Tuesday 9 July 2013

Story-4 நினைவு

நினைவு
Krishnakumar.M


நினைவுகள் என்றும் அழியாதவை என்று பலர் கூற கேட்டுள்ளேன். இது எத்தனை அளவு உண்மை என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் நம் மூதாதையர்களின் நினைவுகளும், பழக்கவழக்கங்களும் கூட தலைமுறை தலைமுறையாக அழியாமல் அவர்களின் சந்ததியினரிடம் பாதுகாப்பாக இருக்குமென்றும் அதனை மீண்டும் தூண்டிவிட முடியுமென்றும் சொல்கிறார்கள்.
        சென்ற தலைமுறை நினைவுகள், பூர்வ ஜென்ம நினைவுகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாவிட்டாலும் குழந்தை பருவ நினைவுகளில் நம்பிக்கை வைத்தே ஆக வேண்டும். தெளிவான சிந்தனை இல்லாத அந்த சமயத்தில் நாம் பார்த்த, நம்மை வியக்க வைத்த, பயப்படுத்திய சம்பவங்கள் முப்பது, நாற்பது ஆண்டுகள் ஆன பின்புகூட நம்மிடம் தங்கியிருக்கும். இந்த கதையை எழுதும் ஆசிரியனாகிய நானும் சரி, இக்கதையை படிக்கும் வாசகனாகிய நீயும் சரி இத்தகைய நினைவுகளை தாங்கி நிற்பவர்களே.
        சரி இதையெல்லாம் விட்டுவிட்டு இந்த கதையின் நாயகியான 30 வயது ஹேமலதாவின் நினைவுகளுக்குள் செல்வோம். இவளது வாழ்க்கையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை இவளது சிறு வயது நினைவுகளுக்குள் சென்று கண்டு பிடிப்போம். அந்த நினைவுகள் எல்லாம் இவளுக்கு நேரடியாக நினைவில் இல்லாமல் இவளது ஆழ்மனதில் பதிந்து இருப்பதால் நமக்கு கோர்வையாக கிடைக்காமல் சிதறிய அப்பளத்துண்டுகளாக தான் கிடைக்கபோகிறது. இத்துண்டுகளை சேர்த்து தருவதில் ஆசிரியனாகிய எனது கடமையும் அதனை ஒழுங்காக கோர்த்துகொள்வதில் வாசகனாகிய உனது திறமையும் அடங்கியுள்ளது.

        இனி நினைவுகளுக்குள் செல்வோம்....


                                     1
        “மரத்திற்கு பக்கத்தில் பாபு அண்ணா படுத்துகிடந்தான். இருவரும் அருகே சென்றோம். அவனது வாய் கோணலாக ஒரு பக்கம் இழுத்துகொண்டிருந்தது. படுத்திருந்த கோணம் கூட வித்தியாசமாக எங்கோ பார்த்த மாறி இருந்தது. அண்ணா படுத்திருந்த வாகு எனக்கு எதையோ நினைவுக்கு கொண்டுவந்தது. மனதிற்கு கஷ்டம் தரும் ஒரு நினைவு. எனது ஒரு பக்க சிந்தனை அது என்னவென்று தேடி கொண்டிருந்தாலும், அவன் படுத்திருந்த விதமும், ஒரு பக்கம் எதையோ முறைத்து பார்த்துகொண்டிருந்த விதமும் அச்சபடுத்தி என் தேடலை அர்த்தமில்லாமல் ஆக்கிகொண்டிருந்தன.... “

        “லதா, எழுந்துரு... எழுந்துரு.. எதுக்கு இப்படி கத்துற நடு ராத்திரியில?? பாப்பா முழிச்சிக்க போறா.. செத்த கம்முனு இரு...

        கடைசி வரை ஞாபகபடுத்த முடியவில்லை... இருவருமே ஓடினோம், பாபண்ணாவை அங்கேயே விட்டுவிட்டு ஓடினோம். தப்புதான்.. அப்படி தனியாக விட்டுபோக கூடாது.. ஆனால் பயம்... இருவருக்குமே பயம்.. 

        ஓடிகொண்டிருக்கும் போது ஏதோ துரத்தி வருகிறது... ஏன் எங்களை துரத்தவேண்டும்??
        “வர வர உனக்கு என்னமோ ஆயிட்டிருக்கு. நேத்து நைட்டும் லூசு மாறி கத்த ஆரம்பிசிட்ட. கடந்த ரெண்டு மாசத்துல இது மூணாவது தடவ. தூக்கத்துல சாதாரணமா புலம்புவாங்கனு தான் கேள்வி பட்டிருக்கேன். நீ என்னடானா நாலு வீட்டுக்கு கேக்குற மாறி கத்துற. எழுப்பினாலும் எழுந்திருக்க மாட்டேங்குற. என்ன தான் உனக்கு பிரச்சன?”

யூ ஆர் ரிஸீவிங்க் ஏன் இன் கமிங்க் கால்
யூ ஆர் ரிஸீவிங்க் ஏன் இன் கமிங்க் கால்
யூ ஆர் ரிஸீவிங்க் ஏன் இன் கமிங்க் கால்

                “ராஜா தான் பேசுறேன். சாப்டிட்டு இருக்கேன், ஒரு அரை மணி நேரத்துல வரேனு சொன்னேன்ல. திரும்ப திரும்ப போன் பண்ணா என்ன அர்த்தம்? வீட்டுலதான் ஒரு லூசு தொல்ல தாங்க முடியலனா நீயும் அங்க இருந்துகிட்டு தொல்ல பண்ணு. வந்து தொலையுறேன். வை.

        “இட்லிய வாயில வெக்க முடியல. சமைக்கிறதுல கவனம் இருந்தா தான? அடுத்த தடவ இப்படி நடு ராத்திரியில கத்து ஒரு வாளி பச்ச தண்ணிய கொண்டு வந்து ஊத்துறேன்

        “யாருமில்லாத சமையத்துல காட்டுபக்கம் போவாதன்னு சொன்னேன். கேட்டியா?? சுளீர் சுளீரென்று சித்தி முழங்காலுக்கு கீழே வைத்த பிரம்படி எனக்கு நீண்ட குச்சிகளை பார்க்கும் போது ஏற்படும் பயத்திற்கு வித்திட்டது. இப்பவுமே நீண்ட குச்சிகளை பார்த்தால் ஒரு கணம் என் கால் முடிகள் மெலிதான ஒரு சிலிர்ப்புக்கு உள்ளாகும்.

        போனது தப்புதான்.

        கோணப்புளியங்கா மேல் இருந்த ஆசை.

        அன்றிலிருந்து இன்றுவரை நான் கோணப்புளியங்கா சாப்பிட்டதில்லை. சாப்பிடும் எண்ணமும் எனக்கு வரவில்லை.

        நிஜமாக என்னை துரத்தி தான் வந்ததோ?

