Sunday, 15 June 2014

Story 4: ஹண்ட்ரட் ப்ரசண்ட்

ஹண்ட்ரட் ப்ரசண்ட் 

மீட்டிங் ஹாலில் எல்லோரும் ஹெப்சி மிஸ்ஸை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். அசோஷியேசன் மெம்பர்கள் எல்லாம் தங்கள் இரண்டு பாக்கேட் சபாரிகளோடு விரைப்பாய் உட்கார்ந்து ஒரு சர்வதேச குற்றவாளியைப் போல ஹெப்சி டீச்சரை அணுகினார்கள்.

ஹெப்சி மிஸ். சோஷியல் சைன்ஸ் ஹெட் ஆஃப் தி டிப்பார்ட்மெண்ட். ஹைனேசியஸ் கான்வெண்ட். திருநெல்வேலி.

தமிழ் மேத்ஸ்..சையின்ஸ்..ன்னா கூட ஏத்துக்கலாம்.. எப்படி மிஸ் ஷோஷியல்ல போய்!” பென்சி சிஸ்டர் ஆரம்பித்து வைத்தார்.

நல்லா படிக்குற பொண்ணுதான் சிஸ்டர் . டேர்ம்ல கூட எய்ட்டி சிக்ஸ் வாங்கி இருக்கா!”

அப்புறம் எப்படி?. ட்வெண்டி ஃபோர் இயர்ஸ் இந்த கேம்பஸ்ல ஹண்ட்ரட் ப்ரஸண்ட் ரிசல்ட் கொடுத்துட்டு இருக்கோம். இதுவரைக்கும் ஒரு ஸ்டூடண்ட் கூட பெயில் ஆனதே இல்லமெம்பர்ஸ் கோபத்தில் அர்த்தம் இருக்கு !” சிஸ்டர் ஹெப்சி டீச்சரை ஒரு அற்ப ஜந்துவைப் போல் பார்த்தார்கள்.
ஹெப்சி டீச்சருக்கு பேச வாய்ப்புத்தர யாரும் தயாராய் இல்லை. தங்கள் ஒட்டுமொத்த கோபத்தையும் பொறிந்து தள்ளிவிட தயாராய் உட்கார்ந்திருந்தார்கள். கரஸ்பாண்டன்ஸ் வேறு மீட்டிங் ஹாலிற்கு வந்திருக்கிறார். இந்த ஹாலில் எத்தனையோ காரணமில்லாத காரணங்களுக்காகவெல்லாம் மீட்டிங் போட்டிருக்கிறார்கள்.
பென்சி சிஸ்டர். லேசில் எதற்கும் அலட்டிக் கொள்ளமாட்டார். தமிழ்நாட்டின் முக்கிய மாநகராட்சியில் ஆக்ஸ்போர்டு சிட்டி எனப் பெயரெடுத்த ஊரின் நடு மையத்தில் வெள்ளையர்கள் காலத்தில் கட்டிய ஹைனேசியஸ் கான்வெண்டில் கடந்த எட்டுவருடமாய் ஹெட்மிஸ். இந்த  பென்சி சிஸ்டர். முகத்தில் புன்னகையை தவறியும் சிதறவிட்டுவிடக் கூடாதென்னும் கொள்கையில் கடந்த எட்டுவருடத்தில் கொஞ்சமும் பிசகாதவர்.
அந்த ஹைனேசியஸ் கான்வெண்டில் இந்த ஆண்டு மேல்நிலைப் பொதுத்தேர்வில் ஹண்ட்ரட் ப்ரஸண்ட் ரிசல்ட் கொடுத்து மகிழ்ச்சியில் இருந்தவர். அனைத்து ஆசிரியைகளையும் அழைத்து ரிசல்ட்டுக்கு மறுநாள் இதே அரங்கில் தான் மிட்டிங் போட்டு வாழ்த்துக்கள் சொன்னார். இந்த ஆண்டு சேர்க்கையை தீர்மானிக்கும் டெந்த் ரிசல்ட்டிலும் நூறு சதவீத தேர்ச்சியை எட்டிப்பிடிப்போம் என உற்சாகமாய் பேசினவர். இன்றைக்கு சிடுசிடுத்துக் கொண்டிருந்தார்.
 உயர்நிலை பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி இரண்டு மணி நேரத்தில் குறிப்பிட்ட எல்லா ஆசிரியைகளும் பள்ளிக்கு வந்துவிட..ஹெப்சி மிஸ் தன் சித்தி மகன் திருமணவீட்டிற்குச் சென்றுவிட்டு கொஞ்சம் தாமதமாகத் தான் வந்தார். ஆனால் மீட்டிங்கில் நிலவும் உஷ்ணத்திற்கு காரணம் அதுவல்ல.
சொல்லுங்க மிஸ்! நம்ம கான்வெண்ட்ல ஃபோர் நைண்டிக்கு மேல ட்வெண்டி நைன் ஸ்டூடன்ஸ் வந்திருக்காங்க.. இந்த வருஷம் நியூ ரெக்கார்ட். ஆனா அது எல்லாத்துக்கும் கரும்புள்ளி வைச்ச மாதிரி ஒரே ஒரு ஸ்டூடண்ட் பெயில் ஆகி இருக்கா! எக்ஸாம் எழுதின ஃபைவ் பாட்டி எய்ட் ஸ்டூடன்ஸில் ஒரு ஸ்டூடண்டால நாம ஹண்ட்ரட் ப்ரஸண்ட் ரிசல்ட் கொடுக்க முடில..
சரி அதுகூட பரவால்லபோயும் போயும் சோஷியல் சயின்ஸில் ஃபெயில் ஆகி இருக்கா! எப்படி இந்த தப்பு நடந்து. தர்டி ஃபைவ் மார்க் கூட வாங்க முடியாத ஒரு ஸ்டூடண்டை எப்படி நீங்க ட்ரெய்ன் பண்ணீங்க! ஸே..வாட் இஸ் ரீசன் அபௌட் திஸ் நான் அக்செப்டபிள் மிஸ்டேக்!.”
ஹெப்சி மிஸ் ஏண்டா ஷோசியல் சைன்ஸ் துறையின் ஹெச்..டி ஆனோமென்று மனதுக்குள் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.
காலை ஆறு மணிக்கு க்ளாஸ் வைத்து விடுகிறோம்.. நைன்த் ஸ்டேண்டர்டில் இருந்தே டென்த்துக்கான பாடங்களை மாய்ந்து மாய்ந்து படிக்க வைக்கிறோம். ஸ்பெஷல் க்ளாஸ் என்று டெஸ்ட் வைக்காத நாளே இல்லைவாரக்கடைசியில் ஞாயிற்றுக்கிழமை கூட விடுவதில்லை.. என சக்கையாகத் தான் எக்ஸாமிற்கு தயார் செய்கிறோம்.. இருந்தும்  ஒரே ஒரு மாணவி சமூக அறிவியலில்  பெயிலாகிப் போனாள் என்றாள் என்ன காரணம்
இந்த வருடம் தன்னுடைய ஆசிரியப்பணியின் இருபத்து ஐந்தாவது வருடம். இந்த முறை எப்படியும் ரிசல்ட் வழக்கம் போல நூறு சதவிகிதம் வந்துவிடுமென்பதால்.. ப்ளஸ் ஒன் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஆசிரியர் குழுவில் தன் பெயரையும் பென்சி சிஸ்டர் சேர்த்திருந்தார்அதிகாரி வரம்புகளைப் பயன்படுத்தி பெரிய புள்ளி யாருக்காவது இரண்டு சீட் பரிந்துரைக்கலாம் என்ற கனவில் இருந்தார். அத்தனையிலும் மண் விழுந்தது. எல்லாவற்றுக்கும் அந்த ஒரு ஸ்டூடண்ட் தான் காரணம்.
சொல்லுங்க ஹெப்சிஇதனால உங்களை துறைதலைமையில் இருந்து நீக்கம் கூட செய்யலாம். நீங்க கண்டிப்பா க்ளியரன்ஸ் கொடுத்தே ஆகனும். அவுட்.” பென்சி சிஸ்டர் விரட்டாத குறை தான். தப்பித்தால் போதுமென்று ஹெப்சி டீச்சர் வெளியேறினார் மீட்டிங் ஹாலில் இருந்து.
உள்ளே சூடான டீயும். ஆரியாஸ் சமோசாவும் ட்ரேயில் எடுத்துப் போகப்பட்டது. இனி குழுமி குழுமி விசாரிப்பார்கள். இந்த விஷயத்தை மறைத்து எப்படி சேர்க்கைக்குத் தயாராவது என்பது தான் முதல் திட்டமாக இருக்கும்.
ட்வெல்த் ரிசல் வந்த அன்றே ஆர்டர் பறந்து.
ப்யூர் சயின்ஸ் கட் ஆஃப் 420-க்கு மேல்.
பர்ஸ்ட் க்ரூப் 470 –க்கு மேல்.. இப்படி ஒவ்வொரு க்ரூப்புக்கும் நானூறுக்கும் மேல் மார்க் என்று வடிகட்டி  அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கை என தீவிரமாய் இருந்தவர்களுக்கு..இப்படி ஒரு சோதனை

