டிக்கெட்
செக்கர்
முகிலன் எப்போதும் வீட்டில் இருப்பதையே
விரும்புபவன். அவனுக்கு நூல்கள் வாசிப்பது என்பது ஒரு தவம். அதைச் செய்ய
எப்போதும் காத்துக் கொண்டிருப்பான். கல்லூரி செல்ல வேண்டுமெனில்
அவனால் அதிக நேரம் வாசிக்க முடியாது. கல்லூரி முடிந்து அறை திரும்பவே
மாலை ஐந்து ஆகிவிடும். களைப்பில் தூங்கிப் போவான். அப்படியும் இரவு ஒரு பத்து பக்கங்களாவது வாசிப்பான்.
வாசிப்பு ஆசை அதிகமாக அவனுள் இருப்பினும்
அவனுக்கு அரை மணி நேர வாசிப்பு ஒரு மணி நேர வாசிப்பு எல்லாம் எப்போதும் பிடிக்காது. வாசித்தால் ஒரு எட்டு
மணி நேரம் அல்லது ஒரு நூலை வாசித்து முடிக்க வேண்டும். கல்லூரி
நாட்களில் இதற்கு சாத்தியக் கூறுகளே இல்லை. அந்த காரணம் கருதியே
விடுமுறைகளில் சேர்த்து வைத்த பணத்தில் நூல்களை வாங்கி வாசித்துக் கொண்டே இருப்பான்.
அப்படி வாசிக்கும் போது மனதளவில் எங்கோ
சென்றுவிட்டான்.. விளைவாக ஏதேதோ எண்ணங்கள் அவனுள் எழ அவனும் எழுத ஆரம்பித்தான். முகிலன் எழுத ஆரம்பித்த நாட்களில் தன் சொந்த வாழ்க்கையை நாவலாகவோ சிறுகதையாகவோ
மாற்றிக் கொண்டிருந்தான். இதில் ஒரு எழுத்துச் சிக்கல் உள்ளது.
அப்படி மாற்றும் போது அவனை அறியாமலேயே அவனுடைய நிஜ வாழ்க்கை கட்டுரைகளில்
நுழைவது போல் நுழைந்துவிடும். இதை அவனால் தவிர்க்க முடியாமல்
எழுத எழுதுகொண்டிருந்தான்.
மக்கள் இது போன்ற கதைகளையெல்லாம் விரும்புவதில்லை
என அவனுக்கு சிலர் சொன்னார்கள்.
அவர்களுக்கு தேவை நிகழ்வுலகை எதிர்த்து புத்தம் புதிய உலகை காண்பிக்க
வேண்டும். அதற்கு தான் எங்காவது பயணம் செல்ல வேண்டுமே என எண்ணம்
கொண்டான்.
முகிலனுக்கு தன் சொந்த ஊரான சேலத்தைத்
தாண்டி எதுவும் தெரியாது.
சேலமே முழுக்கத் தெரியாது. ஒருவர், அவர் கூட எழுத்தாளர். ஒரு இதழை நடத்திக் கொண்டிருப்பவர்.
அவர் இவனிடம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பற்றிக் கேட்டிருக்கிறார்.
இவனுக்கோ தெரியவில்லை. அப்படியே சொல்லிவிட்டான்.
கெஜ்ஜல்நாயக்கன்பட்டியோ அவன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கி.மீ தான்.
சேலத்திற்கு தூத்துக்குடி, கொங்கு, மதுரை போன்று பிரபலமான வட்டார மொழி கிடையாது. சாதாரணத்
தமிழ். அந்த தமிழே முகிலனுக்கு அரைகுறை! பிற ஊர் வட்டார மொழிகளை புகழ்ந்து தள்ளுவான் ஆனால் இவனுக்கோ ஒன்றுமே தெரியாது.
இப்படியே இருந்தால் நம் எழுத்தை யாரும் மதிக்க மாட்டார்கள் எப்படியேனும்
எங்காவது வெளியூர் செல்ல வேண்டும் என முடிவு எடுத்தான்.
