Tuesday, 16 July 2013

Story-45 ஒரு நாள் வருவார்

ஒரு நாள் வருவார்

" கலி எப்ப கத்தார்'லருந்து வந்தீங்க?" என பேட்டை பேருந்து நிலையத்தில் நகர பேருந்துக்காக காத்திருந்த குட்டி கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவரை நோக்கி முன்னேறி வந்து கை குலுக்கியவாறு " வந்து 3 நாட்களாச்சு. இன்னைக்குதான் டவ்ன் பக்கம் போயிட்டு வரலாம்னு கிளம்பினேன்" என கூறினார் கலி என்று சுருக்கி அழைக்கப்பட்ட கல்யாணசுந்தரம். பேட்டை கிராமத்தில் அதிகப்படியான மக்கள் மீன்பிடிதொழிலையும், அதை செய்ய பிடிக்காதவர்கள் அல்லது கூடுதலாக சம்பாதிக்க விரும்புபவர்கள் தேர்வு செய்வது அயல்நாட்டுக்கு சென்று வேலை செய்து பணம் ஈட்டுவதைத்தான். அவ்வாறு முடிவு செய்பவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரில் உள்ள "ஷிப்யார்ட்" என்று சொல்லப்படும் கப்பல் பணிமனையில் வேலை செய்யவே செல்வர். ஏனெனில் அந்த வேலை மிகவும் கடினமானது என்றாலும் மற்ற கட்டுமான பணிகளை காட்டிலும் கூடுதலான "வெள்ளி"(சிங்கப்பூர் டாலரை வெள்ளி என்றே அழைப்பர்) கிடைக்கும் என்பதாலுமே ஆகும். மீனவர்களின் வாழ்க்கை நிலை அறிந்தவர்களுக்கு தெரியும் அவர்கள் இயற்கையை எதிர்த்து போராடி ஒவ்வொரு நாளும் கடலுக்கு சென்று மீனை பிடித்துவந்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்கள் வாழ்க்கையை வழி நடத்துபவர்கள். ஆக அவர்கள் வருமானத்திற்காக உயிரை துச்சமென நினைப்பவர்கள். அதை தெரிந்தோ என்னவோ சிங்கபூருக்கு "ஷிப்யார்ட்" வேலைக்கு ஆள் எடுக்கும் பிரதிநிதிகள் அந்த வேலை கடினமானதும், உயிரை பணயம் வைத்து வேலை செய்யவேண்டும் என்பதனாலும் அதிகமாக கடற்கரை கிராமங்களிருந்தே ஆட்களை தேர்வு செய்வர். ஆனால் இந்த வேலைக்கு 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கே அந்த நாட்டு சட்டப்படி முன்னுரிமை வழங்கப்படும். அந்த வயது கடந்தவர்கள் அரபு நாடுகளில் உள்ள மீன்பிடி கலன்களின் பணியாற்ற சவுதி, கத்தார் போன்ற நாடுகளுக்கு செல்வர். அவ்வாறு கத்தார் சென்றவர்களில் ஒருவர்தான் இந்த கல்யாணசுந்தரம். " அப்புறம் என்ன லீவ்'லதானே வந்திருக்கீங்க?" என வினவினார் குட்டி. " இல்லைண்ணே, இந்த முறை முடிச்சிட்டு வந்துட்டேன். நான் வேலை செய்யும் அரபி சரியாக சம்பளம் தரமாட்றான். பசங்களும் வளந்துட்டு வராங்க. அவங்களையும் கவனிக்கணும் அதனால ஊர்லையே சுருக்கு வலைல பார்ட்னரா சேர்ந்துடலாம்னு இருக்கேண்ணே " என பதிலினார். குட்டி " ஆமாம்பா போன வருஷம் சுருக்கு வலைல நல்ல பாடு கிடைச்சு ரெண்டு , மூணுன்னு மீதம் ஆச்சுன்னு தொழிலுக்கு போனவங்க சொன்னாங்க. அப்படியே வீட்டையும் பார்த்துக்கலாம். நல்ல முடிவுதான் " என கூறினார். " அதாண்ணே கையில் ஏதும் பணம் இல்லை. நகை கொஞ்சம் இருந்தது அதை எடுத்திட்டு போய் அடகு வச்சி பணம் புரட்டிட்டு வரலாம்னு டவ்ன்க்கு போறேண்ணே " என கலி சொல்வதற்கும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. "சரிண்ணே சாயந்திரம் பார்ப்போம்" என பேருந்தில் ஏறி இருக்கையை தேடினார் கலி.
சுனாமியில் பலர் உயிரிழந்தாலும் அதுவரை முன்னேற்றம் குறைவாக இருந்த இப்பகுதி மீனவ மக்கள் சுனாமிக்கு பிறகு பண புழக்கம் அதிகம் ஏற்பட்டு அதிக முதலீடு உடைய பல மீன்பிடி கலன்களையும், அதிக விலையுள்ள வலைகளை வாங்கியதன் மூலம் நிறைய மீன்களை அதாவது " மாப்" என்ற ஆங்கில வார்த்தையை தமிழாக்கி மாப்பு, மாப்பாக வரும் மீன்களை சுற்றி வளைத்து அப்படியே நவீன வலைகளால் பிடித்து , அதை தூக்கி ஒரு மீன்கூட தப்பிக்காதவாறு அள்ளி போடக்கூடிய எந்திரங்களையும் , எவ்வளவு மீன் அள்ளி போட்டாலும் அதை உள்வாங்கிகொள்கிற பெரிய வல்லங்களை பெற்றிருந்தனர். அதற்க்கு முதலீடு அதிகமாக தேவைப்படும் என்பதால் பங்குதாரர்களை அதிகப்படுத்தி ஒரு காலத்தில் நலிவடைந்திருந்த மீன்பிடி தொழிலை கூட்டு முயற்சியின் மூலம் நாளடைவில் லாபகரமான தொழிலாக்கியுள்ளனர்.
