உமையாள்
மலைக்கோட்டை ஆண்டாள்
தெருவிலிருக்கும் 65 வீட்டு
பெண்களுக்கும் உமயாள்
மீது அளவு
கடந்த மரியாதை.
அவள் ஓய்வுபெற்ற
போலீஸ் டி.எஸ்.பி மனைவி
என்பதால் அல்ல.
அவள் ஒரு
தெய்வீகப் பெண்மணி.
சாமுத்ரிகா லட்சணம்
என்று சொல்வார்களே?
அப்படியொரு லட்சணம்.
எலுமிச்சை நிறம்.
பௌர்ணமி நிலவு
போல் ரவுண்டு
மூஞ்சி. பெரிய குங்குமப் பொட்டு,
சந்தனம், விபூதி, ஜவ்வாது, இரட்டைவடம் சங்கிலி சகிதம்
தான் எப்பொழுதும்
வலம் வருவாள்.
உமயாள் நடந்து
வந்தால் வேலையை
அப்படியே போட்டுவிட்டு
வந்து பெண்கள்
குசலம் விசாரிப்பார்கள்.
முக்கால்வாசி இளம்பெண்கள்
தங்கள் கணவருடன்
போட்ட சண்டைகளைக்
கொட்டித் தீர்த்து,
உமயாளிடம் யோசனைப்
பெற்று செல்வார்கள்.
அவள் யோசனைகளின்
ஊற்று!
"ஏன்டீ, மணி என்ன ஆகுது?
எப்ப போன
எப்ப வர்ற?
ஆன்..."
என்று தினமும்
செல்லமாக அதட்டுவார்
ராமசாமி.
"ரெண்டு மந்நேரம்
ஒங்களால பொழுத
தள்ள முடியாதா?"
"என்னது ரெண்டு
மந்நேரமா? கோயிலுக்குப் போறேன்னு 5க்குப் போய்ட்டு 7.30க்கா வர்றது? அதுக்கு முன்னாடி அவள்ட்ட
பேசிட்டு வரேன்
, இவள பார்த்துட்டு
வரேன்னு மத்யானம்
2 மணிக்குப் போய்
4.30க்கு வந்த.
காபிய குடிச்சுட்டு
கோயிலுக்கு கிளம்பிட்ட.
கார்த்தால வடாம்
புழியறேன்னு மொட்டை
மாடில நாலு
பொம்மனாட்டிங்க சேந்துகிட்டு
வெட்டிக்கதை மணிக்கணக்கா
அடிக்கறீங்க. அவனவன்
இங்க தவிச்சுப்
போய் கடக்கான்"
மனிதருக்கு கோயில்
போகும் பழக்கம்
எதுவும் கிடையாது.
எல்லாரிடமும் வம்பு
அளக்க மாட்டார்.
ரொம்பவும் ஸ்டேடஸ்
பார்ப்பார். நண்பர்களை
விரல் விட்டு
எண்ணி விடலாம்.
நாள் முழுக்க
உமையாளை அறுத்துத்
தள்ளுவார்.
"காலார கொஞ்ச
நேரம் நடந்து
போய்ட்டு நாகநாத
சாமியைப் பார்த்துட்டு
வந்தேன். மனசுக்குத் தெம்பா இருக்கு...கோயிலுக்குப் போனது
குத்தமா?"
"அதுக்கில்லம்மா..." என்று
ஆரம்பித்த ராமசாமியை
இடைமறித்த உமையாள்,
"ச்.
ஏங்க! அந்த தாசில்தார்ட்ட பத்தரம்
சம்பந்தமா பேச
சொன்னேனே பேசினீங்களா?
அப்புறம் அந்த
கொல்லப்பக்க பைப்புக்கு
பிளம்பர்ட்ட சொல்லீட்டங்களா?"
"அதெல்லாம் சொல்லியாச்சு.
நாளைக்கு ஒடம்புக்கு
முடியாம ஹெல்ப்
தேவப்பட்டுதுன்னா பசங்க
கூட இருந்தாங்கன்னா தைரியமா இருக்கும்..மூத்த மருமக ஒழுங்கா
தானே இருக்கா...அங்க போய்டலமா?"
"பெங்களூருக்கா? அங்க
இருக்கற க்ளைமட்டுக்கு
உங்களுக்கு வீசிங்
ப்ராப்ளம் அதிகமாயிடுது.