அதே நேரம் அப்பா அவனுக்கு ஒரு வேலை கொடுத்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால்
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருக்கும் காதருக்கு ஒரு செக்கினை கொடுக்க வேண்டும்.
அது மட்டுமல்ல. காதர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
அதனால் சில பழங்கள் கொண்டு விசாரிக்கவும் வேண்டும். இல்லையெனில் இருபத்தியோரு வருட தொழில்ரீதியான பழக்கம் அறுபட்டுவிடும் என்று
அனுப்பி வைத்தார்.
முகில் தன் நண்பன் அஸ்வினுக்கு போன்
செய்தான். அவன் எர்ணாகுளத்தில்
இருப்பவன். அவனும் சென்னை வருவதாக இருந்தான். அவனுக்கு சொந்த ஊரே சென்னை தான். வீட்டில் பைக்கும் வைத்திருப்பவன்.
அதனால் அவனுடனேயே செல்லலாம் என அழைத்தான். முகிலனுக்கு
நேரம் கை கூடி வந்தது. அவனும் அதே நாள் சென்னை வருவதாக இருந்தான்.
இரவு சேலத்திலிருந்து கிளம்பினான். சென்னை எப்போது சென்றாலும்
ஒரு சொகுசான பயணமாகவே அவனுக்கு அமைந்திருக்கிறது. நேரே சென்று
கோயம்பேட்டில் இறங்கினால் அங்கு ஒருவர் வந்து கூட்டிச் செல்வார். திரும்பும் போதும் அதே போல். இம்முறை இவனாக செல்ல வேண்டும்.
அவனுக்குள் சின்ன சந்தோஷம். எப்போதுமே புதிய இடங்கள்
புதிய பயணங்கள் நமக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதை
நம்மால் வெளிக்காட்டவே முடியாது. அதே தான் தற்போது முகிலனுக்கு.
ஆறு மணி நேர பயணத்திற்கு பின் சென்னை
கத்திபாராவில் இறங்கினான்.
அஸ்வின் சொன்ன விஷயம் கத்திபாராவில் இறங்கினால் அங்கிருந்து அருகில்
தான் கிண்டி இரயில் நிலையம். நடந்தே சென்றுவிடலாம். இவனும் கத்திபாராவில் இறங்கி இரயில் நிலையம் எங்கே என அருகில் இருந்த போலீஸிடம்
கேட்டான். அவர் அங்கு நின்று கொண்டிருந்த பதினெட்டு ஏ பேருந்தில்
ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்கச் சொன்னார்.
அடுத்த இறக்கம் இறங்கியவுடனேயே கிண்டி
இரயில் நிலையம் அவனை அடையாளம் கண்டு கொண்டது.
உள்ளூர் இரயில்கள் அவனுக்கு அதிகம் பிடிக்கும். இப்படி ஏன் சேலத்தில் தாரமங்கலம் வரை இராசிபுரம் வரை வைக்கக் கூடாது எனவும்
யோசித்திருக்கிறான். அவன் செல்ல வேண்டிய இடம் எக்மோர்.
அந்த நிலையத்திற்கே டிக்கெட் எடுத்தான்.
இரயிலில் ஏறியவுடன் பார்க் ஸ்டேஷன்ல
இறங்கிடு என அஸ்வின் சொல்லி அழைப்பை துண்டித்தான். அவனுக்கு மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தான்.
அஸ்வின் எடுக்கவில்லை. இவனுக்கு உள்ளூர பயம்.
டிக்கெட் மஞ்சள் நிறத்தில் சின்ன அட்டைப் போல் சட்டை பைக்குள் அடக்கமாக
இருந்தது. நாம் எக்மோருக்கு தானே வாங்கினோம் எப்படி பார்க் செல்ல
முடியும் என்று. அவனின் சிந்தனையினை விட இரயில் வேகமாக ஓடியது.
