Thursday, 11 July 2013

Story-30 கதவிலக்கம் 3ன் கீழ் 10

கதவிலக்கம் 3ன் கீழ் 10


”சார் வண்டி ரெடி”என்று டிரைவர் வந்து சொன்னபோது எனது மூக்கு கண்ணாடியை அதன் பெட்டியில் வைத்து மூடிவிட்டு கிளம்பினேன்,நான் முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்த இந்த வீட்டை விட்டு,இங்கிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவிலுருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு.
மதுரையிலிருந்து கிளம்பி சென்னை வந்தபோது,என்னிடம் நான் படித்த பொறியியல் படிப்பை தவிர வேறெதுவுமில்லை.அப்பொழுது ஆரம்பிக்கப்பட்ட ராயல் என்பீல்ட் கம்பெனியில் இளநிலை பொறியாளராக சேர்ந்து,கூடுதல் பொது மேலாளராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரிடையர் ஆனேன்.இந்தியனாக பிறந்ததால் சம்பளத்தில் முக்கால்வாசியை சேமித்தேன்.கணிப்பொறித்துறை அப்பொழுது இந்தியாவிலிருந்து வெகுதொலைவில் இருந்த  காரணத்தால் வேலைக்கு சேர்ந்த நான்கே ஆண்டுகளில் வெறும் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு இந்த இடத்தை வாங்கினேன்.நான் விரும்பியபடி வெளிச்சமும்,காற்றும் வரும்படி இரண்டு பெட்ரூம், இத்யாதிகளுடன் இந்த வீட்டை கட்டி முடிக்க மேலும் இரண்டு வருடமும்,முப்பதாயிரம் பணமும் செலவானது.
அடுத்த இரண்டு வருடத்தில் எனக்கும்,கமலாவிற்கும் கல்யாணம்,அங்கிருந்து நான்கு வருடங்களில் என் ரேசன் கார்டில் கமலாவுடன் சேர்த்து சீனிவாசன் வயது 3,நந்தினி வயது 1 என கூடுதலாக இரண்டு பெயர்கள்.இப்படியாக வாழ்க்கை போய்கொண்டிருந்தது.
என்னால் முடிந்தவரை மிகச்சிறந்த கல்வி ஆதாரத்தை என் பிள்ளைகளுக்கு வழங்கினேன்.சீனிவாசன் அமெரிக்காவில் எம்.எஸ் முடித்து சவுதிஅரேபியாவில் ஒரு எண்ணெய் நிறுவனத்தின் பொதுமேலாளராக இருக்கிறான்.நந்தினி கனடாவில் குடியிரிமை பெற்று மருத்துவராக இருக்கிறாள்.இருவருக்கும் நல்ல இடங்களில் கல்யாணம் முடித்தோம்.சீனிவாசனுக்கு ஒரு மகனும்,நந்தினிக்கு ஒரு மகனும் என அவர்கள் வாழ்க்கை இனிதாக போய்கொண்டிருக்கிறது.
என்னுடைய எல்லா சுகதுக்கங்களையும் இந்த வீடு பார்த்திருக்கிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் கமலா என்னை விட்டு போனபோது அவளுக்காக அதிகம் அழுதது நானும் இந்த வீடும் தான்.சீனிவாசனின் மகனை இங்கேயே மருத்துவம் படிப்பிக்க அவனுக்கு விருப்பம்.சென்னையின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் இருபத்தைந்து லட்ச  ரூபாய் நன்கொடையுடன்,என்.ஆர்.ஐ. கோட்டாவில் வருட கட்டணம் மூன்று லட்சத்துடன் அட்மிசன் கிடைத்தது.இங்கிருந்து தினம் கல்லூரிக்கு சென்றுவருவது கடினம் என்பதால் அவன் கல்லூரிக்கு அருகிலேயே புதிதாக கட்டிகொண்டிருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீட்டை விலைக்கு வாங்கினான் சீனிவாசன்.
