Tuesday 24 June 2014

Story 24: அபராஜித்தன்

அபராஜித்தன்

நேரம்: காலை 9:23

இன்னிக்கி எனக்கு எந்த காயும் வேண்டாம் மா. நான் வெளியில வேற போறேன். அதனால மத்தியானம் வீட்டு வேலைக்கும் நீ வர வேண்டாம். எப்ப வரணும்னு நானே நாளைக்கு ஒங்கிட்ட சொல்றேன்

வெள்ளையம்மாள் எப்படியும் இன்று சாவித்திரி அம்மாள் தன்னிடம் காய்கறி வாங்குவாள் என்று கீழடுக்கிலிருந்து எடுக்க சென்றாள். அது நான்கு சக்கர தள்ளுவண்டி. கீழே ஒரு குட்டி அறை. அதில் அவள் இன்னமும் சில காய்களை வைத்திருப்பாள். மேலே வாங்குபவர்களுக்காக காய்கள் அடுக்கப்பட்டிருக்கும். அது தீர்ந்து போயின் கீழே இருப்பதை எடுத்து மேலே அடுக்குவாள். அவளின் நேரம் எப்போதும் காலை ஏழு மணி. ஆனால் சாவித்திரியிடம் மட்டும் அப்படி கிடையாது. ஏழு மணிக்கு அபராஜித்தனை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருப்பதால் அந்த நகரில் இருப்பவர்கள் அனைவருக்கும் கொடுத்துவிட்டு வரச் சொல்லுவாள். வெள்ளையம்மாளும் அப்படியே கொடுத்துவிட்டு வருவாள். ஒருவேளை காய்கறிகள் தீரும் நிலையில் இருந்தால் கொஞ்சம் எடுத்து கீழ் பெட்டியினுள் பதுக்கி வைப்பாள். சாவித்திரி என்னென்ன காய்கறிகள் வாங்குவாள் என்பது வெள்ளையமாளின் மனதில் எப்போதும் பதிந்த ஒன்று.

அன்று அபராஜித்தனை பள்ளியில் விட்டுவிட்டு வீடு நோக்கி கொஞ்சம் தாமதமாகவே சாவித்திரி வந்தாள். அபராஜித்தன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவன். அவனுடைய அப்பா விபத்தில் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. அப்பாவின் நினைவுகளை மகனின் மனதிலிருந்து எடுக்கும் வண்ணம் எப்போதும் அபராஜித்தனுடனேயே இருப்பாள் சாவித்திரி. அன்று பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் போது கைவசம் ஒரு பை இருந்தது. அது முழுக்க வெள்ளையம்மாளால் என்னவாக இருக்கும் என கணக்கிட முடியாத சாமான்களால் நிறைந்திருந்தன.

வெள்ளையம்மாள் அங்கிருந்து நகர்ந்து செல்லும் போது தான் ஸ்டெல்லா ஸ்கூட்டியில் வேகமாக சென்றாள். ஸ்டெல்லா பிராமண அம்மாவிற்கும் கிறித்துவ அப்பாவிற்கும் பிறந்தவள். எப்போதும் வேகமாக வண்டி ஓட்டும் பழக்கமற்றவள். அவளுடைய முகத்தில் சோகத்தின் கலை தெரிந்தே இருந்தது. வீட்டில் எப்போதும் கல்யாணப்பேச்சு எடுப்பார்கள் என்பது அந்த நகரே அறிந்த ஒன்று. அவள் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகளாகிறது. முதலில் ஒரு பெரிய மாலில் இருக்கும் கடையில் கணக்கர் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். பின் அபராஜித்தன் படிக்கும் அதே தனியார் பள்ளியில் சம்பளம் அதிகமான, கணக்கர் சம்மந்தமான வேலை ஒன்று காலியாக இருந்ததால் அந்த வேலைக்கு முயற்சி செய்தாள். அவள் தன் மேற்படிப்பை கணினியில் செய்திருந்தாள். அந்த வேலையோ கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர். அவளுக்கு அந்த வேலை சந்தோஷத்தையே கொடுத்தது. இந்நிலையில் வீட்டில் அவளின் திருமணத்திற்காக யாரிடம் அவளின் ஜாதகம் சென்றாலும் தோஷம் உள்ளது என்று ஜாதகம் மறு வீட்டினரால் நிராகரிக்கப்பட்டது. வீட்டிலுள்ளோருக்கும் அவளுக்கும் அது எப்போதும் மன உளைச்சலை தர ஆரம்பித்தது. அன்று காலையும் அப்படியே ஒரு அலைபேசி அழைப்பு. கேட்ட மாத்திரத்தில் சாப்பிடாமல் பள்ளிக்கு கிளம்பினாள்.

