Wednesday, 31 July 2013

Story-88 தழைக்கும் குலம்



தழைக்கும் குலம்
 
உலகில் இனி உலா வரப்போகும் கதைகள் அனைத்தும் வியாசரின் எச்சமே - வியாசரை பற்றிய முதுமொழி

எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது - வியாசரின் முதுமொழி 

எம்டன் கப்பல் மதராசை தாக்கியதற்கு அடுத்த நாள் என் தந்தை இறந்தார். தாக்குதலுக்கும் என் தந்தைக்கும் தொடர்பு இல்லை என்ற போதும்  இப்படி நினைவில் வைத்து கொள்வது வசதியாய் இருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு நான் என் தந்தையின் அறையிலேயே இருந்தேன். தனிமையாக உணரும் பொழுதெல்லாம் அவர் வாங்கிய நூல்களை புரட்டிக் கொண்டிருந்த போதுதான் அவரது நாட்குறிப்பும் கண்ணில் சிக்கியது. அதை வாசித்த பின் நான் நிம்மதியை முற்றிலுமாக இழந்திருந்தேன். உடனே திருவண்ணாமலைக்கு புறப்பட வேண்டுமென்று என் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. முப்பது வருடங்கள் கடந்து விட்டதை, இனி தேடிக் கண்டடைவது சிரமம் என்பதை நான் மறக்க விரும்பினேன். நான்கு நாட்களுக்கு தேவையான துணிகளை எடுத்துக் கொண்டேன். என் அம்மா 'எங்கடா திடீர்னு கெளம்பீட்ட?' என்றார். 'திருவண்ணாமலைக்கு' என்றேன். இதை நான் சொன்ன போது அவர் முகம் மாறியதை கவனிக்கத் தவறவில்லை.

திருவண்ணாமலையில் ஈசனடியார் வீட்டை கண்டுபிடிப்பது அத்தனை சிரமமாக இருக்கவில்லை. கதவை திறந்தவர் என்னை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். 'உள்ளார வாங்க' என்றார். 'என்னை உங்களுக்கு தெரியுதா?' எனக் கேட்டேன். 'உங்க முகத்தை தெரியும்' என்றார்.

'இப்ப எதுக்கு வந்தீங்க?'

'என் தந்தையை பார்க்க'

'அவர் இங்கே இல்லை. ஈசனடியார் அவரது தம்பியை கொன்று விட்டு முப்பது வருடங்களுக்கு முன்பே காசிக்கு சென்று விட்டார். அதன் பிறகு அவர் திருவண்ணாமலைக்கு வரவே இல்லை.'


'
காசியில் எங்கே இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?'

'அது தெரியாது. அவர் காசிக்கு சென்ற போதே வயது அறுபதுக்கும் மேல். இப்போது உயிரோடிருப்பாரா என்பதே சந்தேகம் தான். பழசை எல்லாம் மறப்பது தான் உங்களுக்கு நல்லது'

'என் பிறப்பு குறித்து நீங்களாவது சொல்லுங்களேன். நீங்கள் ஈசனடியாருக்கு என்ன உறவு?'

'நான் அவரது பெரியப்பா மகன். எனக்கு அதிகம் தெரியாது. எங்களது குலமே மருத்துவ பரம்பரை. குழந்தை பேரில்லாத தம்பதிகளுக்கு அவர் ஒரு மருத்துவராக மட்டுமல்லாது சித்தராகவும் உதவுவார். நீங்கள் அவர் முகம் கொண்டுள்ளீர்கள். அவரும் அவர் தம்பியும் மட்டுமே இந்த காரியத்தை செய்து வந்தார்கள். இப்போது இருவரும் இல்லாது போனபின் அவர்களது குலத் தொழில் தழைக்கவில்லை. மேலதிக விபரங்கள் அறிய நீங்கள் காசிக்குதான் செல்ல வேண்டும்'

காசி வந்து மூன்றாவது தினம் ஈசனடியார் என்னை அடையாளம் கண்டு என்னருகே வந்தமர்ந்தார்.

'உன் தந்தை பெயரென்ன?' என்றார்.

'நீங்கள் தான் என் தந்தை' என்றேன்.

'உன் தந்தை பெயரென்ன?' என்றார் மீண்டும். 'கிருஷ்ணராஜ் ' என்றேன். 'ஓ.. இப்போது இங்கு எதற்கு வந்தாய்?' 

'உண்மை தெரிய வேண்டும்.எல்லா உண்மைகளும்' என்றேன்.
எங்கிருந்து ஆரம்பிப்பது என அவர் தடுமாறுவது போலிருந்தது.

'இப்படி எத்தனை பேருக்கு பிள்ளை வரம் கொடுத்திருக்கிறீர்கள்?' என்றேன் கோபத்துடன்.

'இருபது. உன் தாய் தான் கடைசி'

ஏன் உங்கள் தம்பியை கொன்றீர்கள்?

'நான் கருவுற வரும் பெண்களின் முகங்களை பார்த்ததே இல்லை. கறுப்புத் துணியால் முகத்தை இறுக்கக் கட்டிக் கொள்ள சொல்வேன். முத்தங்களோ ஆடை களைதலோ ஆலிங்கனமோ இல்லை.அங்கங்கள் குலையாமல் நேரடியான புணர்ச்சி. என் மனமெல்லாம் ஈசனை தவிர வேறேதுமில்லை. ஒரு முறை புணர்ந்தவுடனேயே கரு கூடிவிடும். இரண்டாம் முறை கருவுற வேண்டி எந்தப் பெண்ணும் வந்ததில்லை. ஆனால் இராண்டாம் முறையாக உன் அம்மா வந்தாள். என் மனமெல்லாம் பதறி விட்டது. ஈசனே என்னை ஏன் சோதிக்கிறாய் என கேட்டேன். உன் அம்மாவை தனியாக அழைத்துப் பேசினேன். நான் புணர்ந்த ஒரு பெண்ணின் முகத்தை அப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன். ஆனால் உன் அம்மா வேஷக்காரி என்பது எனக்கு புரிந்துவிட்டது. உன் தகப்பனோடு வாழ்வது அவளுக்கு பிடிக்கவில்லை. கரு உண்டான போதெல்லாம் அதை கலைத்து உன் தந்தையை மலடு என நம்ப வைத்திருக்கிறாள். என்னோடு இருந்த கணங்கள் அவளுக்கு இன்பமாக இருந்தனவாம். ஆதலால் என்னுடன் கூடியதால் உண்டான கருவையும் கலைத்து விட்டு இரண்டாம் முறை கூட வந்திருக்கிறாள். இந்த பதில் என்னை பல நாட்கள் அலைக்கழித்தது. நான் நீ இப்போது உருவாகி வந்திருக்கும் வித்தை அவளுக்கு வழங்கி விட்டேன். இதுவே கடைசி என்பதையும் முடிவு செய்தேன். இந்தக் குல வழியில் கருவுற  உதவ என் தம்பியும் வர நேர்ந்ததனால் அவனை கொன்று காசி வந்து சேர்ந்தேன்.' என்றார் 

எங்களிடயே கனத்த மௌனம் நிலவியது. 'நீதான் என் இறுதி வித்து.' என்றபடி எழுந்தார். நான் கண்ணீரோடு அவர் கால்களில் விழுந்தேன். என் தலை தொட்டு ஆசீர்வதித்த அவர் என் நெற்றியில் திருநீறு பூசி காவி சூழ்ந்த நகரில் கரைந்தார். நான் அவர் போவதையே நெடுந்தூரம் வரை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

No comments:

Post a Comment