                                    2
மடேர்
மடேர்
மடேர்
“என்னடா இது சத்தம்? நிம்மதியா தூங்க கூட முடியல.
“மணி என்ன ஆகுது? ரெண்டு தானா? கர்மம் இந்த சமயத்துல இது என்ன சத்தம்?
மடேர்
மடேர்
                                        ***
“அப்புறம் என்ன சார் ஆச்சு?
“கிச்சன் கதவ திறந்து பார்த்தா பூரி மாவ பிசஞ்சு குண்டான்ல டப்பு டப்புனு அடிச்சிட்டு இருந்தா
“என்னது பூரி மாவு பிசஞ்சுட்டு இருந்தாங்களா? நைட்டு ரெண்டு மணிக்கா?
“அட ஆமாங்குறேன்
                                        ***
“ஏய், என்னடி பண்ணிட்டு இருக்க? இந்த டைம்ல எதுக்குடி பூரி மாவு பெசஞ்சிட்டு இருக்க?
“...
“கேட்டுகிட்டே இருக்கேன். இப்படி அமைதியா முறச்சு பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?
“...
“உன்ன தான் எரும... “
                                        ***
“ஐயயோ!! அப்புறம்?
“என்ன அப்புறம்?? வெறிக்க வெறிக்க என்னையே பார்த்துட்டு இருந்தா
                                        ***
“சித்தப்பா வீடு ரொம்ப மோசம். ஒரு பெரிய கோழிப்பண்ணைக்கு நடுவுல சின்னதா ரெண்டு ரூம் ஒரு பாத்ரூம். அவளோ தான்.
அங்க இருக்கவே எனக்கு பயம். எப்படி தான் கார்த்திய வெச்சிகிட்டு இருக்காங்களோ தெரில..
கார்த்தி யாருனு உங்ககிட்ட சொல்லல இல்ல?
கார்த்தி என் தம்பி. சித்தப்பா பையன். ஒரு வயசு.
நல்லா புசு புசுனு... கொஞ்சிகிட்டே இருக்கலாம்.
                                        ***
“பேசாம ஒரு நல்ல டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் காட்டுங்களேன் ராஜா. இது அஞ்சாவது தடவனு சொல்றீங்களே
“ஆனா இதுக்கு முந்தின நாலு தடவயும் தூக்கத்துல கத்துவா. அவளோ தான். நேத்து தான் இப்படி பூரி மாவெல்லாம் பெசஞ்சு..
“அத தான் சொல்றேன். இது ஏதோ சாதாரணமா இருந்து இப்போ டெவலப் ஆன மாறி இருக்கு. தூக்கதுல கத்துறதுல இருந்து இப்போ எழுந்து ஏதோ செய்றது வரை போயிருக்கு. டாக்டர்கிட்ட காட்டுறது பெஸ்ட் ராஜா

                                    3
“இது தான் நம்ம வாங்கி இருக்க ப்ளாட்
“மேடம் ரொம்ப அமைதியா இருக்கிறத பார்த்தா அவங்களுக்கு புடிக்கல போலருக்கு சார்
“அவ கெடக்கறா. இன்னும் சுத்தி வீடுலாம் வரல இல்ல, அதனால கொஞ்சம் யோசிப்பா. நீயே சொல்லு அவகிட்ட
“அந்த பயம் உங்களுக்கு இருந்தா விட்டுதள்ளிடுங்க மேடம். இந்த இடம் எல்லாமே சேல்ஸ் ஆயிடுச்சு. உங்களுக்கு கெடச்சதே லக் தான். கொஞ்ச நாள்ல சுத்தி நிறைய கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆரம்பிச்சிடுவாங்க. ஒரு காலத்துல ஆள் நடமாட்டமான பகுதி தான் இது. போகப்போக நடமாட்டம் கொறஞ்சு காடா போய்டுச்சு. இப்போ இதெல்லாம் ப்ளாட்டா மாத்தி சேல்ஸ்னு சொன்னதுமே கண்ண மூடிகிட்டு வாங்க வந்துட்டாங்க. நீங்க இப்போ வாங்கி இருக்கீங்கல இந்த இடத்துல இன்னும் ஒரு பதினஞ்சு மாசம் கழுச்சி பாருங்க அடையாலமே தெரியாம மாறி இருக்கும்
“பஸ் ஸ்டாண்ட் மேட்டர விட்டுடியே
“அது ஒண்ணுமில்ல மேடம் இப்போ ஊர்ல பேச்சு நடந்துட்டு இருக்கு. இன்னும் ஒரு அஞ்சு இல்ல ஆறு வருஷத்துல பஸ் ஸ்டாண்ட டவுன்ல இருந்து இந்த பக்கமா மாத்திட போறதா. ப்ளாட் சேல்ஸ்க்கு அதுவும் ஒரு மறைமுக காரணம் தான்
                                                        4
“சித்தி வீட்டுக்கு ரொம்ப தூரம் போகனுமா பாட்டி?
பஸ்ல ஒரு மணி நேரம் ஆகும். இதுக்கு தான் அப்போவே சொன்னேன் நீ வர வேண்டாம்னு. கேட்டாதான.
அட இப்போ என்ன கேட்டுடேன்னு நீ ரொம்ப சலிச்சிக்குற? நானும் பாப்பாவ பார்க்க வேண்டாமா? நீ மட்டும் பார்த்தா போதுமா?
அங்க உனக்கு துணையே இருக்காது. அவங்க இருக்கிறது ஊரத்தாண்டி காட்டுக்குள்ள. நீ வீட்டுக்குள்ளயே தான் அடஞ்சி கெடக்கனும்
ஏன் காட்டுக்குள்ள தங்கியிருக்காங்க?
காடுன்னா நீ நினைக்கிற மாறி இல்ல டவுன தாண்டி வெளிய. அது ஒரு பெரிய கோழி பண்ண கூடவே ஒரு பெரிய முட்ட கிடங்கு. அத சுத்தி பக்கத்துல தான் கறி மார்க்கட்டு. ஞாயித்து கிழம மட்டும் கூட்டம் ஜே ஜேனு இருக்கும். மத்த நாள்ல ரொம்ப ஆள் நடமாட்டம் அவ்வளவா இருக்காது. சுத்தி வீடுங்களும் அவ்வளவா இல்ல.
அங்க ஏன் தங்கனும்?
அவங்க வசதிக்கு இப்போ அங்க தான் கட்டுபடி ஆகுது
அவங்க ஏன் நம்ம வீட்லயே தங்க கூடாது?
ரெண்டு பேருமே சர்க்கார் உத்தியோகம். அந்த ஊருல தான் வேல போட்டிருக்கு அவங்களுக்கு
ஏன்...
சும்மா நச நசன்னு கேள்வி கேக்காம வா. எதாவது இம்ச பண்ணிகிட்டே இருக்க வேண்டியது.
                                                ***
“ஏன் முன்னமே கூட்டிட்டு வரலை?
“இல்ல டாக்டர். இந்த அளவுக்கு போகும்னு நான் எதிர்பார்க்கலை
“அது தான் காரணமா இல்ல மந்திர வாதி, ஜாலவித்தகாரன்னு யாரையாவது கூட்டிட்டு வந்து காமிச்சிட்டு இருந்தீங்களா?
“அது வந்து...
“தெரியும் ராஜா. இதே ஊரு தான் நானும். எனக்கு தெரியாதா நம்ம ஊர்காரங்க எப்படி அட்வைஸ் பண்ணுவாங்கனு
                                                ***


