Wednesday 10 July 2013

Story-13 லவ் ஸ்டோரி 1987



லவ் ஸ்டோரி 1987
=================================================
இன்னிக்கு சீக்கிரம் போய்டனும், நைட்டு தண்ணி வேலய முடிச்சிட்டு, மச்சான் ஏதோ பிளான் பண்ணியிருக்கானாம், அங்க வேற போகணும், முருகன், செழியன்ட்டயும் சொல்லிற்ரான்னு வேற சொல்லியிருக்கான், முருகன் இன்னிக்கு தண்ணிக்கு வருவானான்னு தெரியலையே, சரி அவன் வரலைன்னா என்ன, அவன் தம்பி வருவான், அவன்ட்ட சொல்லி கூப்பிட்றலாம். என்ன பண்ணப்போறான் அவன் ? ஆனாலும் மச்சானுக்கு தில் ஜாஸ்திதான், நானும் இருக்கேனே, என்று மனதுள் என்னைக் கறுவிக்கொண்டே கடிதங்களை பசை போட்டு ஒட்டிக் கொண்டிருந்தேன்.

என் எழவு ராசியப் பத்தியும் சொல்லியாகணும், என்னிக்கு ஒன்னு சீக்கிரம் ஆவனும்னு நினைக்கிறமோ அன்னிக்குதான் புதுசுப்புதுசா நிறைய வேலைங்க வரும். சுஜாதா எழுதின கதைல இது மாதிரி ஒரு கேரக்டர் புலம்பும், "இண்டர்வெல்ல அவசரத்துக்கு பாத்ரூம் போனா, வரிசைல முன்னாடி இருக்கிறவன் குடம் குடமா மூத்திரம், முக்கா மணி நேரத்திற்கு போவானாம் " அதேதான் என் ராசியும். இன்னிக்குப் பார்த்து நிறைய கடிதங்களைப் பதிவுத் தபாலில் சேர்க்க வேண்டும். இன்னிக்கு அனுப்பனும்னா இன்னிக்கேதான் அனுப்பனும், அப்பதான் அந்த DD ஒரு வாரத்துகுள்ளயாவது உரியவன்ட்ட போய்ச் சேரும்.

'
சீக்கிரம் கொடேண்டா மண்ட' என்று தபால்களை எழுதிக் கொண்டிருந்த என் சீனியரை மனதில் திட்டியவாறே, பரபரப்பாயிருந்தேன். பதிவுத்தபால் இரவு எட்டரை வரைக்கும் ஜி.பி.வோ வில் வாங்குவார்கள். அதுவும் எட்டுமணி வரை ரெகுலர் சார்ஜ், எட்டுமணிக்கும் மேல் லேட் பீஸ் ஸ்டாம்ப் ஓட்ட வேண்டும், ஆனால் என் மார்வாடி ஓனருக்கு அது ஒவ்வாது. என்னைத்தான் திட்டுவார். 'இவ்ன்ங்கக்கு கொஞ்ச்மாது பொர்ப்பிருக்கா' வென்று.

"
என்னடா சும்மா சும்மா மணி பாக்குற ?" என்றது மண்டை.

"
அண்ணா, எட்டாவப் போதுண்ணா, இன்னும் எவ்வளவு எழுதணும் ?" என்றேன்.

"
இந்தா அவ்வளவுதான், சீக்கிரம் போடா" என்றது மண்டை, ’வுட்டியேடா சாமிஎன்று மனதில் சொல்லிக்கொண்டே சைக்கிளை வேகமாக மிதித்தேன்.

இந்தக் கொத்தவால்சாவடி ட்ராபிக் எவ்வளவு பயங்கரம் தெரியுமா ? ஏழு அம்பதுக்கு கிளம்பிட்டு எட்டுக்குள்ள எப்பிடிரா முடிப்பது ? என்று சேட்டை கொஞ்சம் வாய் விட்டேத் திட்டினேன். சௌகார்பேட் குட்டிச் சந்துக்கள் சைக்கிள்காரர்களுக்கு ஒரு வரம், GPO போய்ச்சேர்ந்தேன்.