இந்த வல்லத்தில்தான் பங்குதாரராக ஆக வேண்டும் என்பதற்காக தனது நகையை பணமாக்கி அத்தொழிலில் சேர்ந்தார் கலி. அரசாங்கம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு தொந்தரவு இருக்ககூடாது என வருடத்தில் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை செய்திருந்தது. அந்த தடை செய்யப்பட்ட நாளில் கலி மற்றும் அவருடைய பங்குதாரர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து வலை மற்றும் கலன்களை தயார்படுத்தி எப்பொழுது தடைக்காலம் முடியும் எப்பொழுது நாம் போட்ட முதலீட்டுக்கு பலன் கிடைக்கும் என நாட்களை எண்ணத் தொடங்கினர்.
மே மாத இறுதியில் அந்த தடைக்காலம் முடிந்த முதல் நாள் அனைவரும் 45 நாட்கள் தொழிலுக்கு போகாமல் இருந்ததால் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் அவரவர்க்கு சொந்தமான இருவர் செல்லும் படகு, ஐவர் செல்லும் படகு, 40 பேர் ஒன்றாக செல்லக்கூடிய படகு, 10 நாட்கள் தங்கி இருந்து தொழில் செய்யக்கூடிய படகு என பலதரப்பட்ட படகுகளும் பல எண்ணங்களோடு புறப்பட்டனர். கலி பங்குதாரராக இருந்த வல்லத்தில் சுற்றுபட்டில் உள்ள பல கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்குதாரராக இருந்தனர். பங்குதாரர் இல்லாது தொழிலுக்கு சில இளைஞர்கள், பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருப்போர், மீனவர் அல்லாத பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்தவர்கள், வல்லத்தை இயக்குவோர் என நாற்பது பேருடன் கலியின் படகு ஆறும் கடலும் கலக்கும் முகத்துவாரத்தின் வழியே பயணப்பட்டது. அன்று என்னவோ வழக்கத்துக்கு மாறாக கடலின் சீற்றம் அதிகமாவே தென்பட்டது. எனினும் நீண்ட ஓய்வுக்கு பின்னர் தொழிலுக்கு சென்றதால் அது பெரிய விடயமாகவே எவருக்கும் தெரியவில்லை. மாறாக இன்னும் அதிக உற்சாகத்தையே தந்தது.
கலி கத்தாரில் தொழில் பார்த்தவர். அங்கு அதிகமாக தூண்டில்களால் தான் அரபிகள் தொழில் செய்து வந்தனர். இது போன்று பெரிய பெரிய வலைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அவர் இங்கு மீன்பிடிக்க சென்றிருந்தாலும் அவர் தொழிலுக்கு சென்ற காலங்களில் இருந்த வலைகளுக்கும் இவற்றுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. மேலும் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக தூண்டில் மூலம் மீன்பிடித்து பழக்கப்பட்டதால் இது அவருக்கு புதிதாகவே தோன்றியது. நடுக்கடலில் மீன் மாப் வருவதை கருவியின் மூலம் அறிந்து ஓட்டுனர் சொன்னதன் அடிப்படையில் அந்த இடத்தில் வலை பாய்ச்சியதில் இரண்டு மூன்று சிறிய படகுகள் கொள்கின்ற அளவுக்கு சிறிய வஞ்சிர மீன்கள் பிடிபட்டது. வல்லத்தில் இருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி. தொழிலுக்கு வந்த முதல் நாளே இவ்வளவு பெரிய மீன் கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இதன் மதிப்பு குறைந்த பட்சம் நான்கு லகரம். கலியும் உற்சாக மிகுதியில் இருந்தார். அதன் பிறகு வலை பாய்ச்சியதில் கொஞ்சம் இறால், கலப்பு மீன்கள் சிறிது