Monday 22 July 2013

Story-53 அம்மா வாழ்ந்த வீடு



அம்மா வாழ்ந்த வீடு
- Devaraj Vittalan

செம்பருத்தி பூக்களும், ரோஜா பூக்களும், வேப்ப மரங்களும் , அரச மரங்களும் நிறைந்திருந்த அந்த அழகிய பூங்காவில், ஊஞ்சல்களிலும், சருக்குப் பலகைகளிலும், விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை காணும் பொழுது சுனிலுக்கு மனதிலொரு சந்தோசமும், அமைதியும் பிறந்தது.

எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நகரத்தில் சுனிலுக்கு இருந்த ஒரே ஆறுதல் அந்த சிறிய பூங்கா ஒன்றுதான், பூங்காவில் இருந்து பார்த்தால் கடைசியாக அம்மா வாழ்ந்த வீடு தெரியும், குறிப்பாக அந்த வீட்டின் பால்கனி. குரோட்டன்ஸ் செடிகளிருக்கும் அந்த பால்கனியில்தான் அம்மா எப்போதும் அமர்ந்திருப்பாள். அம்மா நோய்வாய்பட்டிருந்த காலத்திலும், நானும் அம்மாவும் பூங்காவிற்கு வருவோம். சாந்தோசமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பாள் அம்மா. நோய் முற்றி மரணத்தறுவாயில் போராடிக் கொண்டிருந்த கடைசி காலத்தில் கூட அம்மா, பூங்காவிற்கு வர இயலாவிட்டாலும், இந்த பால்கனியிலிருந்துதானே, சந்தோசமாக விளையாடும் குழந்தைகளையும், அழகிய மலர்களையும், பார்த்து இரஸித்துக் கொண்டிருப்பாள் என்ற எண்ணம் சுனிலின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

பூங்காவில் கள்ளம் கபடமில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் சுனிலை பார்த்து சிரித்தனர். சுனிலின் அம்மா சில மாதங்களுக்கு முன்புதான் கேன்ஸர் நோயினால் இறந்தார்கள். அம்மா இறந்து போனாலும், அவர்கள் விட்டுச் சென்ற நினைவுகள் சுனிலின் மனதில் நீங்காமல் சுழன்றுகொண்டிருந்தது.

அம்மா கடைசியாக வாழ்ந்த வீட்டை பூங்காவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் சுனில், வாடகை வீடுதான் என்றாலும், அம்மாவின் நினைவுகளை தன் சுவர்களில் பதிவுசெய்து கொண்டிருக்கும் வீடு, சுனிலின் மனதில் ஒரு கோயிலைப் போல் தெரிந்தது.

அம்மா பல மாதங்காளாக  ஊதா நிறம் பூசப்பட்டிருந்த அந்த வீட்டில்தான் தங்கி இருந்தார். எப்போதும் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் அம்மா சில நேரம் அன்பாய் சுனிலின் கேசத்தை வருடிவிடுவாள், தான் இறந்து போனாள் தன் கடைசி மகனின் வாழ்க்கை என்ன ஆவது என்பதை பற்றி, உயிர் போகப் போகும் கடைசி நிமிடம் வரை கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்  அன்புள்ளம் கொண்ட அந்த தாய்.

பூங்காவில் அம்மாவின் நினைவுகளில் மூழ்கியிருந்த சுனிலை தன் பக்கம் ஈர்த்தது அந்தக் குரல்…

அந்த பெண் ஜீன்சும் , டீசர்ட்டும்,  கூலிங் கிளாசும் அணிந்திருந்தாள், தன் கணவனிடம் ரமேஸ் உங்க அம்மாவ வச்சு என்னால பாக்க முடியாது, அவங்க இருக்குறதால வீட்டுல ஒரு மோசமான நாத்தம் வருது. அபார்ட்மெண்ட்டுல எல்லாரும் என்னைய ஒரு மாதிரியா பாக்குறாங்க.. வேலைக்காரி கூட ரூம கிளீன் பன்றதுக்கே சங்கடப்படுறா .. ச்சே செத்து தொலைய மாட்றாங்க என்றாள், அதைக்கேட்டுக் கொண்டு அமைதியாய் தலைகுணிந்த படி மண்ணைக் கிளரிக் கொண்டிருந்தான் அவளது கணவன்.

 ஏன் எதுவும் பேசமாட்ற , உங்க அம்மாவ ஒன்னும் சொல்லக் கூடாதே, எப்பவுமே நீ அம்மா, அம்மான்னு இரு, உங்க அம்மா செத்தபின்னாடியாவது நீ எம் மேல பாசமா இருப்பையா..

