Tuesday, 23 July 2013

Story-57 பரதேசி


பரதேசி


பரதேசி படம் இங்கு ஒரு நாள் முன்னரே வெளியீடு செய்கிறார்கள் என்றபோதே கைகால்கள் நிலைகொள்ளவில்லை, முதல்காட்சி நள்ளிரவு காட்சியாம், அதற்கே முன்பதிவு செய்தேன். இங்கு நான் பார்க்கும் முதல் தமிழ் திரைப்படம். அதையெல்லாம் விட முதலில் படத்தைப்பார்த்து ”இணையதளத்தின் முதல் விமர்சனம் – Paradesi Review - First on net” என எழுதிவிட வேண்டும் என ஆவல்தான்.

இரவு பனிரெண்டு மணி காட்சியை பார்க்க போகும் முன்னரே, முகப்பு புத்தகதில் நான் இன்று பரதேசி படம் பார்க்க செல்கிறேன் என்ற நிலைத்தகவலைப் பதிவு செய்திருந்தேன். மூன்றுமாதங்களாக நானும் முகநூல் போராளி, வெளிநாட்டில் வேலை செய்பவன், தமிழ் தொண்டாற்றுபவன், மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவன் என கொஞ்சம் திமிர் பெருமிதம் எல்லாமும் இருந்தது. நான் கிறுக்கிய பல நிலைத்தகவல்களால் எனக்கென்ற ஒரு கூட்டம் சேர்ந்திருந்தது. சில நிலைத்தகவல்கள் ஆனந்த விகடன், குங்குமம் ஆகியவற்றில் வெளிவந்ததால் முகநூல் பிரபலம் ஆகியிருந்தேன். அதிலும் நான் எழுதிய “ஏன் தமிழ்மொழிக் கல்வி அவசியம் தேவை”, ”தமிழ்நாடு வளர்ச்சிக்கு என்ன செய்யவேண்டும்”, ”சாதி எதிர்ப்பு, கலப்புத்திருமணம் ஏன் தேவை” ”படித்த ஆண்மகனுக்கு வரதட்சனை தேவையா” ”தமிழ் எழுத்தாளர்களின் சாம்ராஜ்யம்” போன்ற நிலைத்தகவல்கள் மிகப்பிரபலம்.

திரையரங்கில் இருக்கையை தேடி உட்கார்நத பின் எனது கைபேசியில் முகநூலை திறந்து பார்த்தேன், பதினைந்து நிமிடங்களில் சுமார் ஐம்பது பேர் ‘விருப்பத்தை’ சொடுக்கி இருந்தார்கள். வாழ்த்துக்கள் வேறு சொல்லியிருந்தார்கள் என் நண்பர்கள் வட்ட மக்கள். சந்தோசப்பட்டுக்கொண்டேன், நமட்டு சிரிப்புடன்.

படம் முடிந்தது. திரைப்படத்தைப்பற்றி எப்படி விமர்சனம் எழுதலாம் என யோசித்துக்கொண்டே வெளியே வந்தேன். திரைப்படத்தின் முடிவு கொஞ்சம் பாதித்திருந்தது. ஆனால் ”சோகமயம், உலகப்பட தரத்தில் இருந்தாலும் மதப்பிரச்சார நெடி அதிகம், தேவையில்லாத நெஞ்சுருக்கும் காட்சிகள் அதிகம்” என அறிவார்த்தமாக எழுத வேண்டும் என வேலை செய்தது மூளை. உடனே எதையாவது முகநூலில் எழுதவேண்டுமே என்று கை பரபரத்தது. அரங்கத்திற்கும் தங்கி இருக்கும் அறைக்கும் நடந்தே சென்றுவிடலாம் என நடந்துகொண்டிருந்தேன். வரும் வழியில் மொபைல் வழியாக இயக்குனர் பாலாவின் பரதேசி மிகச்சிறந்த முடிவுக்காட்சியைக் கொண்டது. இப்படம், விருதுகள் வாங்கும், படம் வெற்றிபெறாது என்று ஆருட நிலைத்தகவலை பதிந்தேன். சின்ன சின்ன நிலைத்தகவல்கள் மட்டும்தான் கைபேசியில் இட முடிகிறது, காலையில் அலுவலக்கணிணி மூலம் விமர்சனத்தை எழுதிக்கொள்ளாலாம் என முடிவு செய்தேன்.

