Saturday, 13 July 2013

Story-37 அந்த இரவில்அந்த இரவில்

ராஞ்சி
ரிங் ரோடு கிட்டத்தட்ட அனாதையாக காட்சியளித்தது. நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சாலை சுமார் அரை கிலோமீட்டர் இருக்கலாம். ஆயினும் சாலையை அவ்வப்போது சோம்பலாக கடந்து சென்று கொண்டிருந்த வாகனங்களை இங்கிருந்தே தெளிவாக பார்க்க முடிந்தது.

மணி பார்த்தேன். 12:43. இன்னும் எவ்வளவு நேரம் வேலை இருக்கும் என்று தெரியவில்லை. தூக்கம் என்னை படாதபாடு படுத்திக்கொண்டிருந்தது. இந்த சாலை அமைக்கும் வேளையில் சர்வீஸ் எஞ்சினியராக இருக்கும் நான் அடிக்கடி பெருமையாக ஒரு வசனம் சொல்லிக்கொள்வேன். அதாவது,

"நாங்கெல்லாம் 24 x 7 ரெடியா இருக்கணும். சாரணர் இயக்கத்துல சொல்வாங்களே"Be Prepared" அது எங்களுக்காகத்தான் சொன்னாங்க. நீங்க என்னடான்னா 9 டு 5 வேலைக்கு போயிட்டு வர்றதுக்கே அலுத்துக்கிறீங்க.."

இப்போது அதுவே எனக்கு வினையாய் வந்து அமைந்தது. பத்து மணிக்கு தூங்கி காலை ஆறு மணிக்கோ அல்லது ஏழு மணிக்கோ எழுந்து இன்றோடு சரியாக நான்காவது நாள்!

முதலில் ஒரிசாவில் ஒரு நிறுவனத்தில் எங்கள் இயந்திரம் பழுதாக இருக்க ஆறு நாட்களுக்கு முன்பு பட்னாவில் இருந்து தொடங்கிய பயணம் இன்னும் முடியவில்லை. ஒரிஸாவில் இருந்தது கான்கிரீட் சாலை அமைக்கும் இயந்திரம். இரவில்தான் வேலை நடக்கும். வேலை நடக்கும்போதுதான் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியும். கிட்டத்தட்ட இரண்டு இரவுகள் தொடந்து முழித்திருந்து பிரச்சினையை சரிசெய்துவிட்டு பட்னா கிளம்பலாம் என்று யோசித்தவேளையில் ராஞ்சியிலிருந்து அழைப்பு.

பெரியதாய் வேலை ஒன்றுமில்லை. புது இயந்திரம். பரிசோதனை ஓட்டம் நடத்தித் தர வேண்டும். வழக்கமாய் பகலில்தான் அதை செய்வோம். ஆனால் அன்றுதான் நல்ல நாளாம்! இரவு பன்னிரண்டு மணிக்குள் ஒரு லோடு தார்க் கலவையேனும் இயந்திரத்தில் கொட்டி இருக்கவேண்டும் என்கிறபடியால் அன்று இரவே நடத்தப்பட்டது. இந்த ஆந்திராவை சேர்ந்த நிறுவனங்களில் இது ஒரு பெரிய பிரச்சினை. சில சமயம் லாபமும் கூட. ஏனெனில் புதியதாய் எது தொடங்கினாலும் கண்டிப்பாக ஒரு ஆடு வெட்டுவார்கள். இரவே அதை சமைத்தும் சாப்பிட்டுவிடுவார்கள். நல்ல காரசாரமான, உண்ணும்போதே கண்களில் நீர் வரவழைக்கும் அளவிற்கு சுவையாக மட்டன் குழம்பு கிடைக்கும். சரக்கும்தான்! ஆனால் தண்ணியடித்துவிட்டு வேலை செய்யும் பழக்கம் இல்லாததால் நான் எப்போதும் சாப்பாடோடு நிறுத்திக்கொள்வேன்.

ஆனால் இன்றோ பகலெல்லாம் பயணம் செய்த அலுப்பும், இனி எப்போது வேலை முடியும் என்று தெரியாத கடுப்பும் சேர்ந்து என் முகத்தின், எண்ணங்களின் வடிவையே மாற்றிவிட்டிருந்தது. ஆனால் தூங்க முடியாது. காரணம் ப்ராஜெக்ட் மேனேஜர் திரு. கோட்டிலிங்கம்காரு எங்கும் நகர்வதாய் இல்லை. தன வெள்ளை நிற போலேரோ வண்டியில் கதவுகளை நாலுபுறமும் திறந்துவைத்துவிட்டு முன்புறம் அமர்ந்து தன ப்ளாக்பெரியை நோன்டிக்கொண்டிருந்தார்.

