Monday, 22 July 2013

Story-56 மனிதனிலிருந்து குரங்கு



”மனிதனிலிருந்து குரங்கானேன்”

ஒருமனதாக அனைவரும் ஒப்புக்கொண்டனர். எங்களின் சாதி அழிய யார்தான் பார்த்கொண்டு சும்மாயிருப்பர். அதிலும் நாங்கள் பூர்வீக பச்சை தமிழர்கள் வேறு.  ஒரே  ஊசிதான். கூடுதலாக ஒரு மஞ்சள் பச்சை மாத்திரை சாப்பிட்டால் போதும். ‘இனி எப்போதும் கவலையில்லை’ என டாக்டரும் உறுதியாக சொல்லிவிட்டார். இந்த உலகத்திலேயே மிகவும் சுத்தமான கலப்பில்லாத சாதியாக  எங்கள் சாதிமட்டுமே இருக்கும். கடந்து வருடக் கணக்குப்படி மொத்தம் எங்கள் சாதியில் 1333 பேர் மட்டுமே சுத்தமாக வேறு எந்த சாதியினரோடும் கலக்காமல் இன்றும் வாழ்ந்து வருவதாக புள்ளியியலில் டாக்டர் பட்டம் பெற்ற எங்கள் சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் பிதாமகன் சொல்கிறார்.

இதோ டாக்டர்.விஞ்ஞானம் இதற்காகவே டெக்ஸாஸிலிருந்து வந்துள்ளார். எங்கள் சாதியில் உயிரியல் தொழிற்நுட்பத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் மனிதர். அதிகம் படித்தவர். அமெரிக்காவில் வாழ்பவர். எங்கள் சாதிச் சங்கத்தின் பொருளாளர். அவர்தான் இந்த மருந்தை கண்டுபிடித்தார். இந்த ஊசியை போட்ட இரண்டாம் நாள் அனைவருடைய கால் சுண்டுவிரலும் அடர் கருப்பாக மாறிவிடும். பின்னர் அதே நாள் இரவு மஞ்சள் பச்சை மாத்திரையை உட்கொண்டால் சுண்டுவிரலோடு அந்த நிறம் மேலே பரவாமல் நின்றுவிடும். ஒரு சுண்டுவிரல் கருப்பாக மாறிய ஆண் வேறொரு சுண்டு விரல் பெண்ணோடுதான் பழக முடியும். சுண்டு விரல் ஆண் யாரும் வேரு சாதி பெண்ணை பார்த்தால் காதல் உணர்வு வராது, வேறு சாதி பையனை திருமணம் முடித்தால் இன விருத்தியடையாது. எங்களுக்கு டாக்டர் விஞ்ஞானம் கடவுளாக தெரிந்தார். கடவுள்தானே தனித்து சாதியை படைக்க முடியும். இனி நாங்கள் தனித்த அடையாளத்துடன் இருப்போம். சிங்க வகையறா வாழ்க!.

அரசுக்கு தெரியாமல் மிகவும் இரகசியமாக நடக்கும் இந்த சென்னை மாநாட்டில் மொத்தம் 53 பேர் இந்த ஊசியை போட்டுக்கொண்டோம். ஆளுக்கொரு மஞ்சள் பச்சை மாத்திரயை வாங்கி வைத்துகொண்டோம். எல்லோருக்கும் பெருத்த சந்தோஷம். வெளியூர்களில் இருக்கிற எங்கள் சாதி பெரிய மனிதர்களுக்கு, எங்கள் சாதியை சேர்ந்த டாக்டர்கள் மூலமாக ஊசி போடப்படும் என டாக்டர் அறிவித்தார். மாத்திரையை அவரவருக்கு தெரிந்த சொந்தங்களுக்கு கூரியர் மூலமாக அனுப்பி வைத்தோம்.

மாநாட்டு கூட்டத்தில் மிக முக்கியமான ’ஒரு வரி தீர்மானம்’ ஒன்றும் பலத்த  கரகோஷத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது. இனி யாரும் அடுத்த சாதிக்காரன் நெய்த ஆடையை உடுத்தக் கூடாது என்பதுதான் அது. இனி எங்கள் தலைவர் குஞ்சுமன்னன் மில்லில் இருந்து வரும் பேண்ட், சட்டை, வேட்டி, சேலையை மட்டும்தான் வாங்கி உடுத்த வேண்டும். படிப்படியாக அனைத்து தொழில்களையும் தங்கள் சாதி ஆட்கள் படித்து தெரிந்து கொண்டு தங்கள் சாதிக்காக மட்டுமே சேவை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டது. ”எப்படியாவது நம்ம சாதிய காப்பாத்தனும்.சாமி” என எங்கள் குல சாமி முன்னர் அனைவரும் சத்தியம் செய்து தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தோம் “

மூன்று வாரங்களுக்கு பின்னர்…..