கோடம்பாக்க்கம் மாம்பலம் போன்று சில இரயில் நிலையங்கள் கடந்து சென்று
கொண்டிருந்தது. சட்டைப்பையில் கைகள் இருந்தபடியே எப்படி செல்வது
என யோசித்துக் கொண்டிருந்தான்.
அந்த காலை ஆறுமணிக்கு சேலம் பேருந்தில்
சராசரியக இருக்கும் கூட்டம் அளவு அவன் இருந்த இரயிலின் பகுதியில் மக்கள் இருந்தனர். இவனின் சிந்தனையை கலைத்தார்
போல அனைவரும் அந்த நிலையத்தில் இறங்கினர். ஏன் இறங்குகிறார்கள்
? ஒரு வேளை நாம் பயணக் களைப்பில் அயர்ந்துவிட்டோமா ? இறங்க வேண்டிய இடத்தை தாண்டி விட்டோமா ? அபராதம் விதித்துவிட்டால்
என்ன செய்ய ? பயணத்திற்கு மட்டும் தானே கைவசம் பணம் உள்ளது
?
அருகில் பெரிய பெரிய பைகளை தன் மகனுடன்
ஒரு நடுத்தர வயதுடையவர் ஏற்றிக் கொண்டிருந்தார். அவர் பாரத்தைப் பங்கு போடாமல் அவரிடம் இது
எந்த ஸ்டேஷன் எனக் கேட்டான். அவர் அனைத்து பைகளையும் ஏற்றிவிட்டு
அவனைப் பார்த்தார். இரயில் அங்கிருந்து கிளம்பியது.
உள்ளூர் இரயில்கள் ஒரு ஸ்டேஷனிலிருந்து
கிளம்பியவுடன் வேகம் எடுத்துவிடுகிறது.
அதே போல் இந்த இரயிலும் வேகம் எடுத்தவுடன் அந்த பை வைத்தவர் முகிலனிடம்
சொன்னார் - எக்மோர்.
இறங்கியிருக்கலாமோ என்றொரு சபலம் மனதில்
தட்டியது. இரயிலின் வேகம் ஓடும்
இரயிலிலிருந்து குதித்து விடலாம் என்னும் எண்ணத்தையும் மழுங்கடித்தது. முகிலன் இருந்த பெட்டியில் இரண்டே பெஞ்சுகள் தான் இருந்தது. ஒன்று அவன் இப்போது அமர்ந்திருப்பது. மற்றொன்று எதிர்பதத்தில்.
முகிலனுக்கு வந்து போவது எந்த ஸ்டேஷன் என்பதறிவது கடினமாக இருந்தது.
வரும் ஸ்டேஷன்கள் அனைத்தும் அவனின் எதிர்ப்புறமே. ஜன்னல் கம்பிகளோ அந்த பெயர்ப் பலகைகளை அவன் கண்ணிலிருந்து மறைத்துக் கொண்டே
இருந்தது.
இனி செய்வதென்ன பேசாமல் பார்க்கிலேயே
இறங்குவோம் என முடிவெடுத்து எதிர்புறத்தில் அமர்ந்தான். ஜன்னல் கம்பிகளின் மேல்
கைகள். கூர்மையாக கவனித்து அவதானிக்கும் ஒரு பார்வை. நாம் அபராதம் கட்ட நேருமோ என்னும் பயம் இரயிலுடன் துரத்திக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்திலேயே, க்ஷணத்திலேயே பார்க் நிலையம்
வந்தது போல் ஒரு எண்ணம். அவன் துரதிர்ஷ்டம் அவனுடைய எதிர்புறம்
பார்க் நிலையம் வந்தது. இறங்கினான். ஒரு
குறுந்தகவல் நான் வர ஒரு மணி நேரம் ஆகும் என அஸ்வினிடமிருந்து.
இறங்கியவுடன் ஒரு சாயா குடித்துவிட்டு
அருகில் காலியாக இருந்த சீட்டில் அமர்ந்தான்.
அவன் அருகில் ஒரு பெண், வேலைக்கு செல்லும் வயதில்.