என இருந்ததால் டீசல் சேமிப்புக்காக சரி இது போதும் என அனைவராலும் முடிவெடுக்கப்பட்டு கரை திரும்ப முடிவு செய்தனர். தொழில் கிடைத்த மகிழ்ச்சியில் வல்லத்தின் ஓட்டுனர் லச்சு ஒரு குத்து பாடலை முணுமுணுத்தவாறு சைனா எஞ்சின் பொருத்திய வல்லத்தை திருகியத்தில் கொஞ்சம் முன்னதாகவே கரையை நெருங்கி கொண்டிருந்தார். வல்லம் முகத்துவாரத்தை நெருங்கிகொண்டிருக்கும் பொழுது சற்றும் எதிர்பாரா வண்ணம் ஒரு பெரிய ராட்சத அலை ஒன்று உருவாகி வல்லத்தின் முகப்பை ஒரு பனைமர அளவு உயரத்திற்கு தூக்கி கீழே இறங்கியது. இறங்கியதும் லச்சு சுதாரித்து ஸ்டியரிங்கை சரி செய்வதற்குள் படகிலிருந்தோர் ஒரு பக்கமாக தள்ளப்பட்டு, வலையும் மொத்தமாக நழுவி அந்த பக்கமாகவே சென்றதில் வல்லம் நிலைகுலைந்து தண்ணீரில் திருப்பி போட்டவிதமாக கடலில் அமுங்க துவங்கியது. அதற்குள் வல்லத்தின் விளிம்பில் நின்ற பதினைந்துக்கும் மேற்பட்டோர் படகை தாண்டி குதித்து நீந்த துவங்கினர். நடு படகில் இருநதவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் படகின் அடியில் சிக்கிக்கொண்டு தத்தளித்தனர். தத்தளித்தவாறே நீந்தி மேலேழும்பினால் மறுபடியும் படகின் மீதே தலை முட்டி மறுபடியும் முங்கி நீந்தி நீந்தி சற்று தூரம் சென்று மேலெழும்பினர். இதில் நீச்சல் தெரியாத ஒருவர் தத்தளித்து போராடினார். அவரை இருவர் அருகில் சென்று நீந்திக்கொண்டே மீட்க்க முயற்சி செய்தனர் ஆனால் அவர் இடுப்புக்கு கீழே வலை சுற்றி இருந்ததால் அவரை மீட்க்க இயலவில்லை. சரி தங்களையாவது காப்பாற்றிக்கொள்ளலாம் என இருவரும் கரையை நோக்கி நீந்த துவங்கினர். கலியும் படகின் அடியில் சிக்கிக்கொண்டு நீண்ட முயற்சிக்கு பின் படகின் அருகில் வெளியேறினார். ஆனாலும் அவர் படகின் அடியிலேயே அனைத்து வீரியத்தையும் இழந்ததால் அவரால் நீந்த கையை புரட்டமுடியவில்லை. அதை கவனித்த அருகில் நீந்திகொண்டிருந்த அவரது உறவினரான முருகன் அவர் அருகில் நீந்தி சென்று கலியின் கையை பிடித்துக்கொண்டு நீந்த துவங்கினார். கலியும் காலால் மட்டும் முயற்சி செய்தவாறு நீந்த துவங்கினார். அவரால் முடியவில்லை சிறிது தூரம் சென்றதும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரை பிடித்திருந்த முருகனின் கையை உதறிவிட்டு சிறிது சிறிது கடலில் முங்க துவங்கினார்.
பத்தாயிரத்திருக்கும் மேற்பட்ட மக்கள் அரசு இயந்திரங்கள், அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மீன்துறை அலுவலர்கள் என ஒரே கூட்டம். தொலைக்காட்சி நிருபரிடம் அமைச்சர் " அவர்களாகவே எவ்வளவோ முயற்சி செய்தும் மூவரின் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாயிற்று. முதல்வர் அவர்கள் மூவர் குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் வழங்கியிருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்க்கு இது ஈடாகாது. தடைக்காலம் முடிந்த முதல் நாளே இது நடந்தது அனைவரையும் பீதிகொள்ள செய்துள்ளது" என சொல்லிவிட்டு மறைந்தார்.
கலியின் வீடு.... குதறப்பட்ட அவர் உடலை அழக்கூட திராணி இல்லாமல் வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தார் அவர் மனைவி  . " அந்நிய கடலு அன்பா பார்த்துகிச்சு, பக்கத்துலையே உள்ள கடல் பலி வாங்கிடுச்சே எம் மவனே!" என்ற வயதான அம்மாவின் ஒப்பாரி மனதை பிசைந்தது.
"ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்" என்ற பாடல் எப்.எம்.ல் எங்கோ சன்னமாய் ஒலித்தது.

No comments:

Post a Comment