விடை தெரியாத
கேள்வி
- கனவுப் பிரியன்
அது ஒரு புதுமனை புகுவிழா
வீடு. நிகழ்ச்சி தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. “ பப்பே
சிஸ்டம் “ என்பதால் பிடித்த சாப்பாட்டை எடுத்து
கொண்டு ஆளாளுக்கு தெரிந்த முகங்களுடன் ஓரம்
கட்ட, தட்டில்
சாப்பாடு எடுத்து கொண்டிருந்த அவனுக்கு
லேசான தலை சுற்றல் வர
கீழே விழுந்து விடக்கூடாது அவமானமாகி போய் விடும் என்று
பயந்து கிடைத்ததை தட்டில் அள்ளி போட்டு
கொண்டு மெதுவாய் ஓரம் கட்டினான்.
சாப்பிட
முடியவில்லை. “ குப் ‘என்று வியர்த்தது.
வாந்தி வந்துவிடுமோ என பயந்து சாப்பாட்டை
முகத்தருகே கொண்டு செல்ல பயந்தான்.
தளர்ந்திருந்தான். சாப்பாட்டு தட்டை டேபிளில் வைத்து
விட்டு குனிந்து அமர்ந்து கொண்டான். யாரும் வந்து கேட்டால்
என்ன சொல்ல என்ற எண்ணமும்
ஓடி கொண்டிருந்தது மனதின் உள்ளே. நல்லவேளை
யாரும் வரவில்லை.
என்னவாக
இருக்கும். ஏன் இப்படி திடிரென.
நிறைய சிந்தனை.
அது நண்பன் வீடு என்பதால்
வண்டியை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோ
பிடித்து வீடு வந்து சேர்ந்தான்.
இன்னும் தலை சுற்றல் நின்றபாடில்லை.
யாரிடமும் எதுவும் சொல்லாமல் கட்டிலில்
போய் படுத்துக்கொண்டான் அப்படியே உறங்கிப்போனான்.
சாயங்காலம்
விழித்த போது தலைவலி கூடவே
தலை சுற்றலும். எழுந்து மெதுவாய் நடந்து
வந்து வாசல் திண்ணையில் அமர்ந்து
கொண்டு அம்மாவிடம் சூடாய் காப்பி கேட்டு
குடித்து வாய் கசப்பாக இருக்க
காறி உமிழ்ந்த போது எச்சிலுடன் ரத்தமும்
சேர்ந்து வந்து விழுந்தது.
பயத்தில்
நண்பனுக்கு போன் செய்து வரவழைத்து
தெரிந்த தெருமுனையின் டாக்டரை காண சென்றான்.
“ பிரெஸ்ஸர்
எல்லாம் நார்மலா தான் இருக்கு.
இந்த மாத்திரை சாப்பிட்டிட்டு தூங்குங்க. நாளைக்கும் இப்படி இருந்தா வாங்க
செக் பண்ணலாம் “
ரத்தம்
துப்பிய கதை எல்லாம் டாக்டரிடம்
சொல்லவில்லை. தலை சுற்றலோடே வீட்டுக்கு
வந்து பேருக்கு ரசம் வைத்து கொஞ்சம்
சோறு சாப்பிட்டு டாக்டர் தந்த மாத்திரையில்
தூக்கம் வர உறங்கி போனான்.
காலையில்
எழுந்து இது வரை 7 முறை
பாத்ரூம் சென்று வந்து விட்டான்.
இப்பொழுது தலை சுற்றல் இல்லை.
ஆனால் வயிற்றுபோக்கு, காய்ச்சல் அடித்து போட்டார் போல
உடல் முழுக்க தீராத வலி,
தும்மல், சளி என மாறிப்போயிருந்தது.
இது சரிப்படாது என ஊரின் பெரிய
மருத்துவமனை நோக்கி சென்று டாக்டரை
சந்தித்து அவர் எழுதி தந்த
பிளட் டேஸ்ட் / எக்ஸ்-ரே டேஸ்ட்
/ ECG டேஸ்ட் என எல்லா சீட்டையும்
வாங்கி கொண்டு மருத்துவமனையை விட்டு
வெளியே வந்தான். இத்தனையும் செய்யும் அளவுக்கு இப்பொழுது கையில் பணம் இல்லை.