விளக்குகள் சாலையை அழகுபடுத்தியிருந்தது. தூரத்து சாலை சந்திப்பின் பச்சை கொடிக்காக ஒரே ஒரு மகிழுந்து காத்திருந்தது. ஆளே இல்லாத சாலைக்கு எதற்கு விதியை கடைபிடிக்கிறான் யார் இந்த மடையன், நம்மூர் மக்கள் சிவப்பாயினும் பறந்து சென்றிருப்பார்கள், அறிவுகெட்டவர்கள் என நினைத்துக்கொண்டேன்.

அதன்பின் ஏனோ தெரியவில்லை, ”நீ எல்லாம் படிக்க வந்தியா இல்ல வேற எதாச்சும் திங்க வந்தியா, பரதேசி பரதேசி ” என்ற பள்ளியில் கேட்டுக்கொண்டேயிருந்த வாத்தியின் வார்த்தைகள் தான் மனதில் ஒடியது.

பரதேசி என்ற வார்த்தை கெட்டவார்த்தை என்றுதான் இதுவரை நம்பிக்கொண்டிருந்தேன். எனது பதினொன்னாம் வகுப்பு வாத்தியாரின் வாயிலிருந்து சுலபமாக வெளிப்படும் இந்த வார்த்தை. நண்பர்களோடு நானும் கூனி குறுகிய நிற்கும் போது அனாசியமாக திட்டுவார். மானம் என்ற ஒன்று அன்று என்னை தின்றெடுத்தது, எனக்கு பிடித்த தோழி வேறு பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று.

இந்த நாட்டிற்கு வந்து மூன்று மாதம் தான் ஆகிறது. நானும் பட்டம் படித்து கிழித்தபின் காசு கொடுத்து இந்த வேலைக்கு சேர்ந்திருந்தேன். இருபத்தியெட்டு வயசு வரைக்கும் எனக்கு எந்த வேலையும் நிலைக்கவில்லையே, என்ன செய்ய. எதாவது ஒரு விசயம் வேலை கொடுத்த கம்பெனியில் பிடிக்கவில்லை. பிடித்திருந்தாலும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு தற்போது இல்லை என்று கையை விரித்தார்கள். முடிவுசெய்தேன் அன்றே, அடுத்த வேளை உணவு வெளிநாட்டில் தான் சாப்பிட வேண்டும் என்று.

வேலை செய்யும் உரிமம் வாங்க மட்டும் ஒரு லட்சம் ரூபாய் தந்தேன். நான் விமான நிலையத்திற்கு கிளம்பும் சமயத்தில், வெளிநாட்டு சம்பளம் ஆகிற்றே, திருமணத்திற்கு பெண் வேறு சுலபமாக கிடைப்பார்கள் என எனது பக்கத்துவீட்டு குடும்பத்தலைவிகள் என்னை மெச்சிக்கொண்டார்கள். நானும் சிரித்து வைத்தேன், அந்த தலைவிகளில் ஒருவருக்கு அழகிய மகள் இருக்கிறாள், வருங்கால அத்தை கூட ஆகலாம். இங்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கணிணி சம்பந்தமான வேலை. மோசமில்லை ஒரு மாதம் ஐம்பாதாயிரம் மிச்சம் பிடிக்கலாம் என கணக்கு போட்டிருந்தேன். நான் அலுவலகம் தந்த தங்குமிடத்தில் தங்காமல், வெளியில்அறை எடுத்து தங்கி இருக்கிறேன். இரண்டு காரணங்கள், வீடு இருக்கும் இட்த்திற்கு அருகில் இருப்பத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் தமிழ் உணவகம் இருக்கிறது. ஊர் சாப்பாடு போல் கிடைக்கும். இதெல்லாம் விட இன்னொன்று பக்கத்திலே இருக்கும் திரையரங்கு, திரைப்படம் பார்க்காமல் இவ்வளவு நாள் (மூன்று மாதங்களுக்கு மேலாக) இருந்ததே அதிசயம். அலுவலகத்திற்குள் தான் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். தங்கும் செலவு குறைவு என்றாலும் எந்நேரமும் அலுவலகப்பணிகளையே பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்தை காரணமாக காட்டிக்கொள்ளாமல், உணவு உடம்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்லி வெளியில் அறை எடுத்திருந்தேன். இது எனக்கு ஒரு கட்டற்ற சுதந்திரம் தந்ததுபோல் உணர்வு, அதனால் தானே இப்படி நேரம் கெட்ட நேரத்தில் வெளியில் செல்ல முடிகிறது, நாம் என்ன அடிமையா என்று வீரவசனங்கள் தோன்றி மறைந்தது.