                                    5
“கோழிபண்ணை வீடு ரொம்ப மோசம். சுத்தி பாம்புகளும், பூரான்களுமாவே இருக்கு. கோழி புடிச்சு திங்குறதுக்காக பாம்புங்க அதிகமா வரும்.
எனக்கு புடிக்கலை. ஒரே பயம். ரெண்டு நாளைக்கு ஒருக்க தான் நான் பாத்துரூம் போறேன். அதுவும் பாட்டி திட்டி திட்டி கதவ திறந்து வெச்சு காவல் நிக்குறாங்க.
அதுலயும் முக்கியமா ராத்திரி நேரத்துல பயத்துல தூக்கமே வரமாட்டுது. பாம்பு எதாவது வந்துடுமோனு பயம்.
பண்ணையில பாம்புங்க வந்தா புடிக்கிறதுகாக நாய் வளக்குறாங்க. மொத்தம் நாலு நாய். குட்டி, முத்து, ரங்கு, சரசு. சரசு மட்டும் தான் ஒரே பெட்டை நாய்.
இதில் குட்டி படு சமர்த்து. சின்ன பெண்ணாகிய என் முழங்காலுக்கும் கீழ் தான் அதன் உயரம். ஆனால் உடல் நீலம் அதிகம். அந்த நாய் தான் மற்றவை விட புத்திசாலின்னு பாபு அண்ணா சொல்லுவான்.
இது கண்களுக்கு தான் பாம்பு வந்தா உடனே தென்படும். ராத்திரியில இதுதான் முதல்ல குலைக்க ஆரம்பிக்கும். உடனே மத்த நாய்களும் இது எங்க இருக்கோ அங்க வந்து குலைக்கும். நாய்ங்க குலைக்குற சத்தம் கேட்டாலே பாம்பு வந்திருக்குன்னு கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம். உடனே எல்லாரும் எழுந்துருவோம். என் சித்தப்பா, பாட்டி, பண்ணையில வேலை பாக்குற முருகேஸு, மாணிக்கம் எல்லாரும் கட்டைய எடுத்துட்டு போவாங்க.
சரியா குட்டி பார்த்துட்டு குலைச்சுட்டு இருக்கிற இடத்துல எங்காவது மூலையில பாம்பார் ஒளிஞ்சிட்டு இருப்பார். துரத்தவே மாட்டாங்க. அடி அடின்னு அடிச்சு அத சாகடிச்சுடுவாங்க. அப்படியும் சில சமயத்துல பாம்பு தப்பிச்சிடும். அப்படி தப்பிச்சிட்டா அன்னைக்கு யாருக்கும் சரியா தூக்கம் வராது. ஒரு குட்டி பயம் இருந்துகிட்டே இருக்கும்.
குட்டிக்கும் அன்னைக்கு தூக்கம் வராது. பண்ணைய சுத்தி சுத்தி வந்துகிட்டே இருக்கும். இப்படி சில ராத்திரிங்க தூக்கமே இல்லாம ரொம்ப பயமாவே கழியும்.
                                                ***
“என்ன சார் உடனே வர சொல்லி போன் பண்ணீங்க? ஏன் முகம் ஒரு மாறி வெளிறிப்போயிருக்கு?
“உள்ள போய் கொஞ்சம் அவள பாருங்க
....
“என்ன ஆச்சு ராஜா? ஏன் இப்படி வெறிச்சு பார்த்துகிட்டு படுத்துகிடக்கிறாங்க?
“என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல. நான் வீட்டுகுள்ள வந்தப்ப இங்க ஹால்ல இந்த இடத்துல ஏசு நாதர் சிலுவைல இருக்கிற மாறி படுத்து கிடந்தா. எங்க கல்யாண போட்டோ உடஞ்சு கிடந்துச்சு பக்கத்துல. உடம்பெல்லாம் வேர்த்து போயிருந்துச்சு. ஓரே பக்கமா பார்த்துட்டு இருந்தவ நான் வந்ததும் என்னையே முறைச்சு பார்க்க ஆரம்பிச்சா. ஒரு வழியா அவள கொண்டு போய் கட்டில்ல போட்டேன். என்ன பண்றதுன்னு தெரில. அதான் உங்களுக்கு போன் பண்ணேன்.
“நான் தான் அப்போவே சொன்னனே டாக்டர் யார்கிட்டயாவது கூட்டிட்டு போங்கன்னு
“அத பத்தி பேசி இப்போ ஒண்ணும் ஆகப்போறதில்ல. இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லுங்க
“இப்போ அவங்க இருக்கிறத பார்த்தா எனக்கு எதோ பேய், பிசாசு இல்ல பில்லி, சூனிய வேலை மாறி இருக்கு. கோயில்ல இந்த பேய் ஓட்றவங்க யாராவது இருந்தா அவங்கள தான் கூட்டிட்டு வரணும்
“பேய், பிசாசா? என்ன சொல்றீங்க? இந்த காலத்துல அதெல்லாமா நம்புறீங்க?
“எனக்கு மனசுக்கு பட்டத சொன்னேன் ராஜா. ஒழுங்கா இருந்தவங்க இப்படி திடுதிப்புனு மாறினா எனக்கு அப்படி தான் சந்தேகம் வருது. மோர் ஓவர் நீங்க இருக்க இடமும் அப்படி. அங்கொண்ணும் இங்கொண்ணுமா வீடுங்க இருக்கு. ஆள் நடமாட்டம் கம்மியான பகுதி வேற.”
“சரி நீங்க சொல்லுற மாறி இருந்தாலுமே இப்போ இதெல்லாம் ஓட்டுர பூசாரிக்கு நா எங்கனு போவேன்?
“எனக்கும் அது தான் தெரியல. முயற்சி பண்ணி பார்ப்போம். எனக்கு தெரிஞ்ச கோவில் பூசாரி ஒருத்தர் இருக்காரு. அவர்கிட்ட கேட்டு பாக்குறேன் பேய் ஓட்டுர ஆள் யாராவது தெரியுமானு

