Tuesday, 17 June 2014

Story 8: பாலுச்சாமி மாமாவும் பாதகத்தியும் …

பாலுச்சாமி மாமாவும் பாதகத்தியும் …

அந்த பாதகத்தியோட சாபம் தான் ஏம் பிள்ளையோட வாழ்க்கையவே சீரழிச்சுப்புடுச்சு யாத்தே ’

அமத்தா பாலுச்சாமி மாமாவின் புகைப்படத்திற்கு நேர் எதிரே தரையில் உட்கார்ந்து கதறியது. புகைப்படத்தில் முகமே மறையும் படியான தாடியில், முறுக்கு மீசையுடன், இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில் அமைதியான பார்வையோடிருந்தார் மாமா.

புகைப்படத்திற்கு மாலை போட்டு, அவரின் நெற்றிப் பகுதியில் பொட்டு வைக்கப்பட்டிருந்தது. ஊதுபத்திகள் புகையால் ஓவியங்கள் தீட்டிக் கொண்டிருந்தன.
மாமா இறந்து ஒரு வாரமாகி விட்டது. மாமாவின் நினைப்பு வரும் போதெல்லாம் இப்படித் தான் புகைப்படத்தைப் பார்த்து பார்த்து அழுது கொண்டிருக்கிறது அமத்தா.

அமத்தா பாதகத்தி என்று யாரைச் சொல்கிறது, என்ன சொல்கிறது என்று புரியவில்லை. ஒரு புதிர்க்கதையின் முதல்வரி போலிருந்தது அமத்தா சொன்னது. அமைதியாய் இருக்கும் போது தான் என்னவென்று கேட்க முடியும். யாரைச் சொல்கிறது என்பதை அறிய வேண்டும் என்ற எண்ணம் பஞ்சுக்குவியலில் விழுந்த கனலாய் எரியத் துவங்கியது. அழுது தீர்க்கட்டும் என்று காத்திருந்தேன். .

பாலுச்சாமி மாமா என் அம்மாவின் அண்ணன். அம்மாவுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். இரண்டு தம்பிகள் ஒரு அண்ணன். தம்பிகளான ராமராசு, துரைராசு இருவரும் வாலிப வயதில் ஒருவர் நோயிலும், ஒருவர் ஏதோ காரணத்தால் தற்கொலையிலும் மாண்டு போக பாலுச்சாமி மாமா மட்டுமே எஞ்சினார். ’ பாலுச்சாமி செத்துப் போயி தம்பிக ரெண்டு பேரும் உயிரோட இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமே ’ என்பதை அம்மாவின் வாய்மொழியாகவும் , ஊரார் உறவினர்களின் பேச்சாகவும் பலமுறை கேட்டு இருக்கிறேன். எனக்கும் கூட சிலமுறை அப்படித் தோன்றி இருக்கிறது.


பாலுச்சாமி மாமா அமத்தாவையும், மற்றவர்களையும் படுத்திய பாடு கொஞ்சமா என்ன? ஆனால் இறந்த பிறகு அனைவரும் நல்லவராகிவிடுகிறார்கள். பாலுச்சாமி மாமா உட்பட . அமத்தா இன்னும் அழுது கொண்டு இருந்தது.

மாமாவுக்கு நல்ல அழகான முகம், உறுதியான உடல், முறுக்கு மீசை, கம்பீரமான நடை, எதையும் அலட்சியமாய் பார்க்கும் பார்வை, உயரமும் இல்லாமல் குட்டையும் இல்லாமல் கச்சிதமான உயரம். அந்தக் காலத்திலேயே பியூசி தேர்ச்சி பெற்றவர். வெள்ளைக்காரன் மாதிரி அழகாய் ஆங்கிலம் பேசுவார், எழுதுவார். மிலிட்டரி ரிட்டன். இத்தனை இருந்தும் குணம் சரியில்லை என்ற ஒன்றைக் காரணம் அவரின் வாழ்வை நாசப்படுத்தி விட்டது.