அதிகாலை மூன்று மணி இருக்கும், உணவகம் அருகில் நடந்துவரும்போது கொஞ்சம் பசிப்பது போல தோன்றியது. ஒரு தேநீர் பருகிவிட்டு தூங்கச்செல்வோம் என்று நினைத்து நுழைந்தேன். நான்கு சீன பெண்கள் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள், அவர்களின் மேசையைக்கடக்கும் போது ஏற்பட்ட சிரிப்பொலி நம் ஊர் மங்கைகள் சிரிப்பை கொட்டுவதைப்போல் இல்லை என்று நினைத்துக்கொண்டேன், இதைக்கூட ஒரு நிலைத்தகவலாக போடலாமே என்று எண்ணத்தின் ஓரத்தில் விளக்கு எரிந்தது. ஒரு ஓரத்தில் மேசையை தேடி அமர்ந்தேன். அவ்வளவு கூட்டமில்லை மொத்தம் பத்து பேர் இருப்பார்கள் என்னையும் சேர்த்து. இந்த மூன்று மாதத்தில் அடிக்கடி உணவகத்திற்கு வருவதால் இங்கு வேலை செய்யும் நம்மூர் மக்கள் அனைவருடனும் கொஞ்சம் சினேகிதம் வளர்த்திருந்தேன்.

”அண்ணே வணக்கம்ணே” என்று என் தோளைத் தட்டினார் ராஜா. ”என்ன அண்ணே இந்த நேரம் கடைக்கு வந்திருக்கீக”

”சினிமாக்கு போயிருந்தேங்க ராஜா, மிட் நைட் ஷோ, இப்பதான் வரேன்” என்று புன்னகைத்துக்கொண்டே சொன்னேன். வேலை கத்துக்கொடுத்தது, புன்னகையை உதட்டில் வைத்தும் பேசும் முறையை.

ராஜாவுக்கு சொந்த ஊர் மதுரை பக்கம், நான் கோயம்பத்தூர் பக்கம் என எனது தமிழ் பேசும் சொல்வழக்க முறையை வைத்தே கண்டுபிடித்தார் ராஜா, அதனால் எப்போது உணவகத்திற்கு வந்தாலும் சிறுது சிரித்துவைப்பேன். நட்பு பாராட்டி, அதிகம் அவரிடம் பேசியதில்லை. இன்று வேறு வழியில்லை. என்ன இருந்தாலும் என கலச்சார வளர்ப்பு ஜீன்கள் என் எண்ணத்தில் இருக்கும் போல, அவரை மட்டமாகவே நினைத்தது மனது காரணம் அவரது உடையும், வெளித்தோற்றமும், மேசை துடைக்கும் உணவகப்பணியாளர் வேலையாகக்கூட இருக்கலாம்.

நான் ஒரு கோப்பை தேநீர் கேட்டிருந்தேன். அவரும் இன்னொரு கோப்பையில் குளம்பியுடன் என் முன் இருக்கையில் அமர்ந்தார். அவரது கண்கள் தூக்கத்தை தேடுகிறது என்று நன்றாக முகம் காட்டியது.

“அப்புறமுங்க இன்னைக்கு என்னங்க நைட் ஷிப்டா” என்று பேச்சை துவங்கினேன்.

“நமக்கு ஏதுணே நைட் ஷிப்ட் டே ஷிப்ட், எல்லாம் ஒன்னுதானே, அப்புறம் என்ன பிலிம்னே பார்த்தீக, எப்படி இருந்துச்சு”

“பரதேசி, ம்ம் பரவாயில்ல ஒன் டைம் பார்க்கலாம்”னு சொல்லிக்கொண்டே “ஏன்னே இப்படி சொல்லுறீங்க, ஷிப்ட் முறைப்படி வேலை இல்லைங்கலா?” என தொடர்ந்து, அவர் வருத்தத்தோடு சொன்னதில் மனம் லயித்தது.

”இங்க எங்கண்ணே ரெஸ்ட்டு, தினமும் அஞ்சு மணி நேரம்தான் தூக்கம், துணி துவைக்க மத்த வேலைகள் கவனிக்க எல்லாமும் அதில்தான் செய்துக்கணும். இங்க ரெஸ்டாரண்ட்லையும் கொஞ்சமும் ரெஸ்ட் எடுக்க முடியாது. எல்லா பக்கமும் சிசிடிவி கேமரா இருக்கு, அது காட்டி குடுத்துடும், அப்புறம் ஒரு நாள் சம்பளமும் போச்சு, இப்படி டீ காபி தண்ணிய குடிச்சே காலத்த ஓட்ட வேண்டியதுதான்”. என் முகம் புன்னகையிலிருந்து வாடியதற்கு மாறிக்கொண்டிருந்தது. “என்ன படிச்சிருக்கீங்க? இங்க வந்து எத்தனை வருசம் ஆச்சு?” என்று அடுத்த கேள்வியை கேட்டுவிட்டேன்.

