ப்ரதீல்யா!
__________________________________________________
இது
நடந்து முழுதாக ஒரு வருடம் ஆயிற்று, அப்போது நான்
ஏரோனாடிக்ஸ் எஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்தேன். அப்துல்கலாம் கண்ட கனவின் மீது
கொண்ட ப்ரேமையால் ஏரோனாடிக்ஸ் சேர்ந்து சென்னை சென்ற முதல் வருடதிலேயே வாழ்க்கையில்
கற்றுகொள்ள ஏரோனாடிக்ஸ் தவிரவும் நிறைய விஷயங்கலுண்டு என்பதை உணர்ந்த படியால் ஒரு லவ்
ஃபெய்லியர், ஒன்பது அரியர் என்று ப்ரகாசமான எதிர்காலத்துடன் ஃபைனல் இயரில் நின்று
கொண்டிருந்தேன்..
'ப்ரதீல்யா' இந்த பெயர் அந்த நாட்களில் கால்லேஜின் மூலை முடுக்குகளிலெல்லாம் ப்ரஸ்தாபிக்க
பட்டுக் கொண்டிருந்தது, ப்ரஸ்தாபிக்கப் பட்டக் காரணம் அவ்வளவு
உத்தமமானதில்லை,..
ப்ரதீல்யா ஒவ்வொரு நாலும் வெவ்வேறு யுவன்களுடன்
இனைத்து கிசுகிசுக்கப் பட்டாள்.. நான் அவ்வலவாக புறணி பேசுமிடங்களில் நிற்பவனில்லை
என்ற போதிலும் என் காதிலேயே நான்கைந்து முறை பட்டு விட்டது, இது எல்லாவற்றிற்கும் ஏனி வைத்தாற்ப்போல கம்ப்யூட்டர் துறை லெக்ஸரர் ஒருவருடன்
புதிதாகக் கட்டப் பட்டுக் கொண்டிருந்த கெமிஸ்ட்ரி லேப்பில் ஒன்றாயிருந்ததாக ஒரு வதந்
'தீ' பரவ ஆரம்பித்தது,..
'ப்ரதீல்யா' எனும் அந்தப் பேரே வித்யாசமாய் தான் இருந்தது.
பின்னொரு நாள் நான் கூகுளில் சர்ச் செய்து பார்த்த போது கூட அந்தப் பெயருக்கான அர்த்தத்தை
அறிய முடியவில்லை.. அவள் ஐ.டி இரண்டாமாண்டு மாணவி என்பதைத் தவிர கூடுதல் விபரங்கள்
நான் அறிந்திருக்க வில்லை ஆனாலும் மேற்படி வதந்திகளால் அவளைப் பார்க்க வேண்டுமென்ற
ஆவல் அதிகரித்து விட்டிருந்தது, அதற்குள் ஃபைனல் செமஸ்டெர்
தேர்வுகள் தொடங்கியதால் அந்த ஆசை நிறைவேறாமலே போயிற்று...
