Thursday 25 July 2013

Story-62 நெஞ்சம் மறப்பதில்லை



நெஞ்சம் மறப்பதில்லை

'வைராத்தா சாகப் போறாளாம்' செய்தியைக் கேட்டது முதல் வழுவூரானுக்கு மனசு அடித்துக் கொண்டது. வழுவூரான் என்பது அவரது குடும்பத்திற்கான பட்டப் பெயர். கிராமங்களில் ஓட்டு வீடுபர்மாக்கார வீடுகணக்கப்பிள்ளை வீடு மூத்தவன் வீடு... என ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பெயர் இருக்கும். சீனி என்பதுதான் அவரது நிஜப்பெயர். குடும்பப் பெயரான வழுவூரான் என்று சொல்லிச் சொல்லி இன்று அதுவே அவரின் பெயராகிவிட்டது. ஊரில் சின்னஞ்சிறுசுகளுக்கு எல்லாம் வழுவூரான் என்றால்தான் தெரியும். சீனி என்றால் தெரியாது. ஒரு முறை இப்படித்தான் ஒரு போலீஸ்காரர் இடப்பிரச்சினை சம்பந்தமாக இவரைத் தேடி வந்து கோவில் பொட்டலில் விளையாடிய சின்னப்பயலுகளிடம் சீனி வீடு எங்கன்னு விசாரிக்க, சீனின்னு இங்க யாருமில்ல தப்பான இடத்துக்கு வந்திருக்கீங்கன்னு அவரை சுத்தல்ல விட்டுட்டாங்க... அப்புறம் அந்தப்பக்கமா வந்த மணி என்ன ஏதுன்னு விசாரிச்சு வழுவூரான் வீட்டுக்கு வழி சொல்லிட்டுப் போனாரு. அப்பத்தான் பயலுகளுக்கே அவரு பேரு தெரியும். இருந்தாலும் சீனின்னு யாரும் சொல்றதில்லை எல்லாரும் வழுவூரான்னுதான் சொல்லுவாங்க.
"முடியாமக் கெடக்கான்னு தெரியும்... ஆனா மோசமா இருக்காமா... இப்போ அம்மாவாசையோ பாட்டுவமோ இல்லையே பட்டுன்னு தூக்குறதுக்கு... கஷ்டப்படப்போறாளே..." என்றார் தன்னிடம் செய்தி சொன்னவரிடம்.
"அமாவாசை பாட்டுவமெல்லாம் இப்போ இல்ல... இருந்தும் நேத்து ராத்திரியில இருந்து சாப்பாடு தண்ணியில்லயாம்... எல்லாம் அடங்கிருச்சாம்... தொண்டைக்கும் நெஞ்சுக்குமா கெடக்குதுன்னு இப்போதான் சத்தி சொல்லிட்டுப் போறான்..."
"யாரு... மூத்தகுடியான் மவந்தானே..."
"ஆமா... அவனுக்கு அப்பனோட பொறந்த அயித்தையில்லையா... அதான் போயி பாத்துட்டு வாரான்... இன்னைக்கு தாங்குறது கடுசுன்னு சொன்னான்..."
"அடப்பாவமே வைரீயான மனுசி அவ... ம்... என்னைக்கா இருந்தாலும் போகத்தானே வேணும்... யாருக்குங் கெடுத நெனைக்க மாட்டா... பாவம் கெடையா கெடந்து படாதபாடு பட்டுட்டா... அவ பெத்ததுக மட்டுமில்லாம வந்ததுகளும் நல்லா பாத்துச்சுக..."
"ஆமா... மருமக்கமாரு நல்லாப் பாக்குதுன்னுதான் எங்க மூத்தவ மக வந்து சொல்லும்... என்ன பண்றது வாழ்ந்து முடிச்சிட்டா கெடக்காம பொட்டுன்னு போயிடனும்..."
"ம்... சாவுறது நம்ம கையிலயா இருக்கு... மேலயிருக்கவன் நெனச்சா நடக்கும்..." என்றார். வைராத்தா பற்றி வந்தவர் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினார்.
***
"இந்த வெயில்ல எங்க கெளம்புறீக..?" கமலம் தயிரைக் கடைந்தபடி கேட்டாள்.
"இல்ல... வைரத்தா நெஞ்சுக்கும்  தொண்டக்குமா இழுத்துக்கிட்டு கெடக்காளாம்... ஒரு எட்டுப் போயி உசுரோட பாத்துட்டு வந்திடுறேன்..."
