Tuesday 9 July 2013

Story-5 தத்துப் பிள்ளை

 தத்துப் பிள்ளை

மதுவைப் போலதான் சிறு துயரமும் ஒரு சர்வாதிகாரி முதலில் மனதை
அடிமைப்படுத்துகிறது பின்பு கொன்றுவிடுகின்றது

பர்வீன் பிஞ்சுக் கைகளை வரித்துப்பார்த்தாள் ஐந்தாறு தூக்க மாத்திரைகள்
மஞ்சள் நிற மின் ஒளியில் கண்களை விழித்துப் பார்த்தது . அவளுடைய கைகளில்
இருக்கும் மாத்திரைகளில்தான் அவளுக்கான முழு நிம்மதி இருப்பதாக
பர்வீனுக்கு தோன்றியது .

'பர்வீன் நீ தத்துப் பிள்ளை'  'பர்வீன் உன்ன வாங்கி வளர்க்கிறாங்க'

இமைகளைக் கடந்து கழுக் என்று விழுந்தது அந்த ஒற்றை கண்ணீர்! பர்வீன்
பாடசாலைக்கு செல்லும்போது மகிழ்ச்சியாகத்தான் சென்றாள் . வாப்பா
தம்பிக்கும் சின்ன தங்கைக்கு மட்டும் வாங்கி வந்த பனீஸை பார்த்துக்
கொண்டுதான் தேநீர் குடித்தாள்

'இன்னா தாத்தா பாதி உனக்கு' என்று சின்னத்தம்பி அவளிடம் நீட்டும் போது
புன்னகைத்துக் கொண்டே மறுத்தாள் . அந்த ஒதுக்குதல் அவளுக்கு பழகிப்
போயிருந்தது பர்வீனுக்கு மெல்லிதான அந்த ஏக்கம் இப்போது தூக்க மாத்திரை
குடிக்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டிருந்தது . நேற்று வரைக்கும் இந்த
ஒதுக்குதல் பற்றிய பர்வீனுடைய அபிப்பிராயங்கள் வேறாக இருந்தது இன்று
மதியத்தோடுதான் இவள் தெளிவான மன நிலைக்கு வந்திருந்தாள் .  நாளை
தம்பிக்கும் சின்ன தங்கைக்கு மட்டும் வாப்பா பனீஸ் வாங்கி வரும்போது
நிச்சயமாக அழப் போகின்றாள்

'இன்னா தாத்தா உனக்கு பாதி' என்று என்று நீட்டும் போது தம்பியின்
கன்னத்தில் அறைந்துவிடப் போகிறாள்

'வாப்பா வாங்கிக்கந்த தாத்தா இன்னா கடிச்சிக்கு தா ' என்று சின்னத் தங்கை
கொய்யாக் கனிகளை நீட்டும் போது

'மகள் உம்மாக்கிட்ட போங்க' என்று உள்ளறையிலிருந்து வாப்பா சின்ன
தங்கைக்கு சொல்வார் அப்போதெல்லாம் வாப்பா அறியாத வண்ணம் புன்னகையோடு
தங்கையை அள்ளி அணைத்து முத்தம் வைத்து உம்மாவிடம் அனுப்புவதற்கு பதிலாக
மார்பில் பிடித்து தள்ளிவிடப் போகின்றாள் .

பாவம் பன்னி ரெண்டு வயதுக் குழந்தை வேறு என்ன செய்யும் . மாலை வேண்டா
வெறுப்பாக விளையாடி முடிந்ததும் கைப் பாவைகளை கொய்யா மர நிழலில் வீசி
எறிந்தாள் .சின்னத் தங்கை
'தாத்தா எண்ட புள்ளக்கி சட்ட போட்டுத் தா' என்று கைப் பாவையை நீட்டிய
போது தள்ளிவிட்டாள் பர்வீனுக்கு வெறுப்பை எதன் மீது எப்படி காட்டுவதென்று
தெரியவில்லை