மாமா யாருக்கும் பயப்பட்டவர் கிடையாது. அதனால் ஊரே அவரைப் பார்த்து பயந்தது. மாமாவுக்கு வாழ்வைப் பற்றிய கனவோ, இலட்சியமோ, இப்படி வாழ வேண்டும் என்ற ஆசையோ, தீர்மானமோ இருந்ததில்லை.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து மாமாவை பற்றி நல்லதாய் எதுவும் கேள்விப்பட்டதே இல்லை. முன் கோபம், முரட்டு சுபாவம். குடிப்பழக்கம். அடிக்கடி யாரிடமாவது வம்புச் சண்டைக்கு போய் அடிதடியில் இறங்குவது என்று ஒரு சண்டியர் வாழ்க்கை வாழ்ந்தவர்.

அமத்தாவும், சீய்யானும் பெட்டிக் கடை வைத்து சிறுக சிறுக சம்பாதிக்கும் பணத்தை கடையில் போய் சண்டை போட்டு வாங்கி, குடித்து செலவழிப்பார். கொடுக்க மறுத்தால் பெற்றவர்கள் என்று பாராமல் அடித்து, மிதித்து கலவரப்படுத்தி பணத்தை வாங்கியே தீருவார். இன்னும் அமத்தா சொல்லும் மாமா சீய்யானை கீழே தள்ளி செருப்புக் காலிலேயே முகத்தில் மிதித்ததை.

பாலுச்சாமி மாமா நான்கு பேரை கல்யாணம் செய்து தீர்த்து வீர சரித்திரம் படைத்தவர். தீர்த்து விடுவது என்றால் ஆளை தீர்த்து விடுவதல்ல. மதுரை மாவட்டத்தைப் பொறுத்த வரை தீர்த்து விடுவது என்றால் இனி ஒன்றாய் வாழவே முடியாது என்று முடிவெடுக்கும் கணவன் மனைவிக்கு கோர்ட் இல்லாமல் வக்கீல் இல்லாமல் கிராம பெரியவர்கள் சேர்ந்து ஏற்படுத்திக் கொடுக்கும் விவாகரத்து என்று அர்த்தம். வரதட்சணை பொருட்கள் அல்லது அதற்கான பணம் திரும்பப் பெற்றுத் தரப்படும் அதன் பிறகு அந்தப் பெண் வாழ்வதற்கான ஏற்பாடு செய்யபட்டு அது வரை அவள் வாழ்ந்தற்கான நஷ்ட ஈடு வாங்கிக் கொடுத்து பரஸ்பர சம்மதத்துடன் பிரித்து வைக்கப்படுவார்கள்.


பாலுச்சாமி மாமா அவரது நாலாவது மனைவியைத் தீர்த்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார் என்று அம்மா சொன்ன போது அந்த செய்தி என்னைக் கொஞ்சம் கூட என்னை ஆச்சரியப்படுத்தவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் திருமணமான நாளில் இருந்து எந்த கணத்தில் வேண்டுமானலும் இது நடக்கலாம் என்ற காத்திருப்பிலேயே இருந்தேன் என்பதே உண்மை.

கல்யாணம் செய்து வைத்தால் மகன் திருந்தி விடுவான் என்று அமத்தா எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் மாமா பிடி கொடுக்கவில்லை. நாற்பது வயது வரையிலும் கல்யாணம் செய்து கொள்ளாமல் கோவில் காளைபோல் திரிந்தார். பின் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் மாமா வளைந்து கொடுத்து கல்யாணத்திற்கு சம்மதித்திருக்கிறார். வாழ்க்கையில் விடியல் வந்தே விட்டது என்று மகிழ்ந்து கடை வேலையை எல்லாம் சீய்யானிடம் ஒப்படைத்து விட்டு, பெண் தேடுவதே வேலையாய் அலைந்தது அமத்தா.