இறுதி வருடம் என்பதால் எனது ப்ளஸ் டூ மார்க் ஷீட்
மற்றும் டீ.சி முதலானவற்றை கல்லூரி நிர்வாகத்திடமிருந்து பெறுவதற்கு நோ ட்யூ ரெசிப்ட்
வாங்க வேண்டி கல்லூரி அக்கௌண்டண்ட் டிபார்ட்மெண்டில் ஒரு சனிக்கிழமை காலையில் காத்திருக்க
வேண்டியதாயிற்று அன்று விடுமுறை தினமாதலால் கல்லூரி வெரிச்சோடியிருந்தது, அக்கௌண்டண்ட் இன்னும் வந்திருக்கவில்லை,
நான் முதல் மாடி வராண்டாவில் நின்றிருந்தேன், அங்கிருந்து கைக்கு எட்டுகிற தூரத்தில் பெயர் தெரியாத ஒரு மரம் சிவப்பு நிறத்தில்
பூ பூத்து, இரவு பெய்த மழையின் மிச்சங்களை நறுமணத்துடன் தன் இலைகளின்
வழியே சொட்டிக் கொண்டிருந்தது, வானம் விளக்கி வைத்தாற்ப் போல்
பளீரென்றிருந்தது, நான் உல்லாசமாக விசிலடித்தபடி மரத்தின் கிளைகளில்
மாறி மாறி அமர்ந்து கொண்டிருந்த தலையில் கொண்டை வைத்திருந்த பெயர் தெரியாத குருவியைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்..,
எனக்குப் பின்னால் காலடிச் சத்தம் கேட்டது நான்
அக்கௌண்டண்ட்டை எதிர் பார்த்துத் திரும்பினேன், அப்போது தான் கடவுள் எனக்காக ஆசிர்வதித்து
அனுப்பிய தேவதை அவளைப் பார்த்தேன்! குறுகிய காரிடார் அது, என்னை
நோக்கி வந்தவள் என்னை உரசிக் கடந்து சென்றாள், இனம் புரியாத நருமணம்
என்னைச் சூழ்ந்து கொண்டது..
என்னைப் பொலவே அக்கௌண்டண்ட்டைத் தேடித் தான் வந்திருக்கிறாள், செக்க்ஷன் மூடியிருந்ததால் ஏமாற்றத்துடனும் தயக்கத்துடனும் திரும்பி நடந்து
எனக்கு இரண்டடி தள்ளி நின்று கொண்டாள்.. நான் அவளை நன்றாக கவனித்தேன், வெளிறிய ரோஜா நிறத்தில் சுடிதார் அனிந்திருந்தாள், மெல்லிய
புருவங்களில் ஆழ்ந்த கரு நிறத்தில் மையிட்டு நெற்றியில் சின்னதாக ஒரு ஸ்டிக்கெர் பொட்டு,
ஆச்ச்ரியமாக மூக்குத்தி போட்டிருந்தாள் சின்னதாக ஒரே கல் வைத்து,
கூரான நாசி, க்லோப் ஜாமூன் உதடுகள், வெளிறிய மென்மையான தேகம் மொத்தமுமே ரோஜாப் பூக்குவியலைக் கொண்டு செய்தார்ப்
போலிருந்தது..... ( எனக்கு அவ்வளவாக வர்னிக்கத் தெரியாது.. மன்னிக்கவும் )
மொத்தத்தில் இவான் துர்கனேவ் நாவல்களில் வரும்
நாயகியைப் போன்று தெவதை போனற உடலும் குழந்தை போன்ற முகமும் கொண்ட பேரழகி....
பொதுவாகவே நான் பெண்களிடம் பேசும் பண்பினன் அல்லன், அது பயத்தினால் அல்ல, ஒரு விதமான சுய கௌரவத்தால்... ஆனால்
இப்போது அவையெல்லாம் சுனாமியால் அடிக்கப்பட்ட மண் வீட்டைப் போல் சரிந்து விட்டிருந்தது.. நான் ஏற்கனவே ஒரு காதல் செய்து, அந்தப் பெண் என்னை விட உயரமான விரிந்த மார்புள்ள ஒரு பணக்கார யுவனைத் தேர்ந்தெடுத்து,
நான் கொஞ்ச நாள் சிகரெட் தண்ணியென்று திரிந்து காசு தீர்ந்தவுடன் இந்தப்
பொண்ணுங்களே இப்படித் தான் என்று ஞானம் பெற்று, இனியொரு காதல்
செய்வதேயில்லயென்ற தீர்மானத்தில் இருந்தேன்..
என் அத்தனை என்னங்களும் தவறென்று நிரூபிக்க இதோ
ஒருத்தி,,
மாசற்ற ஒரு தெவதை... முதல் பார்வையிலே காதல் என்பதன் அர்த்தம் உணர்ந்தேன்..
எப்படியாவது பேசியாக வேண்டும்ம்ம்ம்.......
