Wednesday 31 July 2013

Story-82 தற்கொலை?

தற்கொலை?

"போச்சையா இன்னிய நிம்மதி", இன்ஸ்பெக்டர் பாண்டியன் வெறுப்போடு தொப்பியை அணிந்தார். மணிவண்ணன் அவரை பின்தொடர்ந்தார். "என்னையா ஆச்சி இந்த பசங்களுக்கு. இந்த ரெண்டு வாரத்துல இதுவரைக்கும் 3 பேர். எல்லாம் நல்லா சம்பாதிக்கிற பசங்க. அதுவும் மாடியில இருந்து விழுந்து சாவுறாங்க." என்றார் அவர் ஜீப்பை ஓட்டிக்கொண்டே.  "எம்பையன்கூட கம்யூட்டர் வேலைதான் சார். சம்பளம் நல்லா இருந்தாலும் அவன் நிம்மதியா  இல்ல சார். எனக்கு இதப்பாத்து பயமா இருக்கு சார்". என்ற மணிவண்ணன் குரலில் நிஜமான கலை தொனித்தது.
அந்த அடுக்குமாடி குடியிருப்பை அவர்கள் அடைந்தபோது, கீழே விழுந்துகிடந்த சதீஷின் சடலத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் தனது கேமராவில் நிரப்பிக்கொண்டிருந்தார், சரவணன்.
"இந்த சி.பி.ஐ. சனியன் அதுக்குள்ள வந்துட்டான்யா. விடிஞ்சமாதிரிதான்", என்று சலித்துக்கொண்டார் பாண்டியன். 
"நாலு படம் எடுத்தா போதாதா சார். பாருங்க... ஏன் நம்ம போட்டோகிராபர் எடுக்கிறத பாக்க மாட்டாரா..." தன் பங்கை நிறைவுசெய்தார் மணி.
சுற்றி இருப்பவர்களை விசாரிக்க தொடங்கினார் பாண்டியன். 
"டிவி பார்த்துக்கோண்டிருந்தேன் சார். திடீர்னு சத்தம். சன்னல் வழியா பாத்தா  இந்த புள்ள... ஓடிவந்தேன். சிகரெட்டு பத்த வச்சி கையில வச்சிருந்திருக்கும் போல. கால்ல சுட்டிடுச்சி சார்."
பாண்டியன் குறிப்பெடுத்து முடிக்க, சரவணன் அவரை அழைத்தார். சிகரெட் விழுந்திருந்த இடத்தை, படமெடுத்தார். பற்றவைத்து ஒரு நிமிடத்திற்குள் இவர் மிதித்து இருக்க வேண்டும்.
உடலை எடுத்து பரிசோதைக்கு அனுப்பும் வேலைகள் நடந்துகொண்டிருக்க, ஆறாவது மாடியில் இருந்த அபார்ட்மெண்டுக்குள், நுழைந்தனர். பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கு மறு சாவி அந்த அபார்ட்மெண்டின் வாட்ச்மேனிடம் இருக்க, அவனை விசாரித்தார்.
"நல்ல மனுஷன் சார். வீட்டுக்கு தேவையானது நாந்தான் பாத்துப்பேன். ரெண்டு வருஷமா இருக்கார் சார். அவரோட அம்மா அப்பா மூணு நாலு மாசத்துக்கு ஒருமுறை வருவாங்க. அவரோட பிரண்டுங்க நெறைய பேர் வருவாங்க சார். அதுல ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண போறதாகூட சொல்லி இருந்தார் சார். இன்னிக்கிகூட அந்தம்மா வருவாங்கன்னு சொல்லி இருந்தார் சார்."
அப்போது இவன் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பு இல்லையோ என நினைத்தார் பாண்டியன்.
அப்போது, சதீஷின் நண்பர்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர். 
நான் சதீஷின் அலுவலகத்தில் HR மேனேஜர், என அறிமுகப்படுத்துக்கொண்டவரை தனியாக அழைத்தார். அதை தொடர்ந்த அவரின் அத்தனை விசாரணைகளும், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவே இருந்தது. சரவணன் உடன் இருந்தாலும், அவ்வப்போது அவர்களிடம் தனியாக கேள்வி கேட்கவும் தவறவில்லை.
"தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு பிரச்சினை இருந்ததா என தெரியவில்லை. ஆனால், சதீஷை பொறுத்தவரை, கொஞ்சம் சிக்கலான ஆள் சார். அவருடன் நெருங்கி வேலை செய்திருப்பவர்கள் வந்திருக்கிறார்கள். கேளுங்களேன். கொஞ்சம் திருட்டு குணம் இருக்கும் என கேள்வி. தான் பெரிய ஆள் என்ற நினைப்பு. சக ஊழியர்களை மரியாதை குறைவாக பேசுவார். அவர் ஜாதியைவிட உயர்ந்த ஜாதி பெண்ணை காதலிப்பதாக கேள்வி. அவர் நண்பர்கள் சிலர் அவரை "விஞ்ஞானி" என அழைப்பார்கள். புத்திசாலி ஆனால், அவரால் அவ்வப்போது நிறுவனத்துக்கு பிரச்சினை வந்திருக்கிறது. சில பெரிய சிக்கல்களை தீர்த்து, எம்.டி.யிடம் கொஞ்சம் நல்ல மதிப்பு". இப்படி முடித்தார் அந்த எச்.ஆர். மேனேஜர். 
இவர் உண்மை சொல்கிறாரா இல்லை அவர்மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியை கொட்டுகிறாரா என்ற சந்தேகம் வந்தது பாண்டியனுக்கு.
"நான் அவருடன் வேலை செய்கிறேன். நல்லவந்தான் சார். ஒரு வாரம் முன்னாடிதான் கிளையண்ட் கிட்ட பேசிகிட்டிருக்கும்போது என்னோட சொலுஷன் தப்புன்னு சொல்லி உடனே சிம்பிளா சொலுஷன் கொடுத்து அம்பதாயிரம் டாலர் ப்ராஜக்டை ஒரே நாள்ல ஒழிச்சிட்டான் சார். எம்.டி கன்னாபின்னானு திட்டினார் சார்."
"சதீஷையா?"  என்றார் சரவணன். "இல்ல சார் என்னை. ஏன் முதல்ல சதீஷை கன்ஸல்ட் பண்ணலன்னு. சதீஷையும் திட்டினாரு... எதுக்கு கிளையண்ட் எதிர்ல அத சொன்னனு. அதில இருந்து நான் அவனை சரியா கண்டுக்கல சார்".
இதைத்தான் அந்த எச்.ஆர். நஷ்டம் என்றாரா? இது அத்தனை மன உளைச்சல் தருமா? பாண்டியன் எண்ணமிட்டார்.
"சார் நான் சதீஷோட ப்ராஜக்ட் மேனேஜர். அவன் கிராமத்துல இருந்து வந்தவன் சார். அதனால நாகரிகம் தெரியாது. என்னோட ப்ராஜக்டுக்கு என்னோட US கூட்டிப்போனேன். க்ளையண்ட் இண்டர்வியு. ப்ளேசர் எல்லாம் வாங்கி வந்து போட கத்து தந்து டை கட்ட கத்து தந்து அனுப்பினேன் சார். என்ன பண்ணினான் தெரியுமா? ப்ளெசர் போட்டு டை கட்டி ஷூ போட்டுட்டு வெள்ளை கலர்ல ஸ்போர்ட்ஸ் ஷூக்கு போடர சாக்ஸ் போட்டு போயிருக்கான் சார். அந்த வெள்ளைக்காரன் கவனிக்கலையோ என்னமோ. ப்ராஜக்ட் கெடச்சது சார். ஒருவாரம் ஹோடல்ல இருக்கனும். அப்புறம் தனி வீடு இல்ல அபர்ட்மெண்ட் எடுத்துக்கலாம். என்ன பண்ணினான் தெரியுமா சார்? அந்த ஊர் ஹோடல்ல இருந்த டர்கி டவல்ல எடுத்துண்டு வந்துட்டான் சார். எங்களின் டவல் உங்களுக்கு பிடித்திருக்கிறதென்றது என அறிகிறோம், அதற்கு 25 டாலர் என கம்பெனிக்கு பில் வந்துச்சி சார். கேட்டா தவறி வந்துச்சி இது எதுக்கு சார் எனக்கு... எனக்கு காசி துண்டுதான்சார் புடிக்கும் அப்படின்னான் சார். நம்பிட்டேன். பத்து டாலர் இருக்கும் சார் ஒரு செயின், ஒரு மால்ல. அத்த பாக்கெட்ல போட்டுகிட்டு பில் தராம வர முயற்சி பண்ணான் சார். அவனுங்க குளோஸ்டு சர்கியூட்டு கேமெராவுல வாட்ச் பண்ணி புடிச்சிட்டனுங்க. போன் பண்ணி அழுதான் சார். நாந்தான் போய் இல்ல இவர் அப்படி பட்டவர் இல்ல. இந்த செயினை தள்ளு வண்டியில வைக்க முடியாது, அதனால் பாக்கெட்டில் வைத்தார். பின் மறந்துவிட்டார் என... எப்படியோ. எங்க கம்பெனி எம்.டி. தயவுல விவகாரமாகல சார். அடுத்ததுதான் உச்சம். அவன் எத்தனை புத்திசாலியா இருந்தாலும், சாக்ஸை துவைக்காமல் போட்டு கம்பெனிய நாறடிப்பானா சார். க்ளையண்ட் கூப்பிட்டு என்னை வார்ன் பண்ணிட்டு ப்ராஜக்டை புடுங்கிட்டான். இங்க என்ன பண்ணானோ சார். இந்த மாதிரி ஜென்மங்கள் இருக்கணுமா சார்?"