அது சரி,
சம்பந்தம் இல்லாம
எதுக்கு இப்படி
பேசறீங்க டி.எஸ்.பி.
சார்? நீங்க இப்படி பயப்படலமா?
62ல்லாம் ஒரு
வயசா? பைபாஸ் பண்ணாலும் ஜம்முனு
தானே இருக்கேன்.
எல்லாம் ஒரு
எழுபது வயசு
ஆகட்டும். தள்ளாம வந்ததுக்கு அப்புறம்
பாத்துக்கலாம்..."
டி.எஸ்.பி வீட்டில்
எப்பொழுதும் மீனாட்சி
ஆட்சி தான்.
பிள்ளைகளை நன்றாக
படிக்க வைத்து
ஆளாக்கி, கல்யாணம் செய்து வைத்தது
எல்லாம் உமயாள்
தான். பிள்ளைகளுக்கும் அம்மா என்றால்
ரொம்ப உயிர்.
ராமசாமி எப்பொழுதும்
வேலையைக் கட்டிக்கொண்டு
அழுவார். வொர்க்கஹாலிக். குடும்பத்தைப் பொறுத்தவரை
நல்லது கெட்டது
எதுவும் ராமசாமிக்குத்
தெரியவே தெரியாது.
ஜட்டியைக் குளித்து
விட்டு பாத்ரூமில்
அப்படியே மூலையில்
போட்டுவிட்டு சென்றுவிடுவார்.
சாப்பாட்டை பிசைந்து
கொள்ள மாட்டார்.
உமையாளே சாம்பார்
சாதம், தயிர் சாதம் என
எல்லாம் பிசைந்தே
போட்டுவிடுவாள். சாப்பிட்டத்
தட்டையும் எடுக்க
மாட்டார். ஆயினும், மனிதர் வேலையில்
படு சமர்த்தர்.
பல விருதுகளை
வாங்கி குவித்துள்ளார்.
உண்மையில் அவர்
வீட்டில் இப்படி
ஆனதற்கு காரணமே
உமையாள் தான்.
அம்மணி எள்
என்பதற்குள் எண்ணெயாக
நிற்பாள். ராமாசாமியின் வீட்டு நடவடிக்கைகளைப் பார்த்தால் இந்த மாதிரி
பெயருடன் அவருக்கு
மனைவி அமைந்தது
தற்செயலா அல்ல
அவர் செய்த
முன்ஜென்ம புண்ணியமா
தெரியாது.
"இங்க பாருங்க!
நாளைக்கு எனக்கு
ஒண்ணுக்கெடக்கு ஒண்ணு
ஆயிடுச்சுன்னா, முழிச்சுக்கிட்டு கெடக்காதீங்க."
ராமசாமியின் கண்களில்
பட்டென்று கண்ணீர்
எட்டிப்பார்த்தது. பிறகு,
எதுவும் பேசாமல்
கண்களைத் துடைத்துக்
கொண்டார்.
"அடடா! என்னதிது? கேளுங்க. நம்ம மின்னப்பன் தெருல
மளிகை கடை
இருக்குதுல்ல? அதுக்குப்
பக்கத்துல இருக்கற
அய்யரைத் தான்
கருமாதிக்குக் கூப்பிடணும்.
புரியுதா? கோடி வீட்டு லட்சுமி
பாட்டி எறந்தப்பவே
என்னன்ன செய்யணும்,
காரியத்துக்குத் தேவையான
பொருட்கள் என்னன்ன,
இப்படி ஒரு
கருமாதி லிஸ்ட்
அய்யர் கொடுத்தாரு.
நான் ஜெராக்ஸ்
போட்டு பீரோல
சேப்பு டப்பால
வச்சுருக்கேன். அது
கூட நான்
கைப்பட வேற
தெளிவா எழுதி
வச்சுருக்கேன். அதே
மாரி பண்ணிக்கனும்".
"மனசுல நீ
என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்க. இந்த மாதிரி
எல்லாம் எதுக்கு
பண்ற?" என்று இரைந்தார் ராமசாமி.
"காது குத்து,
புதுமனை புகுவிழா,
அந்த மாரி
இதுவும் ஒரு
சடங்கு தாங்க.
தேவப்படும்னு தான்
வாங்கி வச்சேன்.
