Wednesday 31 July 2013

Story-94 ஈவா



ஈவா
வக்கீல் நோட்டிஸ் வந்தவுடன் அம்மா பதறினாள்.என்னடி இது விவாகரத்துனு போட்டுருக்கு நீ லீவுக்குதான் வந்திருக்கேன்னு பார்த்தா இதென்னடி கூத்து வெளிய தெரிஞ்சா வெக்கக் கேடு மாப்பிள்ளைய கூப்பிட்டு நாங்க பேசுறோம் டீ இதுவரைக்கும் சண்டை சச்சரவுண்ணு எதுவும் வந்ததில்ல அப்புறம் ஏண்டி இப்படி கோர்ட்டுக்கு போற முடிவு எனக்கு பேசக்கூட முடியலஒரே மூச்சில் பேசி விட்டு படபடப்பாக அமர்ந்தாள்.மின் விசிறியைப்போட்டு விட்டேன்.
அது அப்படிதாம்மா பெருசா சண்ட போட்டாதான் பிரியனும்னு யார் சொன்னா சின்ன சண்டை கருத்துவேறுபாடு கூடபோதும்மாஃப்பாரின்லா குறட்ட விடற கணவனை விவாகரத்து பன்றாங்க ,இங்க எவ்வள்வு பிரச்சனைன்னாலும் பேசி தீர்த்துக்கலாம்னு சொல்றீங்க.
அம்மா சமாதானமடையவில்லை.பூஜை அறைக்கு சென்று அத்தனை சாமிகளையும் கும்பிட்டாள்.அழுது புலம்பினாள்.அவளை அப்படிப் பார்க்கவே பிடிக்கவில்லை.நான் சொன்ன சமாதானங்களைக்கேட்பதாயில்லை .அப்பாகிட்ட இன்னும் சொல்லவயே என ஃப்போனை கையிலெடுத்தவளைத் திட்டினேன்.வெளியபோன மனுஷன் வீட்டுக்கு வரட்டும்னு பேசேம்மா ஏன் இப்படி டென்ஷனாக்க கிளம்பற….என்றதும் எல்லாம் தெரிஞ்சவமாதிரி பேசு வாழத்தெரியாம இருக்கியேடி அழுதாள்.
அம்மா ப்ளீஸ் லிமிட் அழுது என்ன ஆகப்போகுது அமைதியா பேசுமா கொஞ்சம் சத்தமாகவே கத்திவிட்டேன்.அம்மா மனசு நிகழ்காலத்திற்குள் இல்லை என்பதை அவள் கண்கள் உணர்த்தின.
மாலை அப்பா வீடுதிரும்பினார் வந்ததும் வராததுமாக அம்மா ஆரம்பித்தாள்.இப்போதே மாப்பிளைய பார்த்து பேசனும் கைல கால்ல விழுந்தாவது இவங்களுக்கு நல்லது செய்யனும் மாப்பிள்ளைக்கு எடுத்து சொல்ல யாருமில்ல நாம சொன்னாதான் கொஞ்சமாவது புரியும் என்றாள்.
தொட்டிகளில் அம்மா வளர்த்த துளசிச் செடி வெங்காயத்தாள் மிளகாய் செடிகளை பிய்த்து கையில் தூக்கிக்கொண்டு வந்தான் குட்டி மனோஜ்.அம்மாவின் அறியாமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.இதுவரை பிரச்சனை என எதையும் பேசியதில்லை அவளுக்கு திடீரென கேள்விப்பட்டால் இப்படித்தான் இருக்கும்.அப்பா அம்மாவிடம் மங்கா நம்ம மகளுக்கு எல்லாம் தெரியும் டீ அவளுக்கு உலகம் தெரியும் அவ முடிவுபண்ணினா சரியாதானிருக்கும்  அப்பா பேசப்பேச அம்மா தலையிலடித்துக்கொண்டு அழுதாள்.உங்களாலதா இவ இப்படிபோயிட்டா என்ற வழக்கமான புலம்பல்.
