Tuesday, 17 June 2014

Story 9: குடைக்குள் பிணம்

குடைக்குள் பிணம் 

‘ஏங்க எத்தனை மணிக்கு எடுப்பீங்க’, ‘இன்னொரு பத்து நிமிஷம் சார் உள்ள உட்காருங்க  சார்’.  என் நண்பனின் தந்தை இறந்துவிட்டார், அவரின் ஈம சடங்கில் கலந்துக்கொண்டு நண்பனுக்கு ஆறுதல் சொல்லி, பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறேன். (அலைபேசியில் யாரோ கூப்பிடுகிறார்கள்) ‘ஹலோ சொல்லுமா’, ‘ஆ.... பஸ் ஏறிட்டேன்மா இன்னும் ஒரு டூ ஹவர்ஸ்ல அங்க இருப்பேன்’, ‘நீங்க எல்லாரும் சாப்பிட்டிங்களா’, ‘புஜ்ஜு குட்டி என்ன பண்றா’. ‘தூங்கிடாளா’, ‘ஒன்னுமில்லைமா நேத்து எல்லாம் நல்லாதான் இருந்தாங்களாம் இன்னைக்கு காலைல நெஞ்சு வலிக்குதுனு சொன்னாராம் ஆஸ்பத்திருக்கு கூட்டி போகும்போதே போயிட்டாராம்’, ‘ஆமா ஹார்ட் அட்டாக்தான்’, ‘ரொம்ப நல்ல மனுஷன்மா எத்தனை பேரு வந்திருந்தாங்க தெரியுமா’, ‘அம்மா’, ‘தூங்கிட்டாங்களா’, ‘சரி நா வெக்குறேன் அங்க வந்து கால் பண்றேன்’, ‘ம்ம்ம் ஓகே’.

பஸ் புறப்பட ஆரம்பித்ததும் சற்று களைப்பாக இருந்ததால், காலை நீட்டி கொஞ்சம் உடம்பை சரிந்து தலையை ஜன்னல் பக்கமாக சாய்த்து கண்களை மூடினேன்.

    தூக்கத்தில் இருந்து முழித்துக்கொண்டவுடன், வலதுபுறம் திரும்பி சாமி படம் பார்த்து விட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும் என்று என் அம்மா சொல்லி இருக்கிறார். இன்றும் அவ்வாறே செய்துவிட்டு, அம்மாவிடம் ஓடிபோய் ‘ அம்மா நேத்து ராத்திரி அப்பா, திங்க என்ன வாங்கி வந்திருக்காருஜாங்கிரியா, ஹனி கேக்கா’ என்று கேட்பேன். ஆம் எனக்கு ஜாங்கிரி, ஹனி கேக் என்றால் ரொம்ப பிடிக்கும். அப்பா தினமும் வேலையை முடித்து வருவதற்குள் இரவு ஒன்பது, பத்து மணியாயிடும், அதற்குள் நானும் என் தம்பியும் தூங்கிவிடுவோம். அப்பா வேலையை முடித்து வரும்பொழுது எனக்கு பிடித்த ஜாங்கிரி அல்லது ஹனி கேக் வாங்கி வந்து என் தலையணைக்கு கீழே வைத்துவிடுவார். நான் காலையில் எழுந்ததும் பல் கூட தேய்க்காமலேயே தின்று தீர்ப்பேன், அதற்குள் அப்பா வேலைக்கு சென்றிருப்பார்.
    
     இந்த ஜாங்கிரி தின்னும் மோகம் நான் பள்ளிக்கு சேர்ந்தும்தொடர்ந்தது. எங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு பள்ளியில் என்னை ப்ரீ.கே.ஜி யில் சேர்த்தனர். பள்ளிக்கு சேர்ந்தப்பிறகு என் அம்மா, அப்பா இரவு வாங்கிவரும் தீனியை ஒரு பிளாஸ்டிக் பாக்ஸில் வைத்துக்கொடுப்பார்கள். ப்ரீ.கே.ஜி என்பதால் அரை நாள்த்தான் பள்ளி வேலை நேரம் அதில் மத்தியில் ஒரு பதினைந்து நிமிடம் இடைவேளை, அந்த பதினைந்து நிமிட இடைவேளையில் தான் அம்மா கொடுத்தனுப்பியதை திங்கமுடியும். நான் பள்ளிக்கு சென்றவுடன் எப்போடா இடைவேளை வருமென்று காத்திருப்பேன். சில நேரங்களில் இடைவேளை வரை காத்திருக்க முடியாமல், ஆசிரியயை வகுப்பில் மிக பாந்தமாக ஏ பார் அப்பிள், பி பார் பால் என்று சொல்லி கொடுக்கும்பொழுது நான் ஜே பார் ஜாங்கிரி என்று ஆசிரியயைக்கும், பக்கத்தில் இருக்கும் சக மாணவர்களுக்கும் தெரியாமல் ருசித்துக் கொண்டிருப்பேன். அந்த சிறு வயதிலையே எத்தனை போராட்டம் ஒரு ஜாங்கிரி திங்க! பலமுறை மாட்டிக்கொண்டு அடி வாங்கிய கதையல்லாம் உண்டு.