நம்ம பசங்களுக்காவது தேவைப்படுமே. எல்லாம் அமெரிக்கா,
அங்க இங்கனு
சுத்திகிட்டு இருக்காணுங்க.
யாருக்காவது எழவு
வீட்டுல என்ன
பண்ணுவாங்க, காரியம்
எப்படி பண்ணணும்னு
தெரியுமா?"
"ச்சீ பேசாதே.
இப்படியா இருப்பா
ஒரு பொம்பள?
கருமாதி காரியத்த
எல்லாம் லிஸ்ட்
வாங்கி வப்பியா?
இந்த மாதிரி
கேவலமான ஒரு
காரியத்த பண்ணிட்டு
சப்பகட்டு வேற
கட்டுறியா?"
இப்படித்தான் ராமசாமி
அடிக்கடி உணர்ச்சிவசப்படுவார்.
உமையாள் சொல்லும்
விதத்தில் சொல்லி
அவரது உணர்ச்சிமிகுதியை புஸ்ஸென்று அணைத்துவிடுவாள்.
அப்பேர்பட்ட உமயாள்
இன்று இல்லை.
சென்னைக்கு குடிபெயர்ந்து
ஒரே மாதத்தில்
உமையாள் இயற்கை
எய்திவிட்டாள். எல்லாம்
அவர்களின் இரண்டாம்
மகனும் மருமளும்
அமெரிக்காவில் வேலை
பார்த்தது போதும்,
இனிமேல் சென்னைக்குத்
திரும்பி விடலாம்
என்று முடிவெடுத்தது
தான். இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள்.
குழந்தைகளைப் பார்த்துக்
கொள்ள ராமசாமியையும்,
உமையாளையும் சென்னையோடு
வர சொல்லிவிட்டார்கள்.
உமையாளால் மறுக்க
முடியவில்லை. மற்ற
குழந்தைகளை விட
உமையாளுக்கு இரண்டாம்
மகன் அதிக
செல்லம்.
"இங்க பாருடா,
படவா ராஸ்கல்!
இந்த மலைக்கோட்டையையும் காவேரியையும் விட்டுவிட்டு என்னால
எங்கயும் வர
முடியாது. கொஞ்ச மாசம் வந்து
இருக்கேன்...வீட்ட பூட்டிகிட்டு தான்
வருவேன். இப்போதிக்கு என்னால காலி
செய்ய முடியாது."
என்றாள் உமையாள்.
"சரிம்மா, நீங்க ரெண்டு பேரும்
இங்க வந்தா
போதும்"
உமையாள் இல்லாததை
நினைத்த ராமசாமிக்கு
ஆற்றாமை மேலிட்டது.
தலைமேல் கை
வைத்து ஒரு
மூலையில் அடைந்து
கிடந்தார். அதோ மூத்த மகன்
குடும்பசகிதம் வந்துவிட்டான்.
"மூத்தவன் வந்துட்டான்ல.
ஆக வேண்டியத
பாக்கலாமா?" என்றது ஒரு பெருசு.
அதுவரை எதுவும்
பேசாமல் வாயடைத்து
இருந்த ராமசாமி
விறுட்டென்று எழுந்து,
"என்ன பண்ணுவீங்களோ
ஏது பண்ணுவீங்களோ
தெரியாது, அம்மாவை திருச்சிக்கு எடுத்துட்டு
போய் தான்
காரியம் பண்ணனும்".
"என்னது திருச்சிலயா?
அதெல்லாம் ரொம்ப
கஷ்டம்பா...ஏற்கனவே நான் ஆம்புலன்ஸுக்கு சொல்லிட்டேன். பாதி பேர்
கீழ ஆல்ரெடி
வந்துட்டாங்க. கார்த்தாலயே
சொல்லிருக்கலாம்ல. அண்ணனுக்குத்
தான் வெயிட்
பண்ணோம். அவனும் வன்ட்டான்..." என்றான்
இரண்டாவது மகன்.
மூத்த மகனும்
குறுக்கிட்டான்.
ராமசாமி ஒரே
பிடிவாதமாக இருந்தார்.
ஏன் என்று
யாருக்கும் விளங்கவில்லை.
எல்லாரும் பிணத்துடன்
திருச்சி கிளம்பினார்கள்.
No comments:
Post a Comment