ஒன்பதரை மணிக்கு தான் அவளுடைய வேலை பள்ளியில் தொடங்கும்.

நேரம் : காலை 9:51

அடுத்த நாள் அபராஜித்தனின் பிறந்தநாள்.

சாவித்திரி வாங்கி வந்த பைகளை அப்படியே டேபிளின் மேல் வைத்துவிட்டு வீட்டின் பின்னிருக்கும் சில துணிகளை வேகமாக துவைத்துக் கொண்டிருந்தாள். அதனுள் அபராவிற்காக வாங்கி வந்த பலூன்கள், திருகினால் வெடித்து கலர் காகிதங்களை கொடுக்கும் பொருட்கள் போன்றவை நிறைந்து இருந்தன. துணி துவைக்கும் நேரம் முழுக்க அவளின் நினைவுகள் இன்னமும் என்ன என்ன வாங்க வேண்டும் என்பதில் தான் இருந்தது.

சாவித்திரி பேங்கில் வேலை பார்ப்பவள். அன்று அவளுக்கு டெபுடேஷன். ஆம்பூர் செல்ல வேண்டும். சென்றே ஆக வேண்டும் என்னும் கட்டளையும் அவளுடைய மேனேஜரால் விதிக்கப்பட்டது. இருந்தும் அவள் சில நாட்களாக கெஞ்சி பார்த்துவிட்டாள். அப்படியும் அவர் மசியவில்லை. ஏற்கனவே தனக்கென ஒரு மாதத்தில் விதிக்கப்பட்ட அனைத்து லீவுகளையும் மகனிற்காக எடுத்துவிட்டாள். அவனுக்கு எப்போதெல்லாம் பள்ளியில் விடுமுறை கொடுக்கிறார்களோ, மழைக்காரணமாக இருந்தாலும் சாவித்திரி அலுவலகம் செல்லாமல் அபராவுடன் வீட்டில் இருந்துவிடுவாள். அல்லது அவனை அழைத்துக் கொண்டு எங்கேனும் வெளியில் சென்றுவிடுவாள். ஒரு வேளை தனக்கு மெமோ கொடுப்பார்களோ என்னும் எண்ணமும் துணி சோப்பு நுரைகளுடன் வந்து வந்து சென்று கொண்டிருந்தது.

துணிகளை துவைத்து காய வைத்தவுடன் கொஞ்சம் நேரம் ஃபேனிற்கு அடியில் அமர்ந்தாள். பெருமூச்சுவிட்டாள். அவளின் அலைபேசி குறுந்தகவல் வந்திருப்பதாய் சிணுங்கியது. அதை செவியில் வாங்காமல் எண்ணம் அபராவிடமே இருந்தது. அவளின் முடிவே அபராவிற்கு தான் செய்வது எதுவும் தெரியக் கூடாது என்பதே. அவனுக்கு தெரிந்து அவனது தெரிவில் சட்டை பேண்ட் ஷூ என்று வாங்கி வைத்திருந்தாலும் அவனுக்கு தெரியாமல் வாங்கித் தர வேண்டும் என்பதே சாவித்திரியின் ஆசை. அதை மதியத்துள் வாங்கிவிட வேண்டும் என்றும் அவள் மனதளவில் தீர்மானமாய் இருந்தாள்.