     எனக்கும் என் தம்பிக்கும் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. அதுவும் திங்கறதில் தான், ஜாங்கிரி, ஹனி கேக் போயி இப்போ பார்லே-ஜி பிஸ்க்கெட் வந்து சேர்ந்தது. காலையில் எழுந்தவுடன் இருவரும் இரண்டு பிஸ்கெட் பாக்கெட்களை வாங்கி கொள்வோம். அந்த பாக்கெட்டில் உள்ள முழு பிஸ்கெட்களையும் யார் கடைசியாக தின்று தீர்ப்பது என்பதுதான் எங்களுக்கான போட்டி. பிஸ்கெட்களை பாலில் தொட்டுக்கொண்டும், பாலில் கலந்து அரைத்துக்கொண்டும், மெதுவாக அனைத்து பிஸ்கெட்களையும் காலி செய்வோம். என் தம்பி அனைத்தையும் தின்றுவிட்டான் என்று நினைத்து, நான் என் சட்டை பையிலிருக்கும் என் கடைசி பிஸ்கெட்டை மெதுவாக வெளியே எடுத்து என் தம்பியிடம் காண்பித்து அவனை வெறுப்பேத்தி என் கடைசி பிஸ்கெட்டை சாப்பிட்டு முடிப்பேன். அதுவரை அமைதியாக இருந்த என் தம்பி தன் ட்ரவ்சர் பையில் கைவிட்டு தன் கடைசி பிஸ்கெட் இன்னும் இருக்கிறது என்று காண்பிப்பான். எனக்கோ கடும் கோபம் வந்து அவனிடம் இருக்கும் அந்த கடைசி பிஸ்கெட்டை பிடிங்கி தின்ன அவனை துறத்திக் கொண்டு ஓடுவேன். பெரும்பாலான நேரம் என் தம்பிதான் இந்த போட்டியில் ஜெயிப்பான்.

     இப்படியே பல நாட்கள் கடந்தது எங்கள் இருவரின் காலை வேலை. அதன் பிறகு ஒரு புது விளையாட்டை கண்டுபிடித்தோம். காலையில் எழுந்தவுடன் தெருவுக்கு சென்று ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு கற்களால் அடித்துக்கொள்ள வேண்டும்,  யார் அதிக முறை அடி வாங்குகிறார்களோஅவருக்கு இரண்டு பிஸ்கெட்களை பரிசாக கொடுக்க வேண்டும். எவ்வளவு சுவாரஸ்யமான விளையாட்டு பாருங்கள், இதிலும் என் தம்பிதான் அதிக முறை வெற்றி பெற்றுள்ளான். 

