Wednesday, 10 July 2013

Story-7 அலையாய் அலைந்து…



அலையாய் அலைந்து...

"எலேய்! நெசமாத்தான் சொல்லறியா" மாரியண்ணனின் இளம் சிவப்பான கண்கள் இரண்டும் பளீரென்று மின்னின. தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து, முகத்தில் படிந்திருந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். சந்தோஷத்தின் மிகுதியில் ஒரு சிமிட்டா மூக்குப்பொடியை இழுத்துவிட்டு, மேல்துண்டை மூக்கின் கீழ் வைத்து மேலும் கீழுமாக தேய்த்தார். எதிரே முத்து மூச்சு வாங்க, மாரியண்ணனின் மகிழ்ச்சியை மிகுந்த பெருமிதத்துடன் ரசித்துக் கொண்டிருந்தான்.

"ஆமாண்ணே. அரசாங்கத்துல நமக்கு பணம் கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டுட்டாங்களாம். மினிஸ்டரு இன்னும் நாலு நாள்ல டவுனுக்கு வற்ராரு. அப்ப மேடையில் வைச்சு நமக்கு கவரு கொடுப்பாங்களாம். ஒடனே உங்களை தாலுக்கா ஆபீசுக்கு இட்டாறச் சொன்னாங்க."

அந்த நிமிடத்திலிருந்து கரம்பைக்காடு கிராமம் திடீர் பரபரப்புக்கு உள்ளானது. ஒருவருக்கு ஒருவர் சந்தோஷ செய்தியை ஓடி ஓடி பகிர்ந்து கொண்டனர். பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் வாழை சீப்பு மாதிரி அவர்கள் கண்களுக்குள் வந்து போயின.

ஒரு வருடத்திற்கு முன்னால் கரம்பைகாடு கிராமத்தின் மேற்கில் கட்டுவிரியன் மாதிரி அமைதியாக ஊர்ந்து கொண்டிருந்த மலட்டாறுக்கு ஒரு நள்ளிரவில் திடீரென வெறி பிடித்தது. கிராமத்துக்குள் புகுந்து அனைத்து குடிசைகளையும் அடித்துக் கொண்டு போனது. அனைத்தும் ஆற்றோடு போய்விட விடிவதற்கு முன்னாலேயே பிச்சைகாரர்கள் மாதிரி ஆயினர்.

வெள்ளத்தை பார்வையிட வந்த முதலமைச்சர், அரசு செலவில் அவர்களுக்கு மீண்டும் வாழ்விடம் கட்டித்தரப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் பத்தாயிரம் நஷ்டஈடு அளிக்கப்படும் என்று சொல்லிவிட்டுப் போனார். அப்போதே கடவுளை கண்டுவிட்ட மாதிரி மக்கள் பரவசமடைந்தனர். அது எவ்வளவு பெரிய பைத்தியகாரத்தனம் என்று அவர்களுக்கு போக போக புரிந்தது.

முதல்வர் சொல்லிவிட்டுப் போனதும் ஏகப்பட்ட பத்திரிக்கையாளர்களும் தொலைகாட்சி நிருபர்களும் வந்து கேள்வி மேல் கேள்வியாக கேட்டனர். விதம் விதமாக போட்டோ பிடித்தார்கள். அரசு அதிகாரிகளில் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை அணி அணியாக வந்து போனார்கள். விவரங்கள் குறித்துக் கொண்டார்கள். ஆனால், வீடு கட்டுவதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இருப்பதாக இல்லை.

மாரியண்ணனின் சகாக்கள் மழையில் நனைந்தார்கள். வெயிலில் காய்ந்தார்கள். தலைக்கு மேல் ஒரு கூரை கிடைக்க அலையாய் அலைந்தார்கள். ஒரு பக்கம் கட்சிக்காரர்கள், இன்னொரு பக்கம் அதிகாரிகள் என்று இரண்டு பக்கமுமாக அவர்கள் அறைபட்டார்கள். 'ஐம்பதாயிரம் செலவுல, நோகாம உங்களுக்கு கல்லு வீடு கேக்குதா?, எங்களுக்கும் கொஞ்சம் வெட்டு' என்ற மனப்பான்மைதான் அவர்களிடம் இருந்தது. சரி, காசு கொடுத்தால் காரியம் ஆனதா என்றால், அதுவும் இல்லை. இடத்தேர்வு, நிதி ஒதுக்கீடு, காண்ட்ராக்ட், அது, இது என்று சொல்லி இழுக்கடித்தார்கள். ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு சிக்கலைச் சொல்லி, அதை தீர்த்து வைக்க காசு கேட்டார்கள். கொண்டு வந்த ஜீப்புக்கு டீசல் காசு என்றார்கள். எப்படியோ ஆளுக்கு மூவாயிரத்துக்கு குறையாமல் செலவு செய்து, பத்து மாத திறந்த வெளி வாழ்க்கைக்கு பிறகு, அவர்களுக்கு வீடு கிடைத்தது. அதுவும் ஊரைவிட்டு கொஞ்சம் ஒதுக்கு புறமாக ஒரு முள்ளு காட்டுக்குள்.

