Tuesday 23 July 2013

Story-58 விதியை நீங்கள் நம்புகிறீர்களா?



விதியை நீங்கள் நம்புகிறீர்களா?

கதை படிக்கலாம் என்று வந்தால் , இது என்னடா கிரகம் பிடிச்ச கேள்வி என்று நீங்கள் மனதினுள் கதைப்பது எனக்கு கேட்கிறது .

நான் யாரென்று நீங்கள் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். எனக்கு பல பெயர் உண்டு. விதி, காலம், ஊழ் , ஆகூழ் என எக்கச்சக்க பெயர்கள். உங்களுக்கு பிடித்தவற்றை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்

என்னது ?, உருவம் வேண்டுமா ?. நீங்களாய் ஒரு நடிகையின்  உருவை எனக்கு ஸ்ரிஷ்டிக்கும் முன் நானே அதையும் சொல்லிவிடுகிறேன் .
ஒனிடா டிவி விளம்பரம் பார்த்ததுண்டா ?. அதில் வரும் கொம்பு முளைத்த மொட்டை உருவம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

விஷயம் இப்போது அதுவன்று.பொதுவாய் நான் யாரிடமும் பேசுவதில்லை. இன்று வழமைக்கு மாறாக உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்.

நடந்து முடிந்த கதையல்ல . நடக்கப்போகும் கதை .  

நடக்கபோவவை என்றால் அது கதை என்று கூறலாமா ?.ரொம்ப யோசிக்க வேண்டாம். நீங்கள் இதை படித்தோ, அல்லது கேட்டோ முடிக்கும் வேளையில் அது நடந்தே முடிந்திருக்கும்.

சரி வாருங்கள் .  பயணிப்போம்.

எங்கே ?
முடிந்தால் சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு வாருங்களேன்...

விஷ்க்க்க் ..
---------------------------------------------------------------------------------------------------------------------

அப்பா !! என்ன ஒரு வேகம்... நான் இங்கே வந்து சேர்வதற்குள் உங்கள் மனது அப்போல்லோ வந்துவிட்டது... மனோவேகம் மனோவேகம் தான் ..

மருத்துவமனை மொட்டைமாடியில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். என்னை உற்று கவனியுங்கள் 

கொஞ்சம் 
           மாடிப்படி 
                      இறங்கி 
                                கீழ்நோக்கி 
                                            வாருங்கள் 
                                                       படிப்படியாய் 
                                                                      போவோம் 

அறை எண் 88. இங்கு தான் அந்த நடக்கப்போகும் கதை தொடங்கப்போகிறது

எனக்கு ஒரு வேடிக்கையான பழக்கம் இருக்கிறது. முரண்படும் இரண்டு விஷயங்களை /மனிதர்களை ஒரே கோட்டில் நிற்கவைத்து பார்ப்பது தான் 

ஆத்திகம் -நாத்திகம் 
நல்லது - கெட்டது 
வாசகர் வட்டம் -விமர்சகர் வட்டம் 
செல்வம் - வறுமை 
திமுக - அதிமுக 
சாரு -ஜெமோ  
இப்படி !!!

 அது இந்த அறையில் நிகழப்போகிறது

அங்கே நடக்கபோகும் விஷயங்களை நீங்கள் உங்கள் காதால்  கேட்க ஏதுவாக எனது விசேஷ சக்தியை உங்களுக்கு தருகிறேன். இனி அங்கே நடக்கும் சம்பவங்கள் உங்கள் காதில் கேட்கும்.என்னை தேடவேண்டாம்..நான் அங்கேயே மறைந்து இருப்பேன். சரி கேட்க ஆரமியுங்கள் .