     ஒரு காலை வேலையில் நானும், தம்பியும் வீர விளையாட்டுகளை ஆடி களைத்து வீடு திரும்பினோம். அப்போ வீட்டின் சமயலறையிலிருந்து ஏதோ சப்தம் வந்து கொண்டிருக்க, நானும் என் தம்பியும் அடி மேல அடி வைத்து சத்தம் கசியாமல் சமயலறை அருகே சென்று எட்டி பார்த்தோம். அங்கே அப்பா அம்மாவை தன் பின் புறமாக கட்டி பிடித்து கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தார். இதை பார்த்த என் தம்பி என்னை பார்த்து கேட்டான், ‘டேய் ரெண்டு பேரும் என்னடா பண்றாங்க’, நானும் வெகுளியாக ‘டேய் ரெண்டு பேரும் சண்டை போடுறாங்க டாஎன்று சொன்னேன். நாங்கள் இருவரும் ஒழிந்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதை அம்மா பார்த்துவிட, ‘ஏங்க குழந்தைங்க பாக்கறாங்க விடுங்க நேரங் கெட்ட நேரத்துல’ என அப்பாவை தள்ளி விட்டார். அப்பா எங்களை நோக்கி, ‘டேய் இங்க என்னடா பண்றீங்க’ என துரத்திக் கொண்டு வந்தார். எங்களை பிடித்தவுடன் தம்பி அப்பாவின் மீசையை பிடித்து இழுத்து, ‘ஏம்பா இன்னைக்கு வேலைக்கு போல’ என வினவினான். அப்பா மீசையை உரசியபடி, ‘இல்லடா டிபன் சாப்பிட வந்தேன், டேய் உங்க அம்மா எனக்கு ஒழுங்காவே சாப்பாடு போட மாட்டேங்குறா அம்மாவ கொஞ்சம் என்னானு கேட்க மாட்டீங்களா’ என சிரித்தார். என் தம்பியும், ‘ஏ மா அப்பாவுக்கு ஒழுங்கா சாப்பாடு போடமாட்டியா’ என முறைத்தான். ‘ஏங்க டிபன் ரெடி ஆயிருச்சு சாப்பிட்டு சும்மா கிளம்புங்க’ என கடித்தாள். என் பக்கம் கை நீட்டி ‘மதியம் இவன் கிட்ட சாப்பாட்ட குடுத்து அனுப்புறேன் நீங்க ஒன்னும் வர வேண்டாம்’ என்றாள் அம்மா. அப்பா கேட்டதில் இரட்டை அர்த்தம் இருப்பது இப்போ தான் புரிகிறது எனக்கு.

      அன்று மாலை கன மழை பெய்ய தொடங்கியது. வீட்டினுள் மழை நீர் வராமல் இருக்க வாசகாலின் குறுக்கே தடுப்பு சேலை கட்டினாள் அம்மா. அம்மா திட்டி கொண்டே இருக்க நானும், தம்பியும் வாசல் கால் அருகே தடுப்பு சேலைக்கு பின் நின்றுக் கொண்டு கையை வெளியே நீட்டி மழை நீரை ஒருவர் மீது ஒருவர் அடித்து ஆடிக்கொண்டிருந்தோம். மழையில் நனைந்த படியே பதற்றத்துடன் ஓடி வந்த என் ஆண்ட்டி அம்மாவிடம், ‘ஐயோஅம்மா, உங்க வீட்டுகாரரும்  நாநா வும் (ஆண்ட்டியின் கொழுந்தனார்) ஆட்டோல போயிட்டிருந்த போது ஆக்ஸிடண்ட் ஆயிருச்சு மா’, ‘ஐயோ, எங்க, எந்த இடத்துல, இப்போ எங்க இருக்காங்க’, ‘வெங்கடேஸ்வரா தியேட்டர் கிட்ட வந்துகிட்டிரும் போது லாரி வந்து, இப்போ இங்க கவர்மெண்ட் ஆஸ்பிடல்ல தான் இருக்காங்க நீ சீக்கிரம் வா மா’. அம்மா அழுதபடியே எங்களை பக்கத்து வீட்டில் இருக்கும் அக்காவிடம் விட்டு இங்கேயே இருக்கும் படி சொல்லி மழையில் நனைந்து கொண்டே ஓடினாள்.

     எனக்கும் என் தம்பிக்கும் சற்று நேரம் இங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஏன் அம்மா அப்படி ஓடினாள், அப்பாவுக்கு என்ன ஆச்சு, ஆக்ஸிடண்ட்னா என்ன, இப்படி பல கேள்விகள் என் மனதில் ஓடி கொண்டிருந்தது. இரவு ஆக பசியால் நான் அழ ஆரம்பித்தேன், என் பக்கத்தில் இருந்த அக்கா, ‘அழாதடா அப்பாவுக்கு இப்படி ஆயிருச்சேனு அழுகறீயா ஒன்னுமில்ல ஒன்னுமில்ல’ என்று என் தலையை நீவியபடி ஆறுதல் சொன்னாள். அப்பாவுக்கு என்ன ஆயிருச்சு, நான் அதுக்கு அழவில்லையே, அப்படி ஏதாவது ஆனால் அழணுமா, இப்படி என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். இரவு யாரும் வராமல் போக அக்காவுடனே தூங்கிவிட்டோம். 