ராஜா சிரித்தார், “அண்ணே நான் இங்க வந்து அஞ்சு வருசம் ஆச்சுண்ணே, கம்பியூட்டர் சயின்ஸ்ல டிகிரி முடிச்சிருக்கேன்” எனக்கு தூக்கிவாரி போட்டது, காட்டிக்கொள்ளவில்லை, என் படிப்பே தான் படித்திருக்கிறார்.

அதன்பின் நான் எதும் கேட்கவில்லை, அவரே தொடர்ந்தார், “முதன் முதலா இந்த ரெஷசன் பீரியட் வந்துச்சல்லண்ண, அப்ப நான் மெட்ராஸ்ல ஒரு ஐடி கம்பெனில பிபிஓ செக்ஷன்ல வேலை பார்த்தேன். நான் வேலை செஞ்ச கம்பெனி அதுல பாதிச்சு கொஞ்ச நாள் வேலையில்லாம இருந்தேன். ஐடி கம்பெனியில வேலைனதும் பொண்ணு பார்த்திருந்தாங்க, வேலை போனதும், பொண்ணும் போச்சு, கல்யாணமும் நின்னுபோச்சு. திருப்பூர் பனியன் கம்பெனில கூட டிசைனரா வேலை பார்த்தேன், அங்கையும் நூல் வெலை கூடிடுச்சு, கான்ராக்ட் எல்லாம் நிக்க ஆரம்பிச்சு, வாரத்துல ஒரு நாள்தான் வேலை கெடைக்கிற அளவுக்கு வந்திடுச்சுண்ணே. எவ்வளவு நாள் தான் வேலையில்லாம வீட்டுல சாப்பாடு போடுவாக சொல்லுக, அப்படி இப்படினு தேடிகிட்டே இருந்தப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடச்சு இங்க வந்தது சேர்ந்தேன், அது பெரிய கதை, இப்ப சொல்லி உங்களை நான் அறுக்க விரும்பலைணே”

”அப்ப உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?”

”ஆயிடுச்சுண்ணே, பொண்ணு ஒன்னு இருக்கு, நாலு வயசு இங்கிலீசு மீடியம் போறா, இப்பெல்லாம் இங்கிலீசு இருந்தாதாண்ணே பொழைக்க முடியிது”. சிரித்தேன் நான். தமிழைப்பற்றி வாதட தெம்பில்லை தற்போது.

”என் ஊட்டுக்கு நான் ரெஸ்ட்ராண்ட்ல தான் வேலை பார்க்குறதா சொல்லல, நான் வெளிநாட்டுல சம்பளம் வாங்குறதால தான் இந்த கல்யாணமே நடந்துச்சு, அதுவும் வேலை கெடச்சதும் கல்யாணம் அப்புறம் மூணுமாசத்துல இங்க வந்துட்டேண்ணே” என்று என்னிடம் உண்மைகளை உளரிக்கொட்டினார்.

”ஏன் உங்க படிப்புக்கு ஏத்த வேலை தேடலை?” என்ற அறிவாளித்தனமான கேள்வியை கேட்டேன்.

”இங்க விசாவுல ஏமாத்தி கூட்டிடு வந்துட்டாங்கண்ணே ” ,”இந்தவருசத்தோட அஞ்சு வருசம் முடியுதண்ணே, அப்புறம்தான் நான் வேற எந்த வேலைக்கும் போகமுடியும்.”

எனக்குள் இருந்த மனிதாபிமானம் முளைத்தது, ”அண்ணே உங்க ரெஸியூம், சர்டிபிகேட் பாஸ்போர்ட் ஜெராக்ஸ் எல்லாம் இருந்தா குடுங்க, எங்க கம்பனியிலே வேலைக்கு ஏற்பாடு பண்றேன்” என்று சொன்னதும் அவர் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.

