Tuesday, 24 June 2014

Story 26: பிரேதங்களுள் ஒருவன்


பிரேதங்களுள் ஒருவன்


நான் அன்றாடம் பின்தொடரும் மனிதர்கள் சிலரை எழுத்தில் பதிவு செய்யும் வேலையில் இருப்பவன். பல பேரை பதிவு செய்திருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். என்னால் முடிந்தவரை சிலரை அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து கண்டறிந்து அவர்களாக மாறி புனைந்திருக்கிறேன். இப்போதும் அதையே செய்யப் போகிறேன். ஆதலால் என் கதையில் நம்பகத் தன்மையே இல்லை என்று எண்ணக் கூடாது. கற்பனை அதிகமாக உள்ளதே, லாஜிக் இடிக்கிறதே என்று எள்ளி நகையாடக் கூடாது. வரவிருக்கும் கதை ரியலிஸக் கதைப் போலத் தெரியலாம். தெரியாமலும் இருக்கலாம். அதற்கெல்லாம் நான் எவ்வித நிலையிலும் பொறுப்பேற்க முடியாது. தற்சமயம் நான் இருக்கும் இடம் கல்லறைத் தோட்டம். இது மனித உடல்களுக்கான இடம் அல்ல. இறந்து போனவர்களின் உயிர் இங்கு வந்து உறங்கிக் கொண்டிருக்கும். ஒரு வேளை அவர்களை நான் பூமியில் பின்தொடர்ந்திருந்தேன் எனில் என் ஞாபகச் சக்கரம் பின் சென்று அவர்களின் சில சுவடுகளை கொணர்ந்து எனக்களிக்கும். அதை நான் தங்களுக்கு புனைவாக்கிக் கொடுப்பேன். கொடுக்கப் போகிறேன்.

பிரேதனின் கதை

பிரேதனுக்கு தூக்கம் அறவே பிடிக்காத ஒன்று. தூக்கம் பிடிக்காமல் இருப்பதன் காரணம் அதில் வரும் கனவுகள் தான். சிறுவயதிலிருந்து அவனுக்கு தூக்கத்தில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது. தூங்கும் போது அவனால் காண முடிந்தது அனைத்தும் இருளிலிருந்து ஒரு வெளிச்சம் நோக்கி செல்லும் கனவின் பயணம். ஆனால் வெளியில் அவனின் தேகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது அவனுக்கே தெரியாத விஷயம். பிறர் சொல்லி அறிந்து கொள்ள ஆரம்பிக்கும் போது தான் தூக்கம் சார்ந்த ஒரு பயம் அவனுள் தோன்ற ஆரம்பித்தது.

கனவுகளுக்கும் வெளியில் அவனின் செய்கைகளுக்கும் வித்தியாசமே அவனுக்கு தெரியாது. அவனின் ஐந்தாம் வகுப்பு வரை அப்பாவின் அருகிலேயே தான் உறங்குவான். அம்மா அவனுக்கு அருகில் படுத்துக் கொள்ளக் கூட தயங்குவாள். அம்மா பயப்படுவதன் காரணம் தன் பல்வரிசையில் நான்கு பற்களை பதம் பார்த்தவன் பிரேதன் தான்.

அப்பா மட்டுமே அருகில் படுப்பதற்கு காரணம் அவன் தூக்கத்தில் உதைக்கும் பழக்கம் உடையவன். தூங்கினால் பிணம் போல தூங்குவான். கால்கள் அப்பாவின் மேல் இடறுகிறதே என்று கூட அவனுக்கு பிரக்ஞை இருக்காது. ஆரம்பத்தில் அவருக்கு இதனால் தூக்கம் கலைந்தது. பின் பிரேதனின் உதை இல்லாமல் அவருக்கு தூக்கம் வர மறுத்தது.