நான் சற்று தள்ளி அவர் கண்களில் படாத வண்ணம் இயந்திரத்தின் மறைவில் நின்றுகொண்டு ஒரு சிகரெட் பற்றவைத்தேன். லோடு வருவதற்காக காத்துக்கொண்டிருந்த ஆபரேடர் ஜுகல் மெல்ல என்னிடம் வந்து புன்னகைத்தவாறே தலையை சொரிந்தான்.  நான் சிரித்துக்கொண்டே ஒரு சிகரெட்டை நீட்டினேன்.அவனும் பற்றவைத்தான். எப்போதும் வளவளவென்று பேசிக்கொண்டே இருக்கும் அவன் இன்று மிகவும் அமைதியாக இருந்தான். சற்று தள்ளி நிறுத்தியிருந்த டவர் லைட்டின் என்ஜின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. ஏப்ரல் மாதம் என்றாலும் கூட அந்த இரவில் காற்று எங்கள் மீது கொஞ்சம் இரக்கம் காட்டி அவ்வப்போது தென்றலை அனுப்பிக்கொண்டிருந்தது. அந்த காற்றின் மெல்லிய ஓசையும், தூரத்து வாகனங்கள் அவ்வபோது ஒலிக்கவிடும் ஹாரன்களின் சப்தமும் மட்டுமே காதில் கேட்டது. ஆங்காங்கே அமர்ந்திருந்த லேபர்களும் கூட பேசிக்கொண்டதாக தெரியவில்லை. சிலர் அமர்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தனர். சூப்பர்வைசர் சுக்லாஜி தன் பைக்கின் மீது அமர்ந்து தூங்கிகொண்டிருந்தார். இரண்டு சிவில் எஞ்சினியர்களையும் காணவில்லை. ஏதேனும் மறைவில் அமர்ந்து போதை ஏற்றிக்கொண்டிருப்பார்கள் என யூகித்தேன்.

ஆனால் அந்த சூழ்நிலையில் ஒருவித இறுக்கம் இருந்ததாய் உணர்ந்தேன். சொல்லவொண்ணா ஒரு வெப்பம் உள்ளுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது. .

அவர்கள் இயல்பாக பேசாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் ஏன் பேசவில்லை என்கிற கேள்வி உள்ளே எழுகையில் என்ன செய்வது? எதனால் அந்த கேள்வி எழுகிறது? என்ன வகையான பயம் இது? ஒருவேளை நான்கு நாள் தூக்கம் செய்யும் வித்தையா இது?. உடனே விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு போக வேண்டும் போல இருந்தது.

சிகரெட்டை கீழே போட்டு மிதித்தேன். ஆனால் அந்த எண்ணங்களை கீழே போடமுடியவில்லை. நன்கு தூங்கி எழுவது மட்டுமே இதற்கான தீர்வு என்பதை நானே முடிவு செய்துகொண்டேன். ஒரு ஐந்து நிமிடம் பொறுத்து கோட்டிலிங்கம்காருவிடம் சொல்லிவிட்டு அவரது போலேரோவிலேயே படுத்து உறங்கலாம் என்றும் முடிவு செய்தேன்.

ஐந்து நிமிடம்..ஐந்தே நிமிடம்.பொறு..இதோ வந்துவிடும்.

மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும். நான், நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகிலிருந்த சென்சார் கம்பியின் அழுத்தத்தை அமுக்கிப் பார்த்து சோதித்துக் கொண்டிருந்தேன்.ஜுகல் என் தோள் தொட்டு திருப்பினான். அங்கே கூட்டமாய் ஒரு பத்துப் பதினைந்து பேர் வந்து கொண்டிருந்தார்கள். அதில் முன்னாள் இருந்த மூன்று பேர் கையில் நீளமான துப்பாக்கி இருந்தது.


அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் அந்த இரவின் நிறமும், அந்த தென்றலின் வீச்சும் சுற்றுப்புறத்தில் மாறியிருந்தன. அந்த பன்னிரண்டு பேரும் இயந்திரத்தை சுற்றி இரண்டு பேர், போலேரோ அருகில் மூன்று பேர், லேபர்களை ஒரே இடத்தில் நிற்க வைத்து அவர்கள் அருகில்  இரண்டு பேர், நான், ஜுகல், சிவில் எஞ்சினியர்கள் மற்றும் சுக்லாஜி என்று எங்கள் நால்வருக்கு அருகில் இரண்டு பேர் என பிரிந்து நின்றனர். மீதம் மூன்று பேர் பொதுவாக நின்றார்கள். அவர்கள்தான் துப்பாக்கி வைத்திருந்தனர். ஐந்து நிமிடத்திற்கு முன்பிருந்த மவுனம் இப்போதும் அந்த இடத்தில் இருந்தது. ஆனால் அதற்கான அர்த்தம் இப்போது எனக்கு தெளிவாக புரிந்து இருந்தது.

"யாருக்கும் எதுவும் ஆகாது. யாரும் நகரக்கூடாது. பேசக்கூடாது. நின்ன எடத்துலயே ஒன்னுக்கு போகக்கூடாது. நாங்க வந்த வேலைய முடிச்சதுக்கு அப்புறம் அங்குட்டு தள்ளிப்போய் ஒன்னுக்கு இருந்தா போதும். (பேசியவனின் அருகிலிருந்தவர்கள் இருவரும் மெல்ல சிரித்தார்கள்) உள்ளூர்க்காரன் யாராவது இருந்தா இங்க என் முன்னாடி வா..." உரக்கவும் இல்லாமல், ரகசியக் குரலிலும் இல்லாமல் அவன் சொல்லி முடித்தான். அவன் கைகள் துப்பாக்கியை தடவியவண்ணம் இருந்தது. அவன் பைஜாமா போன்ற உடை அணிந்திருந்தான். நல்ல தெளிவான குரல்.

யாரும் முன்வரவில்லை. ஒரு இருபது வினாடிகள் கழிந்திருக்கும். அவனே மீண்டும் பேசினான்.

"ஆக உள்ளூர்க்காரன் ஒருத்தன்கூட இங்க இல்ல. எல்லாம் வெளியூர் நாயிங்க. எங்க மண்ணுல வந்து பிச்சையெடுத்து பொழைக்கிற நாயிங்க. மண்ணள்ளி போடுற லேபர் கூட இல்ல. உங்களையெல்லாம் ஆரம்பத்துலேயே அறுத்து எரிஞ்சிக்கணும். இன்னக்கி நாங்கெல்லாம் அவுசாரி பொழப்பு பொழைக்க வேண்டி இருந்திருக்காது" - இம்முறை குரலில் ஏகத்துக்கும் கோபம் இருந்தது.சில நொடிகளில் ஆசுவாசமடைந்தான். எல்லோர் பார்வையும் அவன் மீதே இருந்தது. என் பார்வை துப்பாக்கி மீதும், என் எண்ணம் என் காதலி மீதும்  இருந்தது.

இன்றுதான் அந்த நாளோ? பள்ளியில் படிக்கும்போதும், கல்லூரியில் படிப்பதாய் சொல்லி ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோதும் வெறுமை தாக்கிய பல தருணங்களில்,"ஐயோ! மரணமே வந்து என்னை தழுவிக்கொள்ள மாட்டாயா?" என்று நிறைய முறை எண்ணியதுண்டு. ஆனால் மறந்தும்கூட தற்கொலைக்கு முயற்சித்ததில்லை என்பது வேறுவிஷயம். ஆனால் "அவள்" வாழ்க்கையில் வந்தபின் எல்லாம் அழகாய் மாறியிருந்தது. துன்பம் வரும் வேளையில் யாழாய் அவளை மீட்டி என்னை நானே குணப்படுத்தியிருக்கிறேன். இன்றும்கூட என் தூக்கம் தொலைத்த நான்கு இரவுகளுக்காக அவள் கண்ணீர் சிந்தினாள். அந்த நொடியில் சரியாகிவிட்டிருந்தது களைப்பு. ஆனால் அது அந்த நொடி மட்டும்தான்! நிஜம் வேறுமாதிரிதான் இருந்தது. ஆனாலும் அந்த நொடி முக்கியமானதுதான் அன்றோ!

