Tuesday, 17 June 2014

Story 12: பட்டாம் பூச்சிகளும் பூக்களும்

பட்டாம் பூச்சிகளும் பூக்களும் :-
*********************************

வண்ணத்துப் பூச்சிகள் பல வண்ணங்களில் பறந்து கொண்டிருந்தன.தோட்டம் முழுமைக்கும் எந்த வாசனைப் பூவில் எந்த மாதிரித் தேன் இருக்கும் என கணித்தது போல ஒவ்வொரு பூவின் அருகிலும் சென்று ஒவ்வொரு மொழியில் பேசிக் களித்துக் கொண்டிருந்தன. அந்தப் பூக்களும் அதை ரசித்தது போல சிரித்துக் கொண்டிருந்தன., இரவானதும் வாடினாலும் தினமும் புதிது புதிதாய் பூக்களை உண்டுபண்ணும் செடிகளில் அமர்ந்தபடி அரசோச்சும் தங்கள் ஸ்தானத்தை பெருமிதமாய் நினைத்தது போல.


    எத்தனை கதாநாயகிகள் பார்த்தாலும் அத்தனை பேரோடும் கூடிக் களிக்கும் கதாநாயகர்களின்  மனநிலையில் வண்ணத்துப் பூச்சிகள் சுற்ற உணர்ந்த பூக்களுக்கும் தெரியும் இந்த மயக்கம் எல்லாம் தேனிருக்கும் வரை மட்டுமே. பளபளப்பு தீர்ந்தவுடன் கசங்கிய ஜிகினா காகிதமாய் குப்பையாய் வாடிப் போய் விடுவோம் என்று.  .


    இஷ்டப்பட்ட பூக்களில் தேனை உறிஞ்சியவாறு பூச்சிகள் பலவும் சுற்ற அந்த மயக்கத்தையும் ஆழ்ந்து அனுபவித்தபடி இருந்தன பூக்கள். ஒன்றையே வட்டமிட்ட சிலவும், கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருந்தன.  ஆளமுடியாத அழகுப் பூக்களை கிறங்கடிப்பதில்தான் அவற்றுக்கு மகிழ்ச்சி  ஒரு சவாலை சந்தித்து வெற்றியடைந்ததாய் . இதை எல்லாம் தன்னுடைய ஸ்க்ரிப்ட்டில் குறித்தபடி இருந்தாள் சக்தி


    ஒரு விளம்பரப்படத்தில் ஹீரோயினைச் சுற்றி சில வண்ணத்துப் பூச்சிகள் பறக்க எடுக்கவேண்டிய குறிப்புகளுக்காக இந்த பூக்கள், வண்ணத்துப் பூச்சி காட்சிப் படிமத்துள் ஆழ்ந்திருந்தாள். அது வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு தனி வீடு.  . அப்போது மார்க்கெட் சிறிது இறங்கி இருந்த ஒரு பிரபல நடிகையான ஷீதள் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாள். அவளின் சினிமாவை விட விளம்பரம் மிக அழகாய் வந்து கொண்டிருந்த காலகட்டம். சினிமா, விளம்பரம் என்று எல்லாம் பிரிக்காமல் எது எது எல்லாம் வருமானம் தருகிறதோ அதை அதை எல்லாம் அவளின் சித்தி ஒப்புக் கொண்டதால் தட்டாமல் அவள் நடித்து வந்தாள்.


    நல்ல நடிகை என்று பெயரை நிலை நிறுத்தி விட்டால் போதும் சில காலகட்ட கஷ்டத்துக்குப்பின் பெரிய அளவு அங்கீகாரமும் , புகழும்  மரியாதையும் கிடைக்கும். அதற்கு கொடுக்கும் விலை சில சமயம் உடலாகவும் , சில சமயம் தன்மானமாகவும் இருக்கும்.  இந்த கஷ்டம் பிரபலமடைந்து விட்டால் குறைந்துவிடும். பின்னர் பலர் சுமக்க தான் செல்லலாம். பல்லாக்கில் போவது போல. ஏதோ ஒரு இடத்தில் ஒரு படத்தில் பயங்கர அடி வாங்கி விட்டால் பின் இறங்கி நடக்க வேண்டியதுதான்.


