Friday 26 July 2013

Story-63 முள்வேலி


                     
முள்வேலி

காலையிலிருந்து சங்கீதாவிற்கு நிலை கொள்ளவில்லை. எவ்வளவு முயன்றும் ஒன்றும் நடவாத கையாளாகாத்தனம், கோபமாய் வருத்தமாய் வெளிப்படுத்தியது போக மிச்சசொச்சம் பதற்றமாய் வழிந்து கொண்டிருந்தது.

இந்தாடி….இன்னும் இங்க என்ன பண்ணுறவ? பேசாம பள்ளிக்கூடத்துக்குப் போ! வம்பு தும்பு பண்ணாம கெளம்புடி’ – அம்மா அடுக்களையிலிருந்து சத்தம் போட்டாள்.

ம்….கெளம்பிட்டேன்த்தா’ – சைக்கிளை எடுத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாகப் பள்ளியை நோக்கி அழுத்தினாள்.

சங்கீதா மதுரைக்குப் பக்கத்தில் நெடுஞ்சாண்பட்டி எனும் கிராமத்தில் வசிக்கிறாள். தான் படிக்கும் 8-ஆம் வகுப்பிற்கு கிட்டப்பட்டிக்குச் செல்ல வேண்டும். நெடுஞ்சாண்பட்டியும் சரி, கிட்டப்பட்டியும் சரி, 1980-களில் தமிழ் சினிமாக்கள் காட்டிய அதே புழுதிக்காட்டு குக்கிராமம். கல்வியை விட கலவிக்குத்தான் பெண்என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் பிற்போக்குச் சமுதாயத்தை உள்ளடக்கியது. ஆண் குழந்தைகள் இல்லாத வீட்டுப்பெண்கள் 8 வரை இயல்பாகப் படிக்க முடிகிறது  - இடையில் பெரிய மனுஷியாய் ஆகாமல் இருந்தால் அல்லது முறைமாமன்கள் இல்லாமல் பிறந்திருந்தால்.

இந்த வழக்கம் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்திருக்கிறது. மாற்றத்தின் கடைநிலை  வரிசையில் சங்கீதா குடும்பம். அதை மறுக்கும் முதல்நிலை வரிசையில் பேச்சியம்மாள் குடும்பம். பேச்சி - சங்கீதாவின் நெருங்கிய தோழி. 'சத்துணவு'ப் பள்ளிக்கூடத்திலிருந்து பழக்கம். அவள் அதிர்ஷ்டக்கட்டை. 8 ஆம் வகுப்பில் குத்த வைத்தாள்.


சங்கீதா மணிபார்த்துக் கொண்டாள். 8.30 எனக் காட்டியது, 9 - 10.00 முகூர்த்தம். 'இந்நேரம் மாப்ள வீட்டுக்காரங்க வந்திருப்பாங்க. அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்து விடும்’ - நினைக்கும் போதே நெஞ்சை அடைத்தது சங்கீதாவிற்கு.

படிப்பையும் கனவையும் தவிர ஒரு சூதும் தெரியாத பெண் - பேச்சி. ஒரு மாதத்திற்கு முன்பு சங்கீதாவைத் தனியே அழைத்து, 'டி...இங்க பாரேன்...இப்டின்னா அப்டித் தான?' என்று கேட்கும் போது இருவருக்கும் தெரியவில்லை, அன்று அது அவள் கனவுகளின் அழிவுக்கால ஆரம்பம்  என்று. 

அதன் பிறகு பேச்சி பள்ளிக்கே வரவில்லை. 16 நாள் விசேஷத்திற்கு வரச் சொல்லிச் மூன்றாம் வகுப்பு முத்துவிடம் சொல்லி அனுப்பியிருந்தாள். 

