Wednesday 31 July 2013

Story-83 தஸ்லீமா



தஸ்லீமா
        நான் பீமன் ரகு. ஒல்லிப்பிச்சானாகிய எனக்கு, ரகு என்ற பெயரோடு எப்படி இந்த பீமன் ஒட்டிக்கொண்டது என்பது, இன்று வரை புரியாத ஓன்று. நான், நான் என்று தொடங்குவதால் என்னை இந்த கதையின் நாயகனாக நீங்கள் உருவகப் படுத்தினால் அதற்கு நான் கண்டிப்பாக பொறுப்பு ஏற்கமாட்டேன். என்னைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன்னால் நான் செய்யவிருக்கும் ஒரு காரியத்தை பற்றி உங்களிடம் சொல்லிவிடுகிறேன்.
 நான் இன்று  இரவு  'ஒரு கொலைசெய்யப்போகிறேன். நான் செய்யப்போகும் இந்த காரியத்தில் உடன்பாடில்லாதவர்கள், தயவு செய்து என்னை பின்தொடர வேண்டாம்.போய் விடுங்கள்.
"போய் விட்டீர்களா ? நன்றி."
இனி மிச்சமிருப்பவர்களுக்காக..என்னைப்  பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றெல்லாம் இல்லை. (என்ன வாக்கியம்). நிறையவே இருக்கிறது. படித்தது ஏழாம்வகுப்பு என்றாலும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மென்பொருள் நிறுவனம் என்றவுடன் உடனே வேறு எதையாவது நினைத்து விடாதீர்கள். ஒரு பஞ்சாலையில் கணக்கர் உத்தியோகம். சில நேரங்களில் வாட்ச்மேன் ஆகவும். வாட்ச்மேன் ஆக வேலை பார்ப்பதற்கு முக்கிய காரணம் என் முதலாளி. என் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருப்பவர். அரை டிராயருடன், மதராச பட்டணத்தில் அலங்கோலமாக திரிந்து கொண்டிருந்தவனை ஆதரித்தவர் என்பதால், அவர் சொல்லும் எந்த வேலைகளுக்கும், நான் சுணக்கம் காட்டியதில்லை. சென்னையில் அவரது வியாபாரம் நஷ்டமடைந்த போதும், அவரது சொந்த ஊருக்கு என்னை கூட்டிசென்று, பஞ்சாலையில் என்னை வேலைக்கு அமர்த்தியவர்.
"ஏண்டா ரகு.. பொறுப்பா பார்த்துப்ப இல்ல ?"
இந்த ஒரு வாக்கியத்தைத் தவிர வேறு எதுவும் சொல்லாமல் பொறுப்பை (?) ஒப்படைத்தார். பஞ்சாலை பற்றிய எனது முன் அனுபவம் பூஜ்யமாக இருந்தாலும், எனது விசுவாசத்திற்கு அவர் நூறு மதிப்பெண்கள் அளித்திருந்தார். அதற்கு காரணம் இல்லாமலில்லை.
சென்னையில் அவர் வைத்திருந்த ஜவுளிக்கடை ஒன்றில்,ஒருநிமிடம்…. ஜவுளிக்கடை என்றவுடன் திநகரின் மேம்பாலங்களை நெருக்கித் தள்ளும் விதமாக  முளைத்திருக்கும் பட்டுமாளிகைகள் அல்லது ஜவுளிக்கடல் என்று நினைத்து விடாதீர்கள். சென்னைக்கு மிக அருகில் என்று நிலத் தரகர்கள் குறிப்பிடும் செங்கல்பட்டிலிருந்து மேலும் முப்பத்தியிரண்டு கிலோமீட்டர்கள் பயணித்தால் சாங்கை என்று ஒரு ஊர் வரும். கிராம அடையாளங்களை நகர அரக்கன் செல்லரித்துக் கொண்டு வருகின்ற,ஒரு சிறிய டவுன் என்று சொல்லலாம். சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து, எதற்காக இங்கே வந்து கடை ஆரம்பித்தார் என்று தெரியவில்லை.நான் கேட்டதுமில்லை. எனக்கு தேவையில்லாத விசயங்களில் பொதுவாக நான் மூக்கு, தொண்டை என்று எதையுமே நுழைப்பதில்லை.சரி அதை விடுங்கள். நான் சொல்ல வந்த விஷயத்தை மறந்து என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். அந்த ஜவுளிக்கடையில்தான் பத்து வருடங்களுக்கு மேலாக  வேலை பார்த்தேன். முதலாளி எப்போதாவதுதான் கடைக்கு வருவார். அங்கு மேலாளராக மீசை நடசேன் என்பவன் இருந்தான். மேலாளர் என்றாலும் அவன் ஒரு அறிவிக்கப்படாத முதாலாளி போல செயல்பட்டு வந்தான்.நான் அங்கு வேலைக்குச் சேரும்போது டீ,பொறை வாங்கிக்கொடுக்கும் ஒரு எடுபிடியாகத்தான் சேர்த்து கொள்ளப்பட்டேன். ஒரு நாள் நடேசனுக்கு நான் வாங்கிச் சென்ற டீயில் ஒரு விழுந்து கிடந்ததை பார்க்காமல் கொடுத்து விட்டேன்.விளைவு என் முகம் தீயாகிப்போனது. கூடவே இரண்டு நாட்கள் பட்டினி வேறு. அப்போதுதான் எனக்கு என் அம்மா ஞாபகம் வந்தாள்.