மதுரையில் நான் படித்த காலத்தில் என்னுடைய பொருளாதார நிலமையின் காரணமாக சிம்மக்கல்லிலிருந்து அமெரிக்கன் கல்லூரிக்கு நடந்தே செல்வேன்.என் சந்ததியின் பொருளாதார முன்னேற்றம் என்னை ஆச்சரிய படுத்தியதே தவிர சந்தோசபடுத்தவில்லை.
“சார் போலாமா..?”என்ற டிரைவரின் குரல் என்னை இன்றைக்கு அழைத்துவந்தது.
”ம்ம்…”என்றவுடன் வண்டி கிளம்பியது.
பின் கண்ணாடி வழியாக தெரிந்த வீட்டிற்கு டாட்டா காட்டிய என்னை முன்கண்ணாடி வழியாக பார்த்த டிரைவர் சிரித்தான்.
இரண்டு மணிநேர பயணத்தில் அந்த குடியிருப்பை அடைந்தேன்.வாட்ச்மேன் எல்லா விபரங்களையும் சரிபார்த்து விட்டு சாவியை கொடுத்தான்.
“பத்தாவது ப்ளோர்ல மூணாவது வீடு சார்,டோர் நெம்பர் த்ரி பார் டென் சார்” என்று விபரங்களை கூறிமுடித்தான்.
லிப்டில் ஏறி  வீட்டை அடைந்தேன்,கைப்பையை தூக்கி வந்த டிரைவருக்கு பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தேன்.இரண்டுபேர் மட்டுமே தங்க அந்த மூன்று அறைகள் கொண்ட வீடு தேவைக்கு மிக அதிகம்.அந்த குடியிருப்பில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்ததால் மிக குறைந்த அளவிலேயே உரிமையாளர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள்.நானிருந்த ப்ளோரில் என்னை தவிர யாருமே இல்லை.வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட எல்லா பொருட்களும் பெட்டிகளில் தூங்கிகொண்டிருந்தன.மேற்கு பார்த்த வாசல் என்பதால் கிழக்கே ஒரு பால்கனி இருந்தது.அந்த ஆயிரத்து இருநூறு சதுர அடி கொண்ட வீட்டில் எனக்கு பிடித்திருந்த ஒரே இடம் இந்த பால்கனி மட்டும் தான்.நாற்காலி ஒன்றை எடுத்து போட்டு பால்கனியில் அமர்ந்து வெறிச்சோடிய வானத்தை பார்த்துகொண்டிருந்தேன்.
காலம் என்னை பின்னோக்கி இழுத்து சென்றது.நான்  கற்ற கல்வி என்னை வெறும் பணம் சம்பாதிக்கும் எந்திரமாகத்தான் உருவாக்கியது.வாழ்வியலுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் வாழ்க்கை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் வெறும் பணத்தை மட்டுமே அச்சாணியாக கொண்டு சுற்றினேன்.ஸ்காலர்ஷிப்பில் படித்த நான் நல்ல நிலமைக்கு வந்தவுடன் ஒருவருக்கு கூட படிக்க உதவி செய்யவில்லை,கமலத்துடன் கல்யாணமான அன்று அவள் வீட்டில் அரசாணி மரத்தை நட்டதோடு,எனக்கு தெரிந்து என் வாழ்வில் நான் ஒரு விதையை கூட நடவில்லை,இதுவரை நான் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த பத்து தேர்தல்களில் வெறும் மூன்றில்தான் பங்குபெற்றேன்,தமிழ்நாட்டில் பிறந்த சீனிவாசனையும்,நந்தினியையும் தமிழ் எழுத,படிக்க தெரியாத தமிழர்களாக்கினேன்.நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள ஒருவருமில்லை,வாழ்க்கையின் அடிப்படை மதிப்பீடுகளை பணத்துடன் மதிப்பிட்டதால் அவைகள் எப்பொழுதுமே எனக்கு பெரிதாக தெரியவில்லை.
அழைப்பு மணி சத்தம் என்னை அழைக்க எழுந்து கதவருகே சென்றேன்.
“சார் எதாவது வேணுமா..?” என்றான் வாட்ச்மேன்.
