Tuesday, 17 June 2014

Story 10: ஆட்டுக்கார கிழவன்

ஆட்டுக்கார கிழவன் 
சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து விசாரித்துக்கொண்டிருந்தன. அப்பா முகத்தில் படிந்த சோகத்துடன் வாசல் தின்ணையில் அமர்ந்திருந்தார்.சற்று நேரத்திற்கு முன் மேல தெரு அம்புசம் அப்பாவிடம் ,நாலு புள்ளைகளை பெத்தான் , நாலு பேருமே சேர்ந்து அவன வன வாசம் அனுப்பிட்டீங்களே டா. என்று புலம்பிவிட்டு போனதில் இருந்துதான் அப்பாவிற்கு சோகம் முகத்தில் ஏறி இருந்தது. நேத்து நடந்தத நானும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அப்பா மீது எந்த தவறும் இல்லை. மூத்த புள்ளையாக இருப்பதால் ஊராரின் வசவுகள் அப்பாவின் மீதே குவிந்தன. நேற்று காலை 9மணி இருக்கும். தாத்தா சாப்பிட வந்து அமர்ந்தார். ஊரில் இருந்து இரண்டு அத்தைகளுமே வந்திருந்தனர். அம்மா அப்போதுதான் அப்பாவிற்கு நான்கு இட்லி எடுத்துவைத்துவிட்டு தாத்தாவிற்கு இரண்டு வைத்தாள். தாத்தாவின் பெயர் ராமலிங்கம். அதிகம் படிக்கவில்லை. அதற்கு காரணம் அவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கூடம் போக பிடிக்காமல் முந்திரி காட்டில் பொழுது சாயும் வரை இருந்துவிட்டு ,மாலையில்  பள்ளி முடிந்து வீடு திரும்பும் அண்ணன் நடராஜுடன் வந்துவிடுவார். ஒருநாள் இது தாத்தாவின் அப்பா வேலாயுதத்திற்கு தெரிந்து அண்ணன் ,தம்பி இருவரையும் அழைத்து பழைய ஓட்டு வீட்டு வாசலின் முன் நிற்க சொல்லி நடராசு உனக்கு வெயில் வேனுமா ,நிழல் வேனும் என்றார் . அப்பா எனக்கு நிழல் வேண்டும் என்று வீட்டின் உள்ளே புகுந்து கொண்டார் புத்திசாலி நடராசு. வேலாயுதாம் உனக்கு வெயில் வேனுமா நிழல் வேனுமா என்று தாத்தாவை பார்த்து கேட்டார். எனக்கு வெயில் தான் வேண்டும்,அப்போ தான் பக்கத்து வீட்டு சக்திவேல்,வசந்தாவுடன் கோலி,பம்பரம் ,ஆடு,மாடு மேய்க்க முடியும் என விளையாட்டு தனமாக ஒத்துகொண்டார். வேலாயுதமோ நடராசுவை பள்ளிக்கூடத்திற்கும், தாத்தாவை ஆடு,மாடு மேய்க்கவும் அனுப்பினார். இந்த கதையை இப்போதும் அப்பா என்னிடம் சொல்லியே என்னை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவார். தாத்தா படிக்கவில்லை என்றாலும் புத்திசாலி, நல்ல திறமை உடையவர். இப்போதும் ஏர் பிடிப்பதிலும் சரி,அருப்பு அறுப்பதிலும் சரி தாத்தாவிற்கு நிகர் யாரும் இல்லை எனவும், தாத்தாவின் மாடு அடக்கும் திறமையை வைத்தே அவரை கல்யாணம் கட்டிகொண்டதாகவும் பாட்டி என்னிடம் பல முறை சொல்லி இருக்கிறாள். சிவந்த மேனி, அடர்ந்த கோரை முடி, முகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மச்சங்கள், சுருங்கிய கண்கள்,காதோரம் லேசாக நரை, ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் சட்டை போடுவதால் லேசாக கருத்த நெஞ்சு, என இப்போதும் ஒரு கல்யாணம் பண்ணும் அளவிற்கு தாத்தா சோக்குதான்.
