Tuesday 24 June 2014

Story 28: கலங்கலான உண்மை!

கலங்கலான உண்மை!

ஒரு மனிதன் சந்தோஷமாய் வாழ என்னவெல்லாம் வேண்டும்? நல்ல வேலை, கை நிறைய சம்பளம், அழகான மனைவி, இருக்க சொந்தமாய் வீடு, பூரண ஆரோகியம்! இதை விட வேறென்ன தேவைகள் இருக்க முடியும் ? இவை அனைத்தும் வருனிடம் இருந்தது. இருந்திருந்தும் ....ஏதோ ஒன்று அவனை அந்த சந்தோஷத்தை விட்டு விலகியே நிற்க செய்தது . அந்த 'ஏதோ ' ஒன்று ஒரு சம்பவமா  அல்ல கற்பனையா என்று உறுதியாய் சொல்ல முடியவில்லை. ஆனால் அது அவன் சிந்தைக்கு வரும்போதெல்லாம் ஸ்தம்பித்து போய் விடுவதும் இந்த உலகையே மறந்து போய்  நடப்பதும் அவனுக்கு தற்சமயம் பழகிய ஒன்றாகிவிட்டது.
 

"சரி, இந்த விஷயத்தை எப்படியாவது சௌம்யா கிட்ட டிஸ்கஸ் பண்ணிடலாம். அவ கண்டிப்பா புரிஞ்சுக்குவா", என்று ஒரு நாள் வருண் தீர்மானித்தான்.

 

"சௌம்யா, நான் உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும்...சொல்லணும்", என்று ஆரம்பித்தான் வருண்.

"நீங்க இதோட பத்தாவது தடவையா இத சொல்லிடீங்க. என்னன்னு சொல்லி தான் தொலைங்களேன் ", என்று அலுத்து கொண்டாள்.

"அத எப்படி ஆரம்பிக்ரதுன்னே தெரியல", என்று தன் இயலாமையை நினைத்து வெட்க பட்டான்.

"எதா இருந்தாலும் சொல்லுங்க", சௌம்யா தேற்றி விட்டாள்.

வருண் அவளை கண் கொட்டாமல் பார்த்து ஒன்றும் பேசாமலேயே இருந்தான்.

 

சௌம்யா வருணின் தலையை வருடிய படி, "ஆபீஸ்ல எதாவது டென்ஷனா? எதுவும் கண்டபடி யோசிக்காதீங்க. வாங்க நான் உங்கள தூங்க வைக்கிறேன்", என்று அவன் தலையை அவள் தோளில் சாய்க்க வைத்து அவனை தூங்க வைக்கலானாள்!

 

அதற்க்கு பின் சில தினங்கள் வருண் அந்த விஷயத்தை பற்றி எதுவும் பேசவில்லை, சௌமியாவும் அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. எல்லாம் நன்றாக சென்றதாகவே தோன்றியது.

 

"என் ப்ரெண்ட் நல்லா கதை எழுதுவான்னு சொன்னேன்ல. அவன் கதை ஒன்ன எடுத்துட்டு வந்திருக்கேன். நீ தான் நிறைய புக்ஸ் படிப்பியே. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லு. அவன் கிட்ட உன் பீட்பேக் சொன்னா ரொம்ப சந்தோஷ படுவான்", என்று பின்னொரு நாள் ஒரு கதையை சௌமி (வருண் செல்லமாய் அழைக்கும் பெயர் ) கையில் கொடுத்தான்.

 

"ஹ்ம்ம் சரி. அப்படி  வைங்க.. டைம் கெடைக்கும் போது படிக்கறேன்"  - சௌமி.

 

                                             'உண்மை தெரிந்தது!

 

"நான் ஒரு கொலைக்கு காரணம் ஆயிட்டேனோன்னு குற்ற உணர்ச்சியா இருக்கு", கொஞ்சம் வெட்கத்திலும் படபடப்பிலும் இதை கூறினான் திவாகர்.

 

"நீயா?", நம்பாத தோணியில் கேட்டான் அவன் அண்ணன் (தூரத்து உறவு தான்) ராகேஷ். ராகேஷ் அந்த வருடம் தான் "கிளியர் மைன்ட்ஸ்" என்கிற சைகாலஜி சென்டரை ஆரம்பித்திருந்தான்.

 

"உங்களுக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரியல. நம்ம வீட்ல ரொம்ப நாள் முன்னாடி லக்ஷ்மின்னு ஒரு வேலைக்காரி இருந்தாங்க. அவங்க பொண்ணு நம்ம வீட்ல தான் செத்து போனா", என்று விவரிக்க ஆரம்பித்தான் திவாகர்.