கடிதங்களை எடை போட்டு, அதற்குரிய ஸ்டாம்ப் ஒட்டி, தபால்களை பதிவுசெய்துவிட்டு, கணக்குகளை மண்டையிடம் ஒப்படைத்துவிட்டு, அதே வேகத்துடன் சைக்கிளில் வீடு கிளம்பினேன், கிரவுன் தியேட்டரில் நாயகன் படப் போஸ்டரில் கமல் முகம் கோரமாய் வீங்கி, ஒரு கண்ணில் ரத்தம் வழிய பரிதாபமாய் இருந்தார். "மச்சி, காக்கிச்சட்ட மாதிரி இல்லயாம் இந்த படம், லாஸ்ட்ல செத்து வேற போயிட்ராண்டா கமல்", இது செழியன் எங்கள் நட்புக் குழுமத்திடம் பகிர்ந்தது. இதனால் இதைக் கொஞ்சம் தாமதமாய்ப் பார்க்கலாம் என எங்கள் குழு, தற்போதைக்குத் தள்ளி வைத்திருந்தது.


வீடு போய்ச் சேர்ந்த வேகத்திலேயே, "அம்மா குடம் எங்கே ? தண்ணிபிடிச்சிட்டு வந்திர்றேன்" என்று பரபரத்தேன். "டேய், சாப்டுட்டு போப்பா, ஏண்டா உடம்பப் புண்ணாக்கிக்கிற ? இப்படித்தாம்மா, ஓடாத் தேயுறான் ", என்று என் அம்மா எதிர் வீட்டு அக்காவிடம் புலம்பினாள். அம்மாவிற்கு, தினமும் யாரவது ஒருவரிடம் என் புகழைப் பரப்பிவிட வேண்டும்.

இதனாலத்தான் தேவையே இல்லாமல் இந்த அக்காவை இங்கே நுழைக்க வேண்டி வருகிறது. என்னுடைய வீட்டிற்கான இந்த தண்ணி உழைப்பில் கொஞ்சமாய் அவள் கவரப்பட்டிருந்தாள், தினமும், அவளின் ஸ்கூல் போகும் பெண்ணின் தலையை வாரியபடியே, என்னை வைத்த கண் எடுக்காமல் விழுங்குவாள், நானோ, முழங்கால் வரை வழித்திருக்கும் சேலையின் உதவியால், அக்காவின் வழுவழுவென தந்தங்கள் போலிருக்கும் அந்தக் கால்களை ரசித்தபடி இருப்பேன், அடிக்கடி இப்போது இந்த தரிசனம் கிடைக்கிறது. இப்ப ஏன் இவங்க ? இவங்கதான் இந்தக் கதைல இல்லையே, "போம்மா அப்புறம் கூட்டம் சேந்துரும்" என்றவாறே, கனமான நைலான் கயிறு சுருக்கிட்ட, இரு ஜோடிக் குடங்களைத் தூக்கியவாறே, தண்ணி பிடிக்கச் சென்றேன்.

தண்ணீர்ப் பஞ்சம் வரும்போது, இருவகை தண்ணீர் தேடி அலைய வேண்டி வந்தது. முன்னதிகாலை கருப்பாய்க், குட்டையாய் இருக்கும் குழாயில்....டட்டகு....டட்டகு என்று அடித்தால் வருவது மெட்ரோ வாட்டர், குடிக்க மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஆனால் நான்கு குடமாவது வேண்டுமென்றால் நள்ளிரவு இரண்டுமணிக்கு எழுந்திருக்க வேண்டும், போராடி அதிகாலை ஐந்தரைக்குள் முடித்து மீண்டும் தூங்கப் போகலாம். ஆனால் நான் இப்போது போய்க்கொண்டு இருக்கும் தண்ணீர், நிலத்தடி நீர், குழாய் பச்சைக் கலரில் சற்று உயரமாய் இருக்கும், பம்புக்...பம்புக் என்று சத்தம் வரும், இந்த நீரை வாய் கூட கொப்பளிக்க உபயோகிக்க முடியாது, இரும்பு வாசனையுடன் காரமாயிருக்கும். ஆனால், பாத்ரூம், டாய்லட், சாமான் கழுவ, துணி துவைக்க உதவும்.

அந்த குழாயடி, ஒரு மாநகராட்சி கழிப்பிடமருகே, என் வீட்டிலிருந்து நாலு தெரு தள்ளியிருந்தது. கூட்டம் குறைவாய்த் தெரிந்தது. தண்ணீர் மடை திறந்ததைப் போல் கொட்டியது, மனதை உற்சாகமாக்கியது. எட்டாவது ஆளாய் வரிசையில், பிளாஸ்டிக் குடங்களை வைத்தேன். கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டே கண்களால் கொஞ்சம் துழாவினேன். முருகன் வந்திருக்கானா ? , சூப்பர் அவன் தம்பி இருக்கான்.