அம்மா என்று நினைத்ததும் என் பட்டினி,துயரம் எல்லாம் கொஞ்சம் குறைந்து விட்டதைப் போலிருந்தது. ஏனென்றால் என் அம்மா என்னை ஐந்து நாட்கள் வரை பட்டினி போடுவாள்.இவன் பராவாயில்லை இரண்டு நாளோடு நிறுத்திக்கொண்டானே என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். நான் எனது  அறிவுக்குட்பட்டு என்னை பெற்றவளை அம்மா என்று அழைத்தேனா என்று தெரியவில்லை. அவள் உண்மையிலேயே என்னை பெற்றவள்தானா என்று இன்றும் எனக்கு சந்தேகம்தான். ஏனென்றால் நிறைய சந்தர்ப்பங்களில், அவள் என்னை அழைத்த விதம் அப்படி.
"........யா பயலே "
"அனாதை நாயே "
"குப்பத்தொட்டி"
இன்னும் சொல்வதென்றால் சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் என் கதையை கேட்டுகொண்டிருக்கும் மிச்ச பேர்களையும், நான் இழக்க வேண்டி வரலாம். எனவே போதும். நாட்கள் ஆக ஆக நடேசனின் கொடுமைகளை தாங்கிக்கொண்டு, சமூகத்தில் தனியாக வாழ்வதற்கு என்னை நானே பக்குவபடுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் சில வருடங்கள் கடந்து விட்டிருந்தது. அம்மா,சொந்த ஊர் என்று எதுவுமே என் ஞாபகத்தில் வரவில்லை.உழைப்பு,கடின உழைப்பு.நாயாக உழைத்தேன். அவ்வப்போது கடைக்கு வந்துசெல்லும் முதலாளியின் ஒரு சிறிய, அந்த பரிவான புன்னகைக்காக என் உயிர் தேயும் வரை உழைத்தேன். நீங்கள் நினைத்திருப்பீர்கள்  இந்த சாதாரண ஜவுளிக்கடை என் உழைப்பில் கூடிய சீக்கிரம் ஜவுளிக் கடல் ஆகி விடப்போகிறது என்று.aanal ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பத்து வருடங்களாகியும் கடை அப்படியேதான் இருந்தது. கொஞ்சம் எதிர்விளைவாய்  கடையை இழுத்து மூடும் முடிவுக்கு முதலாளி வந்திருந்தார். தினசரி சராசரி ஐம்பது வாடிக்கையாளர்களாவது வந்து செல்லும், பண்டிகை தினங்களில் அதை விட அதிக கூட்டமாக இருக்கும் ஒரு கடையை முதலாளி ஏன் மூடுகிறார் என்று ஏழாம் வகுப்பு வரையே படித்த என் மூளைக்கு எட்டவில்லை.அதற்கு விடை கடையை மூடிய அந்த சுப யோக தினத்தில் எனக்கு தெரிய வந்தது.
முதலாளி கல்லாவில் அமர்ந்திருந்தார். நடேசனைக் காணவில்லை. ஒவ்வொருவராக அழைத்து கணக்கை பார்த்து பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
"இனி எங்கப்பா போகப்போறிய எல்லா பயலுவளும்"
யாரும் பதில் பேசவில்லை. நிறைய பேர் புதியவர்கள்தான்.பத்து வருடங்களுக்கு மேலாக அங்கு பணிபுரிபவர்கள் என்றால், அது நானும் மீசை நடேசனும்தான். நடேசனை எங்கு போயிருப்பான் என்று நான் தேடிக்கொண்டிருக்க.. "அதாம்ப்பா..உங்க மானேசரு கிழக்கு சாங்கைல புதுசா  கடை தொறக்க போறாராம்..அங்கதான போறிய ?" முதலாளியின் குரலில் சிறிய நடுக்கமும் கலந்திருந்தது.எல்லாம் முடிந்திருந்தது. எல்லாம் புரிந்திருந்தது. முதலாளி என்னைப் பார்த்தார். ஒரு சாம்ராஜ்யத்தின் கடைசி நாள் எப்படி இருக்கும் என்று அன்று நான் பார்த்தேன். ஆனால் அதைவிட பெரிய சாம்ராஜ்யம், உண்மையான சாம்ராஜ்யம் சிவகங்கையில் எனக்காக காத்திருந்தது.yenetraalஅங்குதான் நான் தஸ்லீமாவை முதன் முதலில் சந்தித்தேன்.
ஏழாம் வகுப்பு வரையே படித்த எனக்கு முதலாளி எப்படி கணக்கர் உத்தியோகம் தந்தார் என்று உங்களுக்கு எழுந்த சந்தேகத்தை போலவே எனக்கும் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் கணக்கர் என்பது வரவு செலவு பார்பதற்காக அல்ல. அங்கு தினக்கூலிக்கு வரும் தொழிலாளர்களை கணக்கு எடுக்க வேண்டும் அவ்வளவே.அவர்கள் வேலை செய்யும் அதிகப்படியான நேரத்தையும்  குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் . ஆனால் முதலாளி எனக்கு அங்கு  எல்லாவிதமான அதிகாரத்தையும் வழங்கியிருந்தார். ஒரு சாதாரண கூலித்தொழிலாளிக்கு, விசுவாசத்தை தவிர வேறு திறமை எதுவும் அற்ற ஒருவனுக்கு, எதற்காக இப்படி ஒரு வேலையை ,வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டும் என்று  புரியவில்லை. ஒருவேளை அன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் அவர் தவற விட்ட பெட்டியை எடுத்து,பின்னால் மூச்சிரைக்க  ஓடி  ஒப்படைத்த அந்த அரை டிராயர் பையனுக்காக இருக்கலாம்.
