Thursday 31 July 2014

Story 122: சந்திரகாந்த்¬––சாருமதி



சந்திரகாந்த்¬––சாருமதி

தஸ்தாயெவெஸ்கி, டால்ஸ்டாய், நெபகோவ் போன்ற ருஷ்ய எழுத்தாளர்களின் எழுத்து, தற்போதைய தமிழ் படைப்பாளிகளிடம் எவ்வித தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்பதை சந்திரகாந்த் சிலாகித்து விவரித்ததை, என் அடுக்ககவாசிகள் வாய்பிளந்து கேட்டனர். அவர்களின் வியப்பை  மேலும் கூட்டும் வண்ணம் பயோஸ்டாடிக்ஸ் துறையில் இந்தியா கடக்க வேண்டிய தூரத்தை பட்டியலிட்டான்.

தினசரி பத்திரிக்கைகளுடன் வரும் இலவச இணைப்புகளில் கேட்கப்படும் எளிதான பொது அறிவு கேள்விகளுக்கே பதிலளிக்க முடியாத என் அடுக்ககவாசிகள் சந்திரகாந்தின் அறிவுச்சுழலில் சிக்கி திக்குமுக்காடினர். சந்திரகாந்த் மீது எனக்கு ஏகப்பட்ட வருத்தம், கோபம், காழ்புணர்வு ஆகியவை இருந்தாலும் என் அடுக்ககவாசிகளை மட்டுப்படுத்த, எங்கள் அடுக்ககத்தில் நடக்கும் கலாச்சார விழாவிற்கு அவனை வலுக்கட்டாயமாக அழைத்தேன்.

அவன் முதலில் வர  மறுத்தாலும்,  உனக்கு தெரிந்த விஷயங்களில், ஒன்றிரண்டை எடுத்துச் சொன்னால் அனைவரும் பயன் பெறுவர்என்பதை நான் கோடிட்டவுடன் வர சம்மதித்து விட்டான். சந்திரகாந்த் பேசுவதை கேட்கும் யாருக்கும், அவன் ஓரு அறிவு ஜிவி என்றோ மற்றவர்களுக்கு பயன்படும் சங்கதிகளை எடுத்துரைக்கும் நல்ல மனம் படைத்தவன் என்றோ தான் தோன்றும். ஆனால், அவனது முழு உருவத்தை அவனுடன் நன்கு பழகிய நான் தான் அறிவேன்.
அறிவியல், கலை, விளையாட்டு, அரசியல் என்று அறிவு சார்ந்த எந்த விஷயத்தையும் மேலோட்டமாகவோ அல்லது ஒரிரு புள்ளி விவரங்கள், ஆதாரங்களை தெரிந்து கொண்டு வித்தகன் போல் பேசும் வல்லமை மிக்கவன் சந்திரகாந்த். யாரும் அழைக்காமலே பல விவாதங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொண்டு தன் அறிவு கூர்மையையும், புலமையையும் பறைசாற்றுவான். அவனைவிட அதிக விஷய ஞானமுள்ளவர் அக்கூட்டத்தில் இருந்தால் சமயோசிதமாக வேறொரு விவாததிற்கு தாவுவான்.  சில சமயங்களில், அவர் மூலமாகவே தனக்கு தெரியாததை சற்றே அடிப்படையாக அறிந்து கொண்டு அதை வேறொரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவான்.  

அலுவலகத்தில் உணவு இடைவேளையின் போது சந்திரகாந்தை சுற்றி ஒரு கூட்டம் அமர்ந்திருக்கும். “சார்! அன்னைக்கு மெத்தனால்னு ஏதோ ஆல்கஹால் பத்தி சொன்னீங்களே! நசரத்பேட்டையில மெத்தனால் அதிகம் கலந்த சாராயம் நூறு பேரை காவு வாங்கியிருக்குனு, இன்னைக்கு தந்தி பேப்பரில் போட்டிருக்கான் பாருங்கஒருவர் தொடங்க, “பின்ன, நான் தான் அன்னைக்கே மெத்தனாலோட தன்மையை பத்தி படிச்சு படிச்சு சொன்னேனே! மெத்தனாலோட சயனைட் சேர்ந்தா என்ன ஆகும்? அதான்  போப்பாலில் வாயு ரூபத்தில் 84ல் ஆச்சு. நசரத்பேட்டையில்  100; போப்பாலில்  பல நூறு. சும்மா தண்ணி அடிக்கனும்னு அடிக்கக் கூடாது; நல்லா சயின்ஸ் தெரிஞ்சவங்களை கேட்டு தெரிஞ்சுட்டு(!) எதையும் செய்யனும்;  ஒஹெச் குடும்பத்தை பண்ணி சொல்லனும்னா.....”. சந்திரகாந்த் தங்களை அறிவு ஞானத்தின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறானென்ற புரிதலில் அனைவரும் மெய்சிலிர்ப்பர்.

