Saturday 28 June 2014

Story 39: சொன்னதை சொல்கிறேன்



சொன்னதை சொல்கிறேன்
 
உலகில் இனி உலா வரப்போகும் கதைகள் அனைத்தும் வியாசரின் எச்சமே  -  முதுமொழி
                                             
நேற்றிரவு கனவில் ஜலவிஹாரி வந்திருந்தான். பூமியிலிருந்து மூவாயிரம் கோடி ஒளி ஆண்டுகள் விலகி இருக்கும் பால் வீதியில் வியாச முனியை சந்தித்ததாகவும் அவன் தன்னிடம் சொன்ன கதைகளை என்னிடம் சொல்ல விரும்புவதாகவும் அவற்றை நான் உங்களுக்கு சொல்ல வேண்டுமென்றும் நாளை வரும் கனவில் அதற்கேற்ப தயாராக இருக்கும்படியும் பணித்தான். அடுத்த கனவு அதே இரவில் உருண்டு திரண்டதில் இன்று நேற்றாகி அன்றே அக்கதைகளை கேட்டதால் நானும் இப்போதே உங்களுக்கு அவற்றை சொல்கிறேன். நீங்கள் இக்கதைகளை கேட்பதற்கு முன் வியாசர் ஜலவிஹாரியிடம் சொன்னதாக அவன் என்னிடம் சொன்ன விதிமுறைகளை நீங்களும் அறிவது அவசியமாகிறது.

1. நம் மரபில் கால அகாலங்கள் கிடையாது. பரசுராமனை ராமனும் சந்தித்தான். கிருஷ்ணனும் சந்திக்கிறான். முன் பின்னாக முரண்பட்டு பின் முன்னாக முன்னேறி முடியும் கதைகள் அநேகம். காலமும் காரணங்களும் முக்கியமில்லை. இக்கதைகளை இணைக்கும் கண்ணியை கூட  மறந்துவிட்டேன் அல்லது மறைத்துவிட்டேன். எனவே கதையும் சுவாரஸ்யமும் அன்றி வேறெதுவும் முக்கியமில்லை.. உலகின் முதல் பின் நவீனத்துவ கதை சொல்லி வியாசனே இதை தன்னிடம் சொன்னதாக ஜலவிஹாரி என்னிடம்  சொன்னான்.

2.நான் உன்னிடம் சொல்லும் கதைகளை நீ மற்றவர்க்கு அப்படியே சொல்லலாகாது. உனக்கு விருப்பமானதை நீக்கலாம். உன் கற்பனைக்கேற்ப மாற்றலாம். மாற்ற வேண்டும். நான் கதைகளை கூறுகையில் நான் உன்னிடம் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்பேன். ஆனால் நீ மூன்று கேள்விகளுக்கு மேல் என்னிடம் கேட்கக் கூடாது.  நான்காவது கேள்வியின் போது கதையை நிறுத்திவிடுவேன்.

3.இது தான் மிக அத்தியாவசியமான் விதிமுறை. வாழ்க்கையும் கதையும் ஒரு விளையாட்டு. அதை விதிகளுக்கு உட்பட்டும் விளையாடலாம். விதிகளை மீறியும் ஆடலாம். ஆனால் விளையாட வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம். இனி கதைகளை தொடங்குவோம்.

