Sunday 15 June 2014

Story 2: பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

 பொங்கல் பண்டிகைன்னா எப்பவும் ஊரில் பசங்களோடு ஜே ஜேன்னு கடந்துகொண்டிருக்கும்  கார்த்திக்கு... பசங்களை வேலை வாங்கி பொங்கல்போட்டிகளுக்கு தயார் செய்வதும் ஒண்ணுவாடிவாசலில் காளைமாட்டை அடக்குறதும் ஒண்ணு

 “கார்த்தியண்ணா... இங்கபாருண்ணா இந்த தினேஷு அடிச்சுகிட்டே இருக்கான்..”

 “லேய்...
 சண்டபோட்டா அவனவன் வீட்டப்பாக்க போய்ட வேண்டியதுதான்.”

 “இல்லண்ண.. கலர் பேப்பர் ஒட்டிகிட்டு இருக்கும்போது கயிர அத்துவுட்டான்னா...” தினேஷின் தன்னிலை விளக்கம்.

 “சரி சரி பசை காஞ்சுபோகும் முன்ன ஒட்டி முடிங்கல.. தெருபூராத்துக்கும்  கலர்பேப்பர் காணுமா ? வேற வாங்கிவரச்சொல்லவா..

 “இருக்கும்ணே போதும்”.இது சுரேஷ்.

 “டே! மாரிச்செல்வம் காவி கரைச்சு எடுத்து வையி... சுண்ணாம்பும்...  பொங்கல் நல்வாழ்த்துக்கள்ன்னு... எழுதப்போவோம் மணி பதிணொன்னு ஆச்சு...”

 “உட்டி (அஜீத்) வீட்ல மிச்சம் இருக்காம்னே அத தூக்கிருவோம் . இந்த வருசம் சம்பகடை தெருவில போய் எழுதுறோம்... எதிரிங்க முன்னாடி நம்ம கெத்த காட்றோம்..
 “உங்களுக்கு ஒரண்டை இழுக்கலைன்னா தூக்கம் வராதே... கண்ணா, மணியெல்லான் எங்க ?”

 “அவனுங்க மார்கெட்டுக்கு போயிருப்பானுவ... இப்போ வந்துடுவாங்க”

 “சரி , நானும் பெருமாளும் கோலப்போட்டிக்கு செலக்ட் பண்ண ஆறு தெருவுக்கும் போறோம் நீங்க அதுக்கு முன்னாடி... கலர்பேப்பரை ஒட்டி. தோரணத்த கட்டி முடிங்க சண்ட போட்டுட்டு கிடக்கக்கூடாது என்னா!...”
 “கார்த்தியண்ணே அத்த கூப்பிடுது...
 “என்னவாம்.

 “யத்தே... எதுக்குன்னு கேக்குதாங்க”

 “சாப்ட்டு போவச்சொல்லுமா..

 “யண்ணே சாப்டச்சொல்லிச்சி அத்த..

 “கடைவீதிதாம்போறேன். பார்த்துக்குறேன்னு சொல்லு...

***
ராமுவும் நானும் கண்ணனும் கோலப்போட்டிக்குத் தேர்வு செய்ய இரவு மூன்று மணிக்கு நகர்வலம் போனோம்

 “இந்தவாட்டி சுகந்தி வீட்டுக்கோலந்தான் கலக்கல்..". இது ராமு.

 “நீ பொம்பளப்பிள்ளையளுக்குன்னே சொல்லு , கோட்டிக்காரா... உண்மையிலே அது நல்லாவா இருக்கு ரெண்டு மாங்காவ கீழயும் மேலயும் வரைஞ்சி... ஜிகினாப்பொடிய வீசியடுச்சிருக்கா... நாராயணங்கடையில நாம சிகரெட்டு வாங்கின காசெல்லாம்... ஜிகினால தீருது..நான் மறுத்தேன்.

 “அவங்கப்பன்ட்ட இருக்கு செய்யுறான்.”கண்ணன்.

 “சர்தான்... ஆனா..இந்த தடவ முத பரிசு.. ஜெயராணி அக்காக்குதான்.கொடுக்கோம்..ரெண்டாவது கௌரியக்கா, அடுத்து தான் சுகந்தி...
 “நீ முடிவு பண்ணிட்டே வந்திருப்பல”
 “நல்லா இருக்குதான்னு தாம்போட்டி ... வேணும்ன்னா போட்டோ எடுத்து வைச்சிருக்கேன்பாரு..போட்டோக்களைக் காட்டியும் கண்ணனும் ராமுவும் திருப்தி படுவதாக இல்லை

“இவனுக்கு சுகந்திய புடிக்காதுன்னு பழிவாங்குதலே..ராமு.