நான் ஃபைனல் இயர் என்பதால் சற்று தோரணையாகவே ஆரம்பித்தேன்..
'ஹல்லோ!' என்றேன், நிமிர்ந்தாள்..
'எந்த
டிபார்ட்மெண்ட்'
'இன்ஃபர்மேஷன்
டெக்னாலஜி'
'எந்த
இயர்!'
செகன்ட் இயர்' என்றாள்,
பதிலுக்கு ஏதும் கேட்கவில்லையென்றாலும் ரிப்ளை தயக்கமின்றி வந்தது..
'அப்டியா!
ஒரே பில்டிங்கில் இருந்தும் ரெண்டு வருஷத்துல ஒரு தடவ கூட பாத்ததேயில்லயே!'
உதட்டைப் பிதுக்கி தோளை உயர்த்தினாள், 'தெரியலயே..' என்பது போல்..
அதற்க்குள் அக்கௌண்டண்ட் கடங்காரன் வந்து விடவே, பேச்சு தடைப் பட்டது.. இன்னும் அரை மணி நேரம் கழித்து வந்திருக்கலாம்..
'கரடி' என்று முனுமுனுத்தேன் அவனைப் பார்த்து, அவள் காதில் விழுந்திருக்க
வேண்டும், வெளியே வரத் துடித்த சிரிப்பை உதட்டைக் கடித்துத் தடை
செய்தாள்..
அதுக்கே நா டோட்டலா காலி..
என் வேலை முடிந்தது, அவள் கௌண்ட்டரில் நின்று கொண்டிருந்தாள். வெறுமனே அங்கே நிற்க இயலாதென்பதால்
கீழே இறங்கி கேண்ட்டீனில் ஒரு 'டீ' வாங்கிக்
கொண்டு வெளியே மரங்கள் வரிசையாய் நின்ற நடைபாதையில் ஓரமாயிருந்த சிமெண்ட் பலகையில்
அமர்ந்தேன், எப்படியும் இந்த வழியாகத் தான் போக வேண்டும். எதிர்
பார்த்தது வீண் போகவில்லை.
வந்தாள்,,
என்னை கவனித்ததும் கண்களில் மெலிதாய் பரவிய ஆச்சரியத்தை
மறைத்து என்னைக் கடந்து சென்றாள்.
நான் ஒரு பத்தடி இடைவெளியில் பின்தொடர்ந்தேன்.
ஏற்கனவே சொன்னது போல் நான் கொஞ்சம் சுயகௌரவம் பார்ப்பவன், ஆகவே பாதி தூரத்தை அவளின் பின்னால் கடந்தவன், வேகத்தைக்
கூட்டி நான் ஒன்றும் உன் பின்னால் அலையவில்லை என்பதைப் போல அவளுக்கு முன்னால் நடக்க
ஆரம்பித்தேன்.
கேட்டிலிருந்த செக்யுரிடி 'என்னப்பா வாங்கிட்டியா' என்றார்
'வாங்கியாச்சுண்ணே' என்றேன், உடனே கிளம்பக் கூடாதென்பதால், 'அப்புறம் வேலைலாம் எப்டிங்க்ணா போயிட்டிருக்கு? ரொம்ப
எளச்சி போயிட்டீங்கலே?' என்றேன்
பேச ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் குடும்ப கதையை
ஆரம்பிப்பதற்க்குள் அந்த தேவதை வந்து விடவே,
'என்னமா
பணம் கட்டிட்டியா" என்றார்
'இல்ல.., கால்லேஜ் ல செக் வாங்க மாட்டங்கலாம், கால்லேஜ் பேருல
டி.டி எடுக்கனுமாம்' முகத்தில் சோகத்தை ஒட்ட வைத்திருந்தாள்
தேவதை முகத்தில் சோகத்தை பொறுக்காமல் 'நீங்க டி.டி எடுக்க வேண்டி தானே? ஒரு கிலோமீட்டர் தூரத்துலயே
பஸ் ஸ்டாப் பக்கத்துல ஐ.ஓ,பி பேங்க் இருக்கு' ' என்றேன்
'ஆனா, ஹாஸ்டல் ல வெளியே போக பர்மிஷன் தர மாட்டாங்க, இன்னைக்கு
தான் லாஸ்ட் டேட், இன்னைக்குள்ள கட்டியாகனும்' இன்னும் கொஞ்சம் விட்டால் அழுதுவிடும் போல..