இந்த ஆளிடம் நாம் கேட்டது வேறு இவன் சொல்வது வேறு. என்ன செய்ய? பாண்டியன் யோசித்துக்கொண்டிருக்கும்போது கதாசிரியர் சொன்னார்... இது அத்தனையும் நடந்த கதை ஆனால் வேரொரு இடத்தில் என்று.
அப்போதுதான் நிர்மலா வந்தாள். அவள் கண்களில் நீர்திரை. "சார், இவங்கதான் சதீஷ் சார் கல்யாணம் பண்ண இருந்தவங்க." வாட்ச்மேன் அறிமுகப்படுத்தினார். 
"எதற்கு சதீஷ் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?", பாண்டியனின் கேள்வி கொஞ்சம் அனாகரீகமாக இருந்தது.
"யார் சார் சொன்னார்கள் தற்கொலை என்று?" அனல் தெறித்தது நிர்மலாவின் கேள்வியில்.
"அது... வந்து... " பாண்டியனிடம் பதில் இல்லை.
"இங்கிருந்த வீடியோ ரெகார்டர் எங்கே?". அடுத்த நொடி சரவணன் கொண்டு தந்தார். "நான் கடைசி வீடியோ பார்த்தேன். யூகித்துவிட்டேன் மேடம்." என்றார் சரவணன்.
"அந்த DVD ஐ போடுங்கள்", என்றாள் நிர்மலா.
திரையில். சதீஷ், அங்கேயே நில் என்றான். நிர்மலா நிற்க, கேமெரா அவளை அணைத்து அவள் பின் இருந்த கடலை அதன் மேல் இருந்த படகுகளை விழுங்கிக்கோண்டிருந்தது காட்சிகளாக. நிர்மலா பால்கனி தடுப்பில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள். காட்சி மாறி, சதீஷ் பல்கனிக்கு நடந்து கொண்டிருந்தான். சிகரெட்டை வாயில் வத்துக்கொண்டு பற்ற வைக்க யத்தனித்து, பால்கனி சுவரில் சாய, காமிரா தடுமாறியது.
"சாரிப்பா, நான் இந்த தூணில் சாய்வதாக எண்ணி, இந்த பாரபெட் வாலில் சாய்ந்துவிட்டேன்." என்றது  சதிஷின் குரல். காமிரா தரையை பார்த்துக்கொண்டிருந்தது.
"முட்டாள். பெண்களின் உடலில் புவி மையம், தொப்புளுக்கு கொஞ்சம் கீழே இருக்கிறது. ஆண்களுக்கு தொப்புளுக்கு மேல். அன்றே உனக்கு சுவரில் சாய்ந்து எழுந்து இதை விளக்கி காட்டினேன் அல்லவா. உலகளவில் நம் வேலை மட்டும்தான் - மென்பொருள் துறை மட்டும்தான் வளர்ந்திருக்கிறது. இந்த வேகத்தில் மற்ற துறைகள் வளரவில்லை. இன்னும் கொஞ்சம்... தவறி இருந்தால் நீ விழுந்திருப்பாய். முதலில் இந்த பால்கனி தடுப்பை உயர்த்து. The center of Gravity in a Woman's body is just below her naval. Whereas for a man it is above their naval. Woman are shorter than man. This parapet wall is not designed properly. For me it is OK to lean on it. Not for you stupid. I proved you."
மென்பொருள் துறை வளர்ந்ததால் அங்கு மாற்றம். மற்றவை வளர, வெள்ளைக்காரனுக்காக காத்திருக்க வேண்டுமா? நம்மால் முடியாதா. இல்லை, கற்றது தமிழ் அவனுக்கு ஏன் அத்தனை சம்பளம் என ஒப்பாரி மட்டும் வைக்கலாமா?
ஆமாம். இந்த வேகத்தில் மற்றவர்களும் வளர வேண்டும். பொறாமை மட்டும் போதாது.

No comments:

Post a Comment