“சாப்பிட இட்லியும்,வாழப்பழமும் வாங்கிவர சொன்னேன்,பணத்தை வாங்கிகொண்டு கிளம்பினான்.அரைமணி நேரத்தில் திரும்பி வந்தவனிடம் வாங்கியதுபோக மீதமிருந்த பணத்தை கொடுத்தேன்.
“ஏதாவது வேணும்னா கூப்பிடுங்கா சார்” என்று கிளம்பினான்.
இந்த குடியிருப்பில் நான் இதுவரை பார்த்த ஒரே ஜீவராசி இவன் மட்டும்தான்.மீண்டும் பால்கனி அருகிலேயே அமர்ந்து பொட்டலத்தை பிரித்தேன்.பழைய மாவில் சுட்டிருக்க வேண்டும்,இட்லி புளிசோராயிருந்தது.நான்கில் இரண்டை மட்டுமே சாப்பிட்டுவிட்டு வாழைபழத்தை சாப்பிட்டுவிட்டு தண்ணீரை குடித்தேன்.இட்லி பார்சல் செய்த பேப்பரில் இருந்த சினிமா விளம்பரங்களை பார்த்துகொண்டிருந்தேன்,இன்றைய சினிமாக்கள் வந்துசேரவேண்டிய சரியான இடம்.
நாளை காலை மூன்று மணி  பிளைட்டில் சீனிவாசனும் அவன் மகனும் வருகிறார்கள்.அவன் மனைவி பணிநிமித்தம் வரமுடியவில்லை.சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டும் என்பதால் எட்டு மணிக்கே படுத்தேன்.தூக்கம் என்னவோ பதினோறு மணிக்குமேல்தான் வரும்.
இரண்டு மணிக்கே டாக்ஸி வந்துவிட்டது.கிளம்பி ஏர்போர்ட்டை அடைந்தபோது மணி மூன்றேமுக்காலானது.நான்கரை மணிக்கு சீனிவாசனும்,கொளசிக்கும் வந்தார்கள்.பரஸ்பரம் சிர்த்துகொண்டோம்.கொளசிக் என்னைவிட உயரமாக இருந்தான்.வீட்டில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்பதால் லீ மெரிடியன் சென்றோம்.சவுதி ரியாலில் வருமான வரி இல்லாமல் சம்பாதித்தால் இரண்டு வீடுகள் இருந்தாலும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கமுடியும் போல.காலையில் கிளம்பி நேரே கல்லூரிக்கு சென்றோம்.நாங்கள் கொடுத்த பணம் அதிகமென்பதால்  நேரம் மிகக்குறைவாகவே செலவானது.செக் அவுட் நேரத்திற்குள்ளாகவே லீ மெரிடியன் திரும்பினோம்.அவசர வேலை காரணமாக சீனிவாசன் அன்று சாயந்திரமே கிளம்பினான்.நானும் கொளசிக்கும் வழிஅனுப்பிவிட்டு வீட்டிற்கு திரும்பினோம்.
வாட்ச்மேன் ஒருவழியாக வீட்டை தயார் செய்துவைத்திருந்தான்.கொளசிற்கும் எனக்கும் இட்லி வாங்கிவரச்சொல்லி பணத்தை கொடுத்தேன்.
“சார் சமையலுக்கு யாரயாவது ஏற்பாடு பண்ணனுமா..?” என்றான்.
“வேணாம்ப்பா ..நானேபார்த்துகிறேன்”
கமலாவின் ஞாபகமாக என்னிடமிருக்கும் ஒரே விசயம் அவள் எனக்கு கற்றுகொடுத்த சமையல் மட்டும் தான்..
