மிச்சமிருக்கும் உயிர்.
ஒவ்வொரு
காட்டிற்கும் ஒவ்வொரு குணமிருக்கும் என்பதை புரிந்து கொள்ளாதவர்களால் நீண்ட நாட்கள்
ஒரு காட்டிற்குள் இருக்க முடியாது. ஒவ்வொரு காட்டின் உயிரையும்
ஆழமாய்த் தெரிந்து வைத்திருப்பது அந்தக் காட்டின்
கருமாண்டிகள் தான். எத்தனை மரம், ஒவ்வொரு
மரத்திலும் எத்தனை இலைகள் என்பது வரை எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் கருமாண்டி
தங்கப்பன். அகமலைக் காட்டில் அவன் கால் படாத இடமில்லை.
காட்டுக் கார அதிகாரிகள் சுற்றி வருவதற்கும், காட்டை
கணக்கெடுப்பதற்கும் அதிகம் நம்பியிருப்பது இந்தக் கருமாண்டியைத் தான். எல்லோரும் பயன்படுத்திக் கொள்வார்கள் எனத் தெரிந்திருண்ட்தால் அவன் இந்தக்
காட்டை இப்படிக் கூறுபோட்டுத் தெரிந்து கொள்ளும் மனநிலைக்குப் போயிருக்க மாட்டான்.
ஒருவகையில் இந்தக் காட்டுக்கு தான் செய்யும் துரோகமாகவே அதை நினைத்தான்.
கரண்டுக்காரர்கள் தங்களுடன் கன்மேன் ( gun man ) என்று ஒருவனைக் கூட்டி வருவார்கள். அந்த ஆளுக்கு அரசாங்கமே
ஒரு துப்பாக்கியும் தோட்டாக்களும் கொடுக்கும். காட்டில் கேரளாவிலிருந்து பெரிய பெரிய ட்ரான்ஸ்பார்ம்களில்
கரண்டு வருவதால் அதை அவ்வப்போது செக் பண்ண கரண்டுக்காரர்கள் போவதுண்டு. அவர்களின் பாதுகாப்பிற்காகவே இந்த கன்மேன். ஆனால் அவன்
தங்களின் பாதுகாப்பிற்குக் கொடுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களை காட்டிலிருக்கும் வேட்டைக்காரர்களுக்கு
நல்ல விலைக்கு விற்றுவிடுவான். முன்பு இந்தக் காட்டில் நூற்றுக்கணக்கான
கருமந்திகள் ( கருங்குரங்குகள் ) செங்கூரைப்
பழங்களைத் திண்ண மரம் விட்டு மரம் ஓடிக்கொண்டிருக்கும்…. அவற்றை
எல்லாம் சுட்டு அழித்த பெருமை இவர்களையே சேரும். இப்பொழுது அகமலைக்
காட்டில் கருமந்திகளின் சுவடே இல்லாமல் போனது.
”கருமாண்டி இருக்காப்ளையா?”
குடிசைக்கு வெளியே விடிகாலையில் கேட்ட சத்தத்திற்கு
அரசாயிதான் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். “அவுக. தொட்டப்பநாயக்கனூர்ல
ஒரு கேத வீட்டுக்குப் போயிட்டு விடியக்காலைலதான் வந்தாக. எதும்
முக்கியமான விசயமா? எழுப்பட்டுமா?”
”ஆமாத்தா புதுக்கோட்ட சமீன் வந்திருக்காரு… வடகரைல தான்
தங்கல்…. காட்டுக்குள்ள போகனும்ங்கறாக… கருமாண்டி இல்லாம என்னண்டு போறது?”
அரசாயி வந்து இவனை எழுப்ப வேண்டுமென அவசியமில்லை. அவனே பாதி முழித்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.
”நான் கஞ்சியக் குடிச்சிட்டு செத்தவடத்துல வந்திர்றேங்க…
நீங்க போங்க…”
விருப்பமே இல்லாமல் சொன்னவன் ”நிம்மதியா ஒரு சாவு வந்து தொலைய மாட்டேங்குது…. காடென்ன
இவய்ங்க அப்பென் வீட்டுச் சொத்தா? நெனச்சா உள்ள போறதுக்கு?
கூறு கெட்டவய்ங்க…” மனசுக்குள்ளாகவே முனகிக் கொண்டு
எழுந்து வந்து வாயைக் கொப்பளித்தான். இந்த மாதிரி காட்டுக்குள்
போக வேண்டுமென வரும் பணக்காரர்களுடன் போனால் ஐம்பதோ நூறோ செலவுக்குக் கொடுப்பார்கள்.
ஆனால் எதை வேட்டையாட வேண்டும் வேட்டையாடக் கூடாது என எந்த அறிவும் இல்லாமல்
கண்டதை எல்லாம் சுடுவார்கள். கொஞ்ச நாள் முந்தி அரசாங்க ஆட்கள்
சிலர் வந்திருந்தனர். இவன் காட்டுக்குள் தேனெடுக்கப் போயிருந்தான்.