அடுத்த நாள் வழக்குமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது.ரமேஷீக்கு பாங்கில் கடந்த ஆண்டு மாறுதல் கிடைத்ததால் தான் பிரிந்திருக்கிறோம் என்பது எல்லாரும் நம்பும் உண்மை இதற்குமேல் ஒன்றாக இருந்து முட்டிக்க வேண்டாமென இரண்டுபேரும் முடிவு செய்தோம்.பிரிந்திருந்தாலும் இனி ஒருநாளும் சேர்ந்து வாழமுடியாதென முடிவானது.சமரசமாக பிரிவதாக வழக்குமன்றத்தை நாடினோம்.சிலமுறை எங்களை இணைத்து வைக்க கோர்ட் முயன்றது.வக்கீலும் தெரிந்தவர் தான்.அங்கு ரமேஷ் பேசியவைதான் மிக அதிகமாக பாதித்தது.
நான் பரபரப்பான பத்திரப்பதிவு அலுவலக வேலை ம்னோஜீக்கு தேவையானதை கவனிப்பது வீட்டுவேலை இப்படியிருக்க.வீட்டு வேலைகளில் பையனை தயார் செய்வதில் உதவுகிற ரமேஷ் மொத்தமாக சில மாதங்களில் விலகிவிட்டார்.ஏதும் உதவி என கேட்டாலும் கடித்துத்துப்ப ஆரம்பித்தார்.ஆபிஸ் டென்ஷன்னு தான் கொஞ்சம் மனசு விட்டு பாசுங்கன்னு கேட்டாலோ நானா வேற எதப்பத்தி பேசினாலோ எல்லாத்துக்கும் கோவம் சண்டையை வலிய வரவழைப்பது என மாறிப்போனான்.
இன்னொரு பொம்பளையோட சகவாசம் கிடச்சா பழசு அத்தன கசந்திடுமா என்ன? நினைக்கும் போதே அருவருப்பாக இருந்தது ஷோபனா உடன் பணியாற்றியவள்.விவாகரத்து வாங்கிக்கொண்டு இந்த பிரான்ஞ்ச் வந்தவள்.ரமேஷீக்கும் அவளுக்கும் பற்றிக்கொண்டது முதலில் தெரியவில்லை.ஆபிசில் அரசல் புரசலாக பேசிக்கொண்டபின் தான் என் காதுக்கு வந்தது. விஷயத்த ஓபனா பேசற தைரியம் கூட இல்லாம நான் கேக்கும்போது வாயைத்திறக்காம கல்லுமாதிரியிருந்தான். எவ்வளவு பேசினேன்.இதெல்லாம் விட்டுடுங்க சரிவராது.இதுவர ஏதோ பண்ணிட்டிங்க போகட்டும்னு. எல்லாத்தையும் கேட்டிட்டிருந்தவன்.அடுத்த நாள் அவனுக்கு நான் ஏற்றவள் இல்லனு பேச ஆரம்பித்தான்.அதோடு அவனுக்கும் எனக்கும் எல்லாம் முடிந்தது.மகனை என்னோடு வைத்துக்கொள்ளலாம் என கோர்ட் சொல்லிவிட்டது.அலுவலம் முடிந்து மனோஜ் கூட விளையாடி தூங்க வைத்துவிட்டு முகநூலில் கொஞ்சம் இருந்துவிட்டு வருவது ஆறுதலாக இருந்தது.
2
எளிமையாகத்தான் அறிமுகமானோம் முகநூலில்.அவளது மிக விரிந்த கண்கள் பேசும்போது கூடக்கூட பேசியது.இத்தனை நெருக்கமாவோம் என ஒருபோதும் நினைக்கவில்லை.வாசனை திரவியங்கள் அதிகம் புழங்குகிற ஊருக்கு சொந்தக்காரி ,இங்கு நான் மிக சீரியஸாக  என் வாலில் எழுதிக்கொண்டிருப்பேன்.அவளோ இன்பாக்ஸில் எடக்கு மடக்கா விமர்சிப்பாள்.புரட்சிக்கு பெயர்போன நாட்டிலிருந்து இங்கு நாங்கள் பேசுகிற உரிமையை நையாண்டி செய்யாதே எனத் தொடங்கி கடுமையாக கிழித்தேன்.அன்றிலிருந்து அவளது விளையாட்டுத்தனம் மறைந்தது.