விஷ்க்க்க் 
----------------------------------------------------------------------------------------------------------------------
" குட் மார்னிங் மிஸ்டர்- ரிஷி , நான் டாக்டர் நந்தா . உங்கள் மன நல கவுன்சிலர் . தற்கொலைக்கு நீங்கள் முயற்சி செய்ததால் உங்களுக்கு கவுன்சலிங் குடுக்க என்னை அனுப்பி உள்ளார்கள் "

"குட் மார்னிங் டாக்டர் "

"மிஸ்டர். ரிஷி . சின்ன வயசு உங்களுக்கு. இப்படி தற்கொலைக்கு முயற்சி பண்ணி , மணிக்கட்டு நரம்பு எல்லாம் அறுத்துகிட்டு இங்க வந்து படுத்த படுக்கையா இருக்க வேண்டிய அவசியம் என்ன ? "

உங்களுக்கு புரியாது டாக்டர். இது  metaphysical  சமாச்சாரம் . நான் படிச்சி முடிக்காத வேத நூல்கள், யோகா தத்துவங்களே இல்லை. ஆனா கடைசி வரைக்கும் என் மனச அரிச்சிக்கிட்டு இருக்கிறது ஒரு கேள்வி தான் . செத்ததுக்கு அப்புறம் என்ன நடக்குது ?. நிதானமா முதுமை அடைஞ்சி செத்து பாக்குற அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை. அதான் செத்து பாக்கலாம்னு முடிவு பண்ணேன் .
" சீ .ஆனா இப்படி பேச உங்களுக்கு முட்டாள்தனமா இல்லையா ? உயிரோட மதிப்பு பத்தி தெரிஞ்ச ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளன் இப்படி பேசலாமா ?"

"இல்ல டாக்டர்.நான் ஒரு குண்டலினி யோகி. என் தேடல் வித்தியாசமானது. இறப்புக்கு அப்பால் என்ன என்பதை அறிந்திட வேண்டும். பை தி வே , நீங்கள்  The Tibetian book of life after death"  படிச்சி இருக்கீங்களா ? அதனோட சாராம்சமே இது தான் .இந்த ஸ்தூல தேகம் தாண்டி இருக்கும் சூட்சம தேகத்தை இறந்தபின் தான் முழுசாக உணர முடியும் என்று அதர்வண வேதம் கூறுகிறது. அதான் டாக்டர் இந்த தற்கொலை முயற்சி....பச் பச். என்ன செய்வது. ரூமை லாக் பண்ணாததால் இந்த நாதாரி நண்பர்கள் காப்பாற்றி விட்டார்கள். ராஸ்கல்ஸ் "

"யோகா, மாந்த்ரீகம் இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை ரிஷி. எல்லா கேள்விக்கும் அவை விடை தந்து விடாது. ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளன் இப்படி பேசுவது உண்மையிலயே வேதனையை இருக்கிறது ரிஷி "

"சான்சே இல்லை டாக்டர். எல்லாத்துக்கும் வழி இருக்கு."

" . பேச நல்லா இருக்கும் ரிஷி. ஆனா சரிவராது. உதாரணமா எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை . நான் போகாத கோவில் செய்யாத மருத்துவம்யோகா   கிடையாது. பட் நோ யூஸ் .அப்புறம் எனக்கு கடவுள் நம்ம்பிக்கையே போச்சு  நான் விதியை நம்புவதில்லை
.
மனச போட்டு குழப்பிக்காதே ரிஷி ரிஷி. உயிர் என்பது உன்னதானது ."

"நெவெர் டாக்டர். வழி இருக்கு. இன்னைக்கு ஆடி அமாவாசை. பிரம்ம முகுர்த்தத்தில் , உங்கள் வலது நாசியில் சுவாசம் ஓடும் வேளையில் நீங்கள் உங்கள் மனைவியுடன் கூடினால், அறிவில் சிறந்த, தேடல் நிறைந்த ஆண்  குழந்தை பிறக்கும் இது பதஞ்சலியின் யோக ரகசியம்நான் விதியை நம்புகிறேன் "

" . நீ ஜெயமோகன் புக்ஸ் ரொம்ப படிப்பன்னு தெரியுது...நாம நாளைக்கு சந்திப்போம். ஸ்டே பாசிடிவ்.. வாழ்க்கைய வாழ பழகு ரிஷி. சி யு டுமாரொவ் "

--------------------------------------------------------------------------------------------------------------------

கேட்டு முடிச்சாச்சா ?..நான் தான் மொட்டை உருவம்..!!