அப்போது அவளது கணவன்,  அவள் அருகிலிருந்து எழுந்து சென்றான் ,

பின் சில நிமிடங்களில் கைகளில் மூன்று ஐஸ்கிரீம்களை வாங்கி வந்து, மனைவியின் மடியில் அமர்ந்திருக்கும் தனது ஐந்துவயது பெண்குழந்தையை கைகளில் தூக்கி கொண்டு , குழந்தையின் கையில் ஐஸ்கீரிமை கொடுத்தான். குழந்த ஐஸ்கீரிமை கைகளில் பெற்றதும் சந்தோசமாக சாப்பிடத் தொடங்கியது, மனைவிக்கும் ஒரு ஐஸ்கிரீம் கொடுத்தான்.

ஐஸ்கீரிமை கைகளில் வாங்கிக் கொண்டு அவள், இவ்வளவு பேசிக் கிட்டுருக்கேன் நீ பதிலே சொல்ல ,மாட்றியே, ச்சே ஒன்னக் கட்டிக் கிட்டதுக்கு பேசாம என இழுத்தாள்.. அவனது மனைவி , பின் தன் கைகளில் வைத்திருந்த ஐஸ்கிரீமை தூக்கி எறிந்தாள் அவளது முகம் கோபத்தால் சிவந்திருந்தது.

இருவரின் பேச்சுகளின் இடையே மண்ணில் விழுந்து கிடக்கும் அந்த ஐஸ்கிரீமை, ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த குழந்தை..

பூங்காவில் மெல்ல  மெல்ல வெளிச்சம் குறைந்து கொண்டிருந்தது, சோடியம் லைட்டுகள் தனது மஞ்சள் வெளிச்சத்தை பூங்காவெங்கும் வியாபிக்க தொடங்கியிருந்தது.  குடும்பம் குடும்பமாக பூங்காவில் அமர்ந்து பேசி,க்கொண்டும், குழந்தைகளோடு விளையாடிக் கொண்டும் பலர் சந்தோசமாக இருப்பதை சுனில் பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்த பூங்காவில் குழந்தைகள் மட்டும் விளையாடவில்லை, பெரிய மனிதர்களும் விளையாடுகிறார்கள், குழந்தைகளின் விளையாட்டில் எந்த சுயநலமுமில்லாததால் அவர்களது உள்ளத்தில் சந்தோசம் பிறக்கிறது, பெரிய மனிதர்கள் தங்கள் சுயநலத்தின் காரணமாக குடும்பத்தின் அமைதியையும், சந்தோசத்தையும் கெடுக்கிறார்கள், ஏன் சக மனிதர்களை நேசிக்க தயங்குகிறார்கள் என்று எண்ணிக் கொண்டே சுனில் பூங்காவை விட்டு சாலையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான்.

இரவெல்லாம் அவனது மனதில் அந்த வீட்டில் நடந்த பழைய காட்சிகள் நினைவில் வந்த வண்ணம் இருந்தது. அம்மாவின் அறையில் அம்மாவோடு இருந்த கணத்தில் தம்பி இந்த வீட்டுல அதுவும் இந்த ரூம்ல கரண்ட் போனாலும் நல்ல காத்து வருதுப்பா எனக் கூறியது சுனிலின் மனதில் நினைவு வந்தது, அம்மா கடைசி காலத்துல அந்த வீட்டை நேசிச்சுருக்காங்க என அவன் தானாக கூறிக் கொண்டான்.

மறுநாள் அதிகாலையிலேயே மழைத் தூறத் தொடங்கிவிட்டது. தன் நண்பனின் அறையில் தங்கியிருந்த சுனில் “ இன்னைக்கு எப்படியாச்சும் அம்மா வாழ்ந்த வீட்டுக்கு போயி ஒரு முறை பாத்துட்டு வந்தூரனும் என தனக்குத்தானே முனகிக் கொண்டான். மழை சிறிது நேரத்தில் நின்று விட்டது. குண்டும் குழியுமாய் இருக்கும் சாலையெங்கும் நீர் நிரம்பியிருந்தது. சில இடங்களில் தனது பேண்ட்டை முட்டி வரை தூக்கி விட்டுக் கொண்டு நடந்து சென்றான் சுனில்.

