Monday 29 July 2013

Story-71 மன வளர்ச்சி குன்றியவர்கள்



மன வளர்ச்சி குன்றியவர்கள்

ஜீப் பாதி வழியில் நின்றுவிட்டது. மழை சாரலின் ஊடே காலை ஒன்பது மணிக்கு வெளிச்ச வட்டங்களை சாலையில் வரைந்த படி கார் ஒன்று வருவது தூரத்தில் தெரிந்தது.

'வர்ர வண்டிய நிறுத்துங்க. நீங்க ஜீப்ப சரி பண்ணி எடுத்துட்டு வாங்க' என்றேன். செல்வராஜ் கண்களை சுருக்கி நெற்றியில் சிற்றலைகளை உருவாக்கியவாறு உற்சாகத்தோடு கூவினார். 'நம்ம ஆர்.டி.ஓ ஆபீஸ் வண்டிங்க' என்றார். செல்வராஜ் கையசைப்பதை பார்த்து வண்டி வேகமிழந்து கீறிச்சிட்டு நின்றது. நான் பின்பக்கம் ஏறி அமர்ந்தேன். 'நான் ராஜசேகர். ஆர்.டி.ஓ வா பதினைஞ்சு வருசமா இருக்கேன். நீங்க தான் குடோனுக்கு புது சூப்பர்வைசரா?' எனக் கேட்டார்.

'ஹலோ, நான் வெங்கடேசன்' என்றேன். நல்ல ஆகிருதியுடன் பெரிய மீசை வைத்து கம்பீரமாக இருந்தார். ' ஜாயின் பண்ற அன்னிக்கே வண்டி ரிப்பேர் ஆயிடுச்சு ' என்றேன். எதோ பெரிய ஹாஸ்யத்தை கேட்டவர் போல சத்தமாக சிரித்தார். டிரைவர் தனக்கு வலது பக்கம் சுட்டிக் காட்டி 'அங்க பாருங்க எப்படி வரான்னு' என்றார். முக்கிய சாலையின் இடுப்பை வெட்டி வலது புறத்தில் ஒடிந்திருந்த ஒற்றை நரம்புச் சந்தில் இருந்து லாரி ஒன்று சப்தம் கூட எழுப்பாமல் அதிவேகமாக அதே சந்தில் திரும்ப யத்தனித்திருந்த மினி பஸ்சின் மீது மோதுவது போல உராய்ந்து இடது பக்கம் சடாரென திரும்பி ஒரு வினாடி தயங்கி நின்று மீண்டும் வேகமெடுத்தது. மினி பஸ் ஓட்டுனர் விபத்தில் இருந்து தப்பித்ததை நம்ப முடியாமல் ஒரு கணம் ஸ்தம்பித்து தனது இருக்கையில் இருந்து சாலையில் குதித்து லாரி ஓட்டுனரின் பிறப்பை சந்தேகித்தான். 'அந்த லாரியை மடக்குங்க சுந்தர்' என்றார் ராஜசேகர். டிரைவர் கியர் மாற்றி வேகமெடுப்பதற்குள் அந்த லாரி மற்றொரு சந்தில் திரும்பி விட்டது. இரண்டு பர்லாங் தூரம் துரத்தி லாரியை நெருங்கி 'வண்டிய நிறுத்துயா' என்றார்.

டிரைவர் சுந்தர் வீரச் செயல் புரிந்துவிட்ட இறுமாப்புடன் லாரி டிரைவரை கீழிறக்கி ஓங்கி வயிற்றிலேயே மிதித்தார். ராஜசேகர் தன் பங்குக்கு அவன் கன்னத்தில் ஓர் அறைவிட்டார். தாடி வைத்து நோஞ்சானாக இருந்த அவனது மொத்த உடலும் பயத்தில் நடுநடுங்கியது. 'அடிக்காதீங்க' என்றேன். ராஜசேகர், 'லைசன்ஸ எடுய்யா' என்றார். அவன் திருதிருவென விழித்து நீளமான கசங்கி போயிருந்த காகிதம் ஒன்றை சட்டைப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தான். ராஜசேகர் ஆத்திரமடைந்து உச்ச ஸ்தாயியில் இரைந்தார். 'எல்.எல்.ஆர்? எல்.எல்.ஆர வச்சுக்கிட்டு என்னயா வண்டி ஓட்டுற? சுந்தர் வண்டிய ஆபீசுக்கு விடுங்க. இவனை எல்லாம் புக் பண்ணி உக்கார வைக்கணும். ஏறுயா வண்டில '.