    சக்தி பெருமூச்சு விட்டாள் நான் யார் என்ற பெருமிதத்தை எல்லாம் இது உடைத்து விடுகிறதே. உயிர்வாழ கிடைத்த வாய்ப்பை  எல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறதே. வயிற்றை விட  எதுவுமே பெரிதல்ல. இன்னும் இயக்குநர் வரவில்லை. இதை ஒருமுகப்படுத்தி  நடத்தும்  பார்க்கவி மேடமும் இன்னும் இந்த விளம்பரப் பட ஷூட்டிங்குக்கு வரவில்லை. எல்லாரும் வரும் முன் வந்து இருக்க வேண்டியது சக்தியின் பொறுப்பு . முன்பு ஒரு பிரபல டைரக்டரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்து வந்தாள். வாழ்க்கை சக்கரம் ஓட ஒன்றன் பின் ஒன்றாக ஒரு பத்ரிக்கை, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என மாறி இப்போது இந்த விளம்பரப் பட இயக்குநரிடம் பணி புரிந்து வந்தாள்.


    பெரிய இயக்குநராக வேண்டும் என்ற கனவிருந்தும் வாழ்க்கை துரத்துகிறதே.. வருமானம் என்னும் பிடிமானமில்லாமல் எதைக் கொண்டு எதை ஓட்டுவது. கனவில் பாட்டுப் பாடினாலும் கொசு வந்து கெடுத்து விடுகிறது. ஒரு பெண் இயக்குநராகவும். நடிகையாகவும் ஒன்றும் வித்யாசமில்லை. அதற்கு உடல் பளபளப்பு, வடிவம் முக்கியம். இன்றைய வெகுஜனம் நடிப்பை விட உருவங்களின் அழகுக்குத்தானே மயங்குகிறது. உடனடி ரெஸ்பான்ஸ் என்பது அதற்குத்தான். அப்படி அழகாய் இருப்பவளுக்கு நடிக்கத்தெரிந்தால் அது போனஸ் தகுதிதான்.


    இயக்குநர் ஒரு நல்ல கதை சொல்லியாக இருக்க வேண்டும்.அந்தக் கதை மக்கள் மனதை அசைக்க வேண்டும். அல்லது ஆட்டுவிக்க வேண்டும். இப்போது எல்லாம் விளம்பரம், ஆடம்பரம், டெக்னிக் இதுதான் ஒரு கமர்சியல் சினிமாவை வெற்றிக்குள்ளாக்குகிறது. அதற்கு தொலைக்காட்சிகளில் ப்ரமோ நிகழ்ச்சிகள் வேறு. தான் , தன் கதையை மட்டும் சொல்லி ஒரு தயாரிப்பாளரை சினிமா தயாரிக்க சம்மதிக்க வைப்பது ப்ரம்மப் பிரயத்தனம்தான். வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்த பெரிய பெரிய அனுபவங்கள் விசிட்டிங் கார்டு போல தேவைப்படுகின்றன சினிமாவில் கோடிகளால் காட்சிகளை அமைப்பவர்கள் மனதை கவர்வதற்கு.  சினிமா என்பது பலகோடி மூலதனத்தில் எடுக்கப்படும் ஒரு கேளிக்கை வியாபாரம். அதன் ஒவ்வொரு நிமிடமும் மீட்டர் வட்டிகளால் அளக்கப்படுகிறது.வட்டி கட்ட முடியாத சில தயாரிப்பாளர்களின் தூக்குக் கயிற்றாலும்.


    இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது . இருந்தும் இன்று ஷூட் எடுக்க தேவையான பொருட்கள், ஆட்கள், எல்லாம் சரியாக டைரக்டர் வரும்முன் வருகிறார்களா என பார்த்து அவர் வரும் நேரம் ரெடியாக வைக்க வேண்டியது அவள் பொறுப்பு. பார்கவி மேடத்திற்கு போன் செய்தால் எடுக்கவேயில்லை. நேத்து ஏதாவது பார்ட்டியாய் இருக்கலாம். பல தொழில் செய்யும் அவருக்கு ஏதோ ஒரு கூட்டம், பார்ட்டி இருந்திருக்கக்கூடும். இன்னும் ஒரு மணி நேரத்துக்குப் பின் போன் பேசலாம் என்று காஸ்டியூம் டிசைனர் ராதாவுக்கு போன் செய்தாள். அவள் வண்டியில் வந்துகொண்டிருக்கலாம். கொர கொர வென்ற சத்தத்தோடு வந்துட்டே இருக்கேன் சக்தி என்றாள்.