 “நா ஏண்டே பழிவாங்கனும்.. மேல்பேச்செல்லான் எனக்கு புடிக்கல.. நீட்டா நடக்கும் என் வேலை... எடக்குப்பேசிட்டு இருந்தா இந்தா உன் பொருப்புல எடுத்துக்க நா என் வழிய பார்த்துப்போறேன்.”கோபத்தில் பொறுமிவிட்டேன்.

ராமு ஒன்றும் பேசவில்லை.. 

 “ஏ கார்த்தி... எதுக்கு இப்போ வீண் பேச்சு.. நம்ம தெருக்காரவுங்க ஒத்துமை உங்ககிட்ட எங்கலே போச்சு” கண்ணன் சமரசம் பேச பசி வயிற்றைக்கிள்ளியது..  “முதல்ல வயித்துக்கு தீனி மெதுவா பேசிக்கலாம் வாங்க.”

*** 
மார்கெட்டில் கரும்புத் தோகைகளை லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். ஜெயராணி ஹோட்டலில் விளக்குகள் இன்னும் பளிச்சிட்டுக்கொண்டிருந்தன,

 “ மூணு பொரிச்ச ரொட்டி ஒரு ஆம்ப்லேட்டு.” கண்ணன் வயித்துக்கு வஞ்சனை இல்லாமல் ஆர்டர் செய்தான். 

 “எனக்கு அஞ்சு ரொட்டிமட்டும்.” 

தம்பி ஒனக்கு...  “இல்ல நா சாப்ட்டுதா வந்தேன்.” ராமு.

 “ஏ சாப்புடுங்க ஏட்டைய்யா சும்மா வீராப்பு காட்டாதீங்க! எங்களுக்கு வயித்த வலிக்கப்போவுது..கண்ணன்.

 “இல்ல! நம்ம ராகவண்ணன் வீட்ல பூஜை!..அங்கே சாப்ட்டாச்சு” 

 “அட எடுபட்டவீங்களா.. நாளைக்கு ராத்திரிக்கு பொறுக்கமாட்டீங்களாலே...சரி பரவால்ல ரெண்டு ரொட்டி சாப்புடு” 
இவனுக்கு ஒரு ஆம்ப்லேட் வைங்க... என்று ராமுவை நோக்கி கைநீட்டினேன். 
 “இல்லல்ல வேணாம் முட்ட சேர்க்கக்கூடாது.”
 
 “ஆமாம்பெரிய கோயில் பூசாரி.. என்ன பூஜைக்கு போனீங்கன்னு தெரியும்டீ.. நீங்க வைங்க பெரிசு..

சற்றுமுன்னர் கோலப்போட்டிக்காக அடிச்சுக்கிட்டவங்க... ஜெயராணி ஓட்டலில் பொராட்டாக்களை ஊரவைத்து அடித்துத்தட்டினர்.

***

இந்த பொங்கலுக்கு...
ஸ்பீக்கர் செட், விளையாட்டுப்போட்டி மேடை, பரிசு எல்லாம் செந்தில் நகர் வாழ் மக்கள் நல மன்றம் சார்பில் வசூலும், வார்டு மெம்பர்,கவுன்சிலர் அண்ணனின்  கணிசமான நன்கொடையிலும் வழக்கம் போல செவிப்பறையைக்கிழிக்க... பாடிக்கொண்டிருந்தது.. பரிசுப்பொருட்கள் விலை ஸ்டிக்கர் கிழித்து கார்த்தி வீட்டில் அடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.. 

 “சரி... என்னென்ன போட்டி.. வைக்கோம்”. பெருமாள். 