பாடசாலை முடிந்து வீடு வந்ததும் பர்வீன் தொலைக் காட்சி பார்த்துக்
கொண்டுதான் சாப்பிடுவாள் அந்த நேரங்களில் தொழிலுக்கு என்று வெளியில்
சென்றிருக்கும் வாப்பா வீட்டுக்கு வந்தால் முதலில் எரிந்து விழுவது
பர்வீன் மீதுதான் 'கரண்ட் பில் யாரு கட்டுற' என்று முனு முனுத்தபடியே
தொலைக் காட்சியை அணைத்து விடுவார் பர்வீனுடைய பிஞ்சு மனசு ஏங்கித்
தவிக்கும் .  தம்பியோ உம்மாவோ தொலைக்காட்சி பார்தால் வாப்பா ஏன்
திட்டுவதில்லை தொலைக் காட்சியை அணைப்பதில்லை நான் போட்டால் மட்டும் ஏன்
வாப்பா திட்டுகிறாறார் அணைக்கிறார் என்று நிறைய தடவைகள்
நினைத்திருக்கிறாள் அழுதிருக்கிறாள் அதற்கான காரணம் இன்றுதான்
பர்வீனுக்கு விளங்கியது

இன்று பாடசாலையில் இருந்து வந்ததும் தொலைக்காட்சி பார்க்கவில்லை .  முகம்
கழுவிக் கொள்ள கிணத்தடிக்கு சென்றாள் அங்கு வாப்பா போட்டுக்கொள்ளும்
சவர்க்காரம் மட்டும்தான் இருந்தது அதனை உருவி எடுத்து முகத்தில் தேய்த்து
கொண்டோதுதான் குளிப்பதற்காக அங்கு வந்த வாப்பா பர்வீன் அவருடைய
சவர்காரத்தை முகத்தில் தேய்த்து கொள்வதை பார்த்தார் 'ஒனக்கு வேற
சவுக்காரம் இரிக்கிதானே பிறகு ஏன் என்ர சவுக்காரத்தை உன்ர ஒசில் சொத்தை்ல
தேய்க்க' என்று பர்வீனை திட்டிவிட்டு கடைக்கு சென்று புது சவர்க்காரம்
வாங்கிக் கொண்டு வந்தார் . வாப்பா குளிக்கும்போது நிறைய தடவை உம்மா தம்பி
எல்லாம் வாப்பாவின் சர்காரத்தை அவர் முன்பாகவே தேய்த்து கொள்வதை
பார்த்திருக்கிறாள் அப்போதெல்லாம் வாப்பா ஒரு வார்த்தை கூட
பேசுவதில்லை...

பர்வனின் பிஞ்சு மனசு பாரமாக இருந்தது .  அறைக்குள் சென்றதும்
கண்ணாடியில் பார்த்தாள் வாப்பா சொன்னதை போல இல்லாமல் அவளது மும் ஒசிலாக
இல்லை அழகாகத்தான் இருந்தது . மதியம் பர்வன் சாப்பிடக் கூட இல்லை உள்
அறையில் சாய்வாக படுத்துக் கொண்டாள் கண்களில் ஒரு மழை காலம்
உற்பத்தியானது . இரண்டு மூன்று தடவை உம்மா வந்து சாப்பிட அழைத்தாள்
வருத்தமா என்று கேட்டாள் பர்வீன் எதற்கும் பதில் சொல்லவில்லை உம்மா
அருகில் வரும் போது மட்டும் தலை அணையில் முகம் புதைத்து தூங்குவது போல
நடித்தாள் பர்வீனுக்கு தெரியும் அவள் அழுதால் அவளுடைய உம்மாவும் அழுவாள்
என்று .  உம்மாவின் அன்பையும் அழுகையையும் தவிர பர்வீனுக்கு அந்த
வீட்டில் வேறு சுதந்திரம் எதுவுமே இருக்கவில்லை. 'இல்லை இனியும் வாழ
முடியாது' முன்பென்றால் உம்மாவின் மடியில் ஓடிச் சென்று படுத்திருப்பாள்
.  வாப்பா இப்படி செய்யும் போதெல்லாம் அவள் உம்மாவின் மடில்தான் சென்று
படுத்துக்கொள்வாள் உம்மாவின் மடிமீது பர்வீனுக்கு அவ்வளவு விருப்பம்
இருந்தது .  ஆனால் இன்று அழ மட்டும்தான் தோன்றியது தாயின் மடியை
வெறுத்திருந்தாள் . 2 சென்ற பெருநாளின் போது வாப்பா அவருக்கும்
உம்மாவுக்கும் தம்பி தங்கைக்கு மட்டும்தான் புது உடுப்பு வாங்கி
வந்திருந்தார் பின்பு உம்மாவோடு சென்றுதான் பர்வீன் புது உடுப்பு
எடுத்தாள் .  அன்று உ்மா அழுதபோது 'வாப்பாக்கு கொல வெறி கிற் எல்லாம்
எப்பிடி உம்மா தெரியும் அதான் எனக்கி வாங்காம வந்திரிக்கார் குளறாதேங்க
உம்மா' என்று உம்மாவை தேத்தியவள் பர்வீன்தான் 'உம்மா தாய் பால்
தந்திரிப்பாவா..?'