இளம்பச்சையும் அரக்கு பார்டரும் கொண்ட ஜரிகை தூக்கலான சேலை, தலைநிறைய மல்லியும் கனகாம்பரமும், முகம் முழுக்க அரைத்துப் பூசிய மஞ்சளின் வனப்பு. பூஞ்சையான உடம்பு தான் என்றாலும் இன்று புதுப்பூவாய் நின்றிருந்தாள். கண்களில் மட்டும் அந்த மிரட்சி மிச்சமிருந்தது. என்னாயிற்று..சங்கீதாவுக்குப் புரியவில்லை.

'ஏடி பேச்சி...அழகழகா டிரஸ், மேக்கப்லாம் போட்டுட்டு ஏன்டி பிரமை புடிச்ச மாதிரி வெறிச்சு நிக்குற? கொஞ்சம் சிரியேன். உன் மாமன் மயங்கட்டுமே! வேண்டாம்ன்னா கெடக்கு' - விளையாட்டாய்த் தான் சொன்னாள் சங்கீதா. 

கேட்டவளோ பொலபொலவென்று கண்ணீர் விட்டாள்.

'ஐயோ...ஏய்! எதுக்கு டி அழுவுற? சும்மா தான் சொன்னேன்...டி...எல்லாரும் பார்க்கப் போறாங்க..வேணாம்' - சமாதானப்படுத்த முயன்றாள்.

யாரும் அறியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டே பேச்சி தொடர்ந்தாள். 'ஆமா டி.. மாமன் தான் மயங்கிட்டான். இன்னும் 15 நாள்ல எனக்கும் அதோ நிக்குறானே என் முறைமாமன் அவனுக்கும் கல்யாணமாம். இனிமேல் என்ன பள்ளீத்துக்கு வுட மாட்டாங்களாம். போச்சு டி எல்லாம் போச்சு...எவ்ளவோ கெஞ்சி பார்த்துட்டேன்..அழுது பார்த்துட்டேன்..கேக்க  மாட்டேங்குறாங்கடி..எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல..செத்துடலாம் போல இருக்கு..நான் படிக்கணும்டி..படிச்சு பெரியாளா வரணும்..நான் படிக்கணும்...' - சொல்லிக் கொண்டிருக்கும் போதே குரல் உடைந்தது. அது இயலாமையின் இறுதி முனைப்பு.

'கல்யாணமா? 14 வயதிலா?' தூக்கி வாரிப் போட்டது சங்கீதாவுக்கு. இது ஒன்றும் இந்த ஊருக்குப் புதிதில்லை. ஆனால் சங்கீதாவுக்குப் புதிது. விபரம் தெரிந்தது முதல் பழகிய தோழிக்குத் திடீரென்று இப்படி ஒரு நிலை வந்தது புதிது. எப்படிப் படிக்கும் பெண்! இனி சமையல், பாத்திரம், குழந்தைகள், வீட்டு வேலை...சீ...நினைக்கும் போதே நெஞ்சம் கொதித்தது. பேச்சியின் அந்த அழகும் வனப்பும், இப்பொழுது பசித்திருக்கும் புலியின்முன் நிற்கும் மானின் செழுமையாகத் தெரிந்தது.

(நல்ல)நேரம் வந்து விட, அத்தைமார்கள் பேச்சியை அழைத்துச் சென்று விட்டனர்.

அவர்கள் பழகிய விதத்திலிருந்து, இனி அவளைப் பார்க்க அனுமதிப்பார்கள் என்று நம்புவதற்கில்லை.

'ஏதாவது செய்து என்னைப் காப்பாற்று' - கடைசிக் கெஞ்சலாக பேச்சி மேடையிலிருந்து சைகை காட்டினாள்.

நேரே வகுப்பாசிரியை சசிகலா வீட்டிற்குச் சென்று சங்கீதா விவரத்தைச் சொன்னாள்.

'நல்லாத் தெரியுமா? நிஜமாவே பேச்சிக்குச் சம்மதம் இல்லையா?' - ஆசிரியர் 

'நெசந்தான் டீச்சர். அவ அழுதா என்கிட்ட'

'சரி அப்டின்னா நாளைக்கு ஹெச்.எம் கிட்டச் சொல்லி ஏதாவது பண்ணச் சொல்லுவோம்'

மறுநாள் தலைமையாசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது. அனைத்தும் விசாரித்த பிறகு சசிகலா டீச்சருடன் சாரும் சங்கீதாவை அழைத்துக் கொண்டு, பேச்சி பெற்றோர்களுடன் பேசுவதாய் முடிவாயிற்று.