மாமாவின் வீர தீரக் கதைகள் ஊருக்கே தெரியும் அதனால் உள்ளூரில் பெண் கிடைக்கவில்லை. கம்பத்தில் பெண் பார்த்து முடிவானது. திருவிழாவாய் நடந்தது திருமணம். அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்பா, அம்மா, தம்பி, அக்கா  என்று குடும்பத்துடன் போயிருந்தோம். பொதுவாக நாங்கள் ஊருக்கு வரும் போது கூட  மாமாவின் குணம் காரணமாக அமத்தா வீட்டுப் பக்கம் போவதே கிடையாது.

மாமாவுக்கு பெண் மிக அழகான, அமைதியாக அமைந்ததில் அனைவருக்கும் திருப்தி. எப்படியோ பாலுச்சாமி மாமாவும் திருந்தி ஒரு நல்ல மனிதனாக வாழப் போகிறார் என்று ஊரே நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
ஆனால் கல்யாணமாகி ஒரு சில மாதங்களிலேயே மனைவியை அடித்துத் துரத்தி விட்டார் என்ற செய்தி கிடைத்தது. அவ நல்ல பொம்பள இல்லை என்று ஆரம்பித்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார் மாமா. கடைசியில் அந்தப் பெண்ணை பேசித் தீர்த்து அனுப்பி வைத்தார்கள்.

மீண்டும் பாலுச்சாமி மாமா பழையபடிக்கு குடி., அடிதடி வம்புச் சண்டை என்று தன்னியல்பில் வாழத் துவங்கினார். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அமத்தா மீண்டும் ஒரு பெண்ணை மாமாவிற்கு திருமணம் செய்து வைத்தது. இந்த முறை திருமணம் தடபுடல் இல்லாமல் நடந்தது. மீண்டும் சில மாதங்கள், பழைய குற்றச்சாட்டுக்களையே புதிய பெண்ணிற்கும் புதிப்பித்து சொன்னார் மாமா. அப்படியாக இன்னொரு பெண்ணின் கனவுகளும் நம்பிக்கைகளும் தீர்க்கப்பட்டது.

இதே கதை மீண்டும் மீண்டும் நான்காவது முறையாகவும் நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது.

நான்காவது திருமணம் நடப்பதற்கு முன்னால் மாமா மிலிட்டரி ரிட்டன் என்பதால் மின்சாரவாரியத்தில் அஸசர் வேலை கிடைத்தது. இனி பொறுப்போடு நடந்து கொள்வார் என்பது எல்லோரின் நம்பிக்கையாக இருந்தது.
இராமேஸ்வரத்தில் வேலைக்குச் சேர்ந்தார். குடியை நிறுத்தினார். தாடி வளர்க்க ஆரம்பித்தார். ஊரார் எல்லாம் தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் படியாய் ஒரு துறவி போல வாழத் துவங்கினார்.
மூன்று கல்யாணங்களை நடத்தி, தீர்த்து ஓய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அமத்தாவிற்கு மகனின் மாற்றம் மீண்டும் நம்பிக்கையைக் கொடுக்கவே பெண் பார்க்கத் துவங்கியது. நாலாவது திருமணமும் நடந்து முடிந்தது.

பாலுச்சாமி மாமா கல்யாணத்திற்காக தாடியை எடுத்து பழைய தோற்றத்திற்கு மாறும்  போதே பழைய குணங்களுக்கும் மாறி விட்டிருந்தார். குடித்து விட்டு வந்து மனைவியை அடிக்கத் துவங்கி இருக்கிறார். மனைவி கோபித்துக் கொண்டு வந்து அவளது பெற்றோர் வீட்டில் ஆறு மாதம் இருந்தது. சமாதானப்படுத்தி மீண்டும் போய் சேர்த்துவிட்டார்கள். ஒரு மாதத்தில் மீண்டும் பெற்றோர் வீட்டுக்கு கண்ணீரோடும் காயங்களோடும் போய் சேர்ந்தது மாமாவின் நாலாவது மனைவி. நல்லவிதமாய் மாற மாட்டேன் என்ற மாமாவின் மாறாத தீர்மானத்தால் மீண்டும் தீர்த்தார்கள் நாலாவது மனைவியையும். அரசாங்க வேலையில் இருந்ததால் நஷ்ட ஈடு கொஞ்சம் அதிகமாய் கொடுக்க வேண்டி வந்தது.