யாராக இருதால் என்ன அஸ்வின் வரும் வரை கண்களுக்கு குளிரூட்டுவோம் என்று
அவளை ஓரக் கண்ணல் பார்க்க ஆரம்பித்தான்.
அவள் அவனுடைய வலது பக்கம் அமர்ந்திருந்தாள். இடது பக்கம் ஹிந்தி
மாதிரி ஒரு மொழி அவனின் காதுகளில் விழுந்தது. உண்மையில் அது மராத்தி.
முகிலனுக்கு ஹிந்தி மட்டும் தெரியுமாதலின் அது ஹிந்தி மாதிரி இருந்தது.
அவர்கள் ஒரு பத்து பேர் இருந்தனர். அவனுடைய கண்கள்
குத்து மதிப்பாக கணக்கு போட ஆரம்பித்தது.
அவர்களை ஒருவன் பிடித்தான். அந்த நிலையத்தின் டிக்கெட்
செக்கர். என்ன செய்கிறான் பார்ப்போம் என மனம் ஏங்கியது.
ஒரு புறம் நம்மையும் பிடிப்பார்களோ என கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.
முகிலனின் கண்கள் அங்கேயே தன் கூர்மையினை செழுமை படுத்திக் கொண்டிருந்தது.
அவர்கள் குரோம்பேட்டையில் ஏறியிருக்கின்றனர். அங்கிருந்து அவர்கள்
கோடம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும். டிக்கெட் எடுக்கவில்லை.
மேலும் இறங்கியதோ பார்க் ஸ்டேஷனில். அனைத்தும்
முகிலன் பேச்சில் அவதானித்தவை. எங்கடா நமக்கான ஆட்கள் கிடைப்பார்கள்
என காத்திருந்து அவர்களை பிடித்தார் அந்த மாமனிதர். அவர்களை அப்படியே
கேட்டார் ஏன் இப்படி டிக்கெட்டை தவறாக உபயோகிக்கிறீர்கள் என. அவருக்கு ஹிந்தி தெரிந்ததால் பேச்சு வார்த்தைகள் ஹிந்தியிலேயே தொடர்ந்தது.
முகிலனுக்கு அருகில் தான் இந்த பஞ்சாயத்து
ஆரம்பித்தது. அவனுக்கு ஹிந்தி ஒரு சினிமாவை அரைவேக்காட்டு புரிதல் கொள்ளுமளவு தெரியும்.
அவனும் கவனித்துக் கொண்டிருந்தான். அந்த செக்கரோ
அவர்களை நீங்கள் எல்லோரும் அபராதம் விதிக்க வேண்டும் என ஒரு எண்ணை ஹிந்தியில் சொன்னார்.
ஹர் ஏக் பாஞ்ச் சௌ என அவன் காதில் விழுந்தது. அஃதாவது
ஒவ்வொருவரும் ஐநூறு ரூபாய். மனதிற்குள் சிறு குடைச்சல்.
வெறும் ஐநூறு சொன்னாரா ஆயிரத்தி ஐநூறு சொன்னாரா என்று. கைகள் தன் பாக்கெட்டின் மேல் வைத்து பர்ஸினை தடவியது. எச்சிலை முழுங்கினான்.
அந்த கூட்டத்தை அவர் ஒரு ஓரம் இழுத்துச்
சென்று தரையில் அமரச் சொன்னார்.
பணத்தை கொடுத்துவிட்டு கிளம்பு என்னும் அவரின் அதிகாரம் அந்த கூட்டத்திடம்
பலித்தது. அவர்கள் தங்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தையெல்லாம்
திரட்டினர். ஒருவன் அவர்களுக்குள்ளேயே தலைவன் ஆனான்.
கண நேரத்தில் முகிலனின் பார்வை சுற்றும்
முற்றும் பார்த்தது.