எனக்கும், என் மனைவி பவானி மற்றும் என் குட்டிப்பெண் நித்திராவுக்கும் பயங்கர வயிற்று வழியுடன் வாந்தியும், மயக்கமும் வந்தது. மூவருக்கும் முதுகின் கீழ் பகுதியில் லேசான வீக்கம் வேறு தெரிந்தது. அந்த மருந்தால் ஏதும் பக்கவிளைவு இருக்குமோ என பயந்த நான் டாக்டர்.விஞ்ஞானத்திற்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை.


 மூவரும் போய் அருகிலுள்ள மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தோம்.
”குடல்ல அப்பெண்டிக்ஸ் லேசா வளந்துருக்கு வேற ஒண்ணுமில்ல. இந்த கருப்பு மாத்திரையை சாப்பிடுங்க. சரியாயிடும்” என்று சொன்னார் டாக்டர்.

ஊரிலிருந்து சரசு அக்காவும், அத்தானும் போன் செய்து இதே மாதிரிதான் அவர்களுக்கும் அப்பெண்டிக்ஸ் இருப்பதாக சொன்னார்கள். ஓரிரு நாளில் ஊசிப் போட்டுகொண்ட அனைவருக்கும் ”அப்பெண்டிக்ஸ்” வளர்ந்திருப்பதாக உறுதியானது.

”ஏன்தான்? இந்த ஊசியை போட்டுக்கொண்டோம்” என நொந்து கொண்ட மாதிரி வயிற்று வழி வேறு. டாக்டர் விஞ்ஞானத்தை இது விசயமாக யாரும் தொடர்பும் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் சந்தேகம் வழுத்தது “ ஏதோ? தவறு நடந்திருக்கிறது” என.

இந்த பிரச்சினைக்கெல்லாம் மாசானிதான் முழுக் காரணம். சென்ற வருடம் அவன் மகன் கருவனுக்கு பெண் பார்க்க சென்னை வந்த மாசானி, தருமன் மகள் பருத்தியை பார்த்து பிடித்துபோய் நிச்சயம் செய்கிற நாளில் தருமன் தனது சாதியை சேர்ந்தவன் இல்லை என சுப்புசெல்லம் சொல்லத் தெரிய வந்தது. தருமனோ “நானும் இதே சாதிதான்..ஆனா புலி வகையறா” - வென எவ்வளவோ வாதாடி பார்த்தான். மாசானி ஒப்புக்கொள்ளவில்லை. மாசானி சிங்க வகையறாவாம். தருமனை காட்டிலும் உயர்ந்த சாதி போல. திருமணம் நின்று போனது.

பல வருடம் முன்னர் தலைவர் பத்துராமன் எங்கள் சாதியின் அனைத்து வகையறா-வும், இன்னும் மூன்று வெவ்வேறு சாதியும் இரே இனம் என அரசு பதிவுகளில் பதிய வேண்டுமாய் கேட்டுக்கொண்டார். அப்போதுதான் நாம் பெரிய இனமாக மாறுவோம் என்றார். அதுமுதல் இவர்கள் சாதியும், வெவ்வேறு மூன்று சாதிகளும் தங்களை ”வீரகுலத்தார்” என கூறிக்கொண்டனர். தருமனும் அந்த நோக்கில்தான் மாசானியை பெண் பார்க்க அழைத்தான்.

மாசானிக்கு இந்த சாதி இணைப்பில் கொஞ்சமும் உடன்பாடில்லை. எங்களுக்கும்தான். நிச்சயம் நடக்காமல் போன நாளிலிருந்து பத்து நாளுக்கு பின் மாசானியின்  மகன் கருவன் வீட்டை விட்டு ஓடிப்போய் பருத்தியையை திருமணம் செய்து கொண்டான். சாதி நிறுத்திய திருமணத்தை காதல் செய்து வைத்தது.  இது மாசானிக்கு பெருத்த அவமானத்தையும், கோபத்தையும் உண்டாக்கியது. இதுதான் பிரச்சினையின் தொடக்கம்.

மாசானி வீட்டு காதல் பிரச்சினைக்காக அமெரிக்க டாக்டரும், பல்கலைக்கழக பேராசிரியரும், இன்ன பிற படித்த மேதாவிகளும் சாதி உணர்வுடன் கைகோர்த்தார்கள். உடனடியாக சாதிச்சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. பேராசிரியர் பிதாமகன் சார்பில் ஆள் கணக்கு எடுக்கப்பட்டது. பின்னர்தான் டாக்டர்.விஞ்ஞானம் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு எங்களுக்கான சாதிமருந்தை கண்டுபிடித்தார். அந்த ஊசிக்கு கூட எங்கள் சாதிப் பெயர்தான் வைத்தார்.

1 வருடம் கழித்து…………….