 ' என்ன பெத்த உம்மா எப்பிடி இரிப்பா..?

 'உம்மாட வகுத்து நான் பொறக்கல எண்டுதான் வாப்பா என்ன மட்டும் ஒதுக்கு வைக்காரா..?'
'தம்பி தங்கச்சி பிறக்கும்வரை வாப்பா என் மேல பாசமாதானே இருந்தார்
சிவப்பு நிற சைக்கிந் வாங்கித் தந்தார்.. அதில என்ன ஓடப் பழக்கினதும்
வாப்பாதானே இப்போ நிறைய மாறிட்டார்'

கதவை திறந்து கொண்டு விரைவாக ஓடிவந்து அவள் மடியில் நிரம்பிக் கொண்டது
நிறைவான ஒரு சோகம் .

'பர்வீன் நீ தத்துப் பிள்ளை '

'பர்வீன் உன்னை வாங்கி வளர்க்கிறாங்க'

அந்த ஞாபகம் வரும் போதெல்லாம் இதயம் உடைந்து அழுதாள் பர்வீன் .
'இண்டைக்கு பள்ளிக்கு போயிருக்கவே கூடாது ரமீசோட சண்டை பிடிச்சிருக்கவே
கூடாது '

' அவனோட சண்டை பிடிச்சதாலதானே அவன் என்ன பார்த்து வாங்கி வளர்க்க புள்ள எண்டான்'

அழுது கொண்டிருந்த பர்வீனை நோக்கி பழைய ஞாபகங்கள் அணையை உடைத்துக்கொண்டு
ஓடி வந்தது. பாடசாலை முடிந்து வரும் போது பர்வீன் ரமீசோடு சண்டையிட்டாள்

 'போடா குரங்கு '

'போடி டைனோசர்'

'வாங்கி வளக்க புள்ள'

' போடா உன்னத்தான் உண்ட உம்மா குப்ப தொட்டியில இருந்து புறக்கி
வளக்காவாம் ' என்று விட்டு சிரித்த போதுதான் பர்வீனுடைய தோழி பாயிஸா
அவளுடைய காதருகே வந்து மெதுவாக சொன்னாள் ' பர்வீன் ரமீஸ் செல்றது
உம்மதாண்டி எண்ட உம்மா செல்லியிருக்கா உன்ன தமிழாக்களுக்கிட்ட வாங்கி
வளக்காங்களாம் உன்னோட சேரபோடா எண்டு உம்மா எனக்கிட்ட செல்லியிருக்கா
உம்மாக்கு தெரியாமதான் நான் ஒன்னோட கதைக்கன்'




'புள்ள இல்லண்டா சும்மா இருக்காம என்னத்துக்கு என்ன வாங்கி வளர்த்தாங்க'

 'பெத்த புள்ளயள் மேலதான் வாப்பா பாசம் காட்டுறார் '

'நான் ஆரு அவருக்கு ஒரு பாரம் ஒரு துயரம்'

'பர்வீன் இனி ஒவ்வொரு நாளும் உனக்கு நரகம்தான் '

'நாளைக்கும் வாப்பா தம்பிக்கும் தங்கைக்கும் மட்டும்தான் பனீஸ் வாங்கி
வருவார்'  பர்வீனின் மார்பு பாறாங் கல்லால் நிரம்பியிருந்தது .  உண்மையான
தந்தை பாசத்திற்காக பர்வீன் ஏங்கும் போதெல்லாம் அவள் அழுததே இல்லை ஆனால்
வளர்ப்பு பிள்ளை என்பதனால்தான் தன்னை வாப்பா ஒதுக்கி வைக்கிறார் என்பதனை
நினைக்கும் போது பிஞ்சு பறவை சிறகு உடைந்து விட்ட வேதனையால் துடித்தது .
பர்வீனால் அந்த துயரத்திலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும்
ஏக்கத்திலிருந்தும் மீழவே முடியவில்லை .