பார்த்தீர்களா..தஸ்லீமாவை பற்றி சொல்ல வந்து தடம் மாறி போகிறேன். முதல் நாள் முதலாளி என்னை எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போதுதான் நான் தஸ்லீமாவை பார்த்தேன்.
"இவன்தாம்பா..பீமன் ரகு. ..உங்களுக்கு எதுனாச்சும் தேவைன்னா இவனை கேட்டுக்கோங்க" முதலாளி பேசிக்கொண்டிருந்தபோதே , வந்த சிரிப்பை அடக்க முடியாமல் திணறும் ஒரு பெண்ணின் ஒலி கேட்டது.திரும்பினேன். கூட்டத்தில்  அவள் நின்றிருந்தாள்.அவள் சிரிப்பை கையால் மூடி,மறைக்க முயல்வது தெரிந்தது. குனிந்து என் முழுக்கால் சட்டையை பார்த்தேன். எல்லாம் சரியாய் இருந்தது.பின் எதற்காக அவள் சிரித்திருக்க வேண்டும்.மதிய இடைவேளையின் போது அதற்கு விடை கிடைத்தது.
"உங்க உண்மையான பேரே..பீமன் ரகு வா சார் ?"
என்று யாரோ என் பின்னால் இசைத்தது போலிருந்தது. திரும்பினேன். அவள்தான்.அவ்வளவு அழகி இல்லை. வெட்கத்தை தாண்டிய ஒரு தைரியமான முகம்.பெரிய நெற்றி.பெண்களின் முகத்தை கூர்ந்து பார்த்து பழக்கம் இல்லை என்பதால், அதற்கு மேல் என்னால் வர்ணிக்க முடியவில்லை. ஆனால் அவளை பார்துக்கொண்டேதானிருந்தேன்.
"என் பேரு தஸ்லீமா சார். நீங்க.. ஒனருக்கு சொந்தமா ?" என்னை கலைத்தாள். எனது பதிலை எதிர்பாராமல் அவளே பேசிக்கொண்டிருந்தாள். முதல் நாள் பார்த்த ஒரு ஆடவனுடன் இவ்வளவு சகஜமாக ஒரு பெண்ணால் பேச முடியுமா ? ஆச்சரியமாக இருந்தது. "அப்ப ..நான் வரேன் சார் " என்றவள்,சரேலென்று சென்று மறைந்தாள். ஒரு தேவதை தோன்றி,மறைந்த உணர்வு, என்னுள் தோன்றி மறைந்தது.
அதன் பின்னால் வந்த நாட்கள் அனைத்தும் என் பிறவிப் பயனை எனக்குத் தந்தன. ஒரே இடத்தில இருக்க நிலை கொள்ளாமல் தஸ்லீமா வேலை செய்யும் பகுதியையே சுற்றிச்சுற்றி வந்தேன். எனது சிறிய சந்தேகங்களை எல்லாம் அவளிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன். அங்கு பணிபுரிந்த ஏனைய மேற்பார்வையாளர்கள்,கணக்கு வழக்கு கவனிப்பவர்கள் எல்லாம் என்னை ஒரு மாதிரியாக பார்க்கத்  துவங்கினார்கள். எனக்கு தெரிந்தது. அனால் முதலாளியுடன் எனக்கு இருந்த நெருக்கம் காரணமாக யாரும் என்னிடம் நேரிடையாக எதுவும் கேட்கத் துணியவில்லை.அவளுக்கும்  என் நோட்டம் புரிந்திருக்க வேண்டும். முன்பெல்லாம் நேரிடையாக பார்த்து சிரிப்பவள், இப்போதெல்லாம் என் பார்வையை தவிர்க்க ஆரம்பித்தாள்.நான் தவிக்க ஆரம்பித்தேன். என் இரவுகள் விடியாமலே போய்விடுமா !. என்  கனவுகள் கல்லறையில் தானா!. என்று தூக்கத்தில் ஏதேதோ பிதற்ற ஆரம்பித்தேன்.ஆனால் அந்த பிதற்றல்களுக்கு எல்லாம் முடிவு மறுதினம் காத்திருந்தது.
நான் ஆலையின் வெளியே வாட்ச் மேனுக்கு என்று இருந்த அறையில் தான் தங்கியிருந்தேன். என்னுடன் காவலாளி என்ற பெயரில்,ஒரு கிழவனும் தங்கியிருந்தான். மாதத்தின் பாதி நாட்கள் கௌரி பட்டியிலுள்ள மகள் வீட்டுக்கு சென்று விடுவான்.அன்றும் அவன் இல்லை.நான் வாயில் வேப்பங்குச்சியை கடித்துக்கொண்டு, உலவிக்கொண்டு இருந்தேன். ஆலை வாயில் திறக்கும் ஓசை கேட்டது.'இந்த காலை நேரத்தில் யார்  வரப்போறா  ?' என்று எண்ணியபடி,திரும்பினேன். என் வாயில் இருந்த வேப்பங்குச்சி நழுவி கீழே விழுந்தது.தஸ்லீமா வந்து கொண்டிருந்தாள்.திறந்து கிடந்த என் அறைக்குள் திரும்பிபார்க்காமலே நுழைந்தாள்.நானும்.. "ஏன் இந்த நேரத்துல ?" என் குரல் எனக்கே கேட்கவில்லை.முறைத்தாள்.