"ஆமா... சத்திப்பய பொண்டாட்டி நேத்தே சொன்னா... ரொம்ப சீரியசாக் கெடுக்குதாமுன்னு இங்க இருக்கிற வேலவெட்டியே செரியா இருக்கு... எங்கிட்டுப் போக முடியுது... அதுக்கு இந்த வெயிலுல போவனுமாக்கும்... பொழுசாயப் பொயிட்டு வரலாமுல்ல..."
"அம்புட்டு நேரந்தாங்குமோ என்னவோ... வெயிலப் பாத்தா அதை உசுரோட பாக்க முடியுமான்னு தெரியல... ஒரு எட்டு பொயிட்டு வந்துடுறேனே..."
"செரி... சொன்னா கேக்கவா போறீக... இந்த மோரக்குடிச்சிட்டுப் போங்க... கையில கொடைய எடுத்துக்கிட்டுப் போங்க இல்லாட்டி துண்ட தலைக்குப் போட்டுக்கங்க..." என்றபடி கடைந்த மோரில் வெண்ணையை ஒதுக்கி ஊற்றி உப்புப் போட்டுக் கொடுத்தாள்.
சித்திரை மாசத்து வெயில் சுள்ளென்று அடித்தது. தலையில் குத்தாலம் துண்டைப் போட்டுக் கொண்டு அருகிலிருக்கும் வைராத்தாவின் ஊருக்கு நடக்கலானார். அந்த ஊரில் வைராத்தா என்றால் பலருக்குத் தெரியாது. அவளை சேந்தக்குளத்தான்னாத்தான் தெரியும். பெரும்பாலும் பெண்களை பொறந்த ஊரைச் சொல்லி அழைப்பதும் ஊருக்கு வந்த மாப்பிள்ளைகளை தாழையூரான், அட ராயவரத்தான் என்று அழைப்பதும் கிராமங்களில் சகஜமான ஒன்றுதான்.
இடுப்பில் கட்டியிருந்த பச்சை இடைவாரின் ஜிப்பைத் திறந்து ஓம்முருகா சுருட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு தீப்பெட்டி எடுத்து பற்றவைத்து உள்ளே இழுத்தார்.
"இங்க பாரு சீனி... நாம இப்படி ஒளிஞ்சு ஒளிஞ்சு பேசுறது ஒருநா இல்லாட்டி ஒருநா எல்லாத்துக்கும் தெரியப் போகுது... அன்னைக்கு நமக்கு செமப்பூச இருக்கு... என்னன்னு சொல்லு... ஆத்தா வந்திடப் போகுது...” இரு வீட்டுக்கு இடையிலான சந்துக்குள்ளே மெல்லிய குரலில் கேட்டாள் வைரத்தா.
"எதுக்கு பயப்படுற புள்ள... ஊருல ஒலகத்துல செய்யாத்தையா நாம செய்யிறோம்... இன்னும் கொஞ்ச நாளாகட்டும் நாமளெ சொல்லிக் கட்டிப்போம்... சரி கம்மாக்கு குளிக்கப் போறெ... தண்ணி எடுக்கிற மாரியோ... இல்லாட்டி வெளிய போற மாரியோ வா புள்ள... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..." என்றபடி சந்துக்குள் இருந்து வேகமாக வெளியேறினார்.
***
கம்மாக்கரைக்கு வெளிப்பக்கமாக கருவை மரங்கள் நிறைந்த மடக்கரையில்...
"பேசணுமின்னு வரச்சொல்லிட்டு என்னயவே வச்ச கண்ணு வாங்காம பாத்துக்கிட்டிருக்கே... என்னமோ இன்னக்கித்தான் பாக்குறமாரி ஒனக்கென்ன கிறுக்குப் பிடிட்டிருக்காலெ..." சீனியின் இடுப்பில் சீண்டிய வைரத்தா கூஜா கை வைத்த சட்டையும் பிரில் வச்ச பாவாடையும் போட்டிருந்தாள்.
"இந்த சட்டையில நீ அழகா இருக்க புள்ள..."
"ஆமா... நானெல்லாம் ஒரு அழகியா... என்ன பத்மினி கணக்காவா இருக்கேன்... வாய்க்கு வந்ததை சொல்லாதப்பா..."
"அட உண்மைதாம்புள்ள... எனக்கு நீதான்டி சீமையழகி..."