பணத்திற்கு என்ன செய்யலாம். தொழிலுக்கு
என அவ்வப்போது கடன் வாங்கும் தூரத்து
சித்தி ஞாபகம் வந்தது.
சித்தி
ஒரு அரசு பள்ளி ஆசிரியர்.
அபூர்வமாய் சில சமயம் இவனிடம்
அவர்களும் அடிக்கடி அவர்களிடம் வட்டிக்கு என இவனும் பணம்
பரிமாறிக்கொள்வதுண்டு. சித்திக்கு போன் செய்தான்.
“ சித்தி
.............எங்க இருக்கீங்க “
“ வீட்டுல
தான் “
“ கொஞ்சம்
பணம் வேணும் “
சிறிய அமைதி “ சரி வா
“
சித்தி
வீடு சென்று சேர்ந்து வாசல்
கதவை திறந்து உள்ளே சென்றான்.
அவன் வருகைக்காக காத்திருந்த சித்தி “ நானே கூப்பிடணும்ன்னு நினச்சிருந்தேன்.
நீ போன் செஞ்சிட்ட. சாரி
.....லேட் ஆயிருச்சு. இந்தா உன்கிட்டே அன்னைக்கு
வாங்கின பத்தாயிரம் ரூபாய் “ என எடுத்து வைத்திருந்த
பணத்தை அவர்கள் தர அவர்களிடம்
கடன் வாங்க வந்த அவனுக்கு
“ பக் “ என்றிருந்தது.
“ ஆமா மூணு மாசம் முன்னாடி
பத்தாயிரம் குடுத்தொமே இவர்களுக்கு. இவ்வளவு பெரிய தொகை
கடனாய் குடுத்ததை எப்படி மறந்தேன் “ என்று
எண்ணிக்கொண்டவன் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்
சித்திக்கு நன்றி சொல்லிவிட்டு தற்செயலாய்
கிடைத்த பண சந்தோசத்தில் மீண்டும்
மருத்துவமனை நோக்கி சென்றான்.
மருத்துவமனையில்
எல்லா டெஸ்ட்டும் எடுத்தாகிவிட்டது. டாக்டர் ரெஸ்ட் எடுக்க
சொன்னார் என்பதால் மீண்டும் வீடு வந்து சேர்ந்தான்..
கவரிங்
நகைகளுக்கு பிளாஸ்டிக் பாக்ஸ் செய்யும் சிறு
தொழில் செய்பவன். எப்பொழுது வீடு வருவான் எப்பொழுது
ஆர்டர் எடுக்க செல்வான் என
தெரியாது. அதனால் வீட்டிலே அவன்
சுற்றிவருவதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அவனும் வேலைக்கு செல்லவில்லை. ரெண்டு முறை துப்பும்
போது ரத்தம் வந்ததில் பயம்
தொற்றிக்கொண்டது.
மறுநாளும்
காய்ச்சல் வயிற்றுபோக்கு நின்றபாடில்லை. காலையிலே எழுந்து மருத்துவமனை சென்று
ரிப்போர்ட் எல்லாம் வாங்கி டாக்டரை
சந்தித்து “ உங்களுக்கு எல்லாம் நார்மலா தானே
இருக்கு ........ஒன்னும் இல்லையே “ என்று
டாக்டர் சொன்னதை
கடுப்புடன் சகித்து அவர் மீண்டும்
தந்த மாத்திரையை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
திடீர்
என பணம் வந்தது அது
திடீர் என தேவை இல்லாமல்
செலவாகி போனது பற்றிய கவலையும்
கூடவே தொற்றிக்கொண்டது. இன்னும் எதுவும் நின்றபாடில்லை.
திடீர் என தலை சுற்றல்
திடீர் என வயிற்றுபோக்கு திடீர்
திடீர் என காய்ச்சல் எப்பொழுதும்
உடல் வலி தும்மல் சளி
என.
என்ன செய்வதென்றே தெரியவில்லை அவனுக்கு. எல்லா
டேஸ்டும் எடுத்தாகிவிட்டது இனி என்ன பாக்கி.