போலேரோவை நோக்கி நகர்ந்தான் அவன். கோட்டிலிங்கம்காருவிடம் ஏதோ மெல்லப் பேசினான். அருகில் நின்றிருந்த போலேரோ டிரைவர் தன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தான். அந்த மங்கிய வெளிச்சத்தில் கோட்டிலிங்கம்காரு அழுவது தெளிவாகத் தெரிந்தது. எப்போதுமே வயதில் மூத்தவர்கள் நம்முன்  அழுவது மனதுக்கு எவ்வளவு கஷ்டம் கொடுக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த சூழ்நிலையின் இறுக்கம் அவர் அழுகையின் தாக்கத்தை இன்னும் கூட்டியது.

எல்லோருக்கும் புரிந்துவிட்டது. கோட்டிலிங்கம்காருவை  அவர்கள் கடத்திக்கொண்டு போகப்போகிறார்கள். நம்மை எதுவும் செய்யப்போவதில்லை. நான் என்னையும் அறியாமல் பெருமூச்சுவிட்டேன்.

முதலில் கோட்டிலிங்கம்காரு டிரைவருக்கு பின்னாடி இருந்த இருக்கையில் அமர அந்தப் பக்கம் ஒருவனும் இந்த பக்கம் ஒருவனும் உடன் ஏறிக்கொண்டனர். வீர உரை ஆற்றியவன் முன்னாடி அமர்ந்தான். மேலும் இருவர் பின்னாடி சென்று அமர்ந்துகொண்டனர். வண்டி மெல்ல நகர்ந்து முன்னாடி செம்மண் கொட்டி சமப்படுத்தப்பட்டிருந்த டைவர்ஷன் சாலையில் செல்ல ஆரம்பித்தது. கார் மெயின்  ரோட்டை அடையும் வரை யாரும் அசையவில்லை. எல்லோர் கண்களும் தூரத்தில் நகர்ந்து சென்றுகொண்டிருந்த போலேரோவின் மீதே இருந்தது. போலேரோ கண்களை விட்டு அகன்ற நொடியில் அங்கே மீதமிருந்த "அவர்கள்" ஒருத்தரை ஒருத்தர் பார்த்து தலையசைத்தவாறு அங்கிருந்து நகர ஆரம்பித்தனர்.

நாங்கள் யாரும் நின்ற இடத்தைவிட்டு நகரவில்லை. அவர்கள் நடந்துசென்று இருட்டில் மறைந்தபின்னரும் எங்கள் கால்கள் நகர மறுத்தன. சுக்லாஜியின் குரல் மட்டும் கேட்டது.

"ஹான்ஜி! ஹான்ஜி! லேகயி...ஹம யஹி ரேயங்கே..ஆப் ஆயியே..ஆயியே..." - அவர் பேசி முடிக்கையில் அவரும் அழுதிருக்கிறார் என்பது புரிந்தது.

பின்னர் வந்த அரைமணி நேரத்தில் நாங்கள் எல்லாம் என்ன பேசினோம் என்னென்ன யோசித்தோம் என்னென்ன இறைவனிடம் யாசித்தோம் என்பது எல்லாம் இந்த நிமிடம் வரை என் நினைவுக்கூட்டுக்குள் இருக்கிறது. முதன்முறையாக என்னவள் வீட்டில் இருக்கும்போது அதுவும் இரவு ஒரு மணிக்கு அப்புறம் போன் செய்து பேசினேன். ஆச்சரியம்..அவள் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் என்னோடு பேசியது. முழுக்கதையையும் அவளிடம் சொன்னேன். அவள் என்னை உடனே ஊருக்குக் கிளம்பிவர பணித்தாள். நான் அவளிடம் சொன்னேன்,

"இப்போ கொஞ்ச நேரத்துல ரூமுக்கு போயிருவேன். டெபுடி மேனேஜர் வர்றாரு. போயி நல்லாத் தூங்கிட்டு எப்போ முழிக்கிரனோ அப்போ போயி டிக்கெட் புக் பண்ணிட்டு ஊருக்கு வர்றேன்....."

"லீவ் கொடுப்பாங்கள்ள?"

'அதெப்பிடி குடுக்காம இருப்பாங்க? எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு. மைண்ட் அப்செட்டா இருக்குன்னு சொல்லிட்டு ஈசியா லீவ் வாங்கிரலாம்.."

1 comment:

  1. Service Engineer's வாழ்கைலாம் இப்படி நாய் படாத பாடுதான்...

    ReplyDelete