Sunday 22 June 2014

Story 21:முகம்

முகம்

எடிட்டர் ரூமை விட்டு வெளியே வந்தவுடன் விசிலடித்துக் கொண்டு கேபினுக்கு வந்தேன், "என்னப்பா! ரொம்ப சந்தோஷமாக இருக்க போல" கேட்டது அரசியல் நிருபர் சந்தானம், "இருக்காத பின்னே! சினிமா நிருபரா இருக்கரதால இன்னைக்கு தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்" என்றேன். "அப்படியெண்ணெய்யா சந்தோஷம்" கேமிராமேன் சந்துரு கேட்டார். "பத்மபூஷன் விருது வாங்கனதுக்கு, பிரபல நடிகர் அமரனுக்கு, நம்ம பத்திரிகையில் ஒரு சிறப்பு மலர் போடறோம், அதுக்கு அவரும் பிரத்யோக பேட்டி தர ஒத்துகிட்டுயிருந்தார், இன்னைக்கு தான் அந்த அப்பாயின்மெண்ட்".

"சரிப்பா! எப்படியும் எடிட்டர்தான் இந்த மாதிரி பெரிய பிரபலங்களைப் பேட்டி எடுக்க போவாங்க, இதுல உனக்கு என்னப்பா அவ்வளவு சந்தோஷம்".

"அதுதான் இல்ல! எடிட்டர் அவசரமாக டெல்லி போறார் பி.எம் அப்பாயின்மெண்ட், அதனால் அமரனுக்கு போன் பண்னி பேட்டியை இன்னொரு நாள் வச்சுக்கலாம்னு கேட்டிருந்தார். அதுக்கு அவரும் வெளினாட்டுல சூட்டிங் இருக்கு, வர எப்படியும் ஒரு மாசம் ஆகும், அதனால உங்க நிருபர் யாரயாவது வர சொல்லுங்கனு சொல்லியிருந்தார், ஸோ இப்ப ஐயா தான் பேட்டி எடுக்க போறார்" என்றேன் காலரை தூக்கிவிட்டபடி.

இவ்வளவு நேரம் கேலியாக பார்த்த அத்தனை பேரும் இப்போது பொறாமையாக பார்த்தார்கள். பின்னே அந்த நடிகர் இத்தனையாண்டுகளில் இதுவரை பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் தான் பேட்டியளித்திருக்கிறார், முதல்முறையாக ஒரு கத்துகுட்டி நிருபருக்கு அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பெருமையாக அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பினேன். கேமிராமேன் சந்துருவை நோக்கி "உன்னை துணைக்கு கூட்டிகிட்டு போக சொன்னார், கேமரா எடுத்துக்கோ, லென்ஸ் செக் பண்ணிக்கோ, எந்த பிரச்சனையும் ஆக கூடாது" என்றேன் மிதப்பாக.

சந்தோஷமாக வண்டியை கிளப்பினேன், பாதி தூரம் தாண்டியவுடன் சந்துரு "ரொம்ப சந்த்தோஷ படாத, இவ்வளவு சீனியர் நிருபர்கள் இருக்கிறப்ப உனக்கு இப்ப இந்த சான்ஸ் எப்படி வந்ததுனு யோசித்து பார்த்தியா" என்றான். "எடிட்டர்க்கு என் மேல ரொம்ப நம்பிக்கை" என்றேன்.

"ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, அமரன் நிறைய விஷயம் தெரிந்தவர், நாம அவர் எதிர்பார்ப்புக்கு கேள்வி கேட்கலைனா, டக்குனு பேட்டிய நிறுதிருவாரு, இதுவே சீனியர் நிருபர்கள்னா அவர்களுக்கு ஒரு மாதிரி ஆயிடும், ஆனா இது உனக்கு ஒரு பிரச்சனையா தெரியாது, புதுசா இருக்கிறதால ஒரு பெரிய நடிகர பேட்டி எடுத்த சந்தோஷத்துல திரும்பி வந்துருவ. அதுதான் காரணம்".

உள்ளுக்குள் ஏதோ காற்று இழந்த பலூன் போல ஆனேன். "ஆனா கவலபடாத!எடிட்டர் இன்னேரம் கேள்விகளை எல்லாம் அவரோட பி.ஏவுக்கு அனுப்பியிருப்பார்.அவரும் இதுக்கு பதில் ரெடி பண்ணியிருப்பாங்க, வாங்கிட்டு வரது மட்டும் தான் உன் வேலை, ஒர் கூரியர் பாய் மாதிரி" என்று மேலும் எண்ணெய் ஊற்றினான்.

மொத்த பலமும் இழந்து "அப்புறம் எதுக்கு நாம போகனும், அவங்களே பதில அனுப்ப சொல்லியிருக்கலாமே".

"அப்படினா பேட்டிக்கான போட்டோ எப்படி கிடைக்கும், நான் போட்டோ எடுப்பேன்".

"அப்ப நீ எனக்கு துணையா வரலையா, நான் தான் உனக்கு துணையா வரனா?".