    காமிராமேன்  ராகவன் வீட்டின் பக்கத்தில்தான் ஷீதளின் வீடும். சில சமயம் இருவரும் ஒன்றாகவே வந்து விடுவார்கள்.  ஷிதள் கூட ஜாலி பெண் தான். மற்ற நடிகைகளைப் போல இல்லாமல் நட்பாக புன்னகைத்தபடி இருப்பாள். செல்ஃபோனை வைத்து குறுந்தகவல்கள் அனுப்பியபடி இருப்பாள். அவளின் ரசிகர்கள், ஆண் நண்பன் ஒருவன் என்று யாராவது வருவார்கள். ஹாய் என்று தோளில் கை போட்டுப் பேசும் பழக்கம் அவளுக்கு,  அவளின் சித்தி வரும் நாட்களில்தான் சிறைக்கைதியைப் போல இருப்பாள். அப்போது செல்போன் குறுந்தகவல்கள ரொம்ப வந்து போகாது. அந்த ஆண்நண்பனும் வரமாட்டான்.


    நேற்றைய விளம்பரத்தின் சில ஷாட்கள் எடுத்தால் போதும்,. எல்லா பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அப்புறம் இந்த விளம்பரம் சக்கைப் போடுதான். வண்ணத்துப் பூச்சிகளாய்ப்  பறக்கும் தோட்டத்தில் இரவு உடையை லேசாய் களைந்து அவள் ஒரு பூவாய் மலர்ந்திருக்க அந்த சோப்பைத் தடவியதும் நுரை பொங்க இருக்கும் அவளை நோக்கி எல்லா வண்ணத்துப் பூச்சிகளும் அந்த சோப்பின் வாசனையால் கவரப்பட்டு வருவதும் அமர்வதும் மாதிரியான ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டு  இருந்தன. சோப்பு நுரைக்காய் அந்த லிக்விட் சோப்பின் பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்தன. கிராஃபிக்ஸ் பட்டாம் பூச்சிகளுடன் கைகோர்க்கப் போகும் ப்ளாஸ்டிக் பட்டாம்பூச்சிகளை எல்லாம் சரிபார்த்தபடி  கணவருக்கு போன் செய்தாள், மகளை பள்ளியில் கொண்டு விட்டாச்சா என்று கேட்டு.


    கணவன் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிய அதன் அருகிலேயே இருக்கும் பள்ளியில் மகளைச் சேர்த்திருந்தார்கள். அவளின் அலைச்சலான வேளையில் ஒருவராவது குழந்தையை அருகில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று வீடும் அங்கேயே பிடித்திருந்தார்கள். இவர்கள் வீடு என்னும் தோட்டத்தில் இரண்டு  வண்ணத்துப் பூச்சிகளாக வேலை செய்ய தினம் இரவில் கதை கேட்கும் குட்டி வண்ணத்துப் பூச்சியாய் மகள் காத்திருப்பாள். பல சமயம் அப்பாவின் கதைகளோடு தூங்கும் அவளுக்கு அம்மாவின் கதைகள் எப்போதாவதுதான் கேட்க கிடைக்கும். அதுவும் வாழ்க்கையின் பல சுற்றுக்களில் சுற்றிச் சுற்றி வருவதால் சக்தி இப்போதெல்லாம் கதை என்பதையே மறந்து விட்டாள். எல்லாம் தொழில் சம்பந்தப்பட்ட ஷூட்டுக்குக்கான காட்சிகள்தான்.


    நேற்றைய காட்சிகள் அற்புதமாய் வந்திருந்தன. இன்றைய ஷூட் கூட தேவையில்லை. சில இடங்களில் இன்னும் சிறப்பான ஷாட்ஸ் எடுத்து இணைக்கலாம் என்ற இயக்குநரின் விருப்பத்தின் பேரிலேயே இன்றைய ஷூட் இருந்தது.தடதடவென்று ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள் காஸ்ட்யூம் டிசைனர் ராதா. இரவு உடைகள் விதம் விதமாய் வைத்திருந்த பையுடன்.