உள்நுழையும் போது ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதை, இந்த விஷயம் என்றதும் குறையத் தொடங்கியது.

'இதோ பாருங்கம்மா..பேச்சி நல்லாப் படிக்கிற பொண்ணு. படிக்க வச்சா பெரிய ஆளா வருவா. பெரிய டாக்டரா வருவா.. கல்யாணம்ன்னு அந்தப் பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்துறாதீங்க ப்ளீஸ்' - கெஞ்சினார் ஹெச்.எம் 

'யாருக்கோவா கொடுக்கிறோம்? என் தம்பிக்குத் தான்.. அதெல்லாம் நல்லாத் தான் இருப்பா' - பேச்சியின் அம்மா.

'இது படிக்குற வயசும்மா. இந்த வயசுல கல்யாணம் தேவையா? அவ 12 படிச்சு காலேஜ் எல்லாம் படிச்சு முடிச்ச பிறகு உங்க தம்பிக்கே கொடுங்க. இப்போ படிக்க வைங்க'

'இவ படிச்சு என்னத்த கிழிக்கப் போறா? இவ அப்பன் சொத்து சேர்த்து வச்சுட்டா மேலோகம் போனான்? இல்ல கடன் வாங்கிக் கழிக்குறதுக்கு அவன் தான் உசிரோட இருந்தானா? நாதியத்தவளா இருந்து நான் தானே வளர்ந்தேன். எனக்குத் தெரியாது என்ன பண்ணனும்னு?'

'இல்லம்மா..இது கல்யாணத்திற்கு சரியான வயசு இல்லை. எத்தனை குழந்தைகள் இந்த மாதிரி சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணினதால் குறைப் பிரசவம், கர்ப்பப்பைக் கோளாறுகள்ன்னு இறந்திருக்கு தெரியுமா? உங்க பொண்ணுக்கும் இந்த நிலை வரணுமா?' - சசிகலா டீச்சர் ஆத்திரமாகவே கேட்டார்.

'இந்தா..எங்க வந்து என்ன பேசிட்டு இருக்க? பொம்பளைன்னு பார்க்குறேன். இவ வயசுல நான் 3 புள்ள பெத்துப் போட்டேன். இவங்கப்பன் இருந்திருந்தா இன்னும் 3 பெத்துருப்பேன். கல்லு மாதிரி இன்னும் இல்ல நான்? செத்தா போயிட்டேன்' - டீச்சரைப் பிடித்து அடிக்காத குறையாக வெகுண்டெழுந்தாள் பேச்சியின் அம்மா.

'இல்ல அப்டிச் சொல்லல...எல்லாருக்கும் அந்தத் திடம் இருக்காது. முதல்ல கல்யாண வயசு வராத பெண்ணுக்குத் திருமணம் பண்ணி வைப்பது தப்பு. அதிலும் அவளுக்கு விருப்பமில்லை எனும் போது சட்டப்படி இது மிகப் பெரிய குற்றம்' - பொறுமையாகப் பிரச்சனையைக் கையாள எண்ணி உதிர்த்த வார்த்தைகளே பிரச்சனையாகின.

'யோவ் வாத்தி..என்னய்யா...எங்களையே ஜெயில்ல போடுவேன்னு சொல்ல வர்றயா? கம்ப்ளெயின்ட் குடுக்குறதுக்கு நீ மொத உசிரோட இருக்கணும். அந்த நம்பிக்கை இன்னும் இருக்கா உனக்கு? இந்தச் சிறுக்கி மவ தான் உன்னை இங்க கூட்டுட்டு வந்தாளா?' - சரமாரியாக ஆரம்பித்த பேச்சுகள் அநாகரீகமாகத் தொடர்ந்தன. கேட்கும் காதுகளே வெட்கிக் கூசுமளவு அருவெருப்பு வசையாடல்கள். அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை. மூவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பேச்சியின் கண்களில் இருந்த கடைசி நம்பிக்கையும் கண்ணீராய் சிதறி விழுந்தது.

