Tuesday 17 June 2014

Story 6: நான் ஐ.ஏ.எஸ் ஆகணும்

நான் ..எஸ் ஆகணும்

       எஞ்சினியரிங்கில் எட்டாவது செமஸ்டரில் இரண்டு அரியர் வைத்தவன் ..எஸ் ஆக வேண்டும் என்றால் கேட்பவர்களுக்கு நிச்சயம் சிரிப்பு வரும். ஆனால் நான் சிரிக்கவில்லை. சுய எள்ளல் தன்மை மிகவும் குறைந்து போனது காரணமாக இருக்கலாம். சுய எள்ளல் தன்மை ஏன் குறைந்து போனது என்ற ஆய்வில் இறங்கினால் அதற்கும் பல காரணங்கள் அகப்படலாம். வேலை கிடைக்குமா கிடைக்காத என்ற நிச்சயமின்மை, கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்ற பயம்... இப்படியான காரணங்கள். அந்த நிச்சயமின்மைக்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் எல்லாக் காரணங்களுக்கும் காரணம் வேண்டுமென்று தேடிக்கொண்டிருந்தால் வேலை நடக்காது. ஒரு வேளை பைத்தியம் பிடிக்கலாம். இப்போதே பைத்தியக்காரனாகி விட எனக்கு இஷ்டமில்லை. சில வருஷங்களாவது போகட்டும். பைத்தியக்காரன் ஆகாமலே இருந்தாலும் நல்லது தான்.

       இப்போதைக்கு ..எஸ் ஆக வேண்டுமென்பது தான் பிரச்சினை. அந்தப் பிரச்சினை தான் இப்போது கைவசமிருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு. ஒரு வருஷம் படிக்க வேண்டும்; கிடைக்கும் எல்லாப் புத்தகங்களையும் படிக்க வேண்டும். எப்படியாவது பாஸ் பண்ணிவிட்டால் அந்த இருபத்திநாலு சர்வீஸ்களில் ஒன்றிலாவது நுழைந்து விடலாம்.

       இன்னும் ஒரு வருஷம் படிப்பதற்கு நேரம் வேண்டும். ஆனால் அப்பாவுக்கு என்மேல் நம்பிக்கையில்லை. மாவை இட்லிப்பானையில் ஊற்றி வேக வைத்தால் இட்லியாகி விடுவதைப் போல், ஏதாவது கோச்சிங் சென்டருக்குப் போனால் ..எஸ் ஆகி வெளிவரலாம் என்ற நம்பிக்கை அவருக்கு. "ஏதாவது கோச்சிங் சென்டர்ல சேந்துரு. ரீவேல்யுவேஷன்ல அரியர் க்ளியர் ஆகுறது வரைக்கும் கோயம்புத்தூர்ல இருந்துக்கோ. இந்த வருஷமே பிரிலிமினரி எழுது", என்றார்.

       கோச்சிங் சென்டருக்குப் போவதில் எனக்கு இஷ்டமில்லை. இறையன்பு கூட கோச்சிங் சென்டர் போகாமல் தான் படித்தார் என்றேன். தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்த ஒரே ..எஸ் அதிகாரி அவர்தான். அவர் புத்தகங்கள் எழுதியிருக்காவிட்டால் அவர் பெயரும் தெரிந்திருக்காது. மாவட்ட கலெக்டரின் பெயர் நினைவில் பதியும் முன்னே இடம் மாற்றி விடுவதால் அவர்களில் எவர் பெயரும் மனதில் நிற்கவில்லை. அப்பா நான் சொல்வதையெல்லாம் கேட்கத் தயாராக இல்லை.

       கோச்சிங் சென்டர் போய்த்தான் ஆக வேண்டும். இன்னும் சில மாதங்கள் கோயம்புத்தூரில் ஏதாவது மேன்ஷனில் ரூம் எடுத்துக் கொண்டு, யாராருடனோ ரூமையும் சோப்பு, சீப்பு, பேஸ்ட் என பல வஸ்துக்களையும் பகிர்ந்து கொண்டு ஒரு கோச்சிங் சென்டரில் சேர்ந்து படித்தோ, படிக்காமலோ காலத்தை ஓட்ட வேண்டும். பயமாக இருந்தது. காந்திபுரத்தில் ரூம் தேட வேண்டும். கூடவே ஒரு கோச்சிங் சென்டரையும் தேட வேண்டும்.