பாட்டி தாத்தாவிற்கு நல்ல ஜோடிதான். சிறுக,சிறுக சம்பாதித்த காசுகளை சேமித்து இரண்டு அத்தகளுக்கும் பதினைந்து பவுன் போட்டு சீர்,செனத்தையுடன் சிறப்பாகவே திருமணம் செய்து வைத்தார்கள். மகன்கள் இரண்டு பேருக்கும் இருந்த முந்திரி காடுகளை ஆளுக்கு நான்கு ஏக்கர் பிரித்து கொடுத்து, கொஞ்சம் வசதியான இடத்திலே திருமணம் முடித்து வைத்திருந்தார். தாத்தாவிடம் மீதம் இருந்தது இருபது ஆடுகளும் ,ஒரு ஏக்கர் மானியம் கொள்ளையும்தான் ,அதையும் மாடுகளுக்கு சோளம் விதைக்க அப்பாவும் சித்தப்பாவும் பயன்படுத்தி கொண்டதால் அந்த இருபது ஆடுகளே தாத்தாவிற்கு கடைசி சொத்தாக இருந்தது.அந்த ஆடுகள்தான் தாத்தா வீட்டை விட்டு போக காரணமாக இருக்கும் என அப்போதும் யாருக்கும் தெரியது.
இரண்டு இட்லி வைத்துவிட்டு சாம்பார் ஊத்தும் போதுதான் பஞ்சாயத்தை அம்மா ஆரமித்தாள். மேயுர நேரம் போக மீதி நேரத்துல இந்த ஆட்ட கட்டுற வேலை கிடையாது, என் தம்பி ஊட்டியில் இருந்து வாங்கி வந்த எட்டு ரோஜா செடிகளையும் மொட்டையா மேஞ்சிட்டுது,ஒரு குருத்து தழை கிடையாது, எப்ப பார்த்தாலும் சண்டகாரன் தோட்டத்து கள்ளகொடிய மேயுதுன்னு நேத்திக்கி அந்த மொக்கராசு வாயிலவராத வார்த்தையெல்லாம் பேசுறான். இப்படி லோல் படுறதுக்கு பேசாம அந்த ஆட்ட கறிக்கடை பாய் கிட்ட வித்துபுட்டாதான் என்ன என மூச்சிவிடாமல் பேசிமுடித்தால். தாத்தா சாப்பிடுவதை நிறுத்தியதை கவனித்தார் அப்பா . சண்டையை பெருசா மாத்த இரண்டு அத்தைகளும் பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு வந்தனர்.
ஏன்? ஏற்கனவே இருந்த சொத்தையெல்லாம் புடுங்கிகிட்டீங்க ,இப்ப ஆடுகளையும் விக்க சொல்லிட்டு அவர ஆண்டியா போக சொல்றீகங்களா என சின்னத்தை போட்டு தாக்கியது. அது குரலுக்கு காரணம் மானியம் கொள்ளைய வித்துட்டு ரெண்டு பிரிட்ஜ் ,பெருசுக்கும் தனக்கும் வாங்கி கொடுக்க சொல்லி தாத்தாகிட்ட சொல்லுச்சி ,அம்மா தான் மாடுகளுக்கு தீணிக்கி என்ன பண்றதுன்னு கேட்டு அத விக்க விடாம செய்தாங்க. அதனால அம்மா மீது ரெண்டு அத்தைகளுக்குமே கோவம் . எப்படா சண்டை வரும்னு பார்த்துகிட்டு இருந்தாங்க. அத்தை பேசினத கேட்டு சித்தப்பா மாடியில இருந்து இறங்கி வந்தார். அம்மா அதோடு எதுவும் பேசவில்லை மேலும் பேசினால் சண்டை வரும்னு அம்மாவுக்கு தெரியும் .