                                                                        6
“ஷி இஸ் டோட்டலி அன்ரெஸ்பான்ஸிவ் மிஸ்டர் ராஜா. கொஞ்சம் காம்ப்லிகேட்டடா தான் இருக்காங்க.
“கொஞ்சம் தெளிவா சொல்லுங்க டாக்டர்
“முதல்ல இப்படி திடுதிப்புனு யாரும் ஒரு அன்ரெஸ்பான்ஸிவ் ஸ்டேஜ்க்கு போக மாட்டாங்க. ஒரு ஆக்ஸிடன்ட், தலையில பயங்கரமான அடி இந்த மாறி எல்லாம் எதாவது நடக்கும் போது கோமாக்கு போக வாய்ப்பிருக்கு. பட் லதா இருக்குற மாறி கிடையாது, கோமால இருக்கவங்களோட உடம்புல கட்டளைக்கு அடிபணியற செயல்பாடு எல்லாமே செயலிழந்து போய்டும். இன்வால்யூன்டரியா உடம்புல நடக்குற செயல்பாடுகள், உதாரணமா மூச்சு விடறது, இதயம் துடிக்கிறது, சிறுநீர் சேர்ந்து தானா வெளிய கழியிறது இந்த மாறி செயல்பாடுகள் மட்டும் தான் நடக்கும். லதா கேஸ்ல பார்த்தீங்கனா அவங்களோட உடல் முழுவதுமா செயல் பட்டுட்டு தான் இருக்கு. அவங்க மூளையுமே நல்லா செயல்படுது. அவங்க இருக்க ரூம் உள்ள யாராவது நுழஞ்சா அவங்களால அத உணர முடியுது. உள்ள நுழஞ்ச ஆள அதுகப்புறம் வெறிச்சி பார்க்க ஆரம்பிக்கிறாங்க. ஆனா ஏதோ ஒரு சிந்தனை அவங்க முழு எண்ணத்தையும் அடைச்சிட்டு இருக்கு. அவங்கள தெளிவா பேசவிடாம தவிர்குது. அது தான் என்னனு நாம இப்போ கண்டு புடிக்கனும்.
“என்னவா இருக்கும்னு உங்களுக்கு எதாவது ஐடியா இருக்கா?
“மைட் பி எனி திங்க். சமீபத்துல அவங்களுக்கு ஏற்பட்டிருக்கிற ஸ்ட்றெஸ், இல்ல ரொம்ப துக்கமான எதாவது சம்பவம், ஏன் சில சமயம் ரொம்ப சந்தோஷமான விஷயம் கூட காரணமா இருக்கலாம், வீட்டுல, குடும்பத்துல எதாவது பிரச்சன இப்படி எதுவா வேணா இருக்கலாம்
“எனக்கு தெரிஞ்சி இப்போ நீங்க சொன்ன பிரச்சனை மாறி எதுவும் இல்ல டாக்டர். வி வேர் ஹாப்பி
“உங்களுக்கு பிரச்சனை தெரியாம இருக்க கூட வாய்ப்பிருக்கு. இல்லனா அவங்களுக்கு பெரிய பிரச்சனையா இருக்க எதாவது ஒரு விஷயத்த நீங்க ரொம்ப புடிச்சி செய்றதா இருக்கலாம். அவங்க உங்ககிட்ட சொல்லாம விட்டு மனசுக்குள்ளயே வெச்சிருந்திருக்கலாம்.
“ஹ்ம்ம்..
“ஹவ் வாஸ் யுவர் செக்ஸ் லைஃப்? உங்களால அவங்களோட தேவையெல்லாம் பூர்த்தி பண்ண முடிஞ்சிதா?”
“வி வேர் ஹாவிங்க் எ பியூட்டிஃபுல் லைஃப். அப்பப்ப சின்ன சின்ன சண்ட வரும் மத்தபடி ரெண்டு பேரும் எல்லா விஷயத்திலயும் திருப்தியாவும் சந்தோஷமாவும் தான் இருந்தோம்.
“இது சமீபத்திய பிரச்சனையா இல்லாம கூட இருக்கலாம். சின்ன வயசு பாதிப்பாவும் இருக்கலாம். அப்படி இருக்க பட்சத்துல அவங்க மூலமா தான் என்னனு கண்டு புடிக்கனும். எதுக்கும் நான் உங்களுக்கு சின்ன டெஸ்ட் ஒண்ணு வெக்கிறேன். சாதாரண டெஸ்ட் தான். கொஞ்சம் அதிகபடியான கேள்விகள் இருக்கும். எல்லாத்துக்கும்  நிதானமா யோசிச்சு உண்மையா பதில் சொல்லுங்க. அதை அனலைஸ் பண்ணி பார்த்து இது சமீபத்துல உங்க ரெண்டு பேருக்கு நடுவுலயோ, இல்ல உங்க குடும்பத்துகுள்ளயோ எதாவது பிரச்சனையானு கண்டு புடிக்க முயற்சி பண்ணலாம்.
“ஷ்யூர் டாக்டர். ஐ வில் டு வாட் ஐ கேன்.
“குட். அப்படி எதுவும் புலப்படலேனா உங்க மனைவிய அரை மயக்கத்தில கிடத்தி அவங்கள பேச வெக்க முடியுதானு பார்க்கனும்
                                                ***
இந்த பண்ணை முதலாளியோட பையன் நானு
அதுக்கு?
எங்கிட்ட ஒழுங்கா நடந்துகலனா என் அப்பாகிட்ட சொல்லி உன் சித்தப்பாவ காலி பண்ண வெச்சிடுவேன்.
நீ கவல படாதக்கா. அப்பா இவன் பேச்சயே கேட்க மாட்டாரு. அப்படியே கேட்டாலும் அவன் பண்ணை முதலாளியோட பையன்னா நான் அவரோட பொண்ணு. நான் அப்பாகிட்ட அவங்கள காலி பண்ண வேண்டாம்னு சொல்லிட்றேன்
ஏய் லூசு, நீ எனக்கு தங்கச்சியா? அவளுக்கு தங்கச்சியா?
நீ எனக்கு கூட பிறந்த அண்ணன்னா, இவங்க எனக்கு கூட பிறக்காத அக்கா மாறி
ஹும்ம். அவ பக்கம் சாஞ்சுட்டேல. இரு இரு அவ இன்னும் கொஞ்ச நாள்ல ஊருக்கு போயிருவா. அதுக்கப்புறம் உன்ன பார்த்துக்குறேன். கோணப்புளியங்கா பறிச்சி தர சொல்லுவலே அப்போ இருக்கு உனக்கு.
அட இப்போ என்ன சொல்லிட்டேனு இம்புட்டு கோவிச்சுகிற நீ? அக்கா மாறினு சொன்னது தப்பா?
ஆமா தப்புதான்.
அட போண்ணா. ரொம்ப தான் பண்ற. அக்கா நீ வர்றியா? காட்டுகுள்ள போய் கோணப்புளியங்கா பறிச்சிட்டு வரலாம்? உனக்கு எட்டும்னு தான் நெனைக்கிறேன். நீயும் கிட்டதட்ட பாபு அண்ணா உயரம் தான இருக்க.
காட்டுகுள்ளயா? ஆனா சித்தி அங்க எல்லாம் போக வேண்டாம்னு சொல்லிருக்காங்களே. நரி எல்லாம் சுத்திகிட்டு இருக்குமாமே.
அட அதெல்லாம் ரொம்ப உள்ள போனாதான் அக்கா. நம்ம பக்கதுல வரைக்கும் தான் போவோம். அங்கேயே பறிச்சிட்டு வரலாம். ரெண்டு மூனு மாமரமும் இருக்கு. அண்ணா வந்தா எல்லாம் பறிச்சி தருவான். ஆனா ரொம்ப பிகு பண்றானே. நீயும் வாயேண்ணா.
நான் வரல. நீங்க போயிட்டு வாங்க.
பிகு பண்ணாதண்ணா
சரி வரேன். ஆனா ஒரு ஒப்பந்தம்.
என்ன அண்ணா?
உனக்கு அப்பா வங்கி கொடுத்த ரெண்டு தண்ணி துப்பாக்கியில ஒண்ணு எனக்கு தரணும். அப்போ தான் இனிமே உனக்கு காட்டுகுள்ள இருக்கிறதெல்லாம் எடுத்து தருவேன். இல்லனா மாட்டேன்.
அட சரின்னு சொல்லு அதான் ரெண்டு துப்பாக்கி வெச்சிருக்கியாமில்ல.
சரிண்ணா. ஒண்ணு எடுத்துக்கோ. ஆனா பழசு தான் உனக்கு தருவேன்.
எனக்கு அது போதும். முதல்ல எனக்கு சத்தியம் பண்ணிகொடு தருவன்னு.
சத்தியம்மா தரேண்ணா.
அப்படி வாங்க ரெண்டு பேரும் என் வழிக்கு. வாங்க போலாம்.