மொட்டை மாடியில் இருக்கும் அறையை அவள் முன்னரே சுத்தம் செய்துவிட்டாள். அது முழுக்க குப்பைகளாக இருந்தன. வெள்ளையம்மாளை இரு தினங்களுக்கு முன் வரவழைத்து அந்த அறையை சுத்தம் செய்தாள். அங்கு தான் பலூன் தொங்க விட வேண்டும், கேக் வெட்ட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்.

ஸ்டெல்லா பள்ளிக்கு செல்லும் போதே அது தாமதமாக இருந்தது. வந்தவுடன் ஆபீஸில் இருந்தவர்கள் உன்னை ப்ரின்சிபால் அழைக்கிறார் என்றனர். அவளின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்த எண்ண ஓட்டங்கள் இப்போது வேறு ஒரு விஷயத்தால் நிறைந்தது. அந்த பள்ளியின் முதல்வர் கண்டிப்பானவர். அவர் நிச்சயம் திட்டுவார் என்பதால் ஒருவித பயம் பள்ளிக்கூட சிறுமியைப் போல அவளுள் திமிறிக் கொண்டிருந்தது. நேரே அவரிடம் சென்று அவர் திட்ட அதை பவ்யமாக வாங்கி மீண்டும் ஆபீஸிற்குள் வந்தாள். அவளைச் சுற்றி எப்போதும் நால்வர் அமர்ந்திருப்பர். அவர்களைப் பார்த்து ஒரு குட்டி புன்முறுவல். அவளுக்கென கொடுக்கப்பட்டிருக்கும் கணினிக்கு ஒரு தீண்டல்.

மேலே ஃபேன் ஓடிக் கொண்டிருந்தும் அவளுக்கு புழுக்கமும் வியர்வையும் ஆடைக்குள் வழிந்து கொண்டிருந்தது. அந்த ஆபீஸில் ப்யூனாக இருக்கும் மார்டின் சில நோட்டுகளை எடுத்து வந்து ஸ்டெல்லாவின் அருகில் வைத்தான்.

நேரம் : காலை 10:16

இனியும் ஓய்வெடுத்தால் அது நல்லதல்ல என்று எண்ணிய சாவித்திரி அங்கிருந்து எழுந்து தன் ஆடைகளை மாற்றிக் கொண்டாள். முதலில் சென்று அவனுக்கு ஆடைகளை வாங்க வேண்டும் என்று கண்ணாடியை பார்த்து புலம்பிக் கொண்டே புடவையை சுற்றிக் கொண்டிருந்தாள். தீண்டலற்று கிடக்கும் தேகத்தையும் கண்கள் அவ்வப்போது கவனித்துக் கொண்டன. டேபிளின் அருகில் உட்கார்ந்து கொண்டு அபராவிற்கு என்ன என்ன வாங்க வேண்டும் என்று பட்டியலிட ஆரம்பித்தாள். அந்த பட்டியல் எந்த அடுக்கில் வாங்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொண்டிருந்தது.

முழுவதுமாக தயாரானவுடன் தன் ஹேண்ட் பேகை எடுக்கலாம் என்று அது இருக்கும் அறைக்கு செல்ல நினைத்தாள். அலைபேசியில் ஒரு அழைப்பு. சாவித்திரியின் அம்மா. சாவித்திரி மகனுடன் தனியாக அவள் கணவன் வாங்கிய வீட்டிலேயே இருப்பவள். அம்மாவிடம் வெளியில் கிளம்புவதாக சொல்லி சீக்கிரமே அழைப்பை அணைத்தாள்.