மிகவும் குழம்பி போயிருந்தான். ஏதோ
விபரீதம் நடப்பதாய் மட்டும் உணர்ந்தான்.
மூன்று
நாட்களாக இப்படியே கழிந்தது. வேலைக்கும் செல்லாமல் யாரிடமும் சொல்லாமல் மூன்று நாள் கழிந்து
விட்டது. ஒரு வழியாக தயங்கி
தயங்கி வீட்டிலும் சொல்ல வீட்டில் அவனை
விட அவன் அம்மா மிகவும்
பயந்து போயிருந்தார்கள். என்ன ஆச்சோ என்ற
பயம்
நான்காவது
நாள் நெருங்கிய நண்பனுக்கு போன் செய்தான். நடந்ததை
எல்லாம் ஏதோ கதை போல
கூறினான். “ கல்யாணம் கூட ஆகலை. எதையும்
அனுபவிக்காம செத்து போயிராத. அப்புறம்
கன்னி பேயா திரிய போற
“ என்ற கேலிக்கு பின் நண்பனின் அறிவுரையின்
பேரில் இருவருமாக சேர்ந்து ஊரில் இருந்து 156 கிலோ
மீட்டர் தொலைவில் உள்ள அவரை காண
சென்றார்கள். அது ஒரு சிறிய
கிராமம். அவர் இந்த விஷயத்தில்
பிரசித்தி பெற்றவர். இவர்களுக்கு முன்னமே நான்கு பேர்
காத்திருந்தனர்.
சரியாய்
ஏறக்குறைய ஒன்னரை மணி நேரத்திற்கு
பின் இவர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்
ஒரு பாயில் அமர்ந்திருந்தார். எதிரேயும்
ஒரு
கோரைப்பாய்
போடப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து கொண்டனர்.
சொல்லுங்க என்று அவர் கேட்க
நான்கு நாட்களாய் நடந்த கதை அனைத்தையும்
சொன்னான்.
நான்கைந்து
பத்தியை கொளுத்தி பிடித்து கொண்டு கழுவிய ஒரு
சில்வர் சொம்பில் சாம்பிராணி புகைக்காட்டி அதில் நீரை ஊற்றி
அந்த நீரையே பார்த்து கொண்டிருந்தார்.
இடை இடையே இவன் முகத்தையும்
பார்த்துக்கொண்டார்.
பத்து நிமிடம் இப்படியே கழிந்தது.
“ யாரோ
பச்சை மீனுக்குள் உங்க பேருல எதையோ
செஞ்சு எங்கேயோ பொதச்சு வச்சிருக்காங்க.”
பக் என்றது இவனுக்கு. “ என்னது
.............யாரு செஞ்சு வச்சிருக்கா “
“யாருன்னு
எனக்கு பார்க்க தெரியாது. எதுக்கு
செஞ்சிருக்குன்னும் தெரியாது. ஆனா ....என்ன செஞ்சிருக்குன்னு
எப்படி எடுக்கன்னு மட்டும் தான் எனக்கு
தெரியும் “
“ என்ன
செஞ்சிருக்கு “
அவர் சொம்பில் உள்ள நீரை பார்த்துக்கொண்டே
“ உங்க ஊருல ஒரு பஸ்
ஸ்டாப் தெரியுது. பின்னாடி நிறைய வேப்ப மரம்
இருக்கு. அதுக்கு பக்கத்துல ஆள்
நடமாட்டம் உள்ள சிமின்ட் பாதை
இருக்கு. கொஞ்சம் தள்ளி ஒரு
அம்மன் கோவில் தெரியுது. அந்த
பஸ் ஸ்டாப்புக்கு இந்த பக்கம் ஒரு
சுடுகாடு இருக்கா “
கொஞ்சம்
நெற்றி சுருக்கி யோசித்தவன் “ ஆமாம் “ என்றான்.