கெஞ்சிக் கூத்தாடி இன்னுமொரு முயற்சி எடுக்கலாம் என்ற மனோ நிலைக்கு ஆசிரியரைக் கொண்டு வருவதற்கு, சங்கீதா தலையால் தண்ணி குடிக்க வேண்டியிருந்தது. அவள் பள்ளி டி.சியை பிறந்த தேதிக்கு அத்தாட்சியாய் வைத்து போலீஸில் புகார் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது.

பள்ளிக்குச் சென்று பார்த்தால் அங்கே அலுவலகம் சூரையாடப்பட்டிருந்தது. பேச்சி குறித்த அத்தனை சான்றுகளும் முழுதாய் அழிக்கப்பட்டிருந்தன. ஒரு பெண்ணின் படிப்பை அழிக்க எத்தனை நாச வேளைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை நினைத்துக் கையறு நிலையை அடைந்தனர் ஆசிரியர்கள்.

'என்னா வாத்தி...கம்ப்ளைன்ட் குடுக்கப் போறியா? ...ஹா...ஹா...எத்த வச்சுக் குடுப்ப? ம்? பேச்சி உன் பள்ளிக்கொடத்துலையே படிக்கலையே? பின்ன எப்டி குடுப்ப? ...ஹா...ஹா..ஆளுங்கட்சி நம்மள்து..மறந்துடாதப்பு...வந்தோமா புள்ளைகளுக்குப் பாடம் சொன்னோமா சம்பளம் வாங்குனோமான்னு இரு..வீணா உன் வூட்டம்மாவை பென்ஷன் வாங்க வச்சிறாத..புரியுதா?..இந்தா கொடுக்கு...நீ அந்தக் காரியக்காரன் மக தானே? கரும்புக்காட்டு வழியா தான போவ? வாடி வா...கையக் கால ஒடிக்கிறேன்' - சைக்கிள் செயின் சவால் விட்டுப் போனது.

பொறுக்கித்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் முன்னால் ஒன்றும் செய்ய முடியாதது, நம் கடைநிலை மக்களுக்கு விதிக்கப்பட்ட சாபம். எண்ணிக் கொண்டே பள்ளி வகுப்பு ஆரம்ப மணி அடிப்பதற்கும் கல்யாணப் பந்தலில் மேளம் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

இறத்தல் என்பதும் இப்படித் தான் இருக்குமோ? அந்த வலி வலித்தது மனது. மாலையின் கனமோ இல்லை மனதின் கனமோ தெரியாது. கனம் தாளாமல் கால் இடறினாள். கூட்டம் கூட்டமாய் வந்து மணமகனுக்கு - பேச்சியின் கணவனுக்கு - கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். 'மனத்தைக் கழட்டி வைத்த பிணத்திற்குத் தாலி கட்டியவனுக்கு இவ்வளவு மரியாதையா? சீ' - பேச்சிக்கு அருவெருப்பாய் இருந்தது, அவனருகில் நிற்கும் அத்தனை நிமிடமும்.

வரக்கூடாது என்று அவள் தவித்துக் கொண்டிருந்த இரவு வந்தே விட்டது. அவள் என்ன நளாயினியா? சூரியனை உதிக்காதிருக்கச் செய்தது போல் அஸ்தமிக்காதிருக்கச் செய்வதற்கு?

வெ(ற்)றிப்புன்னகையோடு அவள் கணவன் - கனவுகளைக் கொன்றவன்  - அறைக்குள் நுழைந்தான். தீக்குள் தெறித்த காகிதமாய் அவள் உள் ஒடுங்கினாள்.

