Thursday 11 July 2013

Story-28 தனிமை

~தனிமை~ 

ஒரு மாலைநேரம். 
மணி ஒரு ஆறு ஆறேகால்  இருக்கும்.

"ஏங்க நாலு மணிக்கு விளையாட போன ரகு இன்னும் வரலீங்க. பார்க்குக்கு போய் கூட்டிட்டு வாங்க. வரவர நான் சொல்றதை கேட்குறதே இல்லை உங்க மகன் " என்றாள்  என் மனைவி சுமி.

"சரி சரி நான் போய் கூட்டிட்டு வரேன் .எங்க போயிட போறான். விளையாடுற வயசு தானே" என்று கூறி விட்டு என் எட்டு  வயது மகனை கூட்டிட்டு வர அருகில் உள்ள பார்க்குக்கு நடக்க ஆரம்பித்தேன் .

இந்த பார்க்  வெள்ளையர்கள் காலத்தில் இருந்து பராமரிக்கப்படுவதால் அதிக மரங்களை கொண்டது. குழந்தைகளும் , வாக்கிங் செல்லும் பெரியவர்களும் அதிகம் காணப்படுவர். 

ரகு தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான்.

"டேய் ரகு ,வாடா டைம் ஆச்சு. ஹோம் வொர்க் பண்ணனும்" 
"அப்பா ப்ளீஸ் பா ..இன்னும் அஞ்சு ஓவர் தான் ...ப்ளீஸ் ப்ளீஸ் பா" 
"சரி சரி நான் அந்த மரத்துக்கிட்ட வெயிட் பண்றேன்.சீக்கிரம் வந்துரு " என்று கூறி மரத்தின் நிழலில் உட்கார்ந்தேன்.

அருகில் ஒரு பெரியவர் ,வயது ஒரு எழுபது இருக்கும் , சோகமாய் குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்தார் . 
அவரை பார்த்து "என்ன பெரியவரே ,உங்க பேரன் விளையாடிட்டு இருக்காரா"

சற்று அமைதிக்கு பிறகு என்ன நினைத்தாரோ தெரியல, என்னிடம் தன் கதையை கூற ஆரம்பித்தார். 

" முப்பது வருஷம் முன்னாடி இதே இடத்துல,கைபுள்ளயோடு உட்கார்ந்திருந்தேன். சரோ(பெரியவரின் மனைவி) கேன்சர் வந்து எங்கள விட்டுட்டு போய்டுச்சு. உறவு இல்லாம தனி ஆளா சின்னுவ(சின்னசாமி) வளர்த்தேன். எனக்கு எல்லாமே சின்னு தான். இங்க வந்து தான் விளையாடுவோம், அவனுக்கு பாடம் சொல்லி கொடுப்பேன். அப்ப எங்க வீட்ல மின்சாரம் எல்லாம் இல்லை. சின்னுவும் நல்லா படிச்சான். மெரிட்லயெ இஞ்சினியர் படிப்பும் முடிச்சுட்டு நல்ல வேலைலயும் சேர்ந்தான். அவனோட உழைப்புனால கம்பனி, அமெரிக்கா அனுப்பினாங்க. சின்னு என்ன அமெரிக்கா வரச்சொன்னாலும் என் உடல் உபாதையால அங்க போக முடியல. மூணு  வருஷம் முன்ன அங்க ஒரு வெள்ளகாரிய திருமணம் பண்ணிட்டான் . இப்போ ரெண்டரை வயசுல ஒரு பேரப்பிள்ளை இருக்கான். 
          இன்னைக்கு சின்னுவோட பிறந்தநாள் .இனி அவன எப்பாவது பார்க்க முடியுமான்னு தெரியல. என்னமோ தெரியல காலைல இருந்து ஒரே சரோ நியாபகமா இருக்கு. அதான் இங்க வந்து உட்கார்ந்துட்டேன். " 

பெரியவரிடம் கொஞ்சம் ஆறுதல் கூறிவிட்டு ரகுவை கூட்டிக்கொண்டு வீடு வந்தேன். 
இரவு தூக்கம் வராமல் பெரியவரின் நியாபகமாகவே இருந்தது. மனதில் பாரத்தோடு எப்படியோ தூங்கிவிட்டேன்.

காலை ஏழு மணி. 
கீரிங் ...கீரிங் .. 

"ஹலோ "
"அப்பா நான் கார்த்தி பேசுறேன்"
"கண்ணு  ,எப்படிப்பா இருக்கே. ரகு ,மருமகபுள்ள எல்லாம் சௌக்கியமா"
"எல்லாரும் நல்லா இருக்கோம்பா . இந்த வாரம் ஊருக்கு வரோம். பார்க்கணும் போல இருக்கு" 

என்று பேச ஆரம்பித்தேன் கிராமத்தில்  வாழும் அப்பாவோடு.

*************************************************************************************************************************************************************************************************

No comments:

Post a Comment