சென்னை தன்னை வேகமாக்கிக் கொள்ள ஆரம்பித்தது. ஆங்காங்கே
போலீஸ் காரர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்படியும் பொதுமக்கள்
அடுத்த ப்ளாட்ஃபார்ம் செல்ல படிகளை உபயோகிக்காமல் தண்டவாளங்களை கடந்தவாறே இருந்தனர்.
மீண்டும் பலமுறை முகிலன் அழைத்துப் பர்த்தான். அஸ்வின் எந்த அழைப்பையும்
எடுக்கவேயில்லை. ஒவ்வொரு இரயில் வர வர எப்போது அஸ்வின் எந்த இரயிலில்
வருவான் என்று பார்க்க ஆரம்பித்தான். பயம் அவனை அழுத்திக் கொண்டே
இருந்தது. இந்தப் பக்கம் அவர்கள் தங்களால் முடிந்ததை அவரிடம்
கொடுத்து சமரசம் பேச ஆரம்பித்தனர். மற்றொரு பக்கம் போலீஸிற்கு
பயப்படாமல் ஜனத்திரள் தண்டவாளங்களை கடந்தவாரே இருந்தது.
அவர் வட இந்தியக் கூட்டம் கொடுத்ததை
வாங்கிக் கொண்டு முகிலன் பக்கம் நாலடி எடுத்து வைத்தார். முகிலனுக்குள் பயம்
அதிகரிக்கத் தொடங்கியது. அதற்குள் அடுத்த இரயில் வந்ததால் அவர்
மீண்டும் பின்சென்று அவர்களை கவனிக்க ஆரம்பித்தார். இப்படியே
ஒரு எட்டு இரயில்கள் கடந்தது.
இம்முறை முகிலனின் அருகில் வந்திருந்தார். நான்கடி தூரம் மட்டுமே
பாக்கி இருந்தது. அப்போதும் ஒரு இரயில் மறித்தது. முகிலனின் கண்களில் பயம் எல்லோருக்கும் தெரியும் வண்ணமே குடி கொண்டிருந்தது.
குனிந்து தன்னை நொந்துகொண்டே தரையை பார்த்தான். ஒரு குரல், தோளின் மேல் ஒரு கை. வெடுக்கென திரும்பினான், ‘என்னடா அடையாளமே தெரியலையா
?’ என. அஸ்வின் வந்திருந்தான். முகிலனின் முகத்தில் அரும்பிய புன்னகை.
அவனை பேசவிடாமல் தன் பயத்தை சொன்னான். அஸ்வினுக்குள் சிரிப்பு
வெடித்துக் கொண்டு வந்தது. முகிலனுக்கு என்ன நடக்கிறது எனப் புரியவில்லை.
அவனின் சிரிப்பு அந்த இரயில் நிலையம் முழுக்க டிக்கெட் செக்கரோ என தோன்ற
வைத்தது. அவனின் சிரிப்பும் பயமுறுத்தியது. அப்போது அவன் முகிலனை டிக்கெட் எடுத்து எந்த இடம் வரை என பார்க்கச் சொன்னான்.
சட்டைப் பையிலிருந்து டிக்கெட்டை எடுத்து பார்த்தான், ‘கிண்டி - கோட்டை’ என போட்டிருந்தது.
எக்மோரிலும் இறங்கலாம் பார்க்கிலும் இறங்கலாம் என்றான். இருவரிடத்திலும் லேசான புன்னகை.
திரும்பிப் பார்த்தான். வட நாட்டு கும்பலை வெறிகொண்ட
டிக்கெட் செக்கர் மட்டுமே கண்களில் தென்பட்டார். அருகே ஒரு கிழவன்
தண்டவாளம் தாண்டி ப்ளாட்ஃபார்ம் ஏற கடினப் பட்டுக் கொண்டிருந்தார். பயம் அவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக இளக ஆரம்பித்தது.
அவர்கள் இருவரையும் ஒரு அழகான இளம்பெண்
வழிமறித்தாள். டிக்கெட் செக்கர். புன்னகையுடன் டிக்கெட்டினை கொடுத்தான்.
No comments:
Post a Comment