"ஏன் எல்லார் முன்னாடியும் அப்படி பாக்கறீங்க ?"

"யாரு ..நானா ..எப்போ ?" என்று கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடத் தயாரானேன்.

"பண்றதையும் பண்ணிட்டுப் பேசறதை பாருங்க..இதோ பாருங்க..! எனக்கு உங்களை மாதிரியெலாம் பாக்க தெரியாது ..அது மட்டுமில்ல என் கூட வேலை பாக்கிற பொன்னி இருக்காளே..அவ எங்க சித்திக்கிட்ட போட்டு கொடுத்திடுவா..அப்புறம் அது என்னை வேலைக்கே அனுப்பாது ." நான் அந்த காலையிலும் வியர்திருந்தேன் .சொல்லி விட்டு வாசல் வரை சென்றவள் திரும்பி.. "உங்களுக்கு பாக்கனும்னா நான் காலையிலே இங்கேயே வரேன் " என் வியர்வைதுளிகளெல்லாம் சட்டென பனித்துளியாகி விட்டதைபோலிருந்தது. எங்கேயிருந்து எனக்கு தைரியம் வந்தது என்று தெரியவில்லை. கிளம்ப நின்றவளை எட்டிப் பிடித்தேன். பிடித்தவேகத்தில் என் மீது வந்து மோதினாள். பின் வாங்கஇருந்தவளை, வளைத்து என் முதல் முத்தத்தைப் பதித்தேன்.