இவன் உதைப்பதற்கு என்ன காரணம் என்பதை அம்மா ஒரு நாள் கண்டுபிடித்துவிட்டாள். அவனுக்கு சின்ன வயதில் சினிமா நடிகன் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. குறைந்த பட்ச திரைப்படமே அவன் அதுவரை பார்த்திருந்தான். வருடத்திற்கு ஒரு முறை பாளையத்து அம்மன், காளையத்து அம்மன் என்று படம் வந்தால் மட்டுமே அவன் திரையரங்கின் தரிசனத்தை வீட்டில் உள்ளவர்களால் காண முடியும். எப்படியேனும் ஒரு சண்டைப்படமாவது பார்க்க வேண்டும் என்று துடித்தான். அவனுடன் படிக்கும் மாணவர்களின் அப்பாக்கள் அவர்களை ஆங்கிலப்படங்களுக்கு கூட்டி செல்பவர்கள்.  அவர்கள் வந்து பிரேதனிடம் சண்டைக்காட்சிகளை புகழ்ந்து பேசுவார்கள். இவனுக்கு ஆங்கிலப் படங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள ஆசை. ஒரு முறை அப்பாவிடமும் கேட்டுவிட்டான். அப்பாவோ ஆங்கிலப்படமெல்லாம் நீ பார்க்கக் கூடாது என்பது போல சொல்லிவிட்டார். அன்றிலிருந்து இவன் தனக்குள் சில கதைகளை யோசிப்பான். அந்த கதைகளிலெல்லாம் ஒரு வில்லன் இருப்பான். அவனுக்கு இவன் ஹீரோ என்ற அமைப்பிலேயே இருக்கும். தனி ஆளாக அறுபது எழுபது பேரை அடித்தே பறக்க விட வேண்டும் என்று ஆசை கொள்வான். அம்மா துணி துவைத்து வீட்டினுள் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் போது வீட்டை சுற்றி இவனாக ஆட்களை கற்பனை செய்து கொள்வான். அவர்கள் தன்னை அடித்தால் தான் செய்யும் எதிர்வினை எப்படி இருக்கும், தான் அடிக்கும் போது அவர்கள் எப்படி எங்கு சென்று விழுவார்கள், திரையில் அதற்கென வரும் சத்தம் எப்படி இருக்கும் என்பதையும் அவனே சித்தரித்துக் கொள்வான். அவனுக்குள் இருக்கும் அவதானிப்பு யாதெனில் எண்பதுகளில் வந்த ரஜினி கமல் படங்களின் சண்டைக்காட்சிகளில் சத்தம் டிஷ் டிஷ் டிஷ் என்று மட்டுமே வரும். அதே சமகாலத்திய படங்களில் த்ருஷ் என்பது போல வரும். இதில் வரும்த் தொண்டையிலிருந்து கணீர் என்று சொல்ல வேண்டும். ஒரு குத்திற்கு பத்து இருபது அடி சென்று விழ வேண்டும் என்று முடிவு செய்து காற்றில் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பான். அவனது வாயிலிருந்து சத்தம் வந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் பக்கத்து வீட்டுப் பெண்ணும் அதை பார்த்திருக்கிறாள். அவனுக்கு வெட்கமாக இருந்துவிடும். மீண்டும் ஒருவித பயம் அவனுக்குள் குடிபுகுந்து கொள்ளும். அன்றிலிருந்து எப்போதும் யாரேனும் பார்க்கிறார்களா என்று நினைத்தே இப்படி விளையாட ஆரம்பித்தான். அவனுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. ஒன்றிரண்டு பேர் தான். அப்படி ஒரு நாள் விளையாடும் போது அம்மா பார்த்துவிட்டாள். அவன் அந்த சண்டைகளினால் சந்தோஷம் கொள்ளவில்லை. அது முழுமையடையாமலேயே அவனுக்குள் இருந்தது. அந்த மிச்சமே அவனுடைய கனவாய் வருகிறது என்று அவன் முன்னேயே சொல்லிவிட்டாள் அம்மா. மீண்டும் வேறு ஒரு பயம்.

அதற்கு பிறகு தூங்கும் போதெல்லாம் நம் பகல் வேலைகளின் நீட்சி கனவுகளில் வெளிவருமோ என்று அச்சம் கொள்ள ஆரம்பித்தான். பள்ளிகளில் இருக்கும் போது தன் வீரத்தை யாரிடமாவது காண்பிக்க வேண்டும் என்று ஆசைகொண்டான். கனவுலகில் மட்டுமே அவனால் சண்டைக் காட்சிகளில் வெற்றிக் கொள்ள முடிந்தது. தனிமையே அவனின் வீரம். தனிமையே அவனின் எதிரி. அதை கொண்டே அதை எதிர்த்துக் கொண்டிருந்தான். நம்மால் அடிக்கத் தான் முடியவில்லை திட்டவாவது செய்யலாமே என்று பல நாள் எண்ணியிருந்தான். அதற்கும் வார்த்தைகள் இருந்ததே ஒழிய மனதளவில் தைரியம் இல்லை. மனதினுள்ளேயே திட்ட ஆரம்பித்தான். வெளிவராத வார்த்தைகளும் கனவுகளின் வாயிலாக வெளி வர ஆரம்பித்தன.

