அதான் பூ வச்சிட்டோம்ல
அத்தனை உழைப்பையும் யாருக்கோ
கொடுத்துவிட்டு சோர்வாக வீடு திரும்புகிற மற்றுமொரு நாளின் மாலை நேரம் அது.
சரவணனிடமிருந்து வந்த அவசர அழைப்பால் அதிர்ந்தது என் அலைபேசி.. பொதுவாகவே அவனின்
அத்தனை அழைப்பும் அவசரமாகத் தான் இருக்கும்.. சிறு விஷயத்தையும் மிகைப்படுத்தி சொல்வதென்பது
அவனேயறியாமல் அவனிடம் ஒட்டிக்கொண்டது.. ஆனால் அன்றைக்கு அந்த அழைப்பு சுமந்து வந்த
செய்தியால் நானும் சற்று அதிர்ந்து தான் போனேன்.. இது தான் அவன் சொன்னது “நாகராஜோட கல்யாணம்
நின்றுச்சாம்; பொண்னு யாரையோ லவ்
பண்ணுதாம்; அவன் சைதாப்பேட்டை
ரயில்வே ஸ்டேஷன்-ல இருக்கான்; அவன் ஏதாவது பண்னிக்கிறுவானோனு பயமா இருக்கு; வண்டி எடுத்துட்டு
உடனே வா நான் சோழிங்கநல்லூர்-ல நிக்கிறேன்”... தொடர்பைத் துண்டித்து விட்டு நாகராஜுக்கு அலைபேசிய போது உடைந்திருந்தது
அவன் குரல்.. தளர்ந்து போனேன் நான்...காரணம் இருக்கிறது.
நாகராஜ் என் பள்ளித்தோழன். இரண்டாண்டுகள்
மட்டுமே உடன் படித்தான் ஆனாலும் பெயரை நினைத்தவுடன் முகம் வந்துபோகிற வெகு சிலரில்
அவனும் ஒருவன்.. உடனிருப்பவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கிற சூத்திரம்
தெரிந்தவன்.. சில நாட்களுக்கு நடந்த நண்பனின் திருமணத்தில் தான் வெகுநாட்களுக்கு
பிறகு அவனை சந்தித்தேன்.. அதே உற்சாகத்தோடே எப்போதும் இருக்க இவனால் மட்டும் தான்
முடிகிறது அன்று என் அறை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய அடுத்த நிமிடமே அவர்களோடு
ஒட்டிக்கொண்டான்.. அதற்குப் பிறகான ஒரு நாளில் “மச்சி! பொண்ணு
பார்த்தாச்சு டா, நம்ம வத்தலக்குண்டு
பக்கம் தான், இன்ஃபோசிஸ்-ல வேலை
பார்க்குறா; போன வாரம் தான் பூ
வச்சிட்டு வந்தோம்,
இப்பவே கல்யாணத்துக்கு லீவு சொல்லிடுறா” இப்படி சொன்னபோது
இன்னமும் கூடுதல் உற்சாகத்தில் இருந்தான்...
அத்தனை போக்குவரத்து இடையூறுகளையும்
தாண்டி சோழிங்கநல்லூரைத் தொட்டிருந்தேன்.. அரைமணி நேரத்தில் சரவணனும் நானும்
சைதாப்பேட்டையின் ரயில் நிலையத்தின் நுழைவுவாயிலில் நின்று கொண்டிருந்தோம்!!
நாகராஜ் அங்கு இல்லை, காத்திருந்தோம்..
ஒவ்வொரு முறையும் அவனோடு பேசிவிட்டு “இதோ இப்ப வந்திருவேன்-னு சொல்றான்” என கலவரமானான் சரவணன்.. காத்திருப்பதில் எப்போதும் எனக்கு
பிரச்சனையில்லை.. ஆனால், இந்த சூழலில்
காத்திருப்பது என்னை என்னவோ செய்தது.. அவனின் மனநிலையை என்னால் யூகிக்கவே
முடியவில்லை.. இன்னும் கொஞ்ச நேரத்துல வரலைனா பக்கத்திலிருக்கிற டாஸ்மாக்ல
தேடுவோம் என்பது சரவணனின் யோசனை.. அதுவும் சரிதானே, இந்த நிலையில் பெரும்பான்மையான இளைஞர்களின்
புகலிடம் அதுவாகத்தானே இருக்கிறது!! ஆனால் அதற்கான அவசியமெதுவுமில்லாமல் போனது..
சற்று நேரத்தில் யாரோடோ அலைபேசியில் பேசியபடியே எங்களை நோக்கி வரத்
துவங்கியிருந்தான் நாகராஜ்!!
நாங்கள் நினைத்தபடியான எண்ணவோட்டத்தில்
அவன் இல்லை ஆனாலும் கலங்கித்தான் போயிருந்தான்.. நண்பனின் அறைக்கு போகிறேன்
என்றவனை நம்பத்தான் வேண்டியிருந்தது, ஆனாலும் அவனை அப்படியே விட்டு வர மனமில்லை. சரவணன் பேருந்தில் வர
முடிவுசெய்து விட்டான்.. நானும், நாகராஜும் இரு சக்கர வாகனத்தில் பயணப்பட்டோம் என் அறைக்கு!!! நான்
எதுவும் கேட்டுவிடும் முன் அனைத்தயும் சொல்லிவிடுவதென அவன் தீர்மானித்து இருக்க
வேண்டும்..