திரும்பி வரும் போது இவன் கையிலிருந்த பெரிய தேனடையைப் பார்த்த அதிகாரி
“காட்டுக்குள்ள அனுமதி இல்லாம எப்பிடி எடுத்த இத?” என முறைத்தார். பக்கத்திலிருந்த இன்னொரு ஆள் அவரை அமைதிப்
படுத்திவிட்டு “கருமாண்டி ஒரு உதவி வேணும்ப்பா. சர்க்கார்ல இருந்து நம்ம சரகத்துல இருக்க காட்டுல மொத்தம் எத்தன புலி இருக்குன்னு
ஒரு கணக்கு எடுக்கறாக, நீதான் கொஞ்சம் கூடமாட இருந்து உதவி செய்யனும்…”
கையிலிருக்கும் தேனடையை குடிசையிலிருந்து ஒரு பாக்கு மட்டை கிண்ணத்தை
எடுத்து அதற்குள் வைத்த தங்கப்பன் “இதுக்கு எதுக்கு கணக்கு?
83 புலி இருக்குதுங்க…” வந்திருந்த அதிகாரிகளுக்கு
அவனின் திமிர்த்தனமான பேச்சு பிடிக்கவில்லை. “மனக்கணக்கெல்லாம்
நமக்கு சொல்லிக்கிலாமப்பா. சர்க்கார் கிட்ட சொல்ல முடியுமா?
அவுக வருவாக நீ கொஞ்சம் கூடமாட இருந்து பாத்துக்க… நான் எதாச்சும் செலவுக்கு கொடுக்கச் சொல்றேன்…” தங்கப்பனுக்கு
எரிச்சலாகிவிட்டது. “இவய்ங்கள வெச்சு வேல வாங்குனா சர்க்காரு
வெளங்கவா செய்யும்…” லேசாக சிரித்தான். ”சரிங்க, நான் கூடப் போறேன்…” தங்கப்பன்
சொல்லி அனுப்பி வைக்கையில் முதலில் தேனடையை ஆசையோடு பார்த்த அதிகாரி அதை எடுத்துக்
கொண்டான். ”எதுவா இருந்தாலும் அதிகாரிக அனுமதி இல்லாம இனிமே காட்டுல
இருந்து எடுக்கக்கூடாது ஆமா…” கோபமாக முறைத்துவிட்டுப் போனார்.
“பிச்சக்காரபலே வேணும்னு கேட்டா கொடுக்கப் போறேன்… த்தூ…” அவன் மூஞ்சியில் காறித்துப்ப நாக்குத் துடித்தது.
அமைதியாய் அடக்கிக் கொண்டு தலை கவிழ்ந்து நின்றான். ஒருவழியாக நிறைய கேமராக்களோடு பதிமூன்று பேர் கொண்ட குழு நான்கு நாட்கள் அந்தக்
காட்டில் வந்து தங்கியிருந்தனர். இறுதியில் அவர்களின் கேமராவில்
பதிந்த தடத்தையும், ஆங்காங்கு பார்க்க முடிந்த புலிகளின் காலடித்தடங்களையும்
கொண்டு மொத்தம் 83 புலிகள் இருப்பதாக அறிக்கை கொடுத்தனர்.
”இவய்ங்களுக்கு எதுக்கு இந்த வெட்டி வேல… அரசாங்க
செலவுல நாலு நாளு நல்லா திண்ணது தான் மிச்சம்…” என கருவினான்.
அரசாங்கம் உண்மைகளை அல்ல, அறிக்கைகளே மட்டுமே நம்புமென
அவனுக்கு எப்படித் தெரியும்.
ஜமீனை இவன் பார்க்க போகும் போது அவர் தன் மனைவி
பிள்ளைகளுடன் குளித்துத் துப்பாக்கியோடு வேட்டைக்குத் தயாராக இருந்தார். இவனைப் பார்த்ததும் “யோவ் வாய்யா… வாய்யா… நல்லா இருக்கியா?” எனச்
சத்தமாக சிரித்தார். அந்தச் சிரிப்பிலிருக்கும் போலித்தனம் இவனுக்குப்
பழக்கமானதுதான். எல்லாப் பணக்காரர்களுக்குமானது. இவனும் தான் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் ஒரு போலியான சிரிப்பையும் பணிவையும்
ஜமீன் முன்னால் வெளிப்படுத்திவிட்டு அவர்களின் பொருட்களை எடுத்துக் கொண்டு காட்டுக்குள்
கூட்டிப் போனான். ஜமீன் ஒரு குட்டியானையைப் போல் பூமி அதிர நடக்க
அவர் பிள்ளைகளே அவருக்குப் பயந்து சில அடிகள் தள்ளியே நடந்து வந்தன. துணைக்கு அவர்கள் தங்கியிருந்த பங்களாக்காரனான அன்சாரியும் வந்தான். ”கருமாண்டி
காட்டு மாட்டையும் பன்னியையும் சுட்டா நீ எடுத்துக்க, மான் மட்டும்
எனக்குண்டானது சரியா?..” தங்கப்பன் சரியென தலையாட்டினான். வெயில் காலம் துவங்கி சில நாட்கள்தான்
ஆகியிருக்கிறது. காட்டில் நீர் ஊற்றுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்
வற்றத் துவங்கிவிட்டன. நீண்ட நேரமாய்த் தேடியும் அவர்களால் ஒரு காட்டுக்கோழியைக் கூட சுடமுடியவில்லை.