'வாடி என் அக்கா மவளே! இன்னும் என்ன ஓட்டம்? அதான் தாலி கெட்டியாச்சே! இனி என்னை விட்டு ஒரு போக்கும் பொகலும் இல்ல உனக்கு..வா வா இப்டி பக்கத்துல'

'என்ன ரோசனை?' - உறுமினான். கையைப் பலம் கொண்டமட்டும் இழுத்து நெஞ்சில் பரப்பிக் கொண்டான்.

'என்ன சிணுங்குற?'

'இல்லை...இன்னும் 3 நாளைக்கு வேண்டாம்...ப்ளீஸ் விட்ருங்க...'

'ஏனாம்?'

'நாள் தோதில்ல'

'! ஒரு மாசம் ஆச்சோ?'

'ஆமா..ஆமா..இப்பத்தான்' - பதட்டத்துடன் வந்து விழுந்தன வார்த்தைகள்.

'பொய்யில்லையே?'

'இல்லை இல்லை..' - இதயம் தொண்டைக்குள் வந்து சிக்கிக் கொண்டு விட்ட உணர்வு அவளுக்கு.

தலையணை, போர்வையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான். 

இப்பொழுது தான் இயல்பாக அவளால் மூச்சு விட முடிந்தது. 'கடவுளே... 3 இரவுகள் தப்பி விடலாம். நான்காம் இரவு?' - நினைக்கும் போதே படபடத்தது.

யோசித்தாள். அதிகம் யோசித்தாள். எது முக்கியம் என்னும் யோசனை மனம் முழுக்க எழுந்தது. அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். ஜன்னலுக்கு அந்தப்பக்கம் முள்வேலிக்குள்ளே அரளிச்செடி. நிலவொளியில் பறிக்கப்படாத அதன் பூ மின்னியது.

ஒரு முடிவுக்கு வந்தவளாக விளக்கை அணைத்து கட்டிலில் படுத்தாள். பல நாட்களாய் தூங்காமல் சேமித்து வைத்த அத்தனை உறக்கத்தையும் முழுக்கத் தீர்த்தாள்.

பொழுது விடிந்ததும் வீட்டிலிருந்தவர்கள் அறைக்கதவைத் தட்டத் தட்ட, அது திறக்கப்படவேயில்லை. அனைவரையும் பதற்றம் பற்றிக் கொண்டது. கதவை உடைத்து உள்சென்று பார்த்தால் அங்கே அவள் இல்லை. கொல்லைக்கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது. அறைக்குள் இருந்த அவளது புத்தகப்பையைக் காணவில்லை.

அனைவரும் அசந்திருந்த அதிகாலைப் பொழுதில் பேச்சி வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள். சந்தைக்குப் போய்த் திரும்பிக் கொண்டிருந்த வெளியூர் மாட்டு வண்டி, அவளுடன் அவள் கனவுகளைச் சுமந்து முன்சென்று கொண்டிருந்தது. கழுத்தில் தொங்கிய தாலியைக் கழற்றி எறிய முற்பட்டாள். ஏதோவொன்று தடுத்தது. செண்டிமெண்டா? இல்லையில்லை...எதன் காரணமாகப் படிப்பை இழந்தாளோ அதையே முதலாக வைத்துப் படிப்பைத் தொடர்ந்தால் என்ன? 5 பவுன் தங்கம் நிச்சயம் படிக்க வைக்கும். ஒரு புதிய பாதை அவள் வழியில் விரவிக் கிடந்தது.

கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்த்தாள். அந்த முள்வேலி அப்பவும் தெரிந்தது. 

முள்வேலிகள் வெளியிலிருந்து யாரும் மலர் பறித்து விடக் கூடாது என்பற்காக மட்டுமல்ல. உள்ளிருந்து மலரும், விடுதலை வேண்டி பயணித்து விடக் கூடாது என்பதற்காகவே. வேலியைத் தாண்டிய மலர்கள் வாழ்வதும் நசிவதும் அந்தந்த மலரின் சாமர்த்தியமே!

(முற்றும்)

No comments:

Post a Comment