"துணையாகவா என்று சிரித்தான், நீ டிரைவராக வரே" என்று வெறுபேத்தினான்.

மொத்தமாக களையிளந்தேன், பின் நானே சமாதான படுத்தி கொண்டேன். எப்படியோ நாம் இளம் வயது, ஆத்ர்ச நாயகனை பக்கத்தில் பார்க்கபோகிறோம், முடிந்தால் சந்துருவை நைஸ் பண்ணி சேர்ந்து ஒரு போட்டோ எடுக்க சொல்லாம். வண்டியை வேகமாக முறுக்கினான்.

கூர்க்கா வண்டியை கேட்டிலே நிருத்தினான். பத்திரிக்கை பெயர், பேட்டியை பற்றி சொன்னோம், "யார் நிருபர்?" சுத்த தமிழில் கேட்டார். "நான் தான்" என்றேன். "ஓ மாணவ நிருபரா!" வெறுப்புடன் அவனை முறைத்தேன், கூண்டுக்குள் சென்று போன் பேசிவிட்டு உள்ளே போக சொன்னான்.

போர்ட்டிகோவில் வண்டியை நிருத்திவிட்டு திரும்பும் போது வாசலில் பி.எ நின்று கொண்டிருந்தார். எங்களை பார்த்து விட்டு "யார் நிருபர்?" என்றார், சந்துரு நமுட்டு சிரிப்புடன் என்னை காட்டினான், நான் அவரை பரிதாபமாக பார்த்தேன், என்ன நினைத்தாரோ உள்ளே வர சொன்னார். சோபாவில் அமர்ந்தவுடன் அது என்னை பாதி இழுத்தது. சமாளித்து நுணியில் உட்கார்ந்தேன்.

"உங்க எடிட்டர் மெயிலில் கேள்வியை அனுப்பிட்டார்" என்றார் பி.எ

சந்துரு பாத்தியா என்பது போல் புருவத்தை உயர்த்தினான், பார்க்காதது போல் திரும்பி கொண்டேன்.

"ஆனா ஒரு சின்ன பிரச்சனை, காலையில் இருந்து சார் ரொம்ப பிஸி, அதனால் பதில் வாங்க முடியல, சார் என்ன சொன்னார்னா, நீங்க அதே கேள்வி கேட்டு பதில ரெக்கார்டு பண்ணுங்க, ஓ.கே வா?" என்றார்.

"டபுள் ஓ.கே" என்றேன் பிரகாசமாக, இப்பொழுது சந்துரு வேறு பக்கம் திரும்பி கொண்டான்.

சத்தம் கேட்டு திரும்பினேன், என் ஆதர்ச நாயகன் படிகட்டில் இறங்கி வந்து கொண்டிருந்தார். வெள்ளை குர்தா செட், அவரது தும்பை பூ கலருக்கு எடுத்து கொடுத்தது. சிரித்த கண்களோடும், மலர்ந்த முகத்தோடும் கை கூப்பினார், நான் அவரை பார்த்த அதிர்ச்சியில் வாயில் ஈயாட நின்றுயிருந்தேன்.சந்துருவும் வேகமாக வணங்கினான்.

சிரித்து கொண்டே அமர்ந்தார், எங்களையும் அமர சொன்னார். "ஸாரி! காலையில் இருந்து நிறைய பேர் வந்துட்டாங்க, அதனால பதில் ரெக்கார்டு பண்ண முடியல, நீங்க இப்ப கேளுங்க. பேட்டியை ஆரம்பிக்கலாமா?" என்றார்.

"கண்டிப்பாக சார், பத்மபூஷன் விருது பெற்றதுக்கு எங்க பத்திரிக்கை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம், இந்த விருது கிடைத்தது பற்றி உங்கள் கருத்து என்ன?"

"வாழ்த்துக்கு நன்றி! இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான பத்மபூஷன் விருது கிடைத்தது குறித்து நான் மிகவும் பெருமையடைகிறேன். இவ்விருதுக்கு நான் தகுதியானவனா என்று தெரியாது, ஆனால் இது என் தகுதியை வளர்த்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்".

"இவ்விருது உங்களுக்கு மிகவும் தாமதமாக கிடைத்தது என்ற தகவல் பற்றி உங்கள் கருத்து என்ன?"

"அப்படி ஒன்றுமில்லை! என்னை விட திறமை வாய்ந்த பலருக்கு இன்னும் இந்த விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு".

அடுத்த சில கேள்விகளை கேட்கும் போது எனக்கே வெறுப்பாக இருந்தது. இது மாதிரி கேள்விகள் தான் அவர் ஒவ்வொரு முறை விருது வாங்கும்போதும் கேட்கப்பட்டது. அவரது முகத்தை பார்த்தேன், அவரும் புரிந்தது போல் சிரித்தார், "ஒரு பத்திரிக்கையிலிருந்து கேள்வி கேட்ட உனக்கே போர் அடிக்குதே, எல்லா பத்திரிக்கையிலிருந்தும் இதே கேள்வியை கேட்கிறீர்களே எனக்கு எப்படியிருக்கும்" என்பது போல் இருந்தது.