சுந்தர் லாரியை ஓட்ட இன்னும் வாய் திறக்காமல் வெடவெடத்துக் கொண்டிருந்த லாரி டிரைவர்
மேலேறி அவர் அருகே அமர்ந்து கொண்டான். ராஜசேகர் காரை எடுத்தார். நான் அவர் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டேன். லாரியை பின் தொடர்ந்த படியே  மெல்ல ஊர்ந்து வரிசையில் நின்றிருந்த பல்வேறு புது  சக்கர நான்கு சக்கர வாகனங்களை பின்தள்ளி அந்த இரண்டு மாடி கட்டிடத்தின் முன் நின்றது. 'நம்ம பில்டிங்குக்கு அடுத்த பில்டிங் தான் ரேஷன் குடோனு' என்றார். நான் நன்றி சொல்லி விட்டு நகர்ந்தேன். லாரி டிரைவர் என்னிடம் எதோ சொல்ல வாயெடுத்தான். நான் அதை கவனிக்காதது போல் சற்று ஒதுங்கி இருந்த கட்டிடத்தை அடைந்தேன்.

கட்டிடம் சாலையில் இருந்து சற்று உள் வாங்கி இருந்தது. முன் பக்கம் ஒரு பெரிய மைதானம். அதன் இதயமாக இடது ஓரத்தில் அனல் தகிக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த சரக்கு குடோன். மூடியிருந்த கேட்டை திறந்து நான்கடி வைத்திருப்பேன். காதை கிழிக்கும் கண்ணாடிக்  குடுவைகளே நொறுங்கிவிடும் உச்ச கட்ட டெசிபலில் இரைந்த படி பார்த்தாலே பைத்தியம் என்று சொல்லத் தக்க ஓர் ஆள் கையில் தடியுடன் வேகமாக என்னை நோக்கி ஓடி வந்தான். நான் சுதாரித்து விலகுவதற்குள் என்னை நெருங்கி விட்ட அவனை திடீரென்று செல்வராஜ் நடுவில் பாய்ந்து தடுத்தான்.

'
ஏய் நம்ம புது ஆபீசர் டா. கீழ போடு..தடிய கீழ போடு' என்று அதட்டினார். அவன் தடியை கீழே எறிந்து விட்டு இப்போது சினேக பாவனையுடன் என்னை பார்த்து சிரித்தான். செல்வராஜ், 'அதான இவன் இருக்குறப்ப ஒரு பய உள்ள நுழைய முடியுமா?' என்றார். அவன் வெட்கப்பட்டு ஓடிப் போய் குடோன் கதவருகே இருந்த பிடி இல்லாத நாற்காலியில் அமர்ந்து கொண்டான். ' நீங்க வாங்க சார். நல்ல வேளை  சீக்கிரம் வந்துட்டேன்' என்றார்.

'செல்வம் இது யாரு?' என்றேன்.

கேட்டின் தாளை நீக்கி முப்பது வயதுள்ள ஓர் இளைஞன் பதட்டத்துடன் எங்களை நோக்கி வந்தான். செல்வராஜ் நான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தினார். 'சார், இவர் தான் நம்ம புது சூப்பர்வைசர். இவரு வேலுச்சாமி ரேஷன் கடை இன்சார்ஜு '
வேலுச்சாமி மரியாதையுடன் கை குலுக்கினார். 'சார், நம்ம குடோனுக்கு வர வேண்டிய சரக்கு லாரிய ஆர்.டி.ஓ ஆபீசுல மடக்கி வச்சிருக்காங்க' என்றார்.