 

"ஆமா, அந்த பொண்ணு ஏதோ தவறி விழுந்ததா யாரோ சொன்ன ஞாபகம்", தன் தலையை லேசாய் கோதியபடி கூறினான் ராகேஷ்.

 

"இல்லன்னா, அந்த பொண்ணு தற்கொலை பண்ணிகிட்டான்னு எனக்கு இப்போ ரொம்ப நாளா தோணிக்கிட்டே இருக்கு. அதுவும் அதுக்கு நான் தான் காரணம்ன்னு எனக்கு ஒரு உறுத்தல் வேற".

 

"என்னடா உளர்ற!"

 

"உளர்றல்லாம் இல்ல. எனக்கு அடிக்கடி கனவுல சில சமயம் நினைவுல கூட ஒரு மாதிரி ப்லெர்டா (blurred) ஒரு சீன் வந்து வந்து போகுது. அது வரும்போதெல்லாம் நான் என்னையே மறந்து போய்டறேன். எப்படி சொல்றது..."

 

"என்ன மாதிரி சீன் அது", கொஞ்சம் ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தான் ராகேஷ்.

 

"நான் அந்த செத்து போன பொண்ண துறத்தி துறத்தி ஓடுற மாதிரி எனக்கு வருது. அந்த சீன்ல வரது அந்த பொண்ணு தான். நான் அவள நிறைய வாட்டி பாத்திருக்கேன்."

 

"சரி, அப்படியே இருக்கட்டும். இந்த ஒரு சீன் உனக்கு வரத வெச்சு நீ தான் அவ செத்ததுக்கு காரணம்ன்னு எப்படி சொல்ற?"

 

அதற்க்கு திவாகர், "நான் அந்த பொண்ண கொஞ்சம்", என்று சொல்லி கொண்டு அந்த மேஜை மேல் இருந்த தண்ணீரை முழுவதுமாய் குடித்து விட்டு, "அது...." என்று இழுத்து கொண்டே இருந்தான்.

 

 

"இட்ஸ் ஓகே. ஒன்னும் பதற்றமே இல்ல. ரிலாக்ஸ்", என்று அவனை முடிந்த வரை சமாதான படுத்தினான் ராகேஷ்.

 

 

"நான் அவள தப்பாவே தான் பாத்திருக்கேன்." '

 

திடீரென்று சௌமியாவின் மொபைல் அவளை அழைக்க ஆரம்பித்தது. வேறு யாரும் இல்லை, அது நம் வருணின் அழைப்பு தான்.

 

 "சொல்லுங்க, என்ன திடீர்னு கூப்ட்டிருக்கீங்க?"

 

"சும்மா தான். என்ன பண்றேன்னு கேக்கலாம்ன்னு..''

 

"பார்ற கரிசனத்த, என்னிக்குமே இல்லாம இன்னிக்கு மட்டும். ஒன்னும் பெருசா பன்னல, உங்க ப்ரெண்ட் கதையை படிச்சிட்டிருகேன்."

 

" வெரி குட். படி படி. இன்னிக்கு காலையில வேற ஒரு வாட்டி கேட்டான்."

 

"சரி சரி. நீங்க என்ன பண்றீங்க? வேலை இல்லையா?"

 

"அதெல்லாம் எடுக்க எடுக்க குறையாம வேலை இருக்கு. அதான் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் மாதிரி உன் கிட்ட பேசலாம்ன்னு பண்ணேன். உன் வாய்ஸ விட ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் இருக்குமா என்ன?"

 

"ஆஹஹஹா....நம்பிட்டேன்."

 

"சத்தியமா...என் மேல."

 

"ஆய் ஓத. போயி வேலைய பாருங்க. சீக்கிரம் வீட்டுக்கு வாங்க."

 

"கண்டிப்பா. சரி அப்புறம் பண்றேன்."

 

"டாட்டா", என்று சந்தோஷமாய் அழைப்பை துண்டித்தாள் . அவள் குரல் உண்மையில் தித்திப்பாய் தான் இருந்தது.

 

பின் வருணை பற்றி கொஞ்சம் நேரம் நினைக்க துவங்கினாள். அவர்களுக்கு பெற்றோர்களால் நிச்சயிக்க பட்ட திருமணமே என்றாலும் அவர்கள் அன்னியோன்யம் காதல் திருமணம் செய்தவர்களை விட மேலாகவே இருந்தது.