சித்தப்பாவிற்கும் அந்த ஆடுகள் ஆடுகளாக இருப்பது பிடிக்கவில்லை. அதற்கு பதில் அந்த ஆடுகளை விற்று வரும் பணத்தில் ஒரு தங்க செயின் தன் மகனுக்கு எடுத்து போடும் படி சொல்லிக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் ராமலிங்கத்தின் முதல் பேரனாக நான் பிறந்தேன். அந்த சந்தோசத்தில் தாத்தா எனக்கு இரண்டு பவுனில் தங்க செயின் போட்டார் ,அது இப்போதும் என் கழுத்தில் இருப்பதால் சித்திக்கு கொஞ்சம் நமச்சலாகவே இருந்தது. அதனால் தான் சித்தப்பாவிடம் இப்படி ஒரு யோசனையை சொல்லி  இருந்தாங்க. சரியான நேரம் பார்த்து சித்தப்பாவும் தாத்தாகிட்ட கேட்டார். அவன் மட்டும்தான் பேரனா? என் மகன் பேரன் இல்லையா? அவனுக்கு மட்டும் பதினைந்து வருசத்துக்கு முன்னாடியே ரெண்டு பவுன்ல செயின் போட்டீங்களே என் மகனும் பொறந்து எட்டு வருசம் ஆகுது ,அவனுக்கு ஒரு அரனாகயிருகூட நீங்க எடுத்துபோடல என் மாமனார் வீட்டுல என்ன நெனைப்பாங்க என தன் பங்கிற்கு ஞாயத்தை சொன்னார்.
இடையில் பாட்டி ஏண்டா ஆளாளுக்கு அவர பிச்சி திங்கிறீங்க ,அவரு போறப்ப எல்லாத்தையும் எடுத்துகிட்டா போக போறாறு! எல்லாமே என்னைக்கி இருந்தாலும் உங்களுக்கு தாண்டா ,நான் இந்த வீட்டுக்கு வந்து ஐம்பது வருசம் ஆகுது எனக்குன்னு ஒரு தாலி சரடு கூட தங்கத்துல கிடையாது உங்களுக்கு தான் எல்லாமே புரிஞ்சிக்கிங்க என அழுதது.
அந்த ஆடு இருக்கறதுனாலதானே இவ்வளவு பிரச்சனையும், பேசாம ஆளுக்கு நாலுன்னு பிரிச்சி கொடுத்துடுப்பா என பெரிய அத்தை யோசனை சொன்னது.
கையை கழுவி விட்டு தாத்தா பேச ஆரமித்தார். என் நாலு புள்ளைங்களும் நல்லா பேச கத்துகிட்டுது . நான் அந்த ஆடுகள் எதையும் எனக்குன்னு வச்சிருக்கல, எல்லாமே உங்களுக்குதான் வச்சிருக்கேன். ஊருல நாலு பேரு ராமலிங்கம் அவ்வளவு சம்பாதிச்சிட்டு எல்லாத்தையும் புள்ளைங்க கிட்ட கொடுத்துட்டு வெரும் ஆளா இருக்காண்டா என யாரும் பேச கூடாது,அது மட்டும் இல்ல, என்கிட்ட  ஐம்பது ஆயிரம் முதல் இருக்கும்போதே ஆளாளுக்கு இந்த பேச்சி பேசிறீங்களே அதுவும் என் கிட்ட இல்லைனா என்ன எவண்டா பெத்த அப்பனா நெனைப்பீங்க? என அழுதுகொண்டே ஆடுகளை அவிழ்த்து மேற்கே புறப்பட்டார். எல்லோரும் மேய்ச்சலுக்குதான் போகிறார்  என நினைத்துக்கொண்டு அவரவர் வேலையை பார்க்க கிளம்பிவிட்டனர். எனக்குதான் தெரியும் தாத்தாவின் கண்கள் ,வெறுப்பையும் வாழ்வின் மீது இருந்த சோகத்தையும் எனக்கு காட்டியது. அவரை பின் தொடர்ந்தேன். அன்று ஞாயிறு . கல்லங்குறிச்சி மாட்டு சந்தை . ஒரு வேலை அங்குதான் போகிறார் . நல்லது ஆடுகள் விற்றால்தான் வீட்டில் பிரச்சனை தீரும் என நானும் பின்னே போகவில்லை.