ஸ்டெல்லா அன்றைய வேலையை வெகு சீக்கிரத்திலேயே முடித்திருந்தாள். காலையில் சரியாக அவள் சாப்பிடவில்லை. உடனே தன்னுடன் வேலைப் பார்க்கும் சுகந்தியிடம் கேண்டின் செல்லலாமா என்றழைத்தாள். அது பெரிய பள்ளி. அபராஜித்தனுக்கு தெருவில் நிறைய நண்பர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரு பள்ளி அபரா வேறு ஒரு பள்ளி என்று இருந்தான். இந்நிலையில் அவன் எதை நினைத்தும் ஏங்கிவிடக் கூடாது என்பதற்காக அவனையும் அதே பள்ளியில் சேர்த்துவிட்டாள் சாவித்திரி. ஸ்டெல்லாவும் அந்த ஏரியாவிற்கு குடிவந்த பின் தான் அந்த தனியார் பள்ளியை பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்தாள். பல முயற்சிகளுக்கு பின்னே தான் அவளுக்கு அந்த வேலை கிட்டியது. கேண்டீனுக்கு சென்றபின் சுகந்தி காஃபியுடன் நிறுத்திக் கொண்டாள். ஸ்டெல்லா இரண்டு முட்டை பப்ஸும் ஒரு காபியும் ஆர்டர் செய்தாள்.

சாவித்திரி அம்மாவின் அழைப்பை முடித்து வைத்தவுடன் அந்த மொபைலின் மேலே குறுந்தகவல் வந்ததன் அடையாளம் துருத்திக் கொண்டு இருப்பதை கவனித்தாள். என்னவாக இருக்கும் என்று திறந்தாள்

“This message delivers the information that your son Aparajithan has been absent today (__/__/____). Please make a kind note of it.

Regards,                                                                                                                                                                                                                 ___________(name of the school)”

கைகளில் இருந்த பைகள் அப்படியே தரையில் விழுந்தன. அவனுக்கு வாங்க வேண்டிய சாமான்கள் எழுதபட்டிருந்த சீட்டு காற்றில் பறந்து சுவற்றுடன் ஒட்டிக் கொண்டது. தரையில் அமர்ந்தாள். கண்களை வைத்து சுற்றும் முற்றும் பார்த்தாள். அபராஜித்தனை தான் வகுப்பில் விட்டு தான் வந்தோம் என்பதை மனம் தீர்க்கமாக சொல்லியது. கொஞ்சம் தண்ணீர் அருந்தினாள். வண்டியின் சாவியை கையில் எடுத்தாள்.

நேரம் : காலை 10:44

கேண்டீனில் சுகந்தியும் ஸ்டெல்லாவும் ஊர்க்கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.

சாவித்திரி எப்போதும் இல்லாதது மாதிரி வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தாள். சாலையில் அவளின் வேகம் நொடிப்பொழுதில் மரணம் என்பதைப் போன்று இருந்தது. சிக்னலில் சிவப்பு விழுந்தாலே பக்கத்தில் குறுக்குச் சந்து எங்கிருக்கிறது என்று அவளுடைய கண்கள் தேட ஆரம்பித்தன.

அந்த பள்ளியின்  வாசலில் ஒரு தேவாலயம் இருக்கும். எப்போது அபராவை பள்ளிக்கு விட வந்தாலும் முருகன் கோயிலை கடந்து செல்லும் தோரணையில் அவளின் கை விரல்கள் தாடையிலும் அபராவின் தாடையிலும் ஏதோ செய்யும். இப்போது கண்டுகொள்ளப்படாமல் இயேசு உள்ளே நின்று கொண்டிருந்தார். அதற்கு அருகில் ஒரு வேகத் தடை இருக்கும். அங்கும் பிரேக் போடாமல் வேகமாக சென்று பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தினாள். அங்கே வண்டியை நிறுத்த முடியாத அளவு வண்டிக்கூட்டம் இருந்தது. வாட்ச்மேனையும் காணவில்லை. பள்ளியின் பிரதான வாயில் திறந்தே இருந்தது. அதற்குள் அங்கே போலீஸ் ஜீப் வருவதன் சத்தம் அவளின் காதுகளுக்கு கேட்டது. பிரச்சினை பெரிதோ என்று மனம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.