"ச்சீ.கசக்குது .." என்றவாறே என்னை தட்டி விட்டுப் பறந்தாள்.

அதன்பின் வந்த நாட்களில், தரையில் நடப்பதாக எனக்கு உணர்வில்லை. சதா மிதந்து கொண்டிருக்கிற உணர்வில் இருந்தேன். தஸ்லீமா எனக்காக மதிய உணவு எடுத்து வந்தாள். நான் காய்ச்சலாக கிடந்த இரண்டு நாட்களில்,"ரொம்ப கசக்கும்" என்று சொல்லி   கசாயம் எடுத்து வந்தாள். எனக்கு இனித்தது. இனி என் வாழ்வே  தஸ்லீமா என்று முடிவுக்கு வந்து விட்டிருந்தேன்.

அன்று ஒரு  நாள் வழக்கம் போல ஆலைக் கதவுகளை அடைத்து விட்டு, சாவியை முதலாளி வீட்டில் ஒப்படைப்பதற்காகக்  கிளம்பிக் கொண்டிருந்தேன். பிரதான வாயிலை நெருங்கும்போது அங்கு இருவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. "......இது தெரியாம..இவன் வேற அந்த புள்ள பின்னாடியே சுத்திகிட்டு இருக்கான்." நான் அவர்களை சமீபித்ததும் அவர்கள் பேச்சு நின்றது.என்னைப் பார்த்ததும் "சாவி கொடுக்கவா சார் ?" என்று கேட்டுவிட்டு நடந்தார்கள்.இங்கு வேலை பார்ப்பவர்கள்தான்.அவர்கள் பேசியதும் என்னைப் பற்றிதான் என்று புரிந்தது.என்ன பேசியிருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே நடந்தேன். முதலாளி வீட்டில்தான் இருந்தார். எத்தனை தொழில்கள் நஷ்டமடைந்தாலும்,அதை சரிக்கட்டக்கூடிய பரம்பரை செழிப்பு வீட்டில் தெரிந்தது.ஆனால் பாவம் அனுபவிக்கத்தான் மனைவியும் இல்லை.மக்களும் இல்லை.சாவி கொடுத்து கிளம்ப இருந்தவனை தடுத்து அமர்த்தினார். "என்னங்கய்யா ?"

"உக்காரு ரகு..கொஞ்சம் பேசணும் ." என்ன பேசப்போகிறார் என்னிடம். என்று யோசித்தவாறே அமர்ந்தேன்.

"நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் ரகு" நேரடியாக விசயத்துக்கு வந்தார்.அவருக்கு அப்படித்தான்.சுற்றி வளைத்து பேசுவதென்பது பிடிக்காது.தொடர்ந்தார்.

"இது எனக்கு கொள்ளி வைக்கிறதுக்கு ஆளில்லைங்கிறதுக்காக எடுத்த முடிவு இல்ல.. அம்பது வயசு ஆகிற வரைக்கும் தெரியாத தனிமை இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்குது..அது என்னவோ தெரியல, உன்கிட்ட சொல்லனும்னு தோணிச்சு. என்ன சொல்ற ரகு ?" நான் பதறி எழுந்தேன். "ஐயா..இதையெல்லாம் போய் என்கிட்ட கேட்டுட்டு.. நீங்க முடிவு எடுத்தா அது சரியாகத்தான்யா இருக்கும்." என்று நான் கிளம்ப எத்தனிக்க,மீண்டும் இடைமறித்தார். "அதில்லே ரகு..இவ்வளவு வருசமா என்கூட விசுவாசமா இருக்கே.உன்கிட்ட சொல்லாம இருந்தா அது நல்லாயிருக்காது இல்ல..பொண்ணு கூட உனக்கு தெரிஞ்சவதான். நம்ம மில்லுல வேலை பாக்குraa..அவ பேரு கூட என்னமோ…..தஸ்லீமா”.
எனக்கு  இந்த உலகத்தில் இருந்து யாரோ என்னைத்தூக்கி வெளியே எறிவதைப் போலிருந்தது.