                                                                        7
“ஹிப்னாடிசம் மாதிரி பண்ண உத்தேசிச்சிருக்கீங்களா டாக்டர்?
“இது ஹிப்னாடிசம் மாறி இல்ல. ஹிப்னாடிசம் பண்ணனும்னா பேஷண்ட் ஷுட் பி வெரி கோவாப்ரெட்டிவ். லதா இருக்க நிலைமையில அது எல்லாம் சாத்தியப்படாது. இது ஒரு மயக்க நிலையில உட்படுத்தி அவங்கள உளற வெக்க முயற்சி பண்ண போறோம். கிட்டதட்ட குடிச்சிட்டு போதையில சிலர் உளற ஆரம்பிப்பாங்களே அந்த மாறி தான்.
                                                ***
“இந்த குச்சி எடுத்துக்கலாமா இல்ல இத எடுத்துக்கலாமா அக்கா?
இது சரியா இருக்கும்னு நினைக்கிறேன். மாம்பழம் ஓரளவுக்கு கிட்டத்துல தான இருக்கு.
குச்சி கூலையா போச்சுன்னா அண்ணா என்ன தான் திட்டுவான். நீட்டமா இருக்கிறதையே எடுத்துகிட்டு போகலாமே?
சரி, உன்னிஷ்டம். அப்புறம் இங்க இருக்க பழத்த அடிச்சி பறிக்க இவளோ நீட்டு குச்சியான்னு உன் அண்ணன் திட்டாம இருந்தா சரி
                                                ***
“பிரச்சனை என்னனு ஓரளவுக்கு புரிய ஆரம்பிச்சிருக்கு. இப்போ ரொம்ப மயக்கமா இருக்காங்க இன்னிக்கு இது போதும். ஒரு ரெண்டு நாள்ல மறுபடி ஒரு முயற்சி பண்ணி பார்க்கலாம்.
                                                ***
“எப்படியாவது அத பறிச்சித்தாண்ணா.
அட லூசு எப்படி பறிக்கிறது? அந்த மரத்துல ஏற வாட்டமா இருக்க வழில தான் ஒரே புழுவா நெண்டிகிட்டு இருக்கே. கண்டிப்பா எதோ ஒண்ணு செத்து கெடக்கனும் அந்த கிளை மேல. உனக்காக தான் கல் எடுத்து அடிச்சி பார்த்தேன். ஒரு தடவ கூட பழத்து மேல அடி படலை
அப்போ எடுக்கவே முடியாதாண்ணா?
ஒண்ணு பண்ணுங்க நீயும் லதாவும் போய் வீட்ல இருந்து கிளை ஒடிக்கிற கழி எடுத்துட்டு வாங்க. அதை வெச்சு வேணா அடிச்சி எடுக்க பார்க்கலாம். முடியும்னு தான் நினைக்கிறேன்.
நீ மட்டும் இங்க இருந்து என்ன பண்ண போற?
நான் கல் எடுத்து அடிச்சி பாக்குறேன். நீங்க வர்றதுகுள்ள் அதிர்ஷ்டமிருந்தா அடிபட்டு பழம் விழுந்துடலாம்.
                                                ***
“தெளிவா என்னனு சொல்லுங்களேன் டாக்டர்
“கொஞ்சம் பொறுத்துக்கோங்க ராஜா. இன்னொரு முறை அவங்களை விசாரிச்சிட்டு தெளிவா சொல்றேன். அதுக்கு முன்னாடி உங்க மனைவியோட சின்ன வயசு சம்பவங்கள பத்தி கொஞ்சம் எனக்கு தெரியனும். அவங்க அப்பா இல்ல அம்மா யாரையாவது இங்க வர வெக்க முடியுமா?
“நான் அவங்களுக்கெல்லாம் இந்த பிரச்சனைய பத்தி எதுவுமே சொல்லல டாக்டர் இதுவரைக்கும்.
“முதல்ல அவங்க கிட்ட சொல்லி இங்க கூட்டிட்டு வாங்க. நான் அவங்க கிட்ட கொஞ்சம் பேசனும்
“சரி டாக்டர்
“இன்னொரு விஷயம். இப்போ நீங்க இருக்க வீடு உங்க சொந்த வீடா?
“ஆமா
“எத்தனை வருஷமா அங்க குடியிருக்கீங்க?
                                                ***
“மரத்திற்கு பக்கத்தில் பாபு அண்ணா படுத்துகிடந்தான். இருவரும் அருகே சென்றோம். அவனது வாய் கோணலாக ஒரு பக்கம் இழுத்துகொண்டிருந்தது. படுத்திருந்த.........

                                    8
“காத்து கருப்புதான் அடிச்சிருக்கு. அவன் இருக்கிற நிலைமைய பார்த்தாலே நல்லா தெரியுதே. ஏதோ பேய் தான் புடிச்சிருக்கு.
உளறாதீங்க. பேயாவது மண்ணாவது. எதையோ பார்த்து ரொம்ப பயந்து போயிருக்கான். பயத்துல ஏற்பட்ட அதிர்ச்சியில பேச்சு நின்னு போயிருக்கு. ஊர் வைத்தியர கூப்பிடுங்க இல்லனா வாங்க பெரியாஸ்பித்திரிக்கு தூக்கிட்டு போவோம்.
சார் உங்களுக்கு எதும் தெரியாது. செத்த சும்மா இருங்க. காட்டுகுள்ள ஒழுங்கா போன பையன் திடுதிப்புனு இப்படி ஆயிருக்கான் நீங்க என்னடான்னா ஆஸ்பித்திரி அது இதுங்கிறீங்க
என்னவோ போங்க. என் மனசுல பட்டத சொன்னேன். கூட என் அண்ணன் பொண்ணும், உங்க வீட்டு பொண்ணும் தான் போனாங்க அவங்கள உங்க பேய் ஏன் எதுவும் பண்ணாம விட்டுடுச்சு?
கிண்டல் பண்றத நிறுத்திட்டு முதல்ல ஆக வேண்டியத பார்க்கலாம். போய் பூசாரிய கூட்டிட்டு வாங்க
                                                ***
“ஹேமலதா வீட்ல தனியா இருக்க ரொம்ப பயப்படுவாங்களா? தனியா இருட்டு அறைகுள்ள போறதுக்கு, தனியா மொட்டமாடிக்கு ராத்திரியில போறதுக்கு இப்படியெல்லாம்
“ரொம்பவே பயப்படுவா டாக்டர்
“நான் சின்ன வயசுன்னு கேக்கல. சின்ன குழந்தைங்க பொதுவா இதுமாறி விஷயத்துக்கு எல்லாம் பயப்பட தான் செய்வாங்க. கொஞ்சம் வளர்ந்துட்ட பிறகு, வயசுக்கு வந்துட்ட பிறகும் இதே மாறி இருந்தாங்களா? சாதாரணமா பக்கத்துல இருட்டா இருக்க அறைக்கு போறதுக்கு எல்லாம் பயந்துகிட்டு?
“ஆமா. கல்யாணம் ஆகுற வரைக்குமே அந்த மாறி பயம் அவளுக்கு இருந்துச்சு
“அதை நீங்க கண்டுக்காம விட்டுடீங்களா?
“அது ரொம்ப பெரிய விஷயமா எங்களுக்கு படல டாக்டர். சாதாரண ஒரு விஷயமாதான் பட்டுச்சு. கிண்டல் தான் பண்ணுவோம் அவள.
“ஹும்ம். உங்களுக்கு இதுபத்தி தெரியுமா ராஜா?
“இல்ல டாக்டர். அவ நீங்க இப்போ சொன்ன மாறி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் பயந்து நான் பார்த்ததில்ல
                                                ***
“ஏம்மா? ரெண்டு பேரும் இப்படி மூச்சிரைக்க ஓடி வர்றீங்க? பாபு எங்க? அவன கடைக்கு அனுப்பனும்னு தேடிகிட்டு இருக்கேன். பயல் எங்க போனானு தெரியல. கோழி தீவணத்த இன்னிக்கு வேண்டாம் நாளைக்கு அனுப்ப சொல்லனும்.
அப்பா, பாபு அண்ணா....
                                                ***
என் கணிப்பு சரின்னா உங்க மனைவி தனக்கு பேய் புடிச்சிருக்கிறதா ஆணித்தரமா நம்பிகிட்டு இருக்காங்க.
“பேய் புடிச்சிட்டு இருக்கிறதா கற்பணை பண்ணிகிட்டு இருக்காளா? எதை வெச்சு இப்படி சொல்றீங்க டாக்டர்?
“நான் அவங்கக்கூட பேசினது, அவங்களோட அரைகுறை உளறல், உங்க வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்குனு நீங்க சொன்னது, அவங்க அப்பா அம்மாகிட்ட இருந்து நான் தெரிஞ்சிகிட்ட உங்க மனைவியோட சின்ன வயசு பழக்கங்கள். இது எல்லாமே இந்த ஒரு விடைய தான் எனக்கு தந்திருக்கு.
“ஆனா அப்படியே அவ நினைச்சுகிட்டு இருந்தாலும் பேய் புடிச்ச மாறி அவ நடந்துக்களையே இதுவரைக்கும். ரொம்ப அமைதியா தான படுத்து கிடக்கிறா.
“அதுக்கு ரெண்டு பதில் இருக்கு. ஒண்ணு உங்க மனைவி தன்னோட மனசுக்கூடயே இன்னமும் போராடிகிட்டு இருக்காங்க அல்லது பேய் பிடிச்சா இப்படி தான் இருக்கனும்னு அவங்க பார்த்த, படிச்ச சம்பவங்கள் எதாவது அவங்களோட மனசுல பதிவாகியிருக்கலாம்.
                                                ***
“பாபு அண்ணாவை பார்க்கவே பயமாக இருந்தது. வாயில் எச்சில் துரையாக ததும்பிகொண்டு இருக்க ஏசு நாதரை சிலுவையில் அடித்த மாறி படுத்து எங்கோ வெறித்து பார்த்துகொண்டிருந்தான்.
யார் எது கேட்ட போதும் அவன் பேசவே இல்லை. ஒரு மூலையை பார்த்துகொண்டிருந்தான்.
பூசாரிக்கு சொல்லியனுப்பி இருந்தார்கள். அவர் வருவதற்குள் இவனை பேச வைக்க முயற்சிகள் சித்தமாக நடந்துகொண்டிருந்தன. நிறைய அழுகை. கொஞ்சம் கூச்சல். போதாக்குறைக்கு நாய்கள் வேறு தங்கள் பங்கிற்கு குரைக்க ஆரம்பித்தன.
பாபுவின் அம்மா எங்கள் இருவரையும் நோக்கி வந்தாள். அவளது மகளை போட்டு அடித்தாள். என்னை வசைபாட ஆரம்பித்தாள். என் சித்திக்கு கோபம் வந்துவிட்டது. நாய்களை மிரட்ட வைத்திருந்த பிரம்பை எடுத்துகொண்டு என்னை நோக்கி வந்தாள்.
யாருமில்லாத சமையத்துல காட்டுபக்கம் போவாதனு சொன்னேன். கேட்டியா?? சுளீர் சுளீரென்று சித்தி முழங்காலுக்கு கீழே வைத்த பிரம்படி எனக்கு நீண்ட..........