ஸ்டெல்லாவின் பேச்சு எதிர்த்திசையில் சில ஆசிரியர்களின் ஓட்டத்தினால் தடை ஆனது. சில ஆசிரியர்கள் அப்பள்ளியின் மூத்த மாணவர்கள் இருக்கும் அறைகளுக்கு காவல் இருக்க ஆரம்பித்தனர். கேண்டீனில் இருந்து கொஞ்ச தூரம் என்பதால் அந்த வராந்தாவில் நின்று கொண்டிருக்கும் ஆசிரியைகளை அவளால் கணிக்க முடியவில்லை. ஆபீஸில் வேலை பார்க்கும் மார்டின் வேகமாக கேண்டீனுக்கு ஓடி வந்தான். அவனுடைய புருவத்தின் அருகில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

ஸ்டெல்லாவின் மனம் சில விநாடிகளுக்கு ஸ்தம்பித்தது. மார்டின் வேகமாக கேண்டீனை சாத்த சொன்னான். அதற்குள் யாரோ முகம் தெரியாத மனிதர் ஒரு ஆசிரியரை தள்ளிக் கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டிருந்தார். ஸ்டெல்லாவின் கண்கள் அதை நோட்டம் விட்டுக் கொண்டே பயத்தில் ஆபீஸ் நோக்கி ஓட யத்தனித்தது. அதற்குள் மார்டின் தடுத்து நீ லேடீஸ் ஸ்டாஃப் ரூமிற்கு போ என்று சொல்லிவிட்டான்.

அந்த ஆபீஸ் ரூமில் நான்கு கணினிகள் எப்போதுமே இருக்கும். அவைத் தவிர அங்கு இருப்பது ஆயிரக்கணக்கில் காகிதங்கள் மட்டுமே. அவையனைத்தும் அந்த பள்ளியின் ஃபீஸ், ஒவ்வொரு விழாக்களுக்கும் ஆன செலவு, நடக்கவிருக்கும் விழாக்களுக்கான ஆண்டுக்கான செலவுகள் நிறைந்திருக்கும் ரெக்கார்டுகள். சாவித்திரி பள்ளிக்குள் நுழைந்த உடன் அந்த அறைக்கே அவளின் பார்வை சென்றது. நான்கு கணினிகளும் வையர்களிலிருந்து பிய்த்தெறியப்பட்டு, அதன் மானிட்டரில் இருக்கும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு தரையோடு தரையாக இருந்தன. பொதுமக்கள் அந்த அறைக்குள் அளவில் அதிகமாக இருந்தனர். முதல்வரும் ஆண் ஆசிரியர்களும் ஏதோ பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தனர். சாவித்திரி பார்த்த ஆத்திரத்தில் அந்த பள்ளி முதல்வருக்கு ஒரு பொதுமக்களால்பலார்என அறை ஒன்று விழுந்தது. வாங்கிய வேகத்தில் அவர் திரும்ப சாவித்திரி அவரின் முகத்தை கண்டாள்.

அது கிறித்துவ தனியார் பள்ளி ஆதலின் அங்கே முதல்வர் எப்போதும் அங்கி அணிவது தான் பழக்கம். அந்த அங்கியில் இருபது பொத்தான்கள் இருக்கும் என்று அபராஜித்தன் சொன்னது அப்போது அவளின் நினைவிற்கு வந்து சென்றது. யாரோ அவரின் அங்கியை இழுத்து முன்னரே அடித்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாய் தொண்டைக்கு கீழிருந்த மூன்று பொத்தான்களின் இடம் காலியாய் இருந்தது. யோசித்தாலும் கவனம் அதில் முழுவதுமாக இன்றி அந்த இடத்தை அவள் கடந்து சென்றாள்.