 

"எங்க விட்டேன்..ம்ம்ம்ம்"

 

'என்ன மாதிரி சீன் அது....'

 

 "இல்ல இத படிச்சுட்டேன்."

 

'மேஜை மேல் இருந்த தண்ணீரை முழுவதுமாய் குடித்து......... '

 

"இதுவும் படிச்சாச்சு.."

 

'நான் அவள தப்பாவே தான் பாத்திருக்கேன்.... '

 

"இந்த இடம் தான்.. " என்று சொல்லி அங்கிருந்து தொடர்ந்தாள்.

 

'அதான் நான் அவ கிட்ட எதாவது தப்பா நடக்க எதுவும் முயற்சி பண்ணும் போது அவ அந்த பயத்துல விழுந்திருப்பாலோன்னு ஒரு தாட் எனக்கு", என்று அவன் நெற்றியில் வடிந்த வியர்வையை துடைத்து கொண்டான்.

 

"சோ, இந்த மாதிரி எல்லாம் உன் வாழ்க்கையில நடந்திருக்கலாம் ஆர் உன் எண்ணம் வந்து, இதெல்லாம் நடந்திருக்கும் ஆனா உனக்கு ஞாபகம் இல்ல. அப்படி தானே ?", என்று அவன் சொல்ல வந்ததை ஒரு அளவுக்கு பிடித்து விட்டான் ராகேஷ்.

 

"ஆமா, இது ரொம்ப நாளாவே ஒரு மாதிரி உறுத்தலாவே இருக்கு. கொஞ்சம் இத பத்தி படிக்க ட்ரை பண்ணேன். dissosiative disorder னு ஏதொ படிச்சேன். இதெல்லாம் படிச்ச அப்புறம் நான் தான் இத செய்திருப்பேன்னு முழுசா நம்ப ஆரம்பிச்சுட்டேன்".

 

ராகேஷ் தன் கண்ணாடியை கழற்றி மேஜை மேல் வைத்தான்.

 

"இப்போ என்ன பண்ணா எனக்கு அந்த காட்சி போகும்ன்னு சொன்னீஎங்கன்னா...", என்று ஆரம்பிக்கும் போது...

 

"வெல், சைகலஜிகளா அப்புறம் பாக்கலாம், முதல்ல பிராக்டிகலா பாப்போம். அந்த பொண்ணு செத்ததுக்கு நீ தான் காரணம்ன்னு வெச்சாலும், அது முடிஞ்சு போன கேஸ். யாரும் அத தூசு தட்டி இதுக்கு மேல நிருபிச்சு உன்ன ஒன்னும் பண்ண போறதில்ல. இது உனக்கு மட்டுமே தோன்ற ஒரு விஷயம். dissociative disorder க்கு பாஸ்ட் கண்டிப்பா நடந்திருந்தா தான் உனக்கு வர அந்த சீன் மாதிரி வரணும்ன்னு இல்ல. உன் கற்பனைல அந்த பொண்ண எதாவது பண்ணனும்னு தோன்றி இருக்கலாம். அப்புறம் அவ செத்தத கேள்வி படவும் நீயே தான் அவள ஏதோ பண்ண போயி அப்படி ஆயிடுச்சின்னு உன் மனசு நம்ப ஆரம்பிச்சு இருக்கலாம்", என்று விளக்கினான் ராகேஷ்.

 

 

"நான் எதுவும் மாட்டிப்பேன்னெல்லாம் எனக்கு பயம் இல்ல. நான் காரணமோன்னு ஒரு சின்ன உறுத்தல்", என்று மீண்டும் அதையே கூற துவங்கினான்.

 

"சரி, இதுக்கு ஒரு வழி இருக்கு. உன்ன hypnotize பண்ணி உன் ஆழ் மனசுக்கு இத பற்றி என்ன தெரியும்னு நாம தெரிஞ்சுக்கலாம்", என்று ராகேஷ் தன் இருக்கையில் இருந்து எழ துவங்கினான்.

 

"ஆமா அண்ணா, நானும் அத நெனச்சு தான் வந்தேன் நிம்மதியா தூங்க முடியல, ஒரு வேல கூட முழுசா செய்ய முடியல. நீங்க தான் இதுக்கு ஒரு புல் ஸ்டாப் வெக்க ஹெல்ப் பண்ணனும்", என்று திவா ரகேஷுடன் சேர்ந்து எழுந்தான்.'