இப்படியான ஒரு தயரக்கணம்தான் நம்மை வீழ்தி விடுகிறது பின் கொன்று
விடுகிறது .  தற்கொலை செய்பவர்கள் கோளைகளல்ல கோளையாக்கப்பட்டவர்கள் .

பர்வீன் புத்தகப் பையை திறந்து கொப்பி ஒன்றை எடுத்தாள்
அதில் கண்ணீர் நிரப்பிய பேனாவால் எழுத ஆரம்பித்தாள் வேறு தாயின்
ரத்தத்தால் பேனா சிவப்பு நிறத்தில் எழுதியது

' என் வளர்ப்பு உம்மாவுக்கு உன் மேல எனக்கி கோபம் இல்ல உம்மா வாப்பா
மேலதான் கோபம் என்ன ஏன்மா வாங்கி வளர்த்த நான் ஏன் உன் பிள்ளயா பிறக்கல
வாப்பா அவர் பெத்த புள்ளயளோட மட்டும்தான் இரக்கம் காட்டுறார் உடுப்
சாப்பாடெல்லாம் வாங்கி குடுக்கார் ரீ.வி பாக்க விடுறார் என்ன மட்டும்தான்
ஒதுக்கி வைக்கார் இவளவு நாளும் எனக்கி தெரியா உம்மா நான் வாங்கி வளக்க
புள்ள எண்டு இனி வாப்பா செய்ற ஒவ்வொன்றுக்கும் குளறுவன் உம்மா வாழ
ஏலாம்மா இனி என்னால நாம நேத்து பார்த படத்துல ஆறு நித்திர குளிச குடிச்சி
செத்தாளே அத போல நானும் மெளதாக போறன் உம்மா

தம்பிக்கி அடிச்சி போட்டன் அவன் கேட்ட சிவப்பு பென் இதுதான் எடுத்துக்க
சொல்லு தங்கச்சி பொம்மைக்கு சட்ட போட்டு தர சொன்னா சட்ட போட்டு மேசைல
வச்சிருக்கேன் எடுத்து குடும்மா பாவம் என் செல்லத்த தள்ளி விட்டுட்டேன்
.

உம்மா உன் பர்வீன் உன்ன விட்டு போறேன்மா குளறாத சரியா கனவுல வருவன் உம்மா
உம்மாக்கு கடைசி 100000 முத்தங்கள்

 -பர்வீன்


கண்ணீர் துளி கடிதத்திற்கு முற்றுப் புள்ளி இட்டது

பர்வீன் இடது கையை விரித்துப் பார்த்தாள் 'பிரீற்றன்' மாத்திரைகள் வெள்ளை
வெளீர் உடம்போடு பளிச்சிட்டன .  பர்வீன் பளிங்கு கிளாசில் தண்ணீர்
எடுத்து வந்தாள் .  வாப்பாவை தவிர எல்லோரையும் ஒரு தடவை பார்த்துவிட்டு
வந்தாள் .  வெள்ளை மாத்திரைகளை போல அவளது மரணமும் அவ்வளவு இலகுவாய்
நிகழ்ந்துவிடப் போகிறது இறுதியாய் மாத்திரைகளோடு வாழ்வைப்பர்த்து
புன்னகைத்தாள் .  உள்ளங் கையில் இருந்த தூக்க மாத்திரைகளை ஒவ்வொன்றாய்
வாயிலிட்டு தண்ணீர் குடித்தாள் .  இறுதி மூச்சுக்கள் நிம்மதியாய் இருந்தன
மரணத்தைப் பற்றிய நினைவை தவிர பளிங்கு கிளாசை போல மனசு வெறுமையாக
இருந்தது .பளிங்கு ளாளாசின் ஓரங்களைப் பார்க்கும் போது கிளாஸ் அவளுக்காய்
உருகி அழுவது போலவே இருந்துது

இனி பர்வீன் நிம்மதியாக இறப்பாள்

No comments:

Post a Comment