அதற்க்குள் செக்யுரிடி ஏதோ வேலையாக நகர்ந்து விட, எனக்கு வசதியாயிற்று.
நான் அந்த வழியாகத் தான் போக வேண்டும் நானே கூட
கட்டிடுவன், பட், இதுக்காக டி.டி
எடுத்துக்கிட்டு நா மறுபடியும் ரிடர்ன் வரவேண்டியிருக்கும், அது
கூட பரவால்ல, நானா வந்து உதவி பண்றதால, நீங்க பொண்ணு, அதுவும் அழகா வேற
இருக்கீங்க, அப்டீங்கற ரீசனால இத பண்றதா நெனச்சுக்க கூடாது. ஏன்னா, பொதுவாவே எனக்கு ஹெல்ப்பிங் டெண்டன்சி அதிகம்.
இதை நான் சற்று விரைப்பாகவே தான் சொன்னேன் என்றாலும்
அவளின் முகத்தில் சின்ன மலர்ச்சி ஏற்ப்பட்டது, புன்னகைத்தாள்.
'அந்த
செக்க இப்டி கொடுங்க' என்றேன்
கொடுத்தாள்..
பேர் அபர்ணா என்றாள்,
விபூதிபூஷனின் "அபராஜிதா" நாவலில் வரும் நாயகியின்
பெயர் அபர்ணா! என்னை மிகவும் பாதித்த கதாப்பாத்திரம்..
மனதுக்குள் ஒரு தரம் சொல்லிப் பார்த்தேன். அபர்ணா!
எவ்வளவு அழகான, அமைதியான பெயர்..
ஊர் மஹாராஜாகடை, ஹோசுர்
என்றிருந்தது அவள் கொடுத்த செக்கில்.
'போன்
வெச்சுருக்கீங்களா'
' இங்க
இல்ல..,
ஹாஸ்டல்ல இருக்கு'
'செக்யூரிட்டி
ஆஃபீஸில் ஒரு லேண்ட் லைன் போனிருக்கு, நீங்க அங்கயே
வெய்ட் பன்னுங்க, மேல ஏதாவது விபரம் தேவைப்பட்டா நான் போன்பண்ணி
வாங்கிக்குறேன்' என்றுவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து பேங்க்கை
அடைந்தேன், பெரிதாய் ஒன்றும் கூட்டமில்லை, சலானில் அவள் பெயர் ஃபில் பண்ணி இனிஷியல் போடவேண்டிய இடத்தில் 'k' என்று
என்பெயரின் முதலெழுத்தால் நிரப்பினேன். சந்தோஷமாய் இருந்தது.. ரெஃபெரன்ஸ்காக மொபைல்
நம்பர் தரவேண்டியிருந்தது, என் நம்பரைக் கொடுத்தேன்.
கால்லேஜ் திரும்பிய போது 'செக்யூரிட்டி ஆஃபீஸில் வெய்ட் பண்ணிக் கொண்டிருந்த அவள் என்னப் பார்த்ததும்
வெளியே வந்தாள். அவளிடம் டி.டி எடுத்ததற்கான ரசீதை நீட்டி, 'உங்க
போன் நம்பர் வேணும்' என்றேன். கேள்வியுடன் நோக்கினாள்,
'ரெஃபெரன்ஸ்காக
என் மொபைல் நம்பர கொடுத்துருக்கேன், ஏதாவது ப்ராப்ளம்னா
உங்கள காண்டாக்ட் பண்ணவேண்டியிருக்கும். சோ, ஐ வாண்ட் யுவர் நம்பர்'
கொடுத்தாள்.. 626263 என முடிந்த ஃபேன்சி நம்பர், எளிதாய் மனதில் பதிந்து கொண்டேன்.