“போன வாரம் தான் டா அவளுக்கு பர்த்டே.. அதுக்கு முன்னாடி நாள் வரைக்கும்
நல்லா தான் பேசிட்டு இருந்தா.. அன்னைக்கு பார்த்து அவ போனே எடுக்கல.. சரி நேர்ல
ஒரு எட்டு பார்த்து விஷ் பண்ணிட்டு வந்துடலாம்னு கிஃப்ட வாங்கிட்டு அவ ஆஃபிஸ்க்கு
போனேன்.. யாரோ ஒரு பையன் கூட பேசிட்டு இருந்தா, சரி வெளியில வர சொல்லலாம்னு கால் பண்ணேன், என் நம்பரை பார்த்தும் கூட அவ அட்டெண்ட் பண்ணவே
இல்லை.. சரி அப்புறம் பேசிக்கலாம்னு நான் ரூம்க்கு வந்துட்டேன்.. இப்ப ரெண்டு
நாளுக்கு முன்னாடி பேசிட்டு இருக்கும்போது தான் அவனைப்பத்திக் கேட்டேன்; என் கூட வேலை
பார்க்குறவன் க்ளோஸ் ஃப்ரெண்ட்னு சொன்னா.. அன்னைக்கு நான் அவளைப் பார்க்க
வந்திருந்ததை சொன்னதுக்கு அப்புறமா தான் மெல்ல சொல்ல ஆரம்பிச்சா.. இவளை விட ரெண்டு
வயசு கம்மி அவன், ரெண்டு பேருமே லவ்
பண்ணாங்களாம் ஆனா ரெண்டு பேரு வீட்லயுமே ஒத்துக்கலையாம் அதுக்கப்புறமா தான் என்னை
அவளுக்கு மாப்பிளையா பார்த்திருக்காங்க.. சரி இப்பவும் லவ் பண்றயானு கேட்டேன்..
இல்லை, ஆனா எனக்கு கொஞ்சம்
டைம் குடுங்க அவனை என்னால மறந்துட முடியும் அது வரைக்கும் பொறுமையா இருங்கனு
சொன்னா.. அவனால எதுவும் பிரச்சனை இருக்குமோனு நினைச்சு நான் வேணும்னா அந்த பையன்
கிட்ட பேசுறேனு சொன்னேன்.. ஆனால் அவ நானே ஹேண்டில் பண்னிக்கிறேனு
சொல்லிட்டா.. நேத்து என்னடானா அவனை மறக்க
முடியுமானு தெரியல இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கனு சொல்றா.. எனக்கு ஒன்னுமே புரியலை
டா.. சரி ஏதாவது ஒரு முடிவுல தெளிவா இரு-னு கூட சொல்லிப் பார்த்துட்டேன்..
அப்புறம் என் அண்ணன் கிட்டையும் இந்த விஷயத்தை சொல்லிட்டேன், ஏன்னா அவன் தான
எனக்கு அம்மா, அப்பா எல்லாம்...
ஒத்து வரலைனா வேற பொண்ணை பார்க்கலாம்-னு சொல்லிருக்கான். இப்ப கொஞ்ச நேரத்துக்கு
முன்னாடி கூட அவளோட ஃப்ரெண்ட் ஒரு பொண்ணு கூட தான் பேசிட்டு இருந்தேன் நாளைக்கு
அவகிட்ட பேசிட்டு என்ன பண்ணலாம்றதை தெளிவா சொல்றேனு சொல்றா... என்னவோ மச்சி!!..
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூட இப்படி தான் என் ஃப்ரெண்டுக்கு நடக்க இருந்த
கல்யாணம் நின்றுச்சு. இப்போ இதெல்லாம் சகஜமா நடக்குது... ஆனாலும்டா அவளை லவ்
பண்ணிவேற தொலைச்சிட்டேனா மறக்க முடியுமானு தெரியலை... சரி பார்ப்போம் அவ நாளைக்கு
என்ன சொல்றானு” இப்படி எல்லாம்
சொல்லி முடித்தவனுக்கு ஆறுதல் சொல்லவோ, சமாதானம் சொல்லவோ என்னிடத்தில் வார்த்தைகளேதும் இல்லை..
கொஞ்ச தூரம் சென்றவுடனே ரொம்ப பசிக்குதுடா
சாப்ட்டு போகலாம்னு அவன் சொல்ல ரோட்டோரக் கடையில் நிறுத்தினேன்!!!
“என்னடா சாப்பிடுற சிக்கன் ரைஸ் சொல்லவா?” – இது நான்
“இல்லைடா, கவுச்சி சாப்டக்
கூடாது”
“ஏன்?”
“அதான் பூ வச்சிட்டோம்ல”
No comments:
Post a Comment