"ரொம்பத்தான் கொழையிறே... என்னான்னு சொல்லு எவளாவது வரப்போறாளுக..."
"ஒனக்கு ஒண்ணு வாங்கிட்டு வந்தெ... அதை கொடுக்கலாமுன்னுதான் வரச் சொன்னெ..."
"என்னது மல்லியப்பூவா... மரிக்கொழுந்தா..."
"நாட்டுப்புறம்..." என்று தலையில் கொட்டிய சீனு "பூவும் இருக்கு... இன்னொன்னும் இருக்கு..."
"மல்லியப்பூ வச்சிக்கிட்டுப் போனா எங்காத்தா ஏதுடின்னு கேட்டு தொலச்சுப்புடும் தொலச்சு... பேசாம கோயில்ல போட்டுட்டுப் போ... ஆமா இன்னொன்னு என்ன..." ஆர்வமாய் கேட்டாள்.
"ஒனக்குன்னு வாங்கியாந்தா சாமிக்கு போடச் சொல்லுறெ... போபுள்ள... ஆசயா  வாங்கியாந்து யாருக்குந் தெரியாம ஒளிச்சிக் கொண்டாந்தெ தெரியுமா?"
"சரி வச்சிக்கிறெ... வீட்டுக்கு கொண்டு பொயிட்டு சாயந்தரம் வெளக்கு வக்கிம்போது வச்சிக்கிறெ... ஆத்தா கேட்டா காந்தி கொடுத்துச்சின்னு சொல்லிடுறேன்... ஆமா இன்னொன்னு என்ன?"
"அது.. அது... இதாம்புள்ள..."
பிளாஸ்டிக் கவருக்குள் வெள்ளையாய் சிரித்தது அது.
"இது என்னாது..."
"ஒனக்காக வாங்கினெ... சொல்ல வெக்கமா இருக்கு..."
"கொண்டா நானே பாத்துக்கிறெ..." என்றபடி வாங்கிப் பிரித்தவள், "என்னாதிது..." என்றாள்.
"புரா புள்ள... சினிமாவுல நடிக்கிறவங்கல்லாம் இதுதான் போடுவாங்களாம்... பசங்க சொன்னாங்க..."
"இது புரான்னு எங்களுக்குந் தெரியும்... நான் புராப் போட்டதேயில்லை... எங்காத்தா சந்தைக்குப் போகும்போது ஒனக்கு புரா வாங்கனுமின்னு சொல்லும் அப்புறம் வாங்கித் தராது. கேட்டா சும்மாவே நெஞ்சு அசிக்கமா இருக்கு... இதுல இதையும் போட்டு தூக்கி காட்டணுமான்னு சொல்லும்... இனி பாவாடை தாவணிதான் போடணுமின்னு சொல்லியிருக்கு... இதப் போட்டுப்பாக்க எனக்கும் ஆசதான்... ஆனா எங்காத்தா பாத்தா உறிச்சிப்புடும்... அப்படியே போட்டாலும் நீ எப்படி பாப்பே...?" படபடவென பேசிவிட்டு "சீ... கருமம்... உங்கிட்ட போயி எல்லா பேசுறேன் பாரு..." என்று நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
"அதல்லாம் நீ போட்டிருக்கியா போடலையான்னு நா கண்டுபிடிச்சிருவேன்... கட்டிக்கப் போறவங்கிட்ட சொன்னா என்னபுள்ள தப்பு... கல்யாணத்துக்கு அப்புறம் முழுசா பாக்கப் போறவந்தானெ நானு..."
"நீ சேர்ற பயலுவ சரியில்ல... அம்புட்டு கெட்டுக் குட்டியசுவரானதுக... அதான் நீயும் கெட்ட கெட்ட வாத்தையா பேசுறெ.."
"ஆமா... இது கெட்ட வாத்தையா ஒனக்கு... சரி இந்தா பொழுசாய அதை போட்டுக்கிட்டு... இதை வச்சிக்கிட்டு அம்மங்கோவிலுக்கு வா..."
"சரி... சரி... நா போறெ...
கண்மாய்க்கு குளிக்க வரும் பெண்கள் சத்தம் கேட்க சட்டைக்குள் மறைத்துக் கொண்டு வேகமாக வெளியேறினாள். சீனியும் வயல் பக்கமாக இறங்கி நடக்கலானார்.
***
"சீனு என்னால எதுவும் சொல்ல முடியலடா... நீயாவது மாமாகிட்ட சொல்லியிருக்கலாமேடா..." கழுத்தில் புது மஞ்சள் கயிறு தொங்க தண்ணிக்கு வந்தவள் கம்மாக்கரையில் நின்ற சீனுவிடம் கண்கலங்க கேட்டாள்.