 

"புஷ்ஷ்ஷ்" என்று விசில் சத்தம் கேட்டவுடன் சௌம்யா எழுந்து கிட்செனுக்குள் சென்று குக்கரை அணைத்தாள். மறுபடியும்  ஹால் வந்த போது  டிவி போட்டு கொஞ்சம் நேரம் பாடல்கள் கேட்டுக்கொண்டே படிக்க துவங்கினாள்.

 

 'சில நிமிடங்களுக்கு பின் .... ( 'உண்மை தெரிந்தது' கதையில்....)

 

"உனக்கு அது ஒரு உதவாத தாட் தான். உன் லைப்ல அப்படி ஒன்னு நடந்ததே இல்ல. நான் உன் காலேஜ் டைம் முன்னதில  இருந்தே தோண்ட ஆரம்பிச்சுட்டேன். யு ஆர் கிளீன்",என்று ராகேஷ் உட்கார்ந்திருந்த திவாவின் தோளை தட்டியபடி கூறினான்.

 

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. எங்க அம்மா கிட்ட நான் முன்ன ஒரு டைம் கேட்டேன் அந்த பொண்ணு எப்படி இறந்தான்னு. அவளுக்கு அடிகடி கிணற்றுக்கு மேல உட்கார்ற பழக்கம் இருந்துதாமம். அப்போ தவறி விழுந்ததா சொன்னாங்க. எதுக்கும் ஒரு வாட்டி உங்க கிட்ட வந்து hypnotize பண்ணி உண்மைய தெரிஞ்சுக்கிட்டா எனக்கு இனிமேல் அந்த சீன் வரவே வராதுன்னு தோணிச்சு", என்று அவன் சொன்னபோது அவன் கண்களில் ஒரு தெளிவை கண்டான் ராகேஷ்.

 

 "ஒரு விஷயம். உங்க அப்பா அம்மா கிட்ட இத பத்தி வாயே திறக்காத. பயபடுவாங்க. புரியுதுல்ல?" , என்று கண்டிப்பாய் கூறினான் ராகேஷ்.

 

"புரியுதுண்ணா. கண்டிப்பா யார் கிட்டயும் இனிமேல் பேசவே மாட்டேன். நீங்க hypnotize பண்ணும் போது நான் பேசுனதெல்லாம் ரிகார்ட் பண்ணி வெச்சிருகீன்களா?"

 

"இல்ல. இன்னும் அந்த எக்யுப்மென்ட்ஸ் எல்லாம் அந்த ரூம்ல அட்டாச் பன்னல. ஏன், நான் சொல்றேனே, நம்பிக்கை இல்லையா?

 

"இல்லண்ணா முழுசா நம்புறேன் இப்போ தான் ஒரு மாதிரி ப்ரெஷா பீல் பண்றேன்", என்று அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான்.

 

அதன் பின் அவனுக்கு அந்த காட்சி தோன்றவே இல்லை. இப்போது திவா தேவதை போல் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருக்கிறான்.'

 

 சௌம்யா கதை முழுக்க படித்து விட்டு சற்று நேரம் யோசித்தாள் . வருண் வரும் சமயம் என்பதால் அவள் அவன் வருகைக்காக பாதியும் இரவு உணவிற்கான காய்கறிகளை நறுக்குவதில் மீதி நேரமும் விரயம் செய்தாள்.

 

வருண் வீட்டிற்க்கு வந்தான். வழக்கம் போல இருவரும் காபி அருந்தி விட்டு சின்ன சின்ன கதைகள் பேசி முடித்தார்கள். அப்படியே அந்த கதைக்கும் வந்தார்கள்.

 

"எனக்கென்னவோ இந்த கதை ஒன் டைமன்ஷநலா இருக்கிற மாதிரியே தோணுதுங்க", என்று ஆரம்பித்தாள் சௌம்யா.

 

"ஏன் அப்படி சொல்ற?"  என்று அதிர்ச்சியில் கேட்டான் வருண்.

 

"இல்ல, என்னவோ போர்ஸ் பண்ணி அந்த கேரக்டர் பேரு என்ன, ம்ம்ம்ம் திவாகர நல்லவன்னு காட்ட ட்ரை பண்ற மாதிரி தெரியுது. அதுவும் இல்லாம அந்த சைகாற்றிஸ்ட் சொந்தக்காரன் வேற, சோ அவன் பொய் கூட சொல்லி இருக்கலாம். அத ஊர்ஜித படுத்துற மாதிரி அவன் ரிகார்ட் வேற பன்னல", என்று அவளுக்கு பட்டதை பட்டென உடைத்தாள்.