 “வழக்கம் போல சின்னதுங்களுக்குபலூன் கட்டி உடைக்க விடுவோம். பொடியனுங்க பிள்ளைங்க. ஓட்டப்பந்தயம், பொண்ணுங்களுக்கு ஸ்லோ சைக்கிள் பசங்களுக்கும் வைச்சுடலாம் . வேற பாட்டில்ல தண்ணி நிரப்புறது.லெமன் ஸ்பூன்ன்னு வைப்போம். ம்யூசிக் சேர் , கையிறு இழுத்தல் எல்லாம் பெருசுங்களுக்கு...நமக்கு தான் இருக்கவே இருக்கு உறி... பயலுங்களை எல்லாம் திரட்டிப்புடலாம்... ”

 “சம்பகடை தெரு ரெட்ஃபயர் டீம் பயலுவல உள்ள விடக்கூடாது... தினேஷு…”

 “எல நல்லநாள்னா தகராறுல்லாம் வேணாமா வரட்டும் ... எதாச்சும் தகிடுதத்தம் பண்ணட்டும் அடி வாங்குவான்.

 “ஆன்ஸி, துர்கா, ப்ரீத்தி, உமா, இந்த புள்ளைங்கதான் வீடு வீடா போய் காசு வசூல்பண்ணி தந்ததுவோ... அதுகளுக்கு நல்ல பரிசா கொடுத்திடனும்...

 “அதுக்குத்தான் பத்து மினி சைஸ் குத்துவிளக்கு வாங்கியிருக்கோம்.. 
இங்க கணேசங்கடையில் வாங்கினா குனிய வைச்சு மொட்ட அடிச்சிடுவான்னு... இந்தவாட்டி திருச்செந்தூர்ல மொத்த பர்சேஸ்.
 “எல்லாங் கவுன்சிலர் ஏற்பாடு! என்னம்மோ இவரே செஞ்சு தள்ளிட்டமாதிரி..”

அடேயப்பா.. நைட் புல்லா தூங்காம வண்டி ஓட்டி வாங்கிட்டு வந்தது நாங்க தெரியுமுல்ல..”

***

போட்டிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது..  “நம்ம தெரு மல்லேஸ்வரி மேரியக்கா கயிறிழுக்கும். போட்டியில் தன் எதிரணியை ஒரே இழுப்பில்... இழுத்து குளத்தாங்கரையில் வீசிவுடுவது போல் கயிரை கையில் திருக்கிப்பிடித்திருக்கிறார் அவருக்கு ஒரு ஓ....ப்போடுங்கப்பா எல்லாரும்....” மைக்கில் ரமேஷ் கலக்கிக்கொண்டிருந்தான்... 

மேரியக்கா சொல்லமுடியாத கூச்சத்தை அனுபவித்தாலும்... பெருமையொடு... கயிறிழுக்கும் போட்டியில்... களத்தை தூள் செய்ய.. 
ஆட்டம் பாட்டம் ஓட்டமென்று பொங்கல் விழா போட்டிகள் பரபரத்துக்கொண்டிருந்தது. 

சுகந்திக்கு மூணாவது பரிசு என்ற தகவல் காலையிலே தெரிந்து என் மீது செம கடுப்பில் இருந்திருப்பாள் என்பது எனக்குத்தெரியும். 
நானும் அவளும் மேரி ஆடனில் எட்டாவது வரைக்கும் ஒன்னாப்படிச்சவங்கதான்.. 

படிப்பில் விளையாட்டில்ன்னு அடிச்சுக்குவோம்.. தெருவில்.. கிரிக்கெட்டில். எங்க டீமுக்குத்தலைவன் ஆனதும் தெருவில் அவள் செல்வாக்கெல்லம் நாராயணன்கடைக்காரர் மகள் என்பதோடு நின்று போனது...நான்  கிட்டத்தட்ட செந்தில் நகரின் அறுபது குடும்பத்திற்கும் அடையாளப்பட்டவனாக இருந்தேன். 

எங்கம்மாவும் கடை வைத்திருந்ததால் இருவரும். போட்டித்தொழில்க்காரர்கள். அம்மா எல்லாரிடமும் முகங்கொடுத்து பேசி நல்ல மதிப்பை தக்கவைத்திருந்ததாலும்,

ஊருக்குள் அகன்ற திரை டீ.வி எங்க வீட்டில் இருப்பதாலும் மதுரை சிரஞ்சீவி எந்த புதுப்படம் வி.சி.டியும். ரோகிணி டீக்கடை வாசலில்  எனக்கு கொடுத்து விடுவதாலும்... எப்போது வீடும் கடையும். ஜேஜே என்றிருக்கும்...