அவளது புகைப்படம் தாங்கிய மாத இதழுக்காக சில லகரங்களில் பணம் வாங்கியிருந்தாலும் புகைப்படத்தின் ஒற்றைப் பிரதியைக் கூட கையில் வைத்திருக்காதவள்.இலக்கிய வனாந்தரத்தின் அத்தனை உயிர்ப்புகளையும் அறியத்துடிக்கிறாள்.இரண்டு நாட்டின் கலாச்சாரம் குறித்தும் மரியாதையோடு விமர்சிப்பவள்.இதோ இன்று காலை உருகி உருகி அழைக்கிறாள் அவளது தேசத்திற்கு.உடனடியாக என்னைப்பார்க்க விரும்புகிறாள்.பயண செலவை அவளது நண்பன் ஒருவன் கவனித்துக் கொள்வான்.போய்வருவதற்கான அத்தனை செலவையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.உன் வருகையைத்தவிர இந்த நொடி வேறெதுவும் பிரதானமில்லை பட்டு இப்படி தினந்தினம் அழைப்பின் காற்று நுகரச்செய்த சுகந்தங்களில் அன்பின் முடிச்சு வலுவாகிக் கொண்டே இருந்தது.அணுவுலைக்கு எதிரான குரல்கொடுப்பின் போது என்னைக்காட்டிலும் என் செயல்பாடுகள் எப்படியிருக்கவேண்டுமென அரசியல் பேசுவாள்.எனது கதை பிரசுரமாகும் முன் அவளது பார்வைக்கு செல்லும்.யாரும் கண்டுபிடிக்கமுடியாத ஆயிரத்து ஒன்றாவது கோணத்தைக் கண்டுபிடித்து பேசுவாள்.
வா  நீ மூன்றுமாத சுற்றுலாவிசாவில் வந்தால் மீண்டும் உன் தேசம் செல்லத் தோன்றாது.கட்டற்ற சுதந்திரத்தின் ஜ்வாலையை இங்கே அறிவாய்.உணரவும் முயன்றுபார்.உன் கடவுளால் காட்ட முடியாததை உனக்கு என்னால் காட்டமுடியும் . அன்பு
அவளது தினசரி அழைப்புகளுக்கு இடையில் அவள் என்னை முழுமையாக கவர்ந்தாள்.உனது அழைப்பை ஏற்கிறேன்.நான் பங்குபெறும் வகையிலான நிகழ்ச்சிகள் இருந்தால் விவரங்கள் அனுப்பு.அந்த நாட்களில் அங்கிருப்பேன்.அவளது உற்சாகத்திற்கு அளவில்லை.எனக்கும் அங்கு செல்வதின் மீதான பேராவல் .
அங்கு சென்று இறங்கியது முதல் இதோ மீண்டும் விமானமேறுகிற இந்த நொடிவரை ஒவ்வொரு நொடியும் புத்தம்புதிதாக இருந்தது.உரிமையின் எல்லா திசைகளிலுமான பயணம் .அதன் மீதான உடனடி விசாரணைகளை மனம் நிகழ்த்த அதற்கு பதில் சொல்வது பெரும் அவஸ்த்தையாய் இருந்தது.
3
மொழிபெயர்ப்புப் பணிக்கு ஆள்தேவையென அழைப்பு வந்திருக்கிறது.அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.அவர்களும் உன் விருப்பம் என்று சொல்லிவிட்டார்கள்.அம்மா அவ்வப்போது கண்ணைக்கசக்கிக் கொண்டு என் வாழ்க்கை போனதாக பயப்படுகிறாள்.அவளுக்கு புரியும் விதமாக எப்படி பேசினாலும் இப்போது புரியாது.அவளுக்கு இன்னும் கொஞ்சம் காலம் போனால் மெல்ல புரியும்.அதுவரை பொறுத்துதான் இருக்க வேண்டும்.