       பிரவுசிங் சென்டருக்குப் போனேன். கோயம்புத்தூரில் நான்கு சிவில் சர்வீஸ் கோச்சிங் சென்டர் இருப்பதான கூகுள் என்னிடம் சொன்னது. பெயர்களையும் முகவரியையும் குறிததுக் கொண்டேன். முடிந்த பிறகு இன்னொரு இணையதளத்துக்குப் போய் என்னுடைய பெயரையும் மொபைல் நம்பரையும் கொடுத்துப் பதிவு செய்தேன். கோயம்புத்தூரில் இருக்கும் மேன்ஷன்களின் விவரம் சீக்கிரமே எனது மொபைலுக்கு வந்து விடும்.

       முதலில் ஒரு கோச்சிங் சென்டர் முகவரியை வைத்து சுற்றித் திரிந்து அதைத் தேடிக் கண்டுபிடித்தேன். ஆள்நடமாட்டமில்லாத தெருவொன்றில் அமைந்திருந்தது அதன் அலுவலகம். இருபதிலிருந்து இருபத்தைந்து வயது வரை இருக்கக்கூடிய ஒரு பெண் உள்ளே உட்கார்ந்திருந்தாள். "சிவில் சர்வீசஸ் கோச்சிங் எடுக்கணும்", என்றேன். "மேடம் வந்து உங்ககிட்ட பேசுவாங்க. நீங்க வெயிட் பண்ணுங்க", என்று அவள் ஒரு இருக்கையைச் சுட்டிக் காட்டினாள். அவளும் ஏதாவது தேர்வுக்குப் படிப்பவளாக இருக்கும்.

       கொஞ்ச நேரத்தில் மேடம் என்று குறிக்கபட்ட அந்தப் பெண்மணி அறைக்குள் நுழைந்தார். அவரிடமும் சொன்னேன், "சிவில் சர்வீசஸ் கோச்சிங் எடுக்கணும்". ஒரு படிவத்தைக் கொடுத்து நிரப்பச் சொன்னார். நிரப்பிக் கொடுத்தேன். அவர் தங்கள் கோச்சிங் சென்டரில் வகுப்பெடுக்கிறவரின் அருமை பெருமைகளை எல்லாம் விவரிக்கத் தொடங்கினார். அந்த கோச்சிங் சென்டரின் இணையதளத்தில் பார்த்த ஒரு விஷயத்தைப் பற்றி நான் அப்போது யோசித்துக் கொண்டிருந்தேன். எஞ்சினியரிங் முடித்த ஒருவர் ஹிஸ்டரி எடுக்கிறாராம். ரோமிலா தப்பாரும், ராமச்சந்திர குஹாவும் வந்து பாடம் எடுப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை தான். ஆனால் குறைந்தபட்சம் ஒரு எம். ஹிஸ்டரியாவது வேண்டாமா? அதைப் பற்றி அவரிடம் கேட்கவில்லை.

       "ஃபீஸ் எவ்வளவுங்க?", என்று கேட்டேன்.

       "பிரிலிமினரி மட்டும்னா முப்பதாயிரம் ஆகும்", என்றார் அவர். எனது ஒரு வருடத்திய காலேஜ் ஃபீஸின் முக்காற்பங்கை இந்த மூன்று மாதக் கோச்சிங்குக்காக மட்டும் கேட்கிறார் அவர்.

       "நான் வீட்ல பேசிட்டு வந்து உங்கள பாக்றேன்", என்று சொல்லி தப்பித்து வெளியேறினேன். மொபைல் போனில் அழைப்பு வந்தது. "சார், நீங்க கோயம்புத்தூர்ல ரூம் வேணும்னு வெப்சைட்ல என்கொயரி பண்ணியிருந்தீங்களா?"

       "ஆமா சார்".

       "நாங்க சாய்பாபா காலனில இருந்து பேசுறோம். நீங்க வேலைக்குப் போறீங்களா சார்?"

       "இல்ல, கோயம்புத்தூர்ல சிவில் சர்வீசஸ் கோச்சிங் போலாம்னு இருக்கேன்".

       "அப்படிங்களா? நாலு பேர் ஷேர் பண்ணிக்கிற மாதிரி ரூம் இருக்கு. 1500 ரூபாய் வாடக".

       "நாளைக்கு வந்து ரூமை பாக்றேன் சார்".

       "நீங்க எப்ப வேணாலும் வந்து பாருங்க", சொல்லி அவர் அழைப்பை துண்டித்தார்.

       நான்கு பேருடன் எப்படித் தங்குவது என்று தெரியவில்லை. நான் தனிமையை விரும்புகிறவன். நாலு வருஷம் எனது ஹாஸ்டல் வாழ்க்கையை எப்படி நான்கு பேருடன் ஒரே அறையில் கழித்தேன் என்பது இன்னும் புரியவில்லை. இன்னும் சில மாதங்கள் எப்படி ஒரே அறையில் நான்கு பேருடன் தங்கியிருப்பது என்பதும் தெரியவில்லை.