உங்களுக்கு இப்போது ரிஷியின் எண்ண அலைகளை உங்கள் மனதால் புரிந்து கொள்ளும் சக்தியை தருகிறேன்..

ஏன் என்றா கேட்கிறீர்கள் ?.

அவன் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்க போகிறான். இறப்பின் பின்னே என்ன நடக்கிறது என்று அவனோடு சேர்ந்து நீங்களும் அறிந்துகொள்ளுங்களேன். செத்தப்பின் ரிஷியே குடுக்கும்  running commentry  உங்களுக்கு கிடைக்கக்  கடவது.

இதோ 3 இன்னும் நொடிகளில் அந்த மேஜை மீது இருக்கும் ஆப்பரேஷன் கத்தியை  வைத்து அவன் குத்திக்கொண்டு சாக போகிறான்

3
2
1
விஷ்க்க் 
--------------------------------------------------------------------------------------------------------------------

நான் ரிஷி ! கொஞ்ச கொஞ்சமாய் நான் செத்துக்கொண்டு இருக்கிறேன் . ஆஹா. இறப்புக்கு பின் நடப்பதை அறியப்போகிறேன் . எத்தனை நாள் தேடல் இது ? சொர்கத்தை இப்பொழுதே கண்டுவிடபோகிறேன் .

என்னை ஒரு எடையில்லாத பொருளாய் இப்போது உணர்கிறேன் எனக்கு கால்கள் இல்லை
அதற்க்கு பதிலாய் வால்  இருக்கிறது.
ஏதோ ஒரு பெரிய கால்வாயில் நீந்துகிறேன்...சொர்க்கம் அந்த குழாயின் இறுதியில் தான் இருக்கிறது என்று என் உள்ளுணர்வு ஏதோ சொல்கிறது . விடாது அடிக்கும் நீரலைகளுக்கு நடுவே நான் நீந்திக்கொண்டு இருக்கிறேன். என்ன இது ?. என்னைப்போலவே பலர் வெள்ளை உடை உடுத்தி  என்னுடன் நீந்திக்கொண்டு இருகின்றனர் ?. அவர்களும் என்னைபோலவே மரித்தவர்கள் போலும்.

அதோ, அதோ, அதோ, அந்த கால்வாயின் இறுதியில் ஏதோ ஒளி  தெரிகிறது. சொர்கவாசலை நெருங்குகிறேன் . என்னுடன் நீந்தியவர்களை விட வேகமாய் அந்த கால்வாயில் நீந்திவிட்டேன் .காலம் ஓடுவதை என்னால் உணர முடியவில்லை .பல யுகங்கள் நீந்துவது உணர்கிறேன்

ஒரு பஞ்சு மேதை தெரிகிறதே...!! அது தான் சொர்கமா ?..
இதோ இதோ அந்த மெத்தை ..ஆனந்தம்..ஆனந்தம்... 
ஆனால் எங்கே இருக்கிறேன் நான் ?..இது தான் சொர்கமா

சரி. மனதினுள் அடுத்த உந்துதல் வரும்வரை காத்திருக்கிறேன் இங்கேயே..

( 2 மாத நிஷ்டைக்குபின் )

நான் ரிஷி. மறுபடியும் நான் என்னை உணர்கிறேன்.. ஆனால் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.
இருங்கள் ஏதோ ஒரு குரல் வெளியில் கேட்கிறது .

" ஹலோ அம்மா , நான் தான் நந்தா பேசுறேன்.. நம்ம ஜானவி கர்பாமா இருக்கா அம்மா...நான் அப்பாவாகிட்டேன்.. செத்துப்போன அந்த ரிஷி சொன்ன மாதிரி ஆடி அமாவாசை நாங்க கூடுனோம்..முயற்சி வீண்போகல....ஆனா என்ன ..அந்த ரிஷி செத்தது தான் வருத்தம் அம்மா...இதோ ஜானவி வயித்துல ரிசீவர வைக்கிறேன்...நீங்களே பேசுங்க உங்க பேரன் கிட்ட..."

விஷ்க்க் 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் தான் மொட்டை உருவம்.!! 2 மாதமாய் பொறுமையாய் இதை கவனித்த உங்களுக்கு நன்றி.