'தேங்க்ஸ்' என்றாள்.
'யு
ஆர் வெல்கம்' என்றேன் புன்னகையுடன்
புன்னகைத்தாள்
'சரி
பார்க்கலாம்' என்றேன், தலையசைத்தாள்
அவள் ஹாஸ்டல் இருந்த பக்கமும் நடக்க ஆரம்பித்தாள், தேவதையின் கால்கள் தரையில் பாவியதாகவேத் தோன்றவில்லை, மிதந்து சென்றதாகவேப் பட்டது. நான் பைக் அருகில் சென்று தூரத்தில் அவள் நடப்பதைப்
பார்த்துக் கொண்டிருந்தேன், திரும்பிப் பார்ப்பாள் என்று எதிர்பார்த்தேன்,
திரும்பவில்லை..
அதனாலொன்றும் மனவருத்தமடையவில்லை, ஏனென்றால் சந்தோஷப்படுவதற்க்கு எவ்வளவோ சம்பவங்கள் அந்தக் காலை வேலையில் நடந்து
விட்டிருந்தன.
ஒரே நாளிள், ஒரு அழகான
பெண்ணைப் பார்த்து, பேசிப்பழகி, ஃபோன் நம்பர்
வாங்குற அளவுக்கு வந்தாயிற்று.,
நம்பர் கிடைத்தவுடன் போன் பண்ணி அவசரக்குடுக்கைத்
தனமாக சொதப்பிடக் கூடாது, விட்டுப் புடிக்கலாமென்று முடிவு செய்து கொண்டேன், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கடந்து, திங்களன்று எனக்கிருந்த 'வைப்ரேஷன்' தேர்வை முடித்து விட்டு வெளியே வந்தேன், எதிர்ப்பட்ட
நன்பர்களிடம் ஊத்திக்கும் மச்சி அடுத்த செமஸ்டர்ல பாப்போம் என்று சொல்லிவிட்டு படியிறங்கி
ஆளில்லாமலிருந்த ஒரு மரத்தினடியில் சென்றமர்ந்தேன், இதுதான் சரியான
சமயமென்றுப் பட்டது, போனையெடுத்து அவள் நம்பருக்கு அழைத்தேன்,
கொஞ்சம் நெர்வசாகத் தானிருந்தது.
'ஹெல்லோ' என்றது மறுமுனை. கொஞ்சம் கமறலான பெண்குரல்.
'அபர்ணா
இல்லைங்களா?'
'அபர்ணா
தான் பேசுறேன்'
'திஸ்
ஈஸ் கதிரவன், சாடர்டே மீட் பண்ணினோமே!' என்றேன் தயக்கத்துடன்
ஓஹ்! நீங்களா அண்ணா.. ஜில்லு சொல்லிச்சு நீங்க
தான் ஹெல்ப் பண்ணீங்கன்னு, பணம் கட்டியாயிட்டுது. ரொம்ப தேங்க்ஸண்ணா.."
'ஜில்லு
யாரு?'
'நீங்க
பாத்தீங்களே!..., காசு காசுன்னு அலையறானுங்க, ஒரு ஃபெசிலிட்டியும் பண்ணித்தர
மாட்றானுங்க.. ஹாஸ்டல்ல ஹீட்டர் வொர்க் பன்னலைங்கண்ணா, பச்சத்தண்ணி
ஒடம்புக்கு ஒத்துக்கல, ஜல்ப்பு புடிச்சிகிச்சு, சாடர்டே தான் பணம் கட்ட லாஸ்ட் டேனு சொல்லிட்டானுங்க, எனக்கு ஒடம்புக்கு முடியாததால ஜில்லு கட்ட வந்துச்சு'
என் நிலமையை நினைக்கும் போது எனக்கே பரிதாபமாக
இருந்தது. ஒடம்பு சுகமில்லாமலே இந்தப் பேச்சு பேசுதே, நல்லாயிருந்தா என்னப் பேச்சு பேசுமென்று எண்ணிப் பார்த்தேன்.