       திரும்பவும் மொபைல் ஒலித்தது. மறுபடியும் அதே கேள்வி. அதே ஆமோதிப்பு.

       "நான் சிங்காநல்லூர்ல இருந்து பேசுறேன். ரூம்ல .சி இருக்கு. வுடன் காட், வுடன் பீரோ எல்லாம் இருக்கு", ரூமின் வசதிகளைப் பற்றி அடுக்கிக் கொண்டே போனார்.

       "சார், ரூம் ரென்ட் எவ்வளவு?", அவர் பேச்சைப் பாதியில் கத்தரித்துக் கேட்டேன்.

       "நீங்க ஒருத்தர் மட்டுமா சார்?"

       "ஆமா சார்".

       "எவ்ளோ நாள் தங்கணும்?"

       "மூணு மாசம் சார்".

       "அப்டின்னா 5250 ரூபா ஆகும்".

       எனக்கு சந்தோஷம் வந்தது. இருந்தாலும் உறுதி செய்து கொள்ள வேண்டி கேட்டேன்.

       "மூணு மாசத்துக்குமா சார்?"

       "இல்லீங்க, மாசத்துக்கு 5250 ரூபா"

       எனது சந்தோஷம் நொடிப் பொழுதில் காணாமற்போனது.

       "நாளைக்கு ரூம வந்து பாக்கிறேங்க", சொல்லி உரையாடலை முடித்துக் கொண்டேன்.

       இனி அடுத்த கோச்சிங் சென்டரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். முகவரிகளைத் தேடிப் பிடிப்பதில் எனக்கு சிரமமுண்டு. யாரிடமும் வழி கேட்க எனக்குப் பிடிக்காது. கூகுள் மேப்பில் பார்த்ததை வைத்து தட்டுத் தடுமாறு எப்படியாவது அங்கே போய் விடுவேன். ஆனால் தேடிக்கண்டுபிடிக்கும் போது அலைச்சல் நிச்சயம் அதிகமாகியிருக்கும்.

       நாலைந்து தெருக்களைச் சுற்றி வந்த பிறகு கண்ணில் பட்டது அந்த கோச்சிங் சென்டர். வீட்டையே கோச்சிங் சென்டர் ஆக்கியிருக்கிறார்கள். வீட்டுக்குள் ஏதாவது நாய் இருக்கிறதா என்று எட்டிப் பார்த்து அப்புறம் கேட்டைத் திறந்து உள்நுழைந்தேன்.

       ஒரு சின்னப்பையன் உள்ளிருந்து வந்தான். ஒரு நாற்பது வயதுப் பெண்மணி அவன் பின்னாலேயே வந்தார், "எதுக்கு வந்திருக்கீங்க? என்ன விஷயம்?".

       "சிவில் சர்வீசஸ் கோச்சிங்...." என்று இழுத்தேன்.

       "வெயிட் பண்ணுங்க", என்று வெளியே இருந்த சோஃபாவைக் காட்டினார் அவர். அமர்ந்தேன்.

       கொஞ்ச நேரங்கழித்து வந்து உள்ளே கூப்பிட்டார். அலுவலக பாணியில் அமைந்திருந்த ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார். ஒரு அலமாரி முழுக்க சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பான புத்தகங்கள். அறையின் நடுவே ஒருத்தர் உட்கார்ந்திருந்தார். அவருக்கு நாற்பது வயதிருக்கும். அறைக்குள் மொத்தம் மூன்று கணினிகள் இருந்தன. என்னை உட்காரச் சொன்னார் அவர்.

       உட்கார்ந்தேன். "சொல்லுங்க" என்றார்.

       "சிவில் சர்வீசஸ் கோச்சிங் எடுக்கணும்".

       "நீங்க ஒரு வருஷம் பிரிப்பேர் பண்ணனும். சிவில் சர்வீஸ் எக்ஸாம் பேட்டர்ன் தெரியுமில்ல".

       "தெரியும்" என்று தலையாட்டினேன்.

       "இங்கிலீஷ் ரொம்ப முக்கியம். இந்தியா மாதிரி ரொம்ப மொழிகள் இருக்கிற நாட்டுல ஒரு பொது மொழி ரொம்ப அவசியம். அதில்லன்னா எதுவுமே நடக்காது. அதனால தான் சிவில் சர்வீஸ் எக்ஸாம்ல இங்கிலீஷ் முக்கியமா இருக்கு. இந்தியால அங்கீகரிக்கப்பட்ட மொழி எத்தன இருக்கு? சொல்லுங்க."