"நீங்க நடிக்க வந்தப்பவே இந்த உயரத்துக்கு வருவீங்கனு நினைச்சீங்களா?".

சிரித்தார் "நான் நடிக்க வரும் போது எனக்கு நாலு வயது, அப்பவெல்லாம் இது சினிமானே தெரியாது. சாக்லேட் குடுப்பாங்க , அவங்க சொல்றத செய்வேன்".

சட்டென்று அந்த கேள்வியை கேட்டேன் "உண்மையில் நீங்க யார்?"

பார்வையை குறுக்கி என்னை பார்த்தார் "இது தெரியாமதானா என்ன பேட்டி எடுக்க வந்தீங்களா?" என்றார் நக்கலுடன்.

"இல்ல சார்! நீங்க பல வேடத்துல நடிச்சுருக்கீங்களே அதுமாதிரி உங்க கேரக்டர் என்ன" என்று கேட்டேன்.

யோசனையாக என்னை பார்த்தார். கேள்வி அவருக்கு இன்னும் சரியாக புரியவில்லையே என்று எண்ணி அவருக்கு திரும்ப விளக்க எண்ணிணேன். "உங்கள் கேள்வி இப்ப எனக்கு புரிந்தது" என்றார், அமைதியாக கண் மூடி யோசித்தார்.

"உண்மை சொல்லுனும்னா, எனக்கே நான் யாருனு தெரியல" என்றேன், அதிர்ச்சியுடன் அவரை பார்த்தேன்.

"நான் சொன்னது உண்மை தான்! யோசித்து பார்த்தா இந்த அமரனுகுன்னு தனியா எந்த குணாதியியாம்யில்ல, நாலு வயசுல நடிக்க வந்தேன், அப்ப சாக்லேட் பிடிக்கும், அதுக்காக என்னவேணும்னாலும் செய்வேன், சாக்லேட் குடுத்து சிரிக்க சொன்னாங்க, சிரித்தேன், டான்ஸ் ஆட சொன்னாங்க, ஆடினேன், பாடுன்னாங்க, பாடினேன், அழுன்னு சொன்னாங்க அழுதேன், அது அப்படியே உடம்புக்கு பழகிருச்சு, நினைச்சா சிரிப்பு, பாட்டு, அழுகை எல்லாம் தானா வந்திருச்சு, ஒரு கட்டத்துக்கு மேல அந்த படத்துல பண்ண மாதிரி இதுல பண்ணுங்கனு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க, உண்மையை சொல்லனும்னா எனக்கு நிஜத்தில கல்யாணம் நடக்கும் போது எதுவும் பெரிசா தெரியல, ஏன்னா நான் அதுக்கு முன்னாடியே முப்பத்திரண்டு படத்துல கல்யாணத்த முடிச்சிட்டேன், தாலிய கட்டிவிட்டு கையை எடுக்கவில்லை 'கட்' சொல்வாங்கனு வெயிட் பண்ணிணேன்" வறட்சியாக சிரித்தார். "எங்க அம்மா இறந்தப்ப சுடுகாட்டுல அழுதத பார்த்த வெட்டியான் அவர் கூட இருந்தவர் கிட்ட சொன்னார், இது 'அம்மா பைத்தியம்' படத்துல அவங்க அம்மா செத்தப்போ அழுதாரே அதே மாதிரி இருக்கிறார்", தீடீரென அமரன் நிறுத்தினார்.

"பெற்ற தாயிக்கு செய்ற கடைசி சடங்குகளும், ஏதோ ஒரு படத்தோட சாயல் தெரிந்தது, எங்க அம்மாவுக்கு அழுததும் அப்ப நடிப்பா? இந்த கேள்வி இதுவரைக்கும் என்னை அழுத்திகிட்டேயிருக்கு".

"இப்ப என் மகள் காதலிக்கறது தெரிஞ்சவுடனே, அது சரியா? தவறா? யோசிக்காமா, 'அன்பு ரோஜா' படத்துல பண்ண மாதிரி சேர்த்து வைக்கலாமா இல்ல 'மணல் கோபுரங்கள்' படத்துல வர மாதிரி சதி பண்ணி பிரிச்சரலாமானு தான் தோனுது",

"இது சரியா? தவறா? அப்படினு தெரியல, ஆனா நடிகன் அமரன் ஒரிஜினல் அமரன எப்பயோ கொன்னுட்டான், அது எப்பனு தான் தெரியல, ஒரு வேளை சாக்லேட் வாங்கிட்டு சிரித்தேனே! அப்பயோ என்னாவோ?" என்று தழுதழுப்புடன் கூறி சட்டென்று எழுந்து மாடியேறினார்.


அந்தயிடமே அமைதியாக இருந்தது, ஆனால் என்னவோ அவ்ர் 'போராடும் பொழுதுகள்' படத்தில் தன்னிலை விளக்கம் கொடுத்து விட்டு, காட்டுக்கு திரும்பி செல்வாரே அந்த காட்சி தான் ஞாபகத்துக்கு வந்தது.

No comments:

Post a Comment