நெல்லிக்காய் பாட்டி
''பாட்டி ...''
''யாருப்பா?...'' - சாம்பலேறிய கருவிழிகளை என் மீது குவித்தபடியே கேட்டாள். அவளுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை தான். அவள் வழக்கமாக அமரும் அந்த இடத்தில் ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் அவள் எதிரில் அமர்ந்தேன் . பள்ளிக்கூட வாசல்கள் தத்தெடுத்துக்கொண்ட கிழவிகளில் இவளும் ஒருத்தி. இன்று வரை அவளின் பெயர் தெரியாது. ''நெல்லிக்காப்பாட்டி'', அவ்வளவுதான். வெள்ளை சட்டை, நீல நிற ட்ரவுசர், வழித்து வாரிய தலைமுடி, முகத்தில் அப்பிய பவுடர் சகிதம், டைனமோ வைத்த அப்பாவின் சைக்கிளில் வந்து பள்ளியில் இறங்கும் போது முதல் தரிசனம் இவளுடையதாகத்தான் இருக்கும். அவள் யாருடனும் அதிகம் பேசி பார்த்ததில்லை. ஹெட்மிஸ்ட்ரஸ் வரும்
போது மட்டும் எழுந்து
நின்று வணக்கம் சொல்வாள். மற்றபடி,கூடை
நிறைய சிறுநெல்லி, அளப்பதற்கு ஒரு
சிறிய படி, தூள் உப்பு ,
கொஞ்சம் பேப்பர்கள் .... இவைதான்
அவளின் அன்றாடத் தோழிகளாக
இருந்தன. கறாரான பேர்வழி. எவ்வளவு
கொடுக்க வேண்டுமோ அவ்வளவுதான். ஒரு
நெல்லிகூட இனாம் கிடையாது. ஒருசில
நாட்கள் பள்ளிக்கு லீவு
போடும் அவளை, அடுத்த நாள் ''ஏன் நேத்திக்கு
வர்ல?'' என்று கேட்டால்
சிரித்துக்கொண்டே ஏதாவது காரணம்
சொல்வாள். நான் லீவு
போடும் வேளைகளில் அவளிடமிருந்து
இக்கேள்வி வருமென்று எதிர்பார்த்து
ஏமார்ந்ததுதான் மிச்சம். அவளிடம் வாங்கிய
நெல்லிக்காய்களின் விதைகளை
வீட்டுத் தோட்டத்தில் விதைத்துவிட்டு, அவை
முளைப்பதற்க்காக காத்திருந்த
நாட்கள் அழகானவை.
முதுமையின் கிறுக்கல்களில்
சிக்கி நொடிந்து போயிருக்கிறாள்
இப்போது. அதே நெல்லிக்காய். அளப்பதர்க்குப்
படி இல்லை. கொஞ்சம் மனம்
இளகியிருக்கிறாள் போல.
''எம்பேரு சதாசிவம் பாட்டி. ஒரு இருபது இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த ஸ்கூல்ல தான் படிச்சேன்... நல்லாருக்கிங்களா பாட்டி?''
என்னை சற்று உற்றுப்பார்த்துவிட்டு,
''நல்லாருக்கம்பா ...'' . மௌனம் .
''இத்தன வருஷம் கழிச்சி என்ன பாக்கனும்னு வந்துருக்கியே ....''
அவளை மீறி தாடைகள் நடுக்கம் கொண்டன. வார்த்தைகள்
அற்று அவளின் கைகளைப்
பிடித்துக்கொண்டேன். பேசுவதற்காக பலநாட்கள்
வெறிகொண்டு காத்திருந்தவள் போல்
பேசத்தொடங்கினாள். பள்ளியின் ஐம்பதாம்
ஆண்டு விழாவின் போது
இவளையும் மேடை ஏற்றியது, டீ
யின் விலை 5 ரூபாய்
ஆனது, பலே பாண்டியாவில்
சிவாஜி-தேவிகா, பெரியகோவில் யானைக்கு
மதம் பிடித்தது, இடது கால்
மூட்டுவலி என்று .... எல்லாவற்றையும்
சொல்லிக்கொண்டிருந்தாள். அவளின் மழலையை
ரசித்தபடியே அமர்ந்திருந்தேன்.
''ஏம்ப்பாட்டி இந்த
வயசுலயும் இப்புடி கஷ்ட்டப்படுறீங்க? வீட்ல
ரெஸ்ட் எடுக்கலாம்ல?'' - அவளின்
ஒரு மௌனத்தில் உள்நுழைந்தேன்.
''அட போடா ... கடைசி வரைக்கும்
ஒழைக்கிற கட்டடா இது .... யாரையும்
நம்பி நா இல்ல'' - வார்த்தைகள்
தெளிவாய் விழுந்தன.
கிளம்பும் முன் ஒரு 500 ரூபாய் நோட்டை அவள் கைகளில் திணித்தேன். முதலில் மறுத்தவள் பின் வாங்கிக்கொண்டாள். எனக்கு ஏதாவது செய்யவேண்டுமென்று தவித்தவளிடம், அவள் கையிலிருந்து இரண்டு நெல்லிக்காய்களை கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொண்டேன்.
''நேரம் கெடைக்கிற அப்போ இந்த பாட்டிய வந்து பாத்துட்டுப் போப்பா '' - அழுதாள்.
அழுகையை அடக்க முடியவில்லை. அவளின் உள்ளங்கைகளில் முத்தம் கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன். டைனமோ வைத்த சைக்கிளில் என்னை அழைத்துச் செல்வதற்காக அப்பா காத்திருப்பது தூரத்தில் தெரிந்தது.
No comments:
Post a Comment