வீடு கிடைத்து ஓய்ந்த பிறகுதான் அந்த பத்தாயிரம் உதவித் தொகை வரவில்லையே என்ற ஞாபகம் வந்தது அவர்களுக்கு. மீண்டும் அதே ஓட்டம், அதே அலைச்சல். மாரியண்ணனை, தாலுக்கா ஆபீஸில், எல்லோரும் ஒரு விரோத பார்வையுடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

"ஏம்ப்பா, வீடு கெடைசிடுச்சுல்லே? அப்பறமென்ன? இன்னமும் சும்மா தொந்தரவு பண்ணிக்கிடே இருக்கீங்க?"

"ஐயா, வீடு கெடைச்சுது, வாஸ்தவந்தான். ஆனா, எங்க வீட்டு ஜாமான் அம்புட்டும் ஆத்தோட போயிட்டுங்களே? சி..எம்மு அன்னிக்கு......."

"அவங்க அப்படித்தான் சொல்வாங்க. அரசாங்கத்துல நிதி நெலமை அப்படி ஒண்ணும் சரியா இல்லே" அப்படி சொன்ன அதிகாரியின் வெள்ளை சட்டை பாக்கெட்டில் ஐநூறு ரூபாய் தாள்கள் ஏராளமாக இருப்பது துல்லியமாக தெரிந்தது.

"ஐயா நீங்க மனசு வைச்சீங்கன்னா எதுவும் நடக்கும்ணுன்னு சொன்னாங்க"


"சரி. சரி. அடுத்த வாரம் வாங்க. என்ன செய்யலாம்னு யோசிக்கலாம். நீங்க கொஞ்சம் ஒத்துழைக்கனுமைய்யா. பார்பம்."

இப்படியாகத் தொடங்கி, சரி கொடுத்துவிடலாம் என்ற அளவுக்கு இப்போது வந்திருக்கிறது.

கழுகுக்கு மூக்கில் வியர்த்த மாதிரி மாரியண்ணனை தாலுக்கா ஆபீஸில்  ஆளுங்கட்சியின் வட்ட செயலாளர் எதிர் கொண்டு வரவேற்றார். "இங்கபாருங்கப்பா, உங்களுக்கு பணம் கெடைக்குதுன்னா, அது என்னாலத்தான், ஞாபகம் வைச்சுக்குங்க. மினிஸ்டர் மீட்டிங் ஆறு மணிக்கு திலகர் திடல்ல இருக்குது. உங்க முறை எட்டு மணிக்கு வரும். உங்கள்ல ஆறு பேரை தேர்வு செஞ்சுக்குங்க. மினிஸ்டரு கவரு கொடுப்பாரு. மத்தவங்க மறுநாளு எங்கக்கிட்ட வந்து வாங்கிக்கணும். புரிஞ்சுதா? ..... ஆமா.... நாங்க கட்டி கொடுத்த வீடுகள்ல, ஒரு சில பேர் பச்சை கட்சி கொடி பறக்க விட்டுருக்காங்களாமே? ஏன்யா உங்களுக்குகெல்லாம் நன்றி, விசுவாசமேயில்லே?"

"ஐயா, ஊருன்னு இருந்தா, நாலு கட்சி இருக்கத்தான் செய்யும். அரசாங்கந்தானே வீடு கட்டி கொடுத்திச்சு. இதுல கட்சி பார்க்கலாமுங்களா?" மாரியண்ணண் வெள்ளந்தியாக கேட்டார்.

"யோவ். நீ எனக்கு அரசியல் சொல்லித்தரையா? இப்ப கேட்டுக்க. ஒரே நாள் டையம் தர்ரேன். அதுக்குள்ள அந்த கட்சி கொடியெல்லாம் போவணும். இல்லேன்னா, அவங்களுக்கு பணம் கிடைக்காது."

அதற்குள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி தன் இருக்கைக்கு வந்துவிட, வட்ட செயலாளர் பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு மெதுவாக நழுவிக் கொண்டார். இப்போது அதிகாரியின் முறை ஆரம்பித்தது.

"ம்.....கரம்பைக்காடு வெள்ள நிவாரணம். ஆமா, நீங்க எத்தனை பேரு"

"நாங்க மொத்தம் இருபத்திநாலு பேரு சார். இப்ப பத்து பேரு வந்திருக்கோம்."