கதை ஒன்று : மனசாட்சி

அஷ்வகோஷ் தர்மனுடன் இணைந்து பாரதப் போரில் பங்கெடுத்தான். அவனது முக்கிய நோக்கமே தனது எதிரியான யூகேந்திரனை கொல்ல வேண்டுமென்பது தான். போர் புரிகையில் தான் கொல்லும் ஒவ்வொரு முகத்திலும் யூகேந்திரனையே தேடிக் கொண்டிருந்தான். அவனால் போரின் பனிரெண்டாம் நாள் வரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. தர்மனிடம் இதை சொன்ன போது தர்மன் கடும் கோபம் கொண்டு "உன்னுடைய சுய விருப்பு வெறுப்பின் பேரில் போர் புரியக் கூடாது. யூகேந்திரனை மறந்து விடு" என்றான். அஷ்வகோஷ் தர்மனை மறுத்து "நான் போரிட விழைந்ததே அவனை கொல்வதற்காகத் தான். அவனைக் கொன்றால் தான் என் மனசாட்சி அமைதி கொள்ளும். போர் முடிவதற்குள் அவனை எப்படியும் கொல்வேன்" என சபதம் எடுத்தான். தர்மன், யூகேந்திரன் மீது உனக்கென்ன பகை என வினவிய போது அதை தான் சொல்லலாகாது என்றும் ரகசியம் என்றும் கூறினான். ஆனால் துரியோதனன் பீமனால் கொல்லப்பட்டு த்ரௌபதியின் சபதம் நிறைவேறி போர் முடிந்து பாண்டவர்கள் ஆட்சி அமைக்கும் வரையிலும் கூட அஷ்வகோஷால் யூகேந்திரனை கண்டுபிடிக்க முடியவில்லை. போரின் போது தர்மனுக்கு உற்ற துணையாக  காரணத்தால் தலைமை பொறுப்புகளுள் ஒன்றில் நியமிக்கப்பட்ட அஷ்வகோஷ் முக்கியச் செய்தி ஒன்றை பரப்புரை செய்ய தனது புரவியில் பறந்து கொண்டிருந்த போது இடையே இளைப்பாற சிற்றூர் ஒன்றில் இரவில் தங்கினான். யூகேந்திரனை எதிர் வீட்டில் கண்டான். கண்ட கணமே கொன்று தலைநகரம் திரும்பினான். அப்பாவி குடிமகன் ஒருவனை கொன்றதற்காக அஷ்வகோஷ்  மீது நீதி விசாரணை நடைபெற்றது. தர்மன் அவனை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். அஷ்வகோஷின் மனைவி,  "அவர் தனது மனசாட்சிக்காக கொன்றார். எனக்காக கொன்றார். அவரை கொல்லாதீர்கள்" என தர்மனிடம் இறைஞ்சிய போதும் தர்மன் அதற்கு செவிசாய்க்கவில்லை. "ஓர் உயிரைக் கொல்வது எந்நிலையிலும் பாவம்"  என்றபடி அரண்மனை நோக்கி நடந்தான்.

கதை  இரண்டு :  விண்வெளியில் ஒரு குழப்பம்

ஜலவிஹாரி : புராணக் கதைகளாக கேட்டு சலிப்பாக இருக்கிறதா?

நான் : ஆம். மகாபாரதம் எழுதப்பட்டு ஐம்பதாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டனவே!

ஜலவிஹாரி : அப்படியானால் ஒரு நிஜ அறிவியல் புனைகதை சொல்லட்டுமா?

நான் : சரி.