தூக்கத்தில் யாரையோ திட்ட ஆரம்பித்தான். வீட்டிலுள்ளவர்கள் பிரேதன் ஏதேனும் சுற்றி வைக்கப்பட்ட எலுமிச்சைப் பழங்களை தாண்டியிருப்பான் என்று தர்காவிற்கு அழைத்து சென்றனர். மந்திரித்தனர். மறுபடியும் அவன் உளறினான். வீட்டிலுள்ளவர்கள் அதிகமாக கவலை கொள்ள ஆரம்பித்தனர். காலப்போக்கில் அந்த தெருவில் இருந்த அனைவருக்கும் இவன் உளரும் விஷயம் தெரிந்துவிட்டது. அவனை விட பெரியவர்கள் சிலர் கிண்டல் அடித்தனர். சிலர் அவனறியாத அர்த்தம் பொதித்த பார்வையை பார்த்தனர். அவனுக்கு கிடைத்த தோழி ஒருத்தி அவனிடம் சொன்னாள் - என் அப்பா கொறட்ட விடுவாரு. ஏன்னா தூக்கத்துல அவரால பேச முடியல. நீயோ சூப்பர் தூக்கத்துல கூட பேசுறியே என. அன்று முதல் யாரின் பார்வையும் அவனை புண்படுத்தவில்லை.

கல்லூரி விடுதி. யாரென தெரியாத புதிய மனிதர்களுடன் இருக்க வேண்டிய நிலை என்று புதிய இடத்திற்கு உகந்து உளரலையும் உதைத்தலையும் விட்டிருந்தான். திரைப்பட ஆசை மட்டும் அவனை நீங்காமல் ஒட்டிக் கொண்டே இருந்தது. பிடிக்காமல் போன தூக்கமும் பிடிக்காமலேயே அவனுடன் ஒட்டி கொண்டிருந்தது. இரவுகளிலெல்லாம் தூங்காமல் விழித்து, குறிப்பாக கல்லூரி வேலைகளை முடித்த பின் தன் முதல் படத்திற்கான திரைக்கதையை எழுதி கொண்டிருப்பான்.

அன்றும் அப்படியே தூங்கியிருக்கிறான். குறைந்த பட்ச தூக்கமே அவனுக்கு தினமும் கிட்டும். விழித்த போது தான் கடந்த மூன்று இரவுகளாக அவனை சுற்றி நிகழும் விஷயங்கள் அவனுக்கு தெரிய வந்திருக்கிறது.

இரவு - ஒன்று : அவனுடைய அறையில் அவனுடன் சேர்ந்து நான்கு பேர். ராம் பிரேதனின் துறையிலேயே படிப்பவன். சந்துரு கௌஷிக் ஆகிய இருவர்கள் வேறு ஒரு துறை. அது விடுமுறை முடிந்த காலம். பிரேதன் வீட்டிற்கு செல்லவில்லை. கௌஷிக்கும் அங்கேயே இருந்திருக்கிறான். அருகருகில் இரவில் தூங்கியிருக்கிறார்கள். தூக்கத்தில் கௌஷிகின் கை விரிந்த நிலையில் இருந்திருக்கிறது. பிரேதன் திரும்பி படுக்க அவனுடைய தொடை கௌஷிக்கின் கைகளில் பட்டுவிட்டது. கௌஷிக் பிரக்ஞை பெற்று திரும்பியிருக்கிறான். கால் தானே என தூங்கிவிட்டான். பிரேதன் தன் தேகத்தை அந்த பாயில் புரட்டி இடது கை முஷ்டியால் அவனின் காதில் ஒரு அடியை போட்டுவிட்டான். வலி தாங்க முடியாமல் எழுந்திருக்கிறான் கௌஷிக். தூக்கம் வலியை மீறி வந்தமையால் தூங்கிவிட்டான். அடுத்த நாள் காலை பார்த்த போது தான் தெரிந்தது அவனுடைய காது மடல்கள் வீங்கி சிவந்து இருந்தன.