அதன் பிறகு குடித்துவிட்டு அலுவகம் போவது. அங்கு சண்டை போடுவது. சஸ்பென்ஷன் வாங்குவது என்று சில ஆண்டுகள் இராமேஸ்வரத்தில் இருந்து விட்டு பணி ஓய்வு பெற்று ஊருக்குத் திரும்பினார் மாமா.

அப்போது சீய்யான் இறந்து போய் சில ஆண்டுகள் ஆகி இருந்தது. ரிட்டயர்ட்மெண்ட் பணம், பென்சன் பணம் என்று வீட்டிலேயே ராஜ வாழ்க்கை வாழத் துவங்கினார். இடையில் ஒரு சண்டையில் மாமா அமத்தாவை அடிக்கத் துரத்த, அமத்தா உறவினர்கள் வீட்டில் போய் இருந்து கொண்டது.

அமத்தாவும் வீட்டில் இல்லாத அந்த நாட்களில், ஒரு அதிகாலையில் நடந்து போய் கொண்டிருக்கும் போதே ஹார்ட் அட்டாக் வந்து தெருவிலேயே விழுந்து இறந்து போனார் மாமா.


என்ன வாழ்க்கை இது? ஏன் இப்படி வாழ்ந்தார் மாமா? வளர்ப்பு சரியில்லையா? சேர்க்கை சரியில்லையா? இந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம். இந்த மிருக வாழ்க்கை வாழ்ந்து மடிவதற்கு பிறக்காமலேயே இருந்திருக்கலாமே. இவர் யாரையாவது சந்தோசப் படுத்தி இருப்பாரா? இல்லை எவரின் மூலமாகவாவது சந்தோசத்தை அடைந்திருப்பாரா. ஒரு புல் கூட வீணாய் பிறப்பெடுப்பதில்லை இந்த பூமியில். ஆனால் பாலுச்சாமி மாமா ? பிறந்தார்குடித்தார்… சண்டை போட்டார் என்பது தவிர அவரது வாழ்க்கை வரலாறாய் என்ன சொல்ல முடியும்? நான்கு திருமணத்திலும் எந்தப் பெண்ணையும் ஏன் பிடிக்காமல் போனது. நான்கு பெண்களும் ஒரே குணத்தோடா இருந்தார்கள். மாமா தான் சரியில்லை. பெண்களை அவருக்கு பிடிக்கவில்லையா? அல்லது பெண் என்றால் பயமா? இப்படி ஆயிரம் கேள்விகள் தோன்றிக் கொண்டே இருந்தது மாமாவின் மரண செய்தியை கேட்டதிலிருந்து.

பாதகத்தி… சாபம்… என்று அமத்தா சொன்னதே. அவரது நான்கு மனைவிகளில் யாரைப் பற்றி அமத்தா சொன்னது? அது யாராக இருக்கக் கூடும் என்ற கேள்வி விடை தேடி புகைந்து கொண்டிருந்தது . அதைப் பற்றி அமத்தாவிடம் கேட்கும் வரை அதே தியானமாய் இருந்தது.

அமத்தா தற்காலிகமாய் அழுது முடித்தது. அப்போது அமத்தா வயசில் உள்ள மூன்று பாட்டிகள் வந்தார்கள். ஆறுதல் சொல்லி, உரலில் இடித்து வெற்றிலை பாக்கு போட்டு, பழங்கதைகளைப் பேசிப் போனார்கள்.

அமத்தா அமைதியாய் இருந்தது. பக்கத்து அறையில் கட்டிலில் அமர்ந்திருக்கும் என்னைப் பார்த்து ‘ என்னப்பே சாப்பிட்டியா’? என்று கேட்டது.

