Wednesday, 17 July 2013

Story-46 வோல்காவோல்கா

  


நாலைந்து நாட்களாகவே அவனுக்கு வயிற்று வலி. அலுவலக நண்பர்கள் எல்லாம் அவனை வைத்தியரிடம் போகச் சொன்னார்கள்.

ஒரு பெரிய தார் சாலையில், உடைந்து போன ஒரு கட்டிடத்தின் ஒரு முடுக்கில் இடுக்கிக்கொண்டு இருந்தது அவரின் அறை. அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் எமதர்மராஜா வந்து நேரில் அழைப்பதுப் போல் கவலை அப்பியிருந்தது. அவர்களின் சோகம் இவனையும் இவன் வயிற்றுவலியையும் இன்னும் அதிகப்படுத்துவதாகத் தோன்றியது அவனுக்கு.

உள்ளே போனவனை அவர் படுக்க வைத்து அவனின் வயிற்றை ஏதோ கொட்டு வாத்தியம் போல் தட்டிப் பார்த்தார். பெயர் வாயில் நுழையாத பெரிய புழு ஓன்று அவனின் வயிற்றுக்குள் இருப்பதாகச் சொன்னார். மேஜையில் வைத்திருந்த கண்ணாடி குப்பிகளில் ஒன்றை மட்டும் எடுத்து குலுக்கி உள்ளங்கையில் ஒரு மாத்திரையைக் கொட்டி அவனிடம் நீட்டினார். அதை சாப்பிட்டால் அந்த புழு செத்து வெளியே வரும் என்றும் அன்றிரவே அதை சாப்பிட வேண்டும் என்றும் சொன்னார். இல்லையெனில் அந்த புழு பெரிதாகி ஆசனவாயை அடைத்துவிடும் என்று பயம் காட்டி அனுப்பிவிட்டார்.

 டாக்டரைப் பார்த்துவிட்டு வந்ததில் இருந்து அந்த பெரிய புழு தன் கண்களை உருட்டி நாக்கை நீட்டி அவனை முழுங்கப் போவதுப் போல பாவனைக் காட்டுவதாகத் தோன்றியது. அவன் வயிற்று பகுதி முழுதும் பெரிய ரஷ்ய நாடு மாதிரியும் அந்த புழு அதுக்குள்ளே ஓடும் ஒரு ஆறு மாதிரியும் அவனுக்குத் தோன்றியது. அப்போதுதான் அவனுக்கு அதற்கு ஒரு பெயர் வைக்கும் யோசனை வந்தது. வோல்கா நதியின் ஞாபகம் வந்தது. பெயர் சூட்டினான் அந்த புழுவுக்கு வோல்கா என்று.

வீடு திரும்ப பேருந்தில் ஏறி அமர்ந்தான். பேருந்தின் குலுக்கலுக்கு வயிறு வலித்தபோது வோல்கா உள்ளிருந்து தன்னைக் கடிப்பதாய் நினைத்தான்.

வீட்டுக்குச் சென்றவுடன் மாத்திரையை சாப்பிட எடுத்தான். வாயில் போடும் முன் அவனுக்கு ஒரு பயம் வந்தது. அவர் கூறிய மாதிரி இறந்து வெளி வந்தால் சரி. அப்படியில்லாமல் உயிரோடு வெளியே வந்தால் என்ன செய்யும்...அது மிக பெரிய புழு என்று சொன்னாரே...வெளியே வந்து தன்னை சாப்பிட்டுவிடுமோ என்றும் நினைத்துக் குழம்பினான்.
பயந்துப்போய் அன்று மாத்திரையை சாப்பிடவில்லை. மறுநாளும் மாத்திரை எடுத்துக் கொள்ளவில்லை. இப்படியாக ஐந்து நாட்களாய் பயத்தினால் வோல்காவுடன் சங்கடத்துடன் அவனால் வாழ நேரிட்டது.

இரவுகளில் புரண்டு படுத்தபோது அது தன் பக்கத்தில் படுத்திருப்பதாய் நினைத்து வெடவெடத்துப் போய் எழுந்தான். பகல் முழுவதும் அப்படியே அதனுடன் குடித்தனம் நடத்தினான். சவரம் செய்யும் போது லேசாய் ஏற்பட்ட கீறலுக்கு அது வயிற்றுக்குள் இருந்து தன்னை எட்டிப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிப்பதாய் நினைத்தான்.  