இரண்டு நாட்கள் அறையை விட்டு வெளியே வரவேயில்லை. அக்கறையாய் விசாரிக்க வந்த கிழவனிடம் எரிந்து விழுந்தேன். ஆலையிலிருந்து இரண்டு பேர் வந்து "என்ன சார்..முதலாளிக்கு கல்யாண ஏற்பாடெல்லாம் நடக்குது.நீங்க என்னடான்னா, இப்படி ரூமுக்குள்ளே கிடக்குறீங்க. ?" நக்கலாக கேட்டுவிட்டு சென்றனர். எனக்கு தெரியும் கண்டிப்பாக தஸ்லீமா இதற்குச் சம்மதிக்க மாட்டாள்.அவளால் எப்படி என்னை மறக்க முடியும்.என் ஆழமான காதலை அத்தனை இலகுவாக மறந்து விடுவாளா என்ன ?. என் கேள்விக்கு மறுநாளே விடைகிடைத்தது.
முதலாளி திருமணத்திற்கு அழைப்பதற்காக வந்திருந்தார். வாட்ச்மேன் கிழவன் என்னை எழுப்பினான். எழும்பவில்லை. உறங்கினால்தானே எழும்புவதற்கு. "சரி விடுப்பா அவனை .. உடம்பு சரியில்லாம தூங்குறவனை போய் எழுப்பிக்கிட்டு..வா தஸ்லீமா  " என்றபடியே முதலாளி நகர்ந்தார். தஸ்லீமா அந்த பெயரை கேட்டதும்,என் சப்த நாடியும் விழித்துக்கொண்டது. கண் திறந்து பார்த்தேன். அங்கு கண்ணில் காதல்  நிரம்ப, கிழிசல் மறைத்த ஆடையுடன் வலம் வரும் தஸ்லீமா இல்லை. பட்டாடையுடன்,அணிகலன்கள் சூழ என் புதிய முதலாளியம்மா  நின்று கொண்டிருந்தார். என் கண்கள் தானாகவே மூடிக்கொண்டது.

விடிந்தால் திருமணம். என் வாழ்வில் கிடைத்த ஒரு சிறு பிடிப்பும்,என் கையை  விட்டு நழுவி செல்வதைப் போல உணர்ந்தேன். யாருக்கும் மனதால் கூட கெடுதல் நினைத்திராத எனக்கு, இரண்டு பேர் தெரிந்தும்,தெரியாமலும் துரோகம் செய்யப் பார்கிறார்கள். முடியாது.எனக்கு துரோகம் இழைத்து விட்டு என் கண்முன்னால் சந்தோசமாக இருக்கப் போகிறீர்கlள்.  அதனால்தான் நான் முதலிலே  உங்களிடம் கூறிய அந்த முடிவை எடுத்திருந்தேன். ஏற்கனவே  தயாராய் வைத்திருந்த, கத்தியை எடுத்துப் பார்த்துக்கொண்டேன்.வாட்ச்மேன் கிழவன் முதலாளி வீட்டிற்கு சென்றிருந்தான். ஒரு முக்கியமான விசயத்தை உங்களிடம் கூற மறந்து விட்டேன். ஆம்.யாரை கொலை செய்யப் போகின்றேன், என்று சொல்லவே இல்லை அல்லவா. என்னை வளர்த்துஆளாக்கி எனக்கு சோறு போட்ட முதலாளியையா ? இல்லை,இல்லை. காதல் என்ற பெயரில், என் உதட்டில் முதல் முத்த சாயம் பூசிச்சென்றவளையா ? இல்லை ,இல்லை. பிறகு..சொல்கிறேன். கேளுங்கள். பெற்ற தாயை பாதியில்விட்டு ஓடி வந்த ஒரு கயவனை, காதலுக்காக கண்ணீர் விட்டு அழும், ஒரு கோழையை. ஆம்.அந்த பீமன் ரகுவைத்தான் நான் கொல்லப்போகிறேன்.கத்தியை எடுத்தேன்.என் தலை முடியை கொத்தாக பற்றினேன்.கழுத்தை நோக்கி,கத்தியை பாய்ச்ச்.....

No comments:

Post a Comment