ஒரு வழியாக அந்த வீட்டில் எல்லாம் சரியாக அமைய ஒருவாரமானது.லேப்டாப்,இண்டர்நெட்,ஐபாட்,தலையணை சைசிலான ஆங்கில நாவல் இத்யாதி விசயங்கள் மட்டும் இருந்தால் கரப்பாண் பூச்சிகூட வாழமுடியாத இடத்திலும் வாழும் வல்லமை படைத்த இன்றைய இளைஞர்களின் அசல் பிரதி கொளசிக்.எனக்கு தான் பொழுது யுகங்களாய் கழிந்தது.எவ்வளவு மெதுவாக செய்தாலும் எல்லா வேலையும் எட்டுமணிக்குள் முடிந்துவிடும்.அதற்குமேல் பால்கணியில் காந்தத்தில் ஒட்டிகொள்ளும் இரும்பாய் போய் அமர்ந்துவிடுவேன்.
“அப்டி அங்க என்னதான் தாத்தா இருக்கு..?”என்ற கொளசிக்கின் கேள்விக்கு எனக்கு பதிலே தெரியவில்லை.
இந்த குடியிருப்பின் பத்தாவது மாடியிலிருக்கும் மூன்றாமெண் வீட்டின் இரண்டாவது அறைக்கருகிலிருக்கும் பால்கணிதான் எனக்கு எல்லாமுமாகிப்போனது.அந்த வெளிரிப்போன வானத்தின் ஊடாக நான் என்னை தேடிகொண்டிருக்கிறேன்.கொளசிக் கல்லூரிக்கு போனவுடன் நிலமை இன்னும் மோசமாகிவிடும்.லட்சகணக்கான மனிதர்கள் வாழும் இந்த சென்னையில் என்னுடன் துணையாக பேச ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
எனக்கு தெரிந்து தொழில் தவிர்த்து வேறு எந்த புத்தகத்தயும் நான் படித்ததே இல்லை.என்னசெய்வதென்றே தெரியாமல் காலஞ்சென்ற எந்திரவியல் தேற்றங்களை படித்துப்பார்த்துகொண்டிருப்பேன்.மதியவேளையில் தூக்கம் வராத என்போன்ற மனிதப்பிறவிகளுக்கு தனித்துவிடப்பட்ட மதிய வேளைகள் என்னுடன் ஆறாவது படித்த ஆனந்தி வரை ஞாபகமூட்டின.நேரத்தை அளவிட நனோ செகண்ட்டை விட மிகச்சிறிய அளவீட்டை தேடிகொண்டிருந்தேன்.கல்லூரி முடிந்து கொளசிக் வீட்டுக்கு வர இரவு ஏழு மணியாகிவிடும்.அங்கிருந்து இரண்டு மணிநேரம் போவதே தெரியாது.கண்விழித்தால் காலையாகிவிடும்.
கொளசிக் கிளம்பியவுடன் வெளிரிப்போன வானத்துடனான் என் தேடல் தொடங்கிவிடும்.
என் வாழ்க்கையில் நான் இதுவரை சாதனைகளாக நினைத்த எல்லாமே பணத்தை அடித்தளமாக கொண்டிருந்ததால் எனக்கு வெறுமையே மிஞ்சியது.என் சந்ததிகளுக்கு வாழ்வியலின் அடிப்படையான அன்பை போதிக்க மறந்ததால் அவர்களால் என்மீது அன்பு காட்டமுடியவில்லை என்பதைவிட தெரியவில்லை எனலாம்.
தேடிசோறு நிதந் தின்றேன்,கூடி பல கதைகள் பேசினேன்,மனம் வாடி துன்பமிக உளன்று பிறர் வாட பல செயல்கள் செய்தேன்,இதோ நரைகூடிக் கிழப்பருவமெய்தி பின் கொடுங்கூற்றுக்கிரையென மாயும் பல வேடிக்கை மனிதர்களில் நானும் ஒருத்தனானேன்.
ஒருநாள் கொளசிக் அவன் கல்லூரியில் சுற்றுலா என்று ஒருவார காலம் அந்தமான் நிகோபார் கிளம்பிசென்றான்.அவனை வழியனுப்பிவிட்டு திரும்பிய என்னுடன் தன் கோர தாண்டவத்தை விளையாட காலம் கதவிலக்கம் மூன்றின் கீழ் பத்தில் எனக்காக காத்துகொண்டிருந்தது.

No comments:

Post a Comment