     காலையில் முழித்ததும் நேற்று நடந்த விஷயங்கள் நினைவுக்கு திரும்பின. அக்காவிடம் அம்மாவை பற்றி விசாரித்தபோது அக்கா அழ ஆரம்பித்தாள். என்னையும் தம்பியையும் அருகில் இருந்த என் ஆண்ட்டி வீட்டிற்கு அழைத்து சென்றாள் அக்கா. அங்கு சென்று பார்த்தபோது நிறைய பேர் கூடி இருந்தார்கள், அம்மாவும் இருந்தாள், கன்னம் செவக்க செவக்க அழுது கொண்டிருந்தாள். சுத்தி இருந்தவர்களும் அதையே செய்து கொண்டிருந்தனர். எங்களை பார்த்தவுடன் அம்மா இன்னும் கேவி கேவி அழ ஆரம்பித்தாள். அம்மாவிடம் சென்ற போது அப்பா இறந்துவிட்டதாக சொன்னாள். அதை கேட்டதும் உடனடியாக என்னில் உதைத்த கேள்வி, இறப்பா அப்படி என்றால்? இறந்துவிட்டால் இப்படி கோரமாக அழ வேண்டுமா? அங்கே இருந்த அனைவரும் என்னையும் தம்பியையும் கட்டிபிடித்து அழ ஆரம்பித்தனர். அட மூடர்களே எதுக்குடா இப்படி கதற கதற அழுகுறீங்க என இவர்களை பார்த்து கேட்க தோன்றியது. அம்மா அழுவதை பார்த்து தம்பியும் அழ ஆரம்பித்தான். எனக்கு அழ விருப்பமில்லை, அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.

     சற்று நேரம் கழித்து தம்பி வந்து அம்மா கூப்பிடுவதாக சொல்லி அழைத்து சென்றான். இவர்கள் இன்னும் அழுவதை நிறுத்தியப் பாடில்லை. அனைவரும் கவர்மெண்ட் ஆஸ்பிட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். ஆஸ்பிட்டல் வெளியில் ஒரு பெரிய லாரி நின்றுகொண்டிருந்தது, அதை பார்த்ததும் அதில் அமர வேண்டுமென பிரியபட்டேன். ஏதோ வெள்ளை துணியால் கட்டிய இரண்டு மூட்டையை தூக்கி வந்தார்கள். ஆஸ்பிட்டலின் வாசலில் கொஞ்ச நேரம் கீழே வைத்திருந்தார்கள், அப்போதுதான் கவனித்தேன் அது என் அப்பாவும், நாநாவும் என்று. முகம் தவிர மற்ற அங்கங்களை வெள்ளை துணியால் சுற்றியிருந்தனர். ஏன் இப்படி சுற்றியிருக்கிறார்கள், ஓ இறந்துபோனால் இப்படிதான் செய்வார்கள் போல. இருவரையும் அருகில் நின்றுகொண்டிருந்த லாரியில் ஏற்றினார்கள். எனக்கு ஆர்வம் அதிகமானது எப்படியாவது இன்னைக்கு அந்த லாரியில் ஏறிவிட வேண்டுமென்று.

     அவர்களை ஏற்றியவுடன் லாரி நகர ஆரம்பித்தது. என் அருகில் வந்த என் பெரியப்பா என் கையை பிடித்து லாரிக்கு முன்புறமாக அழைத்து சென்றார். லாரி மெதுவாக உருள, அதை திரும்பி திரும்பி பார்த்தபடியே பெரியப்பாவின் கையை பிடித்து மெதுவாக நடந்து வந்தேன். என் தம்பியை லாரியின் முன் சீட்டில் ஏற்றுவதை பார்த்து, நானும் பெரியப்பாவிடம் என் விருப்பத்தை தெரிவிக்க என்னையும் ஏற்றினார்கள். உள்ளே ஏறியதும் எனக்கு அளவில்லாத சந்தோஷம் தொற்றிக்கொண்டது. லாரியின் முன் இருக்கையில் அமர்ந்து இந்த ஊரை சுற்றி வர போகிறோம் என நினைத்து நானும் தம்பியும் படு குஷியானோம். 