அவள் பள்ளியின் பிரதான கட்டிடத்தின் முன் இருக்கும் வெளியில் வந்து நின்றவுடன் முழுப்பள்ளியும் அவளின் கண்களுக்கு பயமுறுத்தும் மிருகமாய் வந்து சென்றது. அவளின் கண்களுக்கு எதிரே மிக சின்னதாய் அபராஜித்தனின் வகுப்பறை. அபராஜித்தன் தன்னை கவனித்துக் கொண்டிருப்பானா என்று தெரியாத வண்ணம் நேரே ஓடினாள். அவளை பக்கவாட்டிலிருந்த வகுப்பிலிருந்து நிறைய மாணவர்கள் கவனித்த வண்ணமே இருந்தார்கள். சாவித்திரியோ எதையுமே கணக்கில் கொள்ளாமல் ஓடிக் கொண்டிருந்தாள்.

ஸ்டெல்லாவின் கால்கள் லேடீஸ் ஸ்டாஃப் ரூமிற்குள் செல்லாமல் நிலையிலேயே நின்று கொண்டு ஆபீஸ் ரூமில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருந்தன. அப்போது அந்த அறைக்குள் போலீஸ்காரர்களும் மீடியாகாரர்களும் நுழைந்து கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர் அங்கிருந்த அனைவரையும் வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். அடிபட்டு ரத்தம் சின்னதாய் வழிந்து கொண்டிருந்த ஆசிரியர்களுக்கும் முதல்வருக்கும் உடனே முதலுதவி ஏற்பாடு செய்யப்பட்டது.

அபராஜித்தனின் வகுப்பறை காலியாய் இருந்தது. சாவித்திரிக்கு என்ன செய்ய என தெரியவில்லை. ஒட்டு மொத்த பள்ளியில் எங்கு போய்த் தேடுவது ? இவ்வளவு பெரிய பள்ளியை யார் கட்ட சொன்னது ? அதில் என் மகனை சேர்க்க வேண்டும் என்று யார் எனக்கு சொன்னது ? எனக்குதவ யாருமே இங்கில்லையா ? எனும் போது அருகில் நிலையுடன் நிலையாக ஸ்டெல்லா நின்றிருப்பதைக்  கண்டாள் சாவித்திரி. உடனே ஸ்டெல்லாவிடம் ஓடிச் சென்றுஸ்டெல்லா அபரா எங்க ஸ்டெல்லா ? யாருமே அங்க இல்லையே ? அபரா எங்க ஸ்டெல்லா. . .  ஏன் அமைதியா இருக்க அபரா எங்க ஸ்டெல்லா ?”

ஸ்டெல்லாவிற்கு பதில் தெரிந்தால் தானே அவளால் சொல்ல முடியும். என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் பலியாடு போல நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு பின்னே இருந்து வந்த வளர்மதி என்னும் ஆசிரியை வாங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன் என அழைத்து சென்றாள். அப்போதும் சாவித்திரியின் கால்பாதமே வேகமாய் இருந்தது.

முதல்வர் அறையின் அருகே சில ஆசிரியைகள் இருப்பதால் தாம் அங்கே செல்லலாம் என்று அங்கே சென்றாள் ஸ்டெல்லா. கூட்டத்தில் எது ஆசிரியை எது பொதுமக்கள் என கணக்கிடத் தெரியாமல் அவள் வந்திருந்தாள். அவள் வந்த இடத்தில் ஆசிரியைகளையே காணவில்லை. கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஐடி கார்டை கழற்றி யாருக்கும் தெரியாத வண்ணம் இடுப்பில் சொருகிக் கொண்டாள். அப்போது அங்கே இருவர் பேசிக் கொண்டிருந்தனர்.