சந்திரகாந்த் புகழ் விரும்பியாக மட்டும் இருந்தால் பரவாயில்லை. வாய்ப்பு கிடைத்தால், மற்றவர்களை எந்தளவு மட்டம் தட்ட முடியுமோ அந்தளவு பரிகாசம் செய்வான். நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி மதுவருந்தும் தருணங்கள், கடவுள் அவனுக்கென்றே உருவாக்கிய பொழுதுகள். இவனைப் பற்றி சரியாகத் தெரியாத ஓருவன் ஆரம்பிப்பான். “பியர் எல்லாம் வேஸ்ட்டுடா ! விஸ்கி, பிராந்தி மாதிரி கிக் ஏறுமா?”

சந்தர்ப்பத்தை தவறவிடுவானா சந்திரகாந்த்? “பியர் வெறும் 4 சதவீத அல்கஹால் தன்மை கொண்டது பாஸ்; ஆனால்  விஸ்கி, பிராந்தி, ரம், வோட்கா எல்லாம் சராசரி  42.8 சதவீத அல்கஹால் தன்மை கொண்டது. ஒயினை எடுத்துட்டா , அதை ஒயிட், ரெட்னு ரெண்டா பிரிக்கனும்அத்திப்பூத்தாற் போல் கிடைத்த விடுமுறையை, தங்கள் ஆஸ்தான டாஸ்மாக்கை தாண்டி முதல் முறையாக ஓரு மாறுதலுக்கு, நல்ல பாரில் மது அருந்த வருபவன் மிரட்சியடைவான். தங்களை விஷய ஞானமற்றவன் என்று பரிகாசம் செய்து விடுவானென்ற அச்சத்தில் அனைவரும் அமைதியாக இருப்பர். “சரி விடுடா! சரக்கடிக்கும் போது சயின்ஸ் எதற்கு?” என்று யாராவது கேட்டுவிட்டால், அவனே அன்றைய இலக்காவான்.

எனக்கு சம அறிவு அல்லது ஒத்த எண்ணம் உள்ளவங்களோடு தான், நான் பழக்கம் வைச்சிருக்கனும். கெமிஸ்ட்ரியின் பி சி டியே தெரியாதவங்களோடு சேர்ந்தா இப்படித் தான்; ஆமா, நீயெல்லாம்  எப்படி ப்ளஸ் டூவில் கெமிஸ்ட்ரியில் பாஸான? உன் பேப்பரை ரீவேல்யூவேஷன் பண்ணி உன்னை மறுபடி படிக்க அனுப்பனும்எங்கே,  இவன் தன்னை மறுபடி படிக்க அனுப்பி விடுவானோ என்ற அச்சத்தில் கேள்வி கேட்டவன் பம்மி விடுவான். கச்சேரி முடியும் தருணத்தில் சந்திரகாந்த் அசத்தலாக கேட்பான்இன்னைக்கு என்னோட ரெமி மார்ட்டின் சாப்பிடும் பாக்கியம் உங்களுக்கு கிடைச்சிருக்கு. அப்படியே பேச்சு வாக்குல(!) என் கிட்டயிருந்து எவ்வளவு  விஷயம் கத்துகிட்டீங்க? மறக்க மாட்டீங்களே?” அவர்கள் எப்படி மறப்பார்கள்? ஞானத்தை தந்தவன் பில் தொகையில் தன் பங்கைத்  தரவில்லையே என்ற வெறுப்பில், இனி விடுமுறை நாளிலும் அலுவலகம் செல்லும் முடிவெடுப்பார்கள்.