    என்னப்பா இன்னும் யாரும் வரலையா என்ற கேள்வியுடன் லன்ச் பையை திறந்து டிஃபன் பாக்ஸை எடுத்தாள் ராதா. இன்னிக்கு பூரி கிழங்கு, நீ சரியாவே சாப்பிட மாட்டேங்குற. உனக்கும் சேர்த்து கொண்டுவந்திருக்கேன். என்றாள். மிகுந்த நன்றியோடு அவளைப் பார்த்தாள் சக்தி.. சரி சரி அப்புறம் உணர்ச்சி வசப்படலாம் . இப்போ சாப்பிட வா என்றாள் ராதா.  இருவரும் கைகழுவி விட்டு உண்ணத் தொடங்கினர்..


    ஹாண்ட்பாகில் இருந்த செல் அடித்தது. எடுத்து பேசிய சக்தி, அப்படியா, அப்படியா என பேயறைந்தது போலானாள். தின்ற கிழங்கு தொண்டையிலேயே நின்றுவிட்டது போலிருந்தது. ராதா , சீக்கிரம் கிளம்பு. ராகவன்தான் ஃபோனில்.  நாம ஷீதள் வீட்டுக்கு போகணும்,  கெட்ட செய்தி ஒண்ணு அவங்க தூக்கு மாட்டி இறந்துட்டாங்களாம்.. என்ன என்று எழுந்த ராதாவின் கையிலிருந்து டப்பா உருண்டோடியது.


    நல்ல உற்சாகமான பெண். எல்லாரிடமும் அட்ஜஸ்ட் செய்து போகிறவள். என்ன உடை கொடுத்தாலும் உடுத்தி நடிப்பாள். எந்தத் தொந்தரவும் , எந்த பந்தாவும் இல்லாதவள்  என பெயரெடுத்திருந்த ஷீதளின் மரணத்துக்கு என்ன காரணம் இருக்க முடியும். இருவரும் வாட்ச் மேனிடம் சொல்லி விட்டு இயக்குநருக்கும்,  பார்க்கவி மேடத்துக்கும் ஃபோன் செய்து விபரம் சொல்லி கிளம்பினார்கள்  ராதாவின் ஸ்கூட்டியிலேயே.


    போகும் வழியெல்லாம் வண்ணத்துப் பூச்சிகளும் தட்டான்களும் பறப்பது போலிருந்தது சக்திக்கு. ஒரளவு முடிந்து விட்டாலும் இன்னும் மிச்சத்தை முடிப்பதற்குள் அவள் இறந்த பதட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லார் முகத்திலும் பரவி இருந்தது. வண்டியை விட்டிறங்கிய போது கால்கள் தொய்வது போலிருந்தது. என்ன வாழ்க்கை இது.. பட்டாம் பூச்சிகள், பூக்கள் போலத்தானா... எப்படி பூத்தது  எனத் தெரியாமல் வாடிப் போகும் பூவைப் போல சுருண்டு கிடந்தாள் கழுத்தில் புடவையோடு இறக்கி படுக்க வைக்கப்பட்டிருந்த ஷீதள். ஜீன்ஸ் பாண்டும் டீசர்ட்டும் அணிந்திருந்தாள்.


    நேற்று பார்த்தவர்கள் சொல்லி இருக்க முடியாது இந்தப் பெண் இன்று இறந்து விடுவாள் என்று. கண்களை யாரோ மூடி விட்டதால் இரண்டு தூக்கிய இறக்கை யோடு கூடிய பட்டாம் பூச்சி போல இருந்தன. முகத்தில் மேக்கப் சரியாக கலைக்கப்படாததால் வண்ணம் கொண்ட பட்டாம் பூச்சி பறக்கும் போது மோதி அப்பியது போல இருந்தன கன்னங்கள். திடீர் மரணம் என்பதால் தொலைக்காட்சி, செய்தித்தாள் நிருபர்கள் கூட்டமாய் வரத் தொடங்கினார்கள். அவளின் சித்தி கலங்கிய குரலோடு பேட்டி பேட்டி என அழுது கொண்டிருந்தாள்.