                                    9
“ஒரே பயமாக இருக்கிறது. சித்தி வீடு சுத்தமாக பிடிக்கவில்லை. அதுவும் நேற்றிரவு நடந்த சம்பவத்திற்கு பிறகு சித்தியையோ, பாட்டியையோ விட்டு சிறிது நேரம் அகன்று இருக்கவே நடுக்கம் எடுக்கிறது. பாபு அண்ணாவின் முகமும் அவன் என்னை நோக்கி கத்திய சொற்களும் என் காதுகளில் எதிரொலித்துகொண்டே இருக்கின்றது.
                                                ***
“தூக்கம் வரவில்லை. பயம் தூக்கத்தை அண்ட விடாமல் தடுத்தது கண்ணை மூடி தூங்க முயற்சித்த போதெல்லாம் பாபு அண்ணாவின் வெறித்த முகம் மனதில் தோன்றி அச்சுறுத்தியது. அன்று இரவு நெடு நேரம் முழித்திருந்தேன்.
வீல் என்ற சத்தம். தூங்கிவிட்டேன் போல. முழித்த அடுத்த சில நொடிகளிலேயே மூளை ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து எச்சரிக்கை அடைந்தது.
கத்தியது சித்தி தான். எதிரே அரிசி மூட்டை மேலே தோப்புகரணம் போடும் வாக்கில் உட்கார்ந்திருந்தான் பாபு அண்ணா. எங்கள் இருவரையும் அவன் கண்கள் வெறித்தன.
                                                ***
“சித்தப்பாவும், பாபுவின் அப்பாவும் சேர்ந்து பாபண்ணாவை வலுகட்டாயமாக வெளியே இழுத்து சென்றனர். அவர்களை உதறிவிட்டு என்னை நோக்கி பாய முயற்சித்து கொண்டிருந்தான். இருவரின் சக்திக்கு நடுவே மெலிந்த அவனது உடலால் ஈடுகொடுக்க முடியவில்லை.
உன் மேலதான் பாயனும். நீ தான் வேணும். உங்கிட்ட நான் வருவேன். கண்டிப்பா வருவேன். எனக்கு இவன் வேண்டாம்.
அவன் என்னை பார்த்து கத்த கத்த வெளியே இழுத்து சென்றுவிட்டார்கள்.
என்னதான் ஆச்சு? பாபு எப்படி இங்க வந்தான் என்றாள் சித்தி, பாபுவின் அம்மாவிடம்.
நான் எதிர்பார்க்கவே இல்லமா. சாப்பாடு குடுக்க போனேன். திடீர்னு விரக்தியோட எழுந்து சாப்பாடு தட்ட புடுங்கி விசிறியடிச்சிட்டு என்னையும் கீழ தள்ளிட்டு ஓடிட்டான் வெளிய.
                                                ***
“ஒரே பயமாக இருக்கிறது. சித்தி வீடு சுத்தமாக பிடிக்கவில்லை. அதுவும் நேற்றிரவு நடந்த சம்பவத்திற்கு பிறகு........
                                10
“இது தான் நம்ம வாங்கி இருக்க ப்ளாட்
“இந்த இடமா? இது..?
“மேடம் ரொம்ப அமைதியா இருக்கிறத பார்த்தா அவங்களுக்கு புடிக்கல போலருக்கு சார்
“இந்த இடத்துலையா இவரு ப்ளாட் வாங்கனும்? இந்த இடத்துக்கு திரும்ப வரவே கூடாதுன்னு நினைச்சனே
“அவ கெடக்கறா. இன்னும் சுத்தி வீடுலாம் வரல இல்ல, அதனால கொஞ்சம் யோசிப்பா. நீயே சொல்லு அவகிட்ட
“இங்க தான பாபு அண்ணா வீடு, கோழிப்பண்ணை எல்லாமே இருந்துச்சு?
என்னை சேர்த்துகாம விட்டுடியே லதா
யாரது?
“அந்த பயம் உங்களுக்கு இருந்தா விட்டுதள்ளிடுங்க மேடம். இந்த இடம் எல்லாமே சேல்ஸ் ஆயிடுச்சு. உங்களுக்கு கெடச்சதே லக் தான். கொஞ்ச நாள்ல சுத்தி நிறைய கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆரம்பிச்சிடுவாங்க. ஒரு காலத்துல ஆள் நடமாட்டமான பகுதி.....
“நீ எதிர்பார்த்த பாபு அண்ணா, கோழி பண்ணை எல்லாம் போயாச்சி. நான் மட்டும் தான் உனக்காக இன்னும் இங்கயே இருக்கேன்.
நான்னா? யாரு?
இன்னுமா தெரியல? உன்ன விடவே மாட்டேன்னு அப்போவே சொல்லிட்டு போனேன் மறந்துட்டியா?
“பஸ் ஸ்டாண்ட் மேட்டர விட்டுடியே
“செ.. செ..
என்ன உன் மூளை குழம்புதோன்னு சந்தேகமா இருக்கா? இல்லவே இல்லை. நான் சொன்ன மாறியே உங்கிட்ட வந்துட்டேன். இனி உன் கூட தான் இருக்க போறேன்
“அது ஒண்ணுமில்ல மேடம் இப்போ ஊர்ல பேச்சு நடந்துட்டு இருக்கு. இன்னும் ஒரு அஞ்சு....