லாரி மெதுவாக நுழைந்து குறுக்கு வெட்டில் அதன் சக்கரங்கள் அஷ்ட கோணத்தில் சேற்றில் தயங்கி நிற்க ஒவ்வொரு மூட்டையாக குடோனில் இறக்கப் பட்டது. லாரி டிரைவர் மீதும் உரிமையாளர் மீதும் பதியப்பட்ட கேஸ் ரிஜிஸ்தாரில் இருந்து நீக்கப்பட்டது. வழக்கு பதிவாகி இருந்தால் வண்டியையும் எடுக்க முடியாது. அதிலுள்ள பொருளும் சிக்கி விடும். லாரி டிரைவர் சரக்கு இறக்கப்பட்டு விட்டதற்கான அத்தாட்சி ரசீதை நீட்டினான். 'ஏம்ப்பா, கவர்மெண்டுக்கு வண்டிய ஓட்டற நீயே இப்படி பண்ணுனா எப்படி?'

'நல்லாதாங்க ஓட்டுவேன். இன்னிக்கு இப்டி ஆகிப் போச்சு சாமி.'

'எங்க நல்லா ஓட்டுன? அதான் நீ ஓட்டுற லட்சணத்த பாத்தனே. எதோ எங்களுக்கு தெரிஞ்சவரு. பக்கத்துலையே இருக்காருங்கறதால உட்டுட்டாரு. உன்ன ஒவ்வொரு வாட்டியும் மன்னிக்க முடியுமா? பத்து பத்தரைக்கெல்லாம் ஜனம் வந்துடும். பொருள ஏறக்காம இருந்தா ஒழுங்கா விநியோகம் செய்யலேன்னு எங்க வேலையும் போய்டும் தெரியுமா? உன் மொதலாளி நம்பர் கொடு'.

'பொழப்புல கை வைக்காதீங்க அய்யா. இனிமே இப்படி நடக்காது'

'போ போ. வண்டிய எடு' என்றேன்.

லாரி சென்ற பின் வேலுச்சாமியை அழைத்து ' இவன இனிமே சரக்கு எடுத்துட்டு வர விடக்கூடாதுன்னு லாரி ஓனர் கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்க. நாம ரிஸ்க்கு எடுக்க முடியாது' என்றேன். 'சரிங்க சார்' என்றார்.

புது இடமும் உணவும் மனிதர்களும் பழக சில நாட்கள் ஆனது. எப்போதாவது மதியம் ராஜசேகர் என் பிரத்யேக அறைக்கு வந்து 'வாங்க இன்னிக்கு வெளிய சாப்ட்டு வருவோம்' என்பார். பல லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் சரக்குகள் கொண்டு வருகின்றன. நான் அடிக்கடி மேற்பார்வையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றைக்கு எங்களை சிக்கலில் தவிக்க வைத்த ஓட்டுனர் அதன் பிறகு வரவே இல்லை. பரமு உள்ளே வந்தான். 'காபிக்கு காசு..,காசு ' என்றான். 'என்ன இன்னிக்கு லேட்டு?' எனக் கேட்டேன். சில கேள்விகளுக்கு அவன் பதில் சொல்ல மாட்டான். இந்த மூன்று மாதங்களில் செல்வராஜ் கூறக் கேட்டு பரமுவை பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தேன்.

ஐந்து அல்லது ஆறு வயதில் இவனை பெற்றவர்கள் இவனுக்கு மூளை வளர்ச்சி குறைவு என்பதை அறிந்து சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இந்த அரசாங்க கட்டிடம் அமைந்திருக்கும் தெருவின் முனையில் தரையில் கிடத்தி விட்டு ஓடி விட்டனர். பின்னர் அநாதை விடுதிகளிலோ  மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான காப்பகங்களிலோ சேர்க்கத் தோன்றாமல் இத்தெரு வாசிகளே இவனை வளர்த்து வருகின்றனர்.

'எப்படியும் யாராச்சும் தெனம் திங்க கொடுத்துடுவோம். அரசாங்க பிள்ள பாத்துக்கங்க. ஒரு நாளைக்கு நம்ம பாலு டீக் கடையில இன்னொரு நாளைக்கு அந்த முக்கு பஜ்ஜி கடையிலன்னு வயிர வளத்துக்குட்டான். மூளை வளர்ச்சி இல்லையே ஒழிய நல்ல விசுவாசம். நம்ம குடோனுக்கு சம்பளம் வாங்காத வாட்ச்மேனு பரமு தான்.'