இரவு - இரண்டு : அடுத்த நாள் ராம் ஊரிலிருந்து வந்துவிட்டான். எப்போதும் அவன் தான் பிரேதனுக்கு அருகில் உறங்குபவன். அன்றும் உறங்கியிருக்கிறான். ராமிற்கு வலதுபுறத்தில் கௌஷிக். நள்ளிரவில் ராமை பிரேதன் எழுப்பியிருக்கிறான். ராம் எழுந்துவிட்டான். எழுந்த பின்னும் கைகளால் எழுப்பிக் கொண்டே இருந்திருக்கிறான். தூக்கம் முழுதாக கலைந்த பின் என்ன என்று கேட்க முற்பட்டான். பிரேதனோ தூங்கிவிட்டான். மூத்திரம் பெய்து விட்டு தூங்குவோம் என்று எழும் போது கௌஷிக்கின் உடல் மேல் அவன் கால் பட்டுவிட்டது. கௌஷிக் வலது கையால் காதை பொத்திக் கொண்டான்.

இரவு - மூன்று : இன்று எதுவும் செய்ய மாட்டான் என்னும் குருட்டு நம்பிக்கையில் ராம் அவனருகில் படுத்திருக்கிறான். ராமின் பழக்கம் இரவில் குறிப்பிட்ட நேரத்தில் மூத்திரம் பெய்துவிட்டு வந்து உறங்குவது. மூன்றாம் நாளான அன்றும் அப்படியே பெய்துவிட்டு வந்து உறங்கியிருக்கிறான். படுத்து காலிற்கு கீழே இருக்கும் போர்வையை எடுக்க கைகளை நீட்டியிருக்கிறான். அப்போது இருளில் பிரேதன் எதையோ தரையில் தேடிக் கொண்டு இருந்திருக்கிறான். என்ன என்று கேட்டான் ராம். பிரேதன்டம்ளர காணோம் டா அதான் தேடறேன்என்றிருக்கிறான். ராமும் தூக்கத்தில் தேடியிருக்கிறான். சில விநாடிகள் கழித்தே இரவு மூன்று மணிக்கு எதற்கு டம்ளர் என்னும் கேள்வி அவனுக்குள் உதயமானது. அவன் உளறுகிறான் என்பதறிந்து பிரேதனை உலுக்கி உலுக்கி எழுப்ப முயற்சித்திருக்கிறான். பிரேதனோ ராமைப் பார்த்துஉங்க ஊர்ல டம்ளருக்கு என்னன்னு சொல்வீங்க ?’. தூக்கம் கலைந்த ராம் அவனை சமாதானப்படுத்தி தூங்க வைத்தது தனிக்கதை. அக்கதையின் முடிவில் ராமின் தூக்கம் பறிபோனது அதே கதையின் கிளைக்கதை.

இந்தக் கதையை எழுதி கொண்டிருக்கும் நேரத்தில் எனக்கு இரண்டு கேள்விகள் குறுந்தகவல்களாக வந்தன. குறுந்தகவல்கள் என்னை பகடி செய்கிறதா அல்லது ஆதங்கத்தை தெரிவிக்கிறதா என்றே தெரியவில்லை. ஒரு குறுந்தகவல் யாதெனில்ஏன் தமிழ்ச் சூழலில் இப்போது அறிவியல் சிறுகதைகள் வரமறுக்கிறது ? தமிழில் ஐசக் அசிமோவ் போன்ற எழுத்தாளர்கள் இல்லவே இல்லையா ? வர வாய்ப்புகளும் இல்லையா ?” இன்னுமொரு குறுந்தகவல்தாங்கள் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆங்கில எழுத்தாளர்கள் எழுதிய புதினங்கள் சார்ந்து விமர்சனங்களை தொடர்ந்து பத்திரிக்கையில் எழுதுகிறீர்கள். ஏன் இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதப்படும் புதினங்களைப் பற்றி எழுத மறுக்கிறீர்கள் ?”

இந்த இரண்டு கேள்விகளுமே என்னை வதைக்கிறது. இக்கேள்விகள் என்னை கேட்பதாக நான் நினைப்பது உன் கதைகள் எனக்கு புரிய மறுக்கிறது அல்லது நான் அறிந்தவைகளையே நீ கதையாக எழுதி கொண்டிருக்கிறாய் அல்லது நான் வாசித்த நூலையே நீ விமர்சனம் என்னும் பெயரில் புணர்ந்து கொண்டிருக்கிறாய் அதை நான் ஏன் வாசிக்க வேண்டும் ? புதுமையை தராதவன், குறிப்பாக உன்னைப் போன்றவன் எப்படி எழுத்தாளன் ஆவான் ?