தேநீர் சூடு ஆறியிருந்தது. இணையத்தின் முதல் விமர்சனம் எழுதும் எண்ணத்தைவிட பர தேசத்திற்கு பறந்துவந்தாலும் பரதேசியாக வாழும் ராஜாவின் வெளிநாட்டு வாழ்க்கையே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. பரதேசி படத்தின் கதைக்கும் அவர் கதைக்கும் ஒற்றுமை இருப்பதுபோல் இருக்கே, இதை கண்டிப்பாக எழுத வேண்டுமெனெ தூக்க கலக்கத்திலேயே நினைத்துக்கொண்டு ராஜாவிடம் விடைபெற்றபின் வீட்டை விரைவில் அடைந்தேன். அறைக்கு வந்ததும், சோர்வு என்னை படுக்கைமேல் விழ வைத்தது. சீக்கிரம் தூங்கிவிட்டேன்.

காலையில் அலுவலகத்திற்கு ஒரு மணிநேரம் கால தாமதம் வேறு. இந்த நாட்டில் வாகன நெரிசலைப்பற்றி சொல்லத்தேவையில்லை, கார்களுக்கு பஞ்சமில்லை, ஒரு வீட்டிற்கு மூன்றுகார்கள் வைத்திருப்பது சாதாரணம். நான் பேருந்தில் கூட தூங்கிக்கொண்டே பயணித்து அலுவலகத்தை அடைந்தபோது, அப்பாடா என்று இருந்தது. கூடவே என் அணித்தலைவர் அவரது இருக்கையில் இல்லை எனத்தெரிந்ததால் சந்தோசம் வேறு. அணித்தலைவர் திருச்சிக்காரர் தான், இங்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது. நான் வேலை செய்யும் நிறுவனத்தின் தலைவருக்கு நேரடி கீழ் பதவியில் இருப்பவர். கொஞ்சம் சிடு மூஞ்சி. அவர் கோவத்தை எல்லாம் எங்களிடம் தான் காட்டுவார். இவரிடம் தான் ராஜாவின் சுயவிவர படிவத்தை கொடுக்க வேண்டும்.

அமர்ந்ததும் அலுவலகக் கணிணியை முடக்கினேன். முதலில் விமர்சனத்தை எழுதி போட்டுவிடவேண்டும் என்பதை விட, ராஜாவின் வாழ்க்கையை பற்றி பகிர்ந்து அதிக விருப்பங்களை வாங்கிட நினைத்தேன். மின்னஞ்சல்கள், கணக்கு எல்லாம் பார்ப்பதற்கு முன்னர் முகநூலைத்திறந்தேன். புதிய நிலைத்தகவல் இட சொடுக்கினேன்.

”பரதேசி படம் பார்த்தேன், இதைப்பற்றி விமர்சனம் விரைவில். அதன் கதையைவிட தமிழ்நாட்டில் இருந்து பட்டப்படிப்பை முடித்த ராஜா இங்கு பரதேசி போல் அடிமாடு வேலை செய்கிறார், கல்வி கற்றும் நம்மக்கள் மற்றவர்களிடத்தில் கைகட்டி வேலைபார்க்கின்றனர். இதற்கு யார் காரணம், காலம் காலமாக அடிமைத்தனத்தை ஊற்றி வளர்க்கும் சாதியா, அரசியலா, திரைப்படங்களா? உள்ளூரை விட்டு சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பரதேசிகள் போல வேலை செய்கின்றனர். இதுபோல் பலர் உணவகப்பணியாளர்களாகவும், கட்டிட வேலைகளுக்கும் வெளிநாடுகளுக்கு அடிமாடு போல் செல்கி…” என்று சூடான வார்த்தைகளைக்கொண்டு தட்டச்சு செய்யும்போது கைபேசி அழைத்தது.

இன்னொரு முனையில் எனது அம்மா, “என்ன கண்ணு நல்லாயிருக்கிறியா, என்னடா கண்ணு நேத்து நீ போன் பண்ணவே இல்ல, நான் என்னவோ ஏதோனு பயந்தே போயிட்டேன்”

“ஒண்ணுமில்லங்மா, நேத்து கொஞ்சம் வேலை அதான்.”

“அப்படியா கண்ணு, நல்லா சாப்பிடு சாமி, நல்லா தூங்கனும், வேலை வேலைனு ஒடம்ப கெடுத்துக்காத சாமி”

”நீங்க கவலைப்படாதீங்கமா, இங்க ஒண்ணும் பிரச்சனையில்லை, அங்க அப்பா சவுகரியம்தானே, எப்படி இருக்காங்க”

“அவரு நல்லாயிருக்காரு கண்ணு, நேத்து ஆட்டுக்குட்டி ரெண்டு கவுருமெண்ட்ல தராங்கண்ணு அப்பா பஞ்சாயித்து போர்டு ஆபிஸ் வரைக்கும் போணாரு, ஆனா அதுக்கு ஐநூறு ரூவா பணம் கேட்டாங்களாம் அதான் இன்னைக்கு போயி தந்துட்டு வாங்கிக்கலாம்னு வந்துட்டாரு.”