       எப்போதோ, எங்கோ பதினெட்டு என்று படித்திருந்த ஞாபகம் வர அதையே பதிலாய்ச் சொன்னேன்.

       "செப்புமொழி பதினெட்டுடையாள்னு பாரதி அப்ப சொன்னாரு. இப்போ இருபத்திரண்டு மொழி இருக்கு". அவர் தொடர்ந்தார், "நீங்க பிரிலிமினரி க்ளியர் பண்ணனும்னா உங்களுக்கு நாலெட்ஜ் வேணும். மெயின்ஸ் க்ளியர் பண்ணனும்னா உங்களுக்கு விஸ்டம் வேணும்....". அதே பாணியில் தொடர்ச்சியாக பேசிக் கொண்டேயிருந்தார் அவர். எனது சுயபாஷை உவமையொன்றைச் சொல்வதானால், "இரட்சிக்கப்பட்டு ஆவிக்குரிய வேகத்திலிருக்கும் தேவ பிள்ளை ஒருவன் அஞ்ஞானியொருவனின் நம்பிக்கையை மாற்ற முனைவதைப் போல" கைகளை ஆட்டி, சத்த ஏற்றத்தாழ்வுகளுடன் பேசிக் கொண்டிருந்தார் அவர். எளிதில் உணர்ச்சிவசப்படுகிற எவனுக்கும் அவர் பேசுவதைக் கேட்கும் போது மயிர்கூச்செறிந்திருக்கும். நான் சடம் போல் அவர் முன் அமர்ந்திருந்தேன்.

       "நீங்க முதல்ல சப் கலெக்டராவீங்க, அப்புறம் கலெக்டராவீங்க, அப்புறம் கேபினட் செக்ரட்டரி ஆவீங்க, அப்புறம் பிரசிடண்ட் கூட ஆகலாம்", கனவுகளை விதைக்க அவர் முயன்று கொண்டிருந்தார்.

       "முதல்ல ஏதாவது ஒரு பத்திரிகைல கதை எழுதணும். அப்புறம் நாவல் எழுதணும். அப்புறம் சாகித்ய அகாடெமி, அப்புறம் ஞானபீடம், அப்புறம் புக்கர், அப்புறம் நோபல்", அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாத என்னுடைய கனவுகளிலொன்று முழுரூபம் பெற்று வலுத்துக்கொண்டிருந்தது.

       ரொம்ப நேரமாய்க் கேட்காமலிருந்த அந்த கேள்வியைக் கேட்டு விட்டேன், "ஃபீஸ் எவ்வளவு சார்?"

       "மொத்தம் அறுபத்தையாயிரம் ஆகும். ஆனா உங்க ஸ்கூல் மார்க்ஸ் நல்லாயிருக்கிறதுனால டென் பர்சென்ட் டிஸ்கவுன்ட் தாறோம்", என்றார்.

       "வீட்டுல கேட்டுட்டு சொல்றேன் சார்", சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவினேன்.

       காலையிலிருந்து சாப்பிடாமல் அலைந்தாயிற்று. இனி ஒரு முழுச்சாப்பாடு சாப்பிட்டால் தான் வயிற்றுத் தீயை அணைக்க முடியும். ஒரு நல்ல ஹோட்டலைத் தேடி என் கால்கள் நடந்தன. வழியில் ராஜா கையில் ஒரு ஃபைலோடு வந்தான்.

       "என்னடா, ஊருக்குப் போகலியா?", கேட்டேன்.

       "இல்லடா, ஒரு கம்பெனில இன்டர்வியூவுக்குக் கூப்டுருக்காங்க. அதான் போறேன்", பேச்சிலேயே அவசரம் காட்டினான் அவன்.

       "சரிடா, பாப்போம்" என்று சொல்லிப் போனேன்.

       வழியில் என் வயதில் நான் பார்த்த எல்லோரும் கையில் ஒரு ஃபைலோடு அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார்கள். ஒருவேளை சிவில் சர்வீசில் நுழைய முடியாமற்போனால் இதே மாதிரி ஃபைலோடு அலைய வேண்டியது தானா?

       நாளைக்குப் பாக்கியிருக்கும் இரண்டு கோச்சிங் சென்டர்களையும் போய்ப் பார்க்க வேண்டும். அங்கே நிலைமை எப்படியிருக்குமென்று தெரியவில்லை. இந்த நிச்சயமின்மையே நாளை என்பதன் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகிறது. இப்போது சாப்பிடப் போகலாம்.



No comments:

Post a Comment