அமத்தாவுக்கு என்னுடைய தம்பி, அக்காவை விடவும் என்னைப் பிடிக்கும் காரணம் நான் பாலுச்சாமி மாமாவின் முகச் சாடையில் இருப்பது தான்.

இது தான் சமயம் என்று தோன்றியது. அமத்தா அமர்ந்திருந்த கயிற்றுக் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். இழந்த மகனின் முகத்தை என்னில் மீட்டெடுக்கும் ஆவலில் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.

அமத்தா, யாரு மாமாவுக்கு சாபம் குடுத்தது? ‘ என்று கேட்டேன்.

புரியாதது போலப் பார்த்தது அமத்தா.

அப்ப மாமா படத்தைப் பாத்து அழுகும் போது சொன்னியே.’ என்று நினைவூட்டினேன்.

எல்லாம் அந்த சின்ன சிறுக்கியினால தான் ‘ என்று சொன்ன படி அந்த கதையை சொல்லத் துவங்கியது அமத்தா. நான் உன்னிப்பாய் கவனித்துக் கொண்டு இருந்தேன்.

உங்க மாமன் அழகு பெத்த மகராசன். பள்ளிக் கூடத்தில படிக்கும் போது படிப்பிலயும், வெளாட்டலயும், சீமையிலேயே யாரும் சோடி போட்டுக்க முடியாது. அம்புட்டு தெறமக்கார பைய.

எளந்தாரியா இருக்கையில ராசா மாதிரி இருப்பான். ஊரே அவன் நடந்தா வெச்ச கண்ணு மாறாமப் பாக்கும்.
திருவிழாவிலயோ எங்கெயோ பாத்து குள்ளப்ப நாயகன் பட்டிக்காரப் பிள்ளை ஒருத்தி கிட்ட சிநேகிதமாகிட்டான். அந்தப் பிள்ளயும் அழகு பெத்த புள்ள. ரெண்டு பேரும் உசுருக்கு உசுரா இருந்திருக்குக ‘

பாலுச்சாமி மாமா ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறார் என்பதைக் கேட்ட போதே ஒரு பெரும் பாறை மீது முளை விட்டுப் பூத்த ஒரு செடியின் காட்சி தான் தோன்றியது. மாமா அமைதியானவராக, அன்பானவராக இன்னொருத்தியின் அன்புக்கு கட்டுப்பட்டவராக இருந்தார் என்பதே அவரைப் பற்றிய முந்தைய பிம்பங்களைக் கலைத்துப் போட்டது. அமத்தா லயித்து சொல்லிக் கொண்டு இருந்தது.


அப்பத்தான் பட்டாளத்தில வேலைக்கு ஆளடெடுக்கிறான்னு போனான். வேலையும் கிடைச்சுப் போச்சு. வடநாட்ல எங்கயோ போய் பட்டாளத்தில இருந்தான்.

ஒரு வருசம் கழிச்சு லீவுக்கு வந்தான். அம்புட்டு சீரா அம்புட்டு லச்சணமா வந்துச்சு புள்ள. ஆத்தாளுக்கு சேலை, அப்பனுக்கு வேட்டி துணிமணி எல்லாம் வாங்கிட்டு வந்திருந்தான்  ஏம் மகென்.
மாமா சேலை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த காட்சி இறந்த காலத்திலிருந்து எழுந்து மீண்டும் அமத்தாவின் கண்ணில் நிகழ்ந்து கொண்டிருந்தது போல. அமத்தா முகம் பூரித்திருந்தது. நான் அமைதியாய் அமத்தாவின் வார்த்தைகளை காட்சியாய் கண்டு கொண்டிருந்தேன். அமத்தா மீண்டும் தொடங்கியது.

அப்ப சமயத்துல குள்ளப்ப நாய்கன் பட்டிக்கு அந்தப் புள்ளயப் பாக்கப் போயிருக்கான். அந்தப் பொண்ணு வீட்டில இது தெரிஞ்சு சண்டைக்கு வந்திருப்பாய்ங்க போல்ருக்கு. ஆனா அந்த பொண்ணு ஒன்ன விட்டுட்டு பொழச்சு கெடக்க மாட்டேன் , ஒன்னோடயே வரேன்னு வம்படி பண்ணிருக்கா.