ரிஷி சொன்னதை நந்தா பின்பற்றினார்செத்தப்பின் ரிஷி மாறியது விந்தணுவாக,  நீந்தியது ஜானவியின்  யோனிக்கால்வாய் , இளைப்பாரிய இடம் அவள் கர்பப்பை என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா ?

இது தான் என் வேலை. முரண்படும் இரு விஷயங்களை கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பது என் வாடிக்கை. ரிஷி தேடிய "இறப்புக்குப்பின் என்ன ? " என்ற கேள்விக்கு அவனுக்கு இந்நேரம் பதில் கிடைத்திருக்கும். விதியை அவன் இனி வெறுப்பான்  .விதியின் மேல் நம்பிக்கையே இல்லாத நந்தாவிற்கு நம்பிக்கை வந்திருக்கும்..இப்படி இவர்களை மாறி மாறி எண்ண   வைப்பது தான் என் வேலை
யுக யுகமாய் மனிதரை வைத்து நான் ஜாலியாய் விளையாடும் விளையாட்டு இது..

இதை ஏன் நான் உங்களுக்கு சொல்ல வந்தேன் ?

ஒன்றுமில்லை.. இதை படித்த பின் விதி இருக்கிறது என்று ஒரு சாரரும்..விதி இல்லை என்று ஒரு சாரரும் வாதிடுவீர்கள்...நல்ல கதை- கெட்ட கதை என்று வாதிடுவீர்கள். என் விளையாட்டிற்கு முரண்பட்ட இரண்டு கதா பாத்திரங்கள் மீண்டும் சிக்கும்..அதுவும் என் கதையை வைத்தே...

கவனித்தீர்களா ?.இந்த கதை பயணித்து உங்கள் நடுவர்கள் கையில் சேரும்.. அங்கும் கூட விதியை நம்பும் ராஜ ராஜேந்திரன். விதியை நம்பாத வால்பையன் என்று என் விளையாட்டில் இரு பிரிவினர் இருக்கிறார்கள்.. வாசகர் வட்ட பிச்சைக்காரனும், விமர்சகர் வட்ட மைந்தன் சிவாவும் இருகிறார்கள்... முரண்பட்ட இரு சாரர்கள்  என் விளையாட்டில் வந்து விட்டனர் அவர்களை அறியாமலேயே .

முரண்பட்ட ரிஷியையும் ,டாக்டர் நந்தாவையும் இணைத்ததுப்போல் முரண்பட்ட இரு குழுக்களை ஒரே நேர் கோட்டில் இணைத்தேன் பார்த்தீர்களா ?
யார் கண்டது இந்த கதை போட்டி கூட உங்களை வைத்து விளையாட விதியாகிய நான் செய்த யோசனையாய் இருக்கலாம் .
எப்படி என் விளையாட்டு ?

சரி.நாம் மீண்டும் சந்திப்போம். உங்களுக்கு குடுத்த விசேஷ சக்திகளை  எடுத்துக்கொள்கிறேன் .
உங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் இந்த கதைக்கு...என்னை இனி தேட வேண்டாம்..உங்கள் வீட்டு கடிகாரத்தின் உள்ளே மறைந்துகொண்டு உங்களை நான் கவனித்துக்கொண்டே இருப்பேன்.. என்றாவது உங்கள் கை கடிகாரத்தை உற்று நோக்குங்கள்.... அதில் ஒருவேளை ஒரு மொட்டை ஒனிடா உருவம் தெரிந்தால் அது நான் தான் .
வாழ்க்கை , விதி ஒரு வட்டம் தான். அதை மேலும் ஊர்ஜிதப்படுத்த இந்த கதையை எந்த வாக்கியம் சொல்லி ஆரம்பித்தேனோ அதே வாக்கியத்துடன் இன்னும் இரண்டு வரிக்கு பின் கேட்டு முடித்து விடுகிறேன் ..

விஷ்க்க் என நான் மறையும் முன் ஒரே ஒரு கேள்வி ..

நீங்கள் விதியை நம்புகிறீர்களா ??

--------------------------------------------------------

No comments:

Post a Comment