    எவ்வளவு நடித்தாலும் வீட்டில் இருப்பவர்களே பண வரவு செலவெல்லாம் பார்த்துக் கொள்வதால் என்ன வருகிறது என்ன சேமிக்கப்படுகிறது என்பதெல்லாம் ஒரு நடிகைக்கு தெரிவதில்லை, ஷீதளும் அப்படித்தான். அவ்வப்போது சித்தியிடம் டிஸ்கோதே போக , ஷூட்டிங் இல்லாத நேரங்களில் ஷாப்பிங் செய்ய என்று பணம் கேட்பாள். பணம் கொடுக்கும் நேரத்தில் அவளுக்கும் சித்திக்கும் பலத்த சண்டை ஏற்படும். நேற்றும் கூட அதே போல பலத்த சண்டை.. எப்போதும் போல இல்லாமல் கை கலப்பாய். இருவரும் காயம் வரும்வரை சண்டையிட்டிருக்கிறார்கள். இரவில் கோபத்தில் வீட்டில் தான் சம்பாதித்தும் இஷ்டப்படி வாழமுடியாமல் புடவையை எடுத்து சுருக்காக்கி தூக்குப் போட்டுக் கொண்டிருக்கிறாள் கூடை சேரின் கொக்கியில்.


    இரண்டு மூன்று நடிகைகள் பயந்த முகத்தோடு அழுதபடி அவள் அருகில் நின்றிருந்தார்கள். ராகவனும் இயக்குநரும் ஒரு பக்கம் நிற்க, பார்க்கவி மேடம் வந்து ஐயோ என்றார். குபுக் என அழுகை பொங்கியது சக்திக்கு . ராதாவும் அதே போலத்தான் இருந்தாள். வாய் விட்டு அழத் தோன்றினாலும் துக்கம் தொண்டையை அடைத்த மாதிரி இருந்தது.  நேற்று அவளுடன் ஜோக்கடித்துக் கொண்டே சாப்பிட்ட இறால் பிரியாணி ஞாபகம் வந்தது. நேற்று பூவாய் இருந்தவள் இன்று அடிபட்டுக் காய்ந்த இறகோடு கிடக்கும் பட்டாம் பூச்சியானது எங்ஙனம்.. ?


    என்ன போ மனுஷ வாழ்க்கை.. எதுக்கு ஓடுறோம். பட்டாம் பூச்சி முண்டி முண்டி எம்புட்டுத் தேன் குடிக்க முடியும். வீடு வாசல், சொத்து பத்து இதெல்லாம் சேர்த்த பின்ன எப்பிடி பட்டாம் பூச்சி மாதிரி பறக்கிறது. அப்புறம் தேன் என்ன, மான் என்ன.. எல்லாமே மெட்டீரியலிஸ்டிக் உலகம்தான். ஷீதளின் சித்தியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. தங்க முட்டையிடும் வாத்தை ஒரேயடியாக கொன்று விட்டவளைப் பார்ப்பது போல அசூயையாக இருந்தது.


    பூக்களைப் போல வாடி விடும் ஆசைகளோடு . பட்டாம் பூச்சிகளாய்க் குலவித் திரிவதும் , திரவம் உறிஞ்சுவது போல திரவியம் சேர்ப்பதும் என்ன பலன். யாருக்காக. எதற்காக. இந்த வீட்டில் இனி அவள் சித்தியின் வயதான பருவம் கழியலாம் குற்ற உணர்ச்சியோடு. அந்த கொக்கி ஒன்றே போதும் ஒரு பட்டாம் பூச்சி தூக்கிட்டுக் கொண்டதை நினைவு படுத்த.  பின் பக்க ஜன்னல் வழியில் சில பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.. வெய்யிலில் அவற்றின் பளபளப்பு மினுமினுத்தது.  பூக்கள் மலர்ந்து கிடந்தன நேற்றைய ஷீதள் போல. அவள் ஆசைகள் போல, அவள் சிரித்த அழகிய இதழ்கள் போல. அவள் வெள்ளை மனம் போல. அவரவர் வாழ்வை அவரவர் வாழும் போது அவள் மட்டும் வாழ முடியாமல் முடித்துக் கொண்டாள்.