                                                11
“நான் சொல்லல நீ என்ன பண்ணாலும் இங்க குடி வர்றத உன்னால தடுக்க முடியாதுன்னு. உன் கணவன் உன்ன எங்கிட்ட தாரவார்த்து கொடுத்துட்டான்
கிடையவே கிடையாது. நீ முதல்ல போய் தொல.
ரெண்டு வருஷமா கூடவே இருக்கேன். போக சொல்றியே லதா.
“லதா? என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்துற? லதா? லதா?
                                                ***
“திரும்பவும் சொல்றேன், நீ என்ன பண்ணாலும் என்ன விட்டு விலக முடியாது. நீ அவளோ தூரம் கேட்டும் உன் கணவன் உன்ன மதிச்சானா. இங்க வீடு கட்டி உன்ன கூட்டிட்டு வந்துட்டான் பாரு. உன்ன எங்கிட்ட தாரவார்த்து கொடுத்துட்டான்.
“லதா?? என்னதான் ஆச்சு?? இது ரெண்டாவது தடவ. கொஞ்சம் பொறுமையாதான் கத்தேன்.
                                                ***
“இப்படி உன்ன எங்கிட்ட தாரவார்த்து கொடுத்துட்ட உன் புருஷன இன்னுமா நம்புற? நான் ஒண்ணு சொல்றேன். கேக்குறியா?
என்ன?
உன் புருஷன கொன்னுடு.
“லதா, எழுந்துரு... எழுந்துரு.. எதுக்கு இப்படி கத்துற நடு ராத்திரியில?? பாப்பா முழிச்சிக்க போறா.. செத்த கம்முனு இரு...
“........
“........
“........
“வர வர உனக்கு என்னமோ ஆயிட்டிருக்கு. நேத்து நைட்டும் லூசு மாறி கத்த ஆரம்பிசிட்ட. கடந்த ரெண்டு மாசத்துல இது மூணாவது தடவ. தூக்கத்துல சாதாரணமா....
                                               