அலுவலகம் முடிந்து, மாலை வீடு திரும்பும் போது இரயிலில் சந்திரகாந்திற்கென்று ஓரு ரசிகர் பட்டாளமுண்டு. மாலை இதழில்,  பில்லா 2, சிங்கம் 2  வரிசையில் விஸ்வரூபம் 2’ என்ற சினிமா செய்தியை ஆவென அப்பாவியாக படித்துக் கொண்டிருப்பவரிடமிருந்து தன் தாக்குதலை துவங்குவான்.

 இங்க சீகுவலோட வரலாறு யாருக்கும் தெரியாது. ஹாலிவுட்டில் சீகுவல் வரிசை திரைப்படங்கள், குறைந்தது நூறு சொல்லலாம்.  1964ல் முதல் சீகுவல் திரைப்படம் ...” சந்திரகாந்த் சீகுவல் திரைப்பட வரிசையை சொல்லி முடிக்கும் போது, டைட்டானிக்னு ஓரு ஹாலிவுட் படம் கப்பலிலேயே எடுத்திருக்காங்களாம் என்றளவில் ஹாலிவுட் பரிச்சயமுள்ளவர், சந்திரகாந்தின்  பேச்சில் மெய்மறந்து தான் இறங்க வேண்டிய நிறுத்தத்தை தவற விடுவார்.
ஓரு நாள் , சந்திரகாந்த்தின் கெட்ட நேரமோ என்னவோ, வழக்கம்போல் இவன் எடுத்து விட்ட சமாசாரத்தில் கை தேர்ந்த ஒருவர் இரயிலில் பயணித்து விட்டார். “நுனிப்புல் மேயாதீங்க சார். மொஸாட் திறமையான உளவு நிறுவனம் தான். ஆனால், நம்முடையராஅதற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல. அரசியல் மட்டும் தார்மீக காரணங்களால் நம் உளவுபடையின் திறமையையும், சாதனையையும் வெளிப்படையாக இங்கு சொல்ல முடியாது. நம் உளவுப்படையின் திறமையை வெளி நாடுகளில் நல்லா தெரிஞ்சு வைச்சிருக்காங்க. தெரியாம பேசாதீங்கதாம்பரம் வரும் வரை பொரிந்து தள்ளி விட்டார். அவரின் பக்கம் கூட்டம் சேர்வதையும், தன் சாயம் வெளுப்பதையும் புரிந்து கொண்டவன் உடனடியாக சாதுர்யத்தை கடைப்பிடித்தான்.

என்ன சார் அவசரப்பட்டுடீங்க? அரசு ரகசியங்களை பாதுகாக்கனும்னு(!) இவ்வளவு நாளா இவங்க கிட்டயிருந்து சில சங்கதிகளை மறைச்சு வைச்சிருந்தேன். நீங்க உணர்ச்சிவசப்பட்டுடீங்க! எல்லாரும் நம்மளைப் போல அடுத்த தளத்திலுருந்து சிந்திக்கறவங்கயில்லை பாருங்க. இப்ப வீட்டூக்கு போய் இவங்க என்ன பண்ணுவாங்கனு நினைக்கிறீங்க? கலைச்செல்வி,  கனாகாம்பரம் பூத்தது.. ஏதோ சீரியல்....இவங்க ரேஞ்சுக்கு அவ்வளவு தான்தங்களை அவன் பரிகாசம் செய்கிறானென்று புரியாத கூட்டம் நகைத்தது.