"
என்னடா, அண்ணன் வந்துட்டானா ?" என்றேன்.

"
வன்டாருண்ணா, எதுனாச்சும் சொல்லனுமா ?" என்றான் முருகனின் தம்பி, வரிசையில் நான்காவதாய் இருந்தான்.

"
ஆமாடா, கீழ ஸ்கூலாண்ட வரச் சொல்லு" என்றேன். முருகன் நிறைய தம்பியுடையான், எனவே அவனுக்கு தண்ணீர் சுமக்கும் வேலை மிகவும் குறைவு. என் வீட்டில் நானும், அம்மாவுமே இரண்டு தண்ணீருக்கும் மெனக்கிடுவோம், என் அப்பா ஆம்பிளச்சிங்கம், வேட்டையாட மாட்டார், வேட்டையாடினதை அனுபவிக்கமட்டும் செய்வார்.

அப்பாடா, தூரத்தில் சைக்கிளில் மச்சான் அலாவுதீன் வந்துக் கொண்டிருந்தான், "மச்சீ" என்று உற்சாகக் குரலில் கூவி, அவனை வரவேற்றேன். அவனும் ஒருவித பரபரப்பிலேயே இருந்தான். என் குடங்களுடன், அவன் குடங்களை வைத்தான். இந்தத் தண்ணீர்ப் படலம் அவனுக்கு ஒரு சாக்கு, பார்ப்பதற்கு அமீர்கான் போலிருப்பான். சற்றே வளமான குடும்பத்தின் செல்லப்பிள்ளை, தினமும் இது போல் என்னுடன் வந்தபின், அவனுக்குச் சில கடமைகள் இருந்தது. தன் அழகால் 'தில்ஷாத்'தைக் கவர்ந்திருந்தான்.

"
மச்சி, யாராவது தூங்கிமுழிச்சி பாக்கச் சொல்ல அழகாருப்பாங்களாடா ? இந்தப் பொண்ணைப் பாரேன்" என்று அலாவுதீனுக்கு தில்ஷாத்தை அறிமுகப்படுத்தியதே செழியன்தான்.

எல்லோரும் தண்ணீர் சுமந்த களைப்பை, இவர்கள் காதல் வளர்க்கப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், இன்று ஏதோ சாகசம் செய்யப் போவதாய்ச் சொல்லியிருந்தான்.

"
மச்சான், இன்னிக்கு லட்டர் குடுக்கப்போறேண்டா தில்லுக்கு" என்றான். நான் திடுக்கிட்டேன். லேசாய்ப் பயம் வந்தது.

"
அய்யய்யோ, என்ன மச்சி குண்ட தூக்கிப் போடுற ?" என்றேன். எனக்கு தில்லின் மாமா கற்பனையில் தோன்றினார். தில்ஷாத் தன்னுடைய அக்கா வீட்டிற்கு ஊரிலிருந்து வந்திருக்கிறாள், வந்தவள் நீண்ட நாளாகவே இங்கேயே இருக்கிறாள், அவளுடைய அக்காவின் கணவன்தான் இந்த மாமா. விளையாட்டுப் பசங்களின் வில்லன். நாங்கள் பவுண்டரிக்கு விரட்டும் ரப்பர்பந்துகள் தவறுதலாய் இவன் வீட்டில் நுழைந்தால், எங்களின் கண் முன்னே கதறக் கதற, கத்தியால் இரண்டாக, அறுபட்டு உயிர் விடும். இந்தக் கடிதம் அவன் கையில் கிட்டினால் எதை அறுப்பானோவென குழம்பிப் போனேன்.

தண்ணீர், சாப்பாட்டு வேலை முடித்து, எங்கள் வழக்கமாய்ச் சந்திக்குமிடமான அந்த ஓட்டை ஸ்கூலில் கூடினோம், முன்னமே செழியன், முருகன் வந்திருந்தனர். அலாவுதீன் வருவதற்கு முன்னரே, அவன் மிஷனை, அவர்களிடம் சொல்லிவிட்டேன். நினைத்ததைப் போலவே செழியன் மட்டும் ஏகத்துக்கும் பயந்தான்.

"
அவசரமா கக்கூஸ் வர்து மச்சி, போயிட்டு வந்துர்றேன்" என்று நழுவினான். நானும், முருகனும் சிரித்தோம்.

"
என்னா மச்சான் இன்னும் அவன் வரல ? என்று முருகன் என்னிடம் கேட்டான்.

