Tuesday 17 June 2014

Story 11: பதவி உயர்வு:


பதவி உயர்வு:


குமார் ஒரு கடின உழைப்பாளி. அவனுடைய வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் நேர்த்தியாக முடிப்பதில் அவனுக்கு நிகர் அவனே. இந்த வருடமும் அவன் கடின உழைப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. அவனும் அவனுடைய நெருங்கிய அலுவலக சகாக்களும் இந்த முறை அவனுக்கு நிச்சயம் பதவி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். அவனுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் சுந்தர் ஒரு மென்பொருள் அலுவலகத்தில் சேர்ந்து வெகு சீக்கிரமாக இரண்டு பதவி உயர்வு பெற்று விட்டான். அவனுக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை வேறு. அதனால் சுந்தர் குமாரைப் பார்க்கும் பார்க்கும் பார்வையில் ஒரு ஏளனத் தனம் இருக்கும். ஆனால் குமார் வேலை பார்க்கும் அலுவலகமோ ஒரு அரசாங்க அலுவலகம். இந்த காலத்தில் அரசு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பைப் போன்றது.  இது குறித்து குமாரின் பெற்றோர் குமாரிடம் கேட்டதுண்டு. அப்போதெல்லாம் குமார் எனது கடின உழைப்புக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும் என அவனது பெற்றோரை சமாதானம் செய்வதுண்டு. குமாருக்கு இன்னொரு கவலையும் மனதை அரித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்ற கவலைதான் அது. இது குறித்து அவனும் அவன் மனைவியும் பல நேரங்களில் வருந்தி அழுததுண்டு. ஒரு நாள் மாலை வேளையில் அலுவலகம் முழுக்க அடுத்த நாள் அறிவிக்கப் பட இருக்கும் பதவி உயர்வு குறித்த ஒரே பேச்சு. எப்படியும் குமாரின் பெயர் அந்த பட்டியலில் இருக்கும் என அவனும், அவனுடைய சகாக்களும் நம்பிக் கொண்டிருந்தினர். இரவு முழுக்க அவன் அடுத்த நாள், தன் மனைவியிடம் சொல்லி சந்தோசப்படுத்தலாம் என எண்ணி அடுத்த நாள் காலை வேலைக்காக காத்திருந்தான்.

அவன் அலுவலகம் கிளம்பும் போதே வீட்டு முற்றத்தில் பல்லி சத்தமிட்டது. அதைக் கேட்டதும் அவன் உள்மனது கண்டிப்பாக பதவி உயர்வு கிடைத்துவிடும் என நம்பிக் கொண்டிருந்தான்.

அவன் அலுவலகம் உள்ளே நுழையும் போதே சில பேர் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டிருந்தனர். அதிலிருந்தே பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது அவனுக்கு தெரிய வந்தது. அவன் இடத்திற்கு சென்றதும் அவனுடைய நண்பன் கணேஷ் மூலம் தன்னுடைய பெயர் பட்டியலில் இல்லை என தெரிய வந்தது. அதைக் கேட்டதும் இடிந்து போய் உட்கார்ந்தான். அதற்கு மேலும் அங்கு இருக்க பிடிக்காமல் விடுப்பு சொல்லி விட்டு உடனே வீட்டுக்கு திரும்பினான். வீட்டை நெருங்கியவுடன் அவனைக் கண்ட பக்கத்து வீட்டு ஆங்கில ஆசிரியர் கங்ராட்ஸ் குமார்... வெல் டிசர்வுடு பிரமோஷன்...இப்பதான் உங்க அப்பா சொன்னார் என்றவுடன், ஒன்றும் புரியாமல் வீட்டுக்குள் விரைந்தான். அவனைக் கண்ட அவன் மனைவி நல்ல நேரத்தில் வந்தீங்க. உங்க மொபைலுக்கு கால் பண்ணினேன், ஆனா ரீச் ஆகல. நீங்க அப்பா ஆகப் போறீங்க என்றவுடன் அவனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. இருந்தும், அவனுக்கு உள்ளுக்குள் அலுவலக பதவி உயர்வு குறித்து வருத்தம் இருந்து கொண்டிருந்தது. அதை காட்டிக்கொள்ளாமல் அவனுடைய மனைவிடம் என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய உயர் அதிகாரியிடம் இருந்து போன் வந்தது. சாரி குமார், உங்களுடைய பெயர் எப்படி பட்டியலில் விடுபட்டது என்று தெரியவில்லை. புரோமஷன் லெட்டரை உங்களிடம் கொடுக்க உங்கள் இடத்துக்கு போனபோதுதான் நீங்கள் வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது. கங்ராட்ஸ், என்ஜாய் பண்ணிட்டு நாளைக்கு வாங்க என்றார். தேங்கு சார், என்று சொல்லிவிட்டு, அவன் மனைவியிடம் எனக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. அதான் சீக்கிரம் வந்தேன் என்று சொல்லி இரட்டிப்பு சந்தோசத்தில் மகிழ்ந்தான். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட இனிப்பு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் அலுவலகம் செல்லும் சுந்தரைக் கண்டான். ஹாய் சுந்தர், இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்கங்க எனக்கு டபுள் புரமோஷன் கிடைச்சிருக்கு என ஸ்வீட்டைக் கொடுத்து விட்டுக் கிளம்பினான். ஒன்றும் புரியாமல் விழித்த சுந்தரின் ஏளனப் பார்வை ஆச்சரியப் பார்வையாக மாறியது.

No comments:

Post a Comment