     அப்படியே சுற்றி பார்த்தபோது, கட்டிடங்களின் மேல் நின்றபடி அனைவரும் எங்கள் லாரியையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வபோது பின் நோக்கியும் திரும்பி பார்த்தேன். கடல் போல மக்கள் எங்கள் லாரியையே பின் தொடர்ந்து வந்தனர். எவ்வளவு பேர் என்று தெரியவில்லை, கண்டிப்பாக நிறைய பேர்தான். அப்படி என்ன விஷேசம் இருக்கு இந்த லாரில. அப்படிபட்ட ஏதோ ஒரு விஷேசமான வாகனத்தில் தான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என நினைக்கும்போது இன்னும் உற்சாகம் ஆனேன். ஏதோ ஒரு இடத்தில் லாரி நிற்க, இறங்க சொன்னார்கள். இருவரையும் இறக்கி வைத்து புல், முற்கள் அடர்ந்த பாதையில் நடக்க சொன்னார்கள், எங்கள் பின்னே அப்பாவையும் நாநாவையும் கொண்டுவந்தனர். யாரோ முன்னரே இரண்டு குழிகள் அமைத்திருந்தனர். ஏதேதோ பூஜைகள் செய்து இருவரின் நெற்றி பொட்டில் வைத்திருந்த காசை எடுத்து அந்த குழிகளில் இறக்கினர். எனக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இப்படி செய்கிறார்கள். அனைவரையும் அழைத்து, மூன்று முறை மண்னை கையில் கொண்டு குழியினுள் போட சொன்னார்கள். நானும் இது என்ன விநோத விளையாட்டு என நினைத்து படு உற்சாகமாக, மணலை வாரி போட்டேன். எல்லாரும் அப்படி செய்தபிறகு மணல் முழுவதையும் சரித்து என் அப்பா இருந்த குளியை மூடினார்கள். முழுவதும் மூடிய பிறகு ஒருவர், யாரும் திரும்பி பார்க்காமல் வீடு சேருமாரு கட்டளை இட்டார்.

     அன்று இரவும் கன மழை பெய்ய தொடங்கியது. உறவினர்கள் அங்கங்கே அமர்ந்தபடி ஏதேதோ பேசி கொண்டிருந்தனர். அம்மாவை கவனித்தேன், இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை. வழக்கம் போல நானும் தம்பியும் வாசல்கால் அருகே நின்றிருந்தோம், ஆனால் மழை நீரில் விளையாடவில்லை. திடீரென்று என் தம்பி ஏதோ அறிந்தவனாக அம்மாவிடம் ஓடி போய், ‘அம்மா, அங்க அப்பா படுத்துக்கிட்டு இருக்காருல்ல மழைல நனையமாட்டாரா, நாம போயி அவர் நனையாதபடி குடைய வெச்சுட்டு வருவோமா’ என்று கேட்டவுடன் அம்மா மீண்டும் அழ ஆரம்பித்தாள். அவன் அப்படி கேட்டதும்தான் எனக்கும் எல்லாம் புரிய ஆரம்பித்தது, நானும் ஓடி போய் அம்மாவை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தேன்.

     தலையை ஜன்னலோரமாக சாய்திருந்ததால் மழை சாரல் முகத்தில் பட முழித்துக் கொண்டேன். ஏனோ இன்று என் ஏதும் அறியா வயதில் என் அப்பா இறந்த போது நடந்த சம்பவங்கள் நினைக்க தோன்றியது. என் மனைவி அலைபேசியில் அழைக்கிறாள். ‘ம் சொல்லு மா’, ‘ஆ கிட்ட வந்துட்டேன்’, ‘அப்படியா முழிச்சுகிட்டாளா என் தங்கம் டி அவ என்ன பிரிஞ்சு ஒரு நாள்கூட துங்கமாட்டா’, ‘ ஆ உனக்கு பொறாமை டி, அவ கிட்ட குடு’, ‘புஜ்ஜீ குட்டி அப்பா கிட்ட வந்துட்டேன் டா வரும்போது உனக்கு திங்க என்ன வாங்கி வரட்டும் சொல்லு’, ‘ஹனி கேக்கா வாங்கி வரேன் இன்னும் கொஞ்ச நேரம் வந்துடுவேன் அம்மா கிட்ட குடு’, ‘ம்ம்ம்மா’, ‘ஆ சரிமா கிட்ட வந்துட்டேன் சீக்கிரமா வந்துட்றேன்’, ‘சரி மா வெக்குறேன்’. நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. 

     மழை நின்றபாடில்லை, ஹனிகேக்கையும், ஜாங்கிரியையும் (இது எனக்கு) வாங்கி கொண்டு மழையில் நனைந்தவாறேவீட்டை நோக்கி நடந்தேன். வீட்டின் அருகே நெருங்கும் போது கவனித்தேன், என் வீட்டிற்கு வெளியே நின்றபடி என் புஜ்ஜீ குட்டி இந்த மழையில் குடையை பிடித்து என்னை வரவேற்க காத்திருந்தாள். அதை பார்த்ததும் இந்த மழை நீரில் என் கண்ணீரும் கலந்தது.      


No comments:

Post a Comment