அபராவிற்கு வரைபட வகுப்பு. அதற்கு முதல் தளத்தில் தனியாக ஒரு அறை இருப்பதால் அங்கு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. சாவித்திரி அங்கு செல்ல நாற்பத்தி எட்டு பேர் ஒருவரோடு ஒருவர் என்ன பேசுவது என தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர். அபரா மூன்றாவது பெஞ்சில் இரண்டாவது ஆளாய் அமர்ந்து அருகிலிருப்பவனுக்கு கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தான். அபராவின் சிரிப்பில் சாவித்திரி அவனுடைய முன்னடுக்கில் இருக்கும் ஓட்டைப்பல்லை ரசித்துக் கொண்டிருந்தாள். வெட்கமும் சிரிப்பும் அழுகையும் அவளின் முகத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்தது. வெட்கத்தில் திரும்பினாள். தூரத்தில் ஆபீஸில் சண்டையிடும் மக்கள். அபரா அம்மாவை கவனித்தான்.

அது வேலையத்த வேலைங்க. நாம படிக்கும் போது இருக்குறாப்லயே இருந்திருக்கலாம். தேவையில்லாம டெவலப் பண்றேன்னு நம்ம தாலிய அறுக்குறானுங்க. யாருங்க கேட்டா இந்த கம்ப்யூட்டர் பிரச்சனைய. என்ன நடந்திச்சுன்னே யாரும் சொல்ல மாட்டேங்கறானுங்களே. . . .”

அப்போது ஒரு போலீஸ் முதல்வர் அறையிலிருந்து வந்து அந்த பிரதான கட்டிடத்தின் முன்னிருக்கும் திடலில் கூடியிருந்த பொதுமக்களிடம். . .

இதப்பாருங்க. இந்த ஸ்கூல்ல ஒரு முறை இருக்கு. அதாவது பசங்க லீவு போடுறாங்களான்னு, கட் அடிக்காம க்ளாஸுக்கு வர்றாங்களான்னு வளக்கற உங்களுக்கும் தெரியணும். அதனால முதல் பீரியட்ல யார் யார் வந்திருக்குறாங்கன்னு பாத்து வராதவங்க வீட்டுக்கு ஒரு மெஸேஜ் அனுப்புவாங்க. செல்போன்ல இல்ல. கம்ப்யூட்டர்ல. அது சாஃப்ட்வேர் மாதிரி. அங்க என்ன தப்பு நடந்திச்சுன்னா....”

அபராவை கூட்டிக் கொண்டு போகலாமா என்று அந்த வகுப்பில் இருந்த ஆசிரியையிடம் சாவித்திரி கேட்டாள். இன்னிக்கு கூட்டிட்டு போகலாம் பாருங்க என அழைத்து சென்று கொண்டிருந்த அம்மாக்களை கீழ்தளத்தில் காண்பித்தவுடன் தான் அவளுடைய பிரக்ஞை அந்த பள்ளிக்கே வந்தது. கூட்டி செல்ல அபராவின் கையை தன் உள்ளங்கைக்குள் அடக்கினாள். அப்போது அந்த ஆசிரியை ஒரு நிமிஷம் மேடம் என்று அழைக்க திடுக்கிட்டு திரும்பினாள்.

“. . . அந்த சாஃப்ட்வேர்ல செலக்ட் ஆல் அப்படின்னு ஒரு பட்டன் இருந்திருக்கு. அத தெரியாம க்ளிக் பண்ணிட்டாங்க. பண்ணினவங்க யாருன்னு சொல்ல மாட்டோம். ஆனா இனி இந்த தப்பு நடக்காதுன்னு இந்த ஸ்கூல் அத்தாட்சி குடுக்குது. ப்ளீஸ் இதயும் புரிஞ்சுக்கோங்க. அந்த வேலை செஞ்சவங்களுக்கு மெமோவோ வேலை போறதோ அத மேனேஜ்மெண்ட் பாத்துக்கும். தயவு செஞ்சு பிரச்சினை பண்ணாதீங்க. கூட்டிட்டு போறதா இருந்தா பசங்கள கூட்டிட்டு போங்க.”