கொஞ்சம் அந்த காகிதத்தை இங்கே வைத்து, இந்த காகிதத்தை அங்கே வைத்து, கோப்புகளை சரிபார்த்து, ஒரு தாளில் என்னவோ எழுதி, கூட்டல் போட்டு, ஒருவித திருப்தியுடன் மாரியண்ணனிடம் நீட்டினார். "இதை கொண்டு போய், காம்பவுண்டுக்கு வெளியிலே டீ கடைக்கு பக்கத்தில இருக்கிற ஸ்ரீதேவி ஜெராக்ஸ் கடையில, கவிதான்னு ஒரு பொண்ணு இருக்கும். அதுகிட்ட கொடுங்க. அப்பறம், ஆளுக்கு ஆயிரம் ரூபா செலான் கட்டிடுங்க. உங்க கேஸ் க்ளியர் ஆயிடும்."

"செலான்னா?"

"ஆமாய்யா. செலான்னா, செலான்தான். புரிஞ்சுக்குங்க. இப்படி செலவு செஞ்சாதான் வேலை சீக்கிரமா முடியும். அன்னிக்கே உங்ககிட்டே சொன்னேனைய்யா, ஒதுழைக்குணுமின்னு, புரியலையா?"

மாரியண்ணணுக்கு புரிந்துவிட்டது. "ஐயா. வீடு கெடைக்கணும்கிறதுக்காகவே நாங்க மூவாயிரத்துக்கு குறையாம செலவழிச்சிருக்கோம். இப்ப எங்ககிட்ட சல்லி காசு இல்லீங்கய்யா?"

"யோவ். அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நாங்க வாங்கறதுதான் உங்களுக்கு பெரிசா தெரியுது. இப்ப மினிஸ்டர் மீட்டிங்னு சொல்லி கட்சிகாரங்க எங்க தலைல ஆளாளுக்கு கை வைப்பாங்க. அதுக்கு நாங்கதான் அழணும். போங்க. செலான் கட்டினாதான் உங்களுக்கு பணம். இல்லேன்னா எப்பவுமே இல்லே."

மாரியண்ணண் வெறுத்துப்போனார். ஒரு சிலபேர் ரொம்பவும் சூடாகி நிழல் யுத்தம் நடத்தினர். அப்பறம் காற்றுப்போன பலூன் மாதிரி ஒய்ந்து சமாதானம் ஆகினர். பிறகு, எல்லோரும் செலான் கட்டிவிடுவதாக தீர்மானிக்கப்பட்டது.

பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்த அவர்களை மீண்டும் வட்ட செயலாளர் மடக்கினார். குறைந்த பட்சமாக அவர்களில் பத்து பேராவது அவர் கட்சியில் அடிப்படை உறுப்பினர் கார்டு பெற வேண்டும் என்றும், 'முரசு முழக்கம்' என்ற அவர்களின் கட்சி பத்திரிக்கைக்கு ஒரு வருஷ சந்தா செலுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு போனார். இருக்கிற குழப்பத்தில் அதற்கு எவ்வளவு காசு ஆகும் என்று மாரியண்ணன் கேட்க மறந்து போனார்.

அமைச்சர் வந்த அன்று மாரியண்ணன் மற்றும் அவரது சகாக்கள் மாலை ஐந்து மணிக்கெல்லாம் பொதுக்கூட்ட அரங்குக்கு வந்து விட்டனர். அப்போதிருந்தே மிகக் கேவலமாக அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். பலி ஆடுகளை ஆய்வு செய்வது மாதிரி ஆளாளுக்கு விசாரித்துக் கொண்டே இருந்தனர். எப்போதும் அவர்கள் கண் பார்வையிலேயே இருக்க வேண்டும் என்று 'அன்பு' கட்டளையிட்டனர். எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவார்களாம். அடிக்கடி லிஸ்ட் சரிபார்க்கப்பட்டது. ஒருவழியாக ஒன்பது மணிவாக்கில் ஒரே தள்ளாக, அமைச்சர் முன்னால் கொண்டு நிறுத்தினார்கள். அதற்கு முன்னால் அவர்கள் கைகளில் அன்றைய 'முரசு முழக்கம்' திணிக்கப்பட்டது.

பணம் கிடைக்கும் வரை எல்லா அவமானங்களையும் பொறுத்துக்கொள்வது என்று இருந்தார் மாரியண்ணன். கவர் அவர் கைகளில் கொடுக்கப்பட்டதும், ஆற்றாமையில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. எதிரே இருக்கும் அமைச்சர் இளவயது என்றாலும், தெய்வத்தை நேரில் கண்டமாதிரி அவர் கால்களில் விழுந்தார்.