பூங்காவை கடந்து, தனது அம்மா வாழ்ந்த வீட்டிற்கு  செல்லும் பிரதான தெரு வழியாக நடந்தான். சில மாதங்களுக்கு முன்பு பேசிப் பழகிய நபர்கள் அனைவரும் அவனை மறந்து விட்டிருந்தனர். பரபரப்பான நகர வாழ்க்கையில் ஒரு நாளை கழிப்பதென்பதே பெரிய போராட்டமாக இருக்கும்போது, இவர்கள் எங்கே தன்னை நினைவு வைத்துக் கொள்ள போகிறார்கள் என தனக்குள் எண்ணிக் கொண்டான் . அவனது மனது தனது சொந்த கிராமத்தை எண்ணி ஏங்கியது , விடுமுறைக்கு எவ்வளவு மாதங்கள் கழித்து வந்தாலும், கிராமத்து வாசிகள் எப்போது வந்த என கேட்பார்கள். என தனது கள்ளம் கபடமற்ற கிராமத்து மனிதர்களை எண்ணிக் கொண்டான்.

ஊதா நிறம் அடிக்கப்பட்டிருந்த தனது அம்மா வாழ்ந்த வீட்டை இப்போது அடைந்திருந்தான் சுனில். மாடிப்படிகளில் ஏறி முதல் தளத்தில் இருக்கும் அந்த பெரிய தேக்குமரத்தினாலான கதவிற்கு முன்புள்ள இரும்பு கம்பிகளால் ஆன சிறிய கேட்டின் வழியாக கையை விட்டு அழைப்பு மணியை அழுத்தினான். வீட்டினுள் இருந்து யாரும் வெளியே வருவது போல் தெரியவில்லை. மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினான். இப்போது உள்ளிருந்து யாரு சும்மா பெல்ல அடுச்சுகிட்டே இருக்கிறது என சப்தம் போட்டுக் கொண்டே ஒரு அறுபது வயது பாட்டி கதவை மெள்ளத் திறந்தாள். பாதிக் கதவை திறந்து விட்டு சுனிலை வினோதமான பார்வையில் ஏற இறங்க பார்த்தாள் பாட்டி. ஒனக்கு என்ன வேணும் நீ யாருப்பா, எதுக்கு வந்த என  எரிச்சலாக கேட்டாள் பாட்டி.

“ பாட்டி நாங்க ஆறு மாசம் முன்னாடி இந்த வீட்டுலதான் குடியிருந்ததோம் எனக் கூறினான் சுனில். 

அதுக்கென்ன இப்போ என மீண்டும் எரிச்சல் மிகுந்த வார்த்தையில் கேட்டாள் பாட்டி. பாட்டி எங்கம்மா இந்த வீட்டுலதான் கடைசிகாலத்துல இருந்தாங்க, அதனால ஒரு தடவ வீட்டுக்குள்ள வந்து பாத்துட்டு போயிடுறேன் பாட்டி என ஏக்கத்துடன் கூறினான் சுனில்.

போப்பா போ .. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இப்படித்தான் ஒருத்தன் சோப்பு விக்கிறவன் மாதிரி வந்து பக்கத்து வீட்டு பங்கஜம் வீட்டுல பத்து பவுனு தங்கத்தை எடுத்துட்டு போயிட்டானாம். நீ இப்ப புதுசா ஒரு கதைய சொல்லிட்டு வர்ரையாக்கும். பேசாமப் போப்பா என்றாள் பாட்டி.

பாட்டி நான் பட்டாளத்துல வேலை பாக்குறேன். இப்ப லீவுக்கு வந்திருக்கேன், வேணுமுன்னா இந்த கார்ட்ட பாருங்க என தன் சட்டைப்பையில் இருந்த இராணுவத்தில் பணிபுரிவதற்காண அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தான்.  பாட்டி, சுனில் சொல்லும் எதையும் கேட்காமல் பாதி திறந்த கதவை வேகமாக இழுத்து மூடிவிட்டு சென்றுவிட்டாள்.

சுனில் மௌனமாக வாழ்வின் கடைசி தருணத்தில் அம்மா வாழ்ந்த   வீட்டில் இருந்து இறங்கி சாலையை நோக்கி நடக்கத் துவங்கினான். சிறிது நேரத்தில் பூங்காவை அவன் அடைந்திருந்தான். பூங்காவில் உள்ள அரசமரத்தினடியில் வந்தமர்ந்தான். அது விடுமுறை நாளென்பதால் காலையிலேயே குழந்தைகள் சந்தோசமாக ஊஞ்சல்களிலும், சருக்குப் பலகைகளிலும் விளையாடிக் கொண்டிருந்தனர் , குழந்தைகள் எழுப்பிய சப்தமும், சந்தோசமும் சுனிலை எதுவும் செய்யவில்லை அவனது கண்கள் அந்த ஊதா நிற வீட்டின் பால்கனியை மட்டும் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தது.


-முற்றும்-

No comments:

Post a Comment