அவன் குனிந்து எதையாவது எடுத்தால் தன்னை நசுக்குவதாக ஒரு கடியுடன் அவனிடம் புகார் கூட செய்தது சில சமயங்களில். அந்த ஐந்து நாளும் அவனும் வோல்காவுமாய் உண்டு உறங்கி வலியுடன் வாழ்ந்தார்கள்.

சாப்பிடும் போது மட்டும் பழைய படங்களில் வரும் பூதத்தின் வாயை போல் திறந்து வைத்து இவன் சாப்பாட்டை அது முழுங்கக் காத்திருப்பது தெரிந்தது. தன் உணவை அதனுடன் பகிர்ந்து கொள்ள அவனுக்கு பிடித்தமில்லை. லேசாய் கோபம் எட்டிப் பார்த்தது அவனுள்.

சாப்பிடுவதை நிறுத்திவிட்டான். காப்பி வேண்டாம் என்றான். டீ வேண்டாம் என்றான். அலுவலகத்தில் அனைவரும் அவனை அதிசயமாய்ப் பார்த்தார்கள். ஒருத்தரிடமும் காரணம் சொல்ல விருப்பமில்லை. ஒரு புழு தன்னை படுத்துவதாகச் சொன்னால் கைக் கொட்டிச் சிரிப்பார்கள் என்று எண்ணினான். அதனால் யாருடனும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. அவனின் முதுகுக்கு பின்னால் குசுகுசுவென்று பேசினார்கள். புதிதாய் காதலி கிடைத்திருப்பாள் என்றெல்லாம் கூட பேசினார்கள். அவன் கண்டுக் கொள்ளாமல் இருந்தான். 

ஆனால் வோல்காவோ அவனை விடுவதாக இல்லை. அவனுடைய சாப்பாட்டையும் சாப்பிட்டு அவன் வயிற்றின் சுவர்களையும் கடித்து வலிக்க வைத்தது. அவனுக்கு பிடிக்காத அதனின் இந்த வேலையை மட்டும் பிடிவாதமாய் செய்துக் கொண்டிருந்தது. நாளாக நாளாக அவன் இரத்தத்தை அவனுக்கே காட்டியது. வலியின் உச்சம் கண்டு வந்தான். 

அன்றிரவு அதை கண்டிப்பாக ஒழித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான். சாப்பிடும் முன் மாத்திரையை எடுத்து முழுங்கினான். சந்தோஷமாய் இங்கும் அங்கும் உலவினான்.

இரவில் வயிறு சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அவனுக்கோ, ‘ஏய் முட்டாள், மாத்திரையை ஏன் சாப்பிட்டே...நான் இறந்தால் உனக்கு அந்த பாவம் வந்து சேரும்...’ என்று வோல்கா உள்ளிருந்து ஓலமிடுவதாகவேப் பட்டது. ‘என் உணவை நீ பிடுங்கலாமா?’ என்று அதனுடன் சண்டையிட்டான். நிம்மதியாய் தூங்கிப் போனான்.

காலையில் அது இறந்துபோன துக்கச் செய்தியை அறிந்தான். சந்தோஷமாய் சவரம் செய்தான். குளித்து சட்டை மாற்றினான். சாப்பிட உட்கார்ந்தான். இருந்தும் ஏதோ ஓன்றை தொலைத்துவிட்டு தான் மட்டும் சந்தோஷமாய் இருப்பதாக உணர்ந்தான்.

அவன் உணவை சில நாட்களாய் பகிர்ந்து கொண்டிருந்த வோல்கா இப்போது இல்லாதது அவனுக்கு ஏதோ போல் இருந்தது. சாப்பிடாமலே எழுந்தான். அதை கொன்றுவிட்டு நாம் மட்டும் சாப்பிடுகிறோமே என வருத்தப்பட ஆரம்பித்தான் அந்த நிமிடத்திலிருந்து. கறுப்புநிற சட்டைக்கு மாறினான்.

இன்று முழுவதும் இறந்து போன வோல்காவிற்காக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தான். அலுவலகத்தில் இன்றும் அவனை ஒருமாதிரியாக பார்த்தார்கள்....

No comments:

Post a Comment