"அப்பாகிட்ட பேசுனெம்புள்ள... ஒன்ன விரும்புறென்னு சொல்லல... அதுக்கு தகிரியம் வரல... கண்ணாலம் கட்டிக்க ஆசப்படுறென்னு  சொன்னெ... அதுக்கு அவரு ஒங்க ரெண்டு பேரையும் பத்தி அரசல்புரசலா ஊருக்குள்ள பேசுறாய்ங்க... இதெல்லாம் நல்லதுக்கு இல்ல தம்பி... உனக்குப் பின்னாடி பொம்பளப்புள்ளக வெளஞ்ச பயிராட்டம் வளந்து நிக்கிறாளுங்க... உனக்கென்ன இப்ப கலியாணததுக்கு அவரசரமுன்னு சத்தம் போட்டுட்டாரு..."
"நா ஒன்னய கட்டிக்கிட்டு ஒங்கூட குடும்ப நடத்தணுமின்னு கனாக் கண்டுக்கிட்டிருந்தெ... மாரியாத்தா ஏமாத்திட்டாடா..."
"அப்பாகிட்ட நா வைரிய எனக்கு பேசியாவது வையுங்கன்னு சொன்னதுக்கு அவளுக்கு சொந்தத்துல நல்ல வரன் வந்திருக்கு நீ அதை கெடுக்கச் சொல்லுறியான்னு சொல்லி என்னைய செட்டியாரு வீட்டு கணக்குப்பிள்ளயா தஞ்சாவூரு மில்லுக்கு அனுப்பிட்டாரு புள்ள... அப்புறந்தான் எல்லாம் முடிஞ்சி போச்செ..."
"என்னால ஒன்னோட நெனப்ப தாங்கிக்கிட்டு வாழத்தெரியாமெ தவிக்கிறன்டா..."
"அழுவாதபுள்ள ராசகோவாலு மாமா வாறாரு... ஒன்னோட வாழ்க்கய சந்தோஷமா வாழுபுள்ள...நா கெளம்புறெ..."
முடிந்த சுருட்டை தூக்கி எறிந்துவிட்டு முத்துக்கண்மாயில கொஞ்சமா கெடந்த மண்டித் தண்ணிய அள்ளி வாயைக் கொப்புளிச்சிட்டு முதுகுல தண்ணிய அள்ளி ஊத்திக்கிட்டு வெயிலு இதமா குளுகுளுன்னு இருக்க மெதுவாக நடக்கலானார்.
வைராத்தாவுக்கு கல்யாணம் ஆகும் போது பதினேழு பதினெட்டு வயசிருக்கும்... அவ புருசன் சமையல்காரரா இருந்து நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி தவறிப் பொயிட்டாரு. வாழப்பிடிக்கலைன்னு சொன்னவளுக்கு மூணு பயலுக... மூணு பொட்டப்புள்ளக... எல்லாம் நல்லா இருக்குக... மூணாவது பய பேரு சீனிவாசன்... வழுவூராரும் அவரோட மகளுக்கு வைராத்தான்னு வச்சிருந்தாரு. அவங்க காதல் புள்ளங்க பேருல முடிஞ்சிருச்சி...
"வாங்க பெரிப்பா..." மூத்தவன் கைகளை பிடித்துக் கொண்டான்.
"எப்படியிருக்கு...?" துக்கம் தொண்டையை அடைத்தது.
"சொல்லிக்க ஒண்ணுமில்ல பெரிப்பா... தொண்டக்கும் நெஞ்சுக்குமா இருக்கு... எப்பன்னு சொல்ல முடியாது..." கண்களில் தேங்கிய நீரோடு சொன்னான்.
அவளருகில் போனவர் "ஏய்...புள்ள வைராத்தா... வைராத்தா..." என்று கூப்பிட்டார், அவருக்கு குரல் வரவில்லை.
"ஆத்தா... சேந்தங்குளத்துப் பெரிப்பா வந்திருக்காக... அதுக்கு எதுவும்மே தெரியல பெரிப்பா... உசுரு போகப்போற நேரத்துல யாரைத் தெரியும்... ஆமா எதுக்கு இந்த வேகாத வெயில்ல வந்திருக்கீக... அதான் ஆனதும் சொல்லிவிடுவோமுல்ல..."
"இல்லப்பா... அதை உசுரோட பாக்கணுமின்னு எனக்கு ஆச... அதான் வெயிலப் பாக்காம வந்திட்டெ... வைராத்தா.. நா வழுவூரானாக்கும்... வழுவூரான் வந்திருக்கே..."