ஜலவிஹாரி என்னிடம் சொன்னதை நான் உங்களிடம் சொல்வது  : கவனமாகக் கேள். அப்போது காலமும் கடவுளும் உருவாகியிருக்கவில்லை. ஒரு வசதிக்காக உங்களுக்கு விளங்க வேண்டுமென்பதற்காக இப்போதைய அளவுகோல்களைக் கொண்டு இக்கதையை விவரிக்கிறேன். "அது" அப்போதுதான் ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொன்றிற்குமான தூரத்தை நடந்தே அளந்து கொண்டிருந்தது. இந்த 'அது' நீங்கள் பிறப்பதற்கு பல கோடி ஆண்டுகள் முன்னர் உருவாக்கப்பட்டு திரண்டு பின்னர்  கடவுள் என்றழைக்கப்பட்ட சக்தி வடிவம் அல்ல அல்லது 'அது' தன்னை அவ்வாறு நினைத்துக்கொள்ளவில்லை என்றும் கருதலாம். அது அடையாளத்திற்காக, தூரத்தை மிகத் துல்லியமாக கணக்கிட வேண்டுமென்பதற்காக, பால்வெளியில் தான் தொடங்குமிடத்தில் நட்சத்திரத்தின் அருகே ஓர் குறியீட்டை விட்டுச் சென்றது. குறியீடு என்றால் அதற்கும் 'அதை'ப் போலவே எந்த வடிவமும் இல்லை. அந்தக் குறியீடு நேர்க்கோடாகவோ புள்ளியாகவோ கண்ணுக்கு புலப்படக்கூடியதாகவும் இல்லை.அதற்கு ஒரு குறியீடு எவ்வாறு அமைய வேண்டுமென்பது குறித்த தெளிவில்லாததாலும் அப்போது தான் ஒரு குறியீட்டை விட்டுச் செல்ல வேண்டுமென்று தோன்றியதாலும் அது அதை அவ்வாறு அமைத்துவிட்டது. ஆனால் உலகில் உருவாக்கப்பட்ட முதல் குறியீடு அது உருவாக்கிய அந்த இன்னொரு அது தான். 'அது' பால்வீதியை அளக்கத் தொடங்கிய கணம் அதன் அளவற்ற சக்தி பிரவாகமாக ஊற்றெடுத்ததில் அதற்கு  எதிர்வினையாக பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள ஆரம்பித்தது. பின்னர் சூரியனும் மற்ற கிரகங்களும் பால்வீதியை சுற்ற ஆரம்பித்தன. பால்வீதியே வட்டமடிக்கத் தொடங்கியது. பல ஒளி ஆண்டுகளைக் கடந்து 'அது' இன்னொரு நட்சத்திரத்தை அடைந்த போது அங்கே அது முன்னர் உருவாக்கியதைப் போலவே ஒரு குறியீட்டைக் கண்டது. இதை இங்கே யார் உருவாக்கியது என்று திகைத்த அது தான் ஏற்கனவே உண்டாக்கிய குறியீட்டைக் காண விரைந்தது. மீண்டும் பல ஒளி ஆண்டுகள் கடந்த நிலையில் பாதை குழம்பிய அது அந்தக் குறியீட்டை தேடித் தேடி சலித்த போது நட்சத்திரத்திலிருந்து வெகு தூரம் விலகியிருந்த ஒரு குறியீட்டை கண்டடைந்தது. அது, அது உருவாக்கியது போலில்லாமல் பள்ளமாகியிருந்தது. இது தான் அமைத்ததா அல்லது அங்கே இருந்தததைப் போல வேறொரு 'அது' உருவாக்கியதா? அல்லது அதுவும் அல்லாத வேறொரு அதுவா? அல்லது தான் உருவாக்கிய அது தன்னைத் தானே மறு உருவாக்கம் செய்துவிட்டதா? என்றெல்லாம்  மயங்கிய அது தனது குறியீட்டை கண்டுபிடிக்க சுற்றிக் கொண்டே இருக்கிறது. இப்போது கடவுளும் காலமும் பிறந்துவிட்ட பிறகு மனிதர்களும் விஞ்ஞானமும் கோலோச்சும் நிலையில் பெருவெடிப்பின் விளைவாகவே பால்வீதியும் பூமியும் உருவானதாகவும் அதற்கு முன் பால்வீதியே கிடையாது என்றும் 'அது' உருவாக்கிய அக்குறியீடு பெருவெடிப்பினால் ஏற்பட்ட பக்க விளைவு என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 'அது' தான் பெற வேண்டிய பெயரை கடவுளுக்குத் தாரைவார்த்து விட்டு தான் பெற்றெடுத்ததை இன்றுவரை தேடி அலைகிறது.

கதை மூன்று : நடக்கபோவதை அறியும் முன் ஏற்கனவே நடந்த கதை

நான் : அப்படியானால் விஞ்ஞானிகள் தவறான ஒன்றை நிரூபித்து உலகில் ஸ்தாபித்து விட்டார்கள் என்று வியாசர் உங்களிடம் சொன்னாரா? அப்படியானால் அதை அடிப்படையாகக் கொண்டு பின்னர் பல்லாயிரம் ஆண்டுகள் செய்யப்பட்ட, செய்யப்படும் பரிசோதனைகள் எல்லாமே தவறா?

ஜலவிஹாரி : விஞ்ஞானிகள் இம்முடிவை அடைந்தார்கள்  என்று மட்டும் தான் சொன்னேன். அது சரியா தவறா என ஜலவிஹாரியாகிய நானோ வியாசனோ கூறவில்லை. உங்கள் முடிவுகளை எங்கள் முதுகில் சுமையாக ஏற்றாதீர்கள். நடந்த கதை இப்போது உங்களுக்கு தெரியும். இனி நடக்கப் போகும் கதை சொல்லட்டுமா?

நான் : சரி.