அந்த டீச்சர் சாவித்திரியிடம்நாளைக்கு அபராக்கு பிறந்தநாள். ஆனா நாளைக்கு லீவு விட்டாலும் விட்டுடுவாங்க. இன்னிக்கே ஒரு பாட்டு மட்டும் பாடிடலாமா ?” சாவித்திரி பதில் ஏதும் கூறாமல் குழந்தைகளுடன் சேர்ந்து குழந்தையாக அபராவிற்கு ஹேப்பி பர்த்டே பாட்டு பாடிக் கொண்டிருந்தாள். பாடல் முடிந்தவுடன் அபராவை அங்கிருக்க சொல்லிவிட்டு அங்கிருந்து கீழே இறங்கினாள். புன்னகை காலாவதியற்று அவளுடன் குடி கொண்டிருந்தது.

இதை கேட்ட மாத்திரத்தில் பயமும் சோகமும் ஸ்டெல்லாவின் உடலில் தீயாய் பரவியது. அங்கிருந்து நேரே லேடீஸ் ஸ்டாஃப் ரூமிற்கு ஓடி வந்து கொண்டிருந்தாள். அவள் வரும் வழியில் தான் படிகட்டுகள் இருப்பதால் அங்கே சாவித்திரியை மீண்டும் சந்தித்தாள். சாவித்திரி மலர்ந்த முகத்துடன் இருந்தாள். சாவித்திரி ஸ்டெல்லாவைப் பார்த்துஉனக்கு ஒண்ணும் ஆகலையே மா ?” என்று கேட்டாள். செயற்கையான புன்சிரிப்பு பதிலாய் வந்தது.

அனைத்து குழந்தைகளுக்கும் சாக்லேட் வாங்கி வந்து அபராவை வைத்து கொடுக்க சொன்னாள். பள்ளி கொஞ்சம் கொஞ்சமாய் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து,                                                                                                                                

நேரம் : காலை 6:30

ஸ்டெல்லா வேலையை விட்டுவிட்டாள். அவளுக்கு மெமோ தான் கொடுத்தனர். ஆனால் குற்றவுணர்ச்சியுடன் வேலை செய்ய முடியாது என்று வேலையை கைவிட்டுவிட்டாள். அன்று அவளுக்கு விடியற்காலையே தூக்கமின்றி விழிப்பு வந்துவிட்டது. வாசலில் இருக்கும் சுவற்றில் முன்பக்கமாய் சாய்ந்து கொண்டு அந்த தெருவை கண்களால் ஆராய்ந்து கொண்டே தேநீர் அருந்திக் கொண்டிருந்தாள். அது வியாழக்கிழமை என்பதால் சாவித்திரியும் அபராஜித்தனும் அருகிலிருக்கும் தட்சிணாமூர்த்தி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இருவரின் கைகளும் கோர்த்த வண்ணமே இருந்தன. ஸ்டெல்லா வீட்டை கடந்து செல்லும் போது ஸ்டெல்லா வலக்கையால் அபராவிற்கு டாட்டா காட்டினாள். அவனின் முன்பக்க ஓட்டைப்பல் அவளுக்கும் சிரிப்பை கொடுத்தது. வீட்டை கடக்கும் நேரத்தில் வீட்டுக்குள்ளிருந்து ஒரு குரல்

வேலைக்கு போறப்பையே எவனும் பொண்ணு கேட்டு வரல. இப்ப இருந்த வேலையும் போச்சு. எவன் வரப்போறான் ? யாரோ வச்ச செய்வினைனு நினைக்கறேன்!!!”

சாவித்திரி ஸ்டெல்லாவிற்கு தெரியாதபடி புன்முறுவலிட்டாள். அபராஜித்தனால் அந்த சிரிப்பின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

No comments:

Post a Comment