“ அந்த
சுடுகாட்டுல ஒரு பச்சை மீன்
வயித்துல உங்க பேருல தகடு
எழுதி அந்த மீனை அங்க
பொதச்சி வச்சிருக்காங்கன்னு காட்டுது. அது சரியாகும் வரைக்கும்
உங்களுக்கு இப்படி உடல் சுகவீனம்
இருந்துகிட்டே இருக்கும் “
உண்மையிலே
இப்பொழுது பயந்திருந்தான். என்ன சொல்ல என
தெரியவில்லை அவனுக்கு.
“ என்ன
செய்யணும் இப்போ “ என்று கூட
வந்திருந்த நண்பன் கேட்க
“ அதை எடுத்தா போதுமா இல்லை
திருப்பி செய்யணுமா “ என்று அவர் கேட்க
இருவருமே
முழித்தனர் என்ன சொல்ல என
தெரியாமல்.
“ திருப்பி
செஞ்சா அவங்களும் திரும்பவும் செய்வாங்க. எடுத்திட்டா யாருக்கும் தொந்தரவு இல்லை “ என்றார் மீண்டும்
அவர்.
“ அப்போ...........எடுத்தா போதும் “
எழுந்து
வீட்டின் உள்ளே சென்று வந்தவர்
கொஞ்சம் காய்ந்த மருதாணி விதை
அகில் கட்டை குச்சி என
ஒரு வெள்ளை துணியில் சேர்த்து
அவன் கையில் கொடுத்தார். ‘ இதை
புடிச்சிக்கோ ..........கொஞ்ச நேரம் கழிச்சி
அழுகின வாடை வரும். எக்காரணம்
கொண்டும் மூக்கை உடம்பை கையை
கொண்டு தேச்சிராத. அடக்கிக்கோ சரியா “ என்றவர் பத்தியை
கொளுத்தி எதையோ சொல்ல ஆரம்பித்தார்.
சற்று நேரத்தில் முகத்தில் மூக்குக்கு அருகில் செத்து போன
எலி போல அழுகிய நாற்றம்
அடித்தது. குமட்டி கொண்டு வந்தது.
குரு குரு வென முகத்தில்
தோன்ற கையை வைத்து மூக்கை
தேய்க்க வேண்டும் போல இருந்தது
அவர் எதையோ சொல்லிக்கொண்டே சைகையால்
எதுவும் செய்துவிடாதே பொறுத்துக்கொள் என சொல்ல மிகவும்
கஷ்டத்துடன் அடக்கி கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் மூக்கில் தலையில் இருந்து ஈ
யாய் பறந்து வந்தன. அவதியுடன்
சகித்து கொண்டான்.
அரை மணி நேரம் அவஸ்தையுடன்
தான் கழிந்தது. எல்லாம் தீரும் போது
சந்தோசப்படவா இல்லை ....என்னடா இது என
வருத்தப்படவா என தெரியாத நிலையில்
இருந்தான் அவன்.
“ தம்பி
ஒரு வாரம் நான் சொல்லுறபடி
செய்யணும். தூங்கும் போது இந்த காஞ்ச
மருதாணி விதை அகில் கட்டை
குச்சி வெள்ளை துணியை தலை
மாட்டுல வச்சி தூங்குங்க. ஒரு
சின்ன விளக்கு வாங்கி நான்
கொடுக்கிற இந்த தகட்டை போட்டு
நல்லெண்ணெய் ஊத்தி விடாம ஒரு
வாரம் கொளுத்தணும். இந்த விளாம்பழம் பொடியை
தேனில் குழப்பி ஒரு வாரம்
சாப்பிடனும். அப்படியே ஒரு புதிய பாத்திரம்
வாங்கி “ நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்நாயகன் தாள் பெறவேநெஞ்சு மலையாதே
- அகப்பேய்நீ ஒன்றுஞ் சொல்லாதே “ ன்னு
சொல்லி ஒரு கால் மணி
நேரம் கல் எதுவும் இல்லாத
மண் எடுத்து வறுக்கணும். சாயங்காலம்
இருட்டுற போது எப்படியாவது கோயிலுக்குள்ள
இருக்கணும். இதை எல்லாம் செய்ங்க
சரியா போயிரும். காய்ச்சல் சரியாயிருச்சுன்னு விட்டுறாதீங்க ஒரு வாரம் தொடர்ச்சியா
செய்யனும். செய்யாம என்னை வந்து
அப்புறம் குறை சொல்லக்கூடாது சரியா “ என்று
சொல்லி அவருக்கான ரெண்டாயிரத்தையும் வாங்கி கொண்டு அனுப்பி
வைத்தார்.