பென்சி சிஸ்டரின் கேள்விகளுக்கு ஹெப்சி டீச்சரிடம் நிச்சயம் பதில் இருக்காது. என்ன பெரிய க்ளியரன்ஸ் கொடுத்து விடமுடியும். வேண்டுமானால் அந்த மாணவி சுகன்யாவை நினைத்து திட்டித்தீர்த்துக் கொள்ளலாம்,
நல்லவேளை சுகன்யாவை உங்களுக்கோ எனக்கோ தெரியாது! தெரிந்து கொண்டு ஒட்டுமொத்த கான்வெண்டையும்  போல நாமும் அவளைக் பச்சோதாபத்திற்குள் தள்ளிவிட வேண்டாம்.

அவள் தந்தைக்கு அவள் இராஜகுமாரியாகவோ! அவள் தாயின் சிங்கார அலங்காரத்தில் தேவதைத் தனமாகவோ தன் இத்தனை நாட்களைக் கழித்தவளை ஒரே ஒரு தேர்வின் மூலம் ஒன்றுக்கும் உதவாத முட்டாள் பிள்ளையாக மாற்றிவிடக் கூடாது.

யார் கொண்டார். நான்கு பாடங்களில் எழுபதுக்குமேல் எடுத்தவள் ஒரு பாடத்தில் தோற்றுப் போகிறாள் என்றால் நிச்சயம் ஏற்கக்கூடிய காரணம் இருக்கலாம்

கான்வெண்ட் கடாபிகளின் வறட்டு கௌரவம்,செண்டம் , கட் ஆஃப் துரத்தல்கள் எல்லாவற்றுக்கும் அஞ்சி ஓடிச் சோர்ந்து அயர்ந்து தோற்றுப் போய் நிற்கும் அந்த பெண் குழந்தையிடம் கேட்டால் ஒரு வேளை சொல்லலாம்.
அன்றைக்குத் தான் நான் வயதுக்கு வந்துவிட்டேன் டீச்சரென்றுNo comments:

Post a Comment