'ராத்திரி எல்லாம் என்ன பண்ணுவான்? அமாவாசை அன்னிக்கு அது இதுன்னு எதுனா உண்டா?'

'இன்னி வரைக்கும் அப்படி ஒண்ணுமில்ல சார். நல்ல ஆரோக்கியம் பாத்துக்கங்க. ஊரே டெங்கு சிக்கன் குனியான்னு அல்லோலப் பட்டுகினு இருந்துச்சு. இவன் தெருவிலேயே பொறண்டு கொசுக் கடில தூங்கியும் ஒன்னும் ஆவலியே. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்னு சும்மாவா சொல்லிருக்காங்க. முக்கியமான பொருள் இருக்கற அன்னிக்கெல்லாம் குடோன்லையே படுத்துக்கச் சொல்லிடறது. மத்த நாள்ல எங்கயாவது எதாவது வீட்டு முன்னாடி கெடப்பான்.'

எல்லாரையும் போல எனக்கும் பரமு மேல் பிரியம் மெல்ல மெல்ல வந்துவிட்டிருந்தது. பொங்கலுக்கு முந்தைய நாள் பரமுவுக்கு ஒரு புது சட்டை எடுத்துக் கொடுத்தேன். கொஞ்சம் வெட்கப்பட்டு வாங்கிக் கொண்டு சென்றவன் சிறிது நேரத்திலேயே நான் எடுத்துக் கொடுத்த சட்டையை அணிந்து கொண்டு வந்து எனக்கு காண்பித்தான். 'ஒனக்கு அறிவில்லன்னு எவன்டா சொன்னது? அருமையா இருக்கு' என்றேன்.

நாளைக்குள் ரேஷன் பொருட்களை அவரவர்க்குண்டான மானியத்துடன் வழங்கிவிட வேண்டும். இலவச பொருட்கள் விநியோகமும் அலுவலகத்தின் முன் வராண்டாவில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'வாங்க அப்படியே ஒரு நடை போய் சாப்டுட்டு வந்துடுவோம்' என்றார் ராஜசேகர். 'நேரமாகும் சார். இன்னும் அரிசி மூட்டையும் சி எம் படம் போட்ட பேக் கூட வரல' என்றேன். 'வேலு இருக்காப்லைல. சும்மா பிகு பண்ணிக்காம வாங்க' என்றார்.

நாங்கள் இருவரும் அலுவலகம் திரும்பும் போது குடோன் முன் நல்ல கூட்டம் கூடி விட்டது. 'இப்படி ஆயிடுச்சே சார்' என்றார் செல்வராஜ். தெருவாசிகள் ஒவ்வொருத்தராக வந்து  'உச்' கொட்டினார்கள். நான் என் வாழ்விலேயே துக்ககரமான பகல் பொழுதை சந்தித்தேன். புது சட்டை லாரி சக்கரத்தின் அடிப்பகுதியில் ஒட்டிப்போய் செம்மண் குருதியை பரப்பியிருந்தது. 'அந்த லாரி டிரைவர் ஓட்டத் தெரியாம ஏத்திட்டு ஓடிட்டான் சார். ஆம்புலன்சுக்கு சொல்லிருக்கு' என்றார்கள். ஏதேதோ குழப்பமான பேச்சொலிகள். 'நாம தப்பு பண்ணிட்டோம். தப்பு பண்ணிட்டோம் ராஜசேகர்' என்றேன். 'அவசரப்பட்டு ஏதும் ஒளரிடாதீங்க. எல்லார்க்கும் சிக்கல். வேலை போய்டும். சாதகமா முடிச்சுக்கலாம். ஒரு கவர்மெண்ட் செர்வன்ட்ட இன்னொரு கவர்மெண்ட் செர்வன்ட் காட்டிக் கொடுக்க கூடாது' என்றார். நான் தலையாட்டினேன்.

No comments:

Post a Comment