பொழுது சாய்ந்தும் தாத்தா வீட்டிற்கு வரவில்லை என்னையும் அப்பாவையும் தவிர வேரு யாருக்கும் கவலை இருப்பதாக தெரியவில்லை. ஆணியில் இருந்த சட்டையை மாட்டிக்கொண்டு என்னையும் அழைத்துகொண்டு வண்டியில் பெட்ரோல் போட்டுகொண்டு  புறப்பட்டோம்.
அப்பா தாத்தா கல்லங்குறிச்சி சந்தைக்கு தான் போயிருப்பார் என சொன்னேன். அப்பாவும் கல்லங்குறிச்சி க்கு வண்டியை செலுத்தினார். இடையில் ஒரு பாட்டி வண்டியை மறித்தது . பார்த்தால் ஊர்க்கார பாட்டிதான் . என்ன அத்தை என அப்பா கேட்க. ஒப்பனையா தேடிகிட்டு போறீங்க என கேட்டது அந்த பாட்டி. அப்பாவும் ஆமாம் என சொல்ல கடைசியில அவன இந்த நிலைமைக்கு கொண்டுவந்துட்டீங்க என சொல்லுச்சி . அப்பா பதட்டத்துடன் அய்யாவ பார்த்தியா அத்தை என கேட்டார். உங்க அப்பன் கல்லங்குறிச்சி கோவில்ல ஆண்டியா ஒக்கார்ந்து இருக்கான் நான் எவ்வளவு கூப்பிட்டும் வரல போயி எப்படியாவது கூட்டிகிட்டு வா என சொல்ல அப்பா வேதனை தாங்காமல் வண்டியை வேகமாக ஓட்டினார். கோவிலுக்கு சென்றபோது மணி பத்தாகி இருந்தது .தாத்தா தாத்தா என வேகமாக கத்திக்கொண்டு நான் சுத்திசுத்தி வந்தேன். அப்பாவும் கிழக்கு வாசல் வழியாக சன்னதிக்குள் புகுந்து சாமியார் திண்ணை அருகே தேடிக்கொண்டிருந்தார். திண்ணைக்கு பக்கத்தில் ஒரு தூணின் ஓரத்தில் தாத்தாவை போலவே ஒரு உருவம் அழுதபடி கிடந்தது . அருகில் அப்பா செல்ல இங்க ஏண்டா வந்த ,நீங்க நாலு பேரும் எனக்கு பொறந்தது உண்மைனா எவனும் என்ன தேடிக்கிட்டு வரக்கூடது என கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த அனைவரும் விழித்துகொள்ள,அப்பாவின் கண்களில் இருந்து தண்ணீர் தார தாரையாக சிவனின் சன்னிதியில் ஓடிக்கொண்டிருந்தது. முடிந்த வரையில் அருகில் இருந்த அனைவரும் சமாதானம் சொல்லி பார்த்தனர் . அந்த ராமலிங்க கிழவர் கேட்டமாட்டேன் என பிடிவாதமாக இருந்தார். நானும் அப்பாவும் கிளம்பி வீட்டிற்கு வந்துவிட்டோம், சேதி அறிந்த சொந்த பந்தங்கள் விடிந்தும் விடியாததுமாக வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். அதிலும் குறிப்பாக அனைவரும் அப்பாவையே திட்டி தீர்க்கின்றனர். தாத்தாவை அழைக்க நான் மீண்டும் போக போகிறேன்..

No comments:

Post a Comment