“இந்த வருசம் மழை பேயாததால ஆத்துல தண்ணி வரலைனு இந்தபோக வெள்ளாமை பண்ணலை கண்ணு, அதுக்கும் சேர்த்து பஞ்ச நிவாரணம் தராங்கண்ணு டிவில சொன்னாங்களாம், அதுக்கும் சேர்த்து கேட்கனும்னு சொன்னார்”

“நீ இந்தமாசம் கொஞ்சம் அதிகமா பணம் அனுப்பு கண்ணு, அத வச்சுத்தான் வெள்ளாம பண்ண வித நெல்லு வாங்கணும் கண்ணு. கடன் கேட்டா, பயன்தான் வெளிநாட்டுல வேலைபார்க்குறானேனு இங்க எல்லாரும் அதிக வட்டி கேட்கிறாங்கப்பா, நம்மூர் காரங்களுக்கு சாப்பாடுக்கு எங்க போவாங்க, இங்க நெல்லு வெளையிலனா?” ”ம்ம்ம்” “ஆ சொல்ல மறந்துட்டேனே, …”

“இன்னொரு சந்தோசமான விசயங்கண்ணு, உனக்கு வரன் வந்திருக்கு கண்ணு, பொண்ணு நம்ம சாதிதான், நல்லா படிச்சிருக்காம், அம்பது பவுணாச்சும் போடுவாங்க கண்ணு”

”அம்மா இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாங்க அம்மா”

“அப்படி சொல்லாத கண்ணு, நீ வெளிநாட்டுல வேலைல இருக்கும் போதே பேசிமுடிச்சிடலாம் கண்ணு, இங்க வேற பொண்ணு கெடைக்கமாட்டேங்குது. இதுல வேற இத்துட்டு ஓடிடிதுங்க சிலது..”

“சரிங்க ம்…”

“ஹே மேன், யூ ஆர் மோர்தேன் ஒன் ஹவர் லேட், நொவ் டாக்கிங் ஓவர் போன் ஃபார் லாங் டைம்…” என்ற அதிகம் பழக்கப்பட்ட குரலைக்கேட்டதும் கணிணித்திரையை அவசரமாக அணைத்துவிட்டு திரும்பினேன்.

“சரிங்கம்மா நான் அப்புறம் பேசுறேன்” “உடம்ப நல்லா பாத்துக்க கண்ணு, நல்லா சாப்பி..” கைபேசியை அணைத்தேன்.

அணித்தலைவர் முகம் சுருங்கி இருந்தது, என் முகம் வெளுக்க ஆரம்பித்தது.

“வாட் மேன், வாட் ஈஸ் திஸ்”

“ஐ யம் சாரி சார். யெஸ்டர் டே ஐ வாஸ் வொர்க்ங் லேட் நைட், சோ ஸ்லெப்ட் லேட் சார்.”

”டொண்ட் கம் லேட் டு த அதர் டே, அதர்வைஸ் ஐ காவ் டு புட் கம்ப்ளெயிண்ட் அண்ட் டெட்யூஸ் ஒண்டே சேலரி” என்று கூறிக்கொண்டு இருந்தார்.

பதினொன்னாம் வகுப்பு வாத்தி ” நீ எல்லாம் படிக்க வந்தியா இல்ல வேற எதாச்சும் திங்க வந்தியா, பரதேசி பரதேசி” என்று கண்முன் சொல்வதுபோல் சொல்லி பிம்பம் மறைந்தது. அணித்தலைவர் திட்டிவிட்டு அவர் அறைக்கு சென்றுவிட்டார்.

ஆசிரியர் சொன்ன வார்த்தை இப்போது புரிகிறது.

தட்டச்சு செய்திருந்ததை அழித்து “நான் ஒரு பர தேசம் வந்த ஹை-டெக் பரதேசி” என்று நிலைத்தகவல் இட்டேன்.

பதினைந்து நிமிடங்களில் ஒருத்தர் கூட விருப்பம் இடவில்லை, பரதேசிகள்…

No comments:

Post a Comment