என் பதிலை சொல்லிவிடுகிறேன். காரணம் கதையை தடை செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் நான் எப்போதும் மன்னிப்பதில்லை. இது அதி முக்கிய ஒன்றாக கருதுகிறேன். எழுத்தாளன் என்பவன் எப்போதும் புதியதாய் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பது. தாங்கள் இதுவரை வாசித்து வந்த கதையை எங்கேயும் படித்ததில்லை என்று மனதால் சொல்ல முடியுமா ? உங்களால் சொல்ல முடியுமெனில் தாங்கள் பத்திரிக்கைகளை வாசித்து இலக்கியவாதி என்று ஏலம் விட்டுக் கொண்டிருப்பவர்களில் ஒருவர். மேலே இருக்கும் கதை முடியவில்லை என்பதையும் இடைச்செருகலாக சொல்லிவிடுகிறேன். இதே கருவை எத்தனையோ எழுத்தாளர்கள் வெவ்வேறு விதமாக மானுடவியலின் ஒரு பிரச்சினையாக சொல்லி அதற்கு அவர்களின் மனதில் இருக்கும் தீர்வை சொல்லியிருப்பர். எத்தனையோ பேர் எழுதிய தீர்ப்பை மாற்றியமைக்கக் கூடிய பணியில் இல்லை நான். நான் கண்ட மனிதர்களின் வாழ்க்கையை ஆராயவில்லை. அவர்களின் மனோதத்துவங்களை பயிற்சிக் கூடம் ஆக்கவில்லை. அவர்களின் நடை உடை பாவனைகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அறிய முற்படவில்லை. அவர்களின் வாழ்க்கையை பதிவு செய்ய நினைக்கிறேன். அவர்களுக்கே தெரியக்கூடாது என்பதே என் முடிவு.

அப்படி நான் செய்யும் ஒரு மனிதன் தான் பிரேதன். எப்போதும் போல் அன்றும் நான் தனிமையில் இருந்தேன். அப்படியிருக்கும் போது தான் பிரேதன் அவனுடைய நண்பனுடன் மேல் சொன்ன யாவற்றையும் பேசிக் கொண்டிருந்தான். அவர்களைப் பின் தொடர்ந்து பீளமேட்டிலிருந்து பேருந்து ஏறினேன். அவர்கள் ஒண்டிப்புதூர் பேருந்தில் ஏறியிருந்தனர். நானும் ஏறினேன். சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் சாந்தி தியேட்டர் என்னும் நிறுத்தம் இருந்தது. அங்கு இறங்கினார்கள். நானும் இறங்கினேன். ஒரு கட்டிடத்தினுள் நுழைய நானும் நுழைந்தேன். அது சாந்தி என்னும் பெயரில் இருக்கும் ஒரு சமூக சேவை மையம். அருகில் சாந்தி பெட்ரோல் பங்க். சாந்தி மருத்துவமனை என்று பெரிய இடம் அவர்களின் நிலையங்களாக இருந்தன.

அங்கே ஒரு நீளமான க்யூ. அவர்கள் நிற்க நானும் நின்றேன். உள்ளே அந்த க்யூ நகர நகர நானும் உள்சென்றேன். ஐந்து கவுண்டர்கள். மேலே கணினி ஸ்க்ரீனில் உணவுகளின் பட்டியலும் அதற்கான விலையும் இருந்தது. காலையிலிருந்து சாப்பிடவில்லை என்னும் உணர்வே அப்போது தான் எனக்குள் மீண்டெழுந்தது. எல்லாமே குறைவான விலை. விலைப்பட்டியல் கம்மியாக இருப்பின் சாப்பாட்டின் தரம் குறைவாகத் தான் இருக்கும். எப்படியும் பசிக்கு அது தெரியாது என்பதால் வாங்கினேன். அங்கே அதிகபட்ச விலையே பதினைந்து ரூபாய் தான். ஒண்டிப்புதூர் சுற்றியுள்ள மக்களில் அநேகம் பேர் அங்கே தான் மூன்று வேளையும் சாப்பிட்டு தங்கள் உணவுத் திட்டத்தை முடித்துக் கொள்கின்றனர். நானும் சாப்பிட்டேன். அன்றுவரை எனக்கு உணவு உண்ணும் போது வியர்த்ததே இல்லை.