பிரச்சினை இவ்வளவு அசிங்கமாய்ப் போகும் என யாரும் நினைக்கவில்லை. ஊசி போட்டுக்கொண்டு மாத்திரை சாப்பிட்ட அனைவருக்கும் சுமார் 30 சென்டி மீட்டர் அளவில், அடர் கருப்பு நிறத்தில் பின்பகுதியில் வால் ஒன்று நீட்டி கொண்டிருந்தது. வாலின் இறுதிப்பகுதியில் நான்கைந்து முடிக்கற்றுகள் வேறு இருந்தது. அச்சு அசலாக இது வால்தான்.
வீட்டைவிட்டு வெளி வேலைக்கு சென்று இன்றுடன் இருபது நாள் ஆயிற்று. பக்கத்து வீட்டு கணேசனுக்கு தெரிந்து போயிற்று. நிஷா ஸ்கூலில் இவளை பார்த்து உடன் படிக்கும் பிள்ளைகள் கிண்டல் செய்வதனால், ”பெரிய பிரச்சினையா இருக்கு சார். நிஷாவை கூட்டிட்டு போங்க” என பிரின்சிபல் கடுமை காட்டினார். நானாவது வாலை என் பேண்ட்டுக்குள் செறுகிக் கொள்வேன். பாவம் பவானியும், நித்திராவும்.

பிரச்சினை முற்றிப்போய் தாராபுரத்தில் அத்தையும் மாமாவும் திடீரென தூக்கு மாட்டி கொண்டார்கள். சரசு அக்கா-வின் இரண்டாவது பெண் நிலா அத்தானோடு கடுமையாக சண்டைபோட்டு இரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். தருமன் தன் வாலை தானே நறுக்கி இரத்தம் அதிகம் வெளியேறி பஞ்சவர்ணம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாந்தி அத்தையை குழாயடியில் யாரொ ஒருவர் “நாய் வாலு” என அழைக்கப்போய் பெரும் பிரச்சினையாகி மாமா பித்தளை குடத்தால் சொன்னவரின் மண்டையை உடைத்து இப்போது அவர் வாலும் பித்தளை குடமுமாய் போலீஸ் ஸ்டேசனில் இருக்கிறார். ஏகமாய் பிரச்சனைகள். வெளியே சொல்லமுடியாத சோகம்.

பேராசிரியர் பிதாமகன் மும்பையில் பிலாஸ்டிக் சர்ஜரி செய்து வாலை அகற்றி கொண்டதாக மண்டையன் மாமா சொன்னார். டாக்டர் விஞ்ஞானம் காதம்பரியை விவாகரத்து செய்துவிட்டு யாரோ ஒரு சீனாக்காரியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டாராம்.

”நமக்கு ஊசிய போட்டுட்டு இவன் இப்படி ஊசிப்போயிட்டானே” – சின்னி புலம்பினாள்.

நான் இவர்கள் சாதியில் பிறந்ததற்கு நொந்து கொண்டேன். இதில் வேற சாதிக்காரன் நெஞ்ச துணிய உடுத்தக்கூடாதாம். நல்ல வேளை நடக்கல. நடந்திருந்தா உண்மையிலே அம்மணமாக மிருகமா வாலுடன் திரிய வேண்டியதுதான்.

“அய்யய்யோ இந்த வாலை எடுக்கனுமே. யாருகிட்ட போவேன். ஆபிஸ்-ல தெரிஞ்சா அசிங்கமே! நாசமா போன விஞ்ஞானம். இப்படி பண்ணிட்டானே!” புலம்பினேன் நான்.

”பிதாமகனுக்காவது போன் போட்டு ஆபரேசன் பண்ணலாமா-ன்னு கேட்போம்….மின்னி! ஏய் மின்னி!.. அந்த மொபைல எடு!”

”ஏங்க! இங்க வாங்கங்க! இங்க டீவியில பாருங்க……………..”

”வின் செய்திகள்
இன்றைய முக்கிய செய்திகள்.
மனிதலிருந்து குரங்கு பிறந்த அதிசயம். திண்டாடும் வால் மனிதர்கள். சிங்கவால் குரங்கு போல, குரங்கு வால் மனிதர்கள் – ஒரு சிறப்பு கண்ணோட்டம்………………………………….”

சேனலை மாற்றி டிஸ்கவரி சேனல் போட்டேன்…….

”இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அந்தமான் தீவில்தான் முதல் மனிதன் தோன்றினான் எனபது நாம் அறிந்ததே! இதோ! அங்கு வாழ்கிற ஒரு குரங்கு கூட்டம், வாலில்லா இன்னொரு குரங்கு கூட்டத்தை விரட்டியும், துரத்தியும், தம் இனத்தோடு சேராது ஒடுக்கியும் வைத்திருக்கும் சிறப்பு காட்சியை நம் புகைப்பட கலைஞர் மிஸ்டர். ஜெரால்ட் விளக்குவார்.”

நான் தலையிலடித்து கொண்டேன். டிவியை அணைத்தேன்.

எல்லாம் முடிந்தது.

No comments:

Post a Comment