"பெரிப்பா உங்களை வழுவூரான்னு யாரையும் சொல்ல விடாது ஆத்தா... அவருக்கு சீனியின்னு அழகான பேரு இருக்கும் போது என்ன வழுவூரான்னு கூப்பிடுறீங்கன்னு சத்தம் போடும் நானே நிறைய தடவை திட்டு வாங்கியிருக்கேன்..."
"ம்... அது எப்பவும் சீனியின்னுதான் கூப்பிடும்... அதுக்கு அதுதான் பிடிக்கும்..." என்றபடி அருகே அமர்ந்தார்.
"பெரிப்பா... ஆத்தா இந்த பேப்பருக்குல்ல எதையோ சுத்தி பெட்டிக்குள்ளே வச்சிருந்துச்சி... யாரையும் தொட விடாது... பொத்திப் பொத்தி பூட்டி வைக்கும்... முடியாம விழுந்து கெடந்தப்போ என்ன நெனச்சிச்சோ தெரியலை என்னய எடுக்கச் சொல்லி இதை நா செத்ததும் உங்க சீனி பெரிப்பாக்கிட்ட கொடுத்துடு... யாரும் பிரிச்சிப் பாக்கக்கூடாதுன்னு சொன்னுச்சு... நானும் வாங்கி வச்சேன்.. என்னன்னு பாக்கல... உங்களுக்கு தெரியிதா  பாருங்க... இந்தாங்க..." சின்னவள் அந்த பொட்டலத்தைக் கொடுத்தாள்.
பழுப்பேறிப பேப்பர் மேல பேப்பர் சுத்தப்பட்டடு, ரப்பர் பேண்ட் போட்டு பிரிக்காத வண்ணம் சுத்தப்பட்டிருந்த அதை வாங்கி என்னவா இருக்கும் என்று யோசித்தபடி... மெதுவா பிரித்தவர் உள்ளே மஞ்சள் பழுப்பேறி வெள்ளை மங்கிய நிலையில் இருந்த அதைப் பார்த்ததும் 'ம்... என்னமோ வச்சிருக்கா... அவளே போகப்போறா என்னவா இருந்தா என்ன... செத்தப்புறம்தானெ பாக்கச் சொன்னா... என்ன அவசரம்... எதுவா இருந்தா என்ன... நான் போறவரைக்கும் வச்சிக்க சொன்னாளா என்ன... என்றபடி மீண்டும் பேப்பரில் சுற்றினார். இடுப்பில் செருகியவரின் மனசுக்குள் அவள் முதல் முறை பிரா அணிந்து கோவிலுக்கு வந்தது நிழலாகி மறைய, 'ஏ... புள்ள நீ வைரீதான்டி..' என்று நினைத்தபடி 'வைரா...த்தா' என்று மெதுவாக கூப்பிட்டபடி கைகளை வாஞ்சையாகப் பிடித்தார். கண்களில் கண்ணீர் மெதுவாக எட்டிப் பார்க்க வைராத்தாவின் கடைசி மூச்சுப் பிரிந்தது.

8 comments:

  1. வட்டார வழக்கு பிரமாதம்... காலம் கடந்தாலும் காதல் எப்போதும் பசுமையானது..

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. இயல்பான கிராமத்து நடை..கதையும் அருமை..வாழ்த்துக்கள்..:)

    ReplyDelete
  3. நன்றாக இருக்கிறது குமார். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அன்பின் குமார் - கிராமத்துக் கதை - இயல்பான நடை - சொற்கள் கிராமத்தில் புழங்குபவை - படித்து இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. கிராமிய வாசனை மிகுந்த அருமையான கதை.

    ReplyDelete
  6. முதல் மரியாதை கதையை உல்டா பண்ணி எழுதியிருக்கீங்க ? வட்டார வழக்கு மட்டும் ஒரு நல்ல கதையின் அடையாளம் அல்ல

    ReplyDelete
  7. அருமையான நடை...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அருமை அண்ணன் வாழ்த்துக்கள்

    காந்தி

    ReplyDelete