நிறைந்த மனசுடன் மேடையை விட்டு இறங்கியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முத்து திடீரென அலறினான். "மாரியண்ணே. கவருல செக்கு இல்லே, ஏதோ காகிதமிருக்கு. நாம ஏமாந்துட்டோம்"

அதற்குள் அதிகாரிகள் அவர்களை வளைத்துவிட்டார்கள். அனைவரின் கைகளில் இருந்த கவர்களை பிடுங்கிக் கொண்டார்கள். மாரியண்ணன் செய்வதறியாது திகைத்து நின்றார்.

"இங்க பாருங்க. உங்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய இன்னும் கொஞ்ச நாளாகும். மினிஸ்டர் ரொம்ப பிடிவாதமா இருந்ததால உங்களோட சாங்ஷன் லெட்டரை செக்குக்கு பதிலா வைச்சிருந்தோம்."

"ஐயா. இது ஏமாத்தறதுமாரியில்லே இருக்கு"

"யோவ். பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதே. எங்க நெலமையை புரிஞ்சுக்குங்க. உங்களுக்கு வீடு கட்டி தர ஐம்பதாயிரம்தான் சாங்ஷன் ஆச்சு. ஆனா செலவு அறுபதுக்கு மேலே போயிட்டு. இப்ப ஆளுக்கு பத்தாயிரம் கொடுக்க பட்ஜெட் இல்லே. சம்பந்தப்பட்ட துறை பணமில்லேன்னு கைவிரிச்சிடுச்சு. வேற ஏதாவதுலேர்ந்து போட்டு அடிச்சுதான் தரணும். அதுக்கு சென்னையிலேர்ந்து உத்திரவு வரணும். வந்துடும். கவலைப்படாதீங்க"

"அப்ப நாங்க செலான் கட்டினது"

"அப்படீன்னா?........ "

"அதாங்க ஸ்ரீதேவி ஜெராக்சுல கவிதாங்கற பொண்ணுக்கிட்ட ஆயிரம் ரூபாய்...."

"சுத்த முட்டாள்களா இருக்கீங்களே. உங்களை யாரு கொடுக்கச் சொன்னது? மினிஸ்டருக்கு தெரிஞ்சா கோவிச்சுக்குவாரு. லஞ்சம் வாங்கறதும் குற்றம். கொடுக்கறதும் குற்றம்."

அந்த கடுகடு அதிகாரி விர்ரென போய்விட்டார். முத்து உட்பட அனைவரும் கொதித்தெழுந்தார்கள். அவர்களின் மனைவிமார்கள் ஒருசிலர் இயலாமையில் அழத் தொடங்கினர். மற்றவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். மாரியண்ணனுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டது.

"ஐயா, இவனுங்களை இப்படியே விட்டா சரிபட்டு வராது. நான் ஒரு ஐடியா சொல்லுறேன். கேப்பீங்களா?" முத்துவின் மகன் இளமாறன் வெறுப்பு அப்பிய முகத்துடன் சொன்னான்.

மாரியண்ணன் பதில் பேசாமல் இயலாமையில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"எதிர் கட்சியில ரெண்டு மூணு டி.வி. இருக்குது. அவிங்களுக்கு தகவல் கொடுப்போம். பரபரப்பா செய்திகள் போடறதுக்கின்னே நெறைய பத்திரிக்கைகள் இருக்குது. அவிங்களையும் கூப்பிட்டு வெவரம் சொல்லுவோம்."

"எலேய்! இது சண்ட போடற மாதிரியில்லே இருக்கு. அவிங்க கோவிச்சுகிட்டாங்கன்னா எப்பவுமே தரமாட்டாங்களே?"

"ஐயா. சுத்த வெவரம் தெரியாம இருக்கீங்க. மடிஞ்சோம்னா, மண்டையிலேதான் போடுவாங்க. இனிமே நீங்க சும்மா வேடிக்கை பாருங்க. இவனுங்களை நான் எப்படி சுளுக்கு எடுக்கறேன் பாருங்க."

'என்னவோப்பா. யாருக்காக அரசாங்கம் இருக்குது, யாரை அடிச்சு யாரு சாப்பிடறாங்கன்னு புரியவே இல்லையப்பா. ஏழைன்னா அவனுக்கு மானம் மறுவாதி தேவையில்லேன்னு ஆயிடுச்சே!"

முண்டாசை அவிழ்த்து, முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தார் மாரியண்ணன். எதிர் கட்சியின் டி.வி. காமிராக்கள் அவரை காட்சி பொருளாக்க விரைந்து கொண்டிருந்தன.

No comments:

Post a Comment