 

வருண் ஒன்றும் பேசாமல் யோசிக்க ஆரம்பித்தான். எல்லாம் மறந்து போய் வழக்கம் போல பேய் அறைந்ததை போல் கண் இமைக்காமல் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.

 

"என்னங்க....என்ன்ன்னங்க", என்று வருணை உலுக்கினால் சௌம்யா.

 

"என்ன சொல்லு?"

 

"உங்க ப்ரெண்ட் கிட்ட கதை நல்ல இருந்துதுன்னே சொல்லுங்க", என்றாள் .

 

"சரி சொல்றேன். வா தூங்கலாம்", என்று விருட்டென்று எழுந்து படுக்கை அறைக்கு சென்றான். அவள் உடன் வந்தாளா இல்லையா என்பதையெல்லாம் அவன் கவனித்ததாக தெரியவில்லை.

 

 அவள் படுத்த உடன் தூங்கி போனாள். அவன் மனம் இப்போது இன்னும் குழம்ப ஆரம்பித்தது.

 

"அந்த கதைல hypnotism மூலமா அவனுக்கு உண்மை தெரிஞ்ச அப்புறம் அவனுக்கு அந்த சீன் வரவே இல்லைன்றது பொய். அதுக்கு அப்புறமும் அவனுக்கு அது வந்துட்டு தான் இருந்துச்சி. இன்னும் வந்துட்டு தான் இருக்கு", என்று அவன் அந்த சந்தோஷ விலகியை மறுபடியும் நினைக்க ஆரம்பித்தான்.

 

இப்படி ஒரு உயிர் போக நானே காரணம் ஆயிட்டேனே. இப்போ இதுக்கு எப்படி பிராயசித்தம் பண்றது", என்று நினைத்து தூக்கமே அவன் கண்களை தட்டி அதை மூட செய்த வரை யோசித்த படியே இருந்தான்.

 

மறு நாள் அவன் எழ நேரமானது. சௌம்யா சமையல் வேலை அனைத்தும் முடித்த பின் அவனை உசுப்பி விட்டாள். அவன் விடிந்து பல மணி நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த பின் கட கட வென வேலைக்கு புறப்பட்டான்.

 

 

"ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க?" என்று அவன் கண்களில் சோர்வை கண்டதும் கேட்டாள் சௌம்யா.

 

"நைட் லேசா தலை வலி", என்று மழுப்பினான்.

 

"ஐயோ, நைட்டே என்ன எழுப்பியிருக்கலாம்ல . தைலம் தேய்ச்சு  விட்டிருப்பேன். என்ன போங்க", என்று தலையில் அடித்து அலுத்துக்கொண்டாள்.

 

"பரவாயில்ல, கொஞ்சம் நேரத்துல சேரி ஆயிடும்", என்று ஆபீசுக்கு விடை பெற்றான்.

 

"என்னங்க ஒரு நிமிஷம். உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்."

"இப்போவா?"

ஆமா என்று தலையாட்டினாள்.

 

"நீங்க அந்த கதைய ஏன் என் கிட்ட படிக்க சொன்னீங்கன்னு எனக்கு தெரியும். எனக்கு அந்த கதையில வர திவாகர் பத்தி தெரியாது. ஆனா உங்கள நல்லா தெரியும். நீங்க அப்படி ஒரு உயிர் போற அளவுக்கு எதுவுமே பண்ணி இருக்க மாட்டீங்கன்னு நீங்க நம்பறத விட நான் அதிகமாவே நம்புறேன் ", என்று அவள் கூறும் போது வருண் அடைந்த பூரிப்பிற்கு வார்த்தைகளே இல்லை.

 

"நீங்க என்னையே இது வரைக்கும் போர்ஸ் பண்ணதில்ல. நீங்க எங்க அந்த பொண்ண அப்படி பண்ணி இருக்க போறீங்க?" என்று அவள் அவன் மீதிருந்த நம்பிக்கையை வார்த்தைகளால் வடித்தாள்.

 

வருண் உடனே அருகில் வந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

"எங்க உள்ள வரீங்க? ஆபீஸ் போகல?"

"இல்ல, இன்னிக்கு ஆபீஸ விட வீட்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு", என்று அவளை தன் பக்கம் இழுத்து கொண்டான்.

 

"ஆய் ஓத", என்று அவனை செல்லமாய் கடிந்து கொண்டாள் சௌம்யா !

 

பி.கு: dissosiative disorder பற்றிய இணைய முகவரி - 

இணைப்பு 1

இணைப்பு 2

 

No comments:

Post a Comment