"
இன்னும் சிக்னல் வர்லபோல' என்றேன்.

இந்த சிக்னல் தில்ஷாத் கண்டுபிடித்தது, இரவு பத்தரை திரைகானம் வரும், அவள் வீட்டு ரேடியோவிலிருந்து, சற்று உரக்க தமிழ்ப்பாடல்கள் ஒலிக்கும்போது, அலாவுதீன் ரெடியாவான்.

அலாவுதீன் வந்து சேர்ந்தான். கடிதத்தை முருகனிடம் காண்பித்தான். "தூள் மச்சி, கலக்கு" என்று முருகன்,
அலாவுதீனைக் கட்டிப்பிடித்து வழியனுப்பி வைத்தான்.

நான் என் பங்குக்கு "பெஸ்ட் ஆப் லக் மச்சி" என்றேன். 'நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், நீ வர வேண்டும்' என்று சுசிலா குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. தில்ஷாத் சிக்னல் கொடுத்துவிட்டாள்.

கும்மிருட்டு, சில நாட்களாக தெருவிளக்கு எரிவதேயில்லை, அலாவுதீனுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போலானது. அவன் போய்க் கொஞ்ச நேரம் அந்தப் பாட்டு மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது, பிறகு அடுத்து, அடுத்த பாடல்கள். திடீரென நிசப்தம் அங்கு நிலவியது.

அலாவுதீன் பதைபதைக்க ஒடி வந்தான். "மாமா வந்துட்டான்டா" என்றபடி.

"
அவன் வந்தது இருக்கட்டும்டா, நீ போய்தான் ரொம்ப நேரமாச்சே, லட்டரக் குடுத்தியா இல்லையா? " என்றேன்.

"
த்தா.......திடீர்னு லட்டர் கொடுத்த எப்படி? நான் அப்படில்லாம் பழகலன்றா, "அதெல்லாம் தெரியாது இந்தா"ன்றேன், வாங்கவேல்ல...பேப்பர உருண்டையா கசக்கி ஜன்னலுக்குள்ள தூக்கிபோட்டேனா, அவ மாமன் வந்து நிக்குறான் "யார்ராது?" ன்ட்டு.

ஒழுங்கா, இந்தக் கதைக்கு இங்க எண்டு போட்டுட்டு போயிடலாம்தான், ஆனா அதுக்கப்புறமா நடந்த ஆண்டி-கிளைமாக்ஸ் உங்களுக்குச் சொல்லணுமே ?

மறுநாள், காலை வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த வேளை, வீட்டின் வெளியே கசகசவென ஒரேச்சத்தம், தில்ஷாத் வீட்டில் கூட்டமாயிருந்தது. அவள் வீட்டைச் சுற்றி அலாவுதீனின் அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி..என ஏகச் சொந்தங்கள் குழுமியிருந்தனர்.என்னது, கல்யாணம் நிச்சயம் பண்ணப்போறான்களோ ?’ என்று நான் நினைத்துக்கொண்டிருந்த போது, பளாரென ஓர் அறை விட்டார் அலாவுதீன் அப்பா. அறை வாங்கியது தில்ஷாத்தின் மாமா. எங்களின் வில்லன் அடி வாங்கியபோது கொஞ்சம் சந்தோஷமாய் தெரிந்தாலும் அதன் பிறகு எல்லாமே சோகம்.

"
ஏண்டி, காலேஜ் போறான், பணக்காரன், தங்கச்சிக்கு மடக்கி போட்டுறலாம்னு என் பையனுக்கு, அக்காவும், தங்கச்சியும் வல விரிக்கிறீங்களாடி, உங்களுக்கு, எங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டுமாடி?" என்றபடி அலாவுதீனின் அம்மா தில்ஷாத்தின் அக்காவை நோக்கி பாய்ந்தபடி இருந்தார்.

மாமா மசூதில யார்கிட்டயோ லட்டரப் பத்தி காலைல புலம்பிட்டுருந்தாராம், இதைக் கேள்விப்பட்ட வலுவான அலாவுதீன் அப்பா உஷாரா முந்திக்கிட்டாராம், இது பின்னாட்களில் அலாவுதீன் என்னிடம் சொன்னது.

சில வருடங்களுக்குப் பிறகு, அலாவுதீன் தன் மாமன்மகள் 'மேஹருன்னிஷா' வை விமரிசையாக நிக்காஹ் செய்துக்கொண்டான்.

No comments:

Post a Comment