பொருளாதார ரீதியாகவும்,  சமூக அந்தஸ்திலும் என்னை விட வலுவான என் அடுக்ககவாசிகள் சிலரை மட்டம் தட்ட வேண்டுமென்ற என் காழ்புணர்வுக்கு, வடிகாலாக தோன்றியது சந்திரகாந்தின் பெயர் தான். அவனும் சும்மா சொல்லக் கூடாது. முன்பே நான் பெயர் குறிப்பிட்டிருந்த சிலரை மிகவும் வறுத்தெடுத்து விட்டான். “உங்களுக்கு நல்ல லக், ரமேஷ்;. பொதுவா கேம்பஸ் இண்டர்வியூவில் சிலரை ராண்டமா தேர்ந்தெடுப்பாங்க. அந்த கோட்டாவில் தான் உங்களுக்கு வேலை சிடைச்சிருக்கும். இல்லைனா, பாவம் வேலை கிடைக்காமலே ரிட்டயர் ஆயிருப்பீங்கதன்னை தாக்கியது எதுவென்று ரமேஷ் புரிந்து கொள்ளும் முன்பே சந்திரகாந்த் அடுத்த தாக்குதலில் இறங்கிவிட்டான்.
ஃபார்மகாலஜி எவ்வளவு முன்னேறியிருக்கு. இன்னும் தலைவலிக்கு அனாசின் சாப்பிட்டிட்டு இருக்கீங்க. ஒரு  ஐம்பது வருஷமாவது பின் தங்கி இருக்கீங்க  இப்போது தான், ரமேஷிற்கு தலைவலி அதிகரித்தது. அனாசினை விழுங்கவும்  முடியாமல் தவித்தான். அடுத்த குறி, மேல் வீட்டு சங்கரை நோக்கி வீசப்பட்டது. 

தென் சங்கர்! நீங்க காதல் திருமணம் பண்ணிக்கிட்டீங்கனு கேள்விப்பட்டேன்

ஆமா சார்! எனக்கும், அவளுக்கும் கெமிஸ்டிரி ஓத்துப் போச்சு. அப்படியே சிங்க் ஆயிட்டோம்தொலைகாட்சி நடன நிகழ்ச்சி நடுவர்கள் பாணியில் சங்கர் பேச, சந்திரகாந்த் அவனை வசமாக பிடித்துக் கொண்டான்.

சொல்றேனு தப்பா எடுத்தக்காதீங்க, சங்கர்! உங்களையெல்லாம் வைத்துக் கொண்டு நாம எப்படி வல்லரசாக முடியும். கெமிஸ்டிரிங்கற வார்த்தை வாலன்டைஸ்டே கார்ட்டில் வேண்டுமானால் இனிப்பாக தோன்றலாம். ஆனால் உண்மை நிலை வேற. அணுகுண்டு, அமிலங்கள், சயனைட், சல்பர்னு பல அழிவு பொருட்கள் வேதியல் பொருட்கள் தான். நீங்க எதுவும் புரியாம கிண்டர் கார்டன் லெவலுக்கு பேசிக்கிட்டு இருந்தா நான் என்ன சொல்ல முடியும்?”. கலாய்ப்பதற்கென்று நான் முன்னரே குறிப்பிட்டிருந்த பெயர்களை தாண்டியும் சகட்டுமேனிக்கு பலரையும் வாரினாலும் அவனது பொது அறிவு புலமைக்கு மதிப்பிருந்தது.

இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே, சந்திரகாந்திற்கு என் அடுக்ககத்தில் ஒரு ரசிகர் வட்டம் உருவாகியது. “கொஞ்சம் வேகமா பேசினாலும் எப்படி பிச்சு உதறுறார்! உங்க நண்பர் ஒரு ஜினியஸ், ராகவன்சந்திரகாந்ததை அறிமுகப்படுத்தியதற்கு என்னிடம் நன்றி தெரிவித்தனர். அடப்பாவிங்ளா! அவன் கலாய்த்தாலும் பெருமையாக நினைக்கிறார்களே! இவர்கள் உண்மையிலே அறிவுக்கு ஏங்குகிறவர்களா? அல்லது செம்மறியாட்டு கூட்டமா? இவர்களை கலாய்ப்பது இவ்வளவு எளிதா? எனக்குத்  தான் அந்தக் கலை கைகூடி வரவில்லை. பொதுவாக யாரிடமும் பேசாமல் கெத்தாக நடந்து  கொள்ளும்பி பிளாக்சாருமதி கூட சந்திரகாந்திடம் வலிய வந்து பேசினாள்,  யூ ஆர் வெரி பிரிலியன்ட்! நீங்க எப்படி ராகவனுக்கு ஃபிரண்ட்?”. அடிப்பாவி!அவனே பேயாட்டம் ஆடுகிறான்; இவள் வேறு தன் பங்குக்கு அவனை கொம்பு சீவுகிறாளே!