நான் ஜலவிஹாரியிடம் கேட்டதை உங்களுக்குச் சொல்வது : ஆனால் அதை அறியும் முன், நான் உங்கள் கனவுக்குள் பிரவேசித்த சில மணித்துளிகளுக்கு முன் நடந்த ஒரு விபத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இரிபிடிஸ் கிரக விஞ்ஞானி ப்ராவ் பால்வெளியின் நூற்றியாறு கிரகங்களுக்கும் அதனதன் உயிர்களுக்குமான மூலத்தையும் அவை அனைத்தையும் தொடர்புறுத்தும் சாதனத்தையும் கண்டுபிடித்ததை ரகசியமாக வைத்திருந்தார். பிரபஞ்சத்தில் உயிர் தோன்றிய முதல் கிரகமான பூமியைச் சேர்ந்த ஆய்வாளர் சகர்ரீவிற்கு மட்டும் அதைச் சொல்லி அவரை இரிடிஸ் வரவழைத்தார். மூலத்தை அறிபவன் கடவுளாவான். அது நிச்சயம் ஆபத்தானது. ஆனால் ப்ராவ் அவர் கண்டுபிடித்த இயந்திரத்தின் ஸ்விட்சை இயக்கினார். நூற்றியாறு கிரகங்களிலிருந்தும் அலையலையாக பாய்ந்தது சக்தி. ப்ராவின் முகத்தில் நிம்மதியும் பெருமிதமும் ஒரு ஒளியாக பரவியதைக் கண்டு திகைத்த சகர்ரீவ், ப்ராவ் கடவுளாவதை ஒரு வினாடியில் உணர்ந்து கொண்டு ஸ்விட்சை கைப்பற்றத் தாவினார். அப்போது தாக்கிய இடி ஸ்விட்சை உருக்குலைத்தது. அதை கைப்பற்றிக்கொண்டிருந்த ப்ராவும் சகர்ரீவும் உறைந்து போய் உயிரிழந்து நின்றிருந்தனர்.

கதை நான்கு : இனி நடக்கப் போகும் கதை

ஜலவிஹாரி பாதியில் அல்லது கால்வாசியில் நிறுத்தியது :  ஒரு மனிதன் கடவுள் குறித்த ஒரு பெரும் உண்மையை கண்டடையும் முனைப்புள்ள ஒரு துரும்பை அசைத்திருந்தாலும் அவன் இறந்து விட்டாலும் கூட வேறொருவன் அதை கண்டுபிடிப்பான். ஆதலால் உலகில் இதுவரை தோன்றிய அனைத்து மனிதர்களும் அழிவது அவசியமாகிறது.

நான் (அதிர்ச்சியுடன்) : என்னது?

ஜலவிஹாரி : இதுவே உலகம் அழியப்போவதற்கான காரணம். உலகம் என்பது உங்களைப் பொறுத்த மட்டிலும் மனிதன் மட்டும்தானே? இதுவே உலகின் கடைசி இரவு என நீங்கள் அறிந்தால் என்ன செய்வீர்கள்? இன்று தான் கடைசி இரவு என நான் சொல்லவில்லை. ஆனால் உலகம் ஓர் இரவில் தான் அழியும்.

நான் : நிஜமாகத் தான் சொல்கிறீர்களா?

ஜலவிஹாரி : நீங்கள் விதிகளை மறந்து நான்காவது கேள்வியை கேட்டுவிட்டீர்கள். இனி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஆனால் நான் உங்களிடம் சொன்னவற்றை நீங்கள் பிறரிடம் கட்டாயம் சொல்ல வேண்டும். உலகின் அத்தனை மனிதர்களையும் தொடர்புறுத்த அதிவேகமாக செய்தியை பரப்ப நீங்கள் உருவாக்கிய அதிநவீன சாதனங்களை விட ஆதி வடிவமான கனவே உகந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வருகிறேன்.

நான் : ஜலவிஹாரி தயவு செய்து நில். எந்த இரவில் அழியும் என்பதை மட்டுமாவது சொல்லிவிட்டுப் போ. முதல் கதைக்கும் மற்றவற்றிற்கும் என்ன சம்பந்தம்? மனசாட்சி!! மனசாட்சி!! அதில் தப்பிக்க வழியுண்டா? ஜலவிஹாரி போகாதே போகாதே. நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அய்யோ.. மூன்று கேள்விகள் தானே கேட்டேன்?

ஆனால் அவன் நிற்கவில்லை. எனக்கும் உலகம் அழியும் இரவு எந்த இரவென்று தெரியவில்லை. நம்புங்கள். அதனால்தான் உங்கள் கனவுகளில் வந்து இதைச் சொல்கிறேன். நீங்களும் மற்றவர்க்கு நிச்சயம் இக்கதைகளைக் கூற வேண்டும். அது வெறும் கனவு என்று மட்டும் என்னால் ஒதுக்கிவிடமுடியவில்லை. நான் புலம்புவதும் கனவின் இன்னொரு பரிணாமத்தில் தானா? பதட்டமாக இருக்கிறேன். இந்த இரவே இன்னும் முடியவில்லையே. இன்று தானா அந்தக் கடைசி நாள் ? நேற்றைய  கனவில் தானே இன்றைக் கண்டேன்? அப்படியானால் நான் இன்னும் நேற்றில் தான் இருக்கிறேனா? இன்று இன்னும் விடியவே இல்லையா? அய்யோ...

No comments:

Post a Comment