யார் அந்த ஜில்லு என்று கேட்க நினைத்து மனதை மாற்றிக்கொண்டு, 'உடம்பைப் பாத்துக்கம்மா தங்கச்சி.' என்று போனை வைத்தேன்.
இரண்டு நாட்களாய் சேர்த்து வைத்தக் கனவுகளும் ஆசைகளும்
மொத்தமாய் ஜல்லடையில் ஏந்திய ஜலம் போல வடிந்து போயிற்று, இருந்தாலும் நம்பிக்கையிழக்கவில்லை.
எனக்கு புதனன்று இன்னும் ஒரேயொரு தேர்வு மட்டுமே
மிச்சமிருந்தது, இரண்டு நாட்களில் ஊருக்குக் கிளம்ப ஏற்கனவே
பஸ்ஸெல்லாம் புக் பண்ணி மூட்டைமுடிச்சுகளைக் கட்டியாயிற்று, அன்று
செகண்ட் இயருக்கு எந்தத் தேர்வுமில்லையென்று தெரிந்தது. அன்று மட்டுமில்லை இன்னும்
ஒரு வார காலத்திற்கு அவர்களுக்கு விடுமுறை தான் என்று தெரிந்துகொண்டேன்.
அவளை நினைக்கையில் எனக்கு எதுவுமே பெருசாகத் தோன்றவில்லை, இரண்டு நாட்களில் அவளைப் பார்க்கமுடியாவிட்டால் புக்கிங்கை கேன்சல் செய்துவிட்டு
ஒரு வாரம் தங்கியாவது அவளைத்தேடிப்பிடித்து, நீயில்லாமல் எனக்கு
வாழ்க்கையே இல்லை என்பதை சொல்லிவிடவேண்டும். அவள் மறுத்துவிட்டால் என்ன செய்வதென்ற
என்னமே எனக்கெழவில்லை.
ஏனென்றால், நான் கடவுள் நம் வாழ்க்கையில் நடத்தும்
திடீர் மேஜிக்குகளை நம்புபவன், இல்லையென்றால் ஏன் கல்லூரியின்
இறுதி நாட்களில் தேவதை போன்ற ஒரு பேரழகியைக் காட்டி, என்னிடம்
பேசச்செய்து, சிரிக்கச்செய்து
இப்படிப் என்னைப் பைத்தியமாக்கியடிப்பானேன்?
சற்றுமுன் அடைந்த ஏமாற்றம் மறைந்து மனம் லேசாகிவிட்டிருந்தது
உற்சாகமாக ஒருமுறை விசிலடித்துக்கொண்டேன்.
கேண்டீனை அடைந்து ஒரு ஆரஞ்ச் ஜூஸ் சொல்லிவிட்டு
உட்கார்ந்தேன், எதிரே சற்று தூரத்தில் ராம் என்கிற ராமக்கிருஷ்ணன்
கையில் 'கோக்' டின்னுடன் நின்றுகொண்டிருந்தவன்
என்னைப் பார்த்ததும் கைகாட்டிவிட்டு என்னை நோக்கி வந்தான்.
ராம்
ரொம்ப வெளிப்படையான பையன், பெண்களிடத்தில் மட்டும் ரொம்பப் பொறுப்புடன் நடந்துகொள்வான், மற்றபடி எல்லவற்றையும் ஈசியாக எடுத்துக்கொள்ளும் ஞானிகளுக்கே உரித்தான மனப்பக்குவம்
இப்பொதே கைவரப்பெற்றிருந்தான்..