யூ ஸி சாருமதி! நாம தான் இவங்களை முன்னுக்கு கொண்டு வரனும். பை தி வே,  நீங்க புக்ஸ் எல்லாம் படிப்பீங்களா?

லவ் புக்ஸ்! வீட்டில் நானும், அம்மாவும் மட்டும் தான். சோ தெர் இஸ் லாட் ஃஆப் டைம் ஃபார் புக்ஸ். உங்களுக்கு பிடிச்ச ரைட்டர் யாரு?”

கேப்பிரியல் கார்சியா மார்க்கஸ். அவரோடஒரு நூற்றாண்டு கால தனிமைபிரமாதமா இருக்கும். நீங்க போஸ்ட் மார்டனிஸம் படிப்பீங்களா? பொதுவா சாதாரண ஆளுங்களுக்கு போஸ்ட் மார்டனிஸம் புரியாதுஒரக்கண்ணால் என்னை ஏளனமாக பார்த்தவாறு சொன்னான். இரண்டு ஆதித அறிவு ஜிவிகள் உரையாடிக் கொண்டிருக்கும் போது என்னைப் போன்ற பாமரர்கள் ஒதுங்கி கொள்வது தான் உத்தமம்.

கலாச்சார விழா முடிந்து பல ரசிகர்களை சம்பாதித்த மகிழ்ச்சியில் சென்ற சந்திரகாந்த், அதற்கு பிறகு அடிக்கடி என் அடுக்ககத்திற்கு வர ஆரம்பித்தான். சந்திரகாந்த் வந்துவிட்டான் என்று தெரிந்தாலே பலர் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுவர்.  சொரணையற்ற சிலர் அவனது அறிவாற்றலில் நனைய முன்வருவதுண்டு. சாருமதி போன்ற அவன் அலைவரிசை சிந்தனையாளர்கள் மட்டும் நெடு நேரம் பேசி மகிழ்வதுண்டு. இப்போதெல்லாம், சந்திரகாந்த் இந்த அடுக்ககவாசி போலும், நான் அவனை பார்க்க வந்த நண்பன் போலும் தோன்றுகிறது.

ஒரு நன்னாளில் அனைவரும் எதிர்ப்பார்த்த நற்செய்தியை, முதல் ஆளாக என்னிடம் சந்திரகாந்த் இயல்பாக பகிர்ந்து கொண்டான். “நானும், சாருமதியும் கல்யாணம் பண்ணிக்க போறோம்டா! ஒரே தாட்,  ஒரே வேவ்லென்த். அதான் எங்க அறிவும், ஆளுமையும் வேற எங்கும் சேர்ந்து வீணாயிடக்கூடாதுனு நான் அவளை கல்யாணம் பண்ணிக்க போறேன்”. தனது திருமணம் குறித்து கூட, ஒருவனால் இவ்வளவு ஆணவமாகவும், தற்புகழ்ச்சியாகவும் பேச முடியுமா என்று வியப்படைய வைத்தான். முதல்முறையாக சந்திரகாந்த் தன்னை தவிர வேறொருவரை புகழ்ந்தது சாருமதியை தான். “அரசியல், கலை, வணிகம்னு எல்லா தலைப்புகளிலும் புகுந்து விளையாடுறா. எல்லாத் தளங்களிலும் என்னுடன் பயணிக்க இவளால தான் (!) முடியும். சமையலிலும் மெக்சிகன், ஸ்பானிஷ்  ரெசிபி எல்லாம் பிரமாதமா சொல்றாடா”.  மனம் புழுங்கிக் கொண்டேநீ கொடுத்து வைச்சவன்டாஎன்று வாழ்த்தினேன்.

