Wednesday 31 July 2013

Story-90 அப்பாவின் நினைவலைகள்



அப்பாவின் நினைவலைகள்

அப்பாக்களை பிரிந்து தவிக்கிற உருப்படாத மகன்களுக்கு 

எனக்கு கனவுகள் மீது எப்போதும்  ஒரு அதீத பிரியம் உண்டு.சில சமயங்களில் நான் தேடும் பொருளை யோசித்துக்கொண்டே தூங்குவது உண்டு,கனவில் அது எங்கு இருக்கிறது என்பதை அவ்வப்போது நான் பார்த்து இருக்கிறேன்.கனவுகள் சில சமயம் அப்படியே நடந்தும் உள்ளது.கனவுகள் தான் சில சமயங்களில் மனிதனை வாழ வைக்கிறது.சமயங்களில் ஒரு செயலை செய்ய தூண்டவும் செய்கிறது.ஒருவனை வீழ்ச்சி பாதையிலும் அது அவ்வபோது கொண்டு சென்று விடுவதுண்டு.ஒவ்வொரு கனவிலும் என்றோ எழுந்த ஒரு ஆசை புதைந்து இருக்கும்.சின்ன சின்ன ஆசைகளும்,சொற்ப கனவுகளும் தான் இந்த வாழ்க்கை.

இன்று காலை கண்ட கனவை மதியம் 12 மணி ஆகியும் இன்னும் மறக்க முடியவில்லை.படியில் உக்கார்ந்து கொண்டு ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள் " படித்துக்கொண்டு இருக்கிறேன்.அப்பா அதை பார்த்து விடுகிறார்.அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அசோகமித்ரனின் 18வது அட்சக்கோடு  என் தந்தையின் கைகளால் கிழிக்கப்பட்டது என்பது இப்போதும் நினைவு இருக்கிறது.

"நீயெல்லாம் எங்க உருப்பட போற" என்று அவரது கீர்த்தனை உச்சஸ்தாயியில் ஒலிக்கிறது .நான் அதை மனப்பாடம் செய்துவிட்ட போதிலும் எப்போதும் போல் என் முன் ஒப்பித்துக் கொண்டு இருக்கிறார் .நல்ல வேலையாக அசோகமித்ரனுக்கு  நிகழ்ந்தது ஜெயகாந்தனுக்கு நிகழவில்லை.காட்சிகள் மங்கத் தொடங்கின.

சட்டென விழித்துக்கொண்டேன்.காலங்கள் பல சென்று விட்டன."நான் உருப்பட்டு விட்டேன்,பார்த்தீரா ??" என எக்காளமிடும் அளவுக்கு சாதிக்கவில்லை என்றாலும்,ஏதோ  உருப்பட்டு இருக்கிறேன்.அவர் என் மீது அதிக நம்பிக்கை வைத்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.என் மகனை நான் பெரிதாய் கண்டித்து இல்லை.எனக்கும் சேர்த்து என் மனைவி அந்த வேலையை செவ்வனே செய்து விடுகிறாள்.அவன் புத்தகம் வாசித்து நான் பார்த்ததே இல்லை.பொறியியல் படிப்பு  படித்து கொண்டு இருக்கிறான்.இவன் வயதில் நான் சுமார் 100 புத்தகங்கள் படித்து இருந்தேன்.அதை என் அப்பாவுக்கு தெரியாமல் பரண் மேல் ஒளித்து வைத்து இருந்தேன்.இப்போது நான் இருக்கும் வீட்டு பரணை நான் எட்டி பார்த்ததே இல்லை.அது என் மகனுக்கான இடம்.என்னுடைய எல்லா புத்தகங்களும்  என் அப்பாவின் கைகளுக்கு கிட்டும் போது எனக்கு திருமணம் நடந்து இருந்தது.மகன் பிறந்த போது அவனுக்கு "தாத்தா "என்றெல்லாம் யாரும் கிடையாது.அவ்வப்போது புகைப்படத்தில் பார்த்து இருக்கிறான் அவ்வளவே.

இப்போது  அவன் வீடு திரும்பும் சமயம்.
திடீரென்று ஒரு யோசனை.ஏன் இப்படி செய்கிறேன் என தெரியாது??

ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள் "புத்தகத்தை தேட மட்டும் 1 மணி நேரம் பிடித்தது.பழைய வீட்டுக்கு சென்றேன்.

இப்போதெல்லாம் வீடு பூட்டித்தான் கிடக்கிறது.சிறுவயது ஞாபகம் என்னை பீடிக்கத் தொடங்கியது.அப்போதெல்லாம் அந்த குட்டி சுவரை எளிதில் தாண்டி விடுவேன்.சுவரின் மீது கை ஊன்றி எம்பி உக்கார்ந்து பின்பு ஒருவழியாய் உள்ளே குதித்தேன்.அப்பாவும் அம்மாவும் இங்கு தான் கடைசி வரை இருந்தனர்.இந்த  வீட்டை விற்க ஏனோ மனம் வருவதே இல்லை.மூன்றாம் படி சற்றே விண்டு இருந்தது.அதுவும் தன இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறது போலும்.முன்பு அமர்ந்த அதே இடத்தில் சென்று அமர்ந்தேன்.வீட்டை கூட்டி பல வாரங்கள்  ஆகிவிட்டது போலும்.அதை பற்றி எல்லாம் அங்கு உக்கார்ந்த பின்தான் யோசிக்க தொடங்கினேன்.கடிகார முள் பின்னோக்கி சுழல தொடங்கியது.வருடங்கள் நொடிகளாய் விரைந்து கொண்டு இருந்தன.சிறு வயதில் எதற்கு என்றே தெரியாமல் அக்காளிடம் சண்டை இட்டது,வீட்டை விட்டு வந்தது எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வந்தது.சில கேள்விகளுக்கு காலங்களும் பதில் சொல்வதில்லை.அதை சிரிப்புகளால் கடந்து சென்றேன்.நம் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை அது அலட்சியமாக திருப்பிவிட்டு சென்றுவிடும்.

என் எல்லா கனவுகளும் பலித்தது இல்லை.இது பலிக்கக்கூடாதா என்று ஏக்கத்தோடு இரவு வரை அங்கேயே உக்கார்ந்து இருந்தேன்.

இரவு வீடு வந்து சேர மணி 10 ஆகிவிட்டது.யார் இடமும் எதுவும் பேசவில்லை.முதல் முறையாக மனம் அயர்ந்து இருந்தது.43 ஆண்டுகளின் வாழ்க்கையை ஒரே மாலை பொழுதில் இந்த மனம் தன்னால் இயன்ற வரை எனக்கு மறு ஒளிபரப்பு செய்து காட்டியது.

மறுநாள் 

காலையில் அலுவலகம் செல்லும்போது வங்கி செல்ல வேண்டி இருந்தது,படிவத்தில் தேதியை நிரப்பும் போது தான் நினைவிற்கு வந்தது.நேற்று அப்பாவின் நினைவு நாள்.

No comments:

Post a Comment