இவன் லீவு முடியறதுக்கு முன்னாலயே கெளம்பிப் போனான். அவளும் கூடயே போயிட்டா. ரெண்டும் போயி பெரிய குளத்தில புருசன் பொண்டாட்டின்னு சொல்லி வாடகைக்கு வீடெடுத்து தங்கி இருந்திருக்குதுக.

ஒண்ணா மண்ணா இருத்துட்டு லீவு முடிஞ்சு போகப் போற நேரத்தில ஒங்க மாமன் சொல்லி இருக்கான். ’ ஒன்ன வண்டியேத்தி விடுறேன் வீட்டுக்குப் போயிரு. நான் பாட்டாளத்துக்கு போயிட்டு அடுத்த லீவுல வரும் போது கூட்டிக் கிட்டு போறேன். ’ அப்பிடின்னு.
விளையாட்டுக்குச் சொன்னானோ வினையமா சொன்னானோ. அந்தப் புள்ளய திடீர்னு கூட்டிட்டு போனா பட்டாளத்துக்காரன் ஏத்துக்குவானோ மாட்டானோ. அங்க என்ன பிரச்சனையோ, கருமாயமோ..

அந்தன்னிக்கு அந்த புள்ள கண்ணீர உகுத்து கூட வந்தாலே ஆச்சுன்னு திண்ணக்கமா இருந்திருக்கு.

இவன் முடியாதுங்க ஒரே சண்டைக் காடா கிடந்திருக்கு.
சரி இரு வரேன்னு சொல்லீட்டு இவன் வெளில எங்கயோ எதோ சோலியா போயிருக்கான். போயிட்டு வந்து வீட்ல வந்து பாத்திருக்கான், அந்தப் பயபுள்ள மக மருந்தக் குடிச்சுப்புட்டு சாகக் கிடந்திருக்கா.

பாதகத்தி இப்பிடி பண்ணிப் புட்டியேன்னு சொல்லி இவன் எங்கயோ ஓடிப் போயி வைத்தியரை கூட்டி வந்து பாத்துருக்கான். செத்துப் போயி கிடந்திருக்கா.

என்புள்ள கையும் ஓடாம, காலும் ஓடாம போலீஸ் ஸ்டேசன் போயி இன்ஸ்பெக்டர பாத்து அய்யாஇப்பிடி ஆகி போச்சு. நான் பட்டாளத்து போகணும் சொல்லி இருக்கான்.


போலீஸ்காரனும் பட்டாளத்துக்காரன்னு சொல்லவும் இவன் கையில இருக்க காச வாங்கிட்டு இவன அனுப்பி விட்டுட்டான். போலீசே பிரச்சனை இல்லமா பாத்து முடிச்சிட்டான்.

அவ சாகும் போது என்னென்னத்த நினைச்சுட்டு செத்தாளோ, இவனுக்கு என்னென்னத்த சாபமா குடுத்தாளோ?

பட்டாளத்துக்குப் போயி கொஞ்ச நாள்ல வேலை வேணாம்னு எழுதிக் குடுத்திட்டு வந்துட்டான். அப்புறம்
குடிகாரனாகி, சண்டைகாரனாகி சீரழிஞ்சு போய் நிம்மதியில்லாம செத்தும் போனான் என் அழகு பெத்த சாமி பாலுச்சாமி… ‘

சொல்லச் சொல்லவே கதறி அழத் துவங்கியது அமத்தா.
என் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அந்தக் கண்ணீரின் ஈரத்தில் பாலுச்சாமி மாமாவைப் பற்றிய என் மனப்பதிவின் பிம்பங்கள் எல்லாம் அர்த்தம் மாறிக் கொண்டிருந்தன.
  

No comments:

Post a Comment