பலவித குழப்பங்களுடன் வீடு வந்து சேர்ந்தான்
ஆனாலும் உடலில் இருந்து ஏதோ
பாரம் குறைந்தது போல இருந்தது அவனுக்கு.
மறுநாள்
முதல் அவனுடைய தனி அறையில்
ஒரு விளக்கு ஏற்றி அவர்
தந்த தகட்டை எண்ணெய் இட்டு
கொளுத்த துவங்கினான். சாயங்காலம் ஆன உடன் பூ
பத்தி எண்ணெய் என கோயிலுக்கு
படை எடுத்தான்.
அன்று இரவு நர்செரி கடையில்
ரோஜா தொட்டிவைக்க மண் வேண்டும் என
மண்ணும் புது ஒரு அலுமினிய
சட்டியும் வாங்கி வந்து சட்டை
அணிந்த வண்ணம் கால் மணி
நேரம் மணலை வறுத்தான். மணலை
வறுக்கும் போது உடலினுள் அங்கே
அங்கே ஏதோ ஊர்வது போல
இருந்தது ஒரு
வித பயத்துடன் தூங்கி போனான்.
மறுநாள்
காலையில் எழுந்து தற்செயலாக சட்டையை
பார்க்க சட்டையின் பின்புறம் தெரிந்த காய்ந்த ரத்தக்கறையை
கண்டு பயந்து மீண்டும் அவருக்கு
போன் செய்து பேச பின்
அவர் தந்த அறிவுரையின் பேரில்
ஒரு துண்டால் முகத்தை மூடிக்கொண்டு மணலை
வறுத்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை வறுக்கும்
போதும் உடல் முழுவதும் ஏதோ
ஊர்வது போல உணர்ந்தான்.
ஒவ்வொரு
நாளும் உடலினுள் ஏதோ ஒரு இடத்தில்
இருந்து ஒரு ஊசியை உருவி
எடுப்பது போல கூடவே வலி
குறைந்து வரும் உணர்வு உணர்ந்தான்.
ஏழாவது
நாள் இரவு கோயிலில் இருக்கும்
போது அவனை கடந்து சென்ற
ஒரு ஆள் “ தம்பி முதுகுல
பல்லி “ என்று சொல்ல அவன்
சிலிர்த்து கையை பின்னால் கொண்டு
செல்ல அவன் உடலில் இருந்து
ஒரு தடிமனான பல்லி கீழே
விழுந்து ஓடியது.
உடல் ஆடியது அவனுக்கு. சிலிர்த்தது.
எந்த விதமான உணர்வை காட்டவேண்டும்
என தெரியாத பயம் கலந்த
பெருமூச்சு விட்டான். கடந்த ஒரு வாரமாக
அவனுக்குள் உடல் ரீதியாக மன
ரீதியாக நிறைய மாற்றம் வந்ததை
உணர்ந்தான். நிறைய யோசித்ததில் கண்ணில்
நீர் கோர்த்திருந்தது.
ஏன் இப்படி நிகழ்ந்தது. ஏன்
அவரை காண சென்றேன். யார்
நமக்கு எதிரி.ஏன் அப்படி
அவர்கள் எனக்கு செய்தார்கள். இதற்கான
காரணம் என்ன பலவிதமாக எண்ணங்கள்
தோன்றி மறைந்தன. எதற்கும் பதில் கிடைக்கவில்லை.
ஆனாலும்
ஏதோ ஒரு அசம்பாவிதத்தில் இருந்து
விடுபட்ட ஒரு உணர்வு மனதில்
தோன்றியது. இன்னும் எப்படியாக இருக்கும்
இவன் வாழ்வு தெரியவில்லை.
நிறைய பதில் தெரியாத எதிர்பாராத
முடிச்சுகள் நிறைந்தது தான் இந்த வாழ்வு.
யாருக்கு தெரியும் அடுத்தது நொடி என்னவென்று.
No comments:
Post a Comment