ஃபிப்த் செமஸ்டரில் ஆறு பேப்பர் க்ளியர் பண்ணிவிட்டு, எனக்கும் சேர்த்து ஒட்டுமொத்த வகுப்புக்கே கே.எஃப்.சி யில் ட்ரீட் வைத்தான்
மொத்தம் எழுதிய பேப்பர்கள் இருபத்தியிரண்டு... அவன் அப்பா ஆளுங்கட்சி கௌன்சிலர்,
பெண்கள் முன்னிலையில் திட்டினார் என்பதற்காக பேராசிரியர் ஒருவரை அடித்து
கால்லேஜ் வட்டாரத்தில் ஹீரொவாக ஃபார்ம் ஆனவன், நான்கு வருடங்களில்
ஐந்து பேரை காதல் பண்ணியிருக்கிறான், ஆச்சரியம் என்னவென்றால்
அவனைக் காதலிப்பதற்கு இன்னமும் பெண்கள் ரெடியாகவே இருந்தார்கள்.
வந்தவன் எனக்கெதிரே அமர்ந்தான்., 'என்ன மச்சி உஷார் பன்னிட்ட போல!' என்றான் கண்களில் சிரிப்போடு.
அவன் எதைச்சொல்கிறானென்று பிடிபடாமல் கேள்வியுடன் 'என்னத்த டா' என்றேன். 'சும்மா நடிக்காத
டா, அதான் பார்த்தேனே., அன்னிக்கு கால்லேஜ்
வாசல்ல நின்னு நீங்க வறுத்த கடலை வாசம் கேண்டீன் வரைக்கும் வந்துச்சே!' என்று கண்ணடித்தான்.
எனக்கு பிடிபட ஆரம்பித்தது, '
நீ நெனைக்குற மாதிரிலாம் இல்ல டா, அது.........'
நான் முடிக்கும் முன், என் தோளை தட்டி
'விடு மச்சி என்ன இருந்தாலும் நம்ம பையன் நீனு, என்ஜாய் பன்னு, நா கூட ட்ரை பண்ணேன், பட்சி சிக்கல, நீ சைலெண்டா இருந்து முடிச்சுடியே டா'
என்றான்.
எனக்கு ஆச்ச்ரியமாயிருந்தது, 'உனக்கந்த பொண்ணத் தெரியுமா?' என்றேன் வியப்புடன்.
'தெரியுமாவா!
அந்தப் பொண்ணத் தெரியாட்டி தான் ஆச்சரியம்., எனக்கு மட்டுமில்ல
மச்சான், ப்ரதீல்யானு சொன்னா இந்தக் கால்லேஜுக்கே தெரியும். ப்ரின்சிபல்
உற்பட..' எனக் கண்ணடித்தான்.
தௌசண்ட் வோல்ட் மின்சாரம் என்னுள் பாய்ந்தது போலிருந்தது.
சரி மச்சான், பாக்கலாம்...
கடைசியா ஒரேயொரு அட்வைஸ், எதுக்கு ரூம்லாம் எடுத்து செலவுன்னு
காசு மிச்சம் பண்றதா நெனச்சுடாத .. எது பண்ணாலும் சேஃப்டி முக்கியம்பா!..' என்று மறுபடியும் கிண்டலாய்க் கண்ணடித்துவிட்டு, 'கோக்'
டின்னை நசுக்கிக் குப்பையில் எறிந்து சென்றான். கூடவே, என் மனசையும் தான்....
அந்தப் பெண் தான் ப்ரதீல்யாவா?!!
அன்று பூத்த மலர் போன்ற மாசுமருவற்ற அந்த முகத்தை
எண்ணினேன்,
குழந்தையைப் போன்று மருளும் அந்தப் பாசாங்கற்றக்
கண்களை எண்ணினேன்..
அந்தப் பெண் அப்படிப்பட்டவளாக இருப்பாளா..?!!
'சே!
இருக்காது..'
எப்படியிருந்தாலும், அதன்பின் என் முன்பதிவு டிக்கட்டை கேன்சல் செய்வதற்கு அவசியம் இருக்கவில்லை.
எங்களுக்கிடையேயான முதல் சந்திப்பே கடைசியுமானது.
No comments:
Post a Comment