குரங்காற்றுப் பக்கமாய் அவர்கள் மதிய சாப்பாட்டுக்காக உட்கார்ந்த போது
ஜமீனின் மனைவிதான் முதலில் பார்த்தாள். “ஏங்க ஏங்க அங்க பாருங்க
நல்லா கொழு கொழுன்னு ஒரு மானு…” எல்லோரும் அந்த திசையில் திரும்ப,
ஜமீன் உடனடியாக துப்பாக்கியை எடுத்து குறி பார்த்தார். அவர்கள் இருந்த இடத்திலிருந்து இரநூறு அடிகள் அந்த மான் தள்ளி நின்றது.
தங்கப்பன் அவசரமாய் ஜமீனை மறித்தான். “அய்யா அதச்
சுடாதிய… அது செனையா இருக்கு. எந்த நிமிசத்துலயும்
குட்டி ஈனும்… விட்டிருங்க…” ஜமீனுக்கு
எரிச்சலானது. எப்படித் தன் துப்பாக்கியை மறைத்துப் பிடிக்கும்
துணிச்சல் வந்தது அவனுக்கு. “உனக்கு எப்டிடாத் தெரியும் அது செனையா
இருக்குன்னு?...” அவர் உறும “நல்லா பாருங்க
அடிவயிறு கனத்து இறங்கிப் போச்சு… சொன்னாக் கேளுங்க…”
ஜமீன் அதைக் கேட்கும் மனநிலையில் இல்லை. காலையிலிருந்து
எதையும் சுடாததால் தன் குடும்பம் தன் வீரம் குறித்து என்ன நினைக்குமென்கிற தவிப்பு
வேறு அவருக்கு இருந்ததால் அவர் குறியை மாற்றாமல் மானை நோக்கி சுட்டார். முதல் குண்டு வெடித்து அதிர்ந்து மானின் கழுத்தில் பட்டது, இரண்டாவது குண்டு அதன் வயிற்றில் பட மான் சுருண்டு விழுந்தது. தங்கப்பன் உச்சபட்சமான கோவத்தில் “யோவ் உங்களுக்கெல்லாம்
என்ன சொன்னாலும் புத்தி வராதா.. ச்சை..” எழுந்து வேகமாக ஓடினான். மான் இன்னும் துடித்துக் கொண்டிருந்தது.
அவன் கோவத்தைப் பார்த்து கடுப்பான ஜமீனும் ஆட்களும் அவனுக்குப் பின்னாலேயே
ஓடினார்கள். தங்கப்பன் இடுப்பிலிருந்து கத்தியை உருவி மானின்
வயிற்ற்றை மெதுவாக அறுத்தான். வயிற்றுத் தோல் கிழிய கிழிய உள்ளிருந்து
குட்டிக் கால்கள் எட்டிப் பார்க்கத் துவங்கின. பின்னால் ஓடிவந்த
ஜமீனும் ஆட்களும் உயிருடன் குட்டிக் கால்கள் வெளிவருவதைப் பார்த்து வெளிறிப் போய் நின்றனர்.
மொத்தமாக தங்கப்பன் அதன் வயிற்றைக் கிழிக்க அந்தக் குட்டி மான் மெதுவாக
வெளியில் வந்தது. தான் பார்த்த புதிய உலகில் மெதுவாக ஒவ்வொரு
எட்டாக வைத்து நடந்த அந்த மான் குட்டி எந்தத் திசையில் நடப்பதெனத் தெரியாமல் எல்லாப்
பக்கமும் சுற்றி சுற்றி நடந்து விழுந்தது. தன் கையில் வைத்திருந்த
துப்பாக்கியை அப்படியே போட்டுவிட்டு ஜமீன் காடே அதிர ஓடினார். ஜமீன் குடும்பம் அவரை நிறுத்தவும் முடியாமல் கூப்பிடவும் முடியாமல் விக்கித்துப்
போய் நிற்க, அந்த மனிதர்களைக் காணமுடியாத எரிச்சலில் குட்டி மானைத்
தூக்கிக் கொண்டு தங்கப்பன் தன் குடிசையை நோக்கி வேகமாக நடந்தான்.
( *கருமாண்டி – காட்டைப்
பற்றி எல்லாம் தெரிந்த வழிகாட்டி )
No comments:
Post a Comment