மனோஜை அனுப்ப அப்பாவிற்கு விருப்பமில்லை.அவளுடைய பணிகளுக்கு இடையூறாகி விடுவான் என நம்பினார்.அவருக்கு என்னோடு குழந்தை இருக்கவேண்டும் என்பதை விளக்கமாக சொல்லிவிட்டு கிளம்பினேன்.
என் அன்பு ஈவா விமானநிலையத்திற்கு வந்திருந்தாள்.பாஞ்சோர் என சொல்லிக்கொண்டே வணங்கி மனோஜை வாங்கிக் கொள்ள முயற்சி செய்தாள் .மனோஜ் பிடிவாதம் பிடிக்கத்தொடங்கினான்.
என்னைத்தழுவி உதடுகளில் முத்தம் பதித்தாள்.நாங்கள் வருவதை முன்னிட்டு அவளுடைய வீடு முழுமையாக  தயார் செய்யப்பட்டிருந்தது.மனோஜ்,ஈவா ,நான் அத்தனை உயிராகக் கலந்திருந்தோம்,மனோஜ் க்கு ஈவாவை மிகவும் பிடித்துவிட்டது.இப்போதுதான் வந்தது போல இருக்கிறது.30 நாட்கள் ஓடிவிட்டது.இதற்குள் ஈவாவும் நானும் மிகநெருங்கி இருந்தோம்.என்னைப்பற்றி அவளுக்கு நிறைய தெரிந்திருந்தது.எப்படியென ஆச்சர்யமாக இருந்தபோதுதான் அவளது கடந்த காலத்தை முழுமையாக தெரிந்து கொண்டேன்.அவளது தோற்றம் ,உருவம்,குரல் எல்லாம் புத்தம்புதிதாக மாறியிருக்கும் உண்மையை அறிந்தேன்.அப்பாவிற்கும் அம்மாவிற்கும் எனக்கும் ஈவாவிற்கும் உள்ள அன்பை விளக்கினேன்.இந்த முறை அம்மா வேகமாக குரல் எடுத்து அழுதாள்.நாட்டுல நடக்காததெல்லாம் சொல்றியேடீ .பொம்பளையா மாறினவ கூட வாழப்போரயா? இதெல்லாம் சரிவராது என்றாள்.அப்பா எப்போதும் போல உற்சாகமாக இல்லை.உனக்கு சரின்னு பட்டா செய்மான்னு விட்டுட்டார்.ஈவாவிற்கு என்னை முழுமையாகத்தெரியும் என்னை இளம்பிராயத்தில் அருகிருந்து பார்த்திருக்கிறாள்.என் பள்ளியில் என்னோடு படித்தவள்.அன்று அவள் ஆணாக இருந்தாள்.என் உயிர் நண்பன் காலம் எங்களை சந்திக்க விடாமல் செய்தது.கல்லூரிக்காலத்தில் அவளுக்கு ஏற்பட்ட மாற்றமும் உள்ளூரில் இருக்கமுடியாமல் நகரம் நோக்கி ஓடியதும் அங்கிருந்து எல்லை தாண்டி ஓடியதுமாக இங்குவந்து சேர்ந்திருக்கிறாள்.முழுக்கவும் சிகிச்சை எடுத்து பெண்ணாக மாறியிருக்கிறாள்.ஆணின் மனதும் பெண்ணின் மனதும் நெருக்கமாக அறியக்கற்ற அருண் என்கிற ஈவாவோடு சேர்ந்து பாரிஸில் வாழ்கிறேன்.மனோஜ்க்கு இரண்டு தாய்கள். வாழ்க்கையில் நானே எதிர்பார்க்காத ஒரு கோணத்திற்கு நகர்ந்திருக்கிறேன்.இயற்கையின் எல்லா சுவாரஸ்யங்களும் மனிதர்களிடமுமிருக்கின்றன.அன்பு அத்தனை வலுவாக பிணைத்துக்கொண்டது.

No comments:

Post a Comment