். அவ்வையாரும் ,பெரியாரும்.. தான்.

நிறைய உங்களோடு பேசிவிட்டேன் போல...நான் சிரித்துக்கொள்கிறேன் மெதுவாக, எனக்கு இன்னும் உங்களைப் பிடித்துப் போனது ஏன் தெரியுமா... இந்த கடிதத்தை எழுதச் சொன்னதே நீங்கள் தான்.

போனில்
நிறைய உங்களிடம் பேச எத்தனித்த போது "உங்கள் வார்த்தை தடுமாறுகிறதே... ஏன் தம்பி "என்றீர்கள்
"சின்ன வயதிலிருந்தே பி.டி வாத்தியார் என்றால் பயம் சார்." என்றேன்... 

கொல்லென சிரித்துவிட்டு... சரி அப்படியென்றால்... மின்னஞ்சலில் 
மீதி
எழுதுங்கள் என்றீர்கள். அதனாலே உங்களை எனக்குப் பிடித்துப் போனது.
வாய்ப்புக் கொடுப்பதில் ஆசிரியர்களுக்குச் சரிநிகர் யார் இருக்கிறார்கள்!.


கணிணியில் தமிழ் எழுத பழகியிருக்கவில்லை...
ஊரெல்லாம் அலைந்து திரிந்து சென்ட்ரல் போஸ்ட் ஆபீஸில் இரண்டு இன்லேண்ட் லெட்டர் வாங்கி வந்து எழுதுகிறேன். அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதத்தான் இரண்டு.(!)

வாருங்களேன். நீங்கள் ஓய்வாக இருக்கும் ஒருநாள் எங்கள் சொந்த ஊருக்கு... ஒரு இளவயது நண்பனாய் உங்களோடு கொஞ்சம் பொழுதைக் கழிக்க நினைக்கிறேன். நானும் விடுமுறை வாங்கி வைக்கிறேன். 
-செ @ ம. 

No comments:

Post a Comment