    அவளைத் தொட வேண்டும் போலவும், வேண்டாம் போலவும் இருந்தது. காவல்துறைமுடித்து, மார்ச்சுவரிக்கு சோதனைக்கு சென்றபின் தான் தகனம் செய்ய முடியுமாம்,  பட்டம் பூச்சிகளையும் பூக்களையும் எப்படி பிணவறையில் அறுப்பார்கள் அந்த டாக்டர் கூட அழுது கொண்டே இதைச் செய்யலாம்.



வெளியில் வந்த போது பக்கத்தில் இருந்த கடையில் ஏதோ ஒரு செய்தித் தொலைக்காட்சியில்  ஷீதளின் இறப்பு பற்றிய விவரம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஒரு சைக்கியாட்ரி டாக்டரிடம் கருத்து கேட்டார்கள் அவர் சொல்லிக் கொண்டிருந்தார். நடிகைகள் எல்லாருக்கும் கவுன்சிலிங்க் கொடுக்க வேண்டும். இந்த மாதிரி மனோ நிலை இருப்பவர்களுக்கு கட்டாயம் கொடுக்கணும்.  அவங்க வேலை ஸ்ட்ரெஸ் அப்பிடி. நான் இதுக்காக இலவச சேவையா ஒரு கவுன்சிலிங்க் மையம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். தற்கொலை எண்ணத்தோட இருக்குறவுங்க இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று,


அட போங்கப்பா.. வாழும் போது தேவைப்பட்ட பணம் சம்பாதிச்சும் அனுபவிக்க முடியலை நினைச்சதை எல்லாம். தோட்டக்காரங்க மாதிரி கூட இருக்குற மனுஷங்களே பூவை கிள்ளிப் போடுறாங்க. அல்லது பட்டாம் பூச்சிகளை தற்கொலைக்கு தூண்டுறாங்க.. அவள் ஷீதள் வீட்டின் தோட்டத்தைத் திரும்பிப் பார்த்தாள்.. பறந்து கொண்டிருந்த ஒரு சில பட்டாம் பூச்சிகளின் பின்னும் மரங்களின் நிழல்கள் தூக்குக் கயிறைப் போல நீண்டிருந்தன. பொங்கி வரும் அழுகையை அடக்கியபடி ராதாவின் வண்டியில்  அமர்ந்து வீட்டில் இறங்கிக் கொண்டாள்..


பள்ளி விட்டு வீடு வந்த மகளும் கணவனும் சாப்பிட்டு அமர்ந்திருந்தார்கள், மகள் கேட்டாள் அம்மா அம்மா எனக்கு பட்டர்ஃப்ளை கதை சொல்றேன்னு சொன்னீயே.. அது எப்பிடி கார்டனுக்கு வந்தது.. எப்ப பொறந்துச்சு என்று கேட்டாள். பொல பொல வென உதிர்ந்த கண்ணீருடன். அதெல்லாம் தெரியாதுடா செல்லம் ஆனா அந்த பட்டர்ஃப்ளை செத்துப் போச்சுடா . இன்னொரு நாளைக்கு  சொல்றேன். என்றாள். விபரம் புரிந்த கணவர் என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியாய் இருந்தார்.


அம்மா கண்ணீரை துடைத்த மகள்.. அம்மா அந்த பட்டர்ஃப்ளை செத்துப் போகலை.  நான் ஆகிட்டேன் அழாதீங்கம்மா என்று சிரித்தாள்.. ஆம்  வண்ணத்துப் பூச்சிகள் என்றும் மரிப்பதில்லை வேறு உருக் கொள்கின்றன.. இந்த வண்ணத்துப் பூச்சியை நான் கவனமாக வளர்க்க வேண்டும். எல்லாப் பூக்களும் எல்லா இன்பங்களும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்று எண்ணியபடி தன் மகள் என்னும் வாசம் மிகுந்த வண்ணத்துப் பூச்சியை அணைத்துக் கொண்டாள் சக்தி. பூக்களின் மேல் கிடக்கும் பட்டாம் பூச்சி போல அம்மாவை கட்டிப் பிடித்துக்கொண்டாள் அவள் மகள். 

No comments:

Post a Comment