திருமண அழைப்பிதழிலும் தன் அலப்பறையை தொடர்ந்தான். சந்திரகாந்த்––சாருமதி சேரும் என்று ஒரே வரிசையில் பெயர்கள் பிரசுரம் ஆகியிருந்ததை நான் தெரியாத்தனமாக கேட்கப் போய்   இரு சம அறிவு  அல்ல அந்தஸ்து உள்ளவங்களை குறிப்பிட -பப்ளிஷிங் துறையில் இரண்டு பெயர்களுக்கும் இடையில்  என்டேஷ் (––)  பயன்படுத்துவாங்க. உதாரணமா, ஐசக் நி யூட்டன்––எடிசன் அந்த வரிசையில் சந்திரகாந்த்––சாருமதி, எப்படி பொருத்தமா இருக்கா?” அவனைச் சொல்லி குற்றமில்லை; விளக்கம் கேட்ட என்னிடம் தான் தவறுள்ளது. சில சொற்ப நண்பர்களும், எண்ணற்ற சந்திரகாந்த் ரசிகர்களும் சூழ சந்திரகாந்த்––சாருமதி திருமண பந்தத்தில் ஒன்று சேர்ந்ததனர்.

சாருமதியின்  திருமணம் முடிந்தவுடன், அவள் அம்மா மும்பையிலுள்ள உறவினர் சென்றிட, என் அடுக்ககத்திலேயே சாருமதியின் வீட்டில் சந்திரகாந்த் தன் மண வாழ்க்கையை துவங்கினான். அடுத்து வந்த நாட்களில், ஓரிரு முறை அடுக்ககத்தில் சந்தித்து பேசிக் கொண்டோம். அலுவலகத்தில் வேறு கிளைக்கு என்னை மாற்றிவிட்டதால், அவனை நான் சந்தித்தே பல வாரங்களாகி விட்டது. அவன் பணி முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டால் உள்ளே கதவை பூட்டிக் கொண்டு வெளியே வருவதில்லை. அறிவிற் சிறந்த சான்றோர் இருவருக்கும் இடையில் பகிர்ந்து கொள்ள ஏராளம் இருக்கும்.

கடந்த ஞாயிற்றுகிழமை, யதேச்சையாக சந்திரகாந்தை ஆனந்தபவன் ஹோட்டலில் சாப்பாடு பார்சலோடு கண்டேன். “என்னடா! கையில சாப்பாடு பார்சல் நாலஞ்சு இருக்குவினவினேன்.

மதிய சாப்பாட்டுக்கு 2 பார்சல்; ராத்திரி சாப்பாட்டுக்கு 2 பார்சல்

! ஞாயிற்றுகிழமை சமைக்காம மஜாவா?” ஆற்றாமையை கொட்டினேன்.

நீ வேற; ஞாயிறு, திங்கள்னு எந்த நாளும் சமையல் கிடையாது. அவளுக்கு சமைக்கத் தெரியாது. எனக்கும் சமையல் தெரியாது. எந்நாளும் பார்சல் தான்மூச்சு வாங்கினான்.

என்னடா சொல்ற? ரெசிபி எல்லாம் சொல்லுவாங்கனு சொன்ன?”, என் மகிழ்ச்சியை அதிர்ச்சி போல் காட்ட பிரயதனப்பட்டேன்.

ரெசிபி எல்லாம் சொல்லத் தான் செய்வா; செய்ய மாட்டா. புக்கைப் படிச்சிட்டு சொல்லியிருக்கா! எனக்குத் தான் புரியலை”,  ஆற்றாமையால் புலம்பினான்.  கையிலுள்ள சமையல் புத்தகத்தை என்னிடம் காட்டி,  இதை படிச்சு நானாவது சமையல் கத்துக்கலாம்னு இருக்கேன்என்று மருகியது பரிதாபத்திலும் பரிதாபம்.

இப்போதெல்லாம் ரயிலில் பயணம் செய்யும் போதோ, அடுக்கக வளாகத்தில் செல்லும் போதோ, யாரேனும் அறிவு சார்ந்த உரையாடலை துவங்கினால் ஒரிரு வார்த்தைகளோடு சந்திரகாந்த் நிறுத்தி விடுகிறான். நடந்தது என்ன என்று புரியாத யாரேனும், ‘சந்திரகாந்த் சார்! பீத்தோவானுக்கும், மொசாட்டுக்கும் இடையே குறிப்பிட்டுச் சொல்லும்படியான வித்தியாசம் சொல்லுங்கஎன்று கேட்டால்இரண்டும்  வேற, வேற பெயர்; அதான் வித்தியாசம்”’  கூறிவிட்டு அமைதியாக நகர்ந்து விடுகிறான்.

No comments:

Post a Comment