தரையில் படுத்துக்கொள்ளும் போது தலையணை வேண்டுமென்றாலும் எழுந்து நடப்பதில்லை.. சுரேஷோ... தினோஷோ மாரியோ, உட்டியோ,ஐய்யப்பாவோ, துரையோ பக்கத்திலே அமர்ந்திருப்பார்கள்.யாரோடும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. சுகந்தி விதிவிலக்கு. 

****

சுகந்தி அழுதிருப்பாள் போல, ஆன்ஸி வந்து சொன்னாள் “ஏண்ணே வேணும்ன்னுதான் நீ ஜெயந்தியக்காக்கு மொத பரிசு எழுதி வச்சியாம்ல ..” துரை சொன்னான். 

 “அவன் கெடக்கான் கிறுக்குப்பய... எனக்கென்ன அவளோட வெரோதம்..” 

 “பொய் சொல்லாதண்ணே அவ எப்படி அழுதா தெரியுமா”

 “இங்கபாரு ,அழுததுக்கெல்லாம் பரிசு கொடுக்கமுடியாது... கோலம் நல்லா போடத்தெரியணும்..பேச்சுவார்த்தையை கலைக்கும் விதமாய் பால்காரர் மகன் ஓட்டப்பந்தையத்தில் முதலாவது வந்திருந்தான். 

**** 
 “மணி மாலை எட்டு தாண்டிவிட்டது... சன் டீ.வி மெகாஹிட் திரைப்படத்தை புறக்கணித்த கூட்டமொன்று உறியடிப்பதை திரண்டு வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தது.. 

ஸ்டேட்ஸில் இருந்து விடுமுறையில் வந்திருந்த மாயாண்டி என்ற மாயா...தான் உறியை அடித்து பணப்பரிசை தட்டிச்சென்றான். 
ராகவன் கவுன்சிலர் கையால் பரிசுகள் வழங்கப்பட்டது... 

கோலப்போட்டி பரிசு முதலில் ஜெயராணி அக்காவுக்கும் அடுத்து கௌரியக்காவுக்கும் கொடுக்கப்பட்டது..  ”முதல் பரிசு சுகந்தி” என்று வாசித்தபோது... ஆன்ஸிக்கு தெரிந்திருக்கும் இப்படி ஏதாவது  லொல்லுத்தனம் செய்து கதையையே மாத்திவிடுவேன் என்று.. 
ராமு பயல் தொடையில் வலிக்கும் அளவுக்கு தட்டிச்சிரித்தான். 

சுகந்தி பரிசை சிரித்துக்கொண்டே வாங்கினாள். சின்னதாய் ஒரு மின்னல் போல கடந்துபோனாள். போட்டி பாட்டு ஆட்டம் எல்லாம் முடிந்து கூட்டம் வீடு திரும்பிய போது... 

ஸ்பீக்கர் செட்டை கழட்டி , சாமியனாவை பிள்ளையார் கோவிலுக்குள் வைத்து பூட்டிவிட்டு மொட்டை மாடிக்குத் தூங்கப் போக மணி ஒன்று முப்பது... ஈரமான தைப்பனிக்காற்றில் கலர் தோரணங்கல் ஜிகினாத்தனமில்லாமல் அசைந்தது... 

நாளை மாட்டுப்பொங்கல்... என்பதால் பால்காரர் வீட்டில் மட்டும் ஆள் அரவரம் கேட்டது.. விடிய விடிய சுகந்தியைப் பற்றித்தான் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.  

*** 
அது முதல் நாராயணன் கடையில் சிகரெட்டு பத்தவைத்துக் கொண்டு பசங்க நிற்கும்  போது மட்டும் அந்த வழியே போகவே மாட்டேன்,.. மாப்ளேன்னு வேண்டுமென்றே கூவி அழைப்பார்கள்... 

அதாவது நாராயணனுக்கு நான் மாப்பிள்ளையாம்.. சுகந்தி எனக்கு முறைப்பொண்ணாம்.. கேக்க நல்லாதான் இருக்கு... 
அவங்க ஆச்சிக்காரிக்குத் தெரிஞ்சா... குளத்தாங்கரை பனைமரம் சரிஞ்சு விழத்தண்டிக்கு கூப்பாடு போட்டு கத்துவா... ஏன்னா 


"சாதிகள் இருக்குதடி பாப்பா " .

No comments:

Post a Comment