                                                12
உன் புருஷனுக்கு பூரி ரொம்ப புடிக்கும் போல?
ஆமா. ஏன் கேக்குற?
அவனுக்கு இப்போ பூரி சமைச்சு குடேன். சாப்பிடட்டும்.
இப்போவா? இது ராத்திரி நேரமாச்சே?
அதனால என்ன? இந்த நேரத்துலயும் நீ அவருக்காக செஞ்சு கொடுக்குறனு ரொம்ப சந்தோஷப்படுவாரு. செஞ்சு போடு.
நெஜமாவா? ஆனா நீ ஏன் இப்போ திடீருன்னு மனசு மாறிட்ட? அவர் மேல உனக்கு பாசம்?
ஆமா அன்னிக்கு அவர நம்மகிட்ட இருந்து விலக்க சொல்லி சொன்னப்ப ரொம்ப கோவப்பட்டுட்ட. அதான் அவர் மேல இருக்க வெறுப்ப குறைச்சிகிட்டேன். சரி சொல்றத கேளு. போய் பூரி செய். உன் புருஷன சந்தோஷபடுத்து. போ..
ஓஹ்!! சரி நான் போய் பூரி செய்யறேன்.
மடேர்
மடேர்
மடேர்
“என்னடா இது சத்தம்? நிம்மதியா தூங்க கூட......
                                                ***
என்ன உங்கிட்ட இருந்து பிரிக்கவே முடியாது. யாரும் பிரிக்கவும் கூடாது. நம்மள பிரிக்கக்கூடிய ஒரே சக்தி உன் கணவன் கிட்ட தான் இருக்கு. அதனால தான் சொல்றேன் அவன கொன்னுடலாம்னு.
அவர எதுக்கு கொல்லனும்? அவரு இல்லாம நானா? கஷ்டமா இருக்கு.
நீ ஏன் அவனுக்கு இவளோ பச்சாபப்பட்ற? அவன் உன்ன ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டேன்றான். அன்னைக்கு அவளோ நடு ராத்திரியில எழுந்து அவனுக்காக ஆசை ஆசையா பூரி செய்ய ஆரம்பிச்சியே அவன் வந்து பார்த்துட்டு ஒரு வார்த்த உன்ன பாராட்டினானா? நீயே சொல்லு. எருமைன்னு திட்டு வாங்கினதுதான் மிச்சம்.
இருந்தாலும் அவர போய்...
நீ திருந்தவே மாட்ட. இந்த வீட்டுக்கு வந்து ஆறு மாசம் ஆகப்போகுது. இங்க வரகூடாதுன்னு நீ சொன்னத தான் அவன் கேக்கல. வந்து இத்தனை நாள்ல ஒருதடவையாவது உனக்கு துணையா இருந்திருப்பானா? நீ எவ்வளவு பயந்து கிடந்த? அவன உன் பக்கம் இழுக்க நான் எப்படியெல்லாம் உனக்கு யோசனை சொன்னேன்? நீ ஒவ்வொரு தடவ அதையெல்லாம் செய்யும் போதும் அவன் உன்ன கொஞ்சமாவது கண்டுகிட்டானா?
இல்ல கண்டுக்கவே இல்ல. என்ன மதிக்கிறதில்ல.
ஆனா நான் அப்படியில்ல. உன் கூடவே இருக்கனும்னு நினைக்கிறேன். காலம் முழுக்க நான் இருக்கும் போது அவன் எதுக்கு? கொன்னுடு. சமையலறைக்கு போய் கத்திய எடுத்துகோ வந்ததும் ஒரே குத்து நெஞ்சுல. இதயத்துல பாயனும்.
ஆமா. இதயத்துல...
                                                ***
“அந்த போட்டோ எனக்கு புடிக்கல.
ஏன் அந்த போட்டோக்கு என்ன? நல்லாதானே இருக்கு?
அது உன் கல்யாண போட்டோ. உன் புருஷன் உனக்கு சொந்தமான தருணம். என் இடத்த அவன் புடிச்சிகிட்ட தருணம்.
ஏன் தான் உனக்கு அவர்மேல இவளோ வெறுப்போ?
பின்ன? உன்ன மாறி மாத்தி மாத்தி பேசுறவனு நினைச்சுட்டியா என்ன? கொல்றேன்னு ஒத்துகிட்டு இன்னமும் அவனுக்கு பாதபூஜை பண்ணிகிட்டு இருக்க?
அவர போயி...
திரும்ப ஆரம்பிச்சிட்டியா? உன்ன எல்லாம் திருத்தவே முடியாது. இன்னைக்கு ஒரு முடிவு கட்டுறேன் இதுக்கு. போ முதல்ல போய் அந்த படத்த புடுங்கி எறி வெளிய.
எதுக்கு எறியனும்? முடியாது?
எறி வெளில. போ. என்னால அத பார்க்க முடியல. அவன் எல்லாம் உனக்கு புருஷன்ற தகுதியே இல்லாதவன். அவனுக்கு வக்காளத்து வாங்காத. முதல்ல அத சுவத்துல இருந்து புடுங்கு.
.....
ஆமா அப்படி தான். இப்போ எறி. விசிறி எறி.
முடியாது. நான் பண்ண மாட்டேன்.
நீ பண்ணிதான் ஆகனும். அவன் உனக்கு வேண்டாம். எறி ... எறி ... எறீ.........
                                                13
“உங்கிட்ட நான் சொன்னப்பலாம் நீ நம்பல. இப்போவாது நம்புறியா? உன் புருஷன் நம்ம ரெண்டு பேரையும் பிரிக்க முயற்சி பண்றான்னு? உனக்கு ஏதோ ஒத்துக்காத மருந்து குடுக்குறாங்க. இதுவரைக்கும் ரெண்டு தடவ என்னால உன்ன பார்க்க முடியல, உங்கிட்ட பேச முடியல. அந்த மருந்து மூலமா உன்னையும் என்னையும் பிரிக்க பாக்குறாங்க. இனிமேலாவது நான் சொல்றத நம்பு. நான் மட்டும் தான் உங்கிட்ட உண்மையா இருக்கேன், பாசமா இருக்கேன். என்ன உங்கிட்ட இருந்து பிரிச்சிட்டா அப்புறம் திரும்ப உன் புருஷங்கிட்டேயே போக வேண்டி வரும். அவனோட வெறுப்ப தாங்கி தாங்கி நீ அழிஞ்சு போயிடுவ
இப்போ என்ன தான் பண்ணனும் நான்?
ஒரே வழிதான் இருக்கு. நாம கடைசி வரை ஒண்ணா இருக்கனும்னா உன் புருஷன் சாகனும். அவன கொன்னுடு. கொன்னுட்டா எந்த பிரச்சனையும் இல்லாம நாம கடைசி வரைக்கும் ஒண்ணா, நிம்மதியா இருக்கலாம்.
ஆனா..
ஆனான்னு இழுக்காத. சொல்றத கேளு. பாரு உன் கால் பக்கதுல தான் சாஞ்சி படுத்து கிடக்கிறான். மெதுவா எழுந்துரு. அவன கொன்னுடு.
பயமா இருக்கே..
எதுக்கு பயப்பட்ற? நான் எப்பவும் உன் கூட தான் இருக்க போறேன். முதல்ல எழுந்துரு.
எப்படி பண்றது?
நான் சொல்றேன். நீ முதல்ல பொறுமையா எழுந்துரு. பயப்படாத. அவன் பண்ண கொடுமையெல்லாம் நெனைச்சிக்கோ. உன் அன்ப அவன் புரிஞ்சிக்கல, உன் காதல அவன் புரிஞ்சிக்கல. நீ அவனுக்காக ஆசை ஆசையா பண்ணெதெல்லாம் அவன் புரிஞ்சிக்கல.
......
நீ பூரி சுட்டப்ப அவன் உன்ன மதிக்கல. உன் ஆசைய புரிஞ்சிக்கல. அந்த போட்டோவ நான் அவளோ தூரம் தூக்கி எறிய சொல்லியும் நீ எறியல, அப்ப கூட அவன் உன்ன புரிஞ்சிக்கல உன்ன இங்க ஆஸ்பித்திரியில சேர்த்து கொடுமைதான் பண்றான். தயவு செஞ்சு இப்போவாது யோசிச்சு பாரு.
ஆமா, பூரி சாப்பிடல அவரு.
ஏன் சாப்பிடல?
என்ன மதிக்கல. என் அன்பை புரிஞ்சிக்கல.
ஆமா. அதோ அந்த பாட்டில எடு.
என்ன மதிக்கவே இல்ல.
சுத்தமா மதிக்கிறதே இல்ல. அந்த பாட்டில எடு.
என்ன புரிஞ்சிக்கல. என் மேல பாசமே இல்ல.
பாட்டில கைல எடு. சத்தம் போடாம அவன் கிட்ட போ. எடு பாட்டில.
பாசமே இல்ல. உன்ன பிரிக்கிறாரு. நீ வேணும்.
நான் உன் கூடவே தான் இருப்பேன். நம்மள பிரிக்கவே முடியாது. அது உன் கணவனா இருந்தாலும் சரி. அத இப்போவே உன் புருஷனுக்கு நிரூபிப்போம். போ. அவன் பக்கத்துல போ.
நம்மள பிரிக்க கூடாது. விடமாட்டேன். ஏன் பிரியனும்? கூடாது. நிரூபிக்கலாம்.
ஆமா. நிரூபிக்கலாம். பாட்டிலோட குப்பிய கழட்டு.
குப்பிய கழட்டனுமா? எதுக்கு கழட்டனும்?
உன் கணவன் மேல அத ஊத்தனும். பேசாத, முதல்ல குப்பிய கழட்டு.
இத அவன் மேல ஊத்தினா?
ஊத்தினா அப்புறம் நம்ம ரெண்டு பேரையுமே யாராலையும் பிரிக்க முடியாது. அதனால அவன் முகத்துல ஊத்தனும். கீழ சிந்தாம எல்லாத்தையுமே அவன் முகத்துல ஊத்தனும். ஊத்து. குப்பிய கழட்டு. ஊத்து.
ஆமா ஊத்தனும். ஊத்திட்டா பிரிக்க முடியாது. குப்பிய கழட்டிட்டு ஊத்தனும். கீழ சிந்தாம ஊத்தனும். குப்பிய கழட்டிட்டு ஊத்தனும். இதோ ஊத்துறேன்......
“ஆஆஆஆஆஆஆ.............
டமார்.
“யாரு? என்ன ஆச்சு? யாரு கத்தினது? ஓ மை காட். டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
                                                ***
“கடவுளே, ஏன் இப்படி?
“டாக்டர், எதாவது?
“தேர் இஸ் நத்திங் வீ கேன் டூ. ஹீ இஸ் டெட்.  போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணுங்க. அப்படியே வார்டன் ரெண்டு பேர வர சொல்லுங்க. இவங்கள புடுச்சி கட்டிபோடனும்
“சரி டாக்டர்
                                                ***
“மிஸஸ் லதா? மிஸஸ் லதா? இங்க பாருங்க. நான் பேசுறத உங்களால புரிஞ்சிக்க முடியுதா? என் விரலையே பாருங்க. நான் விரல நகர்த்த நகர்த்த உங்க கண்ணையும் நகர்த்துங்க. குட். பேச முடியுதா உங்களால? நீங்க இப்போ என்ன பண்ணியிருக்கீங்கன்னு உங்களால புரிஞ்சிக்க முடியுதா? மிஸஸ் லதா இங்க பாருங்க, கீழ குனியாதீங்க. நீங்க உங்க ஹஸ்பண்ட் முகத்துல ஆசிட் ஊத்தி கூழாக்கியிருக்கீங்க. நான் சொல்றத உங்களால புரிஞ்சிக்க முடியுதா? யுவர் ஹஸ்பண்ட் இஸ் டெட். சொல்லுங்க. பேச முடியும்னா வாய திறந்து பேசுங்க. போலீஸ் வர்றதுக்கு முன்னாடி எங்கிட்ட பேசினாதான் உண்டு. பேசுங்க லதா. எதுக்கு இப்படி செஞ்சீங்க? டெல் மீ
“நாங்க ஒண்ணா இருக்கிறதுக்காக
“நிம்மதி. இனி பிரிவில்லை. முழு நிம்மதி
                               
                                    முற்றும்

2 comments:

  1. கதை அருமை ..வித்தியசாமான படைப்பு ... (ஆனால் 3700 வார்த்தைகளுக்கு மேல் உள்ளதால் மார்க் குறைக்க படும் வாய்ப்பு உள்ளது (:-

    ReplyDelete
  2. Is this the only story people are reading in this entire list of 48??? It has both the maximum number of likes and dislikes??

    Better to cut this thumps up and thumps down... and go with the judges rating alone....
    by the by the story is really......good with different idea..........can be awarded for its unique structure which is been delivered with more than 3700 words

    ReplyDelete