உணவு உண்ணும் போது வியர்த்தால் மட்டுமே அது முழுமையை அடையக் கூடிய ஒரு நிலை என்று அம்மா சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். அம்மாவின் கைமணத்தில் கூட நான் அதை உணர்ந்ததில்லை. இங்கேயோ மேலே மின்விசிறி சுழன்றுக் கொண்டிருக்கும் போது கூட என் சட்டை நனைந்து கொண்டிருந்தது. அவ்வளவு அமிர்தமான உணவு. எத்தனையோ பட்டினிகளை கடந்து இன்று உண்ணுகிறேன். இரவுகளில் எப்போதும் வெகு நேரம் கழித்து உறங்குவதால் காலை சாவகாசமாக உறக்கம் கொண்டு தாமதமாக எழுந்து கொள்வேன். காலையில் விட்ட தூக்கத்தை உணவு இடைவேளையில் மேற்கொள்வதால் மதிய உணவும் விடுபட்டு போய்விடும். இரவு மட்டுமே சாப்பிடுவேன். இப்படியொரு நிலையில் தான் தேவாமிர்தமான ஒரு உணவு. உணவை உண்டு கைகழுவிவிட்டு சுக்கு காபியை வாங்கினேன். கண்களில் காரம் தாங்க முடியாமல் கண்ணீர் வந்தது. சிரித்துக் கொண்டே குடித்துக் கொண்டிருந்தேன். எனக்காக நான் சிரித்த சிரிப்பு.

கண்களில் கண்ணீரால் இடர்பாடு ஏற்பட்ட போது தான் மங்கலாக மனிதர்களின் பிம்பம் என் பிரக்ஞைக்கு தெரிய ஆரம்பித்தது. பிரேதன் ? சாப்பிடும் பொழுதில் மறந்துவிட்டேனே என்று பதற்றம் கொண்டேன். பாதி வைத்திருந்த சுக்கு காபியை கையில் வைத்துக் கொண்டே தேடினேன். சாப்பிடும் இடத்தில் இல்லவே இல்லை. நிச்சயம் வெளியில் இருப்பான் என்று அந்த சுக்கு காபியை அங்கேயே வைத்துவிட்டு ஓடினேன். வெளியில் நிறைய மனிதர்கள் தத்தம் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். கண்கள் சுற்றி முற்றி ஓடின. எங்குமே என்னால் பிரேதனை கவனிக்க முடியவில்லை. குழந்தைகள் விளையாடும் பூங்காவிற்குள்ளும் சென்று பார்த்தேன். பிரேதன் இல்லை. அவன் நண்பனும் இல்லை. அவனின் முன்கதையும் என் வசம் இல்லை. நாளை அவனுக்கு நடக்கவிருக்கும் கதையும் என் வசம் இல்லை. நிராயுதபாணியாய் கருவற்று நின்று கொண்டிருந்தேன்.

வெளியில் இருக்கும் காபி கடையில் ஒரு காபி வாங்கினேன். வேகமாக நடந்ததில் சுவையை உணர முடியாமல் காபி என்னுள் நீராய் சென்று கொண்டிருந்தது. அந்த ப்ளாஸ்டிக் டம்ளரை மிருகங்களின் உருவத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போடச் சென்றேன். அதனருகில் ஒரு மரம். அதனடியில் எத்தனையோ மக்கள் போட்ட ப்ளாஸ்டிக் டம்ளர்கள். யாரையும் பின் தொடராமல் நானாக நடந்து செல்ல ஆரம்பித்தேன்.

கதை முடிந்தது.

என் வேலை எப்போதும் எழுதிய பிறகு அந்த பிரதியை அக்குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் கல்லறை மேல் வைத்துவிடுவது. பிரேதன் இறந்தானா என்று கூட தெரியவில்லை. இனி தான் கல்லறைகளினூடாக தேடப்போகிறேன். ஒரு வேளை எழுத்துகளுக்கு மத்தியில் அவன் இறந்திருந்தால் கதையைப் போல் என் தேடலும் அறுபட்டு நிற்கும். கொடுங்கனவாய் துரத்தும். மரணிக்கவும் செய்யும். மரணித்தும் போகும். என் எழுத்து என்னைப் போல் பலவீனமானது.

பலவீனமானவனால் இவ்வளவே எழுத முடியும். என்னைப் போலவே உங்களுக்கும் அறுபட்ட உணர்வு வந்து சேரட்டும். பின் தெரியும் என் தேடலில் இருக்